Category Archives: Story

ராம நாம மகிமை!


ராம நாமம் அம்ருதம்; ராமாயணம் அம்ருதம்; ராமரே அம்ருதம். அதனால்தான், ‘ராமாம்ருதம்’ என்று பெயர் வைக்கிறார்கள். குடும்ப பந்தத்தில் உள்ளவர்கள் ராம நாமத்தைச் சொல்லி வந்தாலே பிறவிப் பெருங்கடலைக் கடந்து விடுவர்.

நாத பிரம்மம் ஸ்ரீதியாகராஜர் ராம நாமத்தை தினமும் உச்சரித்ததின் பலனாக ஸ்ரீராமரை தம் கண் எதிரே கண்டார். அவரது கீர்த்தனைகள் சரித்திரத்தில் அழியாப் புகழ் பெற்று அனைவராலும் பாடப்படுகின்றன.

சத்குரு கூறுகிறார், ஸ்ரீராமரின் கருணை பெற்றவன் பொய் சொல்ல மாட்டான். அற்பர்களிடம் ஒன்றையும் வேண்டமாட்டான். அரசர்களிடமே பணி செய்யமாட்டான். கதிரவனை வழிபட மறவான். புலால், மதுவை கைக்கொள்ள மாட்டான். பிறருக்கு துன்பம் விளைவிக்க மாட்டான். கற்ற கல்வியை மறக்க மாட்டான். நம்பிக்கை துரோகம் செய்யமாட்டான். ஜீவன்முக்தனானாலும் மகிழ்ச்சியை வெளியே காட்டிக் கொள்ள மாட்டான். சஞ்சல சித்தனாய், தன் ஆத்ம சுகத்தை இழக்க மாட்டான். இத்தனை தீவினைகளிலிருந்தும் காப்பாற்றும் உன் நாம மகிமையை நான் என்னவென்று சொல்வேன்” என்கிறார்.

ஓர் ஊரில் இரண்டு சகோதரர்கள் இருந்தனர். இதில் அண்ணனுக்கு கடவுள் பக்தி உண்டு. துறவியர், ஞானியர்க்கு உணவு தந்து உபசரித்து வந்தான். தம்பியோ, கடவுள் பக்தி அற்றவன். அவன் துறவிகளெல்லோரும் வேடதாரிகள் என்ற எண்ணம் கொண்டு அவர்களை வெறுத்தான்.

ஒரு முறை துறவி ஒருவர் சீடர்களுடன் இவர்கள் வீட்டுக்கு வருகிறார். அண்ணன் அவர்களை வரவேற்று உபசரிக்கிறான். தம்பியோ, ஓர் அறைக்குள் சென்று தாழிட்டுக் கொள்கிறான். துறவி, கதவைத் தட்டி அவனை வெளியே வரவழைக்கிறார்.

கோபமாக வெளியே வந்தவனின் கையை துறவி பலம் கொண்ட மட்டும் பிடித்துக் கொள்ள அவன் வலி பொறுக்காமல் கத்துகிறான். துறவி அவனிடம், ஒருமுறை மட்டும் நீ ராம என்று சொல், கையை விடுகிறேன்” என்கிறார். தம்பியும் வேறு வழியில்லாமல், ராம ராம” என்கிறான். கையை விட்ட துறவி அவனிடம், எந்தக் காலத்திலும் இந்த நாமத்தை யார் என்ன விலை கொடுத்தாலும் விற்காதே” என்று கூறிச் செல்கிறார்.

கால ஓட்டத்தில், தம்பி இறந்து விடுகிறான். யம தூதர்கள் அவனை யமதர்மரிடம் அழைத்துச் செல்ல, சித்ரகுப்தன் அவர் கணக்கைப் பார்த்துவிட்டு, இவன் நிறைய பாவம் செய்துள்ளான். எனவே, வெகு காலம் இவன் நரகத்தில் கிடந்து உழல வேண்டும். ஆனால், ஒரே ஒரு தடவை வேறு வழியின்றி ராம நாமத்தைக் கூறியுள்ளான். அதற்கான புண்ணியத்தை அனுபவித்து விட்டு பிறகு இவன் நரகம் செல்லட்டும்” என்கிறார்.

யமதர்மன் அவனிடம், நீ ஒரு தடவை ராம நாமம் சொன்னதற்கு உனக்கு என்ன வேண்டுமோ கேள்” என்கிறார். அப்போது அவனுக்குத் துறவி சொன்ன, ‘ராம நாமத்தை விற்கக் கூடாது’ என்ற வார்த்தை நினைவுக்கு வருகிறது. அவன், ராம நாமத்துக்கு என்ன மதிப்பு நீங்கள் வைத்து இருக்கிறீர்களோ அதைக் கொடுங்கள்” என்கிறான்.

யம தர்மனுக்கு ராம நாமத்துக்கு என்ன மதிப்பு எனத் தெரியவில்லை. எனவே, இந்திரனிடம் கேட் போம்” என்று கூறி அவனை அழைத்துச் செல்கிறார்.

அதற்கு அவன், நான் பல்லக்கில்தான் வருவேன். அதைத் தூக்குபவர்களில் நீங்களும் ஒருவராக இருக்க வேண்டும்” என நிபந்தனை விதிக்கிறான். யம தர்மனும், ‘ராம நாமத்தின் மதிப்பு அதிகம் போலும்’ என நினைத்து, பல்லக்கில் அவனை அமர வைத்து இந்திர லோகம் சுமந்து செல்கிறார்.

