Category Archives: Sujathavin Cinema Anubavangal

பேசாதே! சுஜாதா


sujatha2

இதுவரை என் நான்கு நாவல்கள் படமாகியிருக்கின்றன. ஒரு திரைக் கதை எழுதிப் பார்த்தேன். அந்தப்படங்கள் சில ஓடின. சில நொண்டின. இந்தக் கட்டுரை சினிமாவின் வியாபார நோக்கங்களையோ அந்த வியாபாரம் இயங்கும் விந்தையான விதிமுறைகளைப் பற்றியோ அல்ல. ஒரு நாவலாசிரியன் திரைக்கதை எழுதுவதைப் பற்றி எனக்கு எழும் எண்ணங்கள் பற்றி.

திரைக்கு எழுதுவது என்பதே ஒரு முரண்பாடு. மிக நல்ல திரைக்கதை என்பது வார்த்தைகளே அற்ற வடிவம் என்பது என் கருத்து. அது ஓர் அடைய முடியாத ஆதர்சம். வார்த்தைகள் தேவைதான். ஆனால் முதலில் ‘திரை’ எழுத்தாளர் கற்றுக் கொள்ள வேண்டியது வார்த்தைகளைக் குறைப்பது. இது பத்திரிகை எழுத்துத் தேவைக்கு நேர் எதிரானது.

ஆதி மனிதன் ஒரு நல்ல திரை எழுத்தாளன்! அவனுக்கு வார்த்தைகள் அதிகமில்லை. இரவில் நெருப்பைச் சுற்றி உட்கார்ந்து கொண்டு கதை சொல்லும்போது அவன் சங்கேதங்களையும் நடிப்பையும் நாடியிருக்கிறான். அவற்றில் சித்திரங்களாக அக்கதைகளைச் சொன்னான். இந்த ஆதி மனிதத்தன்மை மிக நவீன சாதனமான சினிமாவில் இன்றும் தேவையாக இருக்கிறது.

ஆரம்ப கால சினிமா ஒரு பொருட்காட்சி சமாச்சாரமாகத்தான் இருந்தது. முதல் படங்களில் ரெயில் வருவதையும் ஆட்கள் நடப்பதையும் காட்டினார்கள். நிழல் சலனத்தின் ஆச்சரியம் தான் அப்போது முக்கியமாக இருந்தது. எல்லாம் காட்சிகள். வார்த்தைகள் இல்லை. உண்மைச் சம்பவங்களைப்பதிவு செய்வதிலிருந்து மாறி, கற்பனை சம்பவங்களை அமைத்துப் பதிவு செய்தது சினிமாவின் அடுத்த கட்டம். 1903-ல் ‘தி கிரேட் ட்ரெயின் ராபரி’ என்ற படத்தில் இந்த மாறுதல் தலை காட்டியது. படம் ஹிட்! இந்தப் படத்தில் இருக்கும் எளிய கதையை நேராகச் சொல்லும் சினிமா அம்சம் இன்னும் பல சினிமாவுக்குத் தேவையாக இருக்கிறது.

பொருட்காட்சி சாலைகளிலிருந்து விலகி தனிப்பட்ட அரங்கங்களில் சினிமா நுழைந்தபோதுதான் அதில் கலை அம்சங்கள் சேர்ந்து கொண்டன என்று சொல்லலாம். டி.டபிள்யு கிரிஃபித் என்ற குட்டி நடிகர் தற்செயலாக சினிமா எடுக்கப் பிறந்தது (1908) சினிமா சரித்திரத்தில் மிக முக்கியமான மைல் கல்.

கிரிஃபித் முதன் முறையாக மூன்று அம்சங்களை சினிமாவில் நுழைத்து அதை ஒரு கலைப் படைப்பாக மாற்றுவதற்கு உண்டான அஸ்திவாரங்களை ஏற்படுத்தினார். அந்த மூன்றும் க்ளோஸப், நகரும் காமிரா, எடிட்டிங்.

க்ளோஸ் அப் என்பது இன்று சினிமாவின் மிக மகத்தான ஆயுதம். கதாபாத்திரத்தின் முகம், கை, அல்லது கதைக் காட்சியின் ஒரு சிறிய பொருளைத் திரை முழுவதும் பெரிதாக விஸ்தரித்துக்காட்டுவதில் சினிமா உடனே நாடகத்திலிருந்து வேறுபட்டுவிடுகிறது. பார்ப்பவர்களை உடனே கதைக்குள் கட்டாயமாக இழுத்துச் சென்று ‘இதைப் பார்’ என்று தனிப்படுத்திக் காட்டுகிறது. நாற்காலியில் உட்கார்ந்திருந்தவர்கள் கதைக்குள் நுழைந்து விடுகிறார்கள். கதையின் உணர்ச்சிகளிலும் சுக துக்கங்களிலும் பங்கு எடுத்துக் கொள்கிறார்கள்.

நகரும் காமிரா க்ளோஸ் அப்பின் சாத்தியங்களை விஸ்தரிக்கிறது. இடம் மாற்றி நகர்ந்து, காட்ட வேண்டியதை மட்டும் காட்டி டைரக்டரின் ஃபார்முலாவை நம் மேல் கட்டாயமாகத் திணிக்கும் இந்த உத்தியால் நாம் தாற்காலிகமாக டைரக்டரின் அடிமைகளாகிறோம். அவர் காட்ட இஷ்டப்படுவதைத்தான் நம்மால் பார்க்க முடியும் அவர் காட்ட விருப்பும் வரிசை, நேரம், செயல் இவைகளை வேண்டுமென்றே அமைக்க எடிட்டிங் உதவுகிறது. இந்த மூன்றும் திரையின் வார்த்தைக் குறைப்புச் சாத்தியக்கூறுகளை மிக அதிகமாக்கி விட்டன.

திரையில் பேச்சு என்பது லேட்டாக வந்த விஷயம். பேசும் பட ஆரம்பத்தில் அதை ஒரு சாபமாகவே சிலர் கருதினார்கள். சார்லி சாப்ளின் பத்து வருடம் பேசும் படங்களில் நடிக்க மறுத்தார். திரையில் ஒருங்கமைந்த ஒலிப்பதிவு துவங்கிய ஆரம்ப நாட்களில் இந்தக் கலை சற்றுப் பின்னோக்கிச் சென்றது என்னவோ வாஸ்தவம் தான். இஷ்டப்பட்ட வெளிப்புறக் காட்சிகளை மெளனப் படங்களாக எடுத்துக் கொண்டிருந்தவர்களை, ஒளிப்பதிவின் ஸ்டுடியோ தேவைகள் அறைக்குள் திருப்பி அனுப்பி விட்டன. சினிமாப் படைப்பு டிராமாவாகியது. நிறையப் பேசி மாய்ந்தார்கள்.

மெள்ள மெள்ள இந்தக் கட்டுப்பாடுகள் விஞ்ஞான முன்னேற்றத்தால் விலகிப் போக பல சிறந்த எழுத்தாளர்கள் ஹாலிவுட்டைப் படையெடுத்தார்கள். ஆனால் சீக்கிரமே அவர்கள் ஏமாந்து போனார்கள். இந்தப் புதிய சாதனத்தில் வார்த்தைத் தேவைகள் வித்தியாசமாக இருந்தன. இவர்களுக்குப் பிடிபடவில்லை. இவர்கள் சுதந்திரப் போக்கால் டைரக்டர் சொன்னபடி எழுதிக் கொடுக்க மறுத்தனர். ஸ்கவுன் ஃபிட்ஸ் ஜெரால்டு போன்ற மகத்தான எழுத்தாளர்கள் சினிமாவில் படு ஃபிளாப். (தமிழில் புதுமைப்பித்தன் சினிமாவில் திணறியது சிலருக்குத் தெரிந்திருக்கும்) அதிகம் திறமையில்லாத, ஆனால் டைரக்டர் தேவைப்படி எழுதிக் கொடுக்கக் கூடிய இரண்டாந்தர எழுத்தாளர்கள் சினிமாவில் வெற்றி பெற்றார்கள். ‘ஒரு மோசமான நாவல் நல்ல திரைப்படமாக மாறும்’ என்று இன்னும் சிலர் நம்புகிறார்கள்.

சினிமாவின் வியாபாரத் தேவைகள் ஒரு குறிப்பிட்ட ஃபார்முலாவுக்கு ஏற்ப எழுதிக் கொடுப்பவர்களை அதிகம் ஆதரித்தாலும் ஜான் ஹேஸ்டன் போன்ற சில நல்ல திரைக்கதை எழுத்தாளர்களும் தோன்றினார்கள்.

