Category Archives: Misc

ஏரி காத்த அருண்! – ஆர்.வெங்கடேஷ்


சென்னை மாம்பலம்வாசிகளுக்கு மேட்லி சாலை சப்வேவை ஒட்டி இருக்கும் கோதண்டராமர் கோயில் குளம் வெகு பிரபலம். அதன் புகழுக்கு அதன் அசுத்தமும் ஒரு காரணம். இப்போது போய் பாருங்கள். குப்பைகளும் கழிவுகளும் நீக்கப்பட்டு, ஆகாயத் தாமரைகள் அகற்றப்பட்டு, கரைகள் உயர்த்தப்பட்டு, திடீரென்று புதுப்பொலிவோடு புனிதமும் காக்கப்பட்டுள்ளது.

இந்த அசத்தல் மாற்றத்துக்கு அசல் காரணம், 26 வயதான அருண் கிருஷ்ணமூர்த்தி. கூகுள் நிறுவன வேலையை விட்டுவிட்டு ஏரி, குளங்களைக் காப்பதில் ஒன்பது வருடங்களாகக் கலக்கிக் கொண்டிருக்கிறார் அருண். இதற்கெனவே ‘என்விரான்மென்டலிஸ்ட் பௌண்டேஷன் அஃப் இந்தியா’ என்ற அமைப்பை நிறுவியுள்ளார். அவரிடம் பேசினோம்:

மொத்தம் எத்தனை ஏரி, குளங்களை மீட்டிருப்பீர்கள்?

சென்னை, கோவை, ஹைதராபாத், தில்லி, புதுச்சேரி ஆகிய ஊர்களில் மொத்தம் 39 ஏரிகளையும் 41 குளங்களையும் சுத்தப்படுத்தி இருக்கோம். இதை நான் மட்டுமே செய்யலை. என்னோட கிட்டத்தட்ட 900 வாலண்டியர்கள் இருக்காங்க. அவங்கதான் எல்லாத்தையும் செய்யறாங்க.”

எப்படி இதையெல்லாம் ஆரம்பிச்சீங்க?

சின்ன வயதிலிருந்தே பறவைகள் மீது ஆர்வம் அதிகம். ஆந்திரா பூர்வீகம். ஆனால், சென்னை முடிச்சூரில்தான் வளர்ந்தேன். கீழ்க்கட்டளை பகுதியில் உள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியின் இயற்கை எழில் கொஞ்சும் அழகைப்பார்த்து வளர்ந்தவன். இதற்குக் கீழ்க்கட்டளை ஏரிதான் நீராதாரம். ஏரி நிறைந்து வழியும்போது ஏகப்பட்ட பறவைகளும் மீன்களும் ஆமைகளும் கண்ணில் படும். சின்ன வயதில் பார்த்த காட்சிகள் தற்போது இல்லை. ஏரி இருந்த இடத்தில் குப்பைகள் மண்டிக்கிடக்கின்றன.

இதைச் சுத்தப்படுத்தி மீண்டும் எழில் கொஞ்சும் ஏரியாகப் பார்க்கவேண்டும் என்ற எண்ணத்தில்தான் இயற்கை ஆர்வம் என்னுள் முளைவிட்டது. ஹைதராபாத்துல கூகுள்ல வேலை செஞ்சுக்கிட்டு இருந்தப்பவே ஒரு ஏரியைத் தூர்வாரினோம். அப்புறம் அதையே ஏன் எல்லா இடங்களிலேயும் செய்யக் கூடாதுன்னு தோணுச்சு. வேலையை விட்டுட்டு நண்பர்களின் உதவியோட இதைச் செய்யறேன்.”

எப்படி திட்டமிடறீங்க?

ரொம்ப மோசமா இருக்கிற ஏரி, குளங்களையோ, ஆக்கிரமிப்பு, கேஸுன்னு இருக்கக்கூடிய இடங்களையோ தொடறதில்ல. தூர்வாரி கிளீன் செஞ்சா காப்பாத்த முடியும்னு தோணக்கூடிய ஏரி, குளங்களை எடுத்துக்கறோம். அதுவும் அந்த நீர்நிலைகளைச் சுத்தி இருக்கிற மக்களே எங்ககிட்ட கேட்டாங்கன்னா, உடனடியா எடுத்துக்கறோம்.

முதல்ல நேரா போய்ப் பார்த்துட்டு, என்னவிதமான வேலைகள் செய்யணும்னு அசெஸ் பண்ணுவோம். அப்புறம், எங்களோடு ஃபேஸ்புக் பேஜ்ல, வெப்சைட்டுல, மொபைல் ஆப்கள்ல புதன்கிழமை தோறும் விவரங்களைப் போட்டுடுவோம். யார் யாரெல்லாம் ஆர்வமாக இருப்பாங்களோ, அவங்க எல்லாரும் அந்தந்த ஸ்பாட்டுக்கு வந்துடுவாங்க.”

வாலண்டியர்களுக்கு என்ன வசதி செய்து தர்றீங்க?

ஒண்ணுமே இல்ல. விருப்பப்படறவங்க தங்களோட சொந்தச் செலவுல நேரே ஸ்பாட்டுக்கு வந்துடுவாங்க. அவங்களுக்கு முகத்துல போட்டுக்கிற மாஸ்க், கிளவுஸ், சுத்தப்படுத்தத் தேவையான கருவிகள்தான் நாங்க கொடுக்கறோம். உள்ளூர் அதிகாரிகள் கிட்ட சொல்லி, சுத்தப்படுத்தத் தேவையான பர்மிஷனை வாங்கறது மட்டும்தான் எங்க பொறுப்பு.

காலையில ஏழு மணியிலேருந்து பதினோரு மணி வரை வேலை. பப்ளிசிட்டி இல்லை. சின்சியரா, கௌரவம் பார்க்காமல், சுத்தமான சேவை மனப்பான்மையோட வர்றவங்க மட்டும்தான் இங்கே இருக்காங்க.”