ராம நாம மதிப்பை அளவிட இயலாமல், இந்திரனும், பின் பிரம்மனும், சிவபெருமானும் திணறினர். அனைவரும், வைகுண்டம் சென்று, மகா விஷ்ணுவிடம், ராம நாமத்தின் மதிப்பை எங்களால் கூற முடியவில்லை. இந்தப் பல்லக்கில் இருக்கும் ஜீவன் ஒரே ஒருமுறைதான் ‘ராம நாமம்’ சொல்லி இருக்கிறது. அதற்கு என்ன புண்ணியம் தர வேண்டும் எனச் சொல்லுங்கள்” என்றனர்.

அதற்கு விஷ்ணு, இந்த ஜீவனை நீங்கள் பல்லக்கில் வைத்து சுமந்து வந்ததில் இருந்தே ராம நாம மகிமை விளங்கவில்லையா? ஒரு முறை சொன்னதாலே இவன் அரசனாகவும், நீங்கள் சேவகர்களாகவும் ஆகவில்லையா? எனக்கூறி, முக்தி கொடுத்தாராம்.

ஆம்! ராம நாமம் கூறுவதனால் தீய எண்ணங்கள் மறைந்து, நல்ல எண்ணங்கள் தோன்றும்.

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
ஜன்மமும் மரணமும் இன்றித் தீருமே இம்மையே
‘ராம’ என்றிரண்டெழுத்தினால்!

– கோ. மாலினி, தஞ்சாவூர் (கல்கி வழங்கும் தீபம் ஆன்மீக இதழில் இருந்து)

Advertisements

தத்துவ விசாரம் – உண்மையான பக்தி எது?


அர்ச்சுனனின் மனம் பாரதப் போரின் வெற்றியில் திளைத்துக் கொண்டிருந்தது.

“இதோ, இப்போதுகூட தெய்வம் என் அருகே அமர்ந்து கொண்டிருக்கிறது. என் பக்தியின் வலிமையே வலிமை. என்னைவிடக் கண்ணன் மேல் அதிக பக்தி செலுத்துபவர் யாராக இருக்கமுடியும்?”

“அப்படி நீயாக முடிவுசெய்து விட முடியுமா? உன்னைவிட என்மேல் கூடுதலாக பக்தி செலுத்துபவர்கள் உலகில் இருக்கக் கூடாதா என்ன?” என்று கண்ணன் கேட்டான்.

“என் மனதில் ஓடுகிற எந்தச் சிறு சிந்தனையையும் உடனே படித்துவிடுகிறானே கண்ணன்!” அர்ச்சுனன் திடுக்கிட்டான்.

“நீ என்னை மனத்தில் வைத்து பூஜிக்கிறாய் அர்ச்சுனா! உன் மனத்திலேயே இருக்கும் எனக்கு உன் சிந்தனைகளைக் கண்டுகொள்வது சிரமமா?” என்று கண்ணன் நகைத்தான்.

அர்ச்சுனனின் பக்தி சார்ந்த கர்வத்தை அடக்க கண்ணன் முடிவு செய்தான்.

“அர்ச்சுனா! நான் பெரிதும் மதிக்கும் எனது பக்தை பிங்கலை இங்கே அஸ்தினாபுரத்தின் அருகில் வசிக்கிறாள். அவளைச் சென்று சந்திப்போம் வா!” என்று கண்ணன் அழைத்தான்.

“இதே தோற்றத்தில் போனால் உன் உயிருக்கு ஆபத்து நேரலாம். நான் பெண்ணாக மாறுகிறேன். நீயும் என் தோழியாக மாறு!” என்றான்.

சற்று நேரத்தில் அரண்மனையிலிருந்து கண்ணனும் அர்ச்சுனனும் பெண்களாக மாறி வெளியே புறப்பட்டுச் சென்றனர்.

மூதாட்டியின் வீட்டில் மூன்று கத்திகள்

பிங்கலையின் வீட்டுக் கதவு தட்டப்பட்டது. தெய்வீக ஒளியுடன் ஒரு மூதாட்டி கதவைத் திறந்தாள்.

“தாயே! நாங்கள் அடுத்த ஊருக்குச் செல்வதற்காக நடந்துவந்தோம். கால்கள் வலிக்கின்றன. இங்கே சற்று இளைப்பாறி விட்டுச் செல்லலாமா?” என்று கேட்டான் கண்ணன்.

“உள்ளே வாருங்கள். நான் பூஜை செய்துகொண்டிருக்கிறேன். பூஜை முடிந்த பிறகு நீங்கள் உணவருந்திவிட்டுச் செல்லலாம்!” என்றாள் பிங்கலை .

பூஜையறையில் ஒரு பீடத்தில் கிருஷ்ண விக்கிரகமும், சிறியதாக ஒரு கத்தியும் நடுத்தர வடிவில் ஒரு கத்தியும், பெரியதாக ஒரு கத்தியும் இருந்தன. “தாயே! கிருஷ்ண விக்கிரகத்தோடு மூன்று கத்திகளையும் பூஜிக்கிறீர்களே? கத்திகள் யாருடையவை?” என்று கண்ணன் கேட்டான்.