தமிழ்ச் சினிமாவில் நான் பார்த்தவரை இந்த சினிமாத் தேவைகளின் பிரச்னையோடு செயல்படக்கூடிய திரை எழுத்தாளர்கள் பலர் இருக்கிறார்கள். பாலசந்தர், அனந்து, பாரதிராஜா, பஞ்சு அருணாசலம், மகேந்திரன், பாலு மகேந்திரா போன்றவர்கள் சில உதாரணங்கள். இருந்தும் தமிழ் சினிமாவின் தேவைகளும் சினிமா ஒரு கலைப்படைப்பு என்கிற ரீதியில் ஏற்படும் தேவைகளும் பல விதங்களில் முரண்படுகின்றன.

கலைத் தரமான சினிமாவை நாம் எடுப்பதில்லை என்று சொல்லவில்லை நான். கலைத் தரம் என்பது தமிழ் சினிமாவில் தற்செயலான விஷயம்.

திரைக்கதையின் தேவைகள் ஒரு நாவலாசிரியனின் கலைக்கு மிக எதிரானவை. பல இடங்களில் டைரக்டரின் பணியும் திரைக்கதை எழுதுபவரின் பணியும் ஒன்றிப் போய்விடுகின்றன.

சினிமா என்பது ஒரு நான் வெர்பல் மீடியா என்பதைப் பலர் உணரவில்லை. வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு சாதனம் இது. வார்த்தைகள் என்பவை ஒரு தவிர்க்க முடியாத குறைந்த தேவை அம்சம்.

நான் நூறு வார்த்தைகளில் வர்ணிப்பதைத் திரை ஒரு காட்சியில் காட்டிவிடும். ‘அவள் மிக மோசமாகப் பாடினாள்’ என்று நான் எழுதுவதை டைரக்டர் அவள் பாடுவதையும் ஆடியன்ஸ் கொட்டாவி விடுவதையும் காட்டி விவரித்து விடுவார். பெரும்பாலும் வார்த்தைகள் தேவையில்லைதான்.

ஆல்ஃபிரட் ஹிட்ச்காக் வார்த்தையில்லாமல் கதை செய்வதில் மன்னன். அவருடைய ‘ரியர் விண்டோ’வின் பிரபலமாகிவிட்ட ஆரம்பக் காட்சியை உதாரணம் சொல்லலாம். ஒரு விபத்திற்குப் பின் அடிப்பட்டு போரடித்து வீட்டில் படுத்திருக்கும் போட்டோகிராபரை அவர் எப்படி விவரிக்கிறார் என்று பார்க்கலாம். சுலபமாக ‘கார்ல வந்து கொண்டே இருந்தேனா? திடீர்னு ப்ரேக் விழுந்து…’ இப்படி வார்த்தைகளிலோ அல்லது தனித்தனி ஷாட்டுகளிலோ சொல்லியிருக்கலாம். ஹிட்ச்காக் அப்படிச் செய்யவில்லை. ஒரே ஷாட்டில் காட்டினார். ஆரம்பத்தில் ஜேம்ஸ் ஸ்டீவர்ட்டின் சுட்டுப் போட்ட காலின் க்ளோஸ் அப் அங்கிருந்து காமிரா மேல் நகர்ந்து அவர் வியர்வை படிந்த சலனமற்ற முகத்தைக் காட்டுகிறது. அங்கிருந்து அருகே மேஜையின் மேல் உடைந்து நொறுங்கிப்போன காமிராவைக் காட்டிவிட்டு, சுவரில் மாட்டியிருக்கும் மோட்டார் ரேஸ் படங்களுக்கு நகர்கிறது. எல்லாவற்றையும் சொல்லி விட்டார்! ஒரு வார்த்தை இல்லை!

தமிழ் சினிமா, பராசக்தி, மனோகரா, வேலைக்காரி போன்ற அதீத வார்த்தைப் படங்களின் சம்பிரதாயத்தினாலும், அரசியல் சாதனமாக இருக்க வேண்டிய கட்டாயத்தினாலும் வளர்ந்ததால் இன்னும் நிறையவே பேசுகிறது. மகேந்திரன், பாலுமகேந்திரா, ருத்ரய்யா போன்றவர்கள் படும் சிரமம் எனக்குப் புரிகிறது. இருந்தும் இந்த வார்த்தைக் குறைப்பின் ஆரம்பங்கள் இன்று தமிழ் சினிமாவில் ஏற்பட்டுவிட்டன என்றுதான் சொல்ல வேண்டும்.

1.1.1980 சினிமா எக்ஸ்பிரஸ் தீபாவளி மலருக்காக எழுத்தாளர் சுஜாதா எழுதிய சிறப்புக் கட்டுரை இது. இந்த வருடம் சுஜாதாவின் பிறந்த தினமான 3.05.2016-ல் தினமணியில் மீள் பதிவு

Advertisements

46-இளையராஜா பற்றி ஒரு மினி தொடர்…


இதன் முந்தைய பகுதி…

ப்ரியா பற்றி சுஜாதா கூறுகிறார்…..

1975 –ல் நான் லண்டன், ஜெர்மனி இரண்டு தேசங்களுக்குப் போய் இரண்டு மாதம் கழித்துத் திரும்பி வந்ததும் லண்டனில் நடப்பது போல் ஒரு தொடர்கதை எழுதட்டுமா ? என்று எஸ்.ஏ.பியைக் கேட்டபோது அவர் உடனே சம்மதித்தார்.  அந்தக் கதை ‘ப்ரியா’.

ஒரு சினிமா நடிகை படப்பிடிப்புக்காக லண்டன் போகிறாள்.  அவளுடன் அவள் காதலனும் போகிறான் என்று தெரிந்து கொண்ட, அவளது கண்டிப்பான கார்டியன், லாயர்  கணேஷையும் அவளைக் கண்காணிக்க உடன் அனுப்புகிறார்.

‘குமுதம்’ வார இதழில் வெளியான ஒரு பரபரப்பான தொடர். சுவாரஸ்யமான இந்தக் கதையின் பாதியில் கதாநாயகி இறந்துவிடுகிறாள். சற்று அவசரமாக கொன்றுவிட்டேனோ என்று தோன்றியது.   குமுதம் ஆசிரியர் திரு.எஸ்.ஏ. பி. போன் செய்து அவளுக்கு எப்படியாவது மறுஜன்மம் கொடுத்துவிடுங்கள் என்றும், குமுதம் ஆசிரியர் குழுவுடன் ஆலோசித்து அதற்கு ஒரு வழியும் சொன்னார்.

ப்ரியா புத்தகமாக வந்தபோது முதல் பதிப்பில்,  ‘இந்தக் கதையை ஒரு முக்கியமான கட்டத்தில் திசை திருப்பிய ஆசிரியர் எஸ்.ஏ. பி.  அவர்களுக்கு’ என்று சமர்ப்பணம் செய்தேன்.

‘ப்ரியா’ சினிமாவானது வேறு கூத்து.

Nothing succeeds like success என்பார்கள். ஒரு காலத்தில் மகரிஷி, ஜெயகாந்தன், அனுராதாரமணன், சிவசங்கரி, உமாசந்திரன் போன்றவர்களின் பத்திரிகைக் கதைகள் சினிமாவில் வெற்றி கண்டன.  புவனா ஒரு கேள்விக்குறி, சில நேரங்களில் சில மனிதர்கள், சிறை, 47 நாட்கள், முள்ளும் மலரும் போன்ற உதாரணங்களைச் சொல்லலாம்.  இப்போது இந்த வழக்கம் அறவே ஒழிந்துபோய், கதை என்கிற வஸ்து படம் பிடிக்கும்போது தான் தேவைப்பட்டால் பண்ணப்படுகிறது.

பத்திரிகைகளிலோ நாவலாகவோ வந்ததை அப்படியே எடுக்கிறார்களா என்பது வேறு விஷயம். ஹெமிங்வேயிடம் Farewell to Arms, For Whom the Bell Tolls போன்ற கதைகளின் திரைவடிவத்தைப் பற்றி கேட்டபோது ‘Take the money and run’ என்றாராம். ‘ப்ரியா’ ஓர் உத்தம உதாரணம்.

பஞ்சு அருணாசலம் அது தொடர்கதையாக வந்தபோதே அதற்கு கர்ச்சீப் போட்டு வைத்திருந்தார். கன்னடம், தமிழ் இரண்டு மொழிகளிலும் எடுக்க பூஜை போட்டார்கள். ரஜினிகாந்த், ஸ்ரீதேவி, அம்பரிஷ் நடிக்க இளையராஜாவின் இசையில் சில பாடல்கள் இன்றும் ஒலிக்கின்றன.

‘லண்டனில் எல்லாம் போய் எடுக்க முடியாது. மிஞ்சிப்போனால் சிங்கப்பூரில் எடுக்கிறோம். அங்கே நீர்ச்சறுக்கல், டால்ஃபின் மீன்கள் என்று அற்புதமான காட்சிகள் வைக்கலாம்’ என்றார்.  லண்டன், சிங்கப்பூராக மாற்றப்பட்டு வெற்றிப்படமாக ஓடியது.

இதெல்லாம் என் கதையில் எங்கே வருகிறது என்று கேட்பதை முதலிலேயே நிறுத்திவிட்டேன். சினிமா என்பது மற்றொரு பிராணி என்பதை என் குறுகிய கால சினிமா அனுபவமே உணர்த்தியிருந்தது.

