Category Archives: Misc

ஜெர்மானியத் தொழில்நுட்பம் – முரளி கண்ணன்


பத்து ஆண்டுகளுக்கு முன்னர், திருவல்லிக்கேணி மேன்ஷனில் எனக்கு பக்கத்து அறையில் தென்னக ரயில்வேயில் சிவில் எஞ்சினியராக பணிபுரியும் அன்பர் ஒருவர் தங்கியிருந்தார். ஆரம்ப தயக்கங்கள் மறைந்து அவருடன் சகஜமாக பேசத் தொடங்கியிருந்தபோது ஒரு நாள் அவரிடம் கேட்டேன்.

“ ஏன் சார், இப்போ தமிழ்நாட்டுல அடிக்கடி பாலங்கள் பழுதடைந்தது. உடைந்ததுன்னு நியூஸ் வருது. ஆனா ரயில்வே பாலம் உடைந்ததுன்னு நியூஸ் வரமேட்டேங்குது.

ஆனா, ட்ரைன் நேருக்கு நேர் மோதல், சிக்னல் பெயிலியர் என்றெல்லாம் செய்திகள் வருது”

எப்படி ரயில்வே பாலம் மட்டும் ட்ரைன் ஓடுற அதிர்ச்சிய தாங்கிக்கிட்டு நல்லா இருக்கு?

அதற்கு அவர் சொன்னார்,

நாங்க பாலம் டிசைன் செய்யும்போதே, Factor of safety ஐந்தில் இருந்து பத்து வரைக்கும் வச்சுத்தான் டிசைன் செய்வோம். என்றார்.

அதாவது ஒரு பாலத்தில், 1000 டன் எடையுள்ள புகைவண்டி, 100கி மீ வேகத்தில் ஒரு நாளுக்கு 10 முறை சென்று வருகிறது என்று வைத்துக் கொள்வோம். இந்த நிலையில் நூறாண்டுக்கு இந்த பாலம் நல்ல முறையில் இருக்க, என்னென்ன தேவை என்று கணித்துக் கொள்வார்கள்.

பின்னர் அதைப்போல ஐந்திலிருந்து பத்து மடங்கு ஸ்ட்ராங்காக டிசைனை செய்து விடுவார்கள்.

பின்னர் டெண்டர் விடுவார்கள். அமைச்சர், அதிகாரி என அனைவருக்கும் அவர்களுக்கு தக்க கமிஷன் கொடுத்தது போக, அந்த காண்டிராக்டர் எவ்வளவு மட்டமாக கட்டினாலும், அந்தப் பாலம் தேவையை பூர்த்தி செய்து விடும். என்றார்.

இதே போல ராணுவத்திலும் Factor of Safety என்பது, குறைந்தது ஐந்துக்கு மேல் இருக்கும். அதை மில் (mil standard) ஸ்டேண்டர்ட் என்றும் சொல்வார்கள். ஏனென்றால் எந்த சூழ்நிலையிலும் அந்த உபகரணம் 100% திறனுடன் செயல்பட வேண்டும் என்பதால்.

Image result for willys jeep india

இந்திய ராணுவத்தில் வில்லிக்ஸ் (WILLYS) என்ற ஜீப் முன்னர் இருந்தது. தன்னுடைய பணிக்காலம் முடிந்ததும், அது ஏலத்துக்கு வரும். மக்கள் அதனை போட்டி போட்டு வாங்குவார்கள். கோவை உட்பகுதி கிராமங்கள், பொள்ளாச்சி மற்றும் அதன் உட்பகுதி கிராமங்களில் பண்ணையார்கள் இந்த வில்லிஸ் ஜீப்பைத்தான் முன் பயன்படுத்துவார்கள். அதே போல ஆந்திரா ஜமீந்தார்கள், நிலச்சுவான்தார்கள் எல்லாம் இந்த ஜீப்பைத்தான் பயன்படுத்துவார்கள்.

போலவே, வடமாநில கிராமங்களிலும் இந்த ஜீப்புக்கு பெரும் மவுசு உண்டு. பீகார் மாநில உயர் ஜாதியினர் தாங்கள் வைத்திருக்கும் பிரத்யேக படைகளுக்கு (ரன்வீர் சேனா போல) இந்த வாகனத்தைத் தான் பயன்படுத்துவார்கள். தங்கள் ஜாதிக்குரிய அடையாளம் அல்லது அரிவாள், கோடாலி, துப்பாக்கி போன்ற மாடல்களுடன் இந்த ஜீப்பை அலங்கரிப்பார்கள். பல திரைப்படங்களிலும் நாம் இதனைக் காணலாம். தயாரிப்பாளர் நிர்ணயித்த ஆயுட்காலம் முடிந்து பல ஆண்டு கழித்தும் சிங்கம் போல் கர்ஜிக்கும் திறன் கொண்டவை இவை.

இப்பேர்பட்ட ஜீப்பின் மைனஸ் எரிபொருள் சிக்கனம். வெயில் களைப்படைந்து வந்தவன் மண்பானைத்தண்ணீரை மடக் மடக் என்று குடிப்பதைப் போல எரிபொருளை விழுங்கும் இது.  இதற்கு காரணம் இந்த ஜீப்பின் எடை என்பதால், இந்திய ராணுவத்தினர் இதன் எடையைக் குறைத்து தங்களுக்கு வழங்குமாறு ஜெர்மானியத் தயாரிப்பாளரிடம் கோரிக்கை வைத்தார்கள். அதிகம் இல்லை ஜெண்டில்மேன், இந்த ஜீப்புக்கு ஐந்து கோட்டிங் பெயிண்ட் அவர்கள் அடிப்பார்கள். அதைக் குறைத்து ஒரு கோட்டிங் அடித்தாலே 50 கிலோ வரை எடை குறையும்.

ஆனால் அந்தக் கம்பெனி அதற்கு மறுத்துவிட்டது. இந்த தகவலை நான் கேட்டபோது, எனக்கு ஹென்றி போர்டின் ஞாபகம் வந்தது.

ஆட்டோமொபைல் துறையின் மறுமலர்ச்சிக்கு காரணமான ட்ரான்ஸ்பர் லைன் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்த அவர் சொல்லுவார்.

“மக்கள் எந்த நிறத்தை வேண்டுமானாலும் விரும்பலாம், ஆனால் நான் கறுப்பு நிறத்தைத் தான் அவர்களுக்கு கொடுப்பேன்”

என்று.

காரணம், தொடர்ச்சியான ஆய்வுகளின் மூலம் அவர்கள் கண்டறிந்தது, கறுப்பு நிறம் மற்ற நிறங்களை விட விரைவில் காயும் என்பதே.

பெயிண்ட் காய்வதற்காக நான் அதிக நேரம் என்னுடைய காரை தொழிற்சாலையில் நிறுத்தினால் அதன் விலை கூடிவிடும். பின் எப்படி சாமானியனும் வாங்கும் விலையில் அதைத் தர முடியும் என்பார்?

இரண்டு கொள்கைகளுக்கும் உள்ள வேறுபாட்டை பாருங்கள்.

பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் போது ஜெர்மன் என்றாலே எனக்கு அலர்ஜி. ஏனென்றால் ஹிட்லர். ஆனால் ஒரு பொறியாளனாக என்னை ஜெர்மனி ஈர்த்தது என்றே சொல்லலாம்.

நாம் இந்திய, சீன, கொரிய, ஜப்பானிய, அமெரிக்க, ரஷ்ய மற்றும் ஜெர்மானிய பொருட்களை நம் வாழ்வில் பயன்படுத்துகிறோம். ஒவ்வொரு நாடும், தங்களுக்குரிய ஐடியாலஜி-படி தங்கள் பொருளைத் தயாரிக்கின்றன.

China – உபகரணம் அந்த வேலையை செய்து விடும், ஆனால் தவறி விழுந்தால் கேட்கக் கூடாது. நீடித்து உழைக்குமா என்றெல்லாம் கேட்கக் கூடாது.

Japan – இதை விட அதிக தரம் இந்த வேலைக்குத் தேவையில்லை (Optimization). (குறிப்பிட்ட அளவு கேரண்டி)

America – வேலை செய்யும். தப்பு பண்ணினா வேற தர்றோம்.

German – இதுக்கு மேல தரம் இந்தப் பொருளில் கொண்டு வர முடியாது.

