21-ருசியியல் சில குறிப்புகள்: வெயில் வேதனைகள்!


இந்த வருஷத்து வெயில் ஒருவழி பண்ணிவிடும் போலி ருக்கிறது. வெளியே தலைகாட்ட முடியவில்லை. யாரையாவது எதற்காவது பார்த்தே தீரவேண்டுமென்றால் பிரம்ம முகூர்த்தத்தில் சந்திக்கலாமா என்று கேட்க ஆரம்பித்திருக்கிறேன். நடுநிசி நாயாகக்கூட இருந்து விட்டுப் போய்விடலாம். நடுப்பகல் வேளைகளில் வெளியே போக நான் தயாரில்லை.

இந்த வெயில் காலங்களின் பெரிய பிரச்சினை, வேலை கெட்டுவிடும் என்பது. நூறு சதம் ஒழுங்கான காரியம் ஒன்றை இப்பகல்களில் கண்டிப்பாகச் செய்ய முடியாது என்று நினைக்கிறேன். ஏ.சி அறைக்குள் பதுங்கிக்கொண்டாலும் நம்மையறியாமல் ஒரு சோர்வு ஒட்டிக்கொள்ளும். ராத்திரி 10 மணிக்கு வரவேண்டிய அலுப்பும் களைப்பும் மத்தியானமே வந்து தொலைக்கும்.

நிறையத் தண்ணீர் குடியுங்கள் என்று சொன்னால், சரி என்போம். ஆனால், குடிக்கிற அளவு ஏறவே ஏறாது. மிஞ்சிப் போனால் நாளொன்றுக்கு இரண்டில் இருந்து மூன்று லிட்டர் நீர் அருந்துவோம். இந்த வெயிலுக்கு அதெல்லாம் எந்த மூலைக்கு?

என் நண்பர் குமரேசன் ருசி மிக்க குடிநீர் ரெசிபி ஒன்று சொல்வார். கொஞ்சம் மெனக்கெட வேண்டும். ஆனால், பிரமாதமாக இருக்கும்.

நாலைந்து லிட்டர் தண்ணீரை நன்றாகக் காய்ச்சி எடுத்து வைத்துவிட வேண்டும். இரண்டு எலுமிச்சங்காய், இரண்டு எலுமிச்சம்பழம், இரண்டு வெள்ளரி எடுத்துக் கொள்ளுங்கள். எலுமிச்சங்காய்களை இரண்டாக வெட்டி தண்ணீரில் போட்டு விடுங்கள். பழங்களைப் பிழிந்துவிட வேண்டும். வெள்ளரியைத் தூள் தூளாக நறுக்கிப் போட்டு மூடிவிடுங்கள். விரும்பினால் கொஞ்சம் புதினா சேர்க்கலாம்.

இதை அலங்கரிப்பதற்கு இன்னொன்றும் செய்யலாம். நாட்டு மருந்துக் கடைகளில் பெருமாள் கோயில் தீர்த்தப் பொடி என்று கேட்டால் ஒரு பொடி தருவார்கள். மெல்லிய பச்சைக் கற்பூர வாசனையோடு ஜோராக இருக்கும். அதில் இரண்டு சிட்டிகை தூவி, அப்படியே தண்ணீரை மூடி வைத்து விடுங்கள். முழு ராத்திரி மூடியே இருக்கட்டும். மறுநாள் காலை இந்நீரை வடிகட்டி பாட்டில்களில் எடுத்துக் கொண்டு வெளியே போகலாம். ருசி, மணம் என்பதைத் தாண்டி சட்டென்று சக்தி கொடுக்கும் நீர் இது.

ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருகிறது. கண்றாவியான ஒரு கோடை காலத்தில் பதேபூர் சிக்ரியைப் பார்க்கப் போயிருந்தேன். தெரியுமல்லவா? பேரரசர் அக்பர் கட்டிய கோட்டை நகரம். ஒரு காலத்தில் ரொம்ப அழகான ஊராக இருந்திருக்குமோ என்னமோ. நான் போனபோது கோயம்பேடு மார்க்கெட்டின் சற்றே விரிந்த வடிவமாகக் காட்சியளித்தது.

எங்கு பார்த்தாலும் குப்பை. எல்லா பக்கங்களில் இருந்தும் துர்நாற்றம். பாதை எது? பிளாட்ஃபாரம் எது என்றே கண்டுபிடிக்க முடியாத அளவுக்குக் கடைகள் ஆக்கிரமித்த நகரமாக இருந்தது அது. எங்கெங்கிருந்தோ வந்து குவிந்துகொண்டே இருந்த சுற்றுலாப் பயணிகள் யாரும் அந்த ஊரை விட்டு நகரவே மாட்டார் களா என்று நினைக்கத் தோன்றும் அளவுக்குக் கூட்டம் இறுகிக்கொண்டே போனது.

வெயிலோ, வந்தாரை வறுத்தெடுக்கும் பணியில் வெகு மும்முரமாக இருந்தது. எத்தனை தண்ணீர் குடிப்பது? எவ்வளவு குளிர்பானம் அருந்துவது? காலை 8 மணிக்கு சுற்ற ஆரம்பித்தவனுக்கு 11 மணியளவில் லேசாக மயக்கம் வந்துவிட்டது. வியர்வைக் கசகசப்பும் ஜனக் கூட்ட நெரிசலும் சகிக்க முடியவில்லை. இந்த லட்சணத்தில் அக்பரின் கோட்டை எத்தனை அழகாக இருந்து என்ன? ஒரு கல்லைக் கூட ரசிக்க முடியவில்லை.

10 நிமிஷம் ஓரிடத்தில் அமைதியாக உட்கார்ந்தேன். சற்று தூரத்தில் யாரோ வியாபாரி பானையில் மோர் விற்றுக் கொண்டிருந்தான். அங்கும் கூட்டம். கியூவில் நின்றுதான் மோர் வாங்கியாக வேண்டும். கொஞ்சம் கூட்டம் குறைந்தபின் வாங்கலாம் என்று எண்ணி அமைதி காத்தேன். ஆனால், கூட்டம் குறைவதாக இல்லை. சரி, இதிலெல்லாம் ரோஷம் பார்க்கலாகாது என்று எழுந்து போய் வரிசையில் நின்றுகொண்டேன்.

மேலும் 10 நிமிடங்களுக்குப் பிறகே மோர் வியாபாரியை நெருங்க முடிந்தது. அவன் முன் இரண்டு பானைகள் இருந்தன. ஹிந்தி என்ற ஒரு மொழி இருந்தது. இரண்டில் எது வேண்டும் என்று அவன் கேட்டான். இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்று நானறிந்த மொழிகளிலே இனிதான தமிழில் கேட்டதற்கு பதில் இல்லை. சரி போ என்று ஆங்கிலத்தில் அதையே திரும்பக் கேட்டேன். அவன் பதில் சொல்லாமல் இல்லை. ஆனால், ஹிந்தியில் மட்டுமே சொன்னான். கேவலம் ஒரு தம்ளர் மோருக்கு இத்தனை சொற்களை விரயம் செய்ய வேண்டுமா என்று தோன்றியது. இரண்டிலொரு பானையைச் சுட்டிக்காட்டி, ‘‘அதையே கொடு’’ என்று சொல்லிவிட்டேன்.

அவன் பானையைத் திறந்தான். நீண்ட கரண்டி ஒன்றை அதன் உள்ளே விட்டு லாகவமாக இந்தப் பக்கம் ரெண்டு, அந்தப் பக்கம் ரெண்டு கலக்கு. எடுத்து ஒரு கோப்பையில் ஊற்றி நீட்டினான். வாங்கிக்கொண்டு, அடுத்த பிரகஸ்பதி வாங்கிய மறு பானை மோரை எட்டிப் பார்த்தேன். அதில் மட்டும் கருவேப்பிலை, பச்சை மிளகாய், கடுகு வகையறாக்கள் இருந்தன. ஓஹோ, அது மசாலா மோர்; இது சாதா மோர் போல இருக்கிறது என்று எண்ணிக்கொண்டு, வாங்கிவிட்டபடியால் ஒரு வாய் அருந்தினேன்.

மோசமில்லை. மோர் நன்றாகவே இருந்தது. அந்த மறுபானை மோர் இன்னுமே நன்றாக இருக்கக்கூடும். அதை ருசிக்க வேண்டுமென்றால் மீண்டும் வரிசையில் நின்றாக வேண்டும். எனவே அந்த ஆசையை விலக்கிவிட்டு என் கோப்பை மோரை அருந்தி முடித்தேன்.

கொஞ்சம் தெம்பு வந்துவிட்டதோ? அக்பரின் கோட்டைக்குள் பிரவேசித்தேன். சிவப்பு வண்ணக் கட்டிடக் காவியம் அது. என்னமாய்த்தான் உட் கார்ந்து ப்ளூ ப்ரிண்ட் போட்டிருப்பார் களோ தெரியவில்லை. அங்குலம் அங்குலமாக ரசித்து ரசித்துக் கட்டப்பட்ட கோட்டை.

பார்த்தபடியே உப்பரிகைப் பக்கம் போய்ச் சேர்ந்தபோது எனக்குள் என்னவோ நிகழ்ந்து கொண்டிருப்பது போல் இருந்தது. ஆனால், என்னவென்று சரியாகத் தெரியவில்லை. தொண்டை வறண்டது. தாகமென்றால் கொலை தாகம். இத்தனைக்கும் இரண்டு லிட்டர் தண்ணீர் உள்ளே போயிருக்கிறது. மேலுக்கு ஒரு கோப்பை மோர். அதெப்படி பத்தே நிமிடங்களில் இப்படியொரு தாகம் வரும்?

தாகம் தவிர, என் எதிரே போய்க்கொண்டிருந்தவர்களுக்கு எல்லாம் இரண்டு தலைகள் இருப்பது போலத் தெரிந்தது. பதினாறாம் நூற்றாண் டில் புதைந்த மனிதர்களா இவர்கள்? எல்லோரும் எப்படி உப்பரிகையின் கைப்பிடிச் சுவரைத் தாண்டி அந்தர வெளியில் பறக்கிறார்கள்? அட நாமும் பறந்து பார்த்தால்தான் என்ன?