கதாநாயகி பாதியில் இறந்துபோகக் கூடாது என்ற அதே விதி இதிலும் காரணம் காட்டப்பட்டது. ரஜினிகாந்த் இதில் கணேஷாக வந்து டூயட் எல்லாம் பாடினார். சிங்கப்பூரில் ராஜகுமாரன் வேஷத்தில் வந்தார். பல மாடிக் கட்டிடங்கள் முன் ‘ஓ ப்ரியா’ என்று பாட்டுப் பாடினார். பாஸ்போர்ட் கிடைக்காததால் வசந்தாக நடித்த நோஞ்சான் நடிகர் உடன் வரவில்லை.


அதன் துவக்க விழாவில், முதல் காட்சி…  சென்டிமெண்டாக ஒரு பூகோள உருண்டையைச் சுழற்றி  ‘உலகத்தை ஜெயிச்சுக் காட்டறேன் பாரு’  என்று திரையில் வராத வசனத்தைத் தனியாக ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்தார்.

ப்ரியா’ படம் வெற்றிகரமாக 110 நாள் ஓடினதுக்கு எனக்கு ட்ராஃபி தந்தார்கள். இப்போது கூட இதன் பின் கதையைச் சரியாக அறியாதவர்கள், ‘என்னா ஸ்டோரி சார்; என்னா டைலாக் சார்’ என்று சிலாகிக்கும்போது எங்கோ நிறுத்தாமல் உறுத்துகிறது.

‘ப்ரியா’ விகடன் திரை விமர்சனம் (1978) 52/100

ஜாய்ஃபுல் சிங்கப்பூரையும், கலர்ஃபுல் மலேசியாவையும் ப்ரியாவுக்காக சுருட்டிக் கொண்டு வந்திருக்கிறார்கள் எஸ்.பி.டி. பிலிம் சார். கவர்ச்சிகரமான டைட்டில்களுக்காக பிரசாத் புரொடக்ஷனுக்கு முதுகில் ஒரு தட்டு தட்டலாம் !

ஜூலியஸ் சீசர் நாடகத்தில் ரஜினியின் நடை, உடை, பாவனை உறுமல் ஆனாலும் சிவாஜியை நினைவுபடுத்தும் படியாக செய்திருக்க வேண்டாம் !

அடிக்கடி ‘ரைட்’ என்ற மேனரிசம். அதை ரஜினி வெளூத்துக் கட்டுகிறார். ஆனால் தியேட்டரில் ‘ஹோல் டான்’ என்று கத்துமளவுக்கு ஓவர் டோஸ் !

கண்ணுக்கு குளிர்ச்சியான சிங்கப்பூர் காட்சிகள். கிளிகள் சர்க்கஸ் செய்யும் அழகு, துள்ளி விளையாடும் நீர் நாய்கள் வந்து விளையாடுவது, இவை எல்லாமே குழந்தைகளோடு பெரியவர்களும்  கண்களை அகல விரித்துப் பார்க்கும் படியான காட்சிகள். இதற்கே நாம் கொடுக்கும் காசு செரித்துப் போகிறது.

ரீ ரெகார்டிங்கில்  அதிக அக்கறை எடுத்துக் கொண்டிருக்கிறார் இளையராஜா. ஆனால் பாடல்களில் அவருடைய வழக்கமான ‘பெப்’ இல்லையே..! டார்லிங்…டார்லிங் தவிர.

ஆங்கிலப் படங்களுக்கு இணையாக ஒரு கார் சேஸை இணைக்க வேண்டிய (ஒட்டு வேலை பிரமாதம்!) இடத்தில் இணைத்திருக்கிறார்கள். ஹாட் லி சேஸ் நாவல் மாதிரி விறுவிறுப்பு!

தே.சீனிவாசனின் தயாரிப்பாளர் – டைரக்டர் காமெடி நயமான ஸடயைர். பக்கோடா காதர் கூட ரொம்ப பிஸி என்னும் போது தியேட்டரில் தான் எத்தனை கைதட்டல்! ( கன்னடத்து தங்கவேலு) சிவராமுடன் சேர்ந்து நல்ல கலகலப்பு. அந்த உடம்பு பிடிப்பு காட்சி உச்சம்!

ரஜினியைக் கொலை செய்ய வில்லன் கூட்டம் கொக்கின் தலையில் வெண்ணையைத் தடவுகிறது. ‘சீஸர்’ நாடகத்தில் நிஜக்கத்தியை வைத்து விடுவதன் முலம். ( அந்த காலத்து இல்லற ஜோதியில் ‘சாக்ரடீஸ்’ நாடகத்தில் சிவாஜியைக் கொல்ல உண்மையான விஷத்தை வைத்து விடுவார்கள்.) இதில் ரஜினி தப்பிய மர்மம்? அவர் என்ன வக்கீலா அல்லது மந்திரவாதியா?

இறந்ததாகச் சொல்லி காட்டப் பட்ட ப்ரியா, மெழுகு பொம்மை என்கிறார் இன்ஸ்பெக்டர் கடைசியில் இந்த ‘ப்ரியா’ கொலை மர்மம், மூலக் கதையில் அழகாகப் பின்னப் பட்டிருந்தது. அதைப் படத்தில் கொலை செய்து விட்டார்கள்.

சிங்கப்பூர் 97% கதை 3% – கலவை விகிதம் சரியாக இல்லையே!

ஒரு ரகசியம்: குமுதத்தில் சுஜாதா ‘ப்ரியா’ என்ற தலைப்பில் தொடர் கதை ஒன்று எழுதியிருந்தார். அதிலிருந்து ‘நைஸாக’ இரண்டொரு காட்சிகளை இந்தப் படத்தில் ‘காப்பி’ அடித்து விட்டார்களோ என்ற சந்தேகம் லேசாக உண்டாகிறது – நம்கேன் வம்பு!

Tailpiece: இந்த படத்தை அண்ணா தியேட்டரில் பார்த்தோம். படம் முடிந்து வெளியே வர தியேட்டரில் ஒரே வழிதான். அதுவும் எங்கோ பாதாளத்துக்குப் போய், மாடிப் படி ஏறி, எட்டுப் படி இறங்கி…. மவுண்ட் ரோடிலிருந்து மந்தை வெளிப்பாக்கத்துக்குப் போகிறோமோ என்ற பிரமை! ஆபத்து என்றால் தப்பி ஓடக் கூட வழியில்லையே!!

முன்பாதி 28/50 + பின்பாதி 24/50 = மொத்தம் 52/100
-விகடன் விமர்சனக்குழு

ரஜினிகாந்த் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட தகவல், தமிழ்நாடெங்கும் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.  1979 மார்ச் 11-ந்தேதியன்று விஜயா நர்சிங் ஹோமில் ரஜினி சேர்க்கப்பட்டார்.

அப்போது அவரை பரிசோதித்த டாக்டர்கள், “நல்லவேளை, சரியான நேரத்தில் கொண்டு வந்தீர்கள். இன்னும் 10 நாட்கள் இப்படியே விட்டு வைத்திருந்தால், பெரிய அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கும்” என்று கூறினார்கள்.   ரஜினிகாந்த் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட செய்தி, தமிழ்நாடெங்கும் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. திரை உலகத்தில் அதுபற்றித்தான் பேச்சு.

“சீக்கிரம் சரியாகி விடுவார். முன்போலவே, சுறுசுறுப்பாக நடிப்பார்” என்று பலர் நினைத்தாலும், ஒருசிலர் “அவர் கதை அவ்வளவுதான். இனி அவரால் நடிக்க முடியாது” என்றார்கள்.  ஆனாலும், அவர் விரைவில் குணம் அடையவேண்டும் என்று நல்ல உள்ளங்கள் பிரார்த்தனை செய்தன.  ஓய்வு எடுக்காமல், இரவு – பகலாக உழைத்ததுதான் இந்த பாதிப்புக்குக் காரணம் என்பதை டாக்டர்கள் மட்டுமல்ல, ரஜினியுடன் பழகியவர்களும் கூறினார்கள்.

ரஜினிகாந்த் நடித்த “ப்ரியா” படத்தின் கதாசிரியரான பிரபல எழுத்தாளர் சுஜாதா கூறியதாவது:-

ப்ரியா” படப்பிடிப்பின்போது ரஜினிகாந்த் எனக்குப் பழக்கமானார். அப்போது அவர் உச்சியை நோக்கி ஓடிக்கொண்டிருந்தார். இருந்தும் என்னை விமானத்திலோ, படப்பிடிப்பிலோ சந்தித்தால் தனியாக மதிப்புக் கொடுத்துப் பேசிக் கொண்டிருப்பார். நான் சொல்வதைக் கவனமாகக் கேட்பார்.