இந்த கொள்கைதான் அவர்கள் அடிநாதம்.

எல்லோருக்கும் தெரிந்த காரை எடுத்துக் கொள்வோம்.

கார்களுக்கு உள்ளே ஓடும் வயர்களின் தூரம் குறைந்தது 5 கி மீ இருக்கும். இதற்கு டொயோட்டா போன்ற ஜப்பானிய கம்பெனிகள், 2 மிமீ தடிப்பான Insulation மற்றும் மேற்புற உரை போதுமென்று தீர்மானித்தால் (Optimization), ஜெர்மானிய Benz, Audi, Skoda, B.M.W போன்றவை 6 மிமீ திக்கான வயராக அதை தயாரிப்பார்கள். இதனால் செலவு கூடும், காரின் எடை அதிகரிக்கும் அதனால் எரிபொருள் தேவை அதிகரிக்கும். ஆனாலும் அவர்கள் கவலைப்பட மாட்டார்கள்.  அதேபோல பெயிண்ட், முன்பு வில்லிக்ஸுக்கு சொன்னது போலத்தான், தாராளமாகச் செய்வார்கள். அதனால் தான். Scratch ஆனாலும் உள்ளிருக்கும் பெயிண்ட் மானம் காக்கும்.

நம் இந்தியத் தயாரிப்புகளில் இருக்கும் ஒரு குறைபாடு, அந்தப் பொருள் எல்லா காலநிலைக்கும் தாங்குமா என்று பார்க்கமாட்டார்கள். ஐடியா கிடைத்ததும், டிசைன் செய்து, தயாரிப்புக்கு அனுப்பி விடுவார்கள். Product Development Cycle கால அளவு மிக குறைவாகவே இருக்கும்.

ஆனால் ஜெர்மன் கம்பெனிகளில், தாங்கள் டிசைன் செய்த பாகங்களை Prototype ரெடி செய்து கம்பெனியின் மேற்கூரையில் போட்டு விடுவார்கள். அது பனி, வெயில், மழை எல்லாவற்றையும் சமாளிக்க வேண்டும். நான்கு பருவங்களும் முடிந்த பின்னர், அதனை எடுத்து தரப் பரிசோதனைக்கு உட்படுத்துவார்கள். அது acceptable லெவலில் இருந்தால் மட்டுமே, அதனை approve செய்வார்கள். எனவே அந்தப் பொருள் எந்தச் சூழலையும் தாங்கும்.

இதைப் பற்றி ஒருமுறை பேசிக்கொண்டிருந்தபோது, அங்கே Winter, Autumn, Summer, Spring என்று நான்கு காலநிலைகள் உள்ளன. ஆனால் இந்த விருதுநகர் மாவட்டத்தில் இரண்டே காலநிலைகள் தானே உள்ளன. Summer மற்றும் Hot Summer. ஏப்ரல், மேயில் Hot Summer மற்ற மாதங்கள் Summer என்று நண்பர்கள் கலாய்த்தார்கள்.

அதே போல Factor of Safety. ஒருமுறை நான் உபயோகித்த லோட் செல் 400 டன் வரை உள்ள தாக்கும் எடையை அளக்கக்கூடிய கெப்பாசிட்டி கொண்டது. பொதுவாக மற்ற நாட்டு தயாரிப்புகள் 300 டன் வரையே தாக்கும் எடையை நன்கு அளக்கும். அதன்பின் அதன் லீனியாரிட்டி குறையும். 400 டன்னுக்கு மேல் எடை தாக்கினால் செயல் இழந்து விடும்.

சரியாக கணக்கிடாமல், 600 டன் வரை அதில் வேகமான எடை விழும்படி தவறு செய்து விட்டேன். ஆனாலும் அது அசரவில்லை. விழுந்த எடை 600 டன் என காட்டியது. அடுத்தடுத்தும் நன்கு இயங்கியது. ஏனென்றால் அது ஜெர்மானிய தயாரிப்பு.

இதைப் பற்றி நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போது, ஒருவர் கேட்டார்.

இவ்வளோ நல்லா பண்ணுறாங்க. ஆனா Software மற்றும் கணிணியில அவங்க ஒண்ணும் பெரிசா சாதிக்கலையே? என்றார்.

உடனே இன்னொருவர் சொன்னார். சிஸ்டம் ஹேங்க் ஆகுது, வைரஸ் வருது, பக் இருக்குது, அடுத்த வெர்சன்ல சரி பண்ணிடுறோன்னு சொல்லுறாங்க. அது அமெரிக்கன் ஐடியாலஜி.

ஆனா ஜெர்மன் தப்பே வரக்கூடாதுன்னு நினைப்பாங்க. அதனால் அவங்க product develop பண்றதுக்குள்ள அது outdate ஆகுதோ என்னவோ என்று அங்கலாய்த்துக் கொண்டார்.

Murali Kannan's Profile Photo, Image may contain: 1 person, closeup

Advertisements

இறைவன் நம்மிடம் எதிர்பார்ப்பது உண்மையான பக்தி ஒன்றைத்தான்!


ஸ்ரீ குருவாயூரப்பனின் மகிமைகளை எடுத்துரைக்கும் ‘ஸ்ரீமத்நாராயணீயம்’ பாடிய நாராயண பட்டதிரியை நாம் அறிவோம்.நாராயண பட்டதிரியுடன் ஸ்ரீ குருவாயூரப்பன் நிகழ்த்திய உரையாடல் மிகவும் சுவையானது, ரசிக்கத்தக்கது.

தம் முன் தோன்றிய ஸ்ரீகுருவாயூரப்பனிடம், பகவானே… நீங்கள் மிகவும் விரும்பும் நிவேதனம் என்ன?” என்று பட்டதிரி கேட்கிறார்.

நெய்ப் பாயசம்” – இது குருவாயூரப்பன்.

ஒருவேளை நெய்ப் பாயசம் செய்ய எனக்கு வசதி இல்லை என்றால்,நான் என்ன செய்வது?”

‘‘அவலும் வெல்லமும் போதுமே!”

‘‘சரி பகவானே… அவலும் வெல்லமும் நைவேத்தியம் செய்து வைக்கஎனக்கு வசதி இல்லை என்றால்?”

‘‘வெண்ணெய், வாழைப்பழம், பால், தயிர் – இவற்றில் ஏதாவது ஒன்றை வைத்து வழிபடு. ஏற்றுக் கொள்கிறேன்.”

‘‘மன்னிக்க வேண்டும் பகவானே… தற்போது தாங்கள் சொன்ன நான்கும் என்னிடம் இல்லை என்றால்?”

‘‘துளசி இலைகள் அல்லது ஒரு உத்தரணி தீர்த்தமே எமக்குத் திருப்தி தரும்!”

‘‘அதுவும் என்னிடம் இல்லை என்றால்?” – பட்டதிரியின் குரல் தழைந்து போகிறது.

‘‘எனக்கு நைவேத்தியம் செய்து வைக்க ஒன்றும் இல்லையே என்று வருத்தப்பட்டு கவலையுடன் நீ அழுவாய் அல்லவா… அப்போது உன் கண்களில் இருந்து கசியும் இரண்டு சொட்டுக் கண்ணீரே எனக்குப் போதும்” என்று பகவான் சொன்னதும், ‘ஓ’வென்று கதறி அழுதேவிட்டார் பட்டதிரி.

தெய்வங்கள், தன் பக்தர்களிடம் எதையும் எதிர்பார்ப்பதில்லை. எதிர்பார்ப்பது எல்லாம் – உண்மையான பக்தி ஒன்றைத்தான்!

2-ஸிம்ஸன்ஸ் -அனந்தராமகிருஷ்ணன் (1905 – 1964)


ஸிம்ஸனில் வேலைக்குச் சேர்ந்த ஆரம்ப நாட்களில் ஜே வாழ்வில் அக்னிப் பரீட்சைகள்.

