Category Archives: Special Recipe

19-ருசியியல் சில குறிப்புகள்:திருப்தி என்பது பசியடங்கல் இல்லை!


ம்ஹும், இவன் சரிப்பட மாட் டான். நாக்குக்குச் சேவகம் பண்ணிக் கொண்டிருந்த பிரகஸ்பதி தேக சவுக்கியத்துக்கு உண்ணாவிரதம் இருப்பதைப் பற்றிப் பேச ஆரம்பித்து விட்டானே என்று நினைப்பீர்களானால் சற்று அவசரப்படுகிறீர்கள் என்று அர்த்தம். வேகம் குறைய ஆரம்பித்த கணிப்பொறியை ஃபார்மட் செய்து வேகம் கூட்டுவது போல, செயற்பாட்டு வீரியம் மட்டுப்பட்ட இல்லத்தரசி, அம்மா வீட்டுக்குப் போய்த் தங்கி சார்ஜ் ஏற்றி வருவது போல, காய்ந்த கண்டலேறில் கடல் மாதிரி பக்கத்து மாநிலத்து நதி பெருக்கெடுத்தாற்போல, ஒரு விரதமானது நமது ருசி நரம்புகளை எத்தனை உத்வேகத்துடன் தூண்டிவிடும் என்பதை லேசில் சொல்லிவிட முடியாது.

உடனே ஞாபகத்துக்கு வருகிற ஒரு சம்பவத்தைச் சொல்லிவிட்டு விஷயத்துக்கு வருகிறேன். சமீபத்தில் ஒருநாள் நான் விரதம் முடிக்கிற நேரம் வீட்டைவிட்டு வெளியே இருக்கும்படி ஆனது. வீடு ஒரு சவுகரியம். இஷ்டப்பட்ட மாதிரி என்ன வேண்டுமானாலும் செய்து சாப்பிடலாம். உண்ணுவதில் அளவு காக்க வேண்டிய அவசியம் கிடையாது. தவிர நமது மெனுவை முன்கூட்டித் தீர்மானித்து, அதற்கான அலங்கார விசேஷங்களை நாமே பார்த்துப் பார்த்துச் செய்து புசிக்கலாம். ஓட்டலுக்குப் போனால், பிரகஸ்பதி என்ன வைத்திருக்கிறானோ அதுதான். அது என்ன லட்சணத்தில் உள்ளதோ, அதுவேதான். இதனாலேயே பெரும்பாலும் என் உணவு வேளையை வீட்டில் உள்ளது போலப் பார்த்துக்கொள்வேன்.

அன்றைக்கு விதியானது என்னை வெளியே கொண்டுபோய்ப் போட் டது. சரி பரவாயில்லை; ஓட்டல்காரர்களும் ஜீவராசிகள்தானே; பேசி சரி செய்துகொள்ளலாம் என்று நினைத்து ஓர் உணவகத்துக்குச் சென்று உட்கார்ந்தேன். சப்ளையர் சிகாமணி வந்தார்.

‘‘சகோதரா, நான் சற்று வேறு விதமாகச் சாப்பிடுகிற வழக்கம் கொண்டவன். மிரளாமல் சொல்வதை முழுக்க உள்வாங்கிக் கொள். உன் ஓட்டலில் இன்றைக்கு என்ன காய்கறி, கூட்டு வகையறா?’’ என்று ஆரம்பித்தேன்.

அவன் முட்டை கோஸும் முருங்கைக் காய் கூட்டும் என்று சொன்னான்.

‘‘நல்லது. பனீர் புர்ஜி அல்லது பனீர் டிக்கா இருக்கிறதா?’’

‘‘புர்ஜி இல்லை. டிக்கா உண்டு’’ என்றான்.

‘‘நான் தனியாகக் காசு கொடுத்து விடுகிறேன். எனக்கு ஒரு ஐம்பது கிராம் வெண்ணெய் வேண்டும். கிடைக்குமா?’’

மேலும் கீழும் ஒரு பார்வை பார்த்தான். நான்மறைகளுள் ஒன்று கழண்டவன் என்று எண்ணியிருக்கக்கூடும். ‘‘கிடைக்கும்..’’ என்றான்.

‘‘அப்படியானால் ஒன்று செய். ஒரு பெரிய கப் நிறைய முட்டை கோஸ். இன்னொரு பெரிய கப்பில் முருங்கைக் கூட்டு. ஒரு கப் வெண்ணெய். ஒரு பனீர் டிக்கா. இவற்றோடு ஒரு கப் தயிர். இதை முதலில் கொண்டு வா’’ என்று ஆணையிட்டேன்.

‘‘சாப்பாடு?’’ அவன் சந்தேகம் அவனுக்கு.

இதுதானப்பா சாப்பாடு என்று சொல்லி அனுப்பிவிட்டுக் காத்திருந்தேன். சற்று நேரத்தில் முட்டை கோஸை முதலில் எடுத்து வந்து வைத்தான். அளவெல்லாம் போதுமானதுதான். ஆனால், அந்தத் தாவர உணவானது தனது தன் மென் பச்சை நிறத்தை முற்றிலும் இழந்து, மஞ்சள் பூசிக் குளித்துவிட்டு செங்கல் சுவரில் முதுகைக் கொண்டுபோய்த் தேய்த்த நிறத்தில் இருந்தது.

இந்த முட்டை கோஸ் ஒரு வினோதமான காய். குக்கரிலோ, மைக்ரோ வேவ் அடுப்பிலோ அதை வேகவைத்து விட்டால் தீர்ந்தது. நிறம் செத்துவிடும். என்னளவில் ஓர் உணவின் ருசி என்பது அதன் சரியான நிறத்துக்குச் சமபங்கு தருவது. உண்மையிலேயே, நிறமிழந்த காய்கறிக்கு ருசி மட்டு. மேலுக்கு நீங்கள் என்ன மசாலா போட்டு அலங்காரம் செய்தாலும் அது விளக்குமாத்துக் கட்டைக்குப் பட்டுக் குஞ்சலம் கட்டிய மாதிரிதான்.

இதை என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தபோது, உத்தமன் அந்த முருங்கைக் கூட்டைக் கொண்டுவந்து வைத்தான். அநியாயத்துக்கு அதன் மேற்புறம் சூழ்ந்த பெருங்கடலாக ஓர் எண்ணெய்ப் படலம். வடக்கத்திய சப்ஜி வகையறாக்களை எண்ணெயால் அலங்கரித்து எடுத்து வந்து வைப்பார்களே, அந்த மாதிரி. எனக்கு உயிரே போய்விடும் போலாகி விட்டது. ஏனென்றால் மூன்று அல்லது நான்கு பிறப்புகளுக்குத் தேவையான எண்ணெய் வகையறாக்களை உறிஞ்சிக் குடித்து முடித்துவிட்டு, இனி எண்ணெய் என்பதே வாழ்வில் இல்லை என்று முடிவு செய்து ஒன்பது மாதங்கள் ஆகின்றன.

ஆனாலும், என்ன செய்ய? அங்கு வாய்த்தது அதுதான்.

அடுத்தபடியாக பனீர் டிக்கா வந்தது. இந்த பனீர் டிக்காவில் சேர்மானமாகிற தயிரின் அளவு, தன்மை பற்றியெல் லாம் ஏற்கெனவே இங்கு சொல்லியிருக்கிறேன். மேற்படி உணவக மடைப் பள்ளி வஸ்தாதுக்கு பனீர் டிக்கா என்பது பனீரில் செய்யப்படுகிற பஜ்ஜி என்று யாரோ சொல்லியிருக்க வேண்டும். எனவே பனீரை வேகவைத்து, மிளகாய்ப் பொடி சேர்த்த தயிரில் நன்றாக நாலு புரட்டு புரட்டிக் கொடுத்தனுப்பிவிட்டார்.

மொத்தத்தில் அன்றெனக்கு வாய்த்தது பரம பயங்கரமான பகலுணவு. 24 மணி நேர விரதத்தை அப்படியே 48 மணி நேரமாக நீட்டித்துவிடலாமா என்று நினைக்க வைத்துவிட்டது. ஆனால், நான் கலைஞனல்லவா? கண்றாவிக் கசுமாலங்களுக்குக் கவித்துவப் பேரெழில் கொடுப்பது எப்படி என்று யோசிக்க ஆரம்பித்தேன்.

‘‘தம்பி, உங்கள் ஓட்டலில் சீஸ் இருக்குமா?’’

‘‘இன்னாது?’’

‘‘சீஸப்பா! பாலாடைக்கட்டி. துண்டுகளாகவோ கூழாகவோ அல்லாமல் ஸ்லைஸாக வரும். சாண்ட்விச்சில் உபயோகிப்பார்கள்.’

போய் விசாரித்துவிட்டு இருக்கிறது என்றான். ‘‘அப்படியானால் அதில் ஒரு ஏழெட்டு ஸ்லைஸ்கள் வேண்டும்’’ என்று வம்படியாகக் கேட்டு வாங்கினேன். வண்ணமிழந்த முட்டை கோஸைப் பிடிப்பிடியாக அள்ளி ஒவ்வொரு ஸ்லைஸுக்குள்ளும் வைத்து, பூரணக் கொழுக்கட்டை போலப் பிடித்தேன். சூப்புக்கு வைத்திருந்த மிளகுத் தூளை மேலுக்குக் கொஞ்சம் தூவி சாப்பிட்டுப் பார்த்தபோது பிரமாதமாக இருந்தது.

அதேபோல, அந்த எண்ணெய் முருங்கைக் கூட்டை ஒரு தட்டில் சுத்தமாக வடித்துக் கொட்டிவிட்டு 50 கிராம் வெண்ணெயை அதன் தலையில் கொட்டி, நன்றாகக் கலந்து உண்டு பார்த்தபோது இன்னொரு கப் கேட்கலாம் என்று தோன்றியது.

அந்தப் பனீர் டிக்காவைத்தான் பரதேசி கிட்டத்தட்ட வன்புணர்ச்சி செய்திருந்தான். சகிக்க முடியாத காரம் மற்றும் வாயில் வைக்கவே முடியாத அளவுக்கு உப்பு. ஒரு கணம் என்ன செய்யலாம் என்று யோசித்தேன். அதன் மீது படிந்திருந்த தயிர்ப் படலத்தை மொத்தமாக வழித்துத் துடைத்தெறிந்து விட்டு ஒரு அவகேடா ஜூஸ் வாங்கி (பட்டர் ஃப்ரூட் என்பர்) அதில் தோய்த்து உண்ண ஆரம்பித்தேன். எனக்கே சற்றுக் கேனத்தனமாகத்தான் இருந்தது. ஆனால், ஒரு நீண்ட விரதத்துக்குப் பிந்தைய அந்த உணவு கண்டிப்பாக எனக்கு ருசித்தாக வேண்டும். திருப்தி என்பது பசியடங்குவதில் வருவதல்ல. ருசி அடங்குவதில் மட்டுமே கிடைப்பது.