ரஜினிகாந்துக்கு தற்காலிக “நெர்வ்ஸ் பிரேக் டவுன்” (நரம்பு மண்டல பாதிப்பு) ஏற்பட்ட காரணங்களை, அப்போதே என்னால் அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது.

பெங்களூரில் இரவு எட்டரை மணிக்குப் பாலசந்தர் படத்தின் படப்பிடிப்பில் (தப்புத்தாளங்கள் என்று நினைக்கிறேன்) சைக்கிள் செயின் சுழற்றிக் கொண்டிருக்கிறார்.

எட்டு நாற்பத்தைந்துக்கு, ஏணியை விலக்குவதற்கு இரண்டு நிமிஷம் முன்னால் பெங்களூரில் விமானம் ஏறி, சென்னை போய், அங்கேயிருந்து ராத்திரி பன்னிரண்டு மணிக்கு மற்றொரு பிளேன் பிடித்து சிங்கப்பூர் போய், அதிகாலையில் அங்கே `ப்ரியா’ ஷூட்டிங். மூன்று நாள் கழித்துத் திரும்பிப் பெங்களூர் வந்து சைக்கிள் செயின் சுழற்றி விட்டு மறுபடி சிங்கப்பூர்! இந்த மாதிரி அலைந்தால் ஒரு திபேத்திய லாமாவுக்குக்கூட நெர்வ்ஸ் ப்ரேக் டவுன்” வந்து விடும்.

இவ்வாறு சுஜாதா கூறினார்.

தொடரும்…

சுஜாதாவின் வசனத்தில் உதயா திரைப்படம்…


அழகம் பெருமாளின் இயக்கத்தில் 2004-ம் ஆண்டு வெளியான ‘உதயா‘ திரைப்படத்தை சமீபத்தில் ஜெயா தொலைக்காட்சியில் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. முன்பு பார்த்த படம் தான் என்றாலும் மீண்டும் பார்க்கும்போதும் சுவாரஸ்யமாகவே இருந்தது.
இந்தப் படத்திற்கு சுஜாதா தான் வசனம் எழுதியிருக்கிறார் என்று எனக்கு இப்போதுதான் தெரியும்.
American Journal of Applied Physics-ல்,  Super Conductivity பற்றி விஜய் எழுதிய பேப்பர் approve ஆகியிருப்பதாகவும், further research-க்கு அவருக்கு அமெரிக்காவிலிருந்து (Princeton University) அழைப்பு வந்திருப்பதாக மோகன் ராம் கூறுகிறார். தனது தேசத்தின் மேல் உள்ள காதலால் அமெரிக்கா செல்லப் போவதில்லை என்று விஜய் கூறுகிறார்.
Just 6 மாதத்திற்கு முன் அதே கல்லூரியில் M.Sc (Atomic / Nuclear) Physics முடித்த விஜய் Leave vacancy-யில் 3rd year B.Sc Physics (சிம்ரன் இருக்கும் கிளாஸ் தான்… யூகித்திருப்பீர்களே 🙂 students-க்கு கிளாஸ் எடுக்கிறார்…
Father of Quantum Physics –  அதாவது அணு இயற்பியலின் தந்தை யார் என்ற விஜய்யின் கேள்விக்கு, பரமசிவ கவுண்டர் ஸார் என்று தனது தந்தையின் பெயரைக் (தூக்கத்திலிருந்து விழித்து) கூறும் ஒரு மாணவி…  (சிம்ரன் அறிமுகக் காட்சி)

ஒய்வு நேரத்தில் விஜய் college lab-ல் ஒரு சின்ன chemical reaction – Controlled Nuclear Explosion-க்கு ஒரு trial என்று சொல்லி ஒரே ஒரு கிராமுக்கு இந்தப் போடு போடும் இதை வைத்துக் கொண்டு இந்தியாவுக்கே என்ன என்னவோ செய்யலாம் ஸார் என்கிறார்..

Udhaya
அடுத்த சீனிலேயே தனது காதலி வாஸந்தியைக் (சிம்ரன்) கட்டிப் பிடித்து தட்டாமாலை சுற்றி ‘நான் செய்த ஒரு ஆராய்ச்சி சக்ஸஸ் ஆகி விட்டது. என்று CNE – Controlled Nuclear explosion பற்றிக் குறிப்பிடுகிறார். Kerala coast முழுக்க தோரியம் கொட்டிக் கிடக்கு. இதை வச்சுக்கிட்டு – Unbelievable வாஸந்தி this is unbelievable என்று ஆனந்தக் கூத்தாடுகிறார்…

சுஜாதா அவருக்குப் பரிச்சயமான களம் என்பதால் Controlled Nuclear Explosion – Thorium என்று புகுந்து விளையாடியிருக்கிறார்.
இந்தப் படத்தில் இருந்து என்னைக் கவர்ந்த சில காட்சிகள் மற்றும் வசனங்கள்…
Static Electricity பற்றி கொஞ்சம் சொல்லிக் கொடுங்க என்று கேட்கிறார் சிம்ரன் விஜய்யிடம் (College Library-யில்)
ஒரு சீப்பை வைத்து எளிமையான முறையில் Collection of Free Electrons பற்றி விளக்குகிறார் விஜய்.
பத்திரிகை மூலமா என்னால முடிஞ்ச சேவையை செய்யலாம் என நினைக்கிறேன் என்கிறார் விஜய் – பிரமிட் நடராஜனிடம்..
அப்போது பிரமிட் நடராஜனுக்கு ஒரு ஃபோன் வருகிறது அவர் வீட்டில் இருந்து – evening tiffin என்ன செய்யலாம் என்று..
சேவை பண்ணிடு என்கிறார்..  சேவைன்னா நமக்கும் பிடிக்கும் என்கிறார் விஜய்யிடம் – Typical சுஜாதா நக்கல்…
மூலவரைப் (பத்திரிகை ஆஃபீஸ் MD – Mr. Bhatia) பார்த்துட்டு வேலையில் ஜாய்ன் பண்ணி விடு என்கிறார் பிரமிட் நடராஜன் விஜய்யிடம்…  Again Typical சுஜாதா…
இவரை எந்த Section-ல் போடலாம் என்று கேட்கிற விவேக்கிடம், ‘நீ எந்த section -ல work பண்ற? என்று கேட்கிறார். நான் சினிமாக் கூத்து என்கிற விவேக்கிடம் இவரை ராக்கூத்தில் போடு என்கிறார்..

விவேக் தான் தங்கியிருக்கும் மேன்ஷனில் ஒரு ஆளை விஜய்க்கு இவ்வாறு அறிமுகப்படுத்துகிறார்…

West Indies Team மெட்ராஸ் வந்தப்ப பொறந்தவன் இவன். நதி மூலம், ரிஷி மூலம் கேட்காதே. இது மாதிரி பல பயங்கரங்கள் இருக்கு இங்கே…

தன்னுடைய தலைவருக்காக விஜய் High Impact Explosive ஒன்றைத் தயார் செய்கிறார். அதற்கு RDY என்று ஒரு பெயரும் வைக்கிறார். RDX-ஐ விட இது powerful என்றும் கூறுகிறார். எந்த shape-ல் மற்றும் எந்த temperature-ல் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம் என்று தலைவர் நாசரிடம் கூறுகிறார். என்னைப் பொறுத்த வரையில் நீங்கள் தவறவே விடக் கூடாத அருமையான காமெடி சீன் இது 🙂

தீவிரவாதி தலைவர் நாசரை கண்மூடித்தனமாக நம்பி தன்னுடைய ஆராய்ச்சி மூலம் அவருடைய பயங்கரவாதச் செயல்களுக்குத் துணை போய் அவர் மூலம் பலி கடா ஆக்கப்பட்ட விஜய் கடைசியில் என்ன ஆனார்? ஏற்கனவே வேறு ஒருவருடன் நிச்சயம் செய்யப்பட்ட சிம்ரன் மேல் அவர் கொண்ட காதல் என்ன ஆனது ? என்பதை நீங்களே வாய்ப்புக் கிடைத்தால் கண்டு களிக்கலாம்.