1930 காலகட்டத்தில், இந்தியப் பொருளாதார நிலைமை மந்தமாக இருந்தது. ஸிம்ஸன்ஸ் கம்பெனிக்கு அப்போது இரண்டு விதமான பிசினஸ்கள் இருந்தன. இங்கிலாந்திலிருந்து கார்களை இறக்குமதி செய்வது, மற்றும் பஸ்களுக்கு பாடி அமைத்துக் கொடுப்பது. இரண்டு பிசினஸ்களும் அடிவாங்கிக்கொண்டிருந்தன. இந்தச் சவாலை மிகத் திறமையாக ஜே சமாளித்தார். ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பயணம் செய்தார். டீலர்களைச் சந்தித்தார். முழுப்பணத்தையும் கொடுத்துக் கார்கள், பஸ்கள் வாங்க மக்களிடம் வசதி இல்லை என்பதை உணர்ந்தார். அதுவரை யாரும் முயற்சித்திராத தவணைமுறையை மேலதிகாரிகளுக்குப் பரிந்துரைத்தார். அவர்கள் முதலில் பயந்தார்கள். ஆனால், ஜே வற்புறுத்தலால் ஒத்துக்கொண்டார்கள்.

1933. ஜே, தவணைமுறை விற்பனைக்கெனத் தனி இலாகா தொடங்கினார். அப்போது ஒரு பஸ் விலை 3,900 ரூபாய். இதில் 400 ரூபாயை முன்பணமாக வாங்கிக்கொண்டு, மீதப் பணத்தை 12 18 மாதங்களில் வாங்கிக்கொள்ளும் விற்பனைத் திட்டத்தை அறிவித்தார். போட்டியாளர்கள் ஆட்குறைப்புச் செய்துகொண்டிருந்தபோது, ஸிம்ஸ்ன்ஸ் வியாபாரம் எகிறியது.

கம்பெனிக்கு மட்டுமல்ல, தமிழகத்தின் பொருளாதாரத்துக்கும் ஜே கடைப்பிடித்த யுக்தி உந்துசக்தியாக இருந்தது. குறைவான முதலீடே தேவைப்பட்டதால், ஏராளமான புதிய தொழில் முனைவர்கள் பஸ் சர்வீஸ்களும், டாக்சி சர்வீஸ்களும் தொடங்கினார்கள். பொதுமக்களின் போக்குவரத்து வசதியில் மாபெரும் முன்னேற்றம் வந்தது. தவணைமுறை விற்பனைக்குக் கிடைத்த அமோக வரவேற்பால், இதற்காகவே, 1938 – இல், ஸிம்ஸன் அன்ட் ஜெனரல் ஃபைனான்ஸ் கம்பெனி தொடங்கப்பட்டது. புதிய கம்பெனிகள் தொடர்கதையாகப் போகின்றன என்பதற்குச் சூசகமாக, அமால்கமேஷன்ஸ் என்னும் பதாகை நிறுவனமும் (ஹோல்டிங் கம்பெனி) 1938 – இல் உருவாக்கப்பட்டது.

அன்றைய காலகட்டத்தில் ஆட்சி அவர்கள் வசம் இருந்ததால், ஆங்கிலேயர்கள் இந்தியர்களைத் தங்கள்கீழ் வேலை பார்க்கும் குமாஸ்தாக்களாகவே நடத்தினார்கள். ஸிம்ஸனில் ஒரு ஆச்சரியம் நடந்தது. 1938. மக்டகல், லாடென் ஆகிய இருவரும் முதலாளிகள், இயக்குநர்கள். ஜே – க்குச் சம அந்தஸ்து தந்து மூன்றாவது இயக்குநராக நியமித்தார்கள். இந்தியத் திறமைக்கே ஜே பெற்றுத்தந்த மாபெரும் அங்கீகாரம்!

1940. முதலாளிகளில் ஒருவரான மெக்டகல், தன் பங்குகளைச் சகா லாடெனுக்கு விற்றார், இங்கிலாந்து திரும்பினார். இப்போது இன்னொரு திருப்பம். லாடெனுக்கு மூளையில் கட்டி வந்தது. கம்பெனியை விற்க முடிவெடுத்தார். ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் அதிகவிலை தரத் தயாராக இருந்தார். ஆனால், லேடென், ஜேயால் மட்டுமே ஸிம்ஸனின் பாரம்பரியத்தைக் கட்டிக் காக்க முடியும் என்று நம்பினார். ஆனால், அத்தனை பணம் ஜே கையில் இல்லை. பரந்த மனம்கொண்ட லாடென் என்ன செய்தார் தெரியுமா? ஜேயின் மாதச் சம்பளத்திலிருந்து தவணைமுறையில் இந்தத் தொகையைப் பிடித்துக்கொள்ள ஏற்பாடு செய்தார்.

குழுமக் கடிவாளம் கையில் வந்தமையால், ஜே இன்னும் அதிகத் துணிச்சலோடு செயல்படத் தொடங்கினார். எடுத்துவைத்த முதல் அடி, பஸ் சர்வீஸ். 1939 – இல், மதுரையில் இருந்த ராமவிலாஸ் சர்வீஸ், பலராம் சர்வீஸ் என்னும் பஸ் நிறுவனங்களை ஜே வாங்கினார். எஸ். ஆர். வி. எஸ். என்று பெயர் வைத்தார். அடுத்து, சென்னை, தஞ்சாவூர், கும்பகோணம் ஆகிய நகரங்களில் பஸ் சர்வீஸும், பார்சல் சர்வீஸும் தொடங்கினார். .

அப்போது, பல அரசியல் காரணங்களால், பெட்ரோல் இறக்குமதி அடிக்கடி தடைப்பட்டது. பஸ்கள், லாரிகள் கரி இன்ஜினில் ஓடத் தொடங்கின. 1939 – இல் இதற்காக, ஜே, கரி இன்ஜின் உற்பத்தி தொடங்கினார். இந்தியா முழுக்க அமோக விற்பனை. தேவையைச் சமாளிக்க, சென்னை தவிர, ஹைதராபாத், (டெல்லியை அடுத்த) காஜியாபாத் ஆகிய இடங்களிலும் ஸிம்ஸன்ஸ் தொழிற்சாலை தொடங்கினார்கள். சில வருடங்களில் பெட்ரோல் இறக்குமதி தாராளமானது. கரி இன்ஜின்கள் தயாரிப்பு முற்றுப்புள்ளி கண்டது.

1942. காந்திஜி தலைமையில் ’வெள்ளையனே வெளியேறு’ போராட்டம் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. பல பிரிட்டிஷ் கம்பெனிகள் பிசினஸ்களை மூடிவிட்டுத் தாயகம் திரும்ப யோசித்துக்கொண்டிருந்தார்கள். ஜே இவர்களுக்கு வலை வீசினார். நேர்மை, வெளிப்படைத்தனம், நியாயமான விலை, சாதுரியப் பேச்சு. வலையில் சிக்கத் தொடங்கின பல விலாங்கு மீன்கள்.

அப்போது, இறக்குமதியாகும் கார்களின் விற்பனையில், ஸிம்ஸனின் முக்கிய போட்டிக் கம்பெனி, அடிசன். கம்பெனி சிரமதசையில் இருந்தது. ஜே அடிசனோடு பேச்சுவார்த்தை தொடங்கினார். ஜேயிடம் சில அடிப்படை அணுகுமுறைகள் இருந்தன – விற்பவர் சிரமத்தில் இருந்தாலும், அவர்களிடம் அடிமாட்டு விலை பேசக்கூடாது: வாங்கியபின் நிறுவனத்தில் ஆட்குறைப்போ, நிர்வாகிகளின் அதிரடி மாற்றங்களோ செய்யக்கூடாது.

தாங்கள் எதிர்பார்த்ததைவிட ஜே அதிக விலை தந்ததாக அடிசன் உரிமையாளர்களே ஒத்துக்கொண்டார்கள். 1943 – இல் அடிசன், அமால்கமேஷன் குழுமத்தின் அங்கமானது. அடுத்து, 1945 – இல், ஊட்டியில் இருந்த ஜார்ஜ் ஓக்ஸ் என்னும் கார் ரிப்பேர் காரேஜை ஜே வாங்கினார். அதே வருடம் ஜே வாங்கிய இன்னொரு நிறுவனம், அசோசியேட்டட் பப்ளிஷர்ஸ். அச்சகம், மெட்ராஸ் மெயில் நாளிதழ், ஹிக்கின்பாதம்ஸ் கடை ஆகியவை இதன் மூலம் ஸிம்ஸன்ஸ் பதாகையின் கீழ் வந்தன.