இதற்குள் ஓட்டலுக்குள் ஏதோ ஒரு வினோத ஜந்து நுழைந்துவிட்டது என்ற தகவல் பரவி பலபேர் நான் சாப்பிடும் சவுந்தர்யத்தை நின்று வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார்கள். இவனுக்கு என்னவிதமாக பில் போடுவது என்று ஓட்டல் நிர்வாகம் கூடி ஆலோசிக்கத் தொடங்கியது. நான் யாரையும் நிமிர்ந்து பார்ப்பதைத் தவிர்த்துவிட்டு, பரபரவென்று அனைத்தையும் உண்டு முடித்தேன். விரதம் முடித்ததல்ல என் மகிழ்ச்சி. மிக மோசமான ஓர் உணவை எளிய பிரயத்தனங்கள் மூலம் ருசி மிக்கதாக மாற்ற முடிந்ததே சாதனை.

இந்தப் பின்னணியை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். இப்போது முழு 24 மணி நேரம் உண்ணாதிருப்பது எப்படி என்று பார்த்துவிடலாம்.

-தமிழ் ஹிந்து நாளிதழில் வெளியான கட்டுரை

– மேலும் ருசிப்போம் | எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: writerpara@gmail.com

18-ருசியியல் சில குறிப்புகள்:அதெப்படி ஒருவேளை மட்டும் உண்டு வாழமுடியும்?


 இந்த எடைக்குறைப்பு என்பது ஓர் அகண்ட பரிபூரணானந்த லாகிரி. கொஞ்சம் ருசித்துவிட்டால் மனுஷனை ஒரு வழி பண்ணாமல் ஓயாது. நானெல்லாம் பிறந்தது முதலே அடை, வடை வகையறாக்களுடன் இடைவெளியின்றி உறவாடிய ஜந்து.

நடுவே இடை என்ற ஒன்றும் எடை என்ற மற்றொன்றும் இருப்பது பற்றியெல்லாம் எண்ணிக் கூடப் பார்த்தது இல்லை. விரோதிக்ருதுவில் ஆரம்பித்து ஹேவிளம்பி முந்தைய வருஷம் வரைக்கும் அங்ஙனமே இருந்துவிட்டு, சட்டென்று ஒருநாள் பார்த்து, எடையைக் குறைப்போம் என்று இறங்கினால் இப்படித்தான் ஏடாகூடங்களை எதிர்கொள்ள நேரிடும்.

’கார்ப் ஷாக்’ என்கிற தடாலடி ஒரு நாள் உணவு மாற்ற உற்சவத்தைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தேன். முழுநாள் உண்ணாவிரதம், மாவுச் சத்து மிக்க ஒரு முழு விருந்து, அதன்பின் மீண்டும் ஒரு முழுநாள் உண்ணாவிரதம் என்பது என் திட்டம். சரியாக இதனைச் செய்து முடித்தபின், அடுத்த நாள் காலை எடை பார்த்தால் கண்டிப்பாக இரண்டில் இருந்து மூன்று கிலோ வரை குறைந்திருக்கும் என்று வல்லுநர்கள் சொல்லியிருந்தார்கள்.

ஆனால், நான் எடை பார்த்தபோது தொள்ளாயிரம் கிராம் ஏறியிருந்தேன். குலை நடுங்கிவிட்டது. இதென்ன அக்கிரமம்! இந்த இயலின் ஆராய்ச்சியாளர்கள் இந்த கார்ப் ஷாக்கின் மூலம் எடைக் குறைப்பு நிச்சயம் நடக்கும் என்று சொல்லியிருப்பது உண்மையென்றால் எனக்கு எப்படி ஒரு கிலோ ஏறும்? எந்தக் கேடுகெட்ட சைத்தான் எனக்குள்ளே சென்று உட்கார்ந்துகொண்டு, இப்படியொரு போட்டி அதிமுக நடத்த ஆரம்பித்திருக்கிறான்? புரியவில்லை.

இதில் உச்சக்கட்ட வயிற்றெரிச்சல் ஒன்று உண்டு. என் நண்பர் ஈரோடு செந்தில்குமாரைப் பற்றி ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன் அல்லவா? தமிழகத்தில் அவரை விஞ்சிய கனபாடிகள் ஒருவர் இந்நாளில் இருக்க முடியாது. நமக்கெல்லாம் 192 என்றால் நோட்டுப் புத்தகம்தான் நினைவுக்கு வரும். அவர் எடையில் அந்த எண்ணை எட்டிப் பிடித்தவர். அவருக்கும் என்னைப் போல் ஒருநாள் இந்த எடைச் சனியனைக் குறைத்தால் தேவலை என்று தோன்றி, கொழுப்புணவுக்கு மாறி சர்வ அநாயாசமாக ஐம்பது கிலோ குறைத்தவர். அதோடு மனிதர் திருப்தியடைந்தாரா என்றால் இல்லை.

தனது ஸ்தூல சரீரத்துக்கு அந்த கார்ப் ஷாக் உற்சவத்தை அடிக்கடி கொடுத்துப் பார்க்க ஆரம்பித்தார். சென்றவாரம் நான் ’விளக்கு’ வாங்கிய அதே சமயம் செந்திலும் அந்தப் பரீட்சையில் இறங்கினார். ஆனால், அவர் என்னைக் காட்டிலும் பலமடங்கு வீரியம் மிக்க விரத பயங்கரவாதி. என்னால் 24 மணி நேரம் உண்ணாமல் இருக்க முடியும். அதன்பின் ஒரு பிரேக் எடுத்து சாப்பிட்டுவிடுவேன். செந்தில் 32 மணி நேரம் 48 மணி நேரமெல்லாம் தொடர் உண்ணாவிரதம் இருக்கக்கூடியவர். சரியாகச் சொல்வதென்றால் உண்ணுவதில் உள்ள அதே தீவிரம் அவருக்கு உண்ணாது இருப்பதிலும் உண்டு.

அப்பேர்ப்பட்ட மகானுபாவர் இம் முறை 72 மணி நேர உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்தார். முனிபுங்கவர் மாதிரி ஓரிடத்தில் அக்கடாவென்று உட்கார்ந்து கண்ணை மூடித் தவம் செய்வதென்றால் இப்படி உண்ணாதிருப் பது பெரிய பாதிப்பைத் தராது. அக்காலத்து முனிவர்களெல்லாமே இம்மாதிரி கொழுப்புணவு உண்டு, உடம்பைப் பசிக்காத நிலைக்குப் பழக்கிக்கொண்டுதான் தவத்தில் உட்காருவார்கள்.

நவீன உலகில் புருஷ லட்சணமாக உத்தியோகம் என்று என்னவாவது ஒன்றைச் செய்து தீர்க்க வேண்டியிருக்கிறதே? என் நண்பர், அதையும் செய்தபடிக்குத்தான் விரதமும் இருப்பார்.

இம்முறை அவர் தொடர்ந்து மூன்று தினங்களுக்கு எதுவும் சாப்பிடுவதில்லை என்று முடிவு செய்து அறிவித்தபோது முதலில் என்னால் அதை நம்ப முடியவில்லை. விரதம் என்றால் ஜீரோ கலோரி என்று அர்த்தம். போனால் போகிறதென்று ஒரு நாளைக்கு இரண்டு வேளை பால் சேர்க்காத, சர்க்கரை போடாத கடும் காப்பி வேண்டுமானால் அருந்திக்கொள்ளலாம். நூறு மில்லிக்கு ஒரு கலோரிதான் அதில் சேரும். அது நாலு முறை சுச்சூ போனால் சரியாகிவிடும்.

நான் சொன்னேன், இது உதவாது. விரத இலக்கணங்களை ஒழுங்காகக் கடைப்பிடித்தும் எனக்கு இந்த அதிர்ச்சி வைத்தியம் ஒத்துவரவில்லை. நாமெல்லாம் பிறவி கார்போஹைடிரேட் அலர்ஜியாளர்கள். ஒருவேளை அரிசிச் சோறு உண்டால்கூட ஒரு கிலோ ஏற்றிக்காட்டுகிற உடம்பை ஓரளவுக்குமேல் தேர்வு எலியாகப் பயன்படுத்தக்கூடாது.

அவர் கேட்கிற ஜாதியில்லை. திட்டப்படி 72 மணி நேர விரதத்தை நடத்தி முடித்தார். விரதம் முடித்தபோது அவர் சாப்பிட்டவை இவை: ஐந்து முட்டைகள், கால் கிலோ தந்தூரி சிக்கன், கால் கிலோ பார்பெக்யூ சிக்கன், கால் கிலோ க்ரில்டு சிக்கன், ஒரு ப்ளேட் பன்னீர் ஃப்ரை, பத்தாத குறைக்கு ஒரு எலுமிச்சை ஜூஸ்.

என்னடா ஒரே காட்டான் கோஷ்டியாக இருக்கிறதே என்று தோன்றுகிறதா? நண்பர் ஒரு காலத்தில் ஜீவகாருண்யவாதியாக இருந்தவர்தான். எடைக் குறைப்பில் தீவிரம் ஏற்பட்டதும் கன்வர்ட் ஆகிப் போனவர். அதை விடுங்கள். திட்டம் பலன் கொடுத்ததா? அதுதான் முக்கியம்.

விரதத்துக்குப் பிறகு மேற்படி அசாத் திய விருந்தையும் உண்டு முடித்து, மறுநாள் காலை எடை பார்த்திருக்கிறார். எடை மெஷின் சுமார் ஆறு கிலோ குறைத்துக் காட்டியிருக்கிறது!

ரொம்ப யோசித்த பிறகு, எனக்கு இதற்கு பதில் கிடைத்தது. உடம்பு வாகு என்று சொல்லுவார்கள். என்னதான் பிறந்தது முதல் உண்டு களித்த உணவினம் என்றாலும் எனது தேகமானது கார்ப் சென்சிடிவ் தேகம். காணாதது கண்ட மாதிரி ஒருநாள் உண்டு தீர்த்தாலும் கறுப்புப் பணம் சேர்த்துப் பதுக்கும் பரம அயோக்கியனைப் போல் உடம்புக்குள் ஒரு லாக்கர் திறந்து பதுக்க ஆரம்பித்துவிடுகிறது. இந்தத் தொல்லையில் இருந்து விடுபடத்தான், சேமிக்கவே தெரியாத கொழுப்புணவுக்கு மாறினேன். அதற்கொரு அதிர்ச்சி, அப்புறம் ஒரு முயற்சி என்று போங்காட்டம் ஆடினால் ஒரு கிலோ என்ன, ஒரு குவிண்டாலேகூட ஏறத்தான் செய்யும்.