கைப்பிடிச் சுவர் அருகே வந்து நின்றேன். நின்றேனா, படுத்தேனா என்று சரியாக நினைவில்லை. ஒரு மணி நேரமோ, ஒரு நாளோ, ஒரு வருடமோ கழித்துக் கண்விழித்தபோது நடந்தது புரிந்தது. மறுபானையில் இருந்ததல்ல; எனக்கு அவன் எடுத்துக் கொடுத்த பானையில் இருந்ததுதான் மசாலா மோர். சனியன், என்னத்தைப் போட்டுக் கலக்கியிருந்தானோ? உயிரே போய் வந்தாற்போலாகிவிட்டது. கரணம் தப்பினால் பீர்பால் மடியில்போய் உட்கார்ந்திருப்பேன்.

திரும்பும்போது மறக்காமல் அந்த மோர்க்காரனிடம் விசாரித்தேன். அடேய் அதில் என்னத்தைப் போட்டுத் தொலைத்திருந்தாய்?

பதில் சொன்னான். இந்தியில்தான் சொன்னான். ஆனால் புரிந்தது. அன்று எடுத்த முடிவுதான். எப்பேர்ப்பட்ட தாகமாயினும் வெளியே எதையும் வாங்கிக் குடிப்பதில்லை.

-தமிழ் ஹிந்து நாளிதழில் வெளியான கட்டுரை

– ருசி தொடரும்… | எண்ணங்களைப் பகிர: writerpara@gmail.com

ரெண்டு இட்லி 4 சட்னி.. தூத்துக்குடி ராஜகோபால்-இன் ‘சரவணபவன்’..!


ஒருவர் ராஜகோபாலிடம் மதிய உணவைச் சாப்பிட டி. நகருக்குச் செல்ல வேண்டியிருக்கிறது ஏனென்றால் கே.கே நகரில் ஒரு ஹோட்டல் கூட இல்லை என்று வருத்தப்பட்ட போது திரு. P.ராஜகோபால் ஒரு ஹோட்டலை தொடங்கினார். இப்போது அது தென்னிந்தியாவிலிருந்து உலகம் முழுவதும் ஒரு மிகப்பெரிய ஹோட்டல்களின் சங்கிலித் தொடராக வளர்ந்துள்ளது. வெற்றிக்கான அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியுள்ளதால் P. ராஜகோபாலின் கதையைக் கேட்கும் போது ஒரு திரைப்படத்தில் இருந்து நேரடியாக வெளியில் வந்ததைப் போன்ற உணர்வு வருகிறது. அடிமட்டத்திலிருந்து பிரமிக்கத்தக்க வளர்ச்சி, ஒரு தனி மனித சாம்ராஜ்யம், குற்றம், கட்டுக்கடங்கா உணர்ச்சி, அதிகாரம் என மற்றும் பல முழுமையான விஷயங்களைக் கொண்டது இவரது வாழ்க்கை.
HSB1
தற்போது சரவண பவனுக்கு இந்தியாவில் 33 க்கும் அதிகமான கிளைகளும் மற்றும் கடல் கடந்து வெளிநாடுகளில் 47 கிளைகளும் உள்ளன. அவர் தனது சுயசரிதையில் “நான் எனது இதயத்தை வெற்றியின் மீது பொருத்திவிட்டேன்” என்று கூறுகிறார்.
HSB2

1947 – ஆம் ஆண்டு ஒரு மண் குடிசையில் பிறந்த ராஜகோபால் தமிழ்நாட்டிலுள்ள புன்னையாடி என்ற கிராமத்திலிருந்து வந்தவர். அவருடைய கிராமத்தில் ஒரு பேருந்து நிறுத்தம் கூட இல்லை. ஏழாம் வகுப்போடு அவர் பள்ளிப் படிப்பிலிருந்து நின்று விட்டார். வயிற்றுப் பிழைப்புக்கு சம்பாதிப்பதற்காக ஒரு ஹோட்டலில் வேலைக்குச் சேர்ந்தார். மேசைகளைத் துடைக்கும் வேலையைச் செய்து அங்கேயே தரையில் தூங்குவாராம் ராஜகோபால்.

HSB3

மெதுவாக டீ போட கற்றுக் கொண்டார். விரைவில் ராஜகோபால் ஒரு மளிகைக் கடையில் உதவியாளராக வேலைக்குச் சேர்ந்தார். அங்கு வேலையில் கிடைத்த அனுபவத்தைக் கொண்டு ராஜகோபால் அவருடைய அப்பா மற்றும் மைத்துனரின் உதவியோடு சொந்தமாக ஒரு மளிகைக் கடையைத் திறந்தார். வியாபாரத்தில் அதுவே அவரது முதல் அனுபவம்.

HSB4

கடையை நடத்த அவர் நிறையச் சவால்களைச் சந்தித்தார். திட்டமிட்டபடி வேலைகள் நடக்கவில்லை, இளைஞரான ராஜகோபாலுக்கு ஒரு கடையை நடத்துவதென்பது மிகவும் கடினமாக இருந்தது. ஆனாலும் அவர் தனது மனோதிடத்தால் எல்லாச் சவால்களையும் ஜெயித்தார். பிறகு அவரது நிலைமை மேம்பட ஆரம்பித்தது.

HSB5

1979 ஆம் ஆண்டு அவரது மளிகைக் கடையில் ஒரு விற்பனையாளருடன் மேலே சொல்லப்பட்ட உரையாடல் நடந்தது. இந்த உரையாடல் தான் 1981 ஆம் ஆண்டுச் சரவணபவன் பிறப்பதற்குக் காரணமானது. அந்தக் காலத்தில் வெளியே சாப்பிடுவது நாகரிகம் என்பதை விட அத்தியாவசியமாக இருந்தது. வெளியிடங்களில் சாப்பாட்டிற்கு இருந்த தேவையை உணர்ந்த ராஜகோபால் அந்த வியாபாரத்தில் குதித்தார்.

HSB6

ஆரம்பகாலம் முதலே ராஜகோபால் உணவின் சிறந்த தரம் மற்றும் வாடிக்கையாளரின் திருப்தி ஆகியவற்றின் மீது கவனம் செலுத்தினார். இப்போது இருப்பது போல இந்த வார்த்தைகளெல்லாம் முக்கிய நடைமுறையாக ஹோட்டல்களில் இல்லாத ஒரு காலத்திலேயே அவர் அதையெல்லாம் கடைபிடித்தார்.

HSB7

அவரிடம் மட்டமான சமையல் பொருட்களைப் பயன்படுத்தும்படியும் மற்றும் பணியாளர்களுக்குக் குறைந்த சம்பளத்தைக் கொடுக்கும்படியும் ஆலோசனை கூறிய ஒருவரை ராஜகோபால் திட்டி அனுப்பி விட்டார். தொடக்கக் காலத்தில் சிறந்த தரமான உணவை கொடுப்பதற்காக ஹோட்டலை நஷ்டத்திற்கு நடத்த வேண்டி வந்தது. ஒவ்வொரு மாதமும் சுமார் ரூபாய் 10,000 நஷ்டமடைந்தார். ஆனால் காலப்போக்கில் அவருடைய நற்பெயர் வளர்ந்து நஷ்டங்கள் லாபங்களாக மாறின.

HSB8

சரவணபவனின் வெற்றியின் ரகசியம் நல்ல தரமான உணவை பரிமாறுவதில் மட்டுமில்லை. அங்கு வேலை செய்யும் பணியாளர்களை அக்கறையுடன் கவனித்துக் கொள்வதிலும் மற்றும் பணியிடத்தின் உயர் தரத்திலும் உள்ளது.

HSB9

ராஜகோபால் தட்டின் மீது வாழையிலையைப் பரப்பி அதன் மீது உணவு பரிமாறும் பழக்கத்தைத் தொடங்கினார். அது ஏற்கனவே வேறொருவர் சாப்பிட்ட தட்டில் சாப்பிடுகிறோமே என்கிற வாடிக்கையாளர்களின் சஞ்சலத்தைப் போக்கியதோடு பணியாளர்களுக்குத் தட்டுக்களைக் கழுவும் வேலையையும் சுலபமாக்கியது.

HSB10

ராஜகோபால் உணவில் முடி விழுந்திருக்கிறது என்கிற புகார்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து வராமலிருக்கப் பணியாளர்களுக்கு மாதம் ஒருமுறை தலைமுடியை வெட்டச் செய்தார். மேலும் அது பணியாளர்களுக்குக் கண்ணியமான தோற்றத்தையும் அளித்தது. அடுத்த நாள் காலையில் வேலையைப் பாதிக்கும் என்பதால் பணியாளர்களில் யாரும் பின்னிரவு நேரங்களில் சினிமா பார்க்க அனுமதிக்கப்படவில்லை.

HSB11

ராஜகோபால் செய்த முதல் விஷயம் அவரது பணியாளர்களுக்கு அளித்த வேலை பாதுகாப்பு. அவர் தனது பணியாளர்களுக்குத் தங்குமிட வசதியை அளித்தார் மற்றும் அவர்களின் சம்பளத்தையும் உயர்த்தினார். மேலும் அவர் கிராமத்தில் குடும்பங்களை உடைய பணியாளர்கள் அவர்களின் குடும்பங்களைப் பார்த்து வருவதற்காக வருடாந்திர ஊக்கத் தொகையையும் கொடுத்தார். ஒவ்வொரு திருமணமான பணியாளருக்கும் இரண்டு குழந்தைகள் வரை கல்வி உதவியை அளித்தார். ஒரு பணியாளருக்கு உடம்பு சரியில்லை என்றால் அவரைக் கவனித்துக் கொள்ள இரண்டு பேரை அனுப்பினார்.

HSB12

ஒரு பணியாளரின் நலன் அவருடைய குடும்ப நலத்தில் உள்ளது. உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்காகப் பணியாளர்களையும் அவரது குடும்பத்தையும் கவனித்துக் கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

HSB13

இப்படித் தொடர்ந்து சிறப்பான முயற்சி மற்றும் திட்டங்களுடன் சென்னை கேகே நகரில் 14-12-1981ஆம் ஆண்டுத் துவங்கப்பட்ட சரவணபவன் இன்று உலகின் பல இடங்களிலும் விரிவடைந்து தற்போது 91 கிளைகளுடன் வெற்றிச் சாம்ராஜியமாக உள்ளது. கடைசியாகச் சரவணபவன் 04-03-2016ஆம் ஆண்டு நெதர்லாந்து, ஆம்ஸ்டரடேம் பகுதியல் தனது 9வது கிளையைத் திறந்ததுள்ளது.