“என்னுடையவைதான். வாய்ப்பு கிட்டும்போது கிருஷ்ணனுக்குக் கொடுமை செய்த என் விரோதிகளான மூவரைக் கொல்ல வேண்டும். அதன் பொருட்டுத்தான் இந்தப் பூஜை!”

“யார் அந்த விரோதிகள் தாயே?”

“குசேலன், பாஞ்சாலி, அர்ச்சுனன் மூவரும்தான். குசேலரைக் கொல்ல சின்னக் கத்தி. பாஞ்சாலிக்கு நடுத்தரக் கத்தி. மாவீரன் என்று தன்னைப் பற்றிப் பிதற்றிக் கொண்டு திரியும் அர்ச்சுனனைக் கொல்லத்தான் இந்தப் பெரிய கத்தி!”. அர்ச்சுனனுக்குத் தூக்கிவாரிப் போட்டது.

“அப்படி இந்த மூவரும் கண்ணனுக்கு என்ன கொடுமை செய்தார்கள் தாயே?”

“குசேலன் அந்தத் தவிட்டு அவலைக் கண்ணனுக்குக் கொடுக்கலாமா? என் கண்ணன் வெண்ணெய்யை விரும்பித் திண்பவன். வாய் உறுத்தாத ஆகாரம் அது. அவல் என் கண்ணனின் நீண்ட தாமரை இதழ்போன்ற நாவில் புண்ணைத் தோற்றுவிக்காதா? இந்த புத்திகூட இல்லாமல் பக்தி என்ற பெயரில் அவலை அவனுக்குக் கொடுப்பதாவது?”

“பாஞ்சாலி பாவம் பெண். அவள் எப்படி உங்கள் விரோதியானாள்?”

“கிருஷ்ணனிடம் புடவைகளைப் பெற்றாளே? துவாரகையில் இருக்கும் கண்ணன் அஸ்தினாபுரத்தில் இருக்கும் அவளுக்கு வாரி வாரிப் புடவைகளை அருளினானே? புடவைகளை இழுத்து இழுத்து துச்சாதனன் கைவலிக்க மயக்கம் போட்டு விழுந்தான் இல்லையா? புடவையை இழுத்த துச்சாதனனுக்கே கைவலிக்குமானால், புடவைகளை நிறுத்தாமல் தொடர்ந்து வழங்கிய கண்ணனுக்கு கை எவ்வளவு வலித்திருக்கும்? கண்ணனின் கைகளை வலிக்கச் செய்த பாஞ்சாலியைச் சும்மா விடுவேனா நான்?”

“அர்ச்சுனன் கண்ணனின் பக்தர்களிலேயே தலை சிறந்தவனாயிற்றே? அவன் மேல் ஏன் விரோதம்?”

“அர்ச்சுனனின் பக்தியை நீதான் மெச்சிக் கொள்ள வேண்டும். உண்மையான பக்தனாக இருந்தால் கை வலிக்க வலிக்கத் தேரோட்டச் சொல்வானா? குதிரைகளின் லகானை இழுத்து இழுத்துக் கண்ணன் கைகள் எத்தனை துன்பப்பட்டிருக்கும்? தேர்க் குதிரைகளை ஓட்டுவது சாமான்யமா? ஊரில் தேரோட்டிகளுக்கா பஞ்சம்? என் முன்னால் என்றாவது ஒருநாள் அகப்படுவான் அர்ச்சுனன். அன்று பார்த்துக் கொள்கிறேன் அவனை!”

அர்ச்சுனன் முந்தானையால் பதற்றத்தோடு நெற்றி வியர்வையைத் துடைத்துக் கொள்வதைப் பார்த்து நகைத்தான் கண்ணன்.

“தாயே! குசேலன் அறியாமல் செய்தான். அவனிடம் தவிட்டு அவலைத் தவிர வேறு பொருள் இல்லை. எந்தப் பிரதிபலனையும் அவன் எதிர்பார்க்கவும் இல்லை. கண்ணனாகத்தான் அவன் கேட்காமலே செல்வத்தைக் கொடுத்தான். சுயநலமற்றவன் என்பதால் குசேலனை மன்னித்து விடுங்களேன்”

பிங்கலை யோசித்தாள். பீடத்திலிருந்த சிறிய கத்தியைத் தூக்கி வீசினாள்.

அடுத்து கண்ணன் தொடர்ந்தான்.

பாஞ்சாலியை மன்னித்த பாட்டி

“பாஞ்சாலிக்குப் புடவை கொடுத்ததில் கண்ணன் கைகள் வலித்தது உண்மைதான். என்றாலும் ஒரு பெண்ணுக்கு மானம் மிகப் பெரிதல்லவா? அதைக் காத்துக்கொள்ள அவள் கொலைகூடச் செய்யலாம் என்று தர்ம சாஸ்திரங்கள் சொல்கின்றனவே? எனவே சுயநலமேயானாலும், மானம் காக்க வேண்டியதால் பாஞ்சாலியையும் மன்னித்து விடுங்களேன்!” என்றார்.

பிங்கலை இரண்டாவது கத்தியையும் கீழே வீசிவிட்டாள்.

“போரில் தனக்கு வெற்றி கிட்ட வேண்டும் என்னும் உலகியல் சார்ந்த சுயநலத்திற்காக கண்ணனைத் தேரோட்டச் செய்த அர்ச்சுனனை மட்டும் மன்னிக்கவே மாட்டேன். இந்தப் பெரிய கத்தி இந்தப் பீடத்திலேயே இருக்கட்டும்!” என்றாள்.