செத்தாலும் இனி விஷப் பரீட்சைகள் கூடாது என்று அப்போது முடிவு செய்தேன். ஒரு நாளைக்கு மூன்றுவேளை முழு உணவும் முப்பது வேளை நொறுக்குணவும் தின்றுகொண்டிருந்தவன் நான். மேற்கு மாம்பலம் வெங்கடேஸ்வரா போளி ஸ்டாலுக்கு சாக்குப் பை எடுத்துச் சென்று கிலோ கணக்கில் இனிப்பு மற்றும் கார வகையறாக்களைக் கொள்முதல் செய்து வந்து வைத்துக்கொண்டு, ராத்திரி 10 மணிக்கு ஆரம்பிப்பேன்.

2 அல்லது 3 மணி வரை எனக்கு எழுதும் வேலை இருக்கும். எழுதிக்கொண்டே சாப்பிடுவேனா அல்லது சாப்பிட்டுக்கொண்டே எழுதுவேனா என்று சொல்லத் தெரியவில்லை. ஆனால், என்னைப் போல் விடிய விடிய உண்டு தீர்த்தவன் இன்னொருத்தன் இருக்க முடியாது.

அதிலிருந்து மெல்ல மெல்ல மாறத் தொடங்கி இன்று ஒரு நாளைக்கு ஒருவேளை மட்டுமே உணவு என்னும் நிலைக்கு வந்து சேர்ந்திருக்கிறேன். கடந்த ஒரு மாதமாகவே இப்படித்தான். மதியம் 1 மணிக்கு சாப்பிட்டால் அதோடு மறுநாள் மதியம் 1 மணிதான். நடுவே இரண்டு கறுப்பு காபி மட்டும் உண்டு. எடைக் குறைப்பு வெறி குறைந்துவிட்டது இப்போது. ஆனால், உடம்பு சிறகு போலாகி வருவதை உணர்கிறேன். பசி இல்லை. சோர்வில்லை. எவ்வித உபாதைகளும் இல்லை. நோயற்று வாழ இதுதான் ஒரே வழி.

அதெப்படி ஒருவேளை மட்டும் உண்டு வாழமுடியும்?

முடியும். பார்த்துவிடலாம்.

-தமிழ் ஹிந்து நாளிதழில் வெளியான கட்டுரை

– மேலும் ருசிப்போம் | எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: writerpara@gmail.com

17-ருசியியல் சில குறிப்புகள்:உடலைக் குறைக்க மேற்கொண்ட பிரயத்தனம்!


வேள்வி நடக்கிறபோது அசுரர்கள் அக்கிரமம் செய்து அதைக் கலைப்பார்கள் என்று கதை கேட்டிருக்கிறீர்களா? அப்படியொரு அசுரத்தனமான தாக்குதலுக்கு சமீபத்தில் இலக்காகிப் போனேன்.

அதற்கு முன்னால் அப்படியென்ன பெரிய வேள்வி இங்கே நடந்து வாழ்ந்தது என்பீரானால், இத்தொடரின் முதல் சில அத்தியாயங்களை மீண்டுமொருமுறை படித்துவிடவும். எனது எடைக்குறைப்பு நடவடிக்கைகளைப் பற்றிப் போதிய அளவுக்குச் சொல்லியிருக்கிறேன். மாவுச் சத்து குறைவான, கொழுப்பு அதிகமான உணவு வகைகளை உண்ணுவதன்மூலம் பிதுரார்ஜித சொத்தாக தேகத்தில் சேர்த்துவைத்த கெட்ட சரக்கையெல்லாம் அழித்தொழிக்கிற திருப்பணி.

இந்தக் குறை மாவு நிறைக் கொழுப்பு உணவு முறையில் இறங்கிய நாளாக நான் வழக்கமாக உண்ணும் சாப்பாட்டுப் பக்கம் ஒருநாளும் திரும்பியதில்லை. அதாவது, சாதம் கிடையாது. சாம்பார், ரசம் வகையறாக்கள் கிடை யாது. அப்பள இன்பம் இல்லை. அதிரச, தேன்குழல், அக்கார அடிசில் இல்லை. தானியமும் இனிப்பும் எந்த ரூபத்திலும் உள்ளே போகாத உணவு முறை இது. பால், தயிர், பன்னீர், வெண்ணெய், நெய், பாலாடைக்கட்டியென பிருந்தாவனத்துக் கிருஷ்ண பரமாத்மாவின் சமகால எடிஷனாக ஒரு வாழ்க்கை. அவ்வப்போது பாதாம்.எப்போதாவது பிஸ்தா. அளவின்றிக் காய்கறிகள். அதிகமாகக் கீரை இனம்.

இப்படிச் சாப்பிட ஆரம்பித்து ஒரு ஆறு மாத காலத்தில் இருபத்தி மூன்று கிலோ எடையைக் குறைத்திருந்தேன். எந்த குண்டோதரன் கண்ணைப் போட்டுத் தொலைத்தானோ தெரியவில்லை, திடீ ரென ஒரு கெட்ட நாளில் எடைக் குறைப்பானது நின்று போனது.

நானும் என்னென்னவோ செய்து பார்த்தேன். விரதங்கள், காலை நடை என்று வழக்கத்தில் இல்லாதவற்றையெல்லாம் கூட. ம்ஹும். பத்து காசுக்குப் பயனில்லை. நின்ற எடை நின்றதுதான். என்ன செய்யலாம் என்று யோசித்து, கொஞ்சம் உடல் அறிவியலைப் படித்துப் பார்த்தேன். பிறந்தது முதல் மாவுச் சத்து உணவை மட்டுமே உண்டு வருகிறவர்கள் நாம். சட்டென்று உடலுக்கு ஓர் அதிர்ச்சி கொடுத்து, மாவுப் பொருள்களைக் கணிசமாகக் குறைத்து, கொழுப்பில் உடலியந்திரத்தை இயக்க ஆரம்பித்தபோது எடை குறைந்தது. இதற்கு ஆன அவகாசத்தில் உடம்பானது கொழுப்புணவுக்குப் பழகிப் போய்விட்டிருக்கிறது.

எதுவுமே பழகிவிட்டால் ஒரு அசமஞ்சத்தனம் வரத்தானே செய் யும்? சம்சார சாகரம் சத்தம் போட்டால் கண்டுகொள்கிறோமா? மேலதிகாரி முகத்தில் விட்டெறிந்தால் பொருட்படுத்துகிறோமா? ஆனால் மதுக்கடை கள் மூடப்படுகிற சேதி வந்தால் அதிர்ச்சியடைந்துவிடுகிறோம். ஏனென்றால், அதெல்லாம் நடக்காது என்று நம்பிக்கொண்டிருக்கிறோம். நடக்க வாய்ப்பில்லாதவை நடக்கிறபோதுதான் அதிர்ச்சி என்ற ஒன்று தொக்கி நிற்கும்.

நிற்க. விஷயத்துக்கு வருகிறேன். நின்றுபோன எடைக்குறைப்பை மீண்டும் தொடங்குவதற்கு, உடம்புக்கு ஓர் அதிர்ச்சி கொடுத்தால் தப்பில்லை என்றார்கள் சில அற்புத விற்பன்னர்கள். அதாவது, எந்த மாவுச் சத்து மிக்க உணவை விலக்கி, கொழுப்பின்மூலம் எடையைக் குறைத்தேனோ, அதே மாவுச் சத்து உணவை மீண்டும் ஒருநாள் தடாலடியாக உண்பது. கொழுப்புக்குப் பழகிய உடலானது, இந்த திடீர் அதிர்ச்சியைத் தாங்காமல் கொஞ்சம் நிலை தடுமாறும். இன்சுலின் சுரப்பு மட்டுப்படும். ரத்த சர்க்கரை அளவு ஏறும். பழைய கெட்டத்தனங்கள் அனைத்தும் மீண்டும் தலையெடுக்கும்.

வா ராஜா வா என்று காத்திருந்து அனைத்தையும் உலவவிட்டு, தடாலென்று மீண்டும் அடுத்த நாள் கொழுப்புக்கு மாறும்போது உடலுக்கு அதிர்ச்சியின் உச்சம் சித்திக்கும். எனவே மீண்டும் எடைக்குறைப்பு நிகழ ஆரம்பிக்கும் என்பது இந்த இயலின் அடிப்படை சித்தாந்தம்.

செய்து பார்க்கலாம் என்று தோன்றியது. தோதாக வீட்டில் ஒரு விசேஷம் வந்தது.

எப்பேர்ப்பட்ட அபார விருந்திலும் சிந்தை குலையாதிருந்த தவ சிரேஷ்டன் அன்று தொந்திக் குறைப்பு அல்லது கரைப்பு நடவடிக்கைகளின் ஓரங்கமாகப் பண்டிகைச் சமையலை ஒரு கை பார்க்க முடிவு செய்தான்.

அன்றைய என் மெனுவில் மோர்க் குழம்பு இருந்தது. பருப்புப் போட்ட தக்காளி ரசம் இருந்தது. உளுந்து வடையும் அரிசிப் பாயசமும் இருந்தன. வாழைக்காய், பீன்ஸ் போன்ற நான் தொடக்கூடாத காய்கறிகள் இருந்தன. அனைத்துக்கும் மேலாக அப்பம் இருந்தது. வாழைப்பழ அப்பம். மெத்து மெத்தென்று அசப்பில் ஹன்சிகா மோத்வானியின் கன்னம் போலவே இருக்கும். அழுத்தி ஒரு கடி கடித்து ஆர அமர மெல்லத் தொடங்கினால் அடி நாக்கில் இருந்து நுனி வயிறு வரை ருசித்துக்கொண்டே இருக்கும். ஒரு காலத்தில் வெண்ணெய் தோய்த்து உண்ணும் அப்பத்துக்காகவே நான் கோகுலாஷ்டமியை மிகவும் விரும்புவேன். கிண்ணம் நிறைய வெண்ணெய் வைத்துக்கொண்டு, பத்துப் பன்னிரண்டு அப்பங்களைப் பொறுக்க தின்று தீர்ப்பது ஒரு சுகம். ஏப்பம் வரை இனித்துக் கொண்டிருக்கிற அற்புதம் வேறெந்தப் பலகாரத்துக்கும் கிடையாது.

ஆனால் எனது மேற்படி விஷப் பரீட்சை தினத்தில் நான் அப்பத்துக்கு வெண்ணெய் தொட்டுக்கொள்ளவில்லை. நெய் சேர்க்கவில்லை. கொழுப்புணவின் குலக் கொழுந்துகளான அவற்றை முற்றிலும் விலக்கி, எதெல்லாம் எனது உணவு முறைக்கு நேர் எதிரியோ அவற்றை மட்டுமே உண்ணுவதென்று முடிவு செய்திருந்தேன்.