HSB14

தூத்துக்குடியில் இருந்து வந்த இளைஞன் சென்னையில் துவங்கிய முதல் ஹோட்டல் வெற்றியின் மூலம் இன்று சரவணபவன் நிறுவனத்தின் மொத்த மதிப்பு 700 மில்லியன் டாலர்.

HSB15

2009 ஆம் ஆண்டுச் சாந்தாராம் என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. HSB16

சாந்தாராம் என்பவர் ராஜகோபாலின் உதவி மேலாளர்களில் ஒருவருடைய மகளான ஜீவஜோதி என்பவருடைய நெருங்கிய நண்பர். ராஜகோபால் ஜீவஜோதியை திருமணம் செய்து கொள்ள விரும்பினார்.

ஆனால் ஜீவஜோதியோ சாந்தாராம் மீது ஆர்வமாக இருந்தார். பலமுறை எச்சரித்த பின்பும் அவர்கள் சந்திப்பதை நிறுத்தவில்லை. இந்நிலையில் சாந்தாராம் கடத்தப்பட்டார்.

சில நாட்களுக்குப் பின்னர்ச் சாந்தாராமின் உடல் மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடர்களுக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டது. ராஜகோபால் தான் கொலை செய்தார் என்பதற்குச் சாட்சியம் இல்லாததால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

-http://tamil.goodreturns.in/

 

20-ருசியியல் சில குறிப்புகள்: விரதம் எதற்கு?


முழுநாள் விரதம். அதைப் பற்றித் தான் பேசிக்கொண்டிருந்தோம் இல்லையா? முடித்துவிடுவோம்.

விரதங்களை இரவுப் பொழுதில் தொடங்குவது நல்லது. இது ஏதடா, நாமென்ன நடுநிசி யாகம் செய்து இட்சிணியையா வசப்படுத்தப் போகிறோம் என்று நினைக்காதீர். ஒரு நாளில் நாம் தவிர்க்கவே கூடாதது இரவு உணவு. இந்த ரெடிமிக்ஸ்காரர்கள், ஓட்ஸ் வியாபாரி கள், சீரியல் உணவு தயாரிப்பாளர்கள் கூட்டணி வைத்து சதி பண்ணித்தான் காலை உணவைக் கட்டாயமாக்கியது. உண்மையில், காலை சாப்பிடாதிருந்தால் எந்தப் பிரச்சினையும் இராது. சொல்லப் போனால் காலைப் பசி என்ற ஒன்று நமக்கு இயல்பில் கிடையவே கிடையாது.

புரியவில்லை அல்லவா? உங்கள் வீட்டில் பள்ளிக்குச் செல்லும் சிறு குழந்தைகள் இருந்தால் அவர்களைக் கவனித்துப் பாருங்கள். காலை டிபன் சாப்பிட அசகாய சண்டித்தனம் செய்வார்கள். மிரட்டி, அதட்டி, திணித்துத் தான் பெரும்பாலான அம்மாக்கள் அனுப்பி வைப்பார்கள்.

அதே பிள்ளைகள் மாலை பள்ளி விட்டுத் திரும்பி வந்ததும் என்ன கொடுத்தாலும் அள்ளி அள்ளி கபளீகரம் செய்வதைப் பார்த்தால் சற்று விளங்கும். மனிதப் பிறவிக்குப் பசிக்கத் தொடங்குவதே மதியத்துக்குப் பிறகுதான். இதுதான் இயற்கை.

எனவே விரதங்களை இரவில் ஆரம்பிப்பது ஆரோக்கியத்துக்கு நல்லது.

என் 24 மணிநேர உண்ணாவிரதம் இன்றிரவு 10 மணிக்குத் தொடங்குகிறது என்றால், ஒன்பதரைக்கு நான் சாப்பிட உட்காருவேன். அப்போது உண்ணுவது வெறும் சாப்பாடல்ல; அமர்க்களமானதொரு விருந்தாக அது இருக்கவேண்டும். ஒரு சாம்பிள் மெனு சொல்லவா?

நெய்யில் சமைத்த பனீர் ஒரு கால் கிலோ. தேங்காய் சேர்த்து, அதேபோல் நெய்யில் சமைத்த ஒரு காய் 200 கிராம். கத்திரிக்காய், வெண்டைக்காய், கோஸ், காலி ஃப்ளவர், பூசணிக்காய், சுரைக்காய் என்று எதுவாகவும் இருக்கலாம். தரைக்கு அடியில் விளையும் காய்கறிகளை மட்டும் நான் சேர்ப்பதில்லை. என் பிரியத்துக்குரிய உருளைக் கிழங்கை நான் விவாகரத்து செய்து சுமார் 10 மாதங்கள் ஆகின்றன. ஆச்சா? ஒரு காய்கறி சூப் சேருங்கள். வேண்டிய அளவுக்கு இதில் சீஸ் போடலாம். ருசி அள்ளும். பனீர், காய்கறி வகையறாக்களுக்குத் தொட்டுக்கொள்ள ஒரு தேங்காய்ச் சட்னி அல்லது வேறெதாவது சட்னி. ஒரு கப் முழுக் கொழுப்பு தயிர். பத்தாத குறைக்கு 50 கிராம் வெண்ணெய்.

இந்த மாதிரி ஒரு விருந்தை என்றாவது ஒரு நாளாவது முயற்சி செய்து பாருங்கள். ருசியில் சொக்கிப் போய்விடுவீர்கள்.

இதில் அரிசி கிடையாது. கோதுமை, சோளம், க. பருப்பு, உ.பருப்பு, ப.பருப்பு, து.பருப்பு உள்ளிட்ட எந்த தானிய வகையறாவும் கிடையாது. எண்ணெய் கிடையாது. முழுக்க முழுக்க நல்ல கொழுப்பும், நல்ல குடும்பத்தில் பிறந்து வளர்ந்த குறைந்த அளவு கார்போஹைடிரேடும்தான் இருக்கும். உடம்புக்கு ஒன்றும் செய்யாது. இதைச் சாப்பிட்டு, 10 நிமிஷம் காலாற நடந்துவிட்டுப் படுத்துவிட்டால் முடிந்தது.

காலை உறங்கி எழும்போது ஃப்ரெஷ்ஷாக இருக்கும். புத்துணர்ச்சியைக் கூட்டிக்கொள்ள பால் சேர்க்காத ஒரு கருப்பு காப்பி குடிப்பேன். அதில் ஒரு கலோரிதான் இருக்கும் என்பதால் அதனால் விரதம் கெடாது. இல்லாவிட்டால் சிட்டிகை உப்புப் போட்டு பச்சைத் தேநீர் அருந்தலாம். ஆனால், சர்க்கரை சேர்க்கக்கூடாது.

இதன்பிறகு வெறும் தண்ணீர் மட்டும் தான். ஒரு மணி நேரத்துக்கு அரை லிட்டர் என்பது என் கணக்கு. விரதம் இருக்கும்போது இப்படித் தண்ணீர் குடித்துக்கொண்டிருப்பது அவசியம். என்ன ஒரு ஏழெட்டு முறை கூடுதலாக சுச்சூ வரும். அவ்வளவுதானே தவிர, உடம்பு டீ ஹைடிரேட் ஆகாமல் இருக்கவும் உள்ளே போன கொழுப்புணவு சக்தியாக உருப்பெறவும் இது அவசியம்.

இம்மாதிரியான விரதம் இருக்கும் போது பசி என்ற உணர்வே வராது. இதுவே நீங்கள் முதல் நாள் இரவு ரெகுலர் சாப்பாடோ, பரோட்டா சப்பாத்தி வகையறாக்களையோ, ஃப்ரைட் ரைஸ், புலாவ் இனங்களையோ ஒரு கை பார்த்திருந்தீர்கள் என்றால் காலை எழுந்ததுமே பசிக்கும். 9 மணிக்கே என்னத்தையாவது கொண்டு வா என்று வயிறு ஓலமிடும். அது மாவுச் சத்து உள்ள உணவு வகையின் கல்யாண குணம். மிஞ்சிப் போனால் அன்று மதியம் வரை சாப்பிடாமல் இருக்க முடியும். அதற்குமேல் தாங்காமல் மாயாபஜார் ரங்காராவ் ஆகிவிடுவோம்.

தானிய உணவுக்கு பதில் கொழுப்பு உணவு உட்கொள்ளும்போது பசியுணர்ச்சி மட்டுப்படும். உள்ளே போகும் கொழுப்பு தவிர, ஏற்கெனவே அங்கே பிதுரார்ஜித சொத்தாக சேகரித்து வைக்கப்பட்டிருக்கும் கொழுப்பும் சேர்ந்து எரிந்து சக்தியாக மாறும்.

இப்போது நீங்கள் ஒரு கேள்வி கேட்கவேண்டும். இத்தனைக் கொழுப்பு சாப்பிட்டால் உடனே மோட்ச சம்பந்தம் வந்துவிடாதா?

என்றால், வராது! தானியங்களைத் தவிர்த்துவிட்டு, கொழுப்பை மட்டும் உணவாகக் கொள்ளும்போது ஹார்ட் அட்டாக் பிரச்சினை இராது என்பதே பதில். இரண்டும் சேரும்போதுதான் சிக்கல்.

இதே விரத ஸ்டைலை அசைவ உணவு கொண்டும் முயற்சி செய்யலாம். சிக்கன், மட்டனில் எல்லாம் கார்போஹைடிரேட் கிடையாது. இஷ்டத்துக்கு வெளுத்துக் கட்டலாம். என்ன ஒன்று, சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி என்று இறங்கிவிடாதிருக்க வேண்டும். பிரச்சினை அந்தப் பிரியாணி அரிசியில் தானே தவிர, சிக்கனிலோ மட்டனிலோ இல்லை என்பது புரிந்துவிட்டால் போதும்.