1947. இந்தியா சுதந்திரம் பெற்றது. தன் தொழிற்சாலைக் கனவுகளை நனவாக்க இதுதான் பொன்னான நேரம் என்று ஜே உணர்ந்தார். சென்னையை அடுத்த செம்பியத்தில் ஏராளமான நிலம் வாங்கிப்போட்டார். வரிசையாக வந்தன பல உற்பத்தித் தொழிற்சாலைகள்.

1948 – அடிசன் பெயின்ட்ஸ் அன்ட் கெமிக்கல்ஸ்.

1949 – இந்தியா பிஸ்டன்ஸ்.

தன் தொழிற்கனவுகளை ஜே நீரூற்றி வளர்த்துக்கொண்டிருந்தபோது, வந்தது ஒரு இடி. 1951-53 காலகட்டத்தில் ஸிம்ஸனில் யூனியன் பிரச்சினைகள் தலை தூக்கின. வன்முறை தலைவிரித்து ஆடியது. பல மாதங்கள் தொழிற்சாலைகளை மூடவேண்டிய நெஞ்சைக் கீறி ரணமாக்கும் கட்டாயம். ஆனால், ஜே உறுதியாக இருந்தார். பலகட்டப் பேச்சு வார்த்தைகளுக்குப் பின், இயந்திரங்கள் சுழன்றன. தொய்வுக்குப் பின் மறுபடியும் எழுச்சி. சில மைல்கற்கள்:

1955 – அடிசன் தொழிற்கருவிகள் தயாரிப்பு தொடக்கம்.

1952 – ஸிம்ஸன்ஸ் கார், லாரிகளுக்கான டீசல் என்ஜின்கள் தயாரிப்பு ஆரம்பம்.

1955 – ஆம்கோ பாட்டரீஸ் கம்பெனியை ஸிம்ஸன் வாங்கினார்கள்.

1960 – கார் பாகங்கள் தயாரிக்கும் ஷார்ட்லோ இந்தியா, டிராக்டர்கள் தயாரிக்கும் டாஃபே தொடக்கம்.

1961 – பை மெட்டல் பேரிங்ஸ் தொடக்கம்.

1961 – காப்பி, தேயிலைத் தோட்டங்கள், உரத் தயாரிப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய டி. ஸ்டேன்ஸ் குழுமத்தை அமால்கமேஷன்ஸ் வாங்கினார்கள்.

1962 – வைரத் தொழிற்கருவிகள் தயாரிக்கும் வான் மோப்ஸ் டூல்ஸ் திறப்புவிழா.

ஜே தொட்டதெல்லாம் துலங்கியது. 1964. ஜே உடல்நலக் குறைவுற்றார். தன் 59 – ஆம் வயதில் அகால மரணமடைந்தார்.

இத்தனை சாதித்தபோதும், நிறைவேறாத பல ஆசைகள் அவருக்கு இருந்தன. கார் தயாரிக்க விரும்பினார். அடிசன்ஸ் இங்கிலாந்திலிருந்து பிரசித்தி பெற்ற மோரிஸ் மைனர் கார் பாகங்களை இறக்குமதி செய்தார்கள். அசெம்பிள் செய்தார்கள். முழுகாரையும் தயாரிக்க மத்திய அரசிடம் அனுமதி கேட்டார்கள். பிர்லாவின் ஹிந்துஸ்தான் மோட்டார் எதிர்ப்பினால், இது நடக்கவில்லை. பிரிட்டிஷ் லேலண்ட், லூகாஸ், பாஷ் (ஜெர்மனி) ஆகிய நிறுவனங்களோடு கை கோர்த்து பஸ்கள், ஆட்டோ எலெக்ட்ரிக்கல் பாகங்கள், ஸ்பார்க் ப்ளக்ஸ் தயாரிக்கும் பூர்வாங்க வேலைகள் செய்திருந்தார். அரசியல் சக்திகளுக்கும், ஆட்சிபீடத்துக்கும் வளைந்துகொடுக்காத அவர் அணுகுமுறையால், இவை சாத்தியமாகவில்லை. இன்னும் சில வருடங்கள் வாழ்ந்திருந்தால், தடைகளை வென்று அனைத்தையும் சாதித்திருப்பாரோ?

குறிப்பிடத்தக்க பின்புலம் எதுவுமில்லாத இந்தக் குக்கிராமத்துச் சிறுவன் தொழில் வளர்ச்சி, போக்குவரத்து, விவசாயம் ஆகிய பல்வேறு அத்தியாவசியத் துறைகளில் தமிழ்நாடு கண்டிருக்கும் முன்னேற்றங்களின் சூத்திரதாரி. இந்த இடம், தமிழக வரலாற்றில் நிரந்தர இடம்.

(கட்டுரைக்கான பல அரிய தகவல்கள் தந்து உதவிய அனந்தராமகிருஷ்ணனின் பேரர், ஷங்கர் சுந்தரம் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.)

தொடர்புக்கு: slvmoorthy@gmail.com

-தமிழ் ஹிந்து நாளிதழில் வெளியான கட்டுரை

1-ஸிம்ஸன்ஸ் -அனந்தராமகிருஷ்ணன் (1905 – 1964)


முடிவெடுக்கும் பொறுப்பு ஊழியர்களுக்கு இருந்தால், சில தவறுகள் செய்யும் சுதந்திரமும் அவர்களுக்கு இருக்கவேண்டும்.

-எஸ். அனந்தராமகிருஷ்ணன்.

‘நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’ நிகழ்ச்சி. கேள்விகள் அரவிந்த் சுவாமி. பதில்கள் நான். ஆறாவது சுற்று ஜெயித்துவிட்டேன். ஏழாம் சுற்று. இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லிவிட்டால் 3,20,000 ரூபாய் என் பையில். இல்லையோ, வெறும் பத்தாயிரம்தான். டென்ஷன், டென்ஷன். நாக்கில் வறட்சி. கையில் நடுக்கம். உடல் முழுக்கப் பரபரப்பு.

என்னை நோக்கிப் பாய்ந்துவருகிறது கேள்வி 1840 – ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, போக்குவரத்துத் துறையில் இன்றும் வெற்றிநடை போடும் இந்தியாவின் பழம்பெரும் நிறுவனம் எது?

பதில் தெரியவில்லை. ஆடியன்ஸ், லைஃப்லைன் இரண்டும் உதவ முடியவில்லை. அரவிந்த் சுவாமி க்ளூ தருகிறார்.

இந்த கம்பெனி சென்னையில் தொடங்கப்பட்டது. இன்று மாபெரும் குழுமமாக வளர்ந்திருக்கிறது. கம்பெனி பெயரும், தொடங்கியவர் பெயரும் ஒன்றுதான்.

எனக்கு இப்போதும் விடை தெரியவில்லை. அரவிந்த் சுவாமியே சொல்கிறார் `ஸிம்ஸன்ஸ்.’

வெட்கமாக இருக்கிறது. நம்ம சென்னையில், நம் எல்லோருக்கும் பெருமை தேடித்தரும் வரலாற்றுச் சிறப்புமிக்க கம்பெனியை எனக்குத் தெரியவில்லையே?

********

1840. ஸ்காட்லாந்து நாட்டிலிருந்து ஸிம்ஸன் என்பவர் சென்னை வந்தார். அந்தக் காலகட்டத்தில் போக்குவரத்துக்கு பல்லக்குகள், மாட்டுவண்டிகள், குதிரைவண்டிகள், கை ரிக்‌ஷாக்கள் ஆகியவை பயன்பட்டன. இவற்றைத் தயாரிக்கத் தொடங்கினார். அவருக்குச் செய்யும் தொழிலே தெய்வம். ஒவ்வொரு தயாரிப்பிலும் நுணுக்கம், நேர்த்தி தெரியும். மைசூர், திருவிதாங்கூர், கொச்சி, விஜயநகரம், உதய்ப்பூர் ஆகிய சமஸ்தான ராஜாக்களின் சாரட் வண்டிகள், கோச்சுகள் முதல் சாமானியர் பயன்படுத்திய கை ரிக்‌ஷாக்கள் வரை அத்தனையிலும் ஸிம்ஸன் கொடிகட்டிப் பறந்தார்.

ஸிம்ஸன் தொழில்நுட்ப முன்னேற்றத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இங்கிலாந்தில் ரயில் போக்குவரத்து சூடுபிடிக்கத் தொடங்கியிருந்தது. இந்தியாவில் முதன் முறையாக, சென்னையில் ரயில் கோச்சுகள் தயாரிக்கத் தொடங்கினார். 1856 – ஆம் ஆண்டு, சென்னையிலிருந்து ஆற்காடுவரை முதல் ரயில் ஓடியது. அதில் எட்டு பெட்டிகள் இருந்தன. அத்தனையும் ஸிம்ஸன் தயாரித்தவை.

