Category Archives: Recipe

12-ருசியியல் சில குறிப்புகள்: மனைவி இனத்தைச் சேர்ந்த தயிர்!


அன்றைக்கு என் மனைவி வீட்டில் இல்லை. எனவே, சமையலறையை முற்றுகையிட்டுக் கைப்பற்றுவது எனக்கு எளிதாக இருந்தது. முன்னதாக மனைவி ஊருக்குப் போயிருக்கிற தினங்களில் எப்படியெல்லாம் அட்டூழியங்கள் புரியலாம் என்று சிந்தித்து, ஒரு பட்டியலே தயாரித்து வைத்திருந்தேன். அதன்படி எனது முதல் முயற்சியை பனீர் டிக்காவில் தொடங்கினேன்.

இந்த பனீர் டிக்காவின் ருசிக்கு அடிப்படை, தயிர். தயிர்தான் டிக்காவின் உள்ளுறை பிரம்மம். அந்தத் தயிரானது அதிகமாகவும் ஆகிவிடக் கூடாது, குறைந்தும் போய்விடக் கூடாது. புளித்திருக்கவும் கூடாது, இனிப்பாகவும் இருந்து விடக் கூடாது. கல்லால் உடைக்க வேண்டிய அளவுக்குக் கெட்டிப் பட்டிருக்க வேண்டியது அனைத்திலும் அவசியம். அந்தக் கெட்டித் தயிரை நீர் சேர்க்காமல் கடைந்து நுங்கு பதத்துக்குக் கொண்டு வரவேண்டியது முக்கியம். ஒரு சிறந்த பனீர் டிக்காவை ருசிப்பதற்கு நீங்கள் முழுக் கொழுப்புப் பாலில் தோய்த்த தயிரை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

தயிர் உருவாக்கத்தில் நமது பங்களிப்பு ஒன்றுமில்லை என்பதால் அன்றைக்கு எனக்கு மிகச் சிறந்த தயிர் வாய்த்துவிட்டது. காஷ்மீரத்து மிளகாய்த் தூள் கொஞ்சம், பொடித்த கடுகு கொஞ்சம். சீரகம் மற்றும் தனியாத் தூள் கொஞ்சம், அரைச் சிட்டிகை மஞ் சள் தூள், அளவோடு உப்பு. சேர்த்துக் கலக்கினால் முடிந்தது கதை.

தயிரைத் தயார் செய்துவைத்து விட்டுத்தான் வெங்காய நறுக்கலில் உட்கார்ந்தேன். பொது வாக நமது உணவகங் களில் வெங்காய விற்பன்னர்கள் பனீர் டிக்கா வுக்கு என சிறப்பு மெனக்கெடல் ஏதும் செய்ய மாட்டார்கள். தடி தடியாகக் கிண்ணம் போல நறுக்கி, அதே அளவு தடிமனில் தக்காளி மற்றும் குடை மிளகாயையும் சேர்த்து நறுக்கி, மூன்றின் இடையே பனீரைச் சொருகி, பல் குத்தும் குச்சியால் அதன் அடி வயிற்றில் ஓங்கி ஒரு குத்துக் குத்தி கொண்டுவந்து வைத்து விடுவார்கள்.

என்னைப் பொறுத்தவரை இது ஒரு தண்டக் கருமாந்திரத் தயாரிப்பு. சற்றும் கலையுணர்ச்சி இல்லாமல் உருவாக்கப்படுவது. அந்த அபூர்வா ஓட்டல் அஸ்ஸாமிய நாரீமணியைப் பற்றிச் சொன்னேனே? அவரைப் போல நூதனமாக ஏதாவது முயற்சி செய்வதே உணவுக்கு நாம் செய்யும் மரியாதை.

ஆச்சா? வெங்காய துவந்த யுத்தம் ஆரம்பமானது. ஒரு வெங்காயத்தை, ஒரு துண்டு கூடக் கீழே விழாமல் முற்றிலும் சுருள் சுருளாக, மெலிதாக ஒரே வளையம்போல் வார்த்தெடுப்பது என்பது ஒரு பெரும் வித்தை. இதற்கென என்னவாவது கருவி கண்டுபிடிக்கப்பட்டிருக்கலாம். எனக்குத் தெரியவில்லை. அந்த அஸ்ஸாமியப் பெண் கையாலேயே வெங்காய மாலை தொடுத் ததைக் கண்ணால் கண்டுவிட்ட படியால் நாமும் முயற்சி செய்யலாம் என்று நினைத்தேன். ஆனால்,முற்றிலும் காந்தியவாதியான எனக்குக் கத்தியைச் சரியாகப் பயன்படுத்தவரவில்லை. எத்தனை லாகவமாக அதை வெங்காய வடிவத்துக்கு வளைத்து மடித்தாலும் நான் கோக்க நினைத்த மாலையானது இரணிய கசிபு வதைப் படலத்தை உத்தேசித்தே நகர்ந்துகொண்டிருந்தது. சுமார் அரை மணி நேரம் வெங்காயத்தோடு துவந்த யுத்தம் நிகழ்த்திவிட்டு, இறுதியில் துவண்டு தோற்றேன். ரொம்ப அவமானமாகப் போய்விட்டது.

நாராசமாக நறுக்கப்பட்ட வெங்காயத்தை வீணாக்க முடியாது. ஒரு சிறந்த பனீர் டிக்காவுக்கு அதை உபயோகிக்கவும் முடியாது. என்ன செய்ய? ஃப்ரிஜ்ஜில் இருந்த பனீரை வெளியே எடுத்து வைக்க மறந்துவிட்டிருந்தேன். பனீர் ஒரு பத்து நிமிடங்களாவது அறை வெப்பத்தில் இருந்தால்தான் வெட்டுவதற்கு நெகிழ்ந்து கொடுக்கும். ஃப்ரிஜ்ஜில் இருந்து வெளியே எடுத்த வேகத்தில் கத்தியைக் கொண்டுபோய் அதன் கன்னத்தில் வைத்தால் வடிவம் கண்ணராவியாகிவிடும்.

என்ன ஒரு இம்சை! மேலும் பத்து நிமிடங்கள் பனீருக்காகக் காத்திருந்து, அதைச் சதுரங்களாக்கித் தயிரில் போட்டு ஊற வைப்பதற்குள் தயிரின் குணம் மாறிவிடும். இந்தத் தயிரானது, மனைவி இனத்தைச் சேர்ந்த ஒரு பொருள். என்ன செய்தாலும் முகம் சுளிக்கும். பதம் தவறினால் கதம் கதம்.

என்ன செய்யலாம் என யோசித்தேன். நான் ருசித்து உண்பது மட்டுமே இதில் விஷயமல்ல. நான் வசிக்கிற அச்சுவெல்ல அடுக்குமாடி வீட்டின் கீழ்த்தளத்தில் எனக்கு கோபால் என்ற நண்பரொருவர் இருக்கிறார். கம்யூனிஸ்ட் என்றாலும் அடிப்படையில் கலை மனம் கொண்டவர். அவரைக் கூப்பிட்டுக் கொஞ்சம் ருசி பார்க்கச் சொல்லிவிட்டால் போதுமானது. மனைவி ஊரில் இருந்து திரும்பும்போது வாசலிலேயே நிறுத்தி எனது தீர பராக்கிரமங்களைப் பிரஸ்தாபித்து விடுவார்.

ஆக, அந்த எண்ணத்திலும் மண். என்ன செய்யலாம் என்று யோசித்தேன். டிக்கா முடியாது என்று தெரிந்துவிட்டது. எனவே மாற்றுப் பாதையில் போவது என முடிவு செய்து, எனது அன்றைய நூதனத் தயாரிப்பு ஒரு பனீர் கிச்சடியாக இருக்கும் என்று எனக்குள் அறிவித்துக்கொண்டேன். இப்போது பனீரை நறுக்க வேண்டிய அவசியமில்லை. இளகிய பதம் தேவையில்லை. பரோட்டாவுக்கு மாவு பிசைவது போல எனதிரு கரங்களாலும் பனீர்க் கட்டியை ஏந்திப் பிடித்துப் பிசைந்து கொட்டினேன்.

சட்டென்று ஒரு பயம் பிடித்துக்கொண் டது. அடக்கடவுளே! கிச்சடிக்குத் தயிர் எப்படிச் சேரும்? அசகாய மசாலாக் கலவையெல்லாம் தயாரித்து அதன் தலையில் கொட்டி சமாஸ்ரயணம் செய்து வைத்திருக்கிறேனே? அத்தனையும் வீணா?

மீண்டும் யோசித்து கிச்சடி யோசனையைக் களி யோசனையாக மாற்றிக் கொண்டேன். களிப்பூட்டும் களி. அடுப்பில் வாணலியை ஏற்றி, இரண்டு கரண்டி நெய்யை ஊற்றி நாலு கடுகு, இரண்டு குண்டு மிளகாய்களைப் போட்டெடுத்து எனது வெங்காய சம்ஹார சரக்கை அவிழ்த்துக் கொட்டி வதக்க ஆரம்பித்தேன். களிக்கு வெங்காயம் உண்டா என்றெல்லாம் கேட்கப்படாது. கலைஞன் ஒரு வினோத ரச மஞ்சரி. அவன் என்னவும் செய்வான். ஆக, வெங்காயம் வதங்கியது. இப்போது உதிர்த்துப் பிசைந்த பனீரை அதில் போட்டுக் கொஞ்சம் தண் ணீர் ஊற்றினேன். சட்டென்று தயிர் நினைவுக்கு வந்தது. ஐயோ தண்ணீர் எதற்கு? நிறுத்திவிட்டு, எடுத்துக் கொட்டு தயிரை.