முதல் நாள் இரவு 10 மணிக்கு விருந்து முடித்து, விரதம் தொடங்கினோம் அல்லவா? சரியாக அதே நேரத்தில் மறுநாள் விரதத்தை முடித்துவிட வேண்டும். முந்தைய நாளைப் போலவே ஒரு மகத்தான முழு விருந்து. இந்தப் பாணி விருந்து – விரத முயற்சியில் உடம்பு இயந்திரமானது பரம சுறுசுறுப்படைந்து வேகம் பெறும். மூளை மிக வேகமாக சிந்திக்கும். என்னைப் போல் நாளெல்லாம் நாற்காலி தேய்க்கிற ஜென்மங்களுக்கு இந்த ஒருவேளை உணவு முறை பெரிய வசதி. எடை கூடாது. கண்ட கசுமால வியாதிகள் அண்டாது. எப்போதும் பசி, எப்போதும் தீனி, அதனாலேயே உடல் பருமன் என்னும் தீரா மாய வட்டத்தில் இருந்து எளிதாக வெளியேறிவிட முடியும்.

இன்னொன்றும் செய்யலாம். விரதம் முடித்த மறுநாள் காலை ஒரு கீரை ஜூஸ் அருந்துங்கள். அரைக் கட்டு கீரையை ஆய்ந்து எடுத்துக்கொள்ளுங்கள். அதில் பிடி புதினா, பிடி கொத்துமல்லி, 10 கருவேப்பிலை, ஒரு துண்டு இஞ்சி, கொஞ்சம் சீரகம், மிளகு, ஒரு தக்காளி, ஒரு வெங்காயம், நாலு பல் பூண்டு, ஒரு பிடி தேங்காய் சேர்த்து அப்படியே பச்சையாக மிக்ஸியில் அரைத்து எடுத்தால் முடக்கத்தான் கீரை சேர்த்து அரைத்த தோசை மாவு மாதிரி ஒரு ஜூஸ் வரும். இதில் அரை மூடி எலுமிச்சம்பழம் பிழிந்து உப்பு போட்டு அப்படியே குடித்துவிடுங்கள். பச்சைக் கீரை வாசனை ஒத்துக்கொள்ளாது என்றால் கொதித்த நீரில் கீரையை ஒரு ஐந்து நிமிடம் போட்டெடுத்து வடிகட்டலாம்.

இந்த கீரை ஜூஸானது ஒரு டிடாக்ஸ் தெய்வம். தேகஹானிக்குக் காரணமான கெட்ட சக்திகளை மொத்தமாகக் கழுவிக் கொட்டிவிடும். உடம்பு ஒரு சிறகு போலிருக்கச் செய்யும்.

இப்படியெல்லாம் விரதம் இருந்து என்ன சாதிக்கப் போகிறோம் என்றால் ஒரே ஒரு பதில்தான். இன்னும் விதவிதமாக ருசித்துத் தீர்க்க உடம்பு நன்றாக இருக்க வேண்டாமா?

-தமிழ் ஹிந்து நாளிதழில் வெளியான கட்டுரை

– ருசி தொடரும்… | எண்ணங்களைப் பகிர: writerpara@gmail.com

19-ருசியியல் சில குறிப்புகள்:திருப்தி என்பது பசியடங்கல் இல்லை!


ம்ஹும், இவன் சரிப்பட மாட் டான். நாக்குக்குச் சேவகம் பண்ணிக் கொண்டிருந்த பிரகஸ்பதி தேக சவுக்கியத்துக்கு உண்ணாவிரதம் இருப்பதைப் பற்றிப் பேச ஆரம்பித்து விட்டானே என்று நினைப்பீர்களானால் சற்று அவசரப்படுகிறீர்கள் என்று அர்த்தம். வேகம் குறைய ஆரம்பித்த கணிப்பொறியை ஃபார்மட் செய்து வேகம் கூட்டுவது போல, செயற்பாட்டு வீரியம் மட்டுப்பட்ட இல்லத்தரசி, அம்மா வீட்டுக்குப் போய்த் தங்கி சார்ஜ் ஏற்றி வருவது போல, காய்ந்த கண்டலேறில் கடல் மாதிரி பக்கத்து மாநிலத்து நதி பெருக்கெடுத்தாற்போல, ஒரு விரதமானது நமது ருசி நரம்புகளை எத்தனை உத்வேகத்துடன் தூண்டிவிடும் என்பதை லேசில் சொல்லிவிட முடியாது.

உடனே ஞாபகத்துக்கு வருகிற ஒரு சம்பவத்தைச் சொல்லிவிட்டு விஷயத்துக்கு வருகிறேன். சமீபத்தில் ஒருநாள் நான் விரதம் முடிக்கிற நேரம் வீட்டைவிட்டு வெளியே இருக்கும்படி ஆனது. வீடு ஒரு சவுகரியம். இஷ்டப்பட்ட மாதிரி என்ன வேண்டுமானாலும் செய்து சாப்பிடலாம். உண்ணுவதில் அளவு காக்க வேண்டிய அவசியம் கிடையாது. தவிர நமது மெனுவை முன்கூட்டித் தீர்மானித்து, அதற்கான அலங்கார விசேஷங்களை நாமே பார்த்துப் பார்த்துச் செய்து புசிக்கலாம். ஓட்டலுக்குப் போனால், பிரகஸ்பதி என்ன வைத்திருக்கிறானோ அதுதான். அது என்ன லட்சணத்தில் உள்ளதோ, அதுவேதான். இதனாலேயே பெரும்பாலும் என் உணவு வேளையை வீட்டில் உள்ளது போலப் பார்த்துக்கொள்வேன்.

அன்றைக்கு விதியானது என்னை வெளியே கொண்டுபோய்ப் போட் டது. சரி பரவாயில்லை; ஓட்டல்காரர்களும் ஜீவராசிகள்தானே; பேசி சரி செய்துகொள்ளலாம் என்று நினைத்து ஓர் உணவகத்துக்குச் சென்று உட்கார்ந்தேன். சப்ளையர் சிகாமணி வந்தார்.

‘‘சகோதரா, நான் சற்று வேறு விதமாகச் சாப்பிடுகிற வழக்கம் கொண்டவன். மிரளாமல் சொல்வதை முழுக்க உள்வாங்கிக் கொள். உன் ஓட்டலில் இன்றைக்கு என்ன காய்கறி, கூட்டு வகையறா?’’ என்று ஆரம்பித்தேன்.

அவன் முட்டை கோஸும் முருங்கைக் காய் கூட்டும் என்று சொன்னான்.

‘‘நல்லது. பனீர் புர்ஜி அல்லது பனீர் டிக்கா இருக்கிறதா?’’

‘‘புர்ஜி இல்லை. டிக்கா உண்டு’’ என்றான்.

‘‘நான் தனியாகக் காசு கொடுத்து விடுகிறேன். எனக்கு ஒரு ஐம்பது கிராம் வெண்ணெய் வேண்டும். கிடைக்குமா?’’

மேலும் கீழும் ஒரு பார்வை பார்த்தான். நான்மறைகளுள் ஒன்று கழண்டவன் என்று எண்ணியிருக்கக்கூடும். ‘‘கிடைக்கும்..’’ என்றான்.

‘‘அப்படியானால் ஒன்று செய். ஒரு பெரிய கப் நிறைய முட்டை கோஸ். இன்னொரு பெரிய கப்பில் முருங்கைக் கூட்டு. ஒரு கப் வெண்ணெய். ஒரு பனீர் டிக்கா. இவற்றோடு ஒரு கப் தயிர். இதை முதலில் கொண்டு வா’’ என்று ஆணையிட்டேன்.

‘‘சாப்பாடு?’’ அவன் சந்தேகம் அவனுக்கு.

இதுதானப்பா சாப்பாடு என்று சொல்லி அனுப்பிவிட்டுக் காத்திருந்தேன். சற்று நேரத்தில் முட்டை கோஸை முதலில் எடுத்து வந்து வைத்தான். அளவெல்லாம் போதுமானதுதான். ஆனால், அந்தத் தாவர உணவானது தனது தன் மென் பச்சை நிறத்தை முற்றிலும் இழந்து, மஞ்சள் பூசிக் குளித்துவிட்டு செங்கல் சுவரில் முதுகைக் கொண்டுபோய்த் தேய்த்த நிறத்தில் இருந்தது.

இந்த முட்டை கோஸ் ஒரு வினோதமான காய். குக்கரிலோ, மைக்ரோ வேவ் அடுப்பிலோ அதை வேகவைத்து விட்டால் தீர்ந்தது. நிறம் செத்துவிடும். என்னளவில் ஓர் உணவின் ருசி என்பது அதன் சரியான நிறத்துக்குச் சமபங்கு தருவது. உண்மையிலேயே, நிறமிழந்த காய்கறிக்கு ருசி மட்டு. மேலுக்கு நீங்கள் என்ன மசாலா போட்டு அலங்காரம் செய்தாலும் அது விளக்குமாத்துக் கட்டைக்குப் பட்டுக் குஞ்சலம் கட்டிய மாதிரிதான்.

இதை என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தபோது, உத்தமன் அந்த முருங்கைக் கூட்டைக் கொண்டுவந்து வைத்தான். அநியாயத்துக்கு அதன் மேற்புறம் சூழ்ந்த பெருங்கடலாக ஓர் எண்ணெய்ப் படலம். வடக்கத்திய சப்ஜி வகையறாக்களை எண்ணெயால் அலங்கரித்து எடுத்து வந்து வைப்பார்களே, அந்த மாதிரி. எனக்கு உயிரே போய்விடும் போலாகி விட்டது. ஏனென்றால் மூன்று அல்லது நான்கு பிறப்புகளுக்குத் தேவையான எண்ணெய் வகையறாக்களை உறிஞ்சிக் குடித்து முடித்துவிட்டு, இனி எண்ணெய் என்பதே வாழ்வில் இல்லை என்று முடிவு செய்து ஒன்பது மாதங்கள் ஆகின்றன.

ஆனாலும், என்ன செய்ய? அங்கு வாய்த்தது அதுதான்.