காலச்சக்கரம் சுழல்கிறது. ஸிம்ஸனின் புதுமை வேகம் தொடர்கிறது. கார்கள், லாரிகளுக்கான டீசல் இன்ஜின்களை இந்தியாவில் முதன்முதலாக, 1951 – இல் தயாரித்தவர்கள் ஸிம்ஸன்ஸ்தான். இன்று ஸிம்ஸன்ஸ் டீசல் இன்ஜின்கள் தயாரிப்பில் முன்னணியில் இருக்கிறது.

ஸிம்ஸன்ஸ் கம்பெனி அமால்கமேஷன்ஸ் குழுமத்தின் முக்கிய அங்கம். இந்தக் குழுமம், டீ முதல் டிராக்டர் வரை நமக்குத் தேவையான பல நூறு பொருட்களைத் தயாரிக்கிறார்கள். ஸ்டேன்ஸ் (காபி, தேயிலைத் தோட்டங்கள், இயற்கை உரங்கள் தயாரிப்பு), அடிசன் அண்ட் கம்பெனி (தொழிற்கருவிகள் தயாரிப்பு), அடிசன் பெயிண்ட்ஸ் அண்ட் கெமிக்கல்ஸ், அசோசியேட்டட் பிரிண்டர்ஸ் (அச்சகம்), அசோசியேட்டட் பப்ளிஷர்ஸ் (புத்தக வெளியீடு), ஆம்கோ பாட்டரீஸ், பைமெட்டல் பெயரிங்ஸ் (ஆட்டோமொபைல் பாகங்கள் தயாரிப்பு), ஜார்ஜ் ஓக்ஸ் (ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் விற்பனை), ஹிக்கின்பாதம்ஸ் (புத்தக விற்பனை), இந்தியா பிஸ்டன்ஸ் (ஆட்டோமொபைல் பிஸ்டன்கள் தயாரிப்பு), மெட்ராஸ் அட்வர்ட்டைசிங் கம்பெனி (விளம்பரச் சேவைகள்), எஸ்.ஆர்.வி.எஸ் (சரக்குப் போக்குவரத்து, பஸ்கள் கட்டமைப்பு), ஷார்ட்லோ இந்தியா (ஆட்டோமொபைல் பாகங்கள் தயாரிப்பு), ஸிம்ஸன் அன்ட் ஜெனரல் ஃபைனான்ஸ் கம்பெனி (கார், பஸ், லாரி, டூ வீலர் கடன்வசதி), வான் மோப்ஸ் டைமண்ட் டூல்ஸ் (வைரத் தொழிற்கருவிகள் தயாரிப்பு), டாஃபே (டிராக்டர்கள் தயாரிப்பு) போன்ற 48 கம்பெனிகள், 50 தொழிற்சாலைகள், 12,000 ஊழியர்கள், குழும ஆண்டு விற்பனை ரூ. 12,800 கோடிகள். தனிமரமாகத் தொடங்கிய ஸிம்ஸன் கம்பெனியை அமால்கமேஷன்ஸ் குழுமம் ஆக்கியவர் – அனந்தராமகிருஷ்ணன். கார் பாகங்கள் தயாரிக்கும் பல தொழிற்சாலைகளைத் தொடங்கி, இந்திய ஆட்டொமொபைல் தொழிலின் தலைநகரம் என்னும் பெருமையைச் சென்னைக்கு வாங்கித் தந்தவர் இவர்தான்.

********

திருநெல்வேலி மாவட்டம். குற்றாலத்திலிருந்து 24 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் ஆழ்வார்குறிச்சி கிராமம். சிவசைலம் – கல்யாணி தம்பதியினருக்கு இரண்டாவது மகனாக, 1905 – ஆம் ஆண்டில் அனந்தராமகிருஷ்ணன் பிறந்தார். ஒரு அண்ணன், இரண்டு தங்கைகள். குடும்பத்துக்கு இருந்த ஒரே சொத்து, சில ஏக்கர் நிலம். அங்கே வயல், சில தென்னை மரங்கள், வாழைகள். வானம் பார்த்த பூமி. ஆகவே, வசதிகள் குறைவான வாழ்க்கை.

அனந்தராமகிருஷ்ணன் ஆழ்வார்குறிச்சியில் ஆரம்பப் பள்ளி முடித்தார். அடுத்து , அம்பாசமுத்திரத்தில் இருக்கும் தீர்த்தபதி உயர்நிலைப் பள்ளியில் கல்வி. மகன்கள் தன்னைப்போல் நிலத்தை நம்பி வாழக்கூடாது, உயர்கல்வி பெற்று வேலைக்குப் போய் நிலையான வருமானத்தோடு வாழவேண்டும் என்று அப்பா ஆசைப்பட்டார். இன்ஜினீயரிங், டாக்டர் படிப்புகளுக்குச் செலவு அதிகம். அவரால் முடியாது. ஆகவே, மகன்களை அக்கவுண்டன்ஸி படிக்கவைக்க முடிவு செய்தார். அப்போது, இந்தியாவில் சி.ஏ. படிப்பு இருக்கவில்லை. சென்னை சட்டக் கல்லூரியில் இருந்த Govt. Diploma in Accountancy (GDA) தான் அக்கவுண்டன்ஸியில் உயர்ந்த படிப்பு. அண்ணன் நாராயணன் முதலில் சென்னை வந்தார். GDA படித்து முடித்தார். காரைக்குடியில் வேலை கிடைத்தது. அனந்தராமகிருஷ்ணனும் அண்ணன் காட்டிய வழியில் GDA படித்தார்.

அனந்தராமகிருஷ்ணன் பிரபல ஃப்ரேசர் அண்ட் ராஸ் கம்பெனியில் சேர்ந்து ஆர்ட்டிக்கிள்ஷிப் பயிற்சி முடித்தார். சென்னை பெரியமேட்டில் இருந்த பிரிட்டீஷ் தோல் ஏற்றுமதி கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தார். அவர்கள் தங்கள் ஏற்றுமதிப் பொருட்களை இன்ஷூர் செய்துகொண்டிருக்கவில்லை. இதன் அவசியத்தை அனந்தராமகிருஷ்ணன் பலமுறை வலியுறுத்தினார். முதலாளிகள் கேட்கவில்லை. அவர்களின் ஏற்றுமதிப் பொருட்களோடு பயணித்த கப்பல் மூழ்கியது. மூழ்கியது கப்பல் மட்டுமல்ல, கம்பெனியும் திவாலானது.

கம்பெனிக்கு, நேஷனல் பேங்க் என்னும் ஆங்கிலேய வங்கி கடன் தந்திருந்தார்கள். வங்கிக் கடன் வசூலை ஸிம்ஸன் கம்பெனி முதலாளி கவனித்துக்கொண்டிருந்தார். அவருக்குக் கணக்கு விவரங்கள் தரும் பொறுப்பு அனந்தராமகிருஷ்ணனுக்கு. இளைஞரின் அறிவுக்கூர்மை, வேலை நேர்த்தி, கட்டுப்பாடு ஆகியவை அவரை மிகவும் கவர்ந்தன. தன் கம்பெனியில் சேருமாறு அழைத்தார். தன் 25 ஆம் வயதில், அனந்தராமகிருஷ்ணன் ஸிம்ஸன் கம்பெனியில் அக்கவுண்டன்ட்.

அனந்தராமகிருஷ்ணனுக்குச் செய்யும் வேலை கனகச்சிதமாக இருக்கவேண்டும். தான் செய்வது சரியென்று தோன்றினால், யார் எதிர்த்து நின்றாலும் கவலைப்படமாட்டார். கம்பெனியின் நிதி நிர்வாகத்தில் பல ஓட்டைகள் – பொருட்கள் உள்ளே வருவதற்கான நுழைவுச் சீட்டு, வெளியே போவதற்கான அனுமதி, விற்பனைக்கான பில்கள் தயாரித்தல், வாங்கும் பணத்துக்கு ரசீது – ஒன்றுமே ஒழுங்காக இல்லை. அனந்தராமகிருஷ்ணன் அத்தனையிலும் ஒழுங்கும், கட்டுப்பாடும் கொண்டுவந்தார். இதுவரை குளிர் காய்ந்தவர்கள் குறை சொன்னார்கள். நம் அக்கவுண்டன்ட் கண்டுகொள்ளவேயில்லை.