Movie Review…

கமல்ஹாசனின்-“ஒரு-கோடி-ரூபாய்க்-கனவு”-சுஜாதா தேசிகன்


தற்போது தமிழ் படத்தின் ஒரு பாட்டுக்கே ஒரு கோடி ரூபாய் செலவு ஆகிறது. “கமல்ஹாசனின் ஒரு கோடி ரூபாய்க் கனவு” என்ற புத்தகம் ஒன்று என்னிடத்தில் இருக்கிறது – புத்தகத்தின் உள்ளடக்கம் – மேக்கிங் ஆப் விக்ரம். பல நல்ல வண்ணப் படங்களும் அந்த படத்தில் உழைத்தவர்கள் பலரின் கட்டுரைகளும் இருக்கிறது. 1986 பதிப்பு, விலை 15 . முதல் பதிப்பு காப்பிகள் – 10,000!. 
—-oooo0000oooo—-
இந்த புத்தகத்தில் படத்திலிருந்து முக்கியமான படங்களை கொண்டு முழு படத்தின் கதையும் சொல்லியுள்ளார்கள். புகைப்பட நாவல் இணைப்பு உரை – சுஜாதா

சுஜாதா எழுதிய கட்டுரையிலிருந்து ஒரு பகுதி

“….ராக்கெட் செய்யப்பட்ட தொழிற்சாலையின் பெயர்ப்பலகை மீது ஒரு வெள்ளைப் புறா அமர்ந்திருந்தது என்று எழுதி இருந்தேன்.
https://i0.wp.com/www.hummaa.com/static_content/images/meta/img/tamil/movies/vikram.gif
இந்த காட்சி குதிரேமூக் நகரில் எடுக்கப்பட்டது. அங்கு புறா கிடைக்குமா இல்லையோ என்ற எண்ணத்தில் சென்னையிலிருந்து இரண்டு புறாக்களைக் கொண்டு வந்திருந்தார்கள்!. புறா ஒத்துழைக்கவில்லை. சிரமப்பட்டு அந்த காட்சியை படமாக்கினார்கள். இதெல்லாம் சின்ன சின்ன விஷயங்கள். ஆனால் படத்தின் Climax காட்சியில் கமல், சத்யராஜ், லிசி, ஆகியோர் விமானத்தில் இருந்து குதிப்பதாக ஒரு வரி தான் எழுதியிருந்தேன். ஆனால் அந்தக் காட்சியை அமைக்க ஆன செலவு எததனை லட்சம் தெரியுமா ?அம்மாடி, சினிமா ஒரு பயங்கரமான தொழில்! பயந்து போனேன்…
“ஒரு முறை சுஜாதாவின் இல்லத்தில் அவர் புத்தகங்களை அடுக்கி வைக்கும் சந்தர்ப்பம் கிடைத்த போது, அண்ணாச்சி கடையில் உபயோகப்படுத்தப்படும் நீளமான கணக்கு நோட்டு ஒன்று இருந்தது. அதில் “விக்ரம் – காட்சி 1” என்ற தலைப்பின் கீழே அவர் கை எழுத்திலேயே எழுதியிருந்ததை படிக்க முடிந்தது.
தொடர்புடைய பதிவு:

1- வேட்டையாடு விளையாடு பட அனுபவங்கள் – கெளதம் வாசுதேவ் மேனன்


என் அப்பாவும், அம்மாவும் எனது சினிமா ஆர்வத்துக்குத் தடை போடாமல், முழுமையான சுதந்திரம் கொடுத்திருந்தாலும், ‘பரவாயில்லை! நம்ம பையனும் சினிமாவுல ஏதோ செஞ்சிருக்கான்!’ என்று அவர்களை என்னைப் பற்றிக் கொஞ்சம் பெருமைப்பட வைத்த படம் ‘வேட்டையாடு விளையாடு’. படத்தில் கமல் வசிக்கும் வீடு சம்பந்தப்பட்ட காட்சிகளை, தரமணியில் இருக்கும் எங்கள் வீட்டிலேயேதான் நான் படம் பிடித்தேன். கமல் முதல் நாள் ஷூட்டிங்குக்கு எங்கள் வீட்டுக்கு வந்தபோது, என் பெற்றோர்களை அவருக்கு அறிமுகப்படுத்தி வைத்தேன். ஷூட்டிங் என்பது அவர்களைப் பொறுத்தவரை பரிச்சயமில்லாத ஒரு விஷயம் என்றாலும், ‘நம்ம மகன் கமலை வைத்துப் படம் எடுக்கிறான்; அந்தப் படத்தின் ஷூட்டிங் கூட நம்ம வீட்டிலேயே நடக்கிறது’ என்பதைப் பார்த்து அவர்கள் மனம் பூரித்தார்கள். என் முந்தைய படமான ‘காக்க காக்க’ தான் ஒரு விதத்தில் இதற்குக் காரணம்.

மின்னலே’ படம் தமிழிலும், தெலுங்கிலும் ரிலீஸ் ஆகி கமர்ஷியலாகவும் வெற்றி பெற்றாலும், சினிமா உலகத்தினர் மட்டுமின்றி ரசிகர்களுடைய கவனத்தையும் ஈர்த்து, ‘யூனிஃபார்ம் போட்ட ஒரு போலீஸ் அதிகாரியைப் பத்தி வித்தியாசமா இருக்கே’ எனச் சொல்ல வைத்தது ‘காக்க காக்க’தான். அதைப் பார்த்துவிட்டு, எனக்கு வந்த ரெஸ்பான்ஸ் எனக்கு என்னுடைய எதிர் காலம் பற்றிய நம்பிக்கையை ஏற்படுத்தியது.

விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் இணை தயாரிப்பாளரும், படத்தில் சிம்புவின் நண்பராக வருபவருமான கணேஷ், ஒரு நாள் ஹைதராபாத்தில் இருந்த எனக்கு ஃபோன் செய்து, ‘கமல் சாருடன் பேசிக் கொண்டிருந்தபோது, ‘காக்க காக்க’ படத்தைப் பற்றிப் பேச்சு வந்தது; உங்களோடு கூட ஒரு படம் பண்ணுவதற்கு ஆர்வமாக இருக்கிறார்’ என்று சொன்னவுடன் எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது, அத்தோடு நிற்காமல், ‘கமல் சார் பக்கத்துலதான் இருக்கார்! பேசுங்க!’ என்று ஃபோனை அவரிடம் கொடுத்து விட்டார். நான் இனிய அதிர்ச்சிக்கு உள்ளானேன்; ஃபோனில் கமல், ‘நாம ஒரு படம் பண்ணலாம்; நாளைக்கு நாம மீட் பண்ணலாமா?’ என்று கேட்டபோது, என் காதுகளையே என்னால் நம்பமுடியவில்லை. ‘ஓ! எஸ்! கண்டிப்பா’ என்று பதில் சொல்லிவிட்டு, அன்றைக்கே ஹைதராபாதிலிருந்து சென்னை திரும்பினேன்.

நண்பர் கணேஷ்,சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார். ‘நாங்கள் இருவரும் சேர்ந்து ஒரு படம் பண்ணுவது என்றும், ரோஜா கம்பைன்ஸ் காஜா மொய்தீன் படத்துக்கு புரொடியூசர்’ என்றும் தீர்மானமாயிற்று. அடுத்து நானும், கணேஷும் இரண்டு மூன்று தடவை கமல் சாரைச் சந்தித்து கதை டிஸ்கஸ் பண்ணினோம். நான் சொன்ன ஒரு கதை அவுட்லைன் அவருக்குப் பிடித்தது. அதற்கு ‘சிலந்தி’ என்று டைட்டில். அதை வைத்து ஸ்கிரிப்ட் எழுத ஆரம்பித்தேன். ஆனால், அந்த ஸ்கிரிப்டைப் படித்துப் பார்த்துவிட்டு, ‘இந்த சப்ஜெக்ட் வேணாம்! இன்னும் பெட்டரா ஏதாவது ட்ரை பண்ணலாமே?’ என்று சொல்லிவிட்டார். நான், வேறு கதையை யோசித்தேன். கமல் வேண்டாம் என்று சொன்ன அந்தக் கதையைத்தான் பின்னர் ‘பச்சைக் கிளி முத்துச்சரம்’ என்று சரத்குமாரை நடிக்க வைத்து எடுத்தேன்.

கமலுக்குப் பொருத்தமாக வேறு என்ன கதை? என்று யோசித்தபோது, ‘காக்க காக்க’ கதையில் வரும் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டான ஹீரோ அன்புச் செல்வன், ஒரு சில வருடங்களுக்குப் பிறகு, ஒரு முக்கியமான கேஸை எடுத்து விசாரித்தால்? என்ற கோணத்தில் யோசித்தேன். மேலும், எனக்கு ரொம்ப நாட்களாகவே இன்னோர் ஆசை உண்டு. நம் ஊரிலிருந்து புத்திசாலியான ஒரு போலீஸ் ஆபீசர், அமெரிக்காவுக்கோ, லண்டனுக்கோ சென்று, அங்கே நடக்கும் ஒரு க்ரைமை, அந்த ஊர் போலீஸ் டிபார்ட்மென்ட்டுடன் சேர்ந்து இன்வெஸ்டிகேட் செய்து குற்றவாளியைக் கண்டுபிடிப்பது போல ஒரு கதை பண்ண வேண்டும் என்பதுதான் அந்த ஆசை. இந்த இரண்டு விஷயங்களையும் இணைத்து ஒரு கதை எழுதிக் கொண்டு போய், கமல் சாரிடம் சொன்னேன். ‘வழக்கமான போலீஸ் கேரக்டர்தானே! நல்லவனுக்கும் மோசமானவனுக்கும் இடையிலான மோதல் கதைதானே!’ என்றார். உடனடியாக நான் பதில் எதுவும் சொல்லவில்லை.