அடுத்தபடியாக பனீர் டிக்கா வந்தது. இந்த பனீர் டிக்காவில் சேர்மானமாகிற தயிரின் அளவு, தன்மை பற்றியெல் லாம் ஏற்கெனவே இங்கு சொல்லியிருக்கிறேன். மேற்படி உணவக மடைப் பள்ளி வஸ்தாதுக்கு பனீர் டிக்கா என்பது பனீரில் செய்யப்படுகிற பஜ்ஜி என்று யாரோ சொல்லியிருக்க வேண்டும். எனவே பனீரை வேகவைத்து, மிளகாய்ப் பொடி சேர்த்த தயிரில் நன்றாக நாலு புரட்டு புரட்டிக் கொடுத்தனுப்பிவிட்டார்.

மொத்தத்தில் அன்றெனக்கு வாய்த்தது பரம பயங்கரமான பகலுணவு. 24 மணி நேர விரதத்தை அப்படியே 48 மணி நேரமாக நீட்டித்துவிடலாமா என்று நினைக்க வைத்துவிட்டது. ஆனால், நான் கலைஞனல்லவா? கண்றாவிக் கசுமாலங்களுக்குக் கவித்துவப் பேரெழில் கொடுப்பது எப்படி என்று யோசிக்க ஆரம்பித்தேன்.

‘‘தம்பி, உங்கள் ஓட்டலில் சீஸ் இருக்குமா?’’

‘‘இன்னாது?’’

‘‘சீஸப்பா! பாலாடைக்கட்டி. துண்டுகளாகவோ கூழாகவோ அல்லாமல் ஸ்லைஸாக வரும். சாண்ட்விச்சில் உபயோகிப்பார்கள்.’

போய் விசாரித்துவிட்டு இருக்கிறது என்றான். ‘‘அப்படியானால் அதில் ஒரு ஏழெட்டு ஸ்லைஸ்கள் வேண்டும்’’ என்று வம்படியாகக் கேட்டு வாங்கினேன். வண்ணமிழந்த முட்டை கோஸைப் பிடிப்பிடியாக அள்ளி ஒவ்வொரு ஸ்லைஸுக்குள்ளும் வைத்து, பூரணக் கொழுக்கட்டை போலப் பிடித்தேன். சூப்புக்கு வைத்திருந்த மிளகுத் தூளை மேலுக்குக் கொஞ்சம் தூவி சாப்பிட்டுப் பார்த்தபோது பிரமாதமாக இருந்தது.

அதேபோல, அந்த எண்ணெய் முருங்கைக் கூட்டை ஒரு தட்டில் சுத்தமாக வடித்துக் கொட்டிவிட்டு 50 கிராம் வெண்ணெயை அதன் தலையில் கொட்டி, நன்றாகக் கலந்து உண்டு பார்த்தபோது இன்னொரு கப் கேட்கலாம் என்று தோன்றியது.

அந்தப் பனீர் டிக்காவைத்தான் பரதேசி கிட்டத்தட்ட வன்புணர்ச்சி செய்திருந்தான். சகிக்க முடியாத காரம் மற்றும் வாயில் வைக்கவே முடியாத அளவுக்கு உப்பு. ஒரு கணம் என்ன செய்யலாம் என்று யோசித்தேன். அதன் மீது படிந்திருந்த தயிர்ப் படலத்தை மொத்தமாக வழித்துத் துடைத்தெறிந்து விட்டு ஒரு அவகேடா ஜூஸ் வாங்கி (பட்டர் ஃப்ரூட் என்பர்) அதில் தோய்த்து உண்ண ஆரம்பித்தேன். எனக்கே சற்றுக் கேனத்தனமாகத்தான் இருந்தது. ஆனால், ஒரு நீண்ட விரதத்துக்குப் பிந்தைய அந்த உணவு கண்டிப்பாக எனக்கு ருசித்தாக வேண்டும். திருப்தி என்பது பசியடங்குவதில் வருவதல்ல. ருசி அடங்குவதில் மட்டுமே கிடைப்பது.

இதற்குள் ஓட்டலுக்குள் ஏதோ ஒரு வினோத ஜந்து நுழைந்துவிட்டது என்ற தகவல் பரவி பலபேர் நான் சாப்பிடும் சவுந்தர்யத்தை நின்று வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார்கள். இவனுக்கு என்னவிதமாக பில் போடுவது என்று ஓட்டல் நிர்வாகம் கூடி ஆலோசிக்கத் தொடங்கியது. நான் யாரையும் நிமிர்ந்து பார்ப்பதைத் தவிர்த்துவிட்டு, பரபரவென்று அனைத்தையும் உண்டு முடித்தேன். விரதம் முடித்ததல்ல என் மகிழ்ச்சி. மிக மோசமான ஓர் உணவை எளிய பிரயத்தனங்கள் மூலம் ருசி மிக்கதாக மாற்ற முடிந்ததே சாதனை.

இந்தப் பின்னணியை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். இப்போது முழு 24 மணி நேரம் உண்ணாதிருப்பது எப்படி என்று பார்த்துவிடலாம்.

-தமிழ் ஹிந்து நாளிதழில் வெளியான கட்டுரை

– மேலும் ருசிப்போம் | எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: writerpara@gmail.com

18-ருசியியல் சில குறிப்புகள்:அதெப்படி ஒருவேளை மட்டும் உண்டு வாழமுடியும்?


 இந்த எடைக்குறைப்பு என்பது ஓர் அகண்ட பரிபூரணானந்த லாகிரி. கொஞ்சம் ருசித்துவிட்டால் மனுஷனை ஒரு வழி பண்ணாமல் ஓயாது. நானெல்லாம் பிறந்தது முதலே அடை, வடை வகையறாக்களுடன் இடைவெளியின்றி உறவாடிய ஜந்து.

நடுவே இடை என்ற ஒன்றும் எடை என்ற மற்றொன்றும் இருப்பது பற்றியெல்லாம் எண்ணிக் கூடப் பார்த்தது இல்லை. விரோதிக்ருதுவில் ஆரம்பித்து ஹேவிளம்பி முந்தைய வருஷம் வரைக்கும் அங்ஙனமே இருந்துவிட்டு, சட்டென்று ஒருநாள் பார்த்து, எடையைக் குறைப்போம் என்று இறங்கினால் இப்படித்தான் ஏடாகூடங்களை எதிர்கொள்ள நேரிடும்.

’கார்ப் ஷாக்’ என்கிற தடாலடி ஒரு நாள் உணவு மாற்ற உற்சவத்தைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தேன். முழுநாள் உண்ணாவிரதம், மாவுச் சத்து மிக்க ஒரு முழு விருந்து, அதன்பின் மீண்டும் ஒரு முழுநாள் உண்ணாவிரதம் என்பது என் திட்டம். சரியாக இதனைச் செய்து முடித்தபின், அடுத்த நாள் காலை எடை பார்த்தால் கண்டிப்பாக இரண்டில் இருந்து மூன்று கிலோ வரை குறைந்திருக்கும் என்று வல்லுநர்கள் சொல்லியிருந்தார்கள்.

ஆனால், நான் எடை பார்த்தபோது தொள்ளாயிரம் கிராம் ஏறியிருந்தேன். குலை நடுங்கிவிட்டது. இதென்ன அக்கிரமம்! இந்த இயலின் ஆராய்ச்சியாளர்கள் இந்த கார்ப் ஷாக்கின் மூலம் எடைக் குறைப்பு நிச்சயம் நடக்கும் என்று சொல்லியிருப்பது உண்மையென்றால் எனக்கு எப்படி ஒரு கிலோ ஏறும்? எந்தக் கேடுகெட்ட சைத்தான் எனக்குள்ளே சென்று உட்கார்ந்துகொண்டு, இப்படியொரு போட்டி அதிமுக நடத்த ஆரம்பித்திருக்கிறான்? புரியவில்லை.

இதில் உச்சக்கட்ட வயிற்றெரிச்சல் ஒன்று உண்டு. என் நண்பர் ஈரோடு செந்தில்குமாரைப் பற்றி ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன் அல்லவா? தமிழகத்தில் அவரை விஞ்சிய கனபாடிகள் ஒருவர் இந்நாளில் இருக்க முடியாது. நமக்கெல்லாம் 192 என்றால் நோட்டுப் புத்தகம்தான் நினைவுக்கு வரும். அவர் எடையில் அந்த எண்ணை எட்டிப் பிடித்தவர். அவருக்கும் என்னைப் போல் ஒருநாள் இந்த எடைச் சனியனைக் குறைத்தால் தேவலை என்று தோன்றி, கொழுப்புணவுக்கு மாறி சர்வ அநாயாசமாக ஐம்பது கிலோ குறைத்தவர். அதோடு மனிதர் திருப்தியடைந்தாரா என்றால் இல்லை.

தனது ஸ்தூல சரீரத்துக்கு அந்த கார்ப் ஷாக் உற்சவத்தை அடிக்கடி கொடுத்துப் பார்க்க ஆரம்பித்தார். சென்றவாரம் நான் ’விளக்கு’ வாங்கிய அதே சமயம் செந்திலும் அந்தப் பரீட்சையில் இறங்கினார். ஆனால், அவர் என்னைக் காட்டிலும் பலமடங்கு வீரியம் மிக்க விரத பயங்கரவாதி. என்னால் 24 மணி நேரம் உண்ணாமல் இருக்க முடியும். அதன்பின் ஒரு பிரேக் எடுத்து சாப்பிட்டுவிடுவேன். செந்தில் 32 மணி நேரம் 48 மணி நேரமெல்லாம் தொடர் உண்ணாவிரதம் இருக்கக்கூடியவர். சரியாகச் சொல்வதென்றால் உண்ணுவதில் உள்ள அதே தீவிரம் அவருக்கு உண்ணாது இருப்பதிலும் உண்டு.

அப்பேர்ப்பட்ட மகானுபாவர் இம் முறை 72 மணி நேர உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்தார். முனிபுங்கவர் மாதிரி ஓரிடத்தில் அக்கடாவென்று உட்கார்ந்து கண்ணை மூடித் தவம் செய்வதென்றால் இப்படி உண்ணாதிருப் பது பெரிய பாதிப்பைத் தராது. அக்காலத்து முனிவர்களெல்லாமே இம்மாதிரி கொழுப்புணவு உண்டு, உடம்பைப் பசிக்காத நிலைக்குப் பழக்கிக்கொண்டுதான் தவத்தில் உட்காருவார்கள்.