கம்பெனியின் முக்கிய கஸ்டமர்கள் ராஜாக்கள், பெரும் பணக்காரர்கள். கோச்சுகள், கார்கள் வாங்கிவிட்டுப் பணம் தராமல் இழுத்தடித்தார்கள். இந்த அதிகார மையங்களிடம் கடனை வசூலிக்க எல்லோரும் பயந்தார்கள். அனந்தராமகிருஷ்ணன் பயமறியாத இளங்கன்று. விற்ற பொருளுக்குப் பணம் கேட்பது நம் உரிமை என்னும் தார்மீகக் கோபத்தோடு அவர்களைத் துரத்தித் துரத்திக் கடன்களை வசூலித்தார்.

ஸிம்ஸன்ஸ் கம்பெனியின் அப்போதைய முதலாளிகளான மக்டகல், லாடென் இருவரும், மாநிலத்தின் தென்கோடிக் கிராமத்திலிருந்து வந்த இளைஞரிடம் இத்தனை திறமையையும், துணிச்சலையும் எதிர்பார்க்கவேயில்லை. பிரமித்தார்கள். மூன்றே மாதங்களில், கம்பெனி செக்ரட்டரி என்னும் பதவி உயர்வு தந்தார்கள்.

இந்தியப் பெயர்களை உச்சரிக்க ஆங்கிலேயர்கள் சிரமப்படுவார்கள். ஆகவே, முக்கிய அதிகாரிகளுக்கு, A, B, C, D என்று ஆங்கில அகர வரிசையில் சுருக்கப் பெயர் வைப்பார்கள். அதன்படி, அனந்தராமகிருஷ்ணன், பத்தாவது மூத்த இந்திய அதிகாரி. ஆகவே, அவர் பெயர் “J (ஜே)” என்று ஆயிற்று. அவர் வருங்காலம் ஜே ஜே என்று கொடிகட்டிப் பறக்கப்போகிறது என்று கட்டியம் கூறும் மகத்தான ஆரம்பம்!

இதன் அடுத்த பகுதி…

தொடர்புக்கு: slvmoorthy@gmail.com

-தமிழ் ஹிந்து நாளிதழில் வெளியான கட்டுரை

ரெண்டு இட்லி 4 சட்னி.. தூத்துக்குடி ராஜகோபால்-இன் ‘சரவணபவன்’..!


ஒருவர் ராஜகோபாலிடம் மதிய உணவைச் சாப்பிட டி. நகருக்குச் செல்ல வேண்டியிருக்கிறது ஏனென்றால் கே.கே நகரில் ஒரு ஹோட்டல் கூட இல்லை என்று வருத்தப்பட்ட போது திரு. P.ராஜகோபால் ஒரு ஹோட்டலை தொடங்கினார். இப்போது அது தென்னிந்தியாவிலிருந்து உலகம் முழுவதும் ஒரு மிகப்பெரிய ஹோட்டல்களின் சங்கிலித் தொடராக வளர்ந்துள்ளது. வெற்றிக்கான அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியுள்ளதால் P. ராஜகோபாலின் கதையைக் கேட்கும் போது ஒரு திரைப்படத்தில் இருந்து நேரடியாக வெளியில் வந்ததைப் போன்ற உணர்வு வருகிறது. அடிமட்டத்திலிருந்து பிரமிக்கத்தக்க வளர்ச்சி, ஒரு தனி மனித சாம்ராஜ்யம், குற்றம், கட்டுக்கடங்கா உணர்ச்சி, அதிகாரம் என மற்றும் பல முழுமையான விஷயங்களைக் கொண்டது இவரது வாழ்க்கை.
HSB1
தற்போது சரவண பவனுக்கு இந்தியாவில் 33 க்கும் அதிகமான கிளைகளும் மற்றும் கடல் கடந்து வெளிநாடுகளில் 47 கிளைகளும் உள்ளன. அவர் தனது சுயசரிதையில் “நான் எனது இதயத்தை வெற்றியின் மீது பொருத்திவிட்டேன்” என்று கூறுகிறார்.
HSB2

1947 – ஆம் ஆண்டு ஒரு மண் குடிசையில் பிறந்த ராஜகோபால் தமிழ்நாட்டிலுள்ள புன்னையாடி என்ற கிராமத்திலிருந்து வந்தவர். அவருடைய கிராமத்தில் ஒரு பேருந்து நிறுத்தம் கூட இல்லை. ஏழாம் வகுப்போடு அவர் பள்ளிப் படிப்பிலிருந்து நின்று விட்டார். வயிற்றுப் பிழைப்புக்கு சம்பாதிப்பதற்காக ஒரு ஹோட்டலில் வேலைக்குச் சேர்ந்தார். மேசைகளைத் துடைக்கும் வேலையைச் செய்து அங்கேயே தரையில் தூங்குவாராம் ராஜகோபால்.

HSB3

மெதுவாக டீ போட கற்றுக் கொண்டார். விரைவில் ராஜகோபால் ஒரு மளிகைக் கடையில் உதவியாளராக வேலைக்குச் சேர்ந்தார். அங்கு வேலையில் கிடைத்த அனுபவத்தைக் கொண்டு ராஜகோபால் அவருடைய அப்பா மற்றும் மைத்துனரின் உதவியோடு சொந்தமாக ஒரு மளிகைக் கடையைத் திறந்தார். வியாபாரத்தில் அதுவே அவரது முதல் அனுபவம்.

HSB4

கடையை நடத்த அவர் நிறையச் சவால்களைச் சந்தித்தார். திட்டமிட்டபடி வேலைகள் நடக்கவில்லை, இளைஞரான ராஜகோபாலுக்கு ஒரு கடையை நடத்துவதென்பது மிகவும் கடினமாக இருந்தது. ஆனாலும் அவர் தனது மனோதிடத்தால் எல்லாச் சவால்களையும் ஜெயித்தார். பிறகு அவரது நிலைமை மேம்பட ஆரம்பித்தது.

HSB5

1979 ஆம் ஆண்டு அவரது மளிகைக் கடையில் ஒரு விற்பனையாளருடன் மேலே சொல்லப்பட்ட உரையாடல் நடந்தது. இந்த உரையாடல் தான் 1981 ஆம் ஆண்டுச் சரவணபவன் பிறப்பதற்குக் காரணமானது. அந்தக் காலத்தில் வெளியே சாப்பிடுவது நாகரிகம் என்பதை விட அத்தியாவசியமாக இருந்தது. வெளியிடங்களில் சாப்பாட்டிற்கு இருந்த தேவையை உணர்ந்த ராஜகோபால் அந்த வியாபாரத்தில் குதித்தார்.

HSB6

ஆரம்பகாலம் முதலே ராஜகோபால் உணவின் சிறந்த தரம் மற்றும் வாடிக்கையாளரின் திருப்தி ஆகியவற்றின் மீது கவனம் செலுத்தினார். இப்போது இருப்பது போல இந்த வார்த்தைகளெல்லாம் முக்கிய நடைமுறையாக ஹோட்டல்களில் இல்லாத ஒரு காலத்திலேயே அவர் அதையெல்லாம் கடைபிடித்தார்.

HSB7

அவரிடம் மட்டமான சமையல் பொருட்களைப் பயன்படுத்தும்படியும் மற்றும் பணியாளர்களுக்குக் குறைந்த சம்பளத்தைக் கொடுக்கும்படியும் ஆலோசனை கூறிய ஒருவரை ராஜகோபால் திட்டி அனுப்பி விட்டார். தொடக்கக் காலத்தில் சிறந்த தரமான உணவை கொடுப்பதற்காக ஹோட்டலை நஷ்டத்திற்கு நடத்த வேண்டி வந்தது. ஒவ்வொரு மாதமும் சுமார் ரூபாய் 10,000 நஷ்டமடைந்தார். ஆனால் காலப்போக்கில் அவருடைய நற்பெயர் வளர்ந்து நஷ்டங்கள் லாபங்களாக மாறின.