“சுயநலம் பிடித்த அர்ச்சுனனை நீங்கள் கொல்வது நியாயம் என்பதை நானும் ஒப்புக்கொள்கிறேன்,” என்றான் கண்ணன். அர்ச்சுனனுக்குத் தூக்கிவாரிப் போட்டது.

கண்ணன் நகைத்தவாறே பிங்கலையிடம் சொன்னான், “அர்ச்சுனன் கண்ணன் மனதைக் கவர்ந்து விட்டதால்தானே கைவலியையும் பொருட்படுத்தாமல் தேரோட்டினான்? அர்ச்சுனனை நீங்கள் கொன்றுவிட்டால், உற்ற நண்பனை இழந்து கண்ணன் வருந்துவானே? கண்ணன் வருந்துவது உங்களுக்குச் சம்மதம் தானா?”

“நீ சொன்ன கோணத்தில் நான் சிந்தித்துப் பார்க்கவில்லை. நீ சொல்வதும் சரிதான். எனக்கு இந்தப் பிறவியிலோ, மறுபிறவியிலோ எதுவும் வேண்டாம். முக்திகூட வேண்டாம். என் கண்ணன், உடல் வருத்தமோ மன வருத்தமோ இல்லாமலிருந்தால், அதுபோதும் எனக்கு. கண்ணனுக்கு மன வருத்தம் தரும் செயலை நான் செய்யமாட்டேன்.” என்று கூறிய பிங்கலை மூன்றாவது கத்தியையும் பீடத்திலிருந்து எடுத்துக் கீழே வீசினாள்.

பெண் வேடத்திலிருந்த அர்ச்சுனன், மூதாட்டி பிங்கலையை கீழே விழுந்து வணங்கியபோது அவன் ஆணவம் முற்றிலுமாக அழிந்திருந்தது.

–தமிழ் ஹிந்து

3-அண்ணாசாமிக்கு ஒரு கடிதம் – சுஜாதா


sujatha33siru-siru-kathaikal

இந்தக் கடிதக் கதையைப் பாருங்கள்:

அன்புள்ள அண்ணாசாமி அவர்களுக்கு…

எங்கள் அலுவலகத்தில் விசாரித்ததில் தாங்கள் இதுநாள் வரை உண்மை விரும்பி என்னும் எங்கள் பத்திரிகைக்கான சந்தாவை அனுப்பவில்லை என்று தெரிகிறது. கடந்த ஒன்பது மாதங்களாக தங்களுக்கு நாங்கள் இலவசமாக உண்மை விரும்பியை அனுப்பியுள்ளோம். இந்தக் கடிதம் கண்ட உடன் பத்திரிகைக்கான சந்தாவான ரூபாய் 30 மட்டும் இத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் சுயவிலாசமிட்ட, போதிய தபால்தலை ஒட்டிய உறையில் அனுப்பி, இந்த முக்கியமான பத்திரிகைக்கு ஆதரவளித்து இன்னும் ஒரு ஆண்டு பெறுவீர்கள் என நம்புகிறோம்.

‘உண்மை விரும்பி’ மற்றவர் வாழ்க்கையில் வேவு பார்க்க ஏற்பட்ட பற்பல சிறு கேமரா, மைக்ரோ மைக் போன்ற சாதனங்களை எளிமையாக விளக்குகிறது என்பது எங்கள் கடந்த இதழ்களைப் பார்வையிட்ட உங்களுக்குத் தெரிந்திருக்கும். வரும் இதழிலிருந்து ‘மனைவியர்’, ‘கணவர்களை வேவுபார்ப்பது’ பற்றிய சுவாரஸ்யமான தொடர் தொடங்க உள்ளது.

இதனால் உடனே செயல்பட்டு, உங்கள் பத்திரிகைக்கு சந்தா அனுப்புவீர்கள். தங்களுக்கு மீண்டும் நினைவுபடுத்தத் தேவையில்லை என்று நம்புகிறோம்.

இப்படிக்கு
துர்வாசா பப்ளிகேஷனுக்காக
சங்கரன் நடராஜன்

பின்குறிப்பு: சந்தா அனுப்புவதில்லை எனத் தீர்மானித்தால் இதே உறையில், என்ன காரணம் என்பதை கடிதமாகத் தெரிவித்தால், பத்திரிகையின் முன்னேற்றத்துக்கு எங்களுக்கு உதவியாக இருக்கும்.
– இவண் ச.ந.

தொடரும்…

photo (6)

 

2-அண்ணாசாமிக்கு ஒரு கடிதம் – சுஜாதா


sujatha33siru-siru-kathaikal

Love Letters‘ என்கிற நாடகம், ஆங்கிலத்தில் பிரசித்தமானது. ரிச்சர்ட் பர்ட்டன் உள்பட எல்லா பெரிய நடிகர்களும் இதில் வந்து நடித்துக் கொடுத்தார்கள். ஷபானா ஆஸ்மியும், நஸ்ருதீன் ஷாவும் அதை இந்தியில் ‘துமாரி அம்ருதா‘ என்று செய்திருக்கிறார்கள். ரிகர்சலே வேண்டாம். மாற்றி மாற்றி ஒருவருக்கொருவர் எழுதும் கடிதங்களைப் படித்துக்கொண்டிருக்க வேண்டும். கதை மெல்ல மெல்ல உருவாகும். இருவரும் காதலர்களாக இருந்து நிறைவேறாமல் தத்தம் வாழ்க்கைகளை அமைத்துக் கொண்டவர்கள். மேடையில் இரண்டு நாற்காலிகள் எதிர் எதிராக அல்லது அருகருகே போடப்பட்டு, அதில் வீற்றிருந்து படிப்பார்கள். கடைசியில் ஒரே ஒருமுறை நிமிர்ந்து பார்த்துக்கொள்வார்கள்.