நவீன உலகில் புருஷ லட்சணமாக உத்தியோகம் என்று என்னவாவது ஒன்றைச் செய்து தீர்க்க வேண்டியிருக்கிறதே? என் நண்பர், அதையும் செய்தபடிக்குத்தான் விரதமும் இருப்பார்.

இம்முறை அவர் தொடர்ந்து மூன்று தினங்களுக்கு எதுவும் சாப்பிடுவதில்லை என்று முடிவு செய்து அறிவித்தபோது முதலில் என்னால் அதை நம்ப முடியவில்லை. விரதம் என்றால் ஜீரோ கலோரி என்று அர்த்தம். போனால் போகிறதென்று ஒரு நாளைக்கு இரண்டு வேளை பால் சேர்க்காத, சர்க்கரை போடாத கடும் காப்பி வேண்டுமானால் அருந்திக்கொள்ளலாம். நூறு மில்லிக்கு ஒரு கலோரிதான் அதில் சேரும். அது நாலு முறை சுச்சூ போனால் சரியாகிவிடும்.

நான் சொன்னேன், இது உதவாது. விரத இலக்கணங்களை ஒழுங்காகக் கடைப்பிடித்தும் எனக்கு இந்த அதிர்ச்சி வைத்தியம் ஒத்துவரவில்லை. நாமெல்லாம் பிறவி கார்போஹைடிரேட் அலர்ஜியாளர்கள். ஒருவேளை அரிசிச் சோறு உண்டால்கூட ஒரு கிலோ ஏற்றிக்காட்டுகிற உடம்பை ஓரளவுக்குமேல் தேர்வு எலியாகப் பயன்படுத்தக்கூடாது.

அவர் கேட்கிற ஜாதியில்லை. திட்டப்படி 72 மணி நேர விரதத்தை நடத்தி முடித்தார். விரதம் முடித்தபோது அவர் சாப்பிட்டவை இவை: ஐந்து முட்டைகள், கால் கிலோ தந்தூரி சிக்கன், கால் கிலோ பார்பெக்யூ சிக்கன், கால் கிலோ க்ரில்டு சிக்கன், ஒரு ப்ளேட் பன்னீர் ஃப்ரை, பத்தாத குறைக்கு ஒரு எலுமிச்சை ஜூஸ்.

என்னடா ஒரே காட்டான் கோஷ்டியாக இருக்கிறதே என்று தோன்றுகிறதா? நண்பர் ஒரு காலத்தில் ஜீவகாருண்யவாதியாக இருந்தவர்தான். எடைக் குறைப்பில் தீவிரம் ஏற்பட்டதும் கன்வர்ட் ஆகிப் போனவர். அதை விடுங்கள். திட்டம் பலன் கொடுத்ததா? அதுதான் முக்கியம்.

விரதத்துக்குப் பிறகு மேற்படி அசாத் திய விருந்தையும் உண்டு முடித்து, மறுநாள் காலை எடை பார்த்திருக்கிறார். எடை மெஷின் சுமார் ஆறு கிலோ குறைத்துக் காட்டியிருக்கிறது!

ரொம்ப யோசித்த பிறகு, எனக்கு இதற்கு பதில் கிடைத்தது. உடம்பு வாகு என்று சொல்லுவார்கள். என்னதான் பிறந்தது முதல் உண்டு களித்த உணவினம் என்றாலும் எனது தேகமானது கார்ப் சென்சிடிவ் தேகம். காணாதது கண்ட மாதிரி ஒருநாள் உண்டு தீர்த்தாலும் கறுப்புப் பணம் சேர்த்துப் பதுக்கும் பரம அயோக்கியனைப் போல் உடம்புக்குள் ஒரு லாக்கர் திறந்து பதுக்க ஆரம்பித்துவிடுகிறது. இந்தத் தொல்லையில் இருந்து விடுபடத்தான், சேமிக்கவே தெரியாத கொழுப்புணவுக்கு மாறினேன். அதற்கொரு அதிர்ச்சி, அப்புறம் ஒரு முயற்சி என்று போங்காட்டம் ஆடினால் ஒரு கிலோ என்ன, ஒரு குவிண்டாலேகூட ஏறத்தான் செய்யும்.

செத்தாலும் இனி விஷப் பரீட்சைகள் கூடாது என்று அப்போது முடிவு செய்தேன். ஒரு நாளைக்கு மூன்றுவேளை முழு உணவும் முப்பது வேளை நொறுக்குணவும் தின்றுகொண்டிருந்தவன் நான். மேற்கு மாம்பலம் வெங்கடேஸ்வரா போளி ஸ்டாலுக்கு சாக்குப் பை எடுத்துச் சென்று கிலோ கணக்கில் இனிப்பு மற்றும் கார வகையறாக்களைக் கொள்முதல் செய்து வந்து வைத்துக்கொண்டு, ராத்திரி 10 மணிக்கு ஆரம்பிப்பேன்.

2 அல்லது 3 மணி வரை எனக்கு எழுதும் வேலை இருக்கும். எழுதிக்கொண்டே சாப்பிடுவேனா அல்லது சாப்பிட்டுக்கொண்டே எழுதுவேனா என்று சொல்லத் தெரியவில்லை. ஆனால், என்னைப் போல் விடிய விடிய உண்டு தீர்த்தவன் இன்னொருத்தன் இருக்க முடியாது.

அதிலிருந்து மெல்ல மெல்ல மாறத் தொடங்கி இன்று ஒரு நாளைக்கு ஒருவேளை மட்டுமே உணவு என்னும் நிலைக்கு வந்து சேர்ந்திருக்கிறேன். கடந்த ஒரு மாதமாகவே இப்படித்தான். மதியம் 1 மணிக்கு சாப்பிட்டால் அதோடு மறுநாள் மதியம் 1 மணிதான். நடுவே இரண்டு கறுப்பு காபி மட்டும் உண்டு. எடைக் குறைப்பு வெறி குறைந்துவிட்டது இப்போது. ஆனால், உடம்பு சிறகு போலாகி வருவதை உணர்கிறேன். பசி இல்லை. சோர்வில்லை. எவ்வித உபாதைகளும் இல்லை. நோயற்று வாழ இதுதான் ஒரே வழி.

அதெப்படி ஒருவேளை மட்டும் உண்டு வாழமுடியும்?

முடியும். பார்த்துவிடலாம்.

-தமிழ் ஹிந்து நாளிதழில் வெளியான கட்டுரை

– மேலும் ருசிப்போம் | எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: writerpara@gmail.com

17-ருசியியல் சில குறிப்புகள்:உடலைக் குறைக்க மேற்கொண்ட பிரயத்தனம்!


வேள்வி நடக்கிறபோது அசுரர்கள் அக்கிரமம் செய்து அதைக் கலைப்பார்கள் என்று கதை கேட்டிருக்கிறீர்களா? அப்படியொரு அசுரத்தனமான தாக்குதலுக்கு சமீபத்தில் இலக்காகிப் போனேன்.

அதற்கு முன்னால் அப்படியென்ன பெரிய வேள்வி இங்கே நடந்து வாழ்ந்தது என்பீரானால், இத்தொடரின் முதல் சில அத்தியாயங்களை மீண்டுமொருமுறை படித்துவிடவும். எனது எடைக்குறைப்பு நடவடிக்கைகளைப் பற்றிப் போதிய அளவுக்குச் சொல்லியிருக்கிறேன். மாவுச் சத்து குறைவான, கொழுப்பு அதிகமான உணவு வகைகளை உண்ணுவதன்மூலம் பிதுரார்ஜித சொத்தாக தேகத்தில் சேர்த்துவைத்த கெட்ட சரக்கையெல்லாம் அழித்தொழிக்கிற திருப்பணி.

இந்தக் குறை மாவு நிறைக் கொழுப்பு உணவு முறையில் இறங்கிய நாளாக நான் வழக்கமாக உண்ணும் சாப்பாட்டுப் பக்கம் ஒருநாளும் திரும்பியதில்லை. அதாவது, சாதம் கிடையாது. சாம்பார், ரசம் வகையறாக்கள் கிடை யாது. அப்பள இன்பம் இல்லை. அதிரச, தேன்குழல், அக்கார அடிசில் இல்லை. தானியமும் இனிப்பும் எந்த ரூபத்திலும் உள்ளே போகாத உணவு முறை இது. பால், தயிர், பன்னீர், வெண்ணெய், நெய், பாலாடைக்கட்டியென பிருந்தாவனத்துக் கிருஷ்ண பரமாத்மாவின் சமகால எடிஷனாக ஒரு வாழ்க்கை. அவ்வப்போது பாதாம்.எப்போதாவது பிஸ்தா. அளவின்றிக் காய்கறிகள். அதிகமாகக் கீரை இனம்.

இப்படிச் சாப்பிட ஆரம்பித்து ஒரு ஆறு மாத காலத்தில் இருபத்தி மூன்று கிலோ எடையைக் குறைத்திருந்தேன். எந்த குண்டோதரன் கண்ணைப் போட்டுத் தொலைத்தானோ தெரியவில்லை, திடீ ரென ஒரு கெட்ட நாளில் எடைக் குறைப்பானது நின்று போனது.

நானும் என்னென்னவோ செய்து பார்த்தேன். விரதங்கள், காலை நடை என்று வழக்கத்தில் இல்லாதவற்றையெல்லாம் கூட. ம்ஹும். பத்து காசுக்குப் பயனில்லை. நின்ற எடை நின்றதுதான். என்ன செய்யலாம் என்று யோசித்து, கொஞ்சம் உடல் அறிவியலைப் படித்துப் பார்த்தேன். பிறந்தது முதல் மாவுச் சத்து உணவை மட்டுமே உண்டு வருகிறவர்கள் நாம். சட்டென்று உடலுக்கு ஓர் அதிர்ச்சி கொடுத்து, மாவுப் பொருள்களைக் கணிசமாகக் குறைத்து, கொழுப்பில் உடலியந்திரத்தை இயக்க ஆரம்பித்தபோது எடை குறைந்தது. இதற்கு ஆன அவகாசத்தில் உடம்பானது கொழுப்புணவுக்குப் பழகிப் போய்விட்டிருக்கிறது.