இந்த உலகில், வாணலியில் வதங்குகிற ஒரு வஸ்துவில் தயிரைக் கொட்டி வேகவிட்ட ஒரே ஜென்மம் நானாகத் தான் இருப்பேன். பிரச்சினை என்னவெனில், முதலில் மறந்துபோய் சேர்த்து விட்ட தண்ணீரும் தயிரும் கலந்து, எனது களியானது மோரில் வேகத் தொடங்கியது. ரொம்பக் கேவலமாக இருக்குமோ என்று பயம் வந்து சட்டென்று அடுப்பை அணைத்தேன். படாதபாடுபட்டு கொதித்துக்கொண்டிருந்த அந்த மோர்க் கரைசலை வடித்து வெளியே கொட்டிவிட்டு, மீண்டும் அடுப்பில் ஏற்றினேன்.

ஆனது ஆகிவிட்டது. இனி நடப்பது எம்பெருமான் செயல். தக்காளி, குடை மிளகாய், இஞ்சி, கொத்துமல்லி என்று கிடைத்தது அனைத்தையும் அள்ளிக்கொட்டி என்னமோ ஒன்றைச் செய்து முடித்தேன். நான் செய்ததில் ஒரே நல்ல காரியம், அடுப்பை மிதமான சூட்டிலேயே பத்து நிமிடங்களுக்கு வைத்திருந்ததுதான்.

உண்டு பார்த்தபோது திகைத்து விட்டேன். உண்மையில் அது ஒரு நூதன பனீர் புர்ஜி. உப்புமாவுக்கும் பொங்கலுக்கும் பிறந்த கலப்புக் குழந்தைபோல் இருந்தது.

இன்னொரு முறை செய்வேனா என்று தெரியாது. அற்புதங்கள் எப்போதாவதுதான் நிகழும்.

-தமிழ் ஹிந்து நாளிதழில் வெளியான கட்டுரை

– மேலும் ருசிப்போம் | எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: writerpara@gmail.com

img_0057

11-ருசியியல் சில குறிப்புகள்: பனீர் புராணம்!


பனீர் என்பது ஒரு சத்வ குண சரக்காகும். ஆனால், தமிழ் நாட்டில் இது படுகிற பாடு சொல்லி முடியாது. குழம்பில் போடப்படுகிற பெங்களூரு கத்திரிக்காயைவிடக் கேவலப்படுத்தப்படுகிற வஸ்து ஒன்று உண்டென்றால் அது பனீர்தான்.

சமீப காலமாகத் தொலைக்காட்சிகளில் ‘இவளுக்கு பனீர் சமையல்னா ரொம்ப பிடிக்கும்’ என்று ஆரம்பித்து ஒரு விளம்பரம் வருகிறது. ‘பத்தே நிமிடத்தில் பனீர் சமையல்’ என்று இன்னொரு விளம்பரம். ஆனால், விளம்பரத்தில் இவர் கள் காட்டுகிற காட்சியெல்லாம் சபைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட வரிகளைப் போலத்தான் பனீரை முன்னிறுத்துகின்றன.

உண்மையில் பனீர் ஒரு சிறந்த உணவுப் பொருள். நான் அரிசிக்கு மாற்றாகக் கடந்த பல மாதங்களாக அதைத்தான் சாப்பிடுகிறேன். ஒருவேளை உணவுக்கு 200 கிராம் பனீர் போதும். இதில் சுமார் 40 கிராம் கொழுப்பு, 35 கிராம் புரதம் கிடைத்துவிடும். சராசரி மனிதனுக்கு ஒரு நாளைக்குத் தேவையான கலோரிகளில் நாலில் ஒரு பங்கு சேதாரமின்றி வந்து சேர்ந்துவிடும். அதைவிட விசேஷம் என்னவென்றால், பனீரில் கார்போஹைடிரேட் கிடையாது. நான் சொன்ன 200 கிராமில் மொத்தமே இரண்டு கிராம் மாவுச் சத்துதான் தேறும். எனவே, இதில் தேக ஹானி கிடையாது.

‘ஐயோ கொழுப்பைத் தின்று ஜீவ சமாதி அடைவதற்கா?’ என்று அலறாதீர். பனீரில் உள்ளது நல்ல கொழுப்பு. இது உயிரை எடுக்காது. மாறாக காயகல்பம் சாப்பிட்ட கந்தர்வ குமாரனைப் போல் தேக சம்பத்தை ஜொலி ஜொலிக்கப் பண்ணிவிடும். என்ன ஒன்று, ஒருவேளைக்குப் பனீர், மறுவேளைக்குப் பலான சாப்பாடு என்று கலந்தடிப்பது தகாது. தேக இயந்திரமானது ஒன்று கொழுப்பில் இயங்கவேண்டும். அல்லது கார்போஹைடிரேடில் இயங்க வேண்டும். இரண்டையும் கலப்பது பெட்ரோல், டீசல் இரண்டையும் சேர்த்தடித்து வண்டியோட்ட முயற்சி செய்வது போலாகும். புரியும்படிச் சொல்லுவதென்றால், பனீர் பட்டர் மசாலா நல்லது. அதையே சப்பாத்திக்கோ, புல்காவுக்கோ தொட்டுக்கொண்டு சாப்பிடுவது கெட்டது.

இந்தியாவில் கி.பி முதல் நூற்றாண்டில் இருந்தே பனீர் உணவு இருந்திருக்கிறது. ஆயுர்வேத மருத்துவத் துறையின் ஆதி நூலாகக் கருதப்படும் ‘சரக சம்ஹிதை’யில் கொதிக்கும் பாலில் எலுமிச்சை நிகர்த்த புளிப்புப் பண்டம் சேர்த்துக் கொழுப்பைப் பிரித்தெடுத்துத் தயாரிக்கப்படுகிற வஸ்துவைப் பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. குஷானப் பேரரசர் கனிஷ்கரைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவருக்கும் அவர் காலத்திய வடக்கத்தி மாகாணவாசிகளுக்கும் பனீர் ஒரு முக்கிய உணவாக இருந்திருக்கிறது.

சிலபேர் ரிக் வேத காலத்திலேயே பனீர் உண்டு என்பார்கள். எனக்கென்னமோ அதெல்லாம் உலகின் முதற்குரங்கு தமிழ்க் குரங்கு என்பது போலத்தான் தோன்றுகிறது. தொன்மம் மட்டுமே சிறப்பல்ல. இன்றும் தழைக்கிறதா? தீர்ந்தது விஷயம்.

அது நிற்க.

நான் பனீரை முக்கிய உணவாக்கிக்கொண்ட சிறிது காலத்திலேயே அதில் சமைக்கவும் கற்றுக்கொண்டேன். பனீரை சாதம் போல் உண்ணலாம். உப்புமா செய்யலாம். பொங்கல் செய்யலாம். டிக்கா போன்ற தந்தூரி வகையறாக்களை முயற்சி செய்யலாம். ஒன்றுமே இல்லாவிட்டாலும் வெறுமனே நறுக்கிப் போட்டு ரெண்டு பிடி வெங்காயம் தக்காளி சேர்த்து வெண்ணெயில் வதக்கி எடுத்தால் தேவாமிர்தமாக இருக்கும்.

எத்தனையோ நற்சாத்தியங்கள் இதில் உள்ளதென்றாலும் நமது உணவகங்களில் இந்தப் பனீரை என்ன பாடுபடுத்தி எடுக்கிறார்கள் என்று லேசில் விளக்கிவிட முடியாது. பெரும்பாலும் வீட்டில் சாப்பிட முடியாத தினங்களில் இந்தக் கிங்கரர்களிடம் மாட்டிக்கொண்டு விடுவேன். அவர்களைப் பொறுத்தவரை, ஒரு வடக்கத்தி உணவை என்னென்னக் கருமாந்திரங்களைச் சேர்த்து சமைத்தாலும் நமது மக்கள் ஏற்றுக்கொண்டுவிடுவார்கள் என்பதே சித்தாந்தம்.

கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் ஒரு வடக்கத்தி துரித உணவகம் இருக்கிறது. பிராந்தியத்தில் மிகவும் பிரசித்தம். இங்கே பனீரைப் பலவிதங்களில் சமைத்து அல்லது போஸ்ட் மார்ட்டம் செய்து தருவார்கள். எதையும் இரண்டு வாய்க்கு மேல் உண்ண முடியாது. ஒன்று, நூறு கிராம் பனீரில் நூறு கிலோ மிளகாயைக் கொண்டு கொட்டுவார்கள். அல்லது பனீரை வதக்குவதற்குமுன் சமுத்திரத் தண்ணீரில் அலசி எடுத்துவிடுவார்கள். கேட்டால், அதுதான் வடக்கத்தி ஸ்டைல். பாலக் பனீர் என்னுமொரு பேரதிசயப் பண்டத்தை இவர்கள் சமைத்துத் தருகிற விதத்தைப் பற்றி இன்னொரு பண்டார மும்மணிக் கோவைதான் எழுதவேண்டும். சைவ நெறி காப்போரைப் பண்டாரம் என்பார்கள். மேற்படியாளர்கள் சைவ நரி மேய்ப்பர்கள்.

இன்னொரு பிரசித்தி பெற்ற உணவகம், பனீர் உப்புமாவை கேப்பைக் களி ருசியில் தயாரித்து வழங்க வல்லது. இந்த உணவகத்துக்கு ஊரெல்லாம் கிளைகள் வேறு. ஸ்தல மகிமைக்கு ஏற்றவாறு ஒவ்வொரு கிளையிலும் ஒவ்வொரு விதமான களி ருசியைக் கொண்டு வருவார்கள். சென்னை, பாளையங்கோட்டை, வேலூர் வகையறா ருசி. கேட்டால், ‘வேணான்னா சொல்லுங்க, ரவா ரோஸ்ட் கொண்டாரேன்’ என்பார் சேவக சிகாமணி.