‘நாளைக்கு வாங்க! நான் ஒரு கதை சொல்லறேன்! அதை வெச்சு ஸ்கிரிப்ட் எழுத முடியுமான்னு பாருங்க!’ என்றார்.

மறுநாள் அவருடைய அலுவலகத்துக்குச் சென்றேன். ‘நவராத்திரியில, சிவாஜி ஒன்பது ரோல்களில் நடிச்சிருக்கார்! நான் பத்து ரோல்ல நடிக்கிற மாதிரி ஒரு சப்ஜெக்ட் வெச்சிருக்கேன்! அதை டிஸ்கஸ் பண்ணுவோம்’ என்றார். அடுத்த நாள் சென்றபோது, கமலுடன் எழுத்தாளர் சுஜாதா, கிரேஸி மோகன் என்று நாலைந்து பேர்கள் இருந்தார்கள். அப்போது அவர் சொன்ன கதை ‘தசாவதாரம்’. கமல் சாரின் ஆபீஸ், கோவளம் ஓட்டல் என்று டிஸ்கஷன் தொடர்ந்தது. ‘தசாவதாரம்’ படத்தின் ஆரம்பத்தில் வரும் காட்சிகளுக்கான ஸ்கிரிப்ட் எழுதும் வேலை கூட ஆரம்பித்து, நடந்துகொண்டிருந்தது. கமல் சார், சுஜாதா சார் இவர்களோடெல்லாம் கதை விவாதம் செய்வது என்பது எனக்கு ரொம்ப புதிய அனுபவமாக இருந்தது.

ஓப்பனாகச் சொல்ல வேண்டும் என்றால், ஒரு கட்டத்தில் எனக்கு ‘இவ்வளவு பெரிய புராஜெக்ட்! நாம இதுவரை டபுள் ரோல் கதையே பண்ணினதில்லை; கமல் சார் பத்து விதமான ரோல்கள் பண்ணுகிற பிரம்மாண்டமான படத்தை நம்மால் எடுக்க முடியுமா?’ என்று பயம் ஏற்பட்டது. கமல் சாரிடம் என் மன ஓட்டத்தைப் பகிர்ந்துகொண்ட போது, அவர் ‘உங்களுக்குத் தான் விளம்பரப் படம் எடுத்த அனுபவம் கூட உண்டே! நான், முழு ஸ்கிரிப்டை எழுதி முடித்து உங்களிடம் கொடுத்து விடுகிறேன்; அதை வைத்து, ஒவ்வொரு காட்சியாக ஷூட் பண்ணிவிடுங்கள்!’ என்றார். அவர் சொன்னதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ‘தயவு செய்து என்னைத் தப்பாக எடுத்துக்கொள்ளாதீர்கள்! பர்சனலாக முழுமையாக கன்வின்ஸ் ஆகாமல் இந்த புராஜெக்ட்டில் இறங்க எனக்கு விருப்பமில்லை’ என்று நான் கமல் சாரிடம் வெளிப்படையாகவே சொல்லிவிட்டேன்; அவர் நான் சொன்னதைக் கேட்டு அப்செட் ஆகிவிட்டார். இதற்குள் நாங்கள் சேர்ந்து படம் பண்ணுவது என்ற முடிவினை எடுத்து, ஏழெட்டு மாதங்கள் ஆகிவிட்டன; ஆனால், படத்துக்கான ஸ்கிரிப்ட் முழுசாக ரெடியாகவில்லை.

இந்தச் சமயம் பார்த்து, தசாவதாரம் படத்தைத் தயாரிக்க முன்வந்த தயாரிப்பாளர் காஜா மொய்தீன் தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்தார் என்கிற ஒரு அதிர்ச்சியூட்டும் செய்தி பத்திரிகைகளில் வெளியானது. அதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர்கள் கவுன்சிலில் இருந்து, ‘உங்கள் படம் ஆரம்பிப்பதற்கு மிகுந்த கால தாமதம் ஆகிக்கொண்டிருப்பதால்தான் காஜா தற்கொலை செய்து கொள்ள முயன்றார் என்பது மாதிரியான புகார்கள் வருகின்றன. எனவே, இனியும் காலதாமதம் செய்யாமல் அந்தப் படத்தின் ஷூட்டிங்கை ஆரம்பித்துவிடுங்கள்!’ என்று அவர்கள் தரப்பிலிருந்து சொன்னார்கள். ‘நாம எல்லோரும் தினமும் உட்கார்ந்து கதை டிஸ்கஷன்தானே பண்ணிக்கிட்டு இருக்கோம்; சரியானபடி கதை அமைய வேண்டாமா? இப்படி அவசரப்படுத்தினால் எப்படி?’ என்று ரொம்ப அப்செட் ஆகிவிட்டார் கமல்.

மறுநாள் கமல் சார் என்னை அழைத்து, ‘இனியும் தாமதித்தால் அனாவசியமான பிரச்னைகள் வரக்கூடும். இன்னும் ஒரு வாரத்தில் படத்தின் ஷூட்டிங்கை ஆரம்பித்துவிடுங்கள்’ என்று சொல்லி விட்டார். அதே நேரத்தில் தயாரிப்பாளர் காஜா தரப்பில் இருந்து, ‘என் தற்கொலை முயற்சிக்கும், கமல்-கௌதம் படம் தாமதமாவதற்கும் சம்பந்தமில்லை’ என்று விளக்கம் வெளியானது. அத்துடன், ‘இனியும் தாமதப்படுத்தாமல், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரமாகப் படத்தை ஆரம்பியுங்கள்’ என்று எங்களைக் கேட்டுக் கொண்டார்.

 கமல் சாரிடமிருந்து அழைப்பு வந்தது. ‘கைவசம் இருக்கும் கதை என்ன?’ என்றார். “அமெரிக்கா சென்று புலன்விசாரணை செய்யும் இந்திய போலிஸ் ஆபீசர் கதை’ என்றேன். கமல் சார் வேறு எதுவும் சொல்லாமல், ‘ஸ்கிரிப்டை ரெடி பண்ணுங்க; ஒரு வாரத்தில் ஷூட்டிங்கை ஆரம்பிச்சிடுங்க; அறுபது நாள் கால்ஷீட் தர்றேன்; படத்தை முடிச்சிடுங்க!’ என்று சொன்னார்.

படத்தின் கதை, காட்சிகள், பாடல் சிட்சுவேஷன்கள் எல்லாம் என் மனத் திரையை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த வேளையில் படத்துக்கு என்ன டைட்டில்? என்ற கேள்வி எழுந்தது. அந்த நேரத்தில் எனக்குக் கைகொடுத்தவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.தான்! ரேடியோவில் பலமுறை நான் கேட்டு ரசித்த அவரது ‘அரச கட்டளை’ படப் பாடலான ‘வேட்டையாடு விளையாடு விருப்பம்போல உறவாடு வேகமாக நடையைப் போடு’ என்ற பாட்டுதான் நினைவுக்கு வந்தது. படத்தின் ஹீரோ ராகவனுக்கு கிரிமினல்களை வேட்டையாடுவதே ஒரு கேஷுவலான விளையாட்டுதானே?

தொடரும்…

–நன்றி கல்கி (நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை)

எழுத்து வடிவம்: எஸ். சந்திரமௌலி

எந்திரன் காப்பியடிக்கப்பட்ட கதையா? சில விளக்கங்கள்!


சுஜாதா உயிருடன் இருந்திருந்தால்… எந்திரன் கதைக்கு உரிமை கோருபவர்கள் நிலை என்ன?

ரு படைப்பு அல்லது படம் பிரபலமாகிவிட்டால், அதன் காப்புரிமைக்கு சொந்தம் கொண்டாடி பலரும் வழக்குத் தொடர்வது இன்று நேற்றல்ல… பல்லாண்டு பாரம்பரியம். ஹாலிவுட் தொடங்கி கோலிவுட் வரை அந்தப் பாரம்பர்யம் தொடர்கிறது.

குறிப்பாக, ஒரு படைப்பின் மூல முடிச்சுக்கு பலர் சொந்தம் கொண்டாடுகின்றனர். அப்படியெனில், ஒருவர் மற்றவரை காப்பியடித்தார் என்று சொல்வதா… அல்லது ஒருவருக்குத் தோன்றிய கற்பனை முடிச்சு இன்னும் சிலருக்கும் ஏன் தோன்றியிருக்கக் கூடாது என்று திருப்பிக் கேட்பதா…

எந்திரன் கதையைப் பொறுத்தவரை, ரோபோ என்பது அடிப்படை ஆதாரம். இந்த ரோபோவுக்கு மனிதத் தன்மை வந்துவிட்டால், ரோபோக்கள் சுயமாக சிந்திக்க, ஆட்சி நடத்த, அரசியல் பண்ண, ஒருவர் மீது காதல் கொள்ள, பெண்ணை அனுபவிக்க ஆசைப்பட்டால்… என்னவெல்லாம் நடக்கும் என்று தமிழில் புனைவுகளாகக் கொண்டு வந்தவர் அமரர் சுஜாதா.