முன்னதாக இந்தப் பரீட்சார்த்தக் கலவர காண்டத்துக்குத் தயாராகும் விதமாக இருபத்தி நான்கு மணிநேர உண்ணாவிரதம் இருந்தேன். தண்ணீ ரைத் தவிர வயிற்றுக்கு வேறெதையும் காட்டாமல் காயப் போடுதல் இங்கே அவசியமாகிறது. அது ஒரு பிரச்சினை இல்லை என்று வையுங்கள். கொழுப்புணவு உண்பவனுக்குப் பசி இருக்காது. விரதமெல்லாம் மிகச் சுலபமாகக் கைகூடிவிடும். சற்றும் சோர்வின்றி நாற்பத்தியெட்டு மணி நேரம், எழுபத்தி இரண்டு மணி நேரம் விரதமிருப்பவர்கள் எல்லாம் உண்டு. நான் இருந்தது வெறும் இருபத்தி நான்கு மணி நேர விரதம்தான்.

அந்த விரதத்தை முடித்துவிட்டு மேற்படி கார்போஹைடிரேட் விருந்துக்குத் தயாரானேன். முற்றிலும் மாவு. முற்றிலும் எண்ணெய். முற்றிலும் இனிப்பு வகைகள். எப்படியும் ஓர் அணுகுண்டு வெடித்த மாதிரி உடம்புக்குள் ஒரு பெரும் புரட்சி நடந்தே தீரும் என்று தோன்றியது. என்னவாவது நடந்து மீண்டும் எடை குறைய ஆரம்பித்தால் போதும் எம்பெருமானே என்று வேண்டிக் கொண்டு ஒரு கட்டு கட்ட ஆரம்பித்தேன். வடைகளையும் அப்பங்களையும் தாராளமாக உண்டேன். வாழைக்காயானது எனது பிராண சிநேகிதன். பல மாதங்களாக அதை நினைத்துக்கூடப் பாராதிருந்தேன். அன்றைக்கு காணாதது கண்டாற்போல் அள்ளி அள்ளி உண்டேன்.

எப்படியும் ஒரு மூவாயிரம் கலோரிக்கு உண்டிருப்பேன் என்று நினைக்கிறேன். மூச்சு முட்டி, போதும் என்று தோன்றியபோதுதான் நிறுத்தினேன். தண்ணீர் குடிக்கக்கூட இடமின்றி, தள்ளாடிச் சென்று அப்படியே படுத்துத் தூங்கியும் போனேன்.

ஆக, பரீட்சை எழுதியாகிவிட்டது. இனி இது பலன் தர வேண்டும்.

இந்தப் பரிசோதனையின் இறுதிக் கட்டம்தான் முக்கியமானது. இருபத்தி நான்கு மணி நேர முழு உண்ணாவிரதத்துக்குப் பிறகு மாவுச் சத்து மிக்க ஒரு விருந்தை உண்பதோடு இது முடிவதில்லை. அந்த விருந்துக்குப் பிறகு, தொடர்ச்சியாக இன்னொரு இருபத்தி நாலு மணி நேர உண்ணாவிரதம் தேவை. கொழுப்புணவில் இருக்கும்போது உண்ணாவிரதம் சுலபம். ஆனால் அரிசிச் சோறுக்கு அது ஆகாது. பசி வயிற்றை எரித்துவிடும்.

அப்படி எரிப்பதில்தான் காரிய சித்தி என்றார்கள் உத்தமோத்தமர்கள். என்ன கெட்டுப் போய்விடும்? சரி என்று அதையும் வெற்றிகரமாக நிறைவேற்றி முடித்தேன்.

அதன்பிறகு நடந்த கலவரத்தை அடுத்த வாரம் சொல்கிறேன்.

-தமிழ் ஹிந்து நாளிதழில் வெளியான கட்டுரை

– மேலும் ருசிப்போம் | எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: writerpara@gmail.com

16-ருசியியல் சில குறிப்புகள்-காரத்தின் கசப்பும், நடன சுந்தரியின் நளினமும்!


வட கிழக்கு மிளகாய் ரகங்களின் கவித்துவக் காரம் பற்றியும், எனது மராட்டியக் கவி நண்பருடன் மிஷ்டி தோய்க்கு மிளகாய் ஊறுகாய் தொட்டுச் சாப்பிட முடிவு செய்தது பற்றியும் சென்ற கட்டுரையில் சொல்ல ஆரம்பித்தேன் அல்லவா? அதை முடித்துவிடுவோம்.

சிவப்பு நாகா அல்லது பேய் நாகா என்று அழைக்கப்படுகிற நாகா ஜொலாகியா இனத்தில் அதைப் போலவே கொலைக்காரம் கொண்ட வேறு சில உப மிளகாய்கள் உண்டு. அந்த வங்காள நாடக சிரோன்மணி எங்களுக்குக் கொடுத்தனுப்பிய மிஜோரத்து ஊறுகாயானது அப்படியான மிளகாயில் போடப்பட்டது. அசப்பில் உறை ரத்தம் போலவே இருந்தது. மிளகாயும் மசாலாவும் சுமார் ஆறு மாதங்களாக ஊறிக்கொண்டிருப்பதாக நண்பர் சொல்லியிருந்தார். அது ஊற ஊறக் காரம் ஏறுகிற ரகம். வழக்கமாக நாம் ஊறுகாய் போடப் பயன்படுத்துகிற நல்லெண்ணெய் அதில் கிடையாது. பதிலாக, அடி நாக்கில் சற்றுக் கசப்பை ஏற்றிக்கொடுக்கிற கடுகு எண்ணெய்.

பொதுவாகவே காரத்தின் இடுப்பில் படிந்த கசப்பு, ஒரு நடன சுந்தரியின் நளினம் கொண்டது. தனியாக அதை உணர முடியாது. கண்ணீரின் உப்பைப் போன்றது அது. சாப்பிட்டு ஆனதும் காரம் அடங்கி, வியர்த்துக் கொட்டி, கொஞ்சம் கொஞ்சமாக நிதான நிலைக்கு வந்து சேரும்போது அடித் தொண்டையில் மிக மெலிதாகக் கசக்கும். நன்றாக இருக்கும்.

சில ரக மிளகாய்களுக்கு இயல்பிலேயே இந்த இடுப்பில் படிந்த கசப்புச் சுவை உண்டு. காரத்தின் வீரியத்தில் அது சட்டென்று தெரியாதே தவிர அதையும் இனம் கண்டு ஆராய்ந்து வைத்திருக்கிற பிரகஸ்பதிகள் இருக்கிறார்கள். மோரிச் என்று ஒரு மிளகாய் இருக்கிறது. இது பங்களாதேஷில் அதிகம் விளையும். பூட் ஜொலாகியா மிளகாய் இனத்தைச் சேர்ந்தது. இந்த மோரிச்சில் மேற்படி கசப்பு சற்று அதிகமாகவே உண்டு. கிழக்கு வங்காளத்துக் கிங்கரர்கள் இந்த மிளகாயைக் கூட்டு, பொரியல் செய்து சாப்பிடுவார்கள். அது வீரம் விளைந்த மண்ணோ இல்லையோ, காரம் விளைந்த மண். கிட்டத்தட்ட மரணத்தின் வாசல் கதவு வரை இழுத்துச் சென்று காட்டிவிட்டு வரக்கூடிய காரம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதை விரும்பிச் சமைத்து உண்கிறவர்களின் மனநிலையை ஆராய்ந்து பார்த்தால் என்னவாவது ஞானம் சித்திக்கலாம்.

இருக்கட்டும். நாம் மிஜோரத்து மிளகாய் ஊறுகாய்க்கு வருவோம். அது நாகா ஜொலாகியா அல்ல என்று நண்பர் சொல்லியிருந்தார். அந்த இனத்தைச் சேர்ந்த வேறு ஏதோ ஒரு மிளகாய். அவர் சொன்ன பெயர் இப்போது மறந்துவிட்டது. ஆனால் அதை ருசி பார்த்த அனுபவம் இந்த ஜென்மத்துக்கு மறக்காது.

குட்டிப் பானைகளில் மிஷ்டி தோய் வாங்கிக்கொண்டு ஊறுகாய் சகிதம் நானும் என் மராட்டிய நண்பரும் தங்கியிருந்த விடுதி அறைக்கு வந்து சேர்ந்தோம். உட்கார்ந்ததுமே ஒரு தட்டை எடுத்து வைத்து ஊறுகாய் கவரை அவிழ்த்துக் கொட்டினார் நண்பர்.

அடேய், இது தொட்டுக்கொள்ள மட்டுமே. அதற்கெதற்கு இவ்வளவு?

எப்படியும் ஒரு பத்திருபது பேர் தொட்டுக்கொண்டு சாப்பிடும் அளவுக்கு அதில் ஊறுகாய் இருந்தது. ஆனால் மராட்டிய சிங்கமோ தன் ஒருவனுக்கே அது போதாமல் போய்விடுமோ என்று அச்சப்படுவதாகத் தெரிந்தது. எனக்குப் பிரச்னை இல்லை. இயல்பிலேயே எனக்குக் காரம் ஒவ்வாது. சற்றே காரமான வத்தக் குழம்பு சாதம் சாப்பிட்டாலே கதறிக் கண்ணீர் விட்டுவிடுவேன்.

ஆனால் ருசி பார்க்கிற விஷயம் என்று வந்துவிட்டால் எனக்குக் கண்ணீர் ஒரு பொருட்டல்ல. அந்த மிஜோரத்து மிளகாய், மிஷ்டி தோயுடன் எப்படிச் சேரும் என்று அறியும் ஆவல் கட்டுக்கடங்காமல் இருந்தது. என்னைவிட என் நண்பருக்கு.

அவர்தான் ஆரம்பித்தது. முதலில் சுண்டு விரலால் கொஞ்சம் ஊறுகாயை வழித்தெடுத்து நாக்கில் தடவி சப்புக் கொட்டினார். அதன்மீது ஒரு ஸ்பூன் மிஷ்டி தோயைவிட்டு சேர்த்து மீண்டும் சப்புக் கொட்டினார். ஸ்ர்ர்ர்க்க்க்ஸ்ர்ர்ஸ்க்ற்ற்ற்க் என்று வினோதமாக ஒரு சத்தம் எழுப்பினார்.

‘என்ன?’