தொடரும்…

photo (6)

3-சென்னையில் மேன் ஹாட்டன் – சுஜாதா


இதன் முந்தைய பகுதி…

மீண்டும் தூண்டில் கதைகள் - Meedum Thoondil Kathaigal

கடையில் பலகைகளை நீக்கித் திறக்கும்போது, டீக்கடைக்காரர் ஓரத்தில் கிடந்தவனைப் பார்த்தார். அரைமயக்கத்தில் இருந்தவரை ஆசுவாசப்படுத்தி உட்கார வைத்துப் பேச முடிந்ததும்,

“என்னங்க, இந்தாங்க டீ சாப்பிடுங்க. என்ன ஆச்சு. மூச்சு வாங்குது. தலைல ரத்தம் வருது.”

அவர் ஒரு வகையாகச் சுதாரித்துக் கொண்டு, “அந்தப் பொண்ணு, அந்தப் பொண்ணு” என்றார்.

“எந்தப் பொண்ணுங்க? இங்க யாரும் பொண்ணு இல்லையே.”

“ஐயோ எங்க கம்பெனி பொண்ணு ஒண்ணை, சில பசங்க சேர்ந்துகிட்டு கடத்திட்டுப் போக திட்டம் போட்டிருக்கிறதா செக்யூரிட்டிக்குத் தகவல் கிடைச்ச உடனே அனுப்பிச்சாங்க. அந்தப் பொண்ணை எச்சரிக்கை செய்யலாம்னு ஆட்டோ புடிச்சு ஓடியாந்தேன். சொல்றதுக்குள்ள தலைமேல கல்லைப் போட்டுட்டு ஓடிப் போயிருச்சுங்க.”

****

“ஏன் நிறுத்திட்டே?”

“அவங்களும் வரட்டும்.”

“யாரு?”

“மைக், மிக்கி, லென் எல்லாரும் வராங்க, ஸேரா.”

“சேஷாத்ரி என்னடா சொல்றே கடன்காரா!”

“நான் சேஷாத்ரி இல்லை. ஜார்ஜ். அமெரிக்காவில் இதெல்லாம் சகஜம்டி.”

–நிறைவடைந்தது.

மீண்டும் தூண்டில் கதைகள் - Meedum Thoondil Kathaigal

இறுதி வரி சொடுக்குத் திருப்பம் என்பது சுஜாதாவுக்கே உரித்தான அநாயாச உத்தி. அம்மாதிரிக் கதைகளாகவே குமுதத்தில் 1986-ல் ‘தூண்டில் கதைகள்’ எழுதி, வாசகர்களின் மனத்தைக் கொக்கி போட்டு ஈர்த்த சுஜாதா, 1995-ல் ஆனந்த விகடனில் ‘புதிய தூண்டில் கதைகள்’ கதைக்கொத்து எழுதிக் கொள்ளையடித்தார். பிறகு 2006-ல்மறுபடியும் குமுதத்தில், ‘மீண்டும் தூண்டில் கதைகள்’ என அவர் வாசகர்களை வசீகரித்து வாய் பிளக்க வைத்த பத்து கதைகள் இந்நூலில்.

2-சென்னையில் மேன் ஹாட்டன் – சுஜாதா


இதன் முந்தைய பகுதி…

மீண்டும் தூண்டில் கதைகள் - Meedum Thoondil Kathaigal

அதிகாலை அகல அலுமினிய பாத்திரங்களில் பால் பாக்கெட்டுகளை விதவைகள் சேகரித்துக் கொண்டிருந்த சமயம். மற்றபடி நடமாட்டமில்லை. சூரியன் தோன்றலாமா என்று யோசித்துக் கொண்டிருந்த நேரம். முதல் காகங்களும், அணில்களும் கூவத்தொடங்கிய வேளை.

சேஷாத்ரி சொன்ன ஸ்டாப்பில் அர்ச்சனா இறங்கியபோது யாரையும் காணோம். சட்டென்று மிகத் தனியாக உணர்ந்தாள். இந்த ஸ்டாப்பிலேயா இறங்கச் சொன்னான் என்ற சந்தேகம் வந்தது. ஒரு வேளை அவன் சொன்னது அடுத்த ஸ்டாப்போ? சரி அது வரை நடந்து போகலாம் அல்லது ஆட்டோ ஏதாவது வருமா பார்த்தாள். ஆட்டோ வந்து நின்றது. அதிலிருந்து ஒருவன் இறங்கினதும் ஆட்டோ விலகிச் சென்றது. இறங்கினவன் அவளை நோக்கி நடந்தான். இவனை எங்கே பார்த்திருக்கிறேன்? இவள் நடக்க அவனும் தொடர்ந்தான். ‘நில்லு’ என்றான். இவளுக்கு வயிற்றில் பயம் கவ்விக் கொள்ள, வேகமாக நடக்க, அவன் காலடிகள் கிட்டே வருவது கேட்டது.