யாரெல்லாம் ஆர்வம் காட்டறாங்க?

நிறைய பேருக்கு இதுபோன்ற வேலைகளில் ஈடுபடணுங்கற ஆசை இருக்கு. ஸ்கூல், காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் வராங்க; காக்னிஸண்ட், ஃபோர்டு நிறுவன ஊழியர்கள் வராங்க, இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை வராங்க. நம்ம ஊர், நம்ம தண்ணீர், நாமதான் இதைக் காப்பாத்தணுங்கற உத்வேகத்தோட வருவாங்க. பல பேர், வெளியூர்லேருந்தெல்லாம் கூட வந்து வேலை செய்வாங்க. அவங்களுக்குள்ள அப்படியொரு நட்பும் பந்தமும் ஏற்பட்டுப் போச்சு. ஒவ்வொரு ஸ்பாட்லேயும் சுமார் நாற்பது முதல் ஐம்பது பேர் கூடிடுவாங்க.”

வெளியூர், வெளி மாநிலங்கள்ளேயும் வேலை செய்றீங்களா?

ஆமாம். முதல்ல, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஒரே ஒரு ஏரி அல்லது குளத்தை கிளீன் செய்யற வேலையைப் பார்ப்போம். படிப்படியா, இப்போ ஒவ்வொரு ஊர்லேருந்தும் ஆர்வலர்கள் வந்து எங்களோட இணைஞ்சுக்கிட்டாங்க. இப்ப ஞாயிறு மட்டுமல்லாமல் சனிக்கிழமையும் வேலை செய்யறோம். ஒரு ஊர்ல மட்டுமல்ல, ஒரே சமயத்துல பல ஊர்கள்ல வேலை செய்யறோம். இவர்களையெல்லாம் ஒருங்கிணைக்கறதே எனக்கு முக்கிய வேலை.”

அரசு ரீதியான உதவிகள் கிடைக்குதா?

தாராளமா. இதோ இந்த மாம்பலம் குளத்துல ஏராளமான ஆகாயத் தாமரைச் செடிகள். சென்னை மாநகராட்சிதான் லாரிகள் கொடுத்தாங்க. அவங்கதான் எடுத்துக்கிட்டுப் போனாங்க. அதேபோல் பல ஊர்கள்ல பஞ்சாயத்து போர்டுகள் உதவியிருக்கு. தலைவர்கள் உதவியிருக்காங்க.”

கிளீன் பண்ணிட்டு வந்துட்டா மட்டும் போதுமா?

போதாது. அதனாலதான், உள்ளூர் மக்களுடைய உதவியை நாடறோம். அவங்கதான் தொடர்ந்து குப்பை போடாமலும், அசுத்தங்கள் சேராமலும் பார்த்துக்கணும். அதுக்கு என்ன செய்யணும்ங்கறதை யும் அவங்களுக்குச் சொல்லிக் கொடுக்கறோம்.”

அடுத்தடுத்த திட்டங்கள்?

ஏற்கெனவே இருக்கிற நகரங்களோடு புதிய ஊர்களிலேயும் ஏரி, குளங்களைச் சுத்தப்படுத்த மக்கள் கூப்பிட்டுக்கிட்டே இருக்காங்க. தஞ்சாவூர், வல்லம், கும்பகோணம், ஒரத்தநாடு ஆகிய ஊர்களைச் சேர்ந்த விவசாயச் சங்கங்கள் எங்களைக் கூப்பிட்டு இருக்காங்க. அவங்க ஒத்துழைப்போட அங்கே இருக்கிற நீர்நிலைகளைக் காப்பாத்தணும். திருவனந்தபுரம், குறிஞ்சிப்பாடியிலேர்ந்தும் அழைப்பு வந்திருக்கு.”

பிரச்னைகளைச் சந்திச்சதில்லையா?

அப்படிச் சொல்லமாட்டேன். அதையெல்லாம் தடைகளா நினைக்கறதில்ல. பாடங்களா எடுத்துக்கறேன். சமூகத்திலிருந்துதான் மாற்றங்கள் ஏற்படணும். அதுவும் நீர்நிலைகளை அசுத்தப்படுத்தாமல் காப்பாற்ற வேண்டியது நம்மோட பொறுப்பு. பல பள்ளிகள், கல்லூரிகளுக்குப் போய் இதைப் பற்றிப் பேசறேன். தொண்டர்களின் பலம் கூடக்கூட, இன்னும் பல ஏரிகளையும் குளங்களையும் காப்பாற்ற முடியுங்கற நம்பிக்கை எனக்கு இருக்கு.

-இந்த வார கல்கி கவர் ஸ்டோரி

 

Advertisements

வாழ வைக்கும் வடை!


-நாணயம் விகடன்

படித்ததில் பிடித்தது – பட்டு வாத்தியார்


சுமார் பதினான்காயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் இருந்து தொலைபேசியில், ‘அம்மா’ என்றழைத்த மகனின் முதல் சொல்லிலேயே, ‘ஏன்டா, சளி பிடிச்சிருக்கா? சரியாத் தூங்கலையா? குரல் கம்முது!’ என்று கேட்டுப் பதறும் நம் அம்மாக்கள், எந்தப் பல்கலைக்கழகத்திலும் எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்றிருக்கவில்லை.

‘வானம் வடக்கே கருக்கலா இருக்கு மழை வருமாட்டு இருக்கு மாடில காயிற வத்தலை எடுத்துட்டு வா’ என்று சொன்ன பாட்டி வானிலை அறிவியல் படித்தது இல்லை.

‘ஆடிப் பட்டம் தேடி விதை’ என இன்றைக்கும் சொல்லும் வரப்புக் குடியானவன் விவசாயக் கல்லூரிக்குள் மழைக்குக்கூட ஒதுங்கியது இல்லை.