ரோபோ என்றில்லை… தமிழில் விஞ்ஞானக் கதை என்று எடுத்துக் கொண்டால் அந்தப் பெருமை சுஜாதாவையே சேரும். அவருக்கு முன் சிலர் எழுதியிருந்தாலும் அவை ஒரு ஊர்ல ஒரு ராஜா டைப் கதைகளாகவே அமைந்தன. தமிழில் விஞ்ஞானக் கதை என்ற கருத்தையே கிண்டல் செய்தார்கள் எழுபதுகளில் (தமிழ் சினிமாவில் முதல் விஞ்ஞானப் படம் எம்ஜிஆரின் ‘கலையரசி’. அதுவும் கூட ஒரு ஆங்கிலப் படத்தின் பாதிப்பாக வந்த அமெச்சூர் முயற்சிதான். ஆனாலும்அதுவே அன்றைக்கு பெரிய சாதனைதான்!).

ஆனால் சுஜாதாதான் தமிழில் விஞ்ஞானக் கதைகள் சாத்தியம் என்பதை நிரூபித்தவர். அதுமட்டுமல்ல, இந்தக் கதைகளை வறண்ட விஞ்ஞான விவரணங்களாகத் தராமல் படிக்க புதிய, இனிய அனுபவத்தைத் தரும் கதைகளாகத் தந்தவர்.

ரோபோக்களின் ஆதிக்கம், விண்வெளியில் காதல், அடுத்த நூற்றாண்டில் மனிதனின் நிலை, நிலவில் மனிதன் வசிக்க நேர்ந்தால்… இப்படியெல்லாம் புதுப்புது முடிச்சுக்களை உருவாக்கி அதில் விறுவிறுப்பான கதையைப் புனைந்தவர் சுஜாதா. ஆனால் அவை அனைத்திலும் விஞ்ஞான உண்மைகளும் சாத்தியங்களும் பொதிந்திருந்தன.

அவரைப் பார்த்துதான் பலரும் விஞ்ஞானக் கதைகளைப் புனைய ஆரம்பித்தனர் என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை. “இல்லையில்லை… நான் இந்த ஆங்கிலப் புத்தகம் படித்தேன்… படம் பார்த்தேன்.. அதை வைத்து எழுதினேன்…” என்று யாரும் சொல்ல முயன்றால், அது உடான்ஸ். காரணம், மற்றவர்களின் விஞ்ஞானக் கதைகளுக்கான மொழி நடை கூட சுஜாதாவிடமிருந்து இரவல் பெற்றதாகவே இருப்பதைக் காணலாம். அவ்வளவு ஏன்… பல முன்னணி தமிழ் பத்திரிகையாளர்கள் செய்திகள், கட்டுரைகளைக் கூட சுஜாதா பாணியில் தந்ததெல்லாம் நடந்திருக்கிறது.

அந்த சுஜாதா உருவாக்கிய கதைதான் ‘என் இனிய இயந்திரா’ மற்றும் அதன் தொடர்ச்சியான ‘மீண்டும் ஜீனோ‘.

இந்தக் கதைகளின் ஆதாரம் ரோபோக்களின் ஆதிக்கம் மற்றும் மனிதனை மிஞ்சிய, படைத்தவனின் தலையிலேயே கைவைக்கப் பார்க்கும் ரோபோவின் அத்துமீறல்கள்தான்.

இந்தக் கதை எழுதப்பட்டது இன்று நேற்றல்ல… 25 ஆண்டுகளுக்கு முன்னால். நிலா – சிபி – ஜீனோ பாத்திரங்களைப் படித்தவர்கள், ஜீவா என்ற கேரக்டரைப் படித்தவர்கள் நிச்சயம் எந்திரன் ஒரு காப்பியடிக்கப்பட்ட கதை என்று கூறத் துணிய மாட்டார்கள். ஏன்… சுஜாதா என்ற மேதை இன்று இருந்திருந்தால், இத்தனைப் பேர் கிளம்பியிருப்பார்களா என்றே தெரியாது!

ரஜினி நடித்த எந்திரனில் ஆரம்ப சிட்டியின் புத்திசாலித்தனமான குழந்தைத்தனங்கள் அனைத்துமே சுஜாதாவின் ஜீனோ சாயலில் இருப்பதை எளிதில் உணரலாம்.

எந்திரன் என்ற தலைப்பே சுஜாதாவுடையது. அவருடைய இயந்திரா என்பதுதான் எந்திரனாக மருவியது. இதையெல்லாம் படத்தின் ஆரம்ப டைட்டிலில் அமரர் சுஜாதாவுக்கு ஒரு கவுரவ நன்றி கார்டு போட்டுக் காட்டுவதன் மூலம் ஷங்கரால் செய்திருக்க முடியும். இந்த புதிய காப்புரிமையாளர்கள் கிளம்பியே இருக்கமாட்டார்கள்.. அதை ஏன் அவர் செய்யத் தவறினார் என்பது புரியவில்லை!

என் இனிய இயந்திரா ஒரு விஸ்தாரமான விஞ்ஞானக் கதை. 1984-ல் 2021-ஐக் கற்பனை செய்து சுஜாதா படைத்திருப்பார். ஆனால் எந்திரன் முழுக்க இந்தக் கதையல்ல. இதன் பாதிப்பில், சில காரெக்டர்களை மட்டும் எடுத்துக் கொண்டு எளிய அறி்முகம், பிரமாண்ட க்ளைமாக்ஸுடன் எந்திரனைத் தந்திருக்கிறார் ஷங்கர்.

இப்படிப்பட்ட கற்பனைகளுக்கு, ‘தானே அத்தாரிட்டி’ என்றும் சுஜாதா சொல்லிக் கொண்டதில்லை. யாரும் கற்பனை செய்யலாம். ஆனால் ஆதாரம் ஒன்றுதான் என்பது அவர் கருத்து.

என் இனிய இயந்திரா கதையின் முன்னுரையில் சுஜாதா இப்படிச் சொல்கிறார்:

“விஞ்ஞானக் கதை என்பது விஞ்ஞானப்படி சாத்தியமாக இருக்க வேண்டும் என்று பலரும் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

தப்பு.

விஞ்ஞானக் கதைப்படி (சயின்ஸ் ஃபிக்ஷன்) என்பதின் தற்போதைய வடிவத்தில் அது எல்லையற்ற மிக விஸ்தாரமான கற்பனையாக இருக்கிறது. அதனால் மாற்று உலகங்களையும் மாற்று சித்தாந்தங்களையும் படைக்க முடிகிறது.

அதன் காலைகளில் இருளையும் ராத்திரிகளில் வெளிச்சங்களையும் தேவைப்பட்டால் அமைத்துக் கொள்ளலாம். அதன் கடவுள்கள் புரோட்டான் வடிவெடுக்கலாம். அதன் பெண்கள் மகப்பேற்றை ஒட்டுமொத்தமாக இழந்து மீசை வைத்துக் கொள்ளலாம்.. அதன் நாய்கள் பிளேட்டோவைப் பற்றியும் பிரும்மசூத்திரம் பற்றியும் பேசலாம்…

ஆயிரமாயிரம் மாற்று சாத்தியக் கூறுகளை ஆராயும் அற்புத சுதந்திரத்தைப் பேசுகிறது வி.க.!

அதைப் பயன்படுத்தும்போது, அதன் புதிய விளையாட்டுக்களை ஆடும்போது ஒரேயொரு எச்சரிக்கைதான் தேவைப்படுகிறது. கதையில் இன்றைய மனிதனின் உணர்ச்சிகளுடன் ஆசாபாசங்களுடனும் ஏதாவது வகையில் ஒரு சம்பந்தம் அல்லது தொடர்பு காட்ட வேண்டும்…!”

இந்த அடிப்படையில்தான் முன்பே ‘சொர்க்கத் தீவையும்’ படைத்தார் சுஜாதா.

அந்தக் கதை வெளிவந்த காலத்தில், சுஜாதா ஏராளமான ஆங்கிலக் கதைகளைக் காப்பியடித்ததாக புகார் கூறினார்கள். அதற்கு சுஜாதா எழுதிய விளக்கம், இன்று காப்பிரைட் கேட்கும் அத்தனைப் பேருக்கும் பொதுவாகப் பொருந்தும்:

“சொர்க்கத் தீவு’ கதை தொடர்கதையாக வந்தபோது ‘ஜார்ஜ் ஆர்வெல்லின் ‘1984′ போல இருக்கிறது என்று ஒருவர் எழுதியிருந்தார். மற்றொருவர் ஆல்டஸ் ஹக்ஸ்லியின் ‘பிரேவ் நியூ வேர்ல்ட்’ என்றார். பிறிதொரு பெண்மணி ஐரா லெவினின் ‘திஸ் பெர்ஃபெக்ட் டே’ என்றார். இவர்கள் எல்லாரும் சொல்கிறபடி நான் காப்பியடிக்க வேண்டுமென்றால் ஒரு லைப்ரரியையே அடித்திருக்க வேண்டும். பின் அவர்கள் சொன்ன குற்றச்சாட்டுகளில் அர்த்தமில்லையா ?