எதுவுமே பழகிவிட்டால் ஒரு அசமஞ்சத்தனம் வரத்தானே செய் யும்? சம்சார சாகரம் சத்தம் போட்டால் கண்டுகொள்கிறோமா? மேலதிகாரி முகத்தில் விட்டெறிந்தால் பொருட்படுத்துகிறோமா? ஆனால் மதுக்கடை கள் மூடப்படுகிற சேதி வந்தால் அதிர்ச்சியடைந்துவிடுகிறோம். ஏனென்றால், அதெல்லாம் நடக்காது என்று நம்பிக்கொண்டிருக்கிறோம். நடக்க வாய்ப்பில்லாதவை நடக்கிறபோதுதான் அதிர்ச்சி என்ற ஒன்று தொக்கி நிற்கும்.

நிற்க. விஷயத்துக்கு வருகிறேன். நின்றுபோன எடைக்குறைப்பை மீண்டும் தொடங்குவதற்கு, உடம்புக்கு ஓர் அதிர்ச்சி கொடுத்தால் தப்பில்லை என்றார்கள் சில அற்புத விற்பன்னர்கள். அதாவது, எந்த மாவுச் சத்து மிக்க உணவை விலக்கி, கொழுப்பின்மூலம் எடையைக் குறைத்தேனோ, அதே மாவுச் சத்து உணவை மீண்டும் ஒருநாள் தடாலடியாக உண்பது. கொழுப்புக்குப் பழகிய உடலானது, இந்த திடீர் அதிர்ச்சியைத் தாங்காமல் கொஞ்சம் நிலை தடுமாறும். இன்சுலின் சுரப்பு மட்டுப்படும். ரத்த சர்க்கரை அளவு ஏறும். பழைய கெட்டத்தனங்கள் அனைத்தும் மீண்டும் தலையெடுக்கும்.

வா ராஜா வா என்று காத்திருந்து அனைத்தையும் உலவவிட்டு, தடாலென்று மீண்டும் அடுத்த நாள் கொழுப்புக்கு மாறும்போது உடலுக்கு அதிர்ச்சியின் உச்சம் சித்திக்கும். எனவே மீண்டும் எடைக்குறைப்பு நிகழ ஆரம்பிக்கும் என்பது இந்த இயலின் அடிப்படை சித்தாந்தம்.

செய்து பார்க்கலாம் என்று தோன்றியது. தோதாக வீட்டில் ஒரு விசேஷம் வந்தது.

எப்பேர்ப்பட்ட அபார விருந்திலும் சிந்தை குலையாதிருந்த தவ சிரேஷ்டன் அன்று தொந்திக் குறைப்பு அல்லது கரைப்பு நடவடிக்கைகளின் ஓரங்கமாகப் பண்டிகைச் சமையலை ஒரு கை பார்க்க முடிவு செய்தான்.

அன்றைய என் மெனுவில் மோர்க் குழம்பு இருந்தது. பருப்புப் போட்ட தக்காளி ரசம் இருந்தது. உளுந்து வடையும் அரிசிப் பாயசமும் இருந்தன. வாழைக்காய், பீன்ஸ் போன்ற நான் தொடக்கூடாத காய்கறிகள் இருந்தன. அனைத்துக்கும் மேலாக அப்பம் இருந்தது. வாழைப்பழ அப்பம். மெத்து மெத்தென்று அசப்பில் ஹன்சிகா மோத்வானியின் கன்னம் போலவே இருக்கும். அழுத்தி ஒரு கடி கடித்து ஆர அமர மெல்லத் தொடங்கினால் அடி நாக்கில் இருந்து நுனி வயிறு வரை ருசித்துக்கொண்டே இருக்கும். ஒரு காலத்தில் வெண்ணெய் தோய்த்து உண்ணும் அப்பத்துக்காகவே நான் கோகுலாஷ்டமியை மிகவும் விரும்புவேன். கிண்ணம் நிறைய வெண்ணெய் வைத்துக்கொண்டு, பத்துப் பன்னிரண்டு அப்பங்களைப் பொறுக்க தின்று தீர்ப்பது ஒரு சுகம். ஏப்பம் வரை இனித்துக் கொண்டிருக்கிற அற்புதம் வேறெந்தப் பலகாரத்துக்கும் கிடையாது.

ஆனால் எனது மேற்படி விஷப் பரீட்சை தினத்தில் நான் அப்பத்துக்கு வெண்ணெய் தொட்டுக்கொள்ளவில்லை. நெய் சேர்க்கவில்லை. கொழுப்புணவின் குலக் கொழுந்துகளான அவற்றை முற்றிலும் விலக்கி, எதெல்லாம் எனது உணவு முறைக்கு நேர் எதிரியோ அவற்றை மட்டுமே உண்ணுவதென்று முடிவு செய்திருந்தேன்.

முன்னதாக இந்தப் பரீட்சார்த்தக் கலவர காண்டத்துக்குத் தயாராகும் விதமாக இருபத்தி நான்கு மணிநேர உண்ணாவிரதம் இருந்தேன். தண்ணீ ரைத் தவிர வயிற்றுக்கு வேறெதையும் காட்டாமல் காயப் போடுதல் இங்கே அவசியமாகிறது. அது ஒரு பிரச்சினை இல்லை என்று வையுங்கள். கொழுப்புணவு உண்பவனுக்குப் பசி இருக்காது. விரதமெல்லாம் மிகச் சுலபமாகக் கைகூடிவிடும். சற்றும் சோர்வின்றி நாற்பத்தியெட்டு மணி நேரம், எழுபத்தி இரண்டு மணி நேரம் விரதமிருப்பவர்கள் எல்லாம் உண்டு. நான் இருந்தது வெறும் இருபத்தி நான்கு மணி நேர விரதம்தான்.

அந்த விரதத்தை முடித்துவிட்டு மேற்படி கார்போஹைடிரேட் விருந்துக்குத் தயாரானேன். முற்றிலும் மாவு. முற்றிலும் எண்ணெய். முற்றிலும் இனிப்பு வகைகள். எப்படியும் ஓர் அணுகுண்டு வெடித்த மாதிரி உடம்புக்குள் ஒரு பெரும் புரட்சி நடந்தே தீரும் என்று தோன்றியது. என்னவாவது நடந்து மீண்டும் எடை குறைய ஆரம்பித்தால் போதும் எம்பெருமானே என்று வேண்டிக் கொண்டு ஒரு கட்டு கட்ட ஆரம்பித்தேன். வடைகளையும் அப்பங்களையும் தாராளமாக உண்டேன். வாழைக்காயானது எனது பிராண சிநேகிதன். பல மாதங்களாக அதை நினைத்துக்கூடப் பாராதிருந்தேன். அன்றைக்கு காணாதது கண்டாற்போல் அள்ளி அள்ளி உண்டேன்.

எப்படியும் ஒரு மூவாயிரம் கலோரிக்கு உண்டிருப்பேன் என்று நினைக்கிறேன். மூச்சு முட்டி, போதும் என்று தோன்றியபோதுதான் நிறுத்தினேன். தண்ணீர் குடிக்கக்கூட இடமின்றி, தள்ளாடிச் சென்று அப்படியே படுத்துத் தூங்கியும் போனேன்.

ஆக, பரீட்சை எழுதியாகிவிட்டது. இனி இது பலன் தர வேண்டும்.

இந்தப் பரிசோதனையின் இறுதிக் கட்டம்தான் முக்கியமானது. இருபத்தி நான்கு மணி நேர முழு உண்ணாவிரதத்துக்குப் பிறகு மாவுச் சத்து மிக்க ஒரு விருந்தை உண்பதோடு இது முடிவதில்லை. அந்த விருந்துக்குப் பிறகு, தொடர்ச்சியாக இன்னொரு இருபத்தி நாலு மணி நேர உண்ணாவிரதம் தேவை. கொழுப்புணவில் இருக்கும்போது உண்ணாவிரதம் சுலபம். ஆனால் அரிசிச் சோறுக்கு அது ஆகாது. பசி வயிற்றை எரித்துவிடும்.

அப்படி எரிப்பதில்தான் காரிய சித்தி என்றார்கள் உத்தமோத்தமர்கள். என்ன கெட்டுப் போய்விடும்? சரி என்று அதையும் வெற்றிகரமாக நிறைவேற்றி முடித்தேன்.

அதன்பிறகு நடந்த கலவரத்தை அடுத்த வாரம் சொல்கிறேன்.

-தமிழ் ஹிந்து நாளிதழில் வெளியான கட்டுரை

– மேலும் ருசிப்போம் | எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: writerpara@gmail.com

16-ருசியியல் சில குறிப்புகள்-காரத்தின் கசப்பும், நடன சுந்தரியின் நளினமும்!


வட கிழக்கு மிளகாய் ரகங்களின் கவித்துவக் காரம் பற்றியும், எனது மராட்டியக் கவி நண்பருடன் மிஷ்டி தோய்க்கு மிளகாய் ஊறுகாய் தொட்டுச் சாப்பிட முடிவு செய்தது பற்றியும் சென்ற கட்டுரையில் சொல்ல ஆரம்பித்தேன் அல்லவா? அதை முடித்துவிடுவோம்.

சிவப்பு நாகா அல்லது பேய் நாகா என்று அழைக்கப்படுகிற நாகா ஜொலாகியா இனத்தில் அதைப் போலவே கொலைக்காரம் கொண்ட வேறு சில உப மிளகாய்கள் உண்டு. அந்த வங்காள நாடக சிரோன்மணி எங்களுக்குக் கொடுத்தனுப்பிய மிஜோரத்து ஊறுகாயானது அப்படியான மிளகாயில் போடப்பட்டது. அசப்பில் உறை ரத்தம் போலவே இருந்தது. மிளகாயும் மசாலாவும் சுமார் ஆறு மாதங்களாக ஊறிக்கொண்டிருப்பதாக நண்பர் சொல்லியிருந்தார். அது ஊற ஊறக் காரம் ஏறுகிற ரகம். வழக்கமாக நாம் ஊறுகாய் போடப் பயன்படுத்துகிற நல்லெண்ணெய் அதில் கிடையாது. பதிலாக, அடி நாக்கில் சற்றுக் கசப்பை ஏற்றிக்கொடுக்கிற கடுகு எண்ணெய்.