‘மூத்த நாள் சமைத்த கறி அமுதெனினும் அருந்தோம்’ எனப் பாடிய தேரன் சித்தர் மைக்ரோபயாலஜி தேர்வுகளில் தேறியது இல்லை.

‘செந்தட்டிக்கும் ஓடைத் திருப்பிக்கும் கொஞ்சம் உடம்புக்கு ஆகலை. எங்கேயோ நின்னுட்டு இருக்குங்க புடிச்சிட்டு வாரேன்’ எனச் சொல்லி மேய்ச்சல் நிலத்துக்கு ஓடும் சடையனுக்கு, 60 ஆடுகளில் இரண்டை மட்டும் காணவில்லை என்பதைக் கண்டுபிடித்து, போதாக் குறைக்கு அதற்கு உடம்பும் சரியில்லை என்றும் சொல்லும் அறிவாற்றலை, எந்த வெர்ட்னரி கல்லூரிப் படிப்பும் அவருக்குக் கொடுத்தது இல்லை.

அப்புறம் எப்படி இவர்கள் எல்லாம் இப்படித் துல்லியமாகக் கணக்கிடுகிறார்கள்? அப்போது எங்கிருந்து வந்தது இந்த அறிவியல்? இப்போது எங்கே போனது அந்த அனுபவம்? ஒவ்வொரு மனிதனும் அக்கறையுடன் அடுத்த தலைமுறைக்குக் கடத்திய காய்ப்பு உவப்பிலாத அனுபவம்தான் அந்த அறிவு. வள்ளுவன் சொல்லும் மெய்ப்பொருள் காணும் அறிவும், பாரதி சொன்ன விட்டு விடுதலையாயிருந்த மனமும் சில காலமாக ஒட்டு மொத்தமாகக் காணாமல் போனதில்தான் அத்தனை அறிவையும் இழந்துவருகிறோம்.

‘மம்மி எனக்கு வொயிட் சட்னிதான் வேணும், க்ரீன் சட்னி வைக்காதே சொல்லிட்டேன்’ எனப் பள்ளி செல்லும் குழந்தை உத்தரவிடும் போது, ‘எப்போது முதல் ஏசியன் பெயின்ட்டில் சட்னி செய்யத் தொடங்கினார்கள்?’ என்றே மனம் பதறுகிறது.

அந்தக் குழந்தையிடம், ‘க்ரீன் சட்னின்னா என்ன தெரியுமா?’ எனக் கேட்டால் நிச்சயம் தெரிந்திருக்காது. ஏனென்றால், சொல்லித் தர அம்மாவுக்கும் அப்பாவுக்கும் நேரம் இல்லை. இந்த மௌனங்களும் அவசரங்களும் தொலைத்தவைதான் அந்த அனுபவப் பாடம்!

தொலைக்காட்சி விளம்பரங்கள் சொல்லிக் கொடுத்து ‘புரோட்டின், கலோரி, விட்டமின்’ பற்றிய ஞானம் பெருகிய அளவுக்கு, ‘கொள்ளும் கோழிக் கறியும் உடம்புக்குச் சூடு; எள்ளும் சுரைக் காயும் குளிர்ச்சி. பலாப் பழம் மாந்தம். பச்சைப் பழம் கபம். புளிதுவர் விஞ்சிக்கின் வாதம்’ என்ற வார்த்தைகள் வழக்கொழிந்து போய்விட்டன.

‘அதென்ன சூடு, குளிர்ச்சி? அப்படி எல்லாம் ஒண்ணும் கிடையாது இந்த தெர்மாமீட்டர்ல உங்க சூடு எங்கேயாவது தெரியுதா?’ என இடைக்கால அறிவியலிடம் தோற்றுவிட்ட அந்தக் கால அறிவியலின் அடையாளங்களை, வணிக உலகமும் தன் பங்குக்குச் சிரச்சேதம் செய்துவிட்டது.

விளைவு?
‘லெஃப்ட் ஐப்ரோ ஸ்பெஷலிஸ்ட்கிட்ட நாளைக்கு ஒரு அப்பாயின்ட்மென்ட்’ எனும் அம்மா, ‘சாப்பிடவே மாட்டேங்கிறான்ல அதான் 3,500 ரூபாய்க்கு இந்த எனர்ஜி டிரிங்க்’ என்று அக்கறை காட்டும் அப்பா.

‘ஃபியூஸ் போயிருச்சா? எனக்கு என்ன தெரியும்? போய் எலக்ட்ரீஷியனைக் கூப்பிடுங்க!’ என எரிந்துவிழும் எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங் படித்த அண்ணன் போன்றவர்களின் எண்ணிக்கை அதிகமாகி விட்டது.

‘வயிறு உப்புசமா இருக்கா? மாந்தமாயிருக்கும் கொஞ்சம் ஓமத்தை வாணலில லேசாக் கறுக்கி, நாலு டம்ளர் தண்ணிவிட்டுக் கொதிக்க வெச்சு ராத்திரி கொடு’ என்ற அனுபவத்துக்குள் அறிவியல் ஒளிந்திருக்கிறது.

ஏழு மாதக் குழந்தைக்கு மாந்தக் கழிச்சல் வந்தபோது, வசம்பைச் சுட்டுக் கருக்கி, அந்தக் கரியைத் தாய்ப் பாலில் கலந்து கொடுத்த தாய்க்கு இன்று திட்டு விழுகிறது.

‘கைக் குழந்தைக்கு ஏன் வசம்பைக் கொடுத்தே? குழந்தைகளுக்கு வசம்பைக் கொடுக்கக் கூடாதுனு அமெரிக்காவுல எச்சரிச்சிருக்காங்க’ என்று கரித்துக் கொட்டுகிறார்கள்.

வசம்பில் 0.04 சதவிகிதம் மட்டுமே உள்ள அசரோன் என்ற பொருள் நச்சுத்தன்மைக்கொண்டது என இன்றைய விஞ்ஞானம் கண்டறிந்திருக்கலாம். ஆனால், வசம்பைச் சுட்டுக் கருக்கும்போது அந்த அசரோன் காணாமல் போய்விடும் என்பதை அன்றைய அனுபவ அறிவியல் உணர்ந்திருந்தது.

பேச்சு வர தாமதமாகும் குழந்தைக்கும், மாந்தக் கழிச்சலுக்கும், இன்னும் பல குழந்தை நோய்க்கும் மிக அற்புதமான மருந்தாக விளங்கும் வசம்புக்குப் பாட்டி வைத்தியப் பெயர் என்ன தெரியுமா? ‘பிள்ளை-வளர்ப்பான்’!

‘சளி பிடிச்சிருக்கா? கற்பூரவல்லில பஜ்ஜி போட்டுக் கொடுங்க. மத்தியான ரசத்தில் கொத்தமல்லியோட கொஞ்சம் தூதுவளை, கொஞ்சம் துளசி போடுங்க;

மலச் சிக்கல்ல கஷ்டப்படுறானா? ராத்திரில பிஞ்சு கடுக்காயைக் கொட்டையை எடுத்துட்டு வறுத்து பொடி செஞ்சுக் கொடுங்க;

சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலக்காய், சீரகம் இந்த அஞ்சையும் வறுத்துப் பொடிசெய்து, சரிக்குச் சரியா பனைவெல்லம் கலந்து மூணு சிட்டிகை கொடுத்தா, பசிக்கவே பசிக்காத பிள்ளை கன கனனு பசி எடுத்துச் சாப்பிடும்;

வாய்ப் புண்ணுக்கு மணத்தக்காளி கீரையில சிறுபருப்பு போட்டு கொஞ்சம் தேங்காய்ப் பால் விட்டு, திருநெல்வேலி சொதி செஞ்சு கொடுங்க;

பித்தக் கிறுகிறுப்புக்கு முருங்கைக்காய் சூப்,
மூட்டு வலிக்கு முடக்கத் தான் அடை,
மாதவிடாய் வலிக்கு உளுத்தங்களி,
குழந்தை கால்வலிக்கு ராகிப் புட்டு,
வயசுப் பெண் சோகைக்குக் கம்பஞ்சோறு,
வயசான தாத்தாவின் கால்வீக்கத்துக்கு வாழைத்தண்டுப் பச்சடி’ என விரியும் இந்தப் பட பட பட்டியலில் இடம் பெற்றிருக்கும் அத்தனையும் சில நேரம் மருந்துகள்; பல நேரம் மருத்துவ உணவுகள்.

காப்புரிமைப் பிடியில்லா இந்த அடுப்பங்கரையின் அறிவியல் நம் தொன்மைச் சிறப்பு மட்டுமல்ல வரும் நாட்களில் தொற்று நோய்க் கூட்டத்தின் பிடியில் நாம் சிக்கித் தவிக்காமல் இருக்க உதவும் ஒரே வழி.

சுழியத்தைக் (ஜீரோவை) கண்டுபிடித்து இன்றைய கணிதத்தின் அச்சாணியைத் தந்த தேசம் இது.

‘பை’ என்றால் 22/7 என்ற பரிச்சயமே இல்லாத வெகு காலத்துக்கு முன்னரே, சுற்றளவுச் சூத்திரத்தைக் கச்சிதமாகத் தெரிந்துகொண்டு நிலத்தை அளந்த கொத்தனார்கள் புழங்கிய மண் இது.

‘ஆறறிவதுவே அதனொடு மனமே’ என மனதின் முதல் சூத்திரத்தை சிக்மண்ட் ஃப்ராய்டுக்கு 30 தலைமுறைகள் முன்பே சொன்ன தொல் காப்பியம் எழுதிய ஊர் இது.

இத்தனை காலம் நாம் காத்து வந்த அறிவியலை, எந்த நெருக்கடியிலும் இழக்கலாமா?

பிரிந்த தம்பதியர் ஒன்று சேர…


சமீபத்தில் கணவருடன் கும்பகோணத்தில் ஒரு திருமணத்துக்குச் சென்றுவிட்டு ரயிலில் சென்னை திரும்பிக் கொண்டிருந்தேன். எங்கள் எதிரில் அமர்ந்திருந்த சுமார் 40/35 வயதுடைய தம்பதி, புது மணத் தம்பதி போல் அந்நியோன்யமாகப் பேசிக்கொண்டிருந்தனர். எங்களுக்குத்தான் ஒரு மாதிரியாக இருந்தது.

அருகே அமர்ந்திருந்த ஒரு பெரியவர், எங்கள் நோக்கத்தைப் புரிந்து கொண்டார். நான் அவளது தகப்பனார். ஏழு ஆண்டுகள் பிரிந்திருந்த இவர்கள், இப்பொழுதுதான் சேர்ந்திருக்கிறார்கள்” என்றார்.

எங்களுக்கோ ஆச்சரியம். ஏன் சார்? எதனால பிரிஞ்சிருந்தாங்க? விவாகரத்தா?” என்றோம்.

அதெல்லாம் ஒண்ணுமில்லை. ஈகோதான்” என்ற அவர், தொடர்ந்து சொல்ல ஆரம்பித்தார்.

மணமான கொஞ்ச நாளிலேயே இருவரும் பிரிந்து விட்டார்கள். மனமுடைந்திருந்த நேரத்தில் ஒருவர் என்னிடம், ‘நீங்க கும்பகோணம், திருவலம்சுழியில் அருள்பாலிக்கும் கபர்தீச்வரர்-பெரிய நாயகியை மனமுருக வேண்டிக் கொள்ளுங்கள். மாப்பிள்ளையும் பெண்ணும் விரைவிலேயே ஒன்று சேருவர் ’ என்றார்.

ஆறு மாதம் முன் நானும் என் பெண்ணும் அங்கே சென்று கபர்தீச்வரர் – பெரியநாயகியிடம் வேண்டிக் கொண்டோம். போன மாசம் திடீரென ஒரு நாள் மாப்பிள்ளை எங்கள் வீட்டுக்கு வந்தார். இருவரும் பேசினர். சமாதானமாயிற்று. அதனால் இருவரையும் அந்தக் கோயிலுக்கு அழைத்துப்போய் நேர்த்தி முடித்துக் கொண்டு திரும்புகிறோம்” என்றார்.

தலத்தின் சிறப்பை அறியும் பொருட்டு, எந்த விதத்தில் அந்தத் தலம் பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர சிறப்பு பெற்றது?” எனக் கேட்டேன்.

எத்தனையோ கணவன் மனைவியர் ஒருவருக்கொருவர் சரியான புரிதல் இன்றி சின்ன வயசுலயே பிரிஞ்சு வாழறாங்க. அவங்க இதை நிச்சயம் தெரிஞ்சுக்கணும்” என்று கபர்தீச்வரர் – பெரியநாயகி திருக்கோயில் பெருமையை விளக்க ஆரம்பித்தார்.

கைலாயத்தில்… சிவனும் பார்வதியும் சந்தோஷமாக இருந்தனர். பார்வதியை சொக்கட்டான் விளையாடக் கூப்பிட்டார் பெருமான். தோற்றவர் தன் ஆபரணங்களை ஜெயிப்பவருக்குக் கொடுக்க வேண்டும் என்பதுதான் பந்தயம். ஆட்டத்துக்கு நடுவராக மகாவிஷ்ணு விளங்க, விறுவிறுப்பாக நடந்த ஆட்டத்தில் ஜெயித்தவர் தேவிதான். ஆனால் சிவபிரானோ, நான் தான் ஜெயித்தேன். உன் ஆபரணங்களைக் கழட்டிக் கொடு ” என்று கேட்க, திகைத்தாள் உமையவள்.

ஜெயித்தவள் நானே. தோற்ற நீங்கள்தான் உங்கள் ஆபரணங்களைத் தர வேண்டும்” என வாதிட்டாள்.

இல்லை… நான்தான் ஜெயித்தேன். வேண்டுமானால் விஷ்ணுவைக் கேட்போம்” என்றார் சிவன்.

மகாவிஷ்ணுவும், சிவபெருமானே ஜெயித்தார்” என்று கூற, பார்வதிக்கு கோபம் வந்தது. விஷ்ணுவிடம், பொய் தீர்ப்பு கொடுத்த நீங்கள் கண்கள் குருடான ஒரு மலைப்பாம்பாக மாறி வனத்திலே திரியக் கடவது” என சாபம் கொடுத்தாள்.

‘விளையாட்டு வினையானதில் வருந்திய அவரிடம், வருந்த வேண்டாம். விநாயகன், கஜமுக அசுரனுடன் போரிட்டு வென்று வருவான். அப்போது அவனால் உம் சாபம் நீங்கும்” என்றார் சிவனார்.

அதேபோல், கஜமுகனை வென்று அவனை மூஷிகமாக்கி, அந்த வாகனத்தின் மீது வந்த விநாயகர், குருடாயிருந்த மலைப்பாம்பின் சாபம் நீங்கச் செய்தார்.

‘பரமசிவனுக்காக பரந்தாமன் ஏன் பொய் உரைத்தார்’ என்ற சந்தேகத்தை பரமனிடமே அன்னை பார்வதி வினவ, நீ மண்ணுலகம் சென்று அங்கே வில்வாரண்யத்தில் தவம் செய்தால் இதற்கான பதில் கிடைக்கும்” என்றார்.

தேவியும் அப்படியே செய்தார். அந்த வில்வாரண்யத்தில் சிவன் அன்னை முன் சங்கர நாராயணராகத் தோன்றி, ‘நாங்கள் இருவரும் ஒருவரே’ என்று கூறினார். வில்வாரண்யமாக விளங்கிய திருவலம்சுழி ஜடா தீர்த்தத்தில் மூழ்கி எழுந்த தேவி ஈசனின் விச்வரூபம் கண்டு மீண்டும் கயிலாயம் திரும்பினாள்.

ஆதர்ச தம்பதிகளான பார்வதி – பரமேச்வரன் இடையில் சில காலம் பிரிந்தாலும் மீண்டும் ஒன்று சேர்ந்தது இத்தலத்தில்தான். அதனால் இத்தலத்தில் (திருவலம்சுழி) வந்து பெரிய நாயகி சமேத கபர்தீச்வரரை (சடைமுடி நாதர்) வணங்கினால் பிரிந்த தம்பதியர் மீண்டும் ஒன்று சேருவது உறுதி” என்று கூறி முடித்தார் அந்தப் பெரியவர்.

கே.ராஜலக்ஷ்மி சென்னை (தீபம் ஆன்மீக இதழில்)

ஐந்து ரூபாய் டாக்டர்!


டாக்டர் ராமமூர்த்தி…

-இவர் பார்க்கும் மருத்துவத்துக்கான ஃபீஸை நோயாளிகளே ஃபிக்ஸ் செய்து தருகிறார்கள் என்று அறிந்தபோது வியப்பாக இருந்தது.

‘கிளினிக் எங்கேயிருக்கு?’ எனக் கேட்டால் போதும், பட்டமங்கலத்தெருவில் இருக்கு. இந்தக் காலத்துலயும் அஞ்சு ரூபாய், பத்து ரூபாய்க்கு வைத்தியம் பாத்துக்கிட்டு இருக்குற டாக்டர். போய்ப் பாருங்க” என உடனே பதில் கிடைக்கிறது. நாம் சென்றிருந்த காலை நேரத்தில், ஏழெட்டுப் பேர் ஹாலில் காத்திருந்தனர். அவர்களிடம் பேச்சு கொடுத்தோம்.

இங்கு நோயாளிகளுக்குச் சிறந்த ஆலோசனைகள் வழங்குவதோடு, மருந்து, மாத்திரை எழுதித் தருவார். அதுவும் விலை குறைவாகத்தான் இருக்கும். ஒருநாள், இரண்டு நாள் மருந்து, மாத்திரை சாப்பிட்டால் போதும். உடம்பு சரியாகிவிடும். தேவைப்பட்டால் மட்டுமே வெளியே ஊசி, மருந்து வாங்கி வரச் சொல்லுவார்.

நோயாளிகள்கிட்ட கையால் ஃபீஸ் வாங்க மாட்டார். நாமதான் அந்த டேபிள்ல அஞ்சு ரூபாயோ பத்து ரூபாயோ வெச்சிட்டு வரணும். அப்படி நாம ஏதும் வைக்காட்டியும் எதுவுமே கேக்க மாட்டார்” என்றார்கள்.

மருத்துவர் ராமமூர்த்தியின் வயது 81. பூந்தோட்டம் அருகே முடிகொண்டான் பூர்விக கிராமம். மயிலாடுதுறையில் கிளினிக் நடத்த வந்து, ஐம்பத்தி ஏழு ஆண்டுகள் ஆகின்றன.

1959லிருந்து மயிலாடுதுறையில் மருத்துவம் பார்க்கிறேன். இந்த ஊர் மக்கள் மீதான அன்பின் பொருட்டு என்னிடம் மருத்துவம் பார்க்க வருபவர்களிடம் கட்டணம் எதுவுமே கேட்டுப் பெறுவதில்லை. 1960களில் எட்டணா அல்லது ஒரு ரூபாய்தான் அவர்களாகவே டேபிளில் வைத்துவிட்டுச் செல்வார் கள். காலப்போக்கில் இரண்டு ரூபாய், மூன்று ரூபாய் என்று அதிகரித்து, தற்போது பத்து ரூபாய் வைத்து விட்டுச் செல்வதும்கூட, அவர்களே முடிவெடுத்ததுதான்” எனக் கூறிவிட்டுப் புன்னகைக்கிறார்.

அப்போதெல்லாம் அரசு மருத்துவமனைகளில் ‘கௌரவ அரசு மருத்துவர்’ என்றொரு பதவி இருந்தது. மாதச் சம்பளம், இதர வருவாய் ஏதும் அதற்குக் கிடையாது. அர்ப்பணிப்புப் பணி அது. மாயவரம் அரசு பொது மருத்துவமனையில் 1960 – 1980 வரை கௌரவ அரசு மருத்துவராகப் பணியாற்றினேன். அப்போதும் பட்டமங்கலத் தெரு கிளினிக்கில் ஏழை எளிய மக்களுக்காக மருத்துவம் பார்த்தேன். அட்டஸ்டேஷன் கையெழுத்து வாங்க வருபவர்களிடமும் நான் பணம் ஏதும் வாங்குவதில்லை.

Maha PeriyavaIMG_4107

வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதசுவாமி, காஞ்சி மகாபெரியவர், திருக்கோவிலூர் ஞானானந்தகிரி ஸ்வாமிகள் இந்த மூவரும்தான் என் பேங்க் பேலன்ஸ்” என்றார் மக்கள் மருத்துவர் ராமமூர்த்தி.

ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு (இந்த வார கல்கி இதழில்…)

அட்சய திருதியை – 09-05-16 – அஷ்ட லக்ஷ்மிகளின் அருள் பெருக்கும் அமிர்த நாள்!சித்திரை மாத வளர்பிறையில் வரும் திரிதியை நாள் அட்சய திரிதியை என்று அனைவராலும் கொண்டாடப்படுகிறது. “அட்சய‘ என்ற சொல் “வளருதல்‘ என்பதைக் குறிப்பதால், இந்த நாளில் எந்தப் பொருள் வாங்கினாலும் அது வளரும் என்பது நம்பிக்கை. தானதர்மம், கல்வித் துவக்கம், புதிய தொழில் தொடக்கம், புதுக்கணக்கு ஆரம்பம், தெய்வ வழிபாடு போன்றவற்றை அந்த நாளில் மேற்கொள்வது உத்தமம்.

அட்சய திரிதியை பற்றி புராணக்கதைகள் பலவுண்டு. அதில் முதலிடம் பெறுவது குசேலர் கதை. ஏழ்மையில் வாடிய குசேலர், தனது இளமைக்கால நண்பன் கண்ணனைக் கண்டு உதவிபெறச் சென்றபோது ஒருபிடி அவலை எடுத்துச்சென்றார். அந்த அவலை வாங்கி ஒரு வாய் உண்டு, “அட்சய‘ என்று கண்ணன் சொல்ல, குசேலரின் குடிசை மாளிகையானது. குபேர செல்வமும் சேர்ந்தது. இது நிகழ்ந்தது ஒரு அட்சய திரிதியை நாளென்று சொல்லப்படுகிறது.

மகாபாரதத்தில் தருமன் சூதாடி அனைத்தையும் இழந்த நிலையில், மனையாளான பாஞ்சாலியையும் பணயம் வைத்துத் தோற்றார்.

அடிமையான பாஞ்சாலியின் சேலையை நிறைந்த சபையில் துச்சாதனன் களைய, பாஞ்சாலி, “அபயம் கண்ணா‘ என்று இரு கரங்களையும் உயர்த்தி சரண்புகுந்தாள். அப்போது கண்ணபரமாத்மா பாஞ்சாலியின் மானம் காக்க “அட்சய வஸ்திரம்‘ அளித்தார் என்று மகாபாரதம் கூறுகிறது.

அதேபோல், பஞ்ச பாண்டவர்கள், வனவாசம் மேற்கொண்டபோது பாஞ்சாலி சூரிய பகவானிடம் வேண்டிப்பெற்றது அட்சய பாத்திரம். அதிலிருந்து உணவை எடுக்க எடுக்க குறைவில்லாமல் வந்து கொண்டிருந்தது. அதனால் பாண்டவர்கள் வனவாசத்தின்போது பட்டினியில்லாமல் வாழ்ந்தார்கள்.

ஒருமுறை காசி மாநகரில் கடுமையான பஞ்சம் வந்தபோது, அன்னை பார்வதிதேவி, அன்னபூரணியாக மாறி தன் கையில் அட்சய பாத்திரத்தை வைத்துக்கொண்டு, உலகிலுள்ள அனைவருக்கும் உணவளித்து பசிப்பிணியைப் போக்கினாள் என்று காசி புராணம் கூறுகிறது.

உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் அட்சய திரிதியையன்று புனித நதியில் நீராடி தானதர்மங்கள் செய்தால் பிணி நீங்கும். இந்த நன்னாளில் சிவன்- பார்வதி, நாராயணன்- லட்சுமி ஆகியோரை வழிபட்டால் சகல பாக்கியங்களும் கிட்டும். மறைந்த முன்னோருக்கு சிரார்த்தம், பிதுர்பூஜை செய்தால் பாவ விமோசனம் பெறலாம்.

இன்றைய நாளில் பலர் தங்கம் வாங்கினால் மேன்மேலும் பெருகும் என்ற நம்பிக்கையில் நகைக்கடைகளை நோக்கிப் படையெடுப்பதைக் காணலாம். எந்த சாஸ்திரத்திலும், வேத நூல்களிலும் அவ்வாறு சொல்லப்படவில்லை. வணிகர்கள் இதை வியாபார யுக்தியாகக் கையாள்கின்றனர். “செல்வம், பூர்வபுண்ணியம், புத்திரர், புத்தி, வீரியம், லாபம் பெருகும்’ என்றே சாஸ்திரம் சொல்கிறது. மேலும், குரு பகவான் உலோகத்தில் தங்கத்தைப் பிரதிபலிப்பதால் அவருக்கு பொன்னன் என்கிற சிறப்புப் பெயர் உண்டு. இதைக்கொண்டுதான் அட்சய திரிதியையன்று தங்கம் வாங்கவேண்டும் என்கிற மாயையை ஒருசிலர் உருவாக்கிவிட்டார்கள்.

அட்சய திரிதியை நாளில் உப்பு வாங்கினாலும் செல்வம் வளரும். உப்பு கடலிருந்து தோன்றியது. மகா லட்சுமியின் அம்சம்.

கிருதயுகம் தோன்றியதும், பரசுராமர் அவதரித்ததும் அட்சய திரிதியை நாளில் தான்.

மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ஆறாவதாக சொல்லப்படுவது பரசுராம அவதாரம். ஜமதக்னி முனிவருக்கும் ரேணுகாதேவிக்கும் ஐந்தாவது மகனாகப் பிறந்த இவர், அரசர்களுக்குரிய எல்லா கலைகளையும் கற்றார்.

முனிவர்களிடமும்  ரிஷி களிடமும் மந்திர உபதேசம் பெற்றார். சிவபெருமானை தினமும் வழிபட்டதால், அவருடைய தவத்தினை மெச்சிய சிவபெருமான் தன் கையிலுள்ள மழுவின் அம்சமாக இன்னொரு மழுவைத் தோற்றுவித்து பரசுராமருக்குத் தந்தார். அதனால் பரசுராமர் என்ற பெயருடன் மழுவாடன் என்ற சிறப்புப் பெயரும் ஏற்பட்டது. அந்த மழுவுடன்தான் என்றும் எங்கும் காட்சியளிப்பார்.

தன் தாய் தவறு செய்ததாக தந்தை கருதியதால், தந்தையின் கட்டளைப்படி தாயைக் கொன்று தர்மத்தை நிலைநாட்டினார். பின்னர் தந்தையிடமே வரம் பெற்று மீண்டும் தன் தாயை உயிர்ப்பித்தார் பரசுராமர்.

தன் தாயின் கற்புக்கு சோதனை விளைவித்த காத்தவீர்யார்ஜுனனையும், அவன் குலத்தினரையும் தன் பரசினால் வெட்டி வீழ்த்தினார். தன் தந்தையை வஞ்சகமாகக் கொன்றதால், அவர்களைப் பழிவாங்க க்ஷத்ரிய வம்ச அரசர்களை பல தலைமுறைகள் அழித்தார்.

மகாபாரத காலத்தில் பரசுராமரிடம் வித்தை கற்கச் சென்ற கர்ணன், தான் ஒரு அரசன் என்ற உண்மையைச் சொல்லாமல் அந்தணன் என்று கூறி வித்தைகளையும் மந்திரங்களையும் கற்றுக் கொண்டான். ஒரு சந்தர்ப்பத்தில் உண்மையை அறிந்துகொண்ட பரசுராமர், “தக்கசமயத்தில் நான் கற்றுக்கொடுத்த அஸ்திரப் பிரயோக மந்திரம் மறந்து போகட்டும்’ என்று சாபம் கொடுத்தார்.

ஆரம்பத்தில் கோபக்காரராக இருந்த பரசுராமர் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியால் கர்வம் அழிக்கப்பட்டபின் சிவபூஜை செய்வதில் ஆழ்ந்துவிட்டார்.

இன்றிருக்கும் கேரள மாநிலம் பரசுராமரால் உருவாக்கப்பட்டது என்பது புராணச் செய்தி. அதனால் அந்த நாட்டிற்கு பரசுராம க்ஷேத்திரம் என்று பெயர். பரசுராமர் கேரளாவில் 108 இடங்களில் தெய்வங்களைப் பிரதிஷ்டை செய்தார். இன்று சபரிமலையில் அருள்புரியும் ஐயப்ப சுவாமியை பிரதிஷ்டை செய்தவர் பரசு ராமரே என்பது வரலாறு.

அரசர்கள் பலரைக் கொன்ற பாவம்தீர மகேந்திர மலையில் தவம்செய்து, சிவபெருமானிடம் சிரஞ்சீவி வரம்பெற்றார் பரசுராமர்.

இத்தனை மகத்துவங்கள் கொண்ட பரசுராமருக்கு தனிக்கோவில்கள் குறைவுதான். கேரளாவில் சில இருப்பதாகச் சொல்வர்.

கர்நாடகாவில் நஞ்சன் கூடு என்னும் இடத்திற்கு அருகே பரசுராமருக்குத் தனி ஆலயம் இருக்கிறது. தந்தையின் கட்டளைப்படி தாயைக் கொன்ற பாவம் தீர பரசுராமர் இத்தலத்திற்கு வந்து, கபிலநதியில் நீராடி சிவபூஜை செய்வதற்காக ஓரிடத்தில் மண்ணைத் தோண்டியபோது, சுயம்பு லிங்கம் ஒன்று தோன்றியது. பரசுராமரால் பூஜிக்கப்பட்ட அந்த சிவலிங்கம்தான் ஸ்ரீகண்டேஸ்வரராக காட்சிதருகிறார்.

பாவங்கள் நீங்க பரசுராமர் தமிழகத்திலும் சில இடங்களில் சிவாலயங்களை நிறுவி வழிபட்டதாகப் புராணம் கூறுகிறது. திருச்சிக்கு அருகிலுள்ள பழூர், காஞ்சிக்கு அருகிலுள்ள வேகாமங்கலம், திருப்பனந்தாள் அருகேயுள்ள திருலோக்கி, மயிலாடுதுறை அருகிலுள்ள திருநின்றியூர் முதலியன பரசுராமேஸ்வரங்கள் எனப்படுகின்றன.

அட்சய திரிதியை நாளில் பரசுராமேஸ்வரங்களில் அருள்புரியும் ஈசனை வழிபட்டால் சுக்கிர தோஷங்கள் விலகும்; வாழ்வில் சகல சௌபாக்கியங்களும் கிட்டுமென்று ஞானநூல்கள் கூறுகின்றன.

அட்சய திரிதியை நாளில் தயிர் சாதம் தானம் செய்தால் ஆயுள் பெருகும். இனிப்புப் பொருட்கள் தானம் தந்தால் திருமணத்தடை அகலும். உணவு தானியங்களை தானம் செய்தால் விபத்துகள், அகாலமரணம் போன்றவை சம்பவிக்காது. “கோமாதா’ பூஜை செய்தால் அஷ்டலட்சுமிகள் கடாட்சம் கிட்டுமென்பது நம்பிக்கை.

–நன்றி நக்கீரன் வழங்கும் ஓம் ஆன்மீக மாத இதழ்

இறைவனுக்கொரு மலர்வனம் – பத்மஸ்ரீ D.K. ஸ்ரீனிவாசன்


காஞ்சி வரதராஜப்பெருமாள் கோவிலில் ஒரு நந்தவனம் அமைத்திருக்கிறேன். பெருமாளுக்கு புஷ்பமாலைகள் சாற்றவேண்டும் என்று பல ஆண்டுகளாகவே எனக்கு ஆவல் இருந்தது. அது வேதாந்தராமன் என்ற நண்பர் மூலம் சாத்தியமானது. இன்றைக்கு அவரது மகன் நாராயணன் அதை நிர்வகிக்கிறார். அந்தப் பூக்களைக் கொண்டு விதவிதமான புஷ்பமாலைகள் பெருமாளுக்கும், தாயாருக்கும் சாற்றப்படுகிறது. 33 விதமான பூச்செடிகள், மரங்கள் அந்த நந்தவனத்தில் உள்ளன. 2000த்துக்கு மேலான செடிகள் அங்கே உள்ளன. 365 நாளும், நான்கு வேளையும் அந்தப் பூக்களிலிருந்து தொடுக்கப்பட்டு பெருமாளுக்கு மாலை சாற்றப்படுகிறது. இதில் எனக்கு ஒரு மனத்திருப்தி, ஆனந்தம்.

–தென்றல் மாத இதழ் (மே, 2016)

2016ம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதினால் கௌரவிக்கப்பட்டிருக்கிறார் டி.கே. ஸ்ரீநிவாஸன். தாம்பரத்திலுள்ள ஹிந்து மிஷன் மருத்துவமனையில் அவரது அலுவலக வளாகத்திற்குள் நுழையும்போதே கைகூப்பி வணங்கி அங்கே அமர்ந்திருப்பவர்களிடம் அன்போடு “சொல்லுங்க, நான் என்ன செய்யணும்?” என்று மென்மையாக விசாரிக்கிறார். “தென்றல்” என்கிறோம். “வாருங்கள்” என்று தன் அறைக்கு அழைத்துச்செல்கிறார். அவர் புகழ்பெற்ற ஹிந்து மிஷன் மருத்துவமனையின் நிறுவனர், செயலாளர். வள்ளுவர் குருகுலம் பள்ளிகளின் செயலாளர், தாளாளர். இந்த 73 வயது இளைஞர் ஆஸ்தீக சமாஜம், ஒமேகா ஸ்கூல், ஸ்ரீ காயத்ரி ட்ரஸ்ட், திருநற்பணி ட்ரஸ்ட் உள்படப் பல சேவை அமைப்புகளின் புரவலர், ஆலோசகர், வழிகாட்டி. ‘சேவாரத்னா’, ‘சம்ஸ்கார ரத்னா’, ‘நவ்ஜீவன் புரஸ்கார்’, ‘டாக்டர் கே.வி. திருவேங்கடம் விருது’ உட்படப் பல்வேறு கௌரவங்களைப் பெற்றவர். இவற்றுக்கெல்லாம் மகுடமாகத் தரப்பட்டுள்ளது இந்திய அரசின் ‘பத்மஸ்ரீ’. தமிழகத்தில் சுனாமி பாதித்தபோது இவர் ஆற்றிய பணி குறிப்பிடத்தக்கது. வெயில் தகிக்கும் ஒரு காலை வேளையில் நண்பர் அரவிந்த் சுவாமிநாதன் அவருடன் உரையாடியதிலிருந்து….