சாப்பிடுவது எப்படி ஒரு கலையோ, அதே போலத்தான் சமைப்பதும். ‘பனீரில் நான் அதன் மிருதுத் தன்மையாக இருக்கிறேன்(!)’ என்று கீதையில் எம்பெருமான் சொல்லியிருப்பதும் அதனால்தான். துரதிருஷ்டவசமாக எடிட்டர்கள் அந்த வரியைக் கபளீகரம் செய்துவிட்டார்கள். மேற்படி மிருதுத் தன்மைக்கு அலங்காரம் செய்வது மட்டும்தான் சமைப்பவர்களின் வேலையே தவிர, திட்டமிட்டுப் படுகொலை முயற்சி செய்தாலொழியப் பனீரைக் கெடுக்க முடியாது.

எனக்குத் தெரிந்து சென்னையில் பனீரைக் கலையுணர்வுடன் கையாளத் தெரிந்த சமையல் விற்பன்னர்கள், திநகர் ஜி.என். செட்டி சாலையில் உள்ள சங்கீதாவில் உள்ளார்கள். கொஞ்சம் யோசித்தால் கத்திப்பாரா மேம்பாலத்துக்குக் கீழே உள்ள அபூர்வாவையும் சொல்லலாம்.

இந்த அபூர்வாவில் உத்தியோகம் பார்க்கிற அத்தனை நாரீமணிகளும் அஸ்ஸாமுக்குக் கிழக்கில் இருந்து மொத்த கொள்முதலாக வந்து சேர்ந்தவர்கள் என்று நினைக்கிறேன். மூக்கையும் முழியையும் பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது. ஒரு பனீர் டிக்காவை எப்படி அலங்கரிப்பது என்று நன்கு அறிந்த தேவதைகள். ஒற்றை வெங்காயத்தை மெல்லிய பூமாலை போல் சுருள் சுருளாக அரிந்து டிக்காவுக்கு சாற்றிக் கொண்டு வந்து வைப்பார்கள். தக்காளியானது மாலையில் சொருகிய வண்ண மலரேபோலப் பிணைந்து கிடக்கும். கொத்துமல்லிச் சட்னிக்கு மேலே தேங்காய்ப்பூ தூவி வைக்கிற பெருங்கலையுள்ளம் வாய்த்தவர்கள். உணவின் ருசியானது, பரிமாறப்படும் விதத்திலும் உள்ளது என்பதை இவர்கள் அறிவார்கள்.

ஒரு சமயம் இந்தச் சப்பை மூக்கு தேவதைகளைப் போல நாமும் வெங்காயத்தை அரிந்து பார்த்தால் என்ன என்று ஓர் ஆசை வந்தது. மனைவி அருகே இல்லாததொரு சுதினத்தில் என் பிரத்தியேகக் கத்தி கபடாக்களை எடுத்து வைத்துக்கொண்டு உட்கார்ந்தேன். ஒரு பெரிய வெங்காயத்தை எடுத்து, லாகவமாக அதில் கத்தியைச் சொருகி, கணக்கு வாத்தியார் காதைத் திருகுகிற மாதிரி அப்படியே அதைத் திருகிப் பார்த்தேன். முதல் சுற்று சரியாக வந்துவிட்டது. இரண்டாம் சுற்றில் கத்தி நகர்ந்துவிட்டது.

நறுக்கிய வரை தூரப் போட்டுவிட்டு மீண்டும் அதே முயற்சி. இம்முறை கத்தியைச் சொருகிய விதமே தப்பு. காயமே இது பொய்யடா என்று காறித் துப்பிவிட்டது வெங்காயம். அதையும் கழித்துவிட்டு மீண்டுமொரு முயற்சி. சுமார் அரை மணிநேரம் அந்த ஒரு வெங்காயத்துடன் துவந்த யுத்தம் நடத்திவிட்டு, இறுதியில் அற்புதமாகத் தோற்றுப் போனேன்.

நறுக்கத் தெரியாதவனுக்கு வறுக்கத் தெரியும். அன்றைக்கு நான் சமைத்த பனீர் புர்ஜி சரித்திரத்தில் இடம்பெறக்கூடிய தகுதி வாய்ந்தது. தனியொரு காவியமாக அடுத்த வாரம் எழுதுகிறேன்.

-தமிழ் ஹிந்து நாளிதழில் வெளியான கட்டுரை

– மேலும் ருசிப்போம் | எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: writerpara@gmail.com

img_0057

10-ருசியியல் சில குறிப்புகள்! – கூழ் குடித்துப் பார்த்தால்தான் என்ன?


மனுஷகுமாரனாகப் பிறந்த காலம் முதல் என்னால் இன்றுவரை முடியாத காரியம் ஒன்றுண்டு. மேலே சிந்திக்கொள்ளாமல் சாப்பிடுவது.

கையால் எடுத்துச் சாப்பிடுவது, ஸ்பூனால் அலேக்காகத் தூக்கி உள்ளே தள்ளுவது, அண்ணாந்து பார்த்து கொடகொடவென தொண்டைக்குழிக்குள் கொட்டிக்கொள்வது, ஸ்டிரா போட்டு உறிஞ்சுவது, கலயத்தை வாய்க்குள்ளேயே திணித்து பாயிண்ட் டு பாயிண்ட் அடிப்பது உள்ளிட்ட நானாவித உபாயங்களிலும் பல்லாண்டுகாலப் பயிற்சியும் முயற்சியும் செய்து பார்த்துவிட்டேன். ம்ஹும். கறை படாத கரங்கள் இருந்து என்ன பிரயோசனம்? கறை படியாத சட்டை இன்றுவரை எனக்கு வாய்த்ததில்லை.

உண்பது ஒரு கலை. உதட்டில்கூட சுவடு தெரியாமல் உண்கிறவர்கள் சிலரைப் பார்த்திருக்கிறேன். சீனத் திரைப்படங்களில் நீள நீள நாக்குப்பூச்சி நூடுல்ஸை இரட்டைக் குச்சியால் அள்ளி உண்ணும் சப்பை மூக்கு தேவதைகளை எண்ணிப் பெருமூச்சு விட்டிருக்கிறேன். ஜேம்ஸ் பாண்ட் படங்களில் கதாநாயகராகப்பட்டவர் எத்தனை நளினமாக மது அருந்துவார்! என் நண்பர் பார்த்தசாரதி டிபன் பாக்ஸில் இருந்து சாப்பாட்டை எடுத்துச் சாப்பிடும் அழகைப் பார்ப்பதே ஒரு ஒடிசி நடனம் பார்ப்பது போலிருக்கும்.

எனக்கு இதையெல்லாம் ரசிக்கவும் வியக்கவும் முடியுமே தவிர, ஒருநாளும் செய்து பார்க்க முடிந்ததில்லை. சாப்பிட உட்கார்ந்தால் தட்டு பரமாத்மா, நான் ஜீவாத்மா. விசிஷ்டாத்வைத சித்தாந்தப் பிரகாரம் பரமாத்மாவைச் சென்றடைவது ஒன்றே நமது இலக்கு. கண்ணை மூடிக்கொண்டு கபளீகரம் செய்ய ஆரம்பித்துவிட்டால் ஜட உலகம் மறந்துவிடும். பரிமாறுகிறவர்களும் மறைந்து, பலகாரங்கள் மட்டுமே சிந்தனையை ஆக்கிரமிக்கும். சிந்தனை தப்பில்லை. அது அவ்வப்போது சிந்திவிடுவதுதான் பெரும் சிக்கல்.

இது ஏதோ திரவ வகையறாக்களுக்கு மட்டும் பொருந்துவது என்று எண்ணி விடாதீர்கள். சாம்பார் சாதம், ரசம் சாதமும் சிந்தும். சனியன், தரையில் சிந்தினால் துடைத்து எடுத்துவிடலாம் என்றால் அவையும் சட்டையில் மட்டுமே சிந்தும். இந்த வம்பே வேண்டாம் என்று புளியோதரை, எலுமிச்சை சாதம் எனத் தடம் மாற்றிப் பயணம் மேற்கொண்டாலும் சட்டைப் பையில் நாலு பருக்கை அவசியம் இருக்கும்.

நுங்கம்பாக்கத்தில் ராஜ்பவன் உணவகத்தின் வாசலில் ஒரு ஐஸ் க்ரீம் கடை உண்டு. எனக்கு அந்தக் கடையில் கோன் ஐஸ் சாப்பிடுவது என்றால் ரொம்ப இஷ்டம். மதிய உணவுக்கு அந்தப் பக்கம் போக நேர்ந்தால் கண்டிப்பாக ஐஸ் க்ரீம் சாப்பிடாமல் திரும்பியதில்லை. அப்போதெல்லாம் பெரும்பாலும் பார்த்தசாரதியுடன்தான் போவேன்.

ஒரு ஐஸ் க்ரீமைத் தின்று முடிக்க மிஞ்சிப் போனால் ஐந்து நிமிடம் ஆகுமா? அந்த ஐந்து நிமிட அவகாசத்தில் என் கரம் சிரம் புறமெல்லாம் அந்தச் சிறிய கோன் ஐஸ் வண்ணம் தீட்டிவிடும். வாழ்நாளில் ஒருமுறை கூட கோனை உடைக்காமல் நான் கோன் ஐஸ் ருசித்ததில்லை. ஆனால் அந்த துஷ்டப் பண்டமானது பார்த்தசாரதியை மட்டும் ஒன்றும் செய்யாது. ஒரு குழந்தையைக் கையாளும் தாயின் லாகவத்தில் அவர் கோன் ஐஸைக் கையாள்வார். கையை ஆட்டி ஆட்டிப் பேசினாலும் ஒரு சொட்டுகூட அவருக்குச் சிந்தாது. உண்ட சுவடே இல்லாத உதட்டை கர்ச்சிப்பால் வேறு ஒற்றிக்கொள்வார். பார்க்கப் பார்க்கப் பொறாமைத் தீ கொழுந்துவிட்டு எரியும். என்ன செய்ய? என்னைத் தின்னத் தெரிந்தவனாகவும் அவரை உண்ண அறிந்தவராகவும் படைத்த பரதேசியைத்தான் நொந்துகொள்ள வேண்டும்.

ஒரு சமயம் திருச்சி தென்னூரில் ஏதோ ஒரு கூட்டத்தில் பேசக் கூப்பிட்டிருந்தார்கள். கூட்டம் மாலைதான். பகல் பொழுது முழுக்க என் வசம் இருந்தது. சும்மா ஊரைச் சுற்றலாம் என்று புறப்பட்டு மதியம் வரைக்கும் சுற்றிக்கொண்டே இருந்தேன்.

பசி வந்த நேரம் கண்ணில் ஒரு கடை தென்பட்டது. ‘ஶ்ரீமுனீஸ்வரன் துணை கம்மங்கூழ்’ என்ற சாக்பீஸ் போர்டுடன் சாலையின் ஒரு ஓரமாக நின்றிருந்த தள்ளுவண்டி.

அட, ஒருவேளை கூழ் குடித்துப் பார்த்தால்தான் என்ன? கம்பங்கூழ் ஆரோக்கியமானது. கம்பங்கூழ் குளிர்ச்சி தரக்கூடியது. கம்பில் இரும்புச் சத்து அதிகம். தவிரவும் பிறந்த கணம் முதல் சென்னைவாசியாகவே வாழ்ந்து தீர்ப்பவனுக்கு இம்மாதிரித் தருணங்களெல்லாம் எந்த விதமான கிளுகிளுப்பைத் தரும் என்று லேசில் விவரித்துவிட முடியாது.

ஒரு ஆட்டம் ஆடிப் பார்த்துவிடுவோம் என்று முடிவு செய்து எடுத்த எடுப்பில் இரண்டு சொம்பு கூழ் வாங்கினேன்.

முதல் வாய் ருசித்தபோது ஒரு மாதிரி இருந்தது. பழக்கமின்மையால் எழுந்த தயக்கம். இரண்டாவது வாய் குடித்தபோது அதன் வாசனை கொஞ்சம் பிடித்த மாதிரி தென்பட்டது. கடகடவென்று ஒரு சொம்புக் கூழையும் குடித்து விட்டு வைத்தபோது அபாரம் என்று என்னையறியாமல் உரக்கச் சொன்னேன்.

‘நல்லாருக்குங்களா? அதான் வேணும். நம்முது மெசின்ல குடுத்து அரைக்கற கம்பு இல்லிங்க. உரல்ல போட்டு இடிக்கற சரக்கு. வெறகு அடுப்பு, ஈயப்பானைதான் சமைக்கறதுக்கு பயன்படுத்தறது. அப்பத்தான் மணம் சரியா சேரும்’ என்றார் கடைக்காரர்.

காய்ச்சுகிறபோது உப்பு. காய்ச்சி இறக்கியதும் சிறு வெங்காயம். ஆறியபின் கெட்டி மோர். இவ்வளவுதான் கம்பங்கூழுக்கு. விசேடம் அதுவல்ல. கூழுக்குத் தொட்டுக்கொள்ள நாலைந்து விதமான பதார்த்தங்களை அந்தக் கடைக்காரர் கொடுத்தார். அதில் ஒன்று புளிச்சாறில் ஊறவைத்த பச்சை மிளகாய்.

இதைச் சற்று விளக்கவேண்டும். மிகவும் குறைவாக நீர் சேர்த்து, புளியை கெட்டியாகக் கரைத்துக் கொதிக்க வைத்துவிட வேண்டியது. அது உருண்டு திரண்டு பசை போல் வந்ததும் பச்சை மிளகாயின் விதைகளை அகற்றி (தேவைப்பட்டால் கொஞ்சம் சேர்க்கலாம்) நீளநீளத் துண்டுகளாக அந்தக் கொதியில் போட்டு அப்படியே ஊற விடுவது. கொஞ்சம் மஞ்சள் தூள். சற்றே உப்பு. வேறு எதுவும் அதில் கிடையாது. ஆனால் எப்பேர்ப்பட்ட ருசி தெரியுமா!

அந்தக் கம்பங்கூழும் புளி மிளகாயும் என் காலம் உள்ளவரை நினைவைவிட்டுப் போகாது. காரணம் அதன் ருசி மட்டுமல்ல.

காணாதது கண்டாற்போல அன்றைக்கு மூன்று சொம்பு கம்பங்கூழை வாங்கிக் குடித்து மூச்சு விட்ட பிறகு பூவுலகுக்குத் திரும்பி வந்தேன். பார்த்தால் என் சட்டையெல்லாம் கூழ். சட்டைப் பையில் சொருகியிருந்த பேனாவின் மூடிக்குள் வரை ஊடுருவியிருந்தது அக்கூழ்மாவதாரம்.

திடுக்கிட்டுவிட்டேன். அடக்கடவுளே! விழாவுக்கு இந்தச் சட்டையுடன் எப்படிப் போய் நிற்பது? மாற்றுச் சட்டை ஏதும் கைவசம் இல்லை.

‘தொடச்சி விட்டுருங்க தம்பி. போயிரும்’ என்றார் கடைக்கார நல்லவர்.

வேறு வழி? கூழ் பட்டுப் பாழ்பட்ட இடங்களையெல்லாம் நீர்விட்டுத் துடைத்தேன். அதற்குப் பேசாமல் குளித்திருக்கலாம். முழுச் சட்டையும் நனைந்து கசங்கிவிட்டது.

சரி போ, சட்டையில் என்ன இருக்கிறது? தவிரவும் எழுத்தாளனாகப்பட்டவன் எப்போதும் ஒரு ஏடாகூடம்தான் என்பதை இச்சமூகம் இந்நாள்களில் நன்கறிந்திருக்கும் என்று என்னை நானே தேற்றிக்கொண்டு மாலை வரை அதே சட்டையில் சுற்றிவிட்டு விழாவுக்குப் போய்ச் சேர்ந்தேன்.

நடந்த விழா முக்கியமல்ல. முடிந்த பிறகு புகைப்படக்காரர் சொன்னார். ‘காலர்ல எதோ கறை பட்டிருக்கு சார்.’

அது அந்தப் புளி மிளகாய்ப் பசையின் கறை.

கொண்டையை மறைக்கத் தெரியாதவனெல்லாம் இப்படித்தான் கால் நூற்றாண்டுக்குப் பிறகு கட்டுரை எழுதிக்கொண்டிருப்பான்.

-தமிழ் ஹிந்து நாளிதழில் வெளியான கட்டுரை

– மேலும் ருசிப்போம் | எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: writerpara@gmail.com

img_0057

9-ருசியியல் சில குறிப்புகள்: கோயில் பிரசாதங்களின் மகிமை!


தங்கத் தமிழகத்தில் பக்தி இயக்கம் பெருகி வேரூன்றியதில் கோயில்களின் பங்கைவிட, கோயில் பிரசாதங்களின் பங்கு அதிகம் என்பது என் அபிப்பிராயம். பின்னாட்களில் ஈவெரா பிராண்ட் நாத்திகம், இடதுசாரி பிராண்ட் நாத்திகம், இலக்கிய பிராண்ட் நாத்திகம் எனப் பலவிதமான நாத்திக நாகரிகங்கள் வளரத் தொடங்கிய போது, கோயிலுக்குப் போக விரும்பாதவர்களும் பிரசாதம் கிடைத்தால் ஒரு கை பார்க்கத் தவறுவதில்லை.

இதில் ஒன்றும் பிழையில்லை என்று வையுங்கள். தூண், துரும்பு வகையறாக்களில் எல்லாம் வேலை மெனக்கெட்டுப் போய் உட்கார்ந்துகொள்பவன் ஒரு புளியோதரையிலும் சர்க்கரைப் பொங்கலிலும் மட்டும் இருந்துவிட மாட்டானா என்ன?

வெளிப்படையாகச் சொல்வதில் வெட்கமே இல்லை. எனக்குப் பெருமாளைப் பிடிக்கும். பிரசாதங்களை ரொம்பப் பிடிக்கும்.

பிரசாதம் என்று நான் சொல்லுவது பிரபல கோயில்களின் பிரத்தியேக அடையாளங்களையல்ல. உதாரணத்துக்கு, திருப்பதி என்றால் நீங்கள் லட்டைச் சொல்லுவீர்கள். பழனி என்றால் பஞ்சாமிர்தம். அதுவல்ல நான் சொல்லுவது. இந்தப் பிரபலப் பிரசாதங்களுக்கு அப்பால் ஒவ்வொரு கோயிலிலும் வேறு சில ரகங்கள் அபார சுவையோடு தளிகையாகும். திருப்பதியில் எனக்கு லட்டைவிட கோயில் தோசை ரொம்பப் பிடிக்கும். பர்கரில் பாதியளவுக்கு கனத்திருக்கும் தோசை. அதை நெய் விட்டு வார்ப்பார்களா, அல்லது நெய்யில் குளிப்பாட்டி வார்ப்பார்களா என்று தெரியாது. மிளகு சீரகமெல்லாம் போட்டு ஜோராக இருக்கும். ஆறினால் நன்றாயிராது; தொட்டுக்கொள்ள சட்னி வேண்டும் என்பதெல்லாம் கிடையாது. மந்தார இலையில் சுற்றி எடுத்துக்கொண்டு கிளம்பி விடலாம். இரண்டு மூன்று நாள் வைத்திருந்து சாப்பிட்டாலும் ருசி பங்கம் கிடையாது.

இங்கே, சிங்கப்பெருமாள் கோயில் புளியோதரையும் அந்த ரகம்தான். நல்லெண்ணெய், மிளகு. இந்த இரண்டும்தான் இந்தப் புளியோதரையின் ஆதார சுருதி. ஒரு வாய் மென்று உள்ளே தள்ளினால் அடி நாக்கில் இழுக்கும் பாருங்கள் ஒரு சுகமான காரம்! அதை ஒரு வாரத்துக்குச் சேமித்து வைத்து அவ்வப்போது கூப்பிட்டுச் சீராட்ட முடியும்.

திருவாரூருக்குப் பக்கத்தில் திருக்கண்ணபுரம் என்று ஒரு திவ்யதேசம் இருக்கிறது. சௌரிராஜப் பெருமாள் அங்கே பிரபலஸ்தர். அவருக்கு முனியதரன் பொங்கல் என்று ஒன்றை நட்ட நடு ராத்திரி அமுது செய்விப்பார்கள். யாரோ முனியதரன் என்கிற குறுநில மன்னர்பிரான் ஆரம்பித்து வைத்த வழக்கம். இன்றைக்கு வரைக்கும் கோயிலில் பெருமாளுக்கு இந்த நடு ராத்திரி டின்னர் உண்டு. முனியதரன் படைத்ததென்னவோ வெறும் அரிசி, பருப்பு, உப்பு சேர்த்த மொக்கைப் பொங்கல்தான். பரிமாண வளர்ச்சியில் இன்று இப்பொங்கல் அமிர்த ஜாதியில் சேர்ந்துவிட்டது.

மிகச் சிறு வயதில் இந்த ஊர் உற்சவத்துக்கு ஒரு சமயம் போயிருக்கிறேன். நள்ளிரவு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த போது யாரோ எழுப்பும் சத்தம் கேட்டது. கொதிக்கக் கொதிக்க உள்ளங்கையில் பிரசாதத்தை வைத்துக்கொண்டு அப்பா நின்றிருந்தார். சூடு பொறுக்காமல் சர்வர் சுந்தரம்போல் அவர் பொங்கல் பந்தை பேலன்ஸ் செய்யத் தவித்து என் வாயில் சேர்த்த காட்சி இப்போதும் நினைவில் உள்ளது. வாழ்நாளில் அப்படியொரு பொங்கலை நான் உண்டதே இல்லை. அது வெறும் நெய்யும் பாலும் பருப்பும் சேர்வதால் வருகிற ருசியல்ல. வேறு ஏதோ ஒரு சூட்சுமம் இருக்கிறது. பெரும் தங்கமலை ரகசியம்.

இந்தப் பிரசாத வகையறாக்களில் நவீனத்துவத்தைப் புகுத்தியவர்கள் என்று ஹரே கிருஷ்ணா இயக்கத்தவர்களைச் சொல்லுவேன். பெங்களூருவில் உள்ள இஸ்கான் கோயிலுக்கு ஒருமுறை சென்றிருந்தபோது அங்கு நான் கண்டது பிரசாத ஸ்டால் அல்ல. பிரசாத ஹால். பந்தி பரிமாறுகிற மாதிரி வரிசையாக டேபிள் போட்டு நூற்றுக்கணக்கான பிரசாத வெரைட்டி காட்டி மிரட்டிவிட்டார்கள். சகஸ்ர சமோசா, கைவல்ய கட்லெட், தெய்வீக ரசகுல்லா, பக்தி பர்கர், பரவச பீட்ஸா, மதுர மசாலா தோசை.

ஆன்மிக ஆம்லெட் மட்டும்தான் இல்லை.

யோசித்துப் பார்த்தால் பக்தியே ஒரு ருசிதான். எங்கோ தொலைதூரத்தில் இருந்து பித்துக்குளி முருகதாஸின் ஒலித்தட்டுக் குரல் கேட்டால், அடுத்தக் கணம் எனக்குக் கண் நிறைந்துவிடும். பண்டிட் ஜஸ்ராஜின் மதுராஷ்டகம் கேட்டிருக்கிறீர்களா? கிருஷ்ணனே இறங்கி வந்து பால்சாதம் ஊட்டிவிடுவது போல இருக்கும். ரசனை, மனநிலை சார்ந்தது. அனுபவிப்பது என்று முடிவு செய்துவிட்டால் ஆழம் பார்த்துவிட வேண்டும்.

ஒருசமயம் சிங்கப்பூர் போயிருந்த போது, ‘கோகுல்‘ என்றொரு ஹோட்டலுக்குச் சென்றிருந்தேன். அது ஹரே கிருஷ்ணா இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் நடத்துகிற ஹோட்டல். மெனு கார்டில் மட்டன், சிக்கன் என்றெல்லாம் இருந்ததைக் கண்டதும் திகிலாகிவிட்டது.

என்ன அக்கிரமம் இது! கிருஷ்ணர் சிங்கப்பூர் போனபோது கட்சி மாறிவிட்டாரா என்ன?

ஹரே கிருஷ்ணா என்று அந்தராத்மாவில் அலறிக்கொண்டு எழுந்தபோது, உடனிருந்த என் நண்பர் பத்ரி ஆசுவாசப்படுத்தினார். அது சும்மா ஒரு எஃபெக்டுக்காகச் சேர்ப்பதுதானாம். டோஃபு துண்டுகளைச் சேர்த்துக் கிளறி நான்வெஜ் கடிக்கிற உணர்வைக் கொடுத்துவிடுவார்கள் போலிருக்கிறது. பன்னாட்டுப் பயணிகள் வந்து போகிற பிரதேசம். பெயரளவில் அசைவம் சேர்ப்பதில் பாவமொன்றுமில்லை என்று நினைத்திருக்கிறார்கள்.

சர்வம் கிருஷ்ணார்ப்பணம்! கொஞ்சம் ஆசுவாசமடைந்த பிறகு ரொஜாக் என்றொரு ஐட்டத்தை ஆர்டர் செய்து, சாப்பிட்டுப் பார்த்தேன். பழங்கள், பாலாடைக்கட்டி, டோஃபு, வெல்லம், சீரகம் என்று கையில் கிடைத்த எல்லாவற்றையும் சேர்த்துக்கொட்டிக் கிளறி, தக்காளி சூப் மாதிரி எதிலோ ஒரு முக்குமுக்கி எடுத்து வந்து வைத்தார்கள். அசட்டுத் தித்திப்பும் அநியாயப் புளிப்புமாக இருந்த அந்தப் பதார்த்தம் ஒரு கட்டத்தில் எனக்குப் பிடித்துவிடும்போல் இருந்தது.

இன்னொன்று கேட்கலாமா என்று யோசித்துக்கொண்டிருந்தபோது, நண்பராகப்பட்டவர் விநோதமான ஒரு பேரைக் கொண்ட (மீ கொரெய்ங் என்று ஞாபகம்) ஏதோ ஒரு மலாய் உணவுக்காகக் காத்திருந்தார். முன்னதாக மெனு கார்டில் அதன் சேர்மானங்களையெல்லாம் ஊன்றிப் படித்து நாலைந்து பேரிடம் விசாரித்த பிறகுதான் அதை உண்ணத் தயாராகியிருந்தார். கோர நாஸ்திக சிகாமணியான அவரை பகவான் கிருஷ்ணர் தமது உணவகம் வரைக்கும் வரவழைத்துவிட்டதை எண்ணி நான் புன்னகை செய்துகொண்டிருந்தபோது அவர் ஆணையிட்ட உணவு வகை மேசைக்கு வந்து சேர்ந்தது.

நண்பர் சாப்பிட ஆரம்பித்தார்.

‘நன்றாக இருக்கிறதா?’ என்று கேட்டேன். முதல் வாய் உண்டபோது சிரித்தபடி தலையசைத்தார். இரண்டாவது, மூன்றாவது, நான்காவது கவளம் உள்ளே போனபோது மீண்டும் கேட்டேன், ‘பிடித்திருக்கிறதா?’

மீண்டும் அவர் தலையசைத்தார். ஆனால் ஏதோ சரியில்லாத மாதிரி தோன்றியது. ஒரு கட்டத்தில் வேகவேகமாகச் சாப்பிட ஆரம்பித்தார்.

அந்த உணவகத்தில் மிக மெல்லிய ஒலியளவில் கிருஷ்ண பஜன் ஒலித்துக் கொண்டிருந்தது. அதன் தாள கதிக்கு ஏற்ப அவர் உண்டுகொண்டிருந்த மாதிரி தோன்றியது. சட்டென்று ஏதோ ஒரு கணத்தில் அவர் பிளேட்டை விடுத்து, என்னை நிமிர்ந்து பார்த்தார். அவர் கண்ணில் இருந்து கரகரவென நீர் வழிந்து கொண்டிருந்தது.

ஆ! எப்பேர்ப்பட்ட அற்புதத் தருணம் அது! தமது பள்ளி நாள் தொடங்கி, கடவுள் இல்லை என்று சொல்லி வளர்ந்த பிள்ளை அவர். தென் தமிழ் தேசத்தில் இருந்து எங்கோ மூவாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு அழைத்து வந்து அவரை இப்படிக் கிருஷ்ண பக்தியில் கரைய வைத்த பெருமானின் லீலா விநோதம்தான் எப்பேர்ப்பட்டது!

நான் புல்லரித்து நின்றபோது நண்பர் சொன்னார், ‘செம காரம்’.

-தமிழ் ஹிந்து நாளிதழில் வெளியான கட்டுரை

– மேலும் ருசிப்போம் | எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: writerpara@gmail.com

img_0057

8-ருசியியல் சில குறிப்புகள்! – உப்புமாவின் உன்னதம்


தமிழர்களால் மிக அதிகம் தூற்றப்பட்ட ஓர் உணவு உண்டென்றால் அது உப்புமாவாகத்தான் இருக்க முடியும். எனக்கு உப்புமா பிடிக்கும் என்று சொல்கிற பிரகஸ்பதிகள் ஒப்பீட்டளவில் வெகு சொற்பமே.

உப்புமா மீதான இந்த துவேஷம் நமக்கு எப்படி உண்டானது என்று யோசித்துப் பார்த்தால் கிடைக்கும் பதில்களில் ஒரே ஒரு காரணம்தான் நியாயமானதாக இருக்கும். அது, உப்புமாவை வெகு சீக்கிரம் சமைத்துவிட முடியும் என்பதுதான்! உடனே கிடைத்துவிடும் எதற்கும் அத்தனை மதிப்பு சேராது என்பது இயற்கையின் விதி. அவ்வகையில் உப்புமா ஒரு பாவப்பட்ட சிற்றுண்டி.

ஆனால் முற்றிலும் மாறுபட்ட கல்யாண குணங்களால் வடிவமைக்கப்பட்ட ஜீவராசியான எனக்கு, உப்புமா என்பது மிகவும் பிடித்தமான உணவு. அதன்மீதான நீங்காத விருப்பத்தை மிகச் சிறு வயதுகளில் என் பாட்டி உருவாக்கினார். விடுமுறை நாள்களில் சைதாப்பேட்டை பெருமாள் கோயில் தெருவில் இருந்த பாட்டி வீட்டுக்குப் போகும்போதெல்லாம் உப்புமா ப்ராப்தம் சித்திக்கும்.

பாட்டியானவருக்கு அன்றைய தேதியில் ஒரு டஜனுக்குச் சற்று கூடுதலாகவோ, குறைவாகவோ பேரப் பிள்ளைகள் இருந்தார்கள். நாலைந்து மகள்கள், இரண்டு மூன்று மகன்களைக் கொண்ட பிரம்மாண்ட குடும்ப இஸ்திரி அவர். எப்போதேனும்தான் நடக்கும் என்றாலும் மொத்தக் குடும்பமும் ஒன்றுகூடுகிற நாள்களில் அவருக்கு மூச்சுத் திணறிவிடும். அத்தனை பேரையும் உட்கார வைத்து தோசை வார்த்துப் போடுவதோ, பூரிக் கடை திறப்பதோ நடைமுறை சாத்தியமற்றது. தவிரவும் பகாசுர வம்சத்தில் உதித்தோர் யாரும் ஒன்றிரண்டுடன் திருப்தி கொள்பவர்களும் அல்லர்.

எனவே பாட்டி உப்புமா என்ற ஆயுதத்தைக் கையில் எடுத்துவிடுவார். பிள்ளைகளா, இன்று அரிசி உப்புமா.

பாட்டியின் அரிசி உப்புமா வேள்வியானது அரிசியை நனைத்து உலர்த்தி மாவு மெஷினுக்கு எடுத்துச் செல்வதில் தொடங்கும். அரிசிப் பதமும் இல்லாமல், ரவைப் பதமும் இல்லாமல் அவருக்கென ஒரு திரிசங்கு பதம் உண்டு. காசித் துண்டால் பரபரவென முதுகு தேய்க்கிற பதம் அது. அந்தப் பதத்தில் அதை அரைத்து எடுத்து வருவார். பரம தரித்திர சிகாமணியான என் தாத்தா, வீட்டுச் செலவுக்குப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் கொடுத்த பணத்தோடு சரி. பாட்டி அதன்பிறகு எப்படிச் சமாளித்து வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தார் என்று எனக்குத் தெரியாது.

எனவே அரிசி உப்புமாவுக்கு அலங்கார விசேஷங்கள் ஏதும் இருக்காது. வெண்கலப் பானையில் அதிகம் எண்ணெய் காணாத, சும்மா தாளித்த வெறும் அரிசி உப்புமா. உண்மையில் அதைத் தின்னுவது சிரம சாத்தியம்தான். ஆனாலும் பாட்டியெனும் புத்திசாலி ஒரு காரியம் செய்வாள். சமைத்து இறக்கிய அரிசி உப்புமாவின் மீது ஒரு சிறு ஸ்பூன் அளவுக்கு நெய்யை ஊற்றி கப்பென்று மூடி வைத்துவிடுவாள்.

பத்திருபது நிமிஷங்களுக்குப் பிறகு அந்த உப்புமா பாத்திரத்தைத் திறந்தால் அடிக்கும் பாருங்கள் ஒரு மணம்! அந்த மணம்தான் அந்த உப்புமாவின் ருசியாகப் பரிமாணம் பெற்றிருக்கிறது என்று இப்போது தோன்றுகிறது. தோட்டத்தில் பறித்த பாதாம் இலைகளைக் கழுவி, ஆளுக்கு இரண்டு கரண்டி உப்புமாவைப் போட்டு, ஓரத்தில் ஒரு துண்டு மாங்காய் ஊறுகாயை வைத்துத் தருவார் பாட்டி.

என் சிறு வயதுகளில் உண்ட அந்த அரிசி உப்புமா இன்று வரை நாவில் நிற்கிறது.

பின்னாளில் வந்து சேர்ந்த என் தர்மபத்தினி, கோதுமை ரவை உப்புமாவில் ஒரு புரட்சி செய்யும் முடிவுடன் வீட்டில் சாம்பார் வைக்கும் அனைத்து தினங்களிலும் இரவு உணவு கோதுமை ரவை உப்புமா என்றொரு சட்டம் கொண்டு வந்தார். இக்கலவரமானது எந்தளவுக்குச் சென்றது என்றால், காலை சமையல் கட்டில் இருந்து சாம்பார் வாசனை வரத் தொடங்கினாலே, ‘அப்பா இன்னிக்கு நைட் டின்னருக்கு ஓட்டலுக்குப் போலாமா?’ என்று என் மகள் கேட்க ஆரம்பித்தாள்.

உண்மையில் கோதுமை ரவை உப்புமாவும் ஒரு நல்ல சிற்றுண்டிதான். சேர்மானங்கள் அதில் முக்கியம். உப்புமாவின் ருசி என்பது அதில் இடித்துச் சேர்க்கப்படும் இஞ்சியால் பூரணமெய்துவது. நீங்கள் எண்ணெயைப் பீப்பாயில் கொண்டு கொட்டுங்கள். மணக்க மணக்க நெய்யூற்றித் தாளியுங்கள். காய்கறிகள் சேருங்கள். வேர்க்கடலையோ, முந்திரியோ வறுத்துத் தூவுங்கள். என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால் உப்புமா ருசிப்பது இஞ்சியால் மட்டுமே. எவ்வளவு அதிகம் இஞ்சி சேருகிறதோ, அவ்வளவு அதிக ருசி.

என் நண்பர் ஈரோடு செந்தில்குமார் ஒரு ருசிகண்டபூரணர். திடீரென்று இருபத்தி நாலு மணிநேர உண்ணாவிரதம், நாற்பத்தியெட்டு மணிநேர உண்ணாவிரதம் என்று அறிவித்துவிட்டு வெறுந்தண்ணீர் குடித்துக்கொண்டு கிடப்பார். விரதம் முடிகிற நேரம் நெருங்குகிறபோது வீறுகொண்டு எழுந்துவிடுவார்.

‘சுவாமி! என்னோட இன்னிய மெனு சொல்றேன் கேளும். ஆறு முட்டை. முன்னூத்தம்பது கிராம் பன்னீர் உப்புமா. நூத்தம்பது கீரை. நூத்தம்பது வாழத்தண்டு. நூறு தயிர், ரெண்டு க்யூப் சீஸ். பத்தாதோன்னு எழுவது கிராம் வெண்ணெயும் முப்பது கிராம் நெய்யும் சேத்துக்கிட்டேன்.’

மனைவியை இம்சிக்காத உத்தமோத்தமர் அவர். தனக்கு வேண்டியதைத் தானே சமைத்துக்கொள்கிற சமத்து ரகம்.

ஒருநாள் நட்டநடு ராத்திரி பன்னெண்டே காலுக்கு போனில் அழைத்தார். அப்போதுதான் விரதம் முடித்து, விருந்தை ருசித்திருப்பார் போலிருக்கிறது.

‘சுவாமி, உமக்கு அமிர்தத்தோட ருசி தெரியுமா? சொல்றேன் கேட்டுக்கங்க. நாலு கரண்டி நல்லெண்ணெய் எடுத்துக்கங்க. கடாய்ல ஊத்திக் காயவிட்டு ரெண்டு கரண்டி சாம்பார் மொளவொடி சேரும். காரம் சுருக்குனு இருந்தாத்தான் ருசிக்கும். ஆச்சா? அப்பறம், வரமொளவொடித் தூள் நாலு கரண்டி. வரமல்லி வாசம் பிடிக்கும்னா சாம்பார்த் தூள் அரகரண்டி எக்ஸ்டிரா. உப்பு பெருங்காயம் உம்ம இஷ்டம். இதெல்லாம் வரிசையா போட்டா தளபுள தளபுளன்னு எண்ண கொதி வந்துரும். அடங்கறப்ப ஆஃப் பண்ணீரும். அஞ்சு நிமிஷம் மூடி வெச்சிட்டு அப்பறம் எடுத்து பன்னீர் உப்புமாவுக்குத் தொட்டு சாப்ட்டுப் பாரும். எங்க ஊர்ல மீன வறுத்து வெச்சிக்கிட்டு இதத் தொட்டு சாப்டுவாங்க. மீனவிட இது பனீருக்குத்தான் அருமையாச் சேரும்.’

பல வருஷங்களுக்கு முன்னால் டெல்லியில் கணபதி என்று எனக்கொரு நண்பர் இருந்தார். இப்போது இல்லை. காலமாகிவிட்டார். யுஎன்ஐ செய்தி நிறுவனத்தில் உத்தியோகம் பார்த்துக்கொண்டிருந்தவர். ஒருநாள் அவர் எனக்கு கீரை உப்புமாவை அறிமுகப்படுத்துகிறேன் என்று சொல்லி ஒரு ஓட்டலுக்கு அழைத்துப் போனார். அது உத்திரபிரதேசத்தில் குருட்சேத்திரத்துக்குப் பக்கத்தில் இருந்த ஒரு சிறு டவுன். இப்போது பேர் மறந்துவிட்டது.

ரவையுடன் பாலக் கீரையைச் சேர்த்து வேகவைத்திருந்தார்கள். மிளகாய் சேர்மானம் கிடையாது. குறுமிளகுதான். நல்லெண்ணெய்க்கு பதில் தேங்காய் எண்ணெய். விசேடம் அதுவல்ல. கேரட்டுடன் பொடிப்பொடியாக நறுக்கிய கொய்யாக்காயை அந்த உப்புமா முழுதும் தூவிக் கொடுத்தார்கள். ருசியென்றால் அப்படியொரு ருசி.

உப்புமாவுக்கு இம்மாதிரியாகக் கொஞ்சம் கேனத்தனமான, அல்லது கலை மனத்துடன் அலங்கார வினோதங்கள் செய்தால் அது ஓர் உன்னதமான பட்சணமாகிவிடுகிறது.

சர்க்கரை தூவிய உப்புமாவை என்றாவது மசால் தோசைக்குள் வைத்து ருசித்துப் பார்த்திருக்கிறீர்களா? அது ஒரு மினியேச்சர் சொர்க்கம்.

-தமிழ் ஹிந்து நாளிதழில் வெளியான கட்டுரை

– மேலும் ருசிப்போம்

இட்லி உப்புமாவின் ருசி ஏன் இட்லியிலோ உப்புமாவிலோ இருப்பதில்லை ?

அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள் செய்யும்போதுதான் அரிசி உப்புமா அதன் நிஜ ருசியைக் காட்டுகிறது.

–குற்றியலுலகம் – தேர்ந்தெடுத்த ட்விட்டர் குறிப்புகளின் தொகுப்பு

எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: writerpara@gmail.com

img_0057

7-ருசியியல் சில குறிப்புகள்! – பாதி பழுத்த வாழைப் பழம்!


எனது ஸ்தூல சரீரத்தின் சுற்றளவைச் சற்றுக் குறைக்கலாம் என்று முடிவு செய்து அரிசிசார் உணவினங்களில் இருந்து கொழுப்புசார் ருசியினத்துக்கு மாறியதைச் சொன்னேன் அல்லவா? அப்போது எனக்கு அறிமுகமாகி நண்பரானவர், சவடன் பாலசுந்தரன். எனக்கு நிகரான கனபாடிகளாக இருந்தவர். நடந்து செல்கிற சமூகத்தின் ஊடாக உருண்டு செல்கிற உத்தமோத்தமர் குலம். ஏதோ ஒரு கட்டத்தில் விழித்தெழுந்து, கொழுப்பெடுத்தால் கொடியிடை அடையலாம் என்பதைத் தெரிந்துகொண்டு கட்சி மாறியவர். எண்ணி ஆறு மாதங்களில் சுமார் 35 கிலோ எடையைக் குறைத்த பெரும் சாதனையாளர்.

அவர்தான் எனக்கு அட்சதையைப் போட்டு முதல்முதலில் விரதத்துக்குப் பிடித்துத் தள்ளினார். ‘‘வயித்த மடிச்சிக் காயப் போடுங்க சார்!’’

நமக்குத் துணி மடிக்கக்கூட வராது. இதில் வயிற்றை எங்கே மடிப்பது? அப்புறம் காயப் போடுவது?

‘‘பண்ணிப் பாருங்க சார். ஒடம்பு சும்மா காத்து மாதிரி லேசாயிடும். அப்ப முன்னவிட நல்லா சாப்டுவீங்க!’’

ஆ! இதைச் சொன்னாரே, இது நல்ல விஷயம். இயல்பில் நான் அதிகம் உண்பவனல்ல. ஆனால், அரை வாய் சாப்பிட்டாலும் அது அரச போஜனமாக இருந்தாக வேண்டும். நான் வளர வழியுண்டோ இல்லையோ, நா வளர நாலு பக்கமும் வாசல் திறந்து வைத்தவன்.

ஒரு சமயம் திம்மம் என்ற ஊருக்குப் போயிருந்தேன். ஊர் சின்னதுதான். ஆனால், சரியான மலைக்காடு. ஒரு கடை கண்ணி கண்ணில் படவில்லை. நான் போன முகூர்த்தத்தில் மாநிலம் தழுவிய கடையடைப்பு வேறு நடந்துகொண்டிருந்தபடியால், சுத்தம். ஒரு மாதிரி மதியம் 3 மணி வரை வெறும் தண்ணீர் குடித்து சமாளித்துக்கொண்டிருந்தேன். அதற்குமேல் தாங்கவில்லை. ‘‘இனி பொறுப்பதில்லை தம்பீ, என்னத்தையாவது கொண்டு வா!’’ என்று ஒரு பழங்குடியின் குடிசை வாசலில் உட்கார்ந்துவிட்டேன்.

அங்கிருந்த ஒரு சபரிக் கிழவி அன்று என் பசியைத் தீர்த்தாள். பாதி பழுத்த வாழைப் பழத்தை வேகவைத்துச் சாப்பிட்டிருக்கிறீர்களா? அன்று எனக்குக் கிடைத்தது அதுதான். இனிப்பின் சாயலோடு இட்லியின் மிருதுத்தன்மை சேர்ந்த உணவு.

இதற்குத் தொட்டுக்கொள்ள என்னவாவது கிடைத்தால் சிறப்பாக இருக்குமே?

ஆனால், கிழவி பார்த்த பார்வை சரியில்லை. இதற்கெல் லாமா ஒரு ஜென்மம் தொட்டுக்கொள்ளக் கேட்கும்? ‘‘வேண்டுமானால் சர்க்கரை தருகிறேன்’’ என்றாள். ம்ஹும். அது சரிப் படாது. உப்புமாவுக்கு சர்க்கரை கேட்கிறவர்களையே தேசப் பிரஷ்டம் செய்ய வேண்டுமென்று நினைப்பவன் நான். இதில் வேகவைத்த வாழைப் பழத்துக்குச் சர்க்கரையாவது? அபசாரம்.

‘‘வேறென்ன இருக்கிறது?’’ என்று கேட்டேன். ‘‘முதல் நாள் வைத்த ரசத்தைத் தவிர ஒன்றுமில்லை’’ என்று சொல்லிவிட்டாள்.

ஒரு கணம் யோசித்தேன். வாழைப் பழத்துக்கு ரசம்! ஒரு முயற்சி செய்து பார்த்தால்தான் என்ன? அசட்டுத்தனத்துக்கு ஓர் அழகுண்டு. அதைத் திருட்டுத்தனமாக ரசிக்கவும் முடியும்.

‘‘அம்மா, கோபித்துக்கொள்ளாமல் அந்த ரசத்தை எடுத்து வருவீர்களானால் கோடி புண்ணியம் உமக்குண்டு.”

அவர் பார்த்த பார்வைதான் கொஞ்சம் நாராசமாக இருந்தது. ஆனால், அந்த ரசம் பிரமாதம். நிறையப் பூண்டு இடித்துப் போட்ட காரசாரமான தூதுவளை ரசம். மறு கொதிப்பில் அதன் ருசி மேலும் கூடியிருக்க வேண்டும்.

நான் அந்த வேகவைத்த பழங்களை ரசத்தில் பிய்த்துப் போட்டேன். இரண்டு நிமிடம் ஊறவிட்டு ரசம் சோறு போலவே அள்ளி அள்ளி உண்டேன். வாழ்நாளில் அப்படியொரு ருசி மகா சமுத்திரத்தில் அதன்பின் முக்குளித்தெழ வாய்க்கவில்லை.

இப்போது யோசித்துப் பார்த்தால், அந்த அபார ருசியை எனக்கு அன்றைய முழுப்பட்டினிதான் அதில் அளித்திருக்க வேண்டும் என்று படுகிறது. ஒரு முழு 24 மணி நேரத்தை நீரால் மட்டுமே வயிற்றை நிரப்பி, 25-வது மணிநேரம் வழக்கமாகச் சாப்பிடுவதைச் சாப்பிட்டுப் பாருங்கள்! வழக்கத்தைவிடப் பல மடங்கு ருசிக்கும்.

நம்மூரில் ஒரு பழக்கம். என்னத்தையாவது நல்ல விஷயத்தைச் சொல்லிவைக்க நினைத்தால், உடனே அதை பக்தி பார்சலில் சுற்றிக் கொடுத்துவிடுவார்கள். திங்களானது சிவனுக்குரியது. செவ்வாய் முருகனுக்கு உகந்த தினம். வியாழன் என்றால் குரு. வெள்ளிக்கிழமைக்குத் திருமதி மகாவிஷ்ணு. சனியென்றால் திருமலையப்பன். மற்ற தினங்களில் மேற்படி தெய்வங்கள் சிறு விடுப்பு விண்ணப்பம் அனுப்பிவிடுவார்களா என்றெல்லாம் கேட்கப்படாது. சஷ்டி விரதம். சபரிமலை விரதம். ஏகாதசி விரதம். கிருத்திகை விரதம். எது மிச்சம்? எத்தனையோ இருக்கிறது. இஷ்டத்துக்கு ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டியதுதான்.

நான் ஏகாதசியைத் தேர்ந்தெடுத்துக்கொண்டேன். சும்மா ஒரு இதுக்குத்தான். உண்மையில் எனது ஏகாதசி விரதம் எம்பெருமானுக்கே அத்தனை சரியாகப் புரியாது என்று நினைக்கிறேன்.

விளக்குகிறேன்.

பொதுவாக ஏகாதசி விரதம் என்பதை நமது மகாஜனம் அணுகும் விதம் வேறு விதமானது. ‘ஒரு பொழுது‘ என்பதற்கு உண்மையான அர்த்தம், ஒருவேளை மட்டும் சாப்பிடுவது என்பது. ஆனால், ஒருவேளை மட்டும் சாப்பாடு, மற்றவேளை வளைத்துக்கட்டி டிபன் என்று ஆல்டர் செய்யப்பட்டுவிட்டது அது. சிலர் காலை உணவை மட்டும் தவிர்த்துவிட்டு மதியம் சாப்பிடுவார்கள். இரவுக்கு இரண்டு பழங்கள், பால்.