‘பிரமாதம். சாப்பிடு!’  நண்பர் கொடுத்த உற்சாகத்தில் நான் கொஞ்சம் ஊறுகாயை வழித்தேன். நாக்கருகே கொண்டு சென்றபோது கணப் பொழுது தயங்கினேன். சரித்திரப் புகழ் வாய்ந்த வடகிழக்குக் காரம். உள்ளுக்குள் ஒரு சிறு எச்சரிக்கை மணி அடித்தது. எதற்கும் இருக்கட்டும் என்று முதலில் அந்த இனிப்புத் தயிரை ஒரு ஸ்பூன் எடுத்து வாயில் விட்டேன். அதன்மீது ஊறுகாயைச் சேர்த்து, சற்றே பதம் பார்த்தேன்.

பரவாயில்லையே, அப்படியொன்றும் கொல்லும் காரமில்லையே என்று எண்ணி, அடுத்த முறை முதலில் ஊறுகாயை நாக்கில் தடவிக்கொண்டு அதன்மீது தயிரை விட்டேன். சப்புக்கொட்டி நன்றாக உண்டேன். இப்போதும் ருசிக்கத்தான் செய்தது.

‘அடேய் கவிஞா, நீ சொன்னது சரி. இனிப்புக்குச் சரியான துணை காரம்தான். இந்த வினோதக் கலவை அருமையாக இருக்கிறது!’ என்று மனமாரப் பாராட்டினேன். பரபரவென்று இருவரும் ஒரு குப்பித் தயிரை ஊறுகாய் சேர்த்து காலி செய்து முடித்தோம்.

இரண்டாவது தயிர்ப் பானையை எடுத்து வைத்தபோதுதான் விபரீதம் விளைந்தது. கவிஞனாகப்பட்டவன் இன்னொரு யோசனை சொன்னான். ஒரு ஸ்பூன் ஊறுகாயை அப்படியே எடுத்து அந்தக் குட்டிப் பானைத் தயிரில் கலந்துவிட வேண்டியது. பிறகு தயிரை ஸ்பூனால் எடுத்து உண்ணலாம்.

விதி யாரை விட்டது? ஒரு ஸ்பூன் என்றவன் சற்று தாராளமாகவே எடுத்துத் தயிரில் கொட்டிக் கலந்தான். அந்தக் கடும் சிவப்பும் தயிரின் பிரமாதமான மென்மையும் மணமும் சேர்ந்து நூதனமான ஒரு கிரக்கத்தைக் கொடுக்க, என்னை மறந்து அந்தப் பானையை அப்படியே வாயில் கவிழ்த்துக்கொண்டேன்.

அரை வினாடி. ஒரு வினாடி. ஒரு சில வினாடிகள்.

என் நாக்கு, கன்னத்தின் உட்பகுதிகள், தொண்டை, உணவுக் குழாயெங்கும் காரம் பரவி தீப்பிடிக்கத் தொடங்கியது. இனிப்புத் தயிர் எங்கே போனதென்றே தெரியவில்லை. தயிரின் இனிப்பைக் கொன்று காரம் அங்கு கோலோச்சத் தொடங்கிவிட்டது. ஆ, இது காரம் என்று உணர்வதற்கு முன்னால் அது காதுகள் வரை பாய்ந்து எரிய ஆரம்பித்தது. தாங்க முடியாமல் அலறத் தொடங்கினேன்.

கவிஞன் பயந்துவிட்டான். ஓடிச் சென்று எங்கிருந்தோ பாட்டில் பாட்டிலாக ஐஸ் வாட்டர் எடுத்து வந்து ஊற்றினான். நான் மிச்சமிருந்த எட்டு பானைத் தயிரையும் குடித்து, அதற்குமேல் சில குடங்கள் தண்ணீரையும் குடித்து, நாலு வாழைப்பழம் சாப்பிட்டு என்னென்னவோ செய்தும் அடங்கவில்லை. உடம்பெல்லாம் உதறி, வியர்த்துக் கொட்டி, இதயத் துடிப்பு எகிறிவிட்டது.

சுண்ணாம்புக் காளவாய்க்குள் உடலின் உள்ளுறுப்புகளைத் தோய்த்தெடுத்த மாதிரியே உணர்ந்துகொண்டிருந்தேன். ஜென்மத்துக்கும் மறக்காத காரம் அது.

முதலில் ருசித்த ஒரு சொட்டு ஊறுகாய்க்குப் பிறகு அதைச் சாப்பிடவே வழியற்றுப் போய்விட்ட அந்த மராட்டிய நண்பனிடம் மறுநாள் மன்னிப்புக் கேட்டேன். ‘உனக்கு ஒரு பானை தயிராவது நான் மிச்சம் வைத்திருக்கலாம்.’

‘அதனால் பரவாயில்லை. நேற்று நீ ஆடிய ஊழித்தாண்டவத்தைப் பற்றி ஒரு கவிதை எழுதியிருக்கிறேன். புரியாவிட்டாலும் பரவாயில்லை. படிக்கிறேன், கேள்!’

சிங்க மராட்டிய மொழி எனக்குத் தெரியாது. அவன் கவிதை நன்றாகத்தான் இருந்திருக்க வேண்டும். சொல்லாட்சியில் காரத்துக்கு நிகரான முரட்டுத்தனமும் தெரிந்தது. ஆனால் அந்தக் கடுகெண்ணெய் வாசனைதான் இல்லை.

-தமிழ் ஹிந்து நாளிதழில் வெளியான கட்டுரை

– மேலும் ருசிப்போம் | எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: writerpara@gmail.com

15-ருசியியல் சில குறிப்புகள்: ‘நாகா ஜொலாகியா’வில் போட்ட ஊறுகாய்!


தமிழனுக்குத் தமிழாசிரியர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட உணவுப் பொருள், ஊறுகாய். வினைத் தொகைக்கு இதைத் தவிர இன்னொரு உதாரணம் சொல்லக்கூடிய ஆசிரியர் யாராவது தென்பட்டால் விழுந்து சேவித்துவிடுவேன்.

நான் ஆறாங் கிளாஸோ, ஏழாங்கிளாஸோ படித்துக் கொண்டிருந்தபோது இதே வினைத் தொகைக்கு ஓர் உதாரணம் சொல்ல வேண்டிய சூழ்நிலை வந்தபோது சுடுகாடு என்று சொன்னேன். உத்தமோத்தமரான அந்தத் தமிழாசிரியர் அன்று முதல் என்னை ஓர் அகோரி மாதிரி பார்க்கத் தொடங்கினார். இதெல்லாம் செய்வினை செயப்பாட்டு வினையல்ல. கர்ம வினை!

கிடக்கட்டும். உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? ஈரேழு பதினான்கு உலகுக்கும் ஊறுகாயை அறிமுகப்படுத்தியது இந்தியாதான். மத்தியக் கிழக்கு மக்கள் பேரீச்சம்பழத்தில் ஊறுகாய் போட்டு அது ரொட்டிக்குச் சேராமல் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்த போது, ஐரோப்பிய தேசத்து காரப் பிரியர்கள் வெள்ளரிக்காயில் ஊறுகாய் போட்டுப் பரீட்சை பண்ணிப் பார்த்துக்கொண்டிருந்தபோது ஆப்பிள் பழத்தில், அன்னாசிப் பழத்தில், வாழைக்காயில் எல்லாம் ஊறுகாய் போட சீனர்களும் மங்கோலியர்களும் முயற்சி பண்ணிக்கொண்டிருந்தபோது, இந்தியர்கள்தாம் ஊறுகாய்க்கு உகந்த காய்களைக் கண்டறிந்து பேரல் பேரலாக ஸ்டாக் வைத்து சாப்பிட்டவர்கள். மா, நெல்லி, எலுமிச்சையெல்லாம் ஊறுகாய்க்கு என்றே அவதரித்த காய்கள் என்பது இந்தியர்களைத் தவிர மற்றவர்களுக்குப் பல காலம் வரை தெரியாது.

சரியாகச் சொல்லுவது என்றால் இயேசுநாதருக்கு ஆயிரத்தி எழுநூறு வருடம் மூத்தது இந்திய ஊறுகாய். மற்ற தேசத்தவர்களுக்கு இயேசு பிறந்து எழுநூறு எண்ணூறு ஆண்டுகளுக்குப் பிறகும் வெள்ளரிக்காய் ஊறுகாய் மட்டும்தான் தெரியும். நம்மாட்கள்தான் சிந்துவெளி நாகரிக காலத்தில் இருந்தே வினைத்தொகை ருசி கண்டவர்களாக இருந்திருக்கிறார்கள்.

இந்தக் கதை இப்போது எதற்கு என்பீர்களானால் ஒரு சங்கதி இருக்கிறது. எனக்கு ரொம்ப நாளாக ‘நாகா ஜொலாகியா’வில் போட்ட ஊறுகாயை ருசி பார்க்க வேண்டுமென்று ஓர் இச்சை.

இந்த நாகா ஜொலாகியா என்பது அஸ்ஸாமுக்கு அந்தப் பக்கம் மட்டும் விளைகிற ஒரு மிளகாய் ரகம். 2007-ம் ஆண்டு வரை உலகின் அதி பயங்கரக் கார மிளகாய் என்று அறியப்பட்டது இதுவே. (இப்போது ட்ரினிடாடில் விளைகிற ஏதோ ஒரு ரகம் இந்த இடத்தைப் பிடித்திருக்கிறது)

மேற்படி நாகா ஜொலாகியாவை சும்மா நாக்கோரம் வைத்துப் பார்த்தாலே நாலு நாளைக்கு கார்க் கழண்டு விடும் என்பார்கள். ஆனால் மேகாலயா, நாகாலாந்து பகுதிகளில் வசிக்கும் ஆதிகுடி மக்கள் இந்த மிளகாயில் ஊறுகாய் போட்டு பத்திரப்படுத்தி வைத்து சாதம் பிசைந்து சாப்பிடுவார்கள். கற்பனை செய்ய முடியாத உச்சக்கட்ட காரத்தில் அவர்களுக்கு போதை மாதிரியோ, ஞானம் மாதிரியோ என்னமோ ஒன்று அவசியம் கிடைக்கத்தான் வேண்டும். அது என்னவென்று தெரிந்துகொள்ளாவிட்டால் எப்படி?

நான் அஸ்ஸாமுக்குப் போனபோது அந்த அதிர்ஷ்டம் எனக்கு வாய்க்கவில்லை. இன்னொரு முறை அந்தப் பக்கம் போகிற வாய்ப்பும் கிடைக்கவில்லை. ஆனால், கொல்கத்தாவுக்கு ஒரு முறை போனபோது மேற்படி நாகா ஜொலாகியாவின் ஒண்ணுவிட்ட சித்தப்பா பையன் முறை வரக்கூடிய வேறொரு மிளகாயாலான ஊறுகாயை ருசி பார்க்க வாய்த்தது.