பார்க்கலாம்.

நான் மேற்சொன்ன நாவல்களை எல்லாம் படிக்கவே இல்லை என்று சொல்வது சிறுபிள்ளைத்தனம். மேற்சொன்ன புத்தகங்கள் என்ன, நிறைய சயின்ஸ்

ஃபிக் ஷன் புத்தகங்கள் படித்திருக்கிறேன். என் நண்பர்களுக்கு நான் சில ஆசிரியர்களைச் சிபாரிசு செய்கிறேன்.

Arthur Clarke, Ray Bradbury, Henry Slesar, Theodore Sturgeon, Anthony Burgess.

பெரும்பாலும் எல்லா சயின்ஸ் ஃபிக் ஷன் நாவல்களிலும் சில பொதுவான அம்சங்கள் இருக்கின்றன.

அவை:

எதிர்காலத்தைப் பற்றி அவை சொல்லும்.

இன்றைய சமுதாய அமைப்புக்குப் பதிலாக, மாறுதலாக ஒரு புதிய அமைப்பை- ஒருவித Utopia (கற்பனை உலகம்) அவைகளில் சொல்வார்கள்.

அந்தப் புதிய அமைப்புக்கு எதிராக ஒருவன் முயற்சி செய்வான்.

‘1984′ என்கிற நாவல் மிக அதீதமான யுத்த பயத்தின் அடிப்படையில் பீடிக்கப்பட்ட ஜனங்கள் விழித்துக் கொண்டே வாழும் கெட்ட சொப்பனம் போன்ற வாழ்க்கையைப் பற்றியது. இதில் சரித்திரம் தினம் தினம் மாற்றி எழுதப்படுகிறது. உண்மை என்பது மணிக்கு மணி மாறுகிறது. இந்த அமைப்பை எதிர்த்த ஒருவனின் தோல்வியைப் பற்றியது இந்த நாவல்.

ஹக்ஸிலியின் ‘பிரேவ் நியூ வேர்ல்ட்’ விஞ்ஞான முறைப்படி டெஸ்ட் டியூப்களில் சுத்தமாக நிர்ணயிக்கப்படும் புதிய வர்ணாச்ரம தர்மத்தைப் பற்றியது. இதையும் ஒருத்தன் எதிர்க்கிறான்.

ஐரா லெவின்னின் ‘திஸ் பெர்ஃபெக்ட் டே’ என்பதில் அகிலம் முழுவதையும் ஒரு ராட்சஸக் கம்ப்யூட்டர் ஆள்கிறது. ஒரே ஒரு பிரதேசத்தில் மட்டும் மக்கள் அகதிகளாகத் தப்பித்துக் கொண்டு பழைய வாழ்க்கை, அதன் சுக துக்கங்கள் சகிதம் கூட்டமாக, அழுக்காக, சந்தோஷமாக வாழ்கிறார்கள். கதாநாயகன் ஆள் திரட்டிக்கொண்டு கம்ப்யூட்டர் ஆட்சியை எதிர்க்கச் செல்கிறான். அவனுக்கு அங்கே ஒரு ஆச்சரியம் காத்திருக்கிறது. அவன் வாழ்ந்த அந்த சுதந்திரப் பிரதேசம்கூடக் கம்ப்யூட்டரின் ப்ரோக்ராம்களின் சாகசங்களில் ஒன்று. அவன் தப்பித்துத் திரும்ப வருவது எல்லாமே முன்பே நிர்ணயிக்கப்பட்ட விஷயம்.

இப்போது சொல்லுங்கள். Am I cleared ?”

-சுஜாதா தன் கதைகளுக்கு முன்பு கூறிய இதே விளக்கங்களையும், கடைசியில் கேட்ட கேள்வியையும் ஷங்கர் திருப்பியடிக்கலாம், காப்புரிமை கோரும் கதாசிரியர்களிடம்!!

வினோ

ஷங்கரும் சுஜாதாவும்… — ஆர்.எஸ். அந்தணன்


பெரிய இயக்குனர்களிடம் உதவி இயக்குனராகச் சேர்கிற சிலர், அந்த இயக்குனர் சொல்கிற எல்லா விஷயத்தையும் சூப்பர் சார். பிரமாதம். ஆஹா என்று பாராட்டிக் கொண்டேயிருப்பார்கள். அந்நியன் படத்தின் கதை விவாதத்திலும் அதுதான் நடந்தது ஷங்கருக்கு.

அவர் என்ன செய்தார் தெரியுமா? பல வருடங்களுக்கு முன் தன்னோடு உதவி இயக்குனராக இருந்த செந்தமிழனை வீடு தேடிப் போய் அழைத்துவரச் செய்தார். இருவரும் பவித்ரனிடம் உதவி இயக்குனராக வேலை பார்த்தவர்கள்.

அதன்பின் ஷங்கர் பல வெற்றிகளைக் கொடுத்து உயர்ந்த இடத்துக்குப் போய்விட்டார். செந்தமிழனுக்கு அவ்வளவு பெரிய வெற்றி வாய்ப்புகள் இன்னும் அமையவில்லை. பல வருடங்களாக இருவரும் சந்திக்கவும் இல்லை. போனில் கூட ஒரு ஹலோ சொன்னதில்லை. இந்த நிலையில்தான் திடீரென்று இவர் வீட்டுக்கு வந்து நின்றது ஒரு கார். “ஷங்கர் சார் உங்களை அழைச்சிட்டு வரச் சொன்னார்” என்றார் வந்தவர்.

இந்த திடீர் அழைப்பை ஏற்றுக் கொண்டு அங்கு போன செந்தமிழனிடம் ஷங்கர் சொன்ன வார்த்தைகள்தான் இந்த இடத்தில் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம். “நான் எந்த சீன் சொன்னாலும் அதை அப்படியே ஆமோதிக்கிறாங்க. இது தப்புன்னு சொல்லவும், இல்லைன்னு ஆர்க்யூ பண்ணவும் யாருமே இல்லை. அதனால்தான் உங்களை கூப்பிட்டு வரச்சொன்னேன்” என்றார். பிறகு ‘அந்நியன்’ படத்தின் இணை இயக்குனராகப் பணியாற்றினார் செந்தமிழன்.

ஷங்கரிடம் இருந்த இந்தப் பக்குவம் இன்று பல இயக்குனர்களிடம் இல்லை என்பது வேறு விஷயம். ஆனால் இந்த அணுகுமுறைதான் ஷங்கரை இன்னும் வெற்றிப்பட இயக்குனராகவே வைத்திருக்கிறது.

https://i0.wp.com/www.hindu.com/mp/2005/04/28/images/2005042800540101.jpghttps://balhanuman.files.wordpress.com/2010/10/shankar.jpg?w=276

ஷங்கருடன் ஓர் உதவி இயக்குனரைப் போலத்தான் உற்சாகமாகப் பணியாற்றினார் மறைந்த எழுத்தாளர் சுஜாதா. ஷங்கரின் கதை விவாதத்தில் மட்டுமல்ல, எடுத்த காட்சிகளைத் திரையில் பார்த்து அதில் கரெக் ஷன் சொல்லித் திருத்துகிற அளவுக்கு அவரது பங்கு மிக மிக முக்கியமானதாக இருந்தது. இது ஷங்கர் யூனிட் என்று ஒருபோதும் அவர் பிரமிப்பு காட்டியதில்லை. மிகப்பெரிய எழுத்தாளர் என்று ஷங்கரும் நான்கடி தள்ளி நின்று பழகவில்லை.

தேக்கடிக்கு ஒரு முறை கதை விவாதத்துக்காகப் போயிருந்தோம். அப்படியே வேறு விஷயத்தை நோக்கி டாபிக் போய்விட்டது. சிறிது நேரம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சுஜாதா சார், இப்போ உங்க எல்லாருக்கும் அடிவிழப் போகுது. வந்த வேலையை விட்டுட்டு என்ன பண்ணிட்டு இருக்கீங்க என்று செல்லமாகக் கோபித்துக் கொண்டதை இப்ப நினைச்சாலும் நெகிழ்ச்சியா இருக்கு என்கிறார் செந்தமிழன்.

ஆர்.எஸ். அந்தணன்

பத்திரிக்கையாளர் அந்தணன் எழுதும் சினிமா தொடர்பான பதிவுகள் வாய்விட்டு சிரிக்க வைக்ககூடியவை. அற்புதமான நகைச்சுவை உணர்வுடன் ஒளிவுமறைவின்றி அவர் எழுதும் பதிவுகள் தனித்துவமானவை. கேலியும் கிண்டலும், அதன் ஊடாக பீறிடும் உண்மைகளும் இவரது எழுத்தின் தனிச்சிறப்பு.

தமிழ் பேப்பர்