HSB8

சரவணபவனின் வெற்றியின் ரகசியம் நல்ல தரமான உணவை பரிமாறுவதில் மட்டுமில்லை. அங்கு வேலை செய்யும் பணியாளர்களை அக்கறையுடன் கவனித்துக் கொள்வதிலும் மற்றும் பணியிடத்தின் உயர் தரத்திலும் உள்ளது.

HSB9

ராஜகோபால் தட்டின் மீது வாழையிலையைப் பரப்பி அதன் மீது உணவு பரிமாறும் பழக்கத்தைத் தொடங்கினார். அது ஏற்கனவே வேறொருவர் சாப்பிட்ட தட்டில் சாப்பிடுகிறோமே என்கிற வாடிக்கையாளர்களின் சஞ்சலத்தைப் போக்கியதோடு பணியாளர்களுக்குத் தட்டுக்களைக் கழுவும் வேலையையும் சுலபமாக்கியது.

HSB10

ராஜகோபால் உணவில் முடி விழுந்திருக்கிறது என்கிற புகார்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து வராமலிருக்கப் பணியாளர்களுக்கு மாதம் ஒருமுறை தலைமுடியை வெட்டச் செய்தார். மேலும் அது பணியாளர்களுக்குக் கண்ணியமான தோற்றத்தையும் அளித்தது. அடுத்த நாள் காலையில் வேலையைப் பாதிக்கும் என்பதால் பணியாளர்களில் யாரும் பின்னிரவு நேரங்களில் சினிமா பார்க்க அனுமதிக்கப்படவில்லை.

HSB11

ராஜகோபால் செய்த முதல் விஷயம் அவரது பணியாளர்களுக்கு அளித்த வேலை பாதுகாப்பு. அவர் தனது பணியாளர்களுக்குத் தங்குமிட வசதியை அளித்தார் மற்றும் அவர்களின் சம்பளத்தையும் உயர்த்தினார். மேலும் அவர் கிராமத்தில் குடும்பங்களை உடைய பணியாளர்கள் அவர்களின் குடும்பங்களைப் பார்த்து வருவதற்காக வருடாந்திர ஊக்கத் தொகையையும் கொடுத்தார். ஒவ்வொரு திருமணமான பணியாளருக்கும் இரண்டு குழந்தைகள் வரை கல்வி உதவியை அளித்தார். ஒரு பணியாளருக்கு உடம்பு சரியில்லை என்றால் அவரைக் கவனித்துக் கொள்ள இரண்டு பேரை அனுப்பினார்.

HSB12

ஒரு பணியாளரின் நலன் அவருடைய குடும்ப நலத்தில் உள்ளது. உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்காகப் பணியாளர்களையும் அவரது குடும்பத்தையும் கவனித்துக் கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

HSB13

இப்படித் தொடர்ந்து சிறப்பான முயற்சி மற்றும் திட்டங்களுடன் சென்னை கேகே நகரில் 14-12-1981ஆம் ஆண்டுத் துவங்கப்பட்ட சரவணபவன் இன்று உலகின் பல இடங்களிலும் விரிவடைந்து தற்போது 91 கிளைகளுடன் வெற்றிச் சாம்ராஜியமாக உள்ளது. கடைசியாகச் சரவணபவன் 04-03-2016ஆம் ஆண்டு நெதர்லாந்து, ஆம்ஸ்டரடேம் பகுதியல் தனது 9வது கிளையைத் திறந்ததுள்ளது.

HSB14

தூத்துக்குடியில் இருந்து வந்த இளைஞன் சென்னையில் துவங்கிய முதல் ஹோட்டல் வெற்றியின் மூலம் இன்று சரவணபவன் நிறுவனத்தின் மொத்த மதிப்பு 700 மில்லியன் டாலர்.

HSB15

2009 ஆம் ஆண்டுச் சாந்தாராம் என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. HSB16

சாந்தாராம் என்பவர் ராஜகோபாலின் உதவி மேலாளர்களில் ஒருவருடைய மகளான ஜீவஜோதி என்பவருடைய நெருங்கிய நண்பர். ராஜகோபால் ஜீவஜோதியை திருமணம் செய்து கொள்ள விரும்பினார்.

ஆனால் ஜீவஜோதியோ சாந்தாராம் மீது ஆர்வமாக இருந்தார். பலமுறை எச்சரித்த பின்பும் அவர்கள் சந்திப்பதை நிறுத்தவில்லை. இந்நிலையில் சாந்தாராம் கடத்தப்பட்டார்.

சில நாட்களுக்குப் பின்னர்ச் சாந்தாராமின் உடல் மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடர்களுக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டது. ராஜகோபால் தான் கொலை செய்தார் என்பதற்குச் சாட்சியம் இல்லாததால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

-http://tamil.goodreturns.in/

 

வீட்டுக்கு ஒரு விவசாயி! – கோவை பாலா


p48

விளைச்சல் நிலங்கள் எல்லாம் அடுக்குமாடிகளாக மாறி வருகின்றன. படித்து முடித்ததும், ஃபாரின் போகவேண்டும்…

கைநிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணமே இன்றைய இளைஞர்கள் மத்தியில் வேரூன்றி இருக்கிறது.

பணம் மட்டுமே பிரதானமாக இருக்கும் இன்றைய சூழலில், மெத்தப் படித்திருந்தும் ‘விவசாயமே எங்களின் வாழ்வாதாரம்’ என்ற வரிகளைத் தாரகமந்திரமாகக் கொண்டு இயற்கை விவசாயத்தில், தங்களை முழுமையாக ஈடுபடுத்தி வெற்றி கண்டு வருகின்றனர் கோவை கந்தேகவுண்டன் சாவடியைச் சேர்ந்த தம்பதியான கிருத்திகா – செந்தில்குமார்.

மேலும், பல இளைஞர்களின் கவனத்தைத் தம் பக்கம் திருப்பி விவசாயத்தில் ஈடுபடச் செய்து வருகின்றனர். அவர்களைச் சந்தித்தோம்.

‘படித்துவிட்டு விவசாயம் செய்ய ஆரம்பித்து விட்டீர்களே. நல்ல பெரிய வேலைக்குப் போய் கை நிறைய சம்பாதிக்கலாமே’ என்று எத்தனையோ பேர் கேட்கிறார்கள்.

வேலை என்று போயிருந்தால் மாதம் நாற்பதாயிரம், ஐம்பதாயிரம் என ஊதியம் வாங்கலாம் தான். குழந்தைகளுடன், குடும்பத்துடன் நேரத்தைச் செலவழிக்கக்கூட முடியாமல் போகும். காலையில் ஓடி இரவு வீடு திரும்பும் ஒரு யந்திரத்தனமான வாழ்க்கை வாழ எங்களுக்கு விருப்பமில்லை.

விவசாயத்தில் ஈடுபடுவதால், உறவுகள் ஒன்றாகி ஒற்றுமை பலப்படும். நல்ல எண்ணங்கள் துளிர் விடும். மனம் எப்போதும் நிம்மதியோடு இருக்கும். இப்படி ஓர் அனுபவத்தைப் பணம் தந்திடுமா? மன ஆரோக்கியத்துடன் வளர விவசாயம்தான் திருப்தியான தொழில்.

மேலும், எல்லாமே நச்சாக, கலப்படமாக மாறி விடும் இந்தக் காலத்தில், இயற்கை விவசாயத்தில் விளைவிக்கப்படும் பொருள்களால் குடும்ப ஆரோக்கியத்தையும், பொது ஆரோக்கியத்துக்கும் முடிந்த அளவு ஒரு பங்களிப்பைச் செய்ய முடிகிறது.

நம்மாழ்வாரின் இயற்கை விவசாய யுக்திகளைப் படித்துச் செயல்படுத்தி நச்சு இல்லாத உணவுப் பொருட்களை விளைவிக்கிறோம்.

என் மனைவி கிருத்திகா எம்.எஸ்.டபிள்யூ, எம்.ஃபில். முடித்துவிட்டு என்னோடு இணைந்து நிலத்தில் உழைக்கிறார். அவர் பட்டுப்புழு வளர்ப்பில் தீவிரமாக ஈடுபட்டு அதில் வரும் வருமானத்தை ஆரம்பக் காலகட்டங்களில் விவசாய முட்டுவழிச் செலவுக்குக் கொடுத்து உதவினார்.

விவசாயம் பார்ப்பதைவிட உசத்தியான வேலை உலகத்தில் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. குடும்பத்தில், மூத்த மகனின் கடமையாக, நிலத்தில் இறங்கி வேலை பார்த்து பெற்றோர் சுமையைக் குறைக்கவே நான் விரும்பினேன்” என்கிறார் செந்தில்குமார்.

செயற்கை உரங்களால் வலுவிழந்த மண்ணை உயிர்ப்பிக்க முடியுமா?

எப்படிப்பட்ட செயற்கை உரங்களால் உயிர் வலுவு இழந்திருந்த மண்ணாக இருந்தாலும், அதை உயிர்ப்பித்து மண்ணைப் புதுப்பித்து பின் நாற்று நட்டால் மூன்று போகமும் விளையும்.

முதலில் மண்ணைப் பக்குவப்படுத்த கடலை, ஆமணக்கு, சூரியகாந்தி போன்ற எண்ணெய் வித்துக்கள், சொளம், கம்பு உள்ளிட்ட தீவனப் பயிர்கள், சணல் பை, தக்கை போன்ற வாசனைப் பயிர்களைத் தெளித்து 45 நாட்களுக்குப் பின், உழவு ஓட்ட வேண்டும்.

அப்பொழுதுதான் கீழ் இருக்கும் சத்துள்ள மண் மேலாகவும், மேலே உள்ள பயிர்கள் கீழாகவும் செல்லும். இம்முறையைப் பின்பற்றினால் மண்ணுக்கான சத்துக்கள் நிறையவே கிடைக்கும். விளையாத நிலத்தைக்கூட ஆறு மாதத்தில் சத்துள்ள நிலமாக்கலாம். தட்பவெப்ப சூழலுக்கு ஏற்ப ஒவ்வொரு போகத்துக்குப் பின்பும், நிலத்தை ஏரால் ஊழுது அப்படியே விடவேண்டும். அதற்குப் பின் இயற்கை உரம் போட்டால் அபார விளைச்சல் கிடைக்கும்” என்றவரிடம், இயற்கை உரம் எப்படித் தயாரிக்கிறீர்கள்?” என்று கேட்டோம்.

மாட்டுச் சாணம், கோமியம், பால், தயிர், வெண்ணெய், நெய் கொண்டு இயற்கையான பஞ்ச கவ்யம் தயாரிக்கலாம், வெயில் காலமாக இருந்தால் இளநீர், மோர் சேர்க்க வேண்டும். பனிக் காலத்தில் தென்னங்கள் சேர்க்கலாம். ஆடு, மாடு கழிவுகள், இலைகள், உயிரி உரங்கள் தண்ணீரோடு சேர்த்துக் குவியலாக்கி, காற்று புகாதவாறு தார்ப்பாயினால் மூடினால், 20 நாட்களில் இயற்கை உரம் ரெடி.

இதையெல்லாம் போட்டுக் கலந்தும் விளையாத நிலத்தை, எளிதில் கிடைக்கும் பழங்களை அரைத்து 15 நாட்கள் டிரம்மில் பக்குவப்படுத்தித் திறக்காமல் வைத்திருந்தால் நொதித்துவிடும். மீன் கழிவுகள் கொண்டும் சத்து டானிக் தயாரித்து செடிகளின் வேர்களில் ஊற்றலாம்.

ஒரு முறை அடித்த பயங்கரச் சூறைக் காற்றினால் நாட்டுப் பயிரிலிருந்து அத்தனை வாழை மரங்களும் அடியோடு சாய்ந்துவிட்டன. அத்தனை இலை, பட்டைகளை மக்கவைத்து மாற்றி உரமாக்கினோம். இந்த நெஞ்சுரம் விவசாயிக்கு இருந்தால்தான் இயற்கை விவசாயம் சாத்தியமாகும். இயற்கை உரத்தால் எல்லா செலவுகளும் போக ஆண்டுக்கு ஆறு லட்சத்துக்கு மேல் வருமானம் கிடைக்கிறது” என்றவர், பயிர்களைக் காப்பாற்றும் டெக்னிக்குகளையும் சொன்னார்.

பூச்சிகளை அண்டவிடாத உயிர்வேலி அமைப்பது. பயிர்களுக்கு இடையில் இடைவெளிவிட்டு அதற்குரிய விளக்குகளை நட்டுவைப்போம். விளக்கெண்ணெய், கிரீஸ், ஆயில்களை மஞ்சள் அட்டைகளில் பூசி விளக்குடன் சேர்த்துக் கட்டித் தொங்கவிட்டுவிடுவோம். பூச்சிகள் அதில் வந்து ஒட்டி அழிந்துவிடும். இப்படி எத்தனையோ கண்ணும் கருத்துமாக உழைத்தால்தான் முழுமையான இயற்கை விவசாயத்தைச் செய்ய முடியும்.”

இளைஞர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்பும் கருத்து?

கோடி கோடியாகச் சம்பாதித்தாலும் பணத்தைத் தின்று உயிர்வாழ முடியுமா? வேண்டும் வீட்டுக்கு ஒரு விவசாயி! படித்தவர்கள் இத்தொழிலுக்கு வந்து, புதிய தொழில்நுட்ப முறைகளைப் புகுத்தவேண்டும். நஞ்சற்ற விவசாயத்தில் ஈடுபட்டு, மக்களுக்கு ஆரோக்கியமான உணவுப் பொருட்கள் உற்பத்தி செய்யவேண்டும்.”

-இந்த வார கல்கி இதழில் இருந்து…

கும்பகோணத்தின் ஹோட்டல்கள் ! – மோகன் ராவ்


வெங்கடா லாட்ஜ்
ஆரிய பவன்
முருகன் கபே
மணிகண்ட விலாஸ்
மங்களாம்பிகா காபி ஹோட்டல்
ஐயப்ப விலாஸ்
ஹேமரிஷி மண்டபம்
மாமி மெஸ்

பெரிய கடை தெருவில் இருந்த வெங்கடா லாட்ஜின் வெங்காயம் + கத்தரிக்காய் கொத்சு அமர்க்களமாக இருக்கும்.

ஆரிய பவனின் ரவா தோசை ரம்மியமாக இருக்கும்.

மடத்து தெருவில் இப்போதும் இருக்கிற முருகன் கபேயின் முறுகல் மாவு தோசை +சற்றே கெட்டியான சாம்பார் காம்பினேஷன் அனைவரையும் கட்டிபோடும்.

சின்ன கடை தெருவில் இருந்த மணிகண்ட விலாஸ் .இங்கு பூரி கிழங்கின் சுவை நம்மை பூரிப்படைய செய்யும்.  கும்பகோணத்தில் இன்றும் பூரியை boori என்றுதான் அழைப்போம்.

கைலாய மலையை விஞ்சும் புகை மூட்டத்தோடு நம்மை அழைப்பது கும்பேஸ்வரர் சந்நிதியில் இருக்கும் மங்களாம்பிகா காபி ஹோட்டல் . இப்போது hifi ஆக மாறிவிட்டது .இதை சின்ன வயசில் நாங்கள் அர்த்தம் தெரியாமல் இப்படி பிரித்து பிரித்து சொல்லி சந்தோஷப்படுவோம் மங்களாம்பி +காகாபி+ ஹோட்டல்..
அதன் காபி……டம்ளரை கீழே வைக்க மனமே வராது

சாரங்கபாணி கோயில் அருகே உள்ள மாமி மெஸ் இங்கே காலையில் கீரை வடை மதியம் சாப்பாடுக்கு இடம் கிடைக்காது அப்படி இடம் பிடித்து மசால் வடையுடன் சாப்பாடு 🍚 அப்பப்பா என்ன சுவை 😋

நேடிவ் ஹைஸ்கூல் அருகே இருந்த மிகச்சிறிய ஹோட்டல் ஐயப்ப விலாஸ். .இங்கு கீழே பலகையில் அமர்ந்துதான் சாப்பிடவேண்டும். இங்கு மட்டும் வாழை இலை கிடையாது .வாழை சருகில் சுடச் சுட இட்லி சாம்பார் + ஸ்பெஷல் சட்னி .இந்த சட்னியை நாக்கில் வைத்தால் எங்கேயோ பல்பு எரியும். so அனைவரும் ஆனந்த கண்ணீரோடுதான் பசியாறுவர்.

பொற்றாமரை குளத்தின் ஒரு ஓரமாக ஒளிந்துகொண்டிருக்கும் ஒரு ