Category Archives: Thi. Janakiraman

2-அவள் அப்படித்தான் – சில நினைவுகள் – வண்ணநிலவன்


இதன் முந்தைய பகுதி…

–நன்றி http://ilayaraja.forumms.net/

ராயப்பேட்டை கௌடியா மடத்துக்கு அருகே உள்ள சந்தினுள் ஒரு பிரிவியூ தியேட்டர் இருந்தது. ஒரு ஞாயிற்றுக்கிழமை ‘சோமனதுடி‘ (1975) படம் பார்ப்பதற்காக அந்தப் பிரிவியூ தியேட்டருக்கு நானும் ஜெயபாரதியும் போயிருந்தோம். அங்கே படம் பார்க்க வந்திருந்த ருத்ரைய்யாவை ஜெயபாரதி எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். இப்படித்தான் எனக்கும் ருத்ரைய்யாவுக்குமான நட்பு தொடங்கியது. அப்போது ராயப்பேட்டை லாயிட்ஸ் காலனியில் தங்கியிருந்தார்.

அவரது நீண்ட நாள் கனவுகளில் ஒன்று தி.ஜானகிராமனின் “அம்மா வந்தாள் நாவலைப் படமாக்க வேண்டும் என்பது. அதற்கான திரைக்கதை வசனத்தைக் கூட நான் எழுதினேன். கதைவசனத்தை எடுத்துக் கொண்டு டெல்லி சென்று தி.ஜானகிராமனைப் பார்த்தேன். அனுமதியும் தந்தார். ஆனால் அது ஏனோ படமாக்கப்படவேயில்லை.

திரைப்படக் கல்லூரியை முடித்தவுடன் படக் கம்பெனியைத் துவங்குவதற்கான வேலைகளில் இறங்கினார். அவருடைய அக்காள் கணவர் உதவியுடன் ‘குமார் ஆர்ட்ஸ்‘ என்ற கம்பெனியைத் துவங்கினார்.   ஆழ்வார்ப்பேட்டையில் பிரபல பின்னணிப் பாடகி பி. சுசீலாவின் வீட்டுக்கு அடுத்த பங்களாவில் ‘குமார் ஆர்ட்ஸ்‘ இயங்கத் தொடங்கியது. இந்த இடத்தில் தான் ‘பராசக்தி‘ படத்தைத் தயாரித்த நேஷனல் பிக்சர்ஸ் கம்பெனியும் முன்பு இருந்தது.

–நினைவுகள் தொடரும்…

குமுதத்தில் அரசு பதில் பகுதியில்:
கேள்வி: சோமனதுடி பார்த்தீர்களா?
பதில்: இல்லை. ஆனால் சோமனதுடி பார்த்து துடிதுடி என்று துடித்தவர்களைப் பார்த்தேன்.

(எஸ்.ஏ.பி.க்கு உண்மையில் சோமனதுடி படம் பிடித்திருந்தது என்றும் ஆனால் அது சராசரி குமுதம் வாசகனுக்கு பிடிக்காது என்பதால் இப்படி கிண்டல் அடித்தார் என்றும் படித்திருக்கிறேன்.)

Advertisements

தி.ஜானகிராமன் பற்றி சுஜாதா ‘சாவி’ 5.12.1982 இதழில் எழுதிய கட்டுரை


sujatha-5

[சுஜாதா ‘சாவி’ 5.12.1982 இதழில் எழுதிய கட்டுரை]

ஜானகிராமனுடைய சிறுகதைகளை நான் என் பதினேழாம் வயதில் முதலில் படித்தேன். கல்கி, தேவன் போன்றவர்கள் எழுத்தால் மிகவும் வசீகரப்பட்டிருந்த எனக்கு ஜானகிராமனை முதலில் படித்தபோது உடனே இது வேறு தினுசு என்று தோன்றிவிட்டது. அப்போது அவர் கலைமகள், அமுதசுரபி, சுதேசமித்திரன் போன்ற பத்திரிகைகளில் சிறுகதைகள் எழுதிக்கொண்டிருந்தார். சில தீபாவளி மலர்களிலும் அவர் கதைகள் வரும். ஜானகிராமன் கதை இருந்தால் மட்டும் தீபாவளி மலர் வாங்குவேன். ‘மணம்’, ‘சிலிர்ப்பு‘, ‘கொட்டு மேளம்’, ‘சிவப்பு ரிக் ஷா’, ‘பரதேசி வந்தான்’, ‘தவம்’, ‘கடன் தீர்ந்தது’ போன்ற கதைகள் இன்றைக்கும் எனக்கு ஞாபகம் இருக்கின்றன. மற்றவர்கள் எழுத்தை மறந்து அவரையே தேடத்தூண்டியது அவரது சிறுகதைகள். அவருடைய முதல் நாவலை (அமிர்தம்) தேடிப்படித்தேன். கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. நான் எலக்ட்ரானிக்ஸ் படித்துக் கொண்டிருக்கும்போது இரண்டாவது நாவல் ‘மோகமுள்’ சுதேசமித்திரனில் தொடர்கதையாக வெளிவந்தது. சுமார் ஒரு வருஷம் வந்திருக்கும் என ஞாபகம். ஒவ்வொரு வாரமும், பாபுவும், யமுனாவும் என்னை ஆக்ரமித்தார்கள். பக்கத்து வீட்டுப் பெண் சூட்டியிருந்த மல்லிகை மணம் இன்னும் என்னிடம் வீசுகிறது. அவள் தற்கொலை பண்ணிக் கொண்டு இறந்தது இப்பவும் எனக்கு ராத்திரி தூக்கத்தைக் கெடுக்கிறது. மோகமுள் போன்ற முழுமையான நாவலை நான் அதன் பின் தமிழில் படிக்கவில்லை!

thija-logo4

இருந்தும் ஜானகிராமனுக்கு தமிழ் இலக்கிய சரித்திரத்தில் பிரதானமான இடம் அவரது சிறுகதைகளால்தான் என்று எனக்குத் தோன்றுகிறது. மிக நுட்பமான பார்வையும் தஞ்சாவூர்த் தமிழின் சரளமும், சிறுகதைக்கு மிக முக்கியமான காலப் பிரமாணமும் அவர் எழுத்தில் இருக்கும். சிக்கனமான வார்த்தை அமைப்புகளில் மிக அதிகமான விஷயங்களைச் சொல்லிவிடுவார். அவர் நடையில் இருந்த நளினத்தை இன்னும் யாரும் எட்டிப் பிடித்ததாகத் தெரியவில்லை.

“வாசலோடு ரயிலடியிலிருந்து வாடிக்கையில்லாமல் திரும்பிய ஒற்றை மாட்டு வண்டி மெதுவாக ஊர்ந்து நடந்து கடந்தது” என ஒரு வாக்கியத்தில் கதையில் மூடை ஏற்படுத்தி விடுவார். மெலிதான நகைச்சுவை எப்போதும் அவர் கதைகளில் இருக்கும்.

“பழைய பேப்பர்காரன் தராசு, தெய்விகக் கொல்லன் கைவேலை. ஆனையை வைத்தால் ஆறுபலம் காட்டும். ஆறு மாச தினசரிக் காகிதம் எந்த மூலை? கண்ணில் விளக்கெண்ணைய் போட்டுக் கொண்டு இப்பால் அப்பால் திரும்பாமல் தவம் புரிந்து முள்ளைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.”

உரையாடலிலும் அவர் ஒரு உண்மையான கலைஞர்.

“சாமி இந்த தராசைப் பார்த்து இப்படிச் சொல்றீங்களே! எளுதின வித்தியாசம் காட்டும் சாமி. உங்களுக்கு சந்தேகமா இருந்தா கடையிலே போய் ஒரு தராசை வாங்கிட்டு வாங்க. எதுக்கு பொல்லாப்பு.”

அவர் சிறுகதைகள் தொடர்ந்து வெளி வந்த அந்த ஐம்பதுகளில் இளைஞர்களாக இருந்த எங்கள் ஒவ்வொருவரையும் ஜானகிராமன் ஏதோ ஒரு விதத்தில் பாதித்திருக்கிறார். இன்று எழுதுபவர்கள் பலரின் நடையிலும் கருத்தமைப்பிலும் அவர் வெளிப்படையாகவோ, பொதிந்தோ இருக்கிறார். ஜானகிராமன் டில்லிக்குப் போனாலும், ஜப்பான் சுற்றினாலும், ஆஸ்திரேலியாவுக்குச் சென்றாலும் தஞ்சாவூர்க்காரரின் காவிரி நதி ஏக்கமும் குறும்பும் அவரை விட்டுப் போகவில்லை. சில அபாரமான பயணக் கட்டுரைகளை அவர் எழுதியிருப்பது பலருக்குத் தெரியுமோ இல்லையோ (உதய சூரியன்).

ஜானகிராமனை என் இளமைக் காலத்தில் ஒரு இலக்கியக் கூட்டத்தில் முதன் முறை சந்தித்தேன். அதாவது அவரை தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு முறை என் பக்கம் திரும்பி அவர் புன்னகைத்தபோது அதை எடுத்து பைக்குள் போட்டுக் கொண்டு திருப்தியுடன் திரும்பினேன்.

அப்புறம் டில்லியில் அவரை ஆகாஷ்வாணி பவனில், அவருடைய கர்ஸான்ரோடு பலமாடி வீட்டில், கணையாழி இலக்கியக் கூட்டங்களில் பலமுறை சந்தித்துப் பேசியிருக்கிறேன். பேச்சில் முதன்மையாக நகைச்சுவை இருக்கும். மற்றப் பேர் எழுத்தைப் பற்றி குறை சொல்லவேமாட்டார். பதிலாக சற்று மிகையாகவே புகழ்வார். கர்நாடக சங்கீதத்தில் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் சில வேளை சன்னமான குரலில் பாடிக்காட்டுவார். தஞ்சாவூர் திட்டு வார்த்தைகளை அவர் உபயோகிக்கும்போது அவைகளின் மதிப்பு உயரும்.

ஜானகிராமன் கதைகளில் சோரம் – அடல்ட்டரி – அதிகம் என்று ஒரு சமீப காலத்து குற்றச்சாட்டு உண்டு. அவர் சிறுகதைகளை முழுமையாகப் படித்தவர்கள் அவர் மற்ற எவ்வளவோ விஷயங்களைத் தொட்டிருக்கிறார் என்பதை சுலபமாக உணரமுடியும். அவர் எழுத்தைப் பொதுப்படுத்துதல் அவ்வளவு எளிதல்ல. ஏழ்மையில் உள்ள கவிதை கலந்த அவலங்களைப் பற்றி அவர் எழுதினார். நம்பிக்கைத் துரோகம் பற்றி, வயசாவதில், அழிவில் உள்ள சோகம் பற்றி, சங்கீதம் போன்ற கலையம்சங்களை உபாசிக்க வேண்டியது பற்றி.

இளம் வயதில் நீங்கள் சில கதைகளை ஓஹோ என்று ரசித்துப் படித்திருப்பீர்கள். அதையே கொஞ்சம் வருஷம் கழித்து திருப்பிப் படித்தால் “சட் இதைப் போயா அப்படிப் புகழ்ந்தோம்” என்று தோன்றும். ஜானகிராமனின் கதையை முப்பது வருஷம் கழித்துப் படித்தபோது கூட அந்தச் சிலிர்ப்பு எனக்கு மறுபடி ஏற்படுகிறது. அவர் இறந்து விட்டாரா என்ன!

சாவி
5-12-82.

நன்றி – சொல்வனம் 

4- படிப்பின் பயணம் — சுஜாதா


இதன் முந்தைய பகுதி…   

மாணவனாக இருந்தபோது, எழுத்தாளச் சுமைகள், பாசாங்குகள் எதும் இல்லாமல் படித்த போது பிரமிக்க வைத்து என் இளமைக்கால சந்தோஷக் கணங்கள் பலவற்றை எனக்குப் பல கதைகள் அளித்தன.

ஸ்ரீமான் சுதர்சனம்மிஸ்டர் வேதாந்தம்

தேவனின் ‘ஸ்ரீமான் சுதர்ஸனம்’, ‘மிஸ்டர் வேதாந்தம்’, ‘ஜஸ்டிஸ் ஜகன்னாதன்’ போன்ற தொடர்கதைகள் என் பள்ளியிறுதி, கல்லூரி இளங்கலை நாட்களில் குதூகலமளித்தன. எழுத்தாளனாக வேண்டும் என்கிற ஆசையை உயர்த்தின. தேவன், ஐயங்கார் கதைகள் ஏன் எழுதினார் என்பது இப்போதும் எனக்கு விந்தையே!

ராஜத்தின் மனோரதம்

இன்று அவைகளைப் படித்துப் பார்க்கும்போது தேவனின் சிறந்த புத்தகம் ‘ராஜத்தின் மனோரதம்’ தான் என்ற முடிவுக்கு வர முடிகிறது. அவரது தீபாவளி மலர், மல்லாரி ராவ் கதைகள் உட்ஹவுசின் முல்லினர் கதைகளைப் போல இருப்பதைப் பின்னர்தான் கண்டுகொண்டேன். அந்தக் காலத்தில் சிறந்த நகைச்சுவை எழுதியவர் எஸ்விவி. அவரது ‘உல்லாச வேளை‘, ‘செல்லாத ரூபாய்‘ போன்ற புத்தகங்கள் இப்போதுதான் என்னைக் கவர்கின்றன. தேவன், பத்திரிகையின் வாராந்தரத் தேவைகளையும் அவசரங்களையும் புரிந்து எழுதியவர் என்றாலும் அந்தப் பயிற்சி அவரது எழுத்துத் திறமையைத் தீட்டியிருக்கிறது. தமிழில் சிறந்த நாவல்களில் ஒன்றான ‘மோகமுள்‘ ஜானகிராமனால் வாராவாரம் எழுதப்பட்டிருக்கிறது. நான் எம்.ஐ.டி. ஹாஸ்டலில் இருந்தபோது ஞாயிறு தோறும் மாம்பலம் சென்று ‘சுதேசமித்திரன்‘ வாங்கி ரயிலிலேயே வாராவாரம் படித்த நாவல் அது. ‘வாரப் பத்திரிகைகளும், நாவல் இலக்கியமும்‘ என்று எம்ஃபில் பண்ணலாம். சுந்தரராமசாமியின் ‘ஒரு புளிய மரத்தின் கதை‘ ‘சரஸ்வதி‘யில் தொடராக வந்த-நாவல்தான்.

இப்போது தேவனைப் படிக்கையில் பிராமண பாஷையும், பாத்திரங்களும், சூழ்நிலையும் இலக்கிய மதிப்பைக் கட்டுப்படுத்தியிருப்பது தெரிகிறது.

எஸ்.வி.வி.யின் ஐயங்கார் கதைகளின் யதார்த்தம் தேவனைவிட அதிகமானது. தேவன், எஸ்.வி.வி, கல்கி மூவருமே என் எழுத்தார்வத்தை வளர்த்திருக்கிறார்கள். என் அதிர்ஷ்டம் தேவன், கல்கி படித்துக் கொண்டிருந்த அதே வேளையில், லா.ச.ரா, புதுமைப்பித்தன், தி.ஜா மூவரையும் படிக்கவும் வாய்ப்பு கிடைத்தது. இதற்கு என் அண்ணன் காரணம். பாரதியையும், பாரதிதாசனையும், நாமக்கல் ராமலிங்கம் பிள்ளையையும், தேசிக விநாயகம் பிள்ளையையும், டி.கே.சியையும் அறிமுகப்படுத்தினான். கம்பனை அடையாளம் காட்டியதும் என் அண்ணன்தான்.

மெல்ல மெல்ல பத்திரிகை அவசரங்களை மீறிய புத்தகங்களைப் படிக்கத் துவங்கினேன். கலைமகள் பிரசுரித்த தி.ஜானகிராமனின் ‘சிவப்பு ரிக் ஷா’, லா.ச.ராவின் ‘ஜனனி’, சக்தி பிரசுரத்தின் ‘அழகிரிசாமி கதைகள்’, புதுமைப்பித்தன் கதைகள் இவைகளைப் படிக்கையில் எழுத்தில் பல்வேறு அணுகுமுறைகள் இருப்பதை உணர்ந்தேன்.அப்போது படித்த ‘சிலிர்ப்பு‘, ‘பரதேசி வந்தான்’, ‘கடன் தீர்ந்தது’ போன்ற ஜானகிராமன் கதைகள்,லா.ச.ராவின் ‘ஜனனி’, ‘இதழ்கள்’, ‘யோகம்’, ‘கொட்டுமேளம்’, புதுமைப்பித்தனின் ‘மனித யந்திரம்‘, ‘கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்‘, ‘கயிற்றரவு‘, அழகிரிசாமியின் ‘அன்பளிப்பு‘, ‘ராஜா வந்திருக்கிறார்‘ போன்ற பல கதைகள் எனக்கு இன்றும் நினைவில் உள்ளன. அவைகளை இப்போது திருப்பிப் படிக்கிறபோது அப்போது ஏற்பட்ட வியப்பு மறுபடி கிடைக்காவிடினும் அந்த நாட்களின் களிப்பையும், சிலிர்ப்பையும் சற்றேனும் திருப்பி வாழ-முடிகிறது.
தொடர்புடைய பதிவு:
அ.முத்துலிங்கத்தால் தொகுக்கப்பட்ட இந்நூலில்  தமிழின் இருபது முன்னணி எழுத்தாளர்கள் தங்களை பாதித்த நூல்கள் குறித்தும் ஆசிரியர்கள் குறித்தும் ஆழமான பார்வைகளை முன் வைக்கிறார்கள். சமகாலத் தமிழ் இலக்கியத்திலிருந்து உலக இலக்கியம் வரை விரியும் இந்த நூல் ஒரு தலைசிறந்த இலக்கிய அறிமுகம் மட்டுமல்ல, தீவிர விமர்சனத் தொகுப்பாகவும் திகழ்கிறது.

அ. முத்துலிங்கம் புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்களில் தனித்துவமான எழுத்துநடையும் அடையாளமும் கொண்டவர். அவருடைய எழுத்துக்கள் வழியே உருவாகும் உலகம் மிகுந்த நவீனத்துவமும் பரந்த அனுபவங்களும் கொண்டவை. தற்போது கனடாவில் வசித்து வருகிறார்.

என்னைப்பற்றி – About Me
A.Muttuஇலங்கையில், கொக்குவில் என்ற சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தேன். கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்தபின் இலங்கையின் சாட்டர்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும், இங்கிலாந்தின் சாட்டர்ட் மனெஜ்மெண்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும் பூர்த்திசெய்து வேலை பார்த்தேன். பின்னர் ஐ.நாவுக்காக பல வெளிநாடுகளில் பணிபுரிந்து, 2000 ஆண்டில் ஓய்வுபெற்று கனடாவில் மனைவியுடன் வசிக்கிறேன். பிள்ளைகள் இருவர், சஞ்சயன், வைதேகி. வைதேகியின் மகள்தான் அடிக்கடி என் கதைகளில் வரும் அப்ஸரா.
அறுபதுகளில் எழுத ஆரம்பித்து சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நேர்காணல்கள், நாடகங்கள், நாவல் என எழுதியிருக்கிறேன்.
இதுவரை வெளிவந்த நூல்கள் :
1. அக்கா – 1964
2. திகடசக்கரம் – 1995
3. வம்சவிருத்தி – 1996
4. வடக்குவீதி – 1998
5. மகாராஜாவின் ரயில்வண்டி – 2001
6. அ.முத்துலிங்கம் கதைகள் – 2004
7. அங்கே இப்ப என்ன நேரம் ? – 2005
8. வியத்தலும் இலமே – 2006
9. கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது – 2006
10. பூமியின் பாதி வயது – 2007
11. உண்மை கலந்த நாட்குறிப்புகள் – 2008
12. அ.முத்துலிங்கம் சிறுகதைகள் – ஒலிப்புத்தகம் – 2008
13. Inauspicious Times – 2008
14. அமெரிக்கக்காரி – 2009
15. அமெரிக்க உளவாளி – 2010