உண்மையில் கொல்கத்தாவில் நான் உண்ண விரும்பியது ரசகுல்லா உள்ளிட்ட வண்ணமயமான வங்காளி இனிப்புகளைத்தான். மிஷ்டி தோய் என்ற இனிப்புத் தயிர் அங்கே ரொம்பப் பிரபலம். ராத்திரி வேளைகளில் வீதியோரங்களில்கூடக் கிடைக்கும். சிறிய மண் குடுவைகளில் பனங்கற் கண்டு, ஏலம் மணக்கத் தோய்த்து வைக்கப்பட்ட கெட்டித் தயிர். ஒரு நாலைந்து சிறு பானைத் தயிர் குடித்து முடித்த பிறகு என்னுடன் வந்திருந்த நண்பர் (அவர் ஒரு மராட்டியக் கவிஞர்) சட்டென்று கேட்டார், ‘‘இந்த இனிப்புத் தயிருக்குக் காரசாரமாக மிளகாய் ஊறுகாய் தொட்டுச் சாப்பிட்டால் எப்படி இருக்கும்?’’

அசப்பில் கேனத்தனமான யோசனையாகத் தெரிந்தாலும் இம்மாதிரி கிறுக்குத்தனங்களில்தான் தரிசனம் மாதிரி என்னவாவது ஒன்று சித்தித்துத் தொலைக்கும்.

‘‘ஆனால் கண்டிப்பாக பாக்கெட் ஊறுகாய் கூடாது!’’ என்று சொன்னேன்.

‘‘வா என்னோடு’’ என்று என்னை உள் ளூர் இலக்கியப் பிரகஸ்பதி ஒருத்தரின் வீட்டுக்கு அழைத்துப் போனார்.

நான் தமிழன். நண்பரோ சிங்க மராட் டியர். நாங்கள் பார்க்கப் போன இலக்கியவாதியாகப்பட்டவர் ஒரு வங்காள நாடகாசிரியர். தெரியாத்தனமாக எங்களுக்கு அங்கே ஒரு விருது கொடுக்கக் கூப் பிட்டிருந்தார்கள். விருதுதான் கொடுத்து விட்டார்களே என்று, மூச்சு விட்டுக் கொண்டிருக்கிற சமயமெல்லாம் இலக்கிய விசாரம் மட்டுமேவா செய்து கொண்டிருக்க முடியும்? நமக்குப் பேரிலக்கியமானது நாக்கில் பிறந்து நெஞ்சில் நிறைவது. எழுதுவதெல்லாம் அதன் விளைவான சிற்றிலக்கியம் மட்டுமே.

எனது மராட்டிய நண்பரும் இந்த விஷயத்தில் என்னை மாதிரியான ஆசாமியாகவே இருந்தது எனக்கு வசதியாகப் போய்விட்டது. மேற்படி வங்கத்து நாடகாசிரியரின் வீட்டைத் தேடிக் கண்டுபிடித்து நாங்கள் கதவைத் தட்டியபோது மணி ராத்திரி ஒன்பது இருக்கும்.

‘‘வாருங்கள்’’ என்றார் வங்கத் தங்கம்.

‘‘உட்கார்ந்து பேச அவகாசமில்லை நண்பரே. படு பயங்கரக் காரத்தில் ஒரு மிளகாய் ஊறுகாய் வேண்டும். என்ன பிராண்ட் சரியாக இருக்கும்?’’ என்றார் மராட்டியக் கவிஞர்.

ஏற இறங்கப் பார்த்த நாடகாசிரியர், ‘‘பிராண்டெல்லாம் சரிப்படாது. ஒரு நிமிடம் இருங்கள்’’ என்று சொல்லிவிட்டு உள்ளே போனார். வீட்டுக்கு வந்திருக்கும் விருந்தாளிகளுக்கு என்ன கொடுப்பது என்று அவரது தர்மபத்தினி சிந்தனை வயப்பட்டிருக்க வேண்டும்.

‘‘அவர்களுக்குக் கொஞ்சம் ஊறு காய் வேண்டும்’’ என்றார் சிநேகித சிரோன்மணி.

குடிகாரப் பாவிகள் என்று அந்தப் பெண் தெய்வம் நினைத்திருக்கக்கூடும். என்ன செய்ய? ஆசை வெட்கம் மட்டுமல்ல; நளின, நாகரிக, நானாவித நாசூக்கு வகையறாக்களையும் சேர்த்து அறியாது.

கொஞ்சம் முறைத்துவிட்டு அந்தப் பெண் உள்ளே போனபோது நான் வங்காள நண்பரிடம் விளக்கம் சொன்னேன்: ‘‘இது சாராய சகாயத்துக்கல்ல. மிஷ்டி தோய்க்குத் துணையாகுமா என்று பரீட்சை செய்து பார்ப்பதற்காக!’’

அவரும் நம்பிய மாதிரி தெரியவில்லை. மராட்டியக் கவிஞனுக்கும் அது புரிந்திருக்க வேண்டும். ‘‘நண்பரே, இன்றிரவு நீங்களும் எங்களுடன் மிஷ்டி தோய் சாப்பிட வரவேண்டும். ஓரிரவில் ஓரண்டா அளவுக்குத் தயிர் குடித்து கின்னஸ் சாதனை செய்ய முடிவு செய்திருக்கிறோம்!’’

அவர் மறுத்துவிட்டார். ஆனால், அன்றைய எங்கள் இரவை வண்ண மயமாக்குவதற்கு அவசியமென நாங்கள் கருதிய மிளகாய் ஊறுகாய் கிடைத்துவிட்டது. ‘‘இது மிஜோரம் ஸ்பெஷல் ஊறுகாய். ரொம்ப காரம். அளவோடு சாப்பிடுங்கள்!’’

அவரது மாமியார் வீடு மிஜோரத்தில் இருந்ததோ என்னமோ. கபோதிகள் போயும் போயும் ராத்திரி வேளையில் வந்து ஊறுகாய் கேட்டு நிற்கிறார்களே என்ற வினோதக் கடுப்பில் ஒரு பாலிதீன் கவர் நிறைய ஊறுகாய் அடைத்துக் கொடுத்து அனுப்பிவைத்தனர் அந்த சதிபதியினர்.

ஊறுகாய் வந்துவிட்டது. அடுத்தது என்ன? அந்த இனிப்புத் தயிர்தான்.

நாங்கள் இருவரும் பலபேரிடம் விசாரித்து அலைந்து எஸ்பிளனேடிலேயே தலை சிறந்த மிஷ்டி தோய் கடை எது என்று தெரிந்துகொண்டு அங்கு சென்றோம். அரை ஜாண் உயரப் பானைகளுக்குள் அடைபட்ட தயிர். மேலே கோவணத்தில் பாதியளவு கொண்ட துணியால் இறுக்கிக் கட்டி யிருந்தது.

‘‘எத்தனை பானைகள் வாங்கலாம்?’’ என்றார் நண்பர்.

எனக்கு நாலு அவருக்கு நாலு என்று கணக்கிட்டு, கொசுறாக இரண்டு சேர்த்துப் பத்துப் பானை தயிர் வாங்கிக் கொண்டு அறைக்குத் திரும்பினோம்.

உண்மையில் அந்த இரவை என்னால் மறக்கவே முடியாது. உச்ச இனிப்பும் உச்சக் காரமும் இணைவது ஓர் உன்மத்த நிலை என்பதை அன்று அறிந்தேன். விரிவாக அடுத்த வாரம் எழுதுகிறேன்.

-தமிழ் ஹிந்து நாளிதழில் வெளியான கட்டுரை

– மேலும் ருசிப்போம் | எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: writerpara@gmail.com

img_0057

14-ருசியியல் சில குறிப்புகள்: திவ்யமான திருப்பதி லட்டு!


சென்ற கட்டுரையின் கடைசி வரியில் இரண்டு திருப்பதி லட்டுகளைப் பிடித்து உட்கார வைத்திருந்தேன். அதைச் சாப்பிட்டு முடித்த பிறகுதான் உண்டதெல்லாம் போதும் என்ற ஞானம் உதித்ததைச் சொன்னேன். திருப்பதி பெருமாள் கேட்டதெல்லாம் தருவார் என்பார்கள். திருப்பதி லட்டு கேட்காத ஒன்றைத் தரும் என்று அன்றுதான் எனக்குப் புரிந்தது. ஞானம் கிடக்கட்டும். அந்த லட்டைக் கொஞ்சம் பார்த்துவிடலாம்.

இந்தப் பூவுலகத்தில் கிடைக்கிற அத்தனை சுவைகளையும் ஒரு தட்டில் வைத்து எதிர்ப்புறம் ஒரு திருப்பதி லட்டை வைத்தால் நான் இரண்டாவதைத் தான் எடுப்பேன். இத்தனைக்கும் லட்டு என்பது எனக்கு அவ்வளவாகப் பிடிக்காத வஸ்து. சமூகத்தில் யாருக்குமே ருசியான லட்டு பிடிக்கத் தெரியவில்லை என்பது என் அபிப்பிராயம். அதுவும் கல்யாண வீட்டு லட்டு என்பது ஒரு காலக்கொடுமை. எண்ணெயில்தான் பொரிக்கிறானா, குரூடாயிலைக் கொண்டு கொட்டுகிறானா என்று எப்போதும் சந்தேகாஸ்பதத்தோடே அணுக வேண்டியிருக்கும். நிஜ லட்டின் ருசியானது மிகச் சில இடங்களில் மட்டுமே தரிசனம் கொடுக்கும். பெரும்பாலும் சேட்டுக் கடைகளில்.

அடிப்படையில் லட்டின் பிறப்பிடம் குஜராத் என்பது இதற்கொரு காரணமாக இருக்கலாம். அங்கே அதனை மோத்தி சூர் லாடு என்பார்கள். 12-ம் நூற்றாண்டு குஜராத்திய இலக்கியங்களில் ஆதி லட்டு பற்றிய குறிப்புகள் இருப்பதாகச் சொல்கிறார்கள். கடலை மாவு, சர்க்கரைக் கரைசல் (கம்பிப் பாகு பதம் முக்கியம்), நெய், திராட்சை, ஏலம், முந்திரி. அவ்வளவு தான். எளிய ஃபார்முலாதான் என்றாலும் செய்முறை அத்தனை எளிதல்ல.

இந்தக் கம்பிப் பாகு என்பது ஒரு பேஜார். கொஞ்சம் முன்னப்போனால் ஒட்டாது. அரை விநாடி தாமதித்து விட்டாலும் லட்டின்மீது ஓர் உப்பளம் ஏறி உட்கார்ந்துவிடும். லட்டில் சர்க்கரை படிவதென்பது பார்க்கக் கண்ணராவியான சங்கதி. அதைத் தின்று தீர்ப்பது அதைவிட ஆபாசம். (இதே ஆபாசம் பாதுஷாவிலும் அடிக்கடி நிகழும்)

ஒரு முறை பெங்களூருக்குச் சென்றிருந்தபோது எம்டிஆரில் சாப்பிட்டேன். அங்கிருந்த மாஸ்டர் ஒருத்தர்தான் அந்தப் பதத்தைப் பற்றிச் சொன்னார். சர்க்கரையைக் காய்ச்சும்போது மெல்லிய மெரூன் நிறத்துக்கும் முழுத் தங்க நிறத்துக்கும் நடுவே ஒரு பாதரச நிறம் சில விநாடிகளுக்கு வரும். அந்த நிறம் தென்பட்டதும் அடுப்பை அணைத்துவிட வேண்டும். லட்டுப் பாகுப் பதம் என்பது அதுதான். இந்தப் பதத்தின் சூத்திரதாரிகள் திருப்பதியில் இருக்கிறார்கள் என்பதும் அவர் சொன்னதுதான்.

உண்மையில் லட்டு கண்டுபிடிக்கப்பட்டு பல நூற்றாண்டுகளுக்குப் பிறகுதான் திருப்பதி லட்டு என்ற இனமே உருவானது. சரியாகச் சொல்லுவதென்றால் 18-ம் நூற்றாண்டு. அதற்கு முன்னால் வண்டிச் சக்கரம் மாதிரி பிரம்மாண்டமான வடைகளும் வெண் மற்றும் சர்க்கரைப் பொங்கலும்தான் திருப்பதி பிரசாதம். இப்போதும் உண்டென்றாலும் லட்டு பிறந்த பிறகு வடை, பொங்கல் வகையறாக்களின் மவுசு அங்கே குறைந்துவிட்டது.

திருப்பதியில் லட்டு பிடிப்பதற்கென தனியாக ஒரு சமையல்கூடம் இருக்கிறது. பொட்டு என்று அதற்குப் பேர். சம்பந்தமில்லாத யாரையும் அங்கே உள்ளே விட மாட்டார்கள். முன்னொரு காலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் தான் இந்த லட்டு பிடிக்கும் ஜோலி பார்த்தார்கள். இப்போது அதெல்லாம் கிடையாது. தினசரி 7 ஆயிரம் கிலோ கடலை மாவு, 10 ஆயிரம் கிலோ சர்க்கரை, 700 கிலோ முந்திரி, 400 லிட்டர் நெய் என்று புழங்குகிற பேட்டைக்கு எத்தனை பேர் இருந்தால் கட்டுப்படியாகும் என்று யோசிக்க ஆரம்பித்தால் லட்டை மறந்துவிடுவோம்.

நமக்கு நபர்களா முக்கியம்? அந்த லட்டு எப்படி அத்தனை ருசிக்கிறது என்று தெரிந்துகொள்ள ஒரு காலத்தில் ரொம்ப மெனக்கெட்டிருக்கிறேன். பெரும் போராட்டத்துக்குப் பிறகுதான் பதில் கிடைத்தது.

குஜராத்திக்காரர்கள் உட்பட லட்டு செய்வோர் அத்தனை பேரும் பொதுவாக பூந்தியை எண்ணெயில் பொரித்தெடுத்து சர்க்கரைப் பாகில் போடுவார்கள். திருப்பதிக்காரர்கள் கொஞ்சம் வேறு மாதிரி. அவர்கள் பூந்தி பொரிப்பதற்கே நெய்யைத்தான் உபயோகிக்கிறார்கள். தவிர ஒரு ஈடு பூந்தி எடுத்தாகிவிட்டால் மறுகணமே அடுப்பில் காயும் நெய்யை எடுத்துக் கீழே கொட்டிவிடுவார்கள். நெய்யாகப்பட்டது கொஞ்சம் கிறுக்குத்தனம் கொண்ட வஸ்து. கொஞ்சம் காய்ந்ததுமே அதன் வாசனை மாறத் தொடங்கி விடும். வாசனை மாறிய நெய் என்பது பொய்யே அன்றி வேறில்லை.

திருப்பதியிலேயே தாயார் சந்நிதி லட்டுக்கும் மலை மீதிருக்கும் பெருமாள் கோயில் லட்டுக்கும் வித்தியாசம் உண்டு. எல்லாம் சேர்மான சதவீத மாறுபாடுகளால்தான்.

ஆச்சா? இப்போது விஷயத்துக்கு வருகிறேன். எனக்கு மிகச் சிறு வயதுகளில் இருந்தே திருப்பதி லட்டென்றால் ரொம்ப இஷ்டம். இதற்குக் காரணம் என் அப்பா.

எனக்கு நினைவு தெரிந்த நாளாக என் அப்பா ஒரு சர்க்கரை நோயாளி. என்னை மாதிரி உத்தம புத்திரர்கள் அவருக்கு மூன்று பேர் உண்டு. மூன்று உத்தமன்களை ஒழுங்காக வளர்க்கத் தான் முதலில் நன்றாக இருக்கவேண்டும் என்று முடிவு செய்து, அவர் சர்க்கரை சாப்பிடுவதை விட்டார்.

விட்டார் என்றால், முழுமையாக விட்டார். எப்பேர்ப்பட்ட மேனகை ஊர்வசியும் அவரைச் சலனப்படுத்திவிட முடியாது. காப்பிக்குச் சேர்க்கிற சர்க்கரை முதல் பொங்கல் பண்டிகைக்குச் செய்கிற அக்கார அடிசில் வரை எதையும் தொட்டுக் கூடப் பார்க்க மாட்டார். எனக்குத் தெரிந்து சுமார் 40 வருடங்களாக இனிப்பு என்பதை எண்ணிக்கூடப் பார்க்காத ஒரு ஜென்மம் உண்டென்றால் இந்த உலகில் அது அவர் மட்டுமாகத்தான் இருப்பார்.

அப்பேர்ப்பட்ட பராக்கிரமசாலிக்கு ஒரே ஒரு பலவீனம் உண்டு. யாராவது திருப்பதி லட்டு என்று சொல்லிக் கொடுத்தால் மட்டும் ஒரு சிட்டிகை விண்டு வாயில் போட்டுக்கொள்வார். ஒரு சிட்டிகையில் என்ன கிடைத்துவிடும்? பிரசாதம் என்று புருடா விட முடியாது. ஏனென்றால் மற்ற கோயில் பிரசாதங்களையெல்லாம் அவர் சீந்தக்கூட மாட்டார். திருப்பதி லட்டென்றால் மட்டும் ஒரு சிறு விள்ளல்.

இதற்கு என்ன காரணம் என்று பல முறை யோசித்துப் பார்த்திருக்கிறேன். அதன் ருசியைத் தவிர இன்னொன்று தோன்றியதில்லை. பிரச்சினை என்னவென்றால் அவரால் அந்த ஒரு சிறு விள்ளலில் அந்த ருசியின் பூரணத்தைப் பெற்று விட முடிந்தது. எனக்கு ஒன்று இரண்டு மூன்று என்று லைன் கட்டி வைத்து முழுக்கத் தின்று தீர்த்தாலும் அரைத் திருப்திதான் வரும். தனிப்பட்ட முறையில் இது எனக்குப் பெரிய தோல்வி என்று தோன்றும். பன்னெடுங்காலம் போராடிப் பார்த்தும் என்னால் அந்த ஒரு துளி உலகை வெல்ல முடியவில்லை.

ஒவ்வொரு முறை திருப்பதி லட்டு உண்ணும்போதும் எனக்கு இந்த ஞாபகம் வந்துவிடும். சட்டென்று சுதாரித்துக் கொண்டு, ‘இன்றைக்கு ஒரு விள்ளலோடு நிறுத்திக்கொள்ளப் போகிறேன்’ என்று எனக்குள் சொல்லிக்கொள்வேன். ஆனால் ஒருநாளும் முடிந்ததில்லை. அது நப்பாசை அல்ல. பகாசுரத்தனமும் அல்ல. உணவின் ருசியை ஒரு வேட்டை நாய்போல் அணுகும் விதத்தின் பிரச்சினை என்று தோன்றியது.

நீங்கள் அணில் சாப்பிடும்போது பார்த்திருக்கிறீர்களா? யாரோ கொள்ளையடித் துப் போய்விடுவார்கள் என்ற அச்சத்துடனேயேதான் அது சாப்பிடும். உண்பதில் அதன் வேகமும் தீவிரமும் வேறு எந்த உயிரினத்துக்கும் கிடையாது. ஆனால் ருசிகரம் என்பது தியானத்தில் கூடுவது. பண்டத்தில் பாதி, மனத்தில் பாதியாக இரு தளங்களில் நிற்பது. இதைப் புரிந்து கொண்டதால்தான் என் அப்பாவால் ஒரு விள்ளல் லட்டில் பரமாத்மாவையே தரிசித்துவிட முடிந்திருக்கிறது.

அது விளங்கியபோதுதான் என்னால் அனைத்தையும் விட்டொழிக்க முடிந்தது.

-தமிழ் ஹிந்து நாளிதழில் வெளியான கட்டுரை

– மேலும் ருசிப்போம் | எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: writerpara@gmail.com

img_0057

13-ருசியியல் சில குறிப்புகள்: நல்ல உணவா… நாராச உணவா?


இன்றைக்குச் சுமார் 9 ஆண்டுகளுக்கு முன்புவரை உணவைப் பற்றிய எனது புரிதல் ஒற்றைப் பரிமாணம் கொண்டதாக மட்டுமே இருந்தது. அதாவது, உணவு என்பது நாவை சந்தோஷப்படுத்தி, வயிற்றில் சென்று சேருகிற வஸ்து. அது நல்ல உணவா… நாராச உணவா? உடம்புக்கு ஒத்துக்கொள்ளுமா… கொள்ளாதா? நமக்கு ஏற்றதா… இல்லையா? இது அவசியமா, பிந்நாளைய உபத்திரவங்களுக்கு அச்சாரமா என்றெல்லாம் யோசித்தே பார்க்க மாட்டேன். எந்தப் பேட்டையிலாவது என்னவாவது ஒரு பலகாரம் பிரமாதமாக இருக்கிறது என்று யாராவது சொன்னால் போதும். உடனே என் மூஞ்சூறு வாகனத்தை எடுத்துக்கொண்டு கிளம்பிவிடுவேன்.