“ச்சே எங்கே இந்த சேஷாத்ரி? என்ன முட்டாள் நான் ? அவனைப் பார்க்காமல் தனியே இறங்கியிருக்கக் கூடாது. இப்போ என்ன செய்வது?” அவன் ஏதோ சொல்கிறான். என்ன சொல்கிறான் என்று பீதியில் சரியாகப் புரியவில்லை. மிக அருகே வந்து விட்டான். சுற்றிலும் பார்த்தாள். எதிர்புறத்தில் சாலையோரம் வீடு கட்ட செங்கல் அளவில் கான்க்ரீட் ப்ளாக்குகள் இருந்தன.

“நில்லுன்னு சொல்றேன்ல” என்று அவன் சொல்லி முடிப்பதற்குள், அவைகளில் ஒன்றை எடுத்து அவன் மண்டை மேல் வீசி எறிந்தாள். அவன் அப்படியே தலையைப் பிடித்துக் கொண்டு சரிந்து விழுந்தான். அவள் ஓடத் துவங்கினாள். கொஞ்ச நேரம் ஓடினதும் அருகே மோட்டார் பைக் சத்தம் கேட்க சேஷாத்ரி.

“அப்பாடா… கடைசில வந்தே! எங்க போய்த் தொலைஞ்சே? ஒரு ஆளு ஒரு ஆளு என்னைத் துரத்திண்டு வந்து என்ன என்னவோ சொல்றான்.”

“என்ன சொன்னான்?”

“பயத்தில் ஏதும் புரியலை.”

“சரி விடு.”

“பாத்தா நம்ம கம்பெனி செக்யூரிட்டி ஆள் மாதிரி இருந்தான். பின்னாலேயே வந்தான். எனக்கு ரொம்ப பயம்மாய்டுத்து. மண்டைல ஒரு கல்லை எடுத்துப் போட்டுட்டு ஓடியே வந்துட்டேன்.”

“ஸேரா ஐ எம் எக்ஸ்ட்ரீம்லி ஸாரி, ஸாரி. நான் லேட்டா வந்தது தப்பு. இவ்வளவு அதிகாலை இந்த ஏரியாவுக்கு வரச் சொன்னது முட்டாள்தனம். இனிமே பயமில்லை பைக்ல ஏறிக்க.”

அவள் பைக்கில் ஏறிக்கொள்ள, பைக் சீறிப் புறப்பட்டது.

அன்புள்ள வாசகருக்கு, இந்தக் கதையை இந்த சுபமான இடத்தில் முடித்திருந்தேன். இதை அச்சேறுமுன் படித்துப் பார்த்த நண்பர், ‘அடிபட்ட ஆள் யார், அவன் என்ன ஆனான் என்பதைச் சொல்ல வேண்டும். அப்போதுதான் கதை முழுமை பெறுகிறது’ என்றார். அவர் சொன்னது சரிதான். சொல்லிவிடுகிறேன்.

இதன் இறுதிப்பகுதி விரைவில்…

மீண்டும் தூண்டில் கதைகள் - Meedum Thoondil Kathaigal

இறுதி வரி சொடுக்குத் திருப்பம் என்பது சுஜாதாவுக்கே உரித்தான அநாயாச உத்தி. அம்மாதிரிக் கதைகளாகவே குமுதத்தில் 1986-ல் ‘தூண்டில் கதைகள்’ எழுதி, வாசகர்களின் மனத்தைக் கொக்கி போட்டு ஈர்த்த சுஜாதா, 1995-ல் ஆனந்த விகடனில் ‘புதிய தூண்டில் கதைகள்’ கதைக்கொத்து எழுதிக் கொள்ளையடித்தார். பிறகு 2006-ல்மறுபடியும் குமுதத்தில், ‘மீண்டும் தூண்டில் கதைகள்’ என அவர் வாசகர்களை வசீகரித்து வாய் பிளக்க வைத்த பத்து கதைகள் இந்நூலில்.

1-சென்னையில் மேன் ஹாட்டன் – சுஜாதா


மீண்டும் தூண்டில் கதைகள் - Meedum Thoondil Kathaigal

இரவு பத்தரை மணிக்கு சொகுசுப் பேருந்து வந்தது. மெத்தை போட்டு உள்ளே குளிர்வித்த இருக்கைகளில் அத்தனை பெண்களையும், ஆண்களையும் வாரிச் சுருட்டிக் கொண்டு தரமணிக்கு விரைந்து, கால் சென்டரில் கொண்டு போய்க் கொட்டியது.

அர்ச்சனா கையெழுத்துப் போட்டு விட்டு உள்ளே போனாள். வெல்கம் அமெரிக்கா என்று அறிவித்தது வாசல்படி.

டயட் பெப்சி, கோக், கேக், சாண்ட்விச், பெர்கர், நொறுக்குத் தீனி சமாச்சாரங்கள் நிறைந்திருந்தன. கை துடைத்துக் கொள்ள காகிதக் குட்டைகள் இருந்தன. பெரிய கண்ணாடி ஜாடிகளில் டிகேஃப், ரெகுலர் என்று காபி சதா சூடாக இருந்தது. ஹாலில் வரிசையாக டெர்மினல்கள். அருகில் காதில் மாட்டிய ஹெட் செட், உதட்டருகே மைக் வைத்து கீ போர்டில் பெண் விரல்கள் விளையாடின.