பொதுவாகவே காரத்தின் இடுப்பில் படிந்த கசப்பு, ஒரு நடன சுந்தரியின் நளினம் கொண்டது. தனியாக அதை உணர முடியாது. கண்ணீரின் உப்பைப் போன்றது அது. சாப்பிட்டு ஆனதும் காரம் அடங்கி, வியர்த்துக் கொட்டி, கொஞ்சம் கொஞ்சமாக நிதான நிலைக்கு வந்து சேரும்போது அடித் தொண்டையில் மிக மெலிதாகக் கசக்கும். நன்றாக இருக்கும்.

சில ரக மிளகாய்களுக்கு இயல்பிலேயே இந்த இடுப்பில் படிந்த கசப்புச் சுவை உண்டு. காரத்தின் வீரியத்தில் அது சட்டென்று தெரியாதே தவிர அதையும் இனம் கண்டு ஆராய்ந்து வைத்திருக்கிற பிரகஸ்பதிகள் இருக்கிறார்கள். மோரிச் என்று ஒரு மிளகாய் இருக்கிறது. இது பங்களாதேஷில் அதிகம் விளையும். பூட் ஜொலாகியா மிளகாய் இனத்தைச் சேர்ந்தது. இந்த மோரிச்சில் மேற்படி கசப்பு சற்று அதிகமாகவே உண்டு. கிழக்கு வங்காளத்துக் கிங்கரர்கள் இந்த மிளகாயைக் கூட்டு, பொரியல் செய்து சாப்பிடுவார்கள். அது வீரம் விளைந்த மண்ணோ இல்லையோ, காரம் விளைந்த மண். கிட்டத்தட்ட மரணத்தின் வாசல் கதவு வரை இழுத்துச் சென்று காட்டிவிட்டு வரக்கூடிய காரம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதை விரும்பிச் சமைத்து உண்கிறவர்களின் மனநிலையை ஆராய்ந்து பார்த்தால் என்னவாவது ஞானம் சித்திக்கலாம்.

இருக்கட்டும். நாம் மிஜோரத்து மிளகாய் ஊறுகாய்க்கு வருவோம். அது நாகா ஜொலாகியா அல்ல என்று நண்பர் சொல்லியிருந்தார். அந்த இனத்தைச் சேர்ந்த வேறு ஏதோ ஒரு மிளகாய். அவர் சொன்ன பெயர் இப்போது மறந்துவிட்டது. ஆனால் அதை ருசி பார்த்த அனுபவம் இந்த ஜென்மத்துக்கு மறக்காது.

குட்டிப் பானைகளில் மிஷ்டி தோய் வாங்கிக்கொண்டு ஊறுகாய் சகிதம் நானும் என் மராட்டிய நண்பரும் தங்கியிருந்த விடுதி அறைக்கு வந்து சேர்ந்தோம். உட்கார்ந்ததுமே ஒரு தட்டை எடுத்து வைத்து ஊறுகாய் கவரை அவிழ்த்துக் கொட்டினார் நண்பர்.

அடேய், இது தொட்டுக்கொள்ள மட்டுமே. அதற்கெதற்கு இவ்வளவு?

எப்படியும் ஒரு பத்திருபது பேர் தொட்டுக்கொண்டு சாப்பிடும் அளவுக்கு அதில் ஊறுகாய் இருந்தது. ஆனால் மராட்டிய சிங்கமோ தன் ஒருவனுக்கே அது போதாமல் போய்விடுமோ என்று அச்சப்படுவதாகத் தெரிந்தது. எனக்குப் பிரச்னை இல்லை. இயல்பிலேயே எனக்குக் காரம் ஒவ்வாது. சற்றே காரமான வத்தக் குழம்பு சாதம் சாப்பிட்டாலே கதறிக் கண்ணீர் விட்டுவிடுவேன்.

ஆனால் ருசி பார்க்கிற விஷயம் என்று வந்துவிட்டால் எனக்குக் கண்ணீர் ஒரு பொருட்டல்ல. அந்த மிஜோரத்து மிளகாய், மிஷ்டி தோயுடன் எப்படிச் சேரும் என்று அறியும் ஆவல் கட்டுக்கடங்காமல் இருந்தது. என்னைவிட என் நண்பருக்கு.

அவர்தான் ஆரம்பித்தது. முதலில் சுண்டு விரலால் கொஞ்சம் ஊறுகாயை வழித்தெடுத்து நாக்கில் தடவி சப்புக் கொட்டினார். அதன்மீது ஒரு ஸ்பூன் மிஷ்டி தோயைவிட்டு சேர்த்து மீண்டும் சப்புக் கொட்டினார். ஸ்ர்ர்ர்க்க்க்ஸ்ர்ர்ஸ்க்ற்ற்ற்க் என்று வினோதமாக ஒரு சத்தம் எழுப்பினார்.

‘என்ன?’

‘பிரமாதம். சாப்பிடு!’  நண்பர் கொடுத்த உற்சாகத்தில் நான் கொஞ்சம் ஊறுகாயை வழித்தேன். நாக்கருகே கொண்டு சென்றபோது கணப் பொழுது தயங்கினேன். சரித்திரப் புகழ் வாய்ந்த வடகிழக்குக் காரம். உள்ளுக்குள் ஒரு சிறு எச்சரிக்கை மணி அடித்தது. எதற்கும் இருக்கட்டும் என்று முதலில் அந்த இனிப்புத் தயிரை ஒரு ஸ்பூன் எடுத்து வாயில் விட்டேன். அதன்மீது ஊறுகாயைச் சேர்த்து, சற்றே பதம் பார்த்தேன்.

பரவாயில்லையே, அப்படியொன்றும் கொல்லும் காரமில்லையே என்று எண்ணி, அடுத்த முறை முதலில் ஊறுகாயை நாக்கில் தடவிக்கொண்டு அதன்மீது தயிரை விட்டேன். சப்புக்கொட்டி நன்றாக உண்டேன். இப்போதும் ருசிக்கத்தான் செய்தது.

‘அடேய் கவிஞா, நீ சொன்னது சரி. இனிப்புக்குச் சரியான துணை காரம்தான். இந்த வினோதக் கலவை அருமையாக இருக்கிறது!’ என்று மனமாரப் பாராட்டினேன். பரபரவென்று இருவரும் ஒரு குப்பித் தயிரை ஊறுகாய் சேர்த்து காலி செய்து முடித்தோம்.

இரண்டாவது தயிர்ப் பானையை எடுத்து வைத்தபோதுதான் விபரீதம் விளைந்தது. கவிஞனாகப்பட்டவன் இன்னொரு யோசனை சொன்னான். ஒரு ஸ்பூன் ஊறுகாயை அப்படியே எடுத்து அந்தக் குட்டிப் பானைத் தயிரில் கலந்துவிட வேண்டியது. பிறகு தயிரை ஸ்பூனால் எடுத்து உண்ணலாம்.

விதி யாரை விட்டது? ஒரு ஸ்பூன் என்றவன் சற்று தாராளமாகவே எடுத்துத் தயிரில் கொட்டிக் கலந்தான். அந்தக் கடும் சிவப்பும் தயிரின் பிரமாதமான மென்மையும் மணமும் சேர்ந்து நூதனமான ஒரு கிரக்கத்தைக் கொடுக்க, என்னை மறந்து அந்தப் பானையை அப்படியே வாயில் கவிழ்த்துக்கொண்டேன்.

அரை வினாடி. ஒரு வினாடி. ஒரு சில வினாடிகள்.

என் நாக்கு, கன்னத்தின் உட்பகுதிகள், தொண்டை, உணவுக் குழாயெங்கும் காரம் பரவி தீப்பிடிக்கத் தொடங்கியது. இனிப்புத் தயிர் எங்கே போனதென்றே தெரியவில்லை. தயிரின் இனிப்பைக் கொன்று காரம் அங்கு கோலோச்சத் தொடங்கிவிட்டது. ஆ, இது காரம் என்று உணர்வதற்கு முன்னால் அது காதுகள் வரை பாய்ந்து எரிய ஆரம்பித்தது. தாங்க முடியாமல் அலறத் தொடங்கினேன்.

கவிஞன் பயந்துவிட்டான். ஓடிச் சென்று எங்கிருந்தோ பாட்டில் பாட்டிலாக ஐஸ் வாட்டர் எடுத்து வந்து ஊற்றினான். நான் மிச்சமிருந்த எட்டு பானைத் தயிரையும் குடித்து, அதற்குமேல் சில குடங்கள் தண்ணீரையும் குடித்து, நாலு வாழைப்பழம் சாப்பிட்டு என்னென்னவோ செய்தும் அடங்கவில்லை. உடம்பெல்லாம் உதறி, வியர்த்துக் கொட்டி, இதயத் துடிப்பு எகிறிவிட்டது.

சுண்ணாம்புக் காளவாய்க்குள் உடலின் உள்ளுறுப்புகளைத் தோய்த்தெடுத்த மாதிரியே உணர்ந்துகொண்டிருந்தேன். ஜென்மத்துக்கும் மறக்காத காரம் அது.

முதலில் ருசித்த ஒரு சொட்டு ஊறுகாய்க்குப் பிறகு அதைச் சாப்பிடவே வழியற்றுப் போய்விட்ட அந்த மராட்டிய நண்பனிடம் மறுநாள் மன்னிப்புக் கேட்டேன். ‘உனக்கு ஒரு பானை தயிராவது நான் மிச்சம் வைத்திருக்கலாம்.’

‘அதனால் பரவாயில்லை. நேற்று நீ ஆடிய ஊழித்தாண்டவத்தைப் பற்றி ஒரு கவிதை எழுதியிருக்கிறேன். புரியாவிட்டாலும் பரவாயில்லை. படிக்கிறேன், கேள்!’

சிங்க மராட்டிய மொழி எனக்குத் தெரியாது. அவன் கவிதை நன்றாகத்தான் இருந்திருக்க வேண்டும். சொல்லாட்சியில் காரத்துக்கு நிகரான முரட்டுத்தனமும் தெரிந்தது. ஆனால் அந்தக் கடுகெண்ணெய் வாசனைதான் இல்லை.

-தமிழ் ஹிந்து நாளிதழில் வெளியான கட்டுரை

– மேலும் ருசிப்போம் | எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: writerpara@gmail.com