ருசி மிகுந்த ஒரு மலாய் பாலை அருந்துவதற்காக தர்ம க்ஷேத்திரமாம் குரோம்பேட்டையில் இருந்து புறப்பட்டு ஒன்றரை மணி நேரம் பயணம்செய்து மண்ணடியை அடைவேன். குறிப்பிட்ட சேட்டுக்கடையானது விளக்கு வைத்து ஓரிரு மணிநேரங்களுக்குப் பிறகே திறக்கப்படும். அதன் பிறகு விறகடுப்பை மூட்டி அண்டாவில் பாலைக் கொட்டி அதன் தலைமீது வைத்துக் காயவிட்டு, அவர் வியாபாரத்தைத் தொடங்க அநேகமாக ஒன்பதரை, பத்து மணியாகிவிடும். ஜிலேபி, கலர் பூந்தி, பால்கோவா என்று அந்தக் கடையில் வேறு சில வஸ்துக்களும் கிடைக்குமென்றாலும் அங்கே மொய்க்கிற கூட்டமெல்லாம் அந்த மலாய் பாலுக்காகத்தான் வரும்.

எனக்குத் தெரிந்து பாலில் உண்மையிலேயே சுத்தமான காஷ்மீரத்துக் குங்குமப்பூ சேர்த்த ஒரே நல்ல சேட்டு அவர்தான். ஏலக்காய் போடுவார். சிட்டிகை பச்சைக்கற்பூரம் போடுவார். முந்திரி பாதாம் பிஸ்தா வகையறாக்களைப் பொடி செய்து போடுவார். கொஞ்சம் மஞ்சள் தூள் சேர்ப்பார். இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல உலர்ந்த வெள்ளரி விதைகளை ஒரு தகர டப்பியில் இருந்து இரு கைகளாலும் அள்ளி அள்ளி எடுத்து அதன் தலையில் கொட்டுவார்.

மேற்படி சேர்மானங்களெல்லாம் ஜீவாத்ம சொரூபம். பாலானது பரமாத்ம சொரூபம். இரண்டும் உல்லாசமாக ஊறியபடிக்கு விசிஷ்டாத்வைதபரமாக விறகடுப்பில் கொதித்துக் கிடக்கும். சேட்டானவர் ஐந்து நிமிடங்களுக்கு ஒருமுறை ஒரு பெரிய கரண்டியைப் போட்டு நாலு கிளறு கிளறிவிடுவார். பிராந்தியத்தையே சுண்டி இழுக்கிற மணம் ஒன்று அதன்பின் வரும். அப்போதுதான் வியாபாரம் ஆரம்பமாகும்.

அந்த மலாய் பால், ஒருவேளை முழு உணவை நிகர்த்த கலோரி மிக்கது என்பதறியாமல், மூக்குப் பிடிக்கச் சாப்பிட்டுவிட்டு அந்தப் பாலுக்காகப் போய் நிற்பேன். அது ஒரு காலம்.

மேற்படி மண்ணடி சேட்டு மலாய் பால், கற்பகாம்பாள் மெஸ் ரவா ரோஸ்ட், மைலாப்பூர் ஜன்னல் கடை பொங்கல் வடை, வெங்கட்ரமணா தேங்காய் போளி என்று பிராந்தியத்துக்கொரு பலகார அடையாளமாகவே தருமமிகு சென்னை என் மனத்தில் பதிந்திருந்தது.

ஒன்பதாண்டுகளுக்கு முன்னால் என் நண்பர் பத்ரி, நுங்கம்பாக்கத்தில் உள்ள ஓர் உணவகத்துக்கு என்னை அழைத்துச் சென்றார். நான் அதுவரை போயிராத இடம். மெடிமிக்ஸ் ஆயுர்வேத சோப்பு தயாரிக்கும் கம்பெனி நடத்துகிற உணவகம். சஞ்சீவனம் என்று பேர்.

வழக்கமான உணவகம்தான். ஆனால் அங்கே தனிச்சிறப்பான முழுச் சாப்பாடு ஒன்று உண்டு. இயற்கை மருத்துவ நெறிக்கு (நேச்சுரோபதி) உட்பட்டுத் தயாரிக்கப்படுகிற உணவு என்று சொன்னார்கள்.

போய் உட்கார்ந்ததும் முதலில் மைல் நீள வாழையிலையின் ஒரு ஓரத்தில் ஒரு துண்டு நேந்திரம்பழத்துண்டு வைப்பார்கள். அதன்மீது ஒரு ஸ்பூன் தேங்காய்ப் பூ தூவுவார்கள். அடேய், நான் மலையாளி என்பது அதன் அர்த்தம். அதன் பிறகு சொப்பு சாமான் சைஸில் ஐந்து கண்ணாடிக் கிண்ணங்களில் வண்ணமயமான ஐந்து பானங்கள் வரும். ஒன்றில் கீரைச் சாறு. இன்னொன்றில் புதினா அரைத்துவிட்ட மோர். பிறகு ஏதேனுமொரு கொட்டைப் பயிரில் தயாரித்த சாறு. வாழைத்தண்டு சாறு. சாஸ்திரத்துக்கு ஒரு பழச்சாறு.

முடிந்ததா? இந்த ஐந்து பானங்களை அருந்தியானதும் ஐந்து விதமான பச்சைக் காய்கறிகளைக் கொண்டு வந்து வைப்பார்கள். சாலட் என்கிற காய்க் கலவை அல்ல. தனித்தனியே ஐந்து பச்சைக் காய்கறிகள். அதைச் சாப்பிட்ட பிற்பாடு, அரை வேக்காட்டுப் பதத்தில் மேலும் ஐந்து காய்கறிகள் வரும். அதையும் உண்டு தீர்த்த பிறகு முழுதும் வெந்த காய்கறிகள் இன்னொரு ஐந்து ரகம். கண்டிப்பாக ஒரு கீரை இருக்கும்.

ஆக மொத்தம் பதினைந்து காய்கறிகள் மற்றும் ஐந்து பானங்கள். உண்மையில் இவ்வளவுதான் உணவே. ஆனால் நமக்கெல்லாம் சோறின்றி அமையாது உணவு. எனவே கேரளத்து சிவப்பு குண்டு அரிசிச் சோறும் பருப்பும் கேட்டால் கொடுப்பார்கள். அதெல்லாம் முடியாது; எனக்கு சாம்பார் ரசம் இல்லாமல் ஜென்ம சாபல்யம் அடையாது என்பீர்களானால் அதுவும் கிடைக்கும்.

எதற்குமே அளவு கிடையாது என்பது முக்கியம். எதிலுமே குண்டு மிளகாயோ, வெங்காயமோ, பூண்டோ, எண்ணெயோ, புளியோ கிடையாது என்பது அதிமுக்கியம். இந்த ராஜபோஜனத்தை முழுதாக உண்டு முடித்தால் ஆயிரம் கலோரி சேரும். இது ஒரு நாளில் நமக்குத் தேவையான மொத்த கலோரியில் கிட்டத்தட்ட சரிபாதி.

விஷயம் அதுவல்ல. இதே ஆயிரம் கலோரிக்கு நீங்கள் வேறு என்ன சாப்பிட்டாலும் வயிறு புளிப் பானை போலாகிவிடும். ஆனால், இந்தக் குறிப்பிட்ட சாப்பாடு பசியைத் தீர்க்குமே தவிர வயிற்றை அடைக்காது. உண்ட உணர்வே இன்றி பசியழிப்புச் சேவையாற்றும் அந்நூதன உணவு என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. திரும்பத் திரும்ப அந்த உணவகத்துக்குச் சென்று சாப்பிட்டுப் பார்த்தேன். கூடவே ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் உணவு முறையைப் பற்றிப் படிக்கவும் ஆரம்பித்தேன்.

அதர்வண வேதத்தின் ஒரு பகுதியாக வருகிற ஆயுர்வேதம் என்பது சித்த வைத்தியத்துக்கு அண்ணனா, தம்பியா என்றொரு விவாதம் ரொம்ப காலமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அது என்னவானாலும் இரண்டும் சகோதர ஜாதிதான் என்பதில் சந்தேகமில்லை. ஆயுர்வேதம் என்பது சுக வாழ்க்கை, சொகுசு வாழ்க்கைக்கான அறிதல் முறை. வெறும் மருத்துவமாக மட்டுமே அறியப்பட்டிருந்தாலும் இதில் வேறு பல சங்கதிகள் இருக்கின்றன. சமையல் கலையைப் பற்றி ஆயுர்வேதம் பேசும். சாப்பாட்டு முறை பற்றிப் பாடம் எடுக்கும். சட்டென்று அங்கிருந்து கிளம்பி விவசாயம் செய்வதைக் குறித்து விளக்கம் சொல்லும். கொஞ்சம் அறிவியல் வாசனை காட்டும். தடாலென்று தடம் மாறி ஜோதிட விளக்கம் சொல்லும். இன்னதுதான் என்று கிடையாது. மனுஷனாகப் பட்டவன் சவுக்கியமாக வாழவேண்டும். அதற்கு என்னெல்லாம் தேவையோ அதெல்லாம் இதில் உண்டு.

அடிப்படையில் ஆயுர்வேதம் சுட்டிக் காட்டுகிற ஒரு முக்கியமான சங்கதி என்னவென்றால், இப்புவியில் நம் கண்ணுக்குத் தென்படுகிற அத்தனைத் தாவரங்களுமே ஏதோ ஒரு விதத்தில் மருத்துவ குணம் கொண்டதுதான். சிலவற்றின் பயன்பாடு நமக்குத் தெரிந்திருக்கிறது. இன்னும் தெரியாத ரகசியங்கள் எவ்வளவோ உள்ளன. ஆரோக்கியமானது, நமது உடலுக்குள் உற்பத்தியாகிற சமாசாரம். இத்தாவரங்கள் அதைப் போஷித்து பீமபுஷ்டி அடைய வைக்க உதவுபவை.

சஞ்சீவனத்தில் உண்ட உணவும் இங்குமங்குமாகப் படித்த சில விஷயங்களும் சேர்ந்து என்னை ஒரு வழி பண்ண ஆரம்பித்தன. அதுவரை எனக்கு எண்ணமெல்லாம் எண்ணெய்ப் பதார்த்தங்களாகவே இருந்தது. இனிப்பு என்றால் கிலோவில்தான் உண்ணவே ஆரம்பிப்பேன். அது டன்னிலும் குவிண்டாலிலும் போய் நிற்கும். பரோட்டாவில் ஆரம்பித்து பீட்சா வரை தேக ஹானிக்கு ஆதாரமான சகலமான உணவினங்களையும் ஒரு வேள்வியைப் போல் தின்று தீர்த்துக்கொண்டிருந்தேன்.

சட்டென்று ஒருநாள் போதும் என்று தோன்றியது. அன்றைக்குத்தான் இரண்டு முழு திருப்பதி லட்டுகளை ஒரே மூச்சில் கபளீகரம் செய்திருந்தேன்.

-தமிழ் ஹிந்து நாளிதழில் வெளியான கட்டுரை

– மேலும் ருசிப்போம் | எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: writerpara@gmail.com

img_0057