Category Archives: Sujatha Suvadugal

3-உங்களுக்கு டயபடிஸா…? -சுஜாதா


sujatha2

இன்சுலின் குறைவாக சுரப்பவர்களுக்கு அந்த சுரப்பு சக்தியை ஊக்குவிக்கக்கூடியவை, யுக்ளுகான், டயனில் போன்ற மாத்திரைகள். இன்சுலினை நேரடியாக வாயில் போட்டு முழுங்க முடியாது. வயிற்றில் போனவுடன் அங்குள்ள அமிலங்கள், அதை பாகம் பிரித்து செயலிழக்க வைத்துவிடும். அதனால்தான் ஊசி.

இன்சுலின் தயாரிப்பில் முன்னேற்றங்கள் வந்துள்ளன. முதலில் பன்றியின் உடலிலிருந்து ‘போர்சைன்’ வகை, இன்சுலின் எடுத்து வந்தார்கள். மனித இன்சுலினை சோதனைச் சாலையில் இன்சுலின் சிந்த்ஸிஸ் என்னும் ஜெனெட்டிக் இன்ஜினியரிங் முறைப்படி தயாரிக்கும் வித்தையைக் கற்றுக்கொண்டு விட்டார்கள். இது ஒரு முக்கியமான முன்னேற்றம்.

25-10-1988

?ரத்தமா ?

!ஆம். அதிகாலை வெறும் வயிற்றில் சென்றால், சுமார் இரண்டு இன்ச் ரத்தம் எடுத்துக் கொள்வார்கள். Fasting, மயக்கம் போடவில்லையென்றால், சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து, மறுபடி ஒரு postprandial ரத்தச் சோதனை. ரத்தத்தில் சர்க்கரை அளவுகள் 100, 130க்குள் இருக்கிறதா தெரிந்து விடும்.

?இதற்கு மெஷின் இருக்கிறதாமே ?

!இருக்கிறது. க்ளூக்கா மீட்டர் என்று. ஆனால், முதல்முறை நல்ல லேப்பில் பரிசோதித்துக் கொள்வது நல்லது. க்ளூக்கா மீட்டர்கள் சில சமயம் குறைத்துக் காட்டும். சில சமயம் கூடுதலாக… ரத்தத்தில் சர்க்கரை அளவு சாதாரணமாக எத்தனை இருக்க வேண்டும்? இதென்ன கணக்கு…100,130 என்று? முன்னது 100க்குக் குறைவாகவும் பின்னது 130க்குக் குறைவாகவும் இருந்தால் எல்லாம் நலம். 100 மில்லி லிட்டருக்கு இத்தனை மில்லி கிராம் என்று கணக்கு.

(ஜூனியர் விகடன் 2003)

டயபடிஸ் புராணம் தொடரும்…

Advertisements

2-உங்களுக்கு டயபடிஸா…? -சுஜாதா


sujatha55

டயபடிஸ் ஒரு நோய் அல்ல. ஒரு குறை. கையில்லை. கால் இல்லை என்பது போல் இன்சுலின் இல்லை. அதை செயற்கையாக வெளியிலிருந்து கொடுக்கிறோம். அவ்வளவுதான் அலோபதியின் ஆதார சிகிச்சை முறை. அதைத் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். இது ரொம்ப நாளாக மாறவில்லை.

25-10-1988

?எனக்கு டயபடிஸ் இருந்தால், உங்களால் கண்டுபிடிக்க முடியுமா ?

!சுலபம். போன தடவை பார்த்ததற்கு, இந்தத் தடவை கொஞ்சம் சுருங்கித் தெரிவீர்கள். காபிக்கு ஷுகர் போடலாமா என்று கேட்டால், சற்று தாமதித்துக் கொஞ்சம் போடலாம் என்பீர்கள். நொறுக்குத் தீனி கொண்டு வைத்தால், கறிவேப்பிலையைக் கூட விட்டு வைக்காமல் சாப்பிட்டு விடுவீர்கள். இனிப்பு ஏதாவது கொண்டு வந்தால், கண்கள் பிரகாசமடையும். கல்யாணச் சாப்பாட்டில் இலை ஆரம்ப நிலைக்கு வந்ததுபோல், சுத்தமாக அத்தனையும் சாப்பிடுவீர்கள். அடிக்கடி தண்ணீர் குடிப்பீர்கள். ராத்திரி ஒரு முறையாவது புலி துரத்துகிற மாதிரி பயங்கரக் கனவு கண்டு எழுந்திருப்பீர்கள். அரைமணிக்கு ஒரு முறையாவது மூத்திரம் போவீர்கள். மனைவி – கணவனுக்குத் தெரியாமல் சாக்லேட், மைசூர்பா சாப்பிடுவீர்கள். காலை அடிக்கடி காலால் சொரிந்து கொள்வீர்கள். கண்ணைப் பார்த்ததும் கண்டு பிடித்து விடலாம் முதன்முறையாக. வருடாந்திரச் செக்கப்பில் ரத்தப் பரிசோதனை பண்ணிப் பார்த்தால் தெரிந்துவிடும்.

(ஜூனியர் விகடன் 2003)

டயபடிஸ் புராணம் தொடரும்…

1-உங்களுக்கு டயபடிஸா…? -சுஜாதா


sujatha55

தீபாவளி மலர்கள்; தொலைக்காட்சி எல்லாவற்றிலும் டயபடிஸ், ஆஸ்த்மா, மூட்டுவலி இம்மூன்றுக்கும் தான் மிக அதிகமான, அற்புத சிகிச்சைகளின் விளம்பரங்களைப் பார்க்கிறேன். இவைகளைப் பற்றி எனக்குத் தனிப்பட்ட கருத்துக்கள் உண்டு. லட்சக்கணக்கான சக நோயாளிகளுக்கு உதவும் விதத்தில் நான் எழுத விரும்புவது டயபடிஸ் பற்றி…

(எழுதிய வருடம்: 25.10.1988)

உலகத்தில் டயபடிஸ்காரர்கள் எத்தனை பேர் ?

பதினேழரை கோடி. இன்னும் ஐந்து வருஷத்தில் இருபத்துநாலு கோடியாகப் போகிறது! இந்தியாவில்? போன வியாழக்கிழமை கணக்கிட்டபடி, நாலு கோடி இந்தியர்கள் டயபடிஸ்காரர்கள். அது 2010க்குள் பதினொன்றரைக் கோடியாகப் போகிறதாம்! உலகின் டயபடிஸ் தலைநகரம் இந்தியாதான் என்கிற சந்தேகத்துக்குரிய பெருமை நமக்கு உண்டு.

(ஜூனியர் விகடன் 2003)

டயபடிஸ் புராணம் தொடரும்…

பேசாதே! சுஜாதா


sujatha2

இதுவரை என் நான்கு நாவல்கள் படமாகியிருக்கின்றன. ஒரு திரைக் கதை எழுதிப் பார்த்தேன். அந்தப்படங்கள் சில ஓடின. சில நொண்டின. இந்தக் கட்டுரை சினிமாவின் வியாபார நோக்கங்களையோ அந்த வியாபாரம் இயங்கும் விந்தையான விதிமுறைகளைப் பற்றியோ அல்ல. ஒரு நாவலாசிரியன் திரைக்கதை எழுதுவதைப் பற்றி எனக்கு எழும் எண்ணங்கள் பற்றி.

திரைக்கு எழுதுவது என்பதே ஒரு முரண்பாடு. மிக நல்ல திரைக்கதை என்பது வார்த்தைகளே அற்ற வடிவம் என்பது என் கருத்து. அது ஓர் அடைய முடியாத ஆதர்சம். வார்த்தைகள் தேவைதான். ஆனால் முதலில் ‘திரை’ எழுத்தாளர் கற்றுக் கொள்ள வேண்டியது வார்த்தைகளைக் குறைப்பது. இது பத்திரிகை எழுத்துத் தேவைக்கு நேர் எதிரானது.

ஆதி மனிதன் ஒரு நல்ல திரை எழுத்தாளன்! அவனுக்கு வார்த்தைகள் அதிகமில்லை. இரவில் நெருப்பைச் சுற்றி உட்கார்ந்து கொண்டு கதை சொல்லும்போது அவன் சங்கேதங்களையும் நடிப்பையும் நாடியிருக்கிறான். அவற்றில் சித்திரங்களாக அக்கதைகளைச் சொன்னான். இந்த ஆதி மனிதத்தன்மை மிக நவீன சாதனமான சினிமாவில் இன்றும் தேவையாக இருக்கிறது.

ஆரம்ப கால சினிமா ஒரு பொருட்காட்சி சமாச்சாரமாகத்தான் இருந்தது. முதல் படங்களில் ரெயில் வருவதையும் ஆட்கள் நடப்பதையும் காட்டினார்கள். நிழல் சலனத்தின் ஆச்சரியம் தான் அப்போது முக்கியமாக இருந்தது. எல்லாம் காட்சிகள். வார்த்தைகள் இல்லை. உண்மைச் சம்பவங்களைப்பதிவு செய்வதிலிருந்து மாறி, கற்பனை சம்பவங்களை அமைத்துப் பதிவு செய்தது சினிமாவின் அடுத்த கட்டம். 1903-ல் ‘தி கிரேட் ட்ரெயின் ராபரி’ என்ற படத்தில் இந்த மாறுதல் தலை காட்டியது. படம் ஹிட்! இந்தப் படத்தில் இருக்கும் எளிய கதையை நேராகச் சொல்லும் சினிமா அம்சம் இன்னும் பல சினிமாவுக்குத் தேவையாக இருக்கிறது.

பொருட்காட்சி சாலைகளிலிருந்து விலகி தனிப்பட்ட அரங்கங்களில் சினிமா நுழைந்தபோதுதான் அதில் கலை அம்சங்கள் சேர்ந்து கொண்டன என்று சொல்லலாம். டி.டபிள்யு கிரிஃபித் என்ற குட்டி நடிகர் தற்செயலாக சினிமா எடுக்கப் பிறந்தது (1908) சினிமா சரித்திரத்தில் மிக முக்கியமான மைல் கல்.

கிரிஃபித் முதன் முறையாக மூன்று அம்சங்களை சினிமாவில் நுழைத்து அதை ஒரு கலைப் படைப்பாக மாற்றுவதற்கு உண்டான அஸ்திவாரங்களை ஏற்படுத்தினார். அந்த மூன்றும் க்ளோஸப், நகரும் காமிரா, எடிட்டிங்.

க்ளோஸ் அப் என்பது இன்று சினிமாவின் மிக மகத்தான ஆயுதம். கதாபாத்திரத்தின் முகம், கை, அல்லது கதைக் காட்சியின் ஒரு சிறிய பொருளைத் திரை முழுவதும் பெரிதாக விஸ்தரித்துக்காட்டுவதில் சினிமா உடனே நாடகத்திலிருந்து வேறுபட்டுவிடுகிறது. பார்ப்பவர்களை உடனே கதைக்குள் கட்டாயமாக இழுத்துச் சென்று ‘இதைப் பார்’ என்று தனிப்படுத்திக் காட்டுகிறது. நாற்காலியில் உட்கார்ந்திருந்தவர்கள் கதைக்குள் நுழைந்து விடுகிறார்கள். கதையின் உணர்ச்சிகளிலும் சுக துக்கங்களிலும் பங்கு எடுத்துக் கொள்கிறார்கள்.

நகரும் காமிரா க்ளோஸ் அப்பின் சாத்தியங்களை விஸ்தரிக்கிறது. இடம் மாற்றி நகர்ந்து, காட்ட வேண்டியதை மட்டும் காட்டி டைரக்டரின் ஃபார்முலாவை நம் மேல் கட்டாயமாகத் திணிக்கும் இந்த உத்தியால் நாம் தாற்காலிகமாக டைரக்டரின் அடிமைகளாகிறோம். அவர் காட்ட இஷ்டப்படுவதைத்தான் நம்மால் பார்க்க முடியும் அவர் காட்ட விருப்பும் வரிசை, நேரம், செயல் இவைகளை வேண்டுமென்றே அமைக்க எடிட்டிங் உதவுகிறது. இந்த மூன்றும் திரையின் வார்த்தைக் குறைப்புச் சாத்தியக்கூறுகளை மிக அதிகமாக்கி விட்டன.

திரையில் பேச்சு என்பது லேட்டாக வந்த விஷயம். பேசும் பட ஆரம்பத்தில் அதை ஒரு சாபமாகவே சிலர் கருதினார்கள். சார்லி சாப்ளின் பத்து வருடம் பேசும் படங்களில் நடிக்க மறுத்தார். திரையில் ஒருங்கமைந்த ஒலிப்பதிவு துவங்கிய ஆரம்ப நாட்களில் இந்தக் கலை சற்றுப் பின்னோக்கிச் சென்றது என்னவோ வாஸ்தவம் தான். இஷ்டப்பட்ட வெளிப்புறக் காட்சிகளை மெளனப் படங்களாக எடுத்துக் கொண்டிருந்தவர்களை, ஒளிப்பதிவின் ஸ்டுடியோ தேவைகள் அறைக்குள் திருப்பி அனுப்பி விட்டன. சினிமாப் படைப்பு டிராமாவாகியது. நிறையப் பேசி மாய்ந்தார்கள்.

மெள்ள மெள்ள இந்தக் கட்டுப்பாடுகள் விஞ்ஞான முன்னேற்றத்தால் விலகிப் போக பல சிறந்த எழுத்தாளர்கள் ஹாலிவுட்டைப் படையெடுத்தார்கள். ஆனால் சீக்கிரமே அவர்கள் ஏமாந்து போனார்கள். இந்தப் புதிய சாதனத்தில் வார்த்தைத் தேவைகள் வித்தியாசமாக இருந்தன. இவர்களுக்குப் பிடிபடவில்லை. இவர்கள் சுதந்திரப் போக்கால் டைரக்டர் சொன்னபடி எழுதிக் கொடுக்க மறுத்தனர். ஸ்கவுன் ஃபிட்ஸ் ஜெரால்டு போன்ற மகத்தான எழுத்தாளர்கள் சினிமாவில் படு ஃபிளாப். (தமிழில் புதுமைப்பித்தன் சினிமாவில் திணறியது சிலருக்குத் தெரிந்திருக்கும்) அதிகம் திறமையில்லாத, ஆனால் டைரக்டர் தேவைப்படி எழுதிக் கொடுக்கக் கூடிய இரண்டாந்தர எழுத்தாளர்கள் சினிமாவில் வெற்றி பெற்றார்கள். ‘ஒரு மோசமான நாவல் நல்ல திரைப்படமாக மாறும்’ என்று இன்னும் சிலர் நம்புகிறார்கள்.

சினிமாவின் வியாபாரத் தேவைகள் ஒரு குறிப்பிட்ட ஃபார்முலாவுக்கு ஏற்ப எழுதிக் கொடுப்பவர்களை அதிகம் ஆதரித்தாலும் ஜான் ஹேஸ்டன் போன்ற சில நல்ல திரைக்கதை எழுத்தாளர்களும் தோன்றினார்கள்.

தமிழ்ச் சினிமாவில் நான் பார்த்தவரை இந்த சினிமாத் தேவைகளின் பிரச்னையோடு செயல்படக்கூடிய திரை எழுத்தாளர்கள் பலர் இருக்கிறார்கள். பாலசந்தர், அனந்து, பாரதிராஜா, பஞ்சு அருணாசலம், மகேந்திரன், பாலு மகேந்திரா போன்றவர்கள் சில உதாரணங்கள். இருந்தும் தமிழ் சினிமாவின் தேவைகளும் சினிமா ஒரு கலைப்படைப்பு என்கிற ரீதியில் ஏற்படும் தேவைகளும் பல விதங்களில் முரண்படுகின்றன.

கலைத் தரமான சினிமாவை நாம் எடுப்பதில்லை என்று சொல்லவில்லை நான். கலைத் தரம் என்பது தமிழ் சினிமாவில் தற்செயலான விஷயம்.

திரைக்கதையின் தேவைகள் ஒரு நாவலாசிரியனின் கலைக்கு மிக எதிரானவை. பல இடங்களில் டைரக்டரின் பணியும் திரைக்கதை எழுதுபவரின் பணியும் ஒன்றிப் போய்விடுகின்றன.

சினிமா என்பது ஒரு நான் வெர்பல் மீடியா என்பதைப் பலர் உணரவில்லை. வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு சாதனம் இது. வார்த்தைகள் என்பவை ஒரு தவிர்க்க முடியாத குறைந்த தேவை அம்சம்.

நான் நூறு வார்த்தைகளில் வர்ணிப்பதைத் திரை ஒரு காட்சியில் காட்டிவிடும். ‘அவள் மிக மோசமாகப் பாடினாள்’ என்று நான் எழுதுவதை டைரக்டர் அவள் பாடுவதையும் ஆடியன்ஸ் கொட்டாவி விடுவதையும் காட்டி விவரித்து விடுவார். பெரும்பாலும் வார்த்தைகள் தேவையில்லைதான்.

ஆல்ஃபிரட் ஹிட்ச்காக் வார்த்தையில்லாமல் கதை செய்வதில் மன்னன். அவருடைய ‘ரியர் விண்டோ’வின் பிரபலமாகிவிட்ட ஆரம்பக் காட்சியை உதாரணம் சொல்லலாம். ஒரு விபத்திற்குப் பின் அடிப்பட்டு போரடித்து வீட்டில் படுத்திருக்கும் போட்டோகிராபரை அவர் எப்படி விவரிக்கிறார் என்று பார்க்கலாம். சுலபமாக ‘கார்ல வந்து கொண்டே இருந்தேனா? திடீர்னு ப்ரேக் விழுந்து…’ இப்படி வார்த்தைகளிலோ அல்லது தனித்தனி ஷாட்டுகளிலோ சொல்லியிருக்கலாம். ஹிட்ச்காக் அப்படிச் செய்யவில்லை. ஒரே ஷாட்டில் காட்டினார். ஆரம்பத்தில் ஜேம்ஸ் ஸ்டீவர்ட்டின் சுட்டுப் போட்ட காலின் க்ளோஸ் அப் அங்கிருந்து காமிரா மேல் நகர்ந்து அவர் வியர்வை படிந்த சலனமற்ற முகத்தைக் காட்டுகிறது. அங்கிருந்து அருகே மேஜையின் மேல் உடைந்து நொறுங்கிப்போன காமிராவைக் காட்டிவிட்டு, சுவரில் மாட்டியிருக்கும் மோட்டார் ரேஸ் படங்களுக்கு நகர்கிறது. எல்லாவற்றையும் சொல்லி விட்டார்! ஒரு வார்த்தை இல்லை!

தமிழ் சினிமா, பராசக்தி, மனோகரா, வேலைக்காரி போன்ற அதீத வார்த்தைப் படங்களின் சம்பிரதாயத்தினாலும், அரசியல் சாதனமாக இருக்க வேண்டிய கட்டாயத்தினாலும் வளர்ந்ததால் இன்னும் நிறையவே பேசுகிறது. மகேந்திரன், பாலுமகேந்திரா, ருத்ரய்யா போன்றவர்கள் படும் சிரமம் எனக்குப் புரிகிறது. இருந்தும் இந்த வார்த்தைக் குறைப்பின் ஆரம்பங்கள் இன்று தமிழ் சினிமாவில் ஏற்பட்டுவிட்டன என்றுதான் சொல்ல வேண்டும்.

1.1.1980 சினிமா எக்ஸ்பிரஸ் தீபாவளி மலருக்காக எழுத்தாளர் சுஜாதா எழுதிய சிறப்புக் கட்டுரை இது. இந்த வருடம் சுஜாதாவின் பிறந்த தினமான 3.05.2016-ல் தினமணியில் மீள் பதிவு

‘சுஜாதா என்கிற நான்…


60-களின் மத்தியில் எழுதத்துவங்கி, இறக்கும் காலம் வரை எழுத்தில் மழுங்கல் இன்றி வாசகர்களை தன் எழுத்தினால் கட்டிப்போட்டவர் எழுத்தாளர் சுஜாதா. எழுத்து என்றால் இலக்கியம் என்ற வரையறைக்குள் சிக்காமல், நவீனத்தை தன் எழுத்திலும் சிந்தனையிலும் ஏற்றி, இளைய தலைமுறையினரின் ஆதர்ஷ எழுத்தாளராக திகழ்ந்தவர்.

இந்நிலையில் எழுத்தாளர் என்று மட்டும் வெகுஜன உலகில் அறியப்பட்ட சுஜாதா என்கிற ரங்கராஜனின் தனிப்பட்ட குணங்களை பகிர்ந்து கொள்கிறார் அவரது மனைவி சுஜாதா.

சுஜாதாவிற்கு முன், அவருடன், அவருக்குப்பின் என உங்களைப் பற்றி   மூன்று வார்த்தைகளில் சொல்லுங்களேன்…..

சுஜாதாவிற்கு முன்-களிமண் …
அவருடன் -முதலில் சாது, பின் கொஞ்சம் தைரியம் ,பின் அனுசரிப்பு
இப்போது- தனிமை, வெறுமை ..பின் முதுமை.

சுஜாதாவின் எழுத்துக்களில் உங்களுக்குப்பிடித்த கதை?

அவரது ஒரு குறுநாவல். பெயர் நினைவில்லை. அது என்னை ரொம்ப ஈர்த்த நாவல். ஆனால் அது அவருக்கு பிடித்திருக்குமா என்பது தெரியாது. அவரைப் பொறுத்தவரையில் தனக்குள்ளேயே வாழ்ந்தவர். உணர்ச்சிகளை பெரும்பாலும் வெளியே காட்டாதவர். அவர் எழுதிய கதைகளைப் பொறுத்தவரை ஒரு கர்த்தாவாக மட்டுமே பேசுவார். விருப்பு வெறுப்புகளை நம்மிடம் பகிர்ந்துகொள்ளமாட்டார்.

அவர் உங்களிடம் பேசிய முதல் வார்த்தை நினைவிருக்கிறதா?

அவர் என்னிடம் பேசிய முதல் வார்த்தையைவிட என்னிடம் அவர் அணுகிய விதம்தான் அதிர்ச்சி ரகம். ‘டி’ என்ற வார்த்தையுடன் ஒருமையில் பேசினார். எனக்கு ‘டி’ போட்டு பேசுவது பிடிக்காது. வீட்டிலும் அப்படி யாரும் என்னிடம் பேசிப் பழக்கமில்லை. அதனால் உடனே அவரிடம் அப்படி அழைப்பது பிடிக்கவில்லை என்று சொன்னேன்.  சரி என்றவர், அதற்குப் பிறகு ஒருநாளும் என்னை அப்படி அழைத்தில்லை .

பெரும் எழுத்தாளர்… உங்களது பெயரையே புனைப்பெயராக சூட்டிக்கொண்டார். இது எப்போதாவது உங்களுக்கு பொறாமை ஏற்படுத்தியது உண்டா?

இல்லை!  நான் அப்படிப்பட்டவளும் அல்ல. என் தங்கை என்னைவிட அழகு. அவளை எல்லாரும் சிலாகித்து சொல்வார்கள். எனக்கு உள்ளுர அதில் சந்தோஷமே தவிர, பொறாமை இருக்காது. அதேபோல் அவருக்கு கிடைத்த பெருமைகள், புகழ் எல்லாம் எனக்கு சந்தோஷம் தந்ததே தவிர, பொறாமை ஏற்படுத்தியது இல்லை.

ஒருவகையில் வீட்டில் இரண்டு எழுத்தாளர் இருந்தால் வீண் சண்டைதான் வந்திருக்கும். அவரும் கூட இம்மாதிரி விஷயங்களில் கிட்டத்தட்ட என்னைப்போலதான். எந்த உணர்ச்சியையும் வெளிகாட்டியதில்லை. எதற்காகவும், என்றும் யார்மீதும் பொறாமைப்பட்டிருக்கமாட்டார்.

There is a woman behind every successful man என்பார்கள். அவர் எழுத்துப் பணியில் உங்கள் பங்களிப்பு என்னவாக இருந்தது? அவருக்கு நீங்கள் உதவியதுண்டா?

அவர் வெற்றிக்கு நான் காரணம் என்று நினைததில்லை. அவர் நினைத்தாரா என்பதும் தெரியவில்லை. காரணம் அவர் ரொம்ப private person. எதையும், எப்போதும் வெளியே சொல்லமாட்டார். கதை பற்றிய விஷயமும் அது போல்தான். என்ன எழுதுகிறார், எதை படமாக எடுக்கிறார்கள், எதையும் பகிர்ந்து கொள்ளமாட்டார்.

எழுத்தாளரின் மனைவி என்ற முறையில் அவரது எந்த படைப்பும் உங்கள் பார்வைக்குதான் முதலில் வந்திருக்கும். படித்துவிட்டு அதுபற்றி அவரிடம் விமர்சனம் செய்திருக்கிறீர்களா?

உண்மையில் என் சிந்தனையும், அவர் கதை சித்தரிப்பும் ஒத்துப்போனதில்லை. காரணம் கதைகளில் புதுமையான சிந்தனை இருக்க வேண்டும் என விரும்புபவர் அவர். நான் அப்படி இல்லை. மிகவும் பழமையான சிந்தனை கொண்டவள்.

திருமணமான புதிதில் அவரது கதையை விமர்சனம் செய்ததுண்டு. பின்னாளில் அதைவிட்டுவிட்டேன். கரையெல்லாம் செண்பகப்பூ என்ற அவரது நாவலில், முதலில் அந்த கதையின் நாயகியான அந்த கிராமத்துப் பெண், நகரிலிருந்து வந்தவனுடன் ஓடிப் போவதாகத்தான் முடிவு வைத்தார்.

எனக்கு அது நெருடலாக இருந்தது. எந்த கிராமத்துப் பெண்ணும் அவ்வாறு செய்யமாட்டாள். முடிவு சரியில்லை என்றேன். அப்புறம் அந்த முடிவை மாற்றி எழுதினார். அது ஒன்றுதான் எனக்கு நினைவிருக்கிறது.

பெண் குழந்தை இல்லை என்று எப்போதாவது நீங்களோ, அவரோ எப்போதாவது ஏங்கியதுண்டா?

எனக்கு முதலில் பெண் குழந்தைதான் பிறந்தது. பிறந்து நாலு நாட்களில் இறந்துவிட்டது. இறந்த அந்தக் குழந்தையை எண்ணி வருந்தியதுண்டு. அவர் தனது சில கதைகளில் கற்பனையாக இதுபற்றி எழுதி தன் வருத்தத்தை போக்கிக்கொண்டார் என்றே நினைக்கிறேன்.

முதல் கோபம், முதல் சிரிப்பு, முதல் பிரிவு என அவருடனான உங்கள் மூன்று தருணங்கள் நினைவிருக்கிறதா?

அப்போது நாங்கள் டெல்லியில் வசித்து வந்தோம். இரண்டு குழந்தைகள் பிறந்து விட்டன. ரொம்ப நாட்களாக என் உறவினர் ஒருவர் வீட்டுக்கு போக வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தேன். இவரும் இந்த வாரம், அடுத்த வாரம் என்று தள்ளி போட்டுக்கொண்டே வந்தவர்,  ஒருநாள் நல்ல மூடு போல, ‘வா… போய் வரலாம்!’ என்றார். கிளம்பும் போதே மணி ஐந்து. அவர்கள் வீட்டிலேயே குழந்தைகள் சாப்பிட்டு விட்டன. நாங்கள் வேண்டாம் என்று சொல்லி கிளம்பிவிட்டோம்.

அப்போதே மணி ஒன்பது. ஸ்கூட்டர் கிடையாது. பஸ் அதிக நேரத்திற்குப் பின் வந்தது. நிறுத்தத்தில் இறங்கி நடந்தோம். பசி எரிச்சல், கோபத்தில் விறு விறு என்று இவர் முன்னாடி போக, இரண்டு குழந்தைகளும் தூங்கிப்போய் விட்டன. தூக்கிக்கொண்டு பின்னால் நான். அப்போது அவர் என் மீது காட்டிய கோபம் இன்னமும் பதறச் செய்கிறது.

முதல் பிரிவு, முதல் சிரிப்பு இரண்டும் ஒரே சம்பவத்தில் நடந்தது. கல்யாணம் முடிந்த ஐந்தாம் நாளே டெல்லி சென்றுவிட்டார். இது முதல் பிரிவு.

மூன்று மாதத்திற்க்குப் பின் என் மாமனார் என்னை டெல்லி அழைத்துச் சென்றார். ஸ்டேஷன் வந்துவிட்டது. ‘இவன் இருக்கானா பார்’ என்றார். நானும் பார்த்தேன். பார்த்துவிட்டு, ‘இல்லையேப்பா…’ என்றேன். கடைசியில், இவர் என் கோச்சுக்கு எதிரேதான் அவ்வளவு நேரம் நின்றுகொண்டு இருந்திருக்கிறார். எனக்குத்தான் அடையாளம் தெரியவில்லை. பலமாக சிரித்தோம் எல்லோரும்.

பிரபலமான எழுத்தாளரின் மனைவி என்ற வகையில் உங்கள் சுயம் பறிபோனதாக என்றாவது நினைத்ததுண்டா?

நிறைய சந்தர்ப்பங்களில் பொது நிகழ்ச்சி, வீட்டு விசேஷம், அவர் வீட்டு ஃபங்ஷன்….எங்கே போனாலும் சுஜாதா… சுஜாதா… சுஜாதா…தான். எனக்கு இது கூட வருத்தமில்லை. ஆனால் சில சொந்தக்காரர்கள், என்னவோ எனக்கு தெரியக்கூடாத ரகசியம் போல், நானும் இவருடன் இருக்கும்போது, என்னை தனியே அமரவைத்து, இவரை மாடிக்கு அழைத்துச் சென்று பேசும்போது அப்போது வருவது கோபமா..சுய பச்சாதாபமா, எரிச்சலா…இல்லை இவை எல்லாவற்றிலும் ஆன ஒரு கலவையா எனத் தெரியவில்லை?

ஒரு முறை இப்படி நடக்கப்போக, நான் எழுந்து வீட்டுக்கு வந்துவிட்டேன். தன் தவறை உணர்ந்து அவர்களே அப்புறம் மன்னிப்பு கேட்டார்கள். ரகசியம் பேசட்டும். என்னை அழைக்க வேண்டாமே.

சுஜாதாவின் கதைகளில் அவருக்கு நிகழ்ந்த அனுபவம் அல்லது நீங்கள் அறிந்தவர் அல்லது அவருக்குத் தெரிந்தவர் இவர்களைப்பற்றி எழுதியது உண்டா?

நிறைய! ஆனால் அடையாளங்களை மாற்றி விடுவார். யாரைப்பற்றி எழுதுகிறார் என்று எனக்குத்தெரிந்து விடும். ஆனால் நான் கேட்க மாட்டேன். அவரது எழுத்தில் தலையீடு செய்வது எனக்கும் பிடிக்காது, அவருக்கும் பிடிக்காது.

உங்களை வைத்து ஏதாவது கதை எழுதியிருக்கிறாரா?

ம்…ஒரு சிறுகதை. 1964  அல்லது  65 என்று நினைக்கிறேன். புதிதாக கல்யாணமான பெண்; அவளை அழைத்துக்கொண்டு காவேரிக்கரைக்கு போவதாக ஆரம்பிக்கும் கதை. அதில் அந்தப்பெண் பாத்திரம் என்னை வைத்துத்தான் எழுதினார். கதையில் அது நடந்தது இங்கே பீச்சில்.


என்றாவது தனது எழுத்துப் பணியில் அவர் சலித்துக்கொண்டதுண்டா?

இல்லவே இல்லை! எழுத ஆரம்பித்துவிட்டால் அவருக்கு சாப்பாடு, தூக்கம் எதுவும் வேண்டாம். எழுதுவது , படிப்பது, இவை இருந்தால் போதும் அவருக்கு. சாகும் வரை எழுதிக்கொண்டிருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். அது போலத்தான் நடந்தது.

உணவு விஷயங்களில் சுஜாதா எப்படி?

வெந்தயக்குழம்பு, கீரை மசியல், சுட்ட அப்பளம் அவருக்கு மிகவும் பிடித்தவை.

சுஜாதாவின் கண்ணாடி, அவரின் மேஜை,  புத்தக அலமாரி, அவருடைய பரிசுப் பொருட்கள் ஆகியவற்றுடன் குறிப்புகளும், கவிதைகளுமாக நிரம்பிக்கிடக்கின்றன அவரது டைரி.குப்பை பொறுக்கும்
சிறுமியின் கையில்
ஃப்ளாப்பி டிஸ்க்

கடை வாசலில்
உடையில்லாத பெண்கள்
பொம்மைகள்

பால் நிலாவில்
களங்கங்கள்
எறும்பு

வானத்தில் விமானத்திற்கு
‘டாடா’ காட்டும் சிறுமி.

மற்றவர் நினைவிருக்கும்
எனக்கு மட்டும்
மறந்து போன
பிறந்த நாள்.

சந்திப்பு: லதா ரகுநாதன் (நன்றி விகடன்)

ஜனாதிபதியின் கடிதம் – சுஜாதா


Kalam by Ma Se

முதலில் ராஜ் பவனிலிருந்து போன் வந்தது. என் விலாசம் சரிதானா என்று விசாரித்தார்கள். அதன்பின் அதிகாரிகள் வந்தனர். அழகான மலர்க்கொத்துடன் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள் எனக்கு அனுப்பி வைத்த கடிதத்தைக் கொடுத்தனர். எனக்கு உடம்பு சரியில்லை என்று கேள்விப்பட்டதாகவும் இறைவன் அருளால் சீக்கிரமே குணமாக வேண்டும் என்று எழுதியிருந்தார்.

FullSizeRender (93)

‘அப்துல் கலாம் உன் கிளாஸ்மேட் என்று ரொம்ப நாளாகச் சொல்லி வருகிறாய். எங்கே அதற்கு அத்தாட்சி ?’ என்று என்னை அடிக்கடி கேட்டவர்க்கெல்லாம் இதோ, அந்தக் கடிதம். அப்துல் கலாம் தன் நண்பர்களை மறக்கவில்லை என்பதும் அவருடைய எளிமையும் புரியும்.

ரெடியா கலாம் ? – சுஜாதா


Kalam by Ma Se

ஏ.பி.ஜே. அப்துல் கலாம் திருச்சி புனித வளனார் கல்லூரியில் (சென் ஜோசப்) பி.எஸ்ஸி. படிப்பில் என் வகுப்புத் தோழர். அந்தக் கல்லூரியில் மதிய இடைவேளைகளில் லாலி ஹால் என்னும் பெரிய அரங்கத்தில் பெல் அடிக்கும் வரை அரட்டையடித்துக் கொண்டிருப்போம். அப்போதிலிருந்தே அப்துல் கலாமை எனக்கு ஞாபகம் இருக்கிறது. அதிகம் பேச மாட்டார். ஏதாவது கலாட்டா செய்தால் சிரித்து மழுப்பிவிடுவார். எங்களுடன் சினிமாவுக்கெல்லாம் வரமாட்டார்.

பி.எஸ்ஸி. படிப்புக்குப் பிறகு நான் எம்.ஐ.டி-யில் எலெக்ட்ரானிக்ஸ் சேர்ந்தபோது அதே வருடம் அவர் ஏரோநாட்டிக்ஸில் சேர்ந்தார். இருவருக்கும் பொதுவாக இருந்த தமிழ் ஆர்வத்தால் அடிக்கடி சந்தித்துப்  பேசியது நினைவிருக்கிறது. பாரதி பாடல்களிலும் திருக்குறளிலும் அவருக்கு ஈடுபாடு இருந்தது. அப்போதே அவருக்கு விமான இயல், ராக்கெட்ரி போன்ற துறைகளில் எதையாவது நடைமுறையில் சாதிக்க வேண்டும் என்கிற ஆர்வம் இருந்ததை அறிய முடிந்தது. எம்.ஐ.டி-யின் ஜெர்மானிய ப்ரொபசர் ரெபந்தின், பேராசிரியர் பண்டாலே போன்றவர்கள் வழிகாட்ட (நாட்டிலேயே முதன் முதலாக என்று எண்ணுகிறேன்), ஒரு கிளைடர் என்னும் எஞ்சின் இல்லாத விமானத்தை செய்து முடித்தார்கள். அதை மீனம்பாக்கத்துக்கு பார்ட் பார்ட்டாக கழற்றி எடுத்துச் சென்று மறுபடி பூட்டி ‘விஞ்ச்’சின் மூலம் இழுத்து காத்தாடி போல உயர்த்த, அது தர்மலை (உஷ்ணக் காற்றைப்) பிடித்துக் கொண்டு பறந்தபோது கல்லூரியில் நாங்கள் அனைவரும் பெருமிதத்தில் பறந்தோம். கலாம் அதில் பங்கு வகித்தார்.

எம்.ஐ.டி-யில் இயற்பியல் பேராசிரியர் ராகவாச்சாரி, தமிழில் ஈடுபாடு உள்ளவர். அவர், தமிழில் அறிவியல் கட்டுரைகள் எழுதுவதற்கு ஒரு போட்டி வைத்தார். நானும் கலாமும் அதில் கலந்து கொண்டோம். கலாம் எழுதிய கட்டுரை ‘ஆகாய விமானம் கட்டுவோம்‘ என்பது. நான் எழுதியது ‘அனந்தம்‘ என்னும் Infinity Mathematics பற்றிய கட்டுரை. கலாமுக்குப் பரிசு கிடைத்தது. எழுதுவதுடன் நிறுத்தி விடவில்லை. பிற்காலத்தில் விமானம் என்ன, ராக்கெட்டே கட்டி முடித்தார்.

எம்.ஐ.டி-க்குப் பின் சில வருடங்கள் அவருடன் தொடர்பு இல்லை. இடைவருடங்களில் விக்ரம் சாராபாய் போன்றவர்களின் கண்காணிப்பில் அவர் வளர்ந்திருக்கிறார். நாசாவில் பயிற்சி பெற்றிருக்கிறார். கலாமை நான் பாரத் எலெக்ட்ரானிக்ஸில் சேர்ந்ததும் மீண்டும் வேலை தொடர்பாக சந்திக்க வாய்ப்புக்கள் கிடைத்தன. அவர் ஐ.எஸ்.ஆர்.ஓ-வின் ‘எஸ்.எல்.வி’ போன்ற ராக்கெட்டுகளின் வடிவமைப்பில் பங்கு கொண்டிருந்தார். அப்போதே கடினமான உழைப்பின் அடையாளங்கள் தெரிந்தன. கலாம், அரசாங்க ஏணியில் விரைவாக உயர்வார் என்பதை சுற்றுப்பட்டவர்கள் அப்போதே சொன்னார்கள். பின்னர் அவர் ஸ்பேஸ் டிபார்ட்மெண்டிலிருந்த ஐதராபாத் டி.ஆர்.டி.ஓ. நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்று இந்திய அரசின் ‘ப்ருத்வி’, ‘அக்னி’ ‘ஆகாஷ்’, ‘நாக்’ போன்ற ஏவுகணைகளின் வடிவமைப்பை வெற்றிகரமாகச் செய்து முடித்தார். அதன்பின் டெல்லியில் பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார். அரசின் மிகமிக தாமதமாகிவிட்ட எல்.சி.ஏ. விமானத்தை ஹாங்கரைவிட்டு வெளியே இழுத்து வந்து பறக்கவைத்ததில் கலாமின் பங்கு கணிசமானது.

எங்களுடன் அந்த பாட்ச்சில் எம்.ஐ.டி-யில் படித்த மற்றவர்களுடன் ஒப்பிட்டால் கலாமின் வளர்ச்சி பன்மடங்கானது. நாங்கள் யாரும் ‘பாரத ரத்னா’ ரேஞ்சுக்கு உயரவில்லை. கலாமின் வெற்றிக்கு முக்கியக் காரணம், செய்யும் தொழில் மேல் பக்தியும் அயராத உழைப்பும் தன்னம்பிக்கையும்தான்.

கலாம், டி.ஆர்.டி.ஓ-வில் இருந்தபோது  அவர் நடத்திய   ரெவ்யூ மீட்டிங்குகளில் கலந்து கொண்டிருக்கிறேன். மிகச் சுருக்கமாக இருக்கும். ஒரு குறிப்பிட்ட காரியம் நடந்ததா என்று அந்தந்த ப்ராஜெக்ட் லீடரைக் கேட்பார். தாமதமானால் கோபித்துக்கொள்ளவே மாட்டார். சத்தம் போட மாட்டார். எப்படியோ அவரிடம் கொடுத்த வாக்குத் தவறுவதில் சங்கடத்தை உண்டு பண்ணுவார். அவரே அவ்வளவு கடுமையாக 24/7/365 என்று வேலை செய்யும்போது மற்றவர்கள் அதற்கு ஈடுகொடுக்க வேண்டியது கட்டாயமாகியது. Leading by example.

அவருடைய சொந்தத் தேவைகள் எளிமையானவை. பிரம்மச்சாரி. சைவ உணவு. எந்தவிதக் கெட்ட பழக்கமும் கிடையாது. இதனுடன் ஆதாரமான முஸ்லீமின் நல்லொழுக்க குணங்களும் சேர்ந்து அவரை அத்தனை பெரிய பதவியின் சபலங்களிலிருந்து வெகு தூரம் தள்ளிவைத்தன. தெஹல்கா டேப்களில் கலாம் பெரிய இடத்து லஞ்சங்களுக்கு ஒரு பெரிய முட்டுக்கட்டையாகத்தான் குறிப்பிடப்பட்டிருக்கிறார்.

ஒரு சம்பவம் எனக்குத் தெளிவாக ஞாபகம் உள்ளது. ஐதராபாத்தில் அவருடன் ஒரு மீட்டிங் சென்றிருந்தபோது சில ரஷ்ய தொழில்நுட்பர்கள் வந்திருந்தார்கள். அவர்களுக்கு பஞ்சாரா ஓட்டலில் ஒரு டின்னர் இருந்தது. என்னையும் அழைத்திருந்தார். ரஷ்யர்கள் ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மகிழ்ச்சியில் இருந்தனர். கலாம் கையில் ஒரு வோட்காவைத் திணித்து வற்புறுத்தினார்கள். கலாம் எந்தவித லாகிரிப் பழக்கமும் இல்லாதவர். சங்கடத்துடன் அவசரமாக என்னை அணுகி ‘கையில என்ன?’ என்றார். ‘வாட்டர்.. ஜஸ்ட் வாட்டர் கலாம்’ என்றேன். ‘கொண்டா’ என்றார். நான் வைத்துக் கொண்டிருந்த கிளாசை மின்னல் வேகத்தில் பிடுங்கிக் கொண்டு வோட்கா கிளாசை என் கையில் திணித்தார்.

‘சாப்பிட மாட்டேன்னு சொன்னா அவங்களுக்குப் புரிய மாட்டேங்குதுய்யா…’ சற்று நேரத்தில் ‘சியர்ஸ்’ என்று வோட்கா கிளாஸ்களுடன் கலாமின் தண்ணீர் கிளாஸும் சேர்ந்து க்ளிங்கியது.

கலாமும் நானும் இணைந்து ஒரு புத்தகம் எழுத உத்தேசித்திருக்கிறோம். இந்திய ராக்கெட் இயல் பற்றித் திப்புசுல்தான் காலத்திலிருந்து ஆரம்பித்து எழுதலாம் என்றார். ‘நான் ரெடி…நீங்க ரெடியா கலாம்?’ என்று எப்போது பார்த்தாலும் கேட்பேன். ‘இதோ வந்து விடுகிறேன்…அடுத்த மாதம் துவக்கிடலாம்யா’ என்பார்.

இப்போது அவர் ஓய்வெடுத்த பின் அந்தப் புத்தகத்தை எழுதிவிடுவார் என்று எண்ணுகிறேன். இந்திய அரசும், அமெரிக்கப் பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் அரிமா ரோட்டரி சங்கங்களும் பள்ளிகளும் சமூக அமைப்புகளும் அவரை விட்டு வைத்தால்!

கற்றதும்... பெற்றதும்... (பாகம் 1)