இதுவா விரதம்? இதில் அக்கிரமம் என்னவென்றால், ஏகாதசியன்று கொலைப் பட்டினி கிடந்த மாதிரி மறுநாள் காலை சேர்த்து வைத்து கபளீகரம் செய்துவிடுவார்கள். சும்மா சொல்லிக்கொள்ளவேண்டியது. நானும் விரதம் இருந்தேன்.

இந்த மரபான அக்கிரமத்தை ஒரு வழி பண்ணிவிடுவது என்று முடிவு செய்தேன். எனவே என்னுடைய ஏகாதசி விரதத்தை இவ்வாறாக வகுத்துக்கொண்டேன்:

ஏகாதசிக்கு முதல் நாள் ராத்திரி திருப்தியாகச் சாப்பிட்டுவிடுவது. அதற்குப் பிறகு எதுவும் கிடையாது. தாகமெடுத்தாலும் தண்ணீர், பசித்தாலும் தண்ணீர். ஒன்றுமே தெரியாவிட்டாலும் ஒரு மணி நேரத்துக்கு ஒரு தம்ளர் தண்ணீர்.

பொதுவாக ஏகாதசிக்கு விரதமிருப்பவர்கள் மறுநாள் காலைதான் விரதம் முடிப்பார்கள். நமக்கு அதெல்லாம் இல்லை. நான் விரதம் முடிக்கும் நேரம்தான் எனக்கு ஏகாதசியும் முடியும். எனவே அன்றிரவே. என் கணக்கு சரியாக 24 மணிநேரம். முடிந்தது கதை.

ஒரு 200 கிராம் பனீர். இன்னொரு 200 கிராமுக்கு நெய்யில் சமைத்த என்னவாவது ஒரு காய்கறி. இட்டமுடன் தொட்டுக்கொள்ள இதமான வெண்ணெய். சவுகரியம் இருந்தால் சாலட் அல்லது சூப். போதவில்லையா? 25 கிராமுக்கு ஒரு சீஸ் க்யூப். அப்புறம் ஒரு கப் தயிர்.

எனது ஏகாதசி விரதமானது ஏகாதசி தினத்தன்றே இரவு சுமார் 10 மணிக்குப் பூரணமடையும். அந்த முழுக் கொழுப்புணவுக்குப் பிறகு துவாதசிக் கொண்டாட்டமெல்லாம் கிடையாது. மறுநாள் காலை வெறும் தண்ணீர்.

இதனை என் ஈரோட்டு நண்பர் ஒருவரிடம் சொன்னபோது, ‘‘அட என்னய்யா நீர்! விரதம் முடிக்கத் தெரியாதவராக இருக்கிறீரே. நான் அனுப்புகிறேன் பாரும், எனது விரத முடிப்பு மெனுவை’’ என்று ஒன்றை அனுப்பிவைத்தார்.

மிரண்டு போனேன். நாவுக்குச் சேவகம் செய்வதில் நானெல்லாம் அவரிடம் மடிப் பிச்சை ஏந்தவேண்டும். அந்த மகானுபாவரைப் பற்றி அடுத்த வாரம் சொல்கிறேன்.

-தமிழ் ஹிந்து நாளிதழில் வெளியான கட்டுரை

– மேலும் ருசிப்போம்

எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: writerpara@gmail.com

img_0057

கும்பகோணம் டிகிரி காபி ரகசியம் தெரியுமா? – குள.சண்முகசுந்தரம்


coffee_2332897f

பித்தளை அல்லது தாமிரத்தாலான சற்றே மெகா சைஸ் ஃபில்டர்கள், ‘டம்ளர் – டவரா செட்’கள் இவைதான் கும்பகோணம் டிகிரி காபிக்கான அக்மார்க் முத்திரை எனப் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், உண்மை அதுவல்ல.

ஐம்பது வருடங்கள் பின்னோக்கிப் பார்த்தால் கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் ஆலயத்தின் மொட்டை கோபுர வாசலில் ‘லெட்சுமி விலாஸ் காபி கிளப்’ இருந்தது. இங்கே ஃபில்டர் காபி குடிக்க எந்நேரமும் கூட்டம் வரிசை கட்டி நிற்கும். தனது கடையை நம்பி வந்தவர்களின் நாவுக்கு ருசியான காபியைத் தருவதில் தனக்கென ஒரு இடத்தைத் தக்க வைத்திருந்தவர் கடையின் உரிமையாளர் பஞ்சாமி ஐயர்.

இதனால் அக்கம் பக்கத்து மிராசுகள் எல்லாம் வண்டி கட்டி வந்து கிளப் டிகிரி காபிக்காகத் தவம் கிடந்தார்கள். பசும்பாலை அப்படியே கறந்து துளியும் தண்ணீர் கலக்காமல் அப்போதே காய்ச்சி எடுத்து, ஸ்பெஷலாக வறுத்து அரைக்கப்பட்ட காபி தூளில் நம்பர் ஒன் தரத்தை எடுத்து அதில் ஒரே ஒரு முறை மட்டுமே டிகாஷன் எடுத்து மணக்க மணக்க ஃபில்டர் காபி போட்டுக் கொடுத்தார் பஞ்சாமி ஐயர். இதற்காகத் தனது ‘கிளப்’பின் பின்புறம் பிரத்யேக மாட்டுப் பண்ணையே வைத்திருந்தார். அந்தக் காலத்திலேயே அதில் இருபதுக்கும் குறையாத பசு மாடுகள் அசைபோட்டுக் கொண்டிருந்தன என்றால் பஞ்சாமி ஐயரின் பொருளாதாரப் பலத்தை ஊகித்துக் கொள்ளுங்கள்.

கும்பகோணம் மற்றும் அதன் அக்கம் பக்கத்தில் மட்டுமே தெரிந்திருந்த பஞ்சாமி ஐயர் காபியை உலகறியச் செய்தது இசை வித்வான்கள்தான். கும்பகோணம் இசைக் கச்சேரிகளுக்கு வந்த வித்வான்கள் பஞ்சாமி ஐயரின் டிகிரி காபியைக் குடித்துப் பழகி, ஒரு கட்டத்தில் அதன் சுவைக்கு அடிமையாகவே மாறிப்போனார்கள். இதனால் போகுமிடமெல்லாம் ‘குடிச்சா கும்பகோணம் பஞ்சாமி ஐயர் கடை டிகிரி காபி மாதிரி குடிக்கணும்’ என்று பேச ஆரம்பித்தார்கள். இதுவே பேச்சு வழக்கில் கும்பகோணம் டிகிரி காபியாகிப் போனது.

கும்பகோணம் கொழுந்து வெற்றிலைக்குப் போட்டி போட்டுக் கொண்டு கும்பகோணம் டிகிரி காபியும் பிரபலமானது. பஞ்சாமி ஐயரைத் தொடர்ந்து இன்னும் பலர் கும்பகோணம் பகுதியில் டிகிரி காபி கடைகளைத் திறந்தார்கள். என்றாலும் 1960 தொடங்கி 1986 வரை கும்பகோணத்தில் பஞ்சாமி ஐயர்தான் கொடிகட்டிப் பறந்தார்.

இப்போதும் கும்பகோணத்தில் டிகிரி காபி கடைகள் பல இருக்கின்றன. ஆனால், அவர்கள் யாரும் ‘கும்பகோணம் டிகிரி காபி கடை’ என்று தங்களைப் பிரகடனப்படுத்திக் கொள்ளவில்லை. இது குறித்து நம்மிடம் பேசினார் கும்பகோணத்தில் டிகிரி காபி கடை வைத்திருக்கும் ‘முரளீஸ் கபே’ உரிமையாளர் முரளி

“பித்தளையில் டம்ளர் – டவரா ‘செட்’டையும் ஃபில்டரையும் வெச்சு காபி ஆத்திட்டா மட்டும் கும்பகோணம் டிகிரி காபி ஆகிடாது. காபி தூளை வறுத்து அரைத்துத் தரம் பிரிக்கிறதுல ஏ, பி, ரோபோஸ்ட்ன்னு மூணு தரம் இருக்கு. இதுல ‘பி’ தான் நம்பர் ஒன் தரம். பஞ்சாமி ஐயர் இந்தத் தூளில்தான் காபி போட்டார். மத்தவங்க ஒரு தடவ காபித் தூள் போட்டா அதுலருந்து மூணு தடவை டிகாஷன் அடிப்பாங்க. ஆனா, பஞ்சாமி ஐயர் ஒரே ஒரு தடவதான் டிகாஷன் எடுப்பாரு. இப்படியெல்லாம் செஞ்சுதான் தன்னோட காபிக்கு ரசிகர் பட்டாளத்தைச் சேர்த்து வைச்சிருந்தாரு.

அதுபோல, டிகிரி காபிக்கும் பித்தளை ‘டம்ளர் – டவரா செட்’ட்டுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. கும்பகோணம் பித்தளைப் பாத்திரங்களுக்குப் பேர் போன ஊர். அதனால் அந்தக் காலத்தில் பித்தளை டம்ளர் – டவரா ‘செட்’ல டிகிரி காபியைக் கொடுத்தாங்க. அப்ப எவர்சில்வரும் அவ்வளவா புழக்கத்தில் இல்லை. அதுவுமில்லாம மத்த பாத்திரங்களைவிடக் கூடுதல் நேரத்துக்குப் பித்தளை பாத்திரத்துல சூடு நிலைத்து இருக்கும். கும்பகோணம் டிகிரி காபியைப் பித்தளை பாத்திரங்கள்ல குடுத்ததுக்கு இதுதான் காரணம்” என்று கும்பகோணம் டிகிரி காபி ரகசியத்தைச் சொல்லி முடித்தார் முரளி.

-தமிழ் ஹிந்து நாளிதழில் 2015-ம் ஆண்டில் வெளியான கட்டுரை