சாம்சுப்பு என்று சட்டைப் பையில் பெயர் எழுதிய சூப்ரண்ட் மேசையில், சிறிய அமெரிக்கக் கொடி வைத்திருந்தது. “எல்லாம் படிச்சுட்டியாம்மா மனப்பாடமா?”

“ஆச்சு சார்.”

“கால் மீ சாம். எங்கே முதல் வாக்கியத்தைச் சொல்லு?”

“அஜாக்ஸ் கால் சென்டர். மே ஐ ஹெல்ப் யூ?”

“அஜாக்ஸ் இல்லை. ஏஜாக்ஸ். ஏ. ஏ. தமிழை மற முதல்ல.”

“ஏஜாக்ஸ்”

“மெல்லப் பேசு. அங்க இருக்கறவங்கல்லாம் பொழுது போகாத கிழங்க. ரொம்பத் தனிமையான மனுசங்க. பணம் வச்சிருக்கறவங்க. ஆனா அவங்கக் கிட்ட ஒரு கனெக் ஷனோ, க்ரெடிட் கார்டோ, ஒரு விடுமுறையோ விக்கறத்துக்குள்ளே தாவு தீர்ந்துடும். நூறு கேள்வி கேட்பாங்க. முதல்ல உயிரோட இருக்கார்னு ஊர்ஜிதப்படுத்திக்கணும். இப்ப அங்க விண்டர், விபூதி கொட்டற மாதிரி ஸ்னோ பொழியும். மைனஸ் பதினெட்டு டிகிரி. உம்பேர் என்ன?”

“அர்ச்சனா.”

அவர் விழிகள் கோபத்தில் விரிந்தன. “எத்தனை தடவை சொல்லியிருக்கேன். இந்தக் கட்டடத்துக்குள் வந்த உடனே உம்பேர் அர்ச்சனா இல்லை. ஸேரா. உன் மொழி அந்த ஐம்பது வாக்கியங்கள்தான். அதுக்கு மீறி ஏதும் பேசக் கூடாது.”

“சாரி சார்.”

“மறுபடியும் ‘சார்!’ அமெரிக்காவில் யாரும் யாரையும் சார்னு கூப்பிடமாட்டாங்க தெரியுமா? உச்சரிப்பு தவறக் கூடாது. ‘லாஃப்’னு சொல்லக் கூடாது. ‘லேஃப், ‘லேஃப்’ சொல்லு!

“லேஃப்” என்று பயத்துடன் சிரித்தாள்.

“தட்ஸ் பெட்டர்.”

“சீட்ல உக்கார். சேர்ந்து எத்தனை நாளாச்சு?”

“பதினைஞ்சு நாள் சார்.”

“பரவாயில்லை. சில பேர் ஒரு நாள்லேயே ஓடிப் போயிடறா. போட்டிக் கம்பெனிக்காரங்க அதிக சம்பளம் குடுக்கறேன்னு டெம்ப்ட் பண்ணுவாங்க. நம்ம கம்பெனி மாதிரி பெண்களுக்குப் பாதுகாப்பு எங்கேயும் கிடையாது. எதுவா இருந்தாலும் எங்கிட்ட சொல்லிட்டுப் போ. திடுதிப்புனு விலகக் கூடாது. ரைட்? ராத்திரி வீட்டுக்குப் போறப்ப செக்யூரிட்டி வரானோல்லியோ?”

டெர்மினலில் உட்கார்ந்து சாதனங்களை ஆபரணங்கள் போல மாட்டிக் கொண்டாள். திரையில் வரிசையாக எண்கள் தெரிந்தன. ஒவ்வொன்றாக கம்ப்யூட்டரே டயல் செய்து இணைத்து இவளிடம் கொடுத்தது. ஹாய் திஸ் இஸ் ஏஜாக்ஸ் கால்சென்டர். ஹவ் யு டுயின். என்ன பாஷை இது! எல்லாமே பொய், பெயர் பொய், தேசம் பொய், பேச்சு பொய், சம்பளம் மட்டும் நிஜம்.

ஜார்ஜ் மூன்றாவது க்யூபிகிள்ளிலிருந்து எழுந்து ஹாய் ஸேரா என்று கையசைத்தான். இயற் பெயர் சேஷாத்ரி.

“எனக்கென்னவோ இந்த வேலை பிடிக்கவே இல்லை அர்ச்சு. ராத்திரியெல்லாம் கண் முழிச்சா உடம்பு என்னத்துக்கு ஆறது. பகல்ல வேலை கிடைக்காதா? கண்ணெல்லாம் பாரு பொங்கிக் கிடக்கு.”

“பாரும்மா இந்தச் சம்பளம் கிடைக்காது. எல்லா சேஃப்ட்டியும் இருக்கு. செக்யூரிட்டி, எஸ்கார்ட் இல்லாம கடைசியா பெண்களைக் கொண்டு விடறுதுங்கற பேச்சே இல்லை. ஆம்பளைத் துணை இல்லாம அனுப்ப மாட்டா.”

“அதெல்லாம் சரிதான். அந்த ஆம்பளைத்துணையே.”

“பேக்கு மாதிரி பேசாதே. என் கூட வேலை செய்யற ‘கைஸ்’ (guys) எல்லாம் அப்பாவிங்க. நாங்க அவங்களை கலாட்டா செய்வோம். ஜார்ஜ் என்ன ஒரு மரியாதையா, பண்பாடா வெட்கப்பட்டுண்டு பேசறான், தெரியுமா?”

“வெள்ளைக்காரனா?”

“இல்லைம்மா, சேஷாத்ரீக்கு ஆஃபீஸ்ல ஜார்ஜ்னு பேரு. எல்லாருக்கும் வேற பேரு. என் பேரு ஸேரா.”

“என்ன எழவோ, எல்லாம் பொய்யா இருக்கு. எனக்கு எதுவும் பிடிக்கலை. சீக்கிரமா பகல் வேலையா பார்.”

“நமக்கு ராத்திரி, அவர்களுக்கு பகல்ம்மா. ஜெயந்தி கோர்ஸ் முடியற வரைக்குமாவது இருந்தாகணும்.”

“இந்தச் சம்பளம் பகல்ல கிடைக்காதா?”

“கிடைக்காதம்மா, பாதிதான் கிடைக்கும். ஜார்ஜ் கிட்டயும் சொல்லி வச்சிருக்கேன்.”

“என்ன ஜார்ஜோ, என்ன ஸேராவோ! எல்லாரையும் கிறிஸ்தவாளா மாத்தாம இருந்தா சரி.”

சொல்லி வைத்தாற் போல் வெள்ளிக்கிழமை ட்யூட்டி முடிந்ததும் சேஷாத்ரி, “உங்களுக்கு டே ஜாப் வேணுமா அர்ச்சனா?” என்று கேட்டான்.

“என்ன சம்பளம்?”

“இதே சம்பளம். இன் ஃபாக்ட் இதைவிட பெர்க்ஸ் அதிகம். மெடிகல் ரீ இம்பர்ஸ்மென்ட், பெட்ரோல் சார்ஜ்.”

“என்ன வேலை?”

ஒரு ஐடி கம்பெனியில் கஸ்டமர் கேர்ல கொஞ்சம் ஸ்மார்ட்டா இருக்கற பெண்ணா வேணும்னாரு. கம்பெனி பேர் கேட்டா அசந்துருவீங்க.”

சொன்னான். “சென்னையிலேயே பெரிய ஐடி கம்பெனி. இன்ட்ரஸ்ட் இருந்தா காலையில சென்மேரிஸ் ரோடில அவங்க ஆபீசுக்கு கூட்டிட்டுப் போறேன்.”

அவனை வாத்சல்யமாகப் பார்த்தாள்.

“சேஷாத்ரி உங்க உதவிக்கு நான் என்ன, அது என்ன?”

“கைம்மாறா? பேசப்படாது. உங்களுக்கு இஷ்டமிருந்தா, நேரமிருந்தா, ட்யூட்டி விட்டு காலைல வீட்டுக்குப் போறதுக்கு முன்னால, எங்க வீட்டுக்கு வந்து என் சிஸ்டரையும், அம்மாவையும் சந்திச்சா போதும். அதுவே பாக்கியம்.”

“எதுக்கு?”

“சும்மாத்தான். உங்களைப் பத்தி அவங்ககிட்ட சொல்லிருக்கேன். பார்க்க விரும்பறா. பயப்படாதீங்க.”

“ச்சே பயம்னு இல்லை. தயக்கம்தான்.”

“என்ன வர்றீங்களா?”

“இன்னிக்கா?”

“உங்களுக்கு சௌகரியப்படும்னா இன்னிக்கே. வெள்ளிக்கிழமை நல்ல நாள்.”

யோசித்தாள்.

“சரி அட்ரஸ் சொல்லுங்க.”

“அட்ரஸ் கண்டுபிடிச்சு மாளாது. நான் கூட்டிட்டுப் போறேன். வேளச்சேரி பஸ் ஸ்டாண்டுக்கு அடுத்த ஸ்டாப்ல இறங்கிடுங்க. நான் பைக்ல வந்து அழைச்சுட்டுப் போறேன். காலைல வர்றீங்களா?”

“சரி.”

இந்த மாதிரி நல்லவர்களும் இருக்கிறார்களா என்ன என்று எண்ணினாள். மனசுக்குள் சின்னதாக ஒரு படபடப்பு. ஏன் என்று புரியவில்லை. பயமா, எதிர்பார்ப்பா?

இதன் தொடர்ச்சி விரைவில்…

மீண்டும் தூண்டில் கதைகள் - Meedum Thoondil Kathaigal

இறுதி வரி சொடுக்குத் திருப்பம் என்பது சுஜாதாவுக்கே உரித்தான அநாயாச உத்தி. அம்மாதிரிக் கதைகளாகவே குமுதத்தில் 1986-ல்தூண்டில் கதைகள்’ எழுதி, வாசகர்களின் மனத்தைக் கொக்கி போட்டு ஈர்த்த சுஜாதா, 1995-ல் ஆனந்த விகடனில் ‘புதிய தூண்டில் கதைகள்’ கதைக்கொத்து எழுதிக் கொள்ளையடித்தார். பிறகு 2006-ல் மறுபடியும் குமுதத்தில், ‘மீண்டும் தூண்டில் கதைகள்’ என அவர் வாசகர்களை வசீகரித்து வாய் பிளக்க வைத்த பத்து கதைகள் இந்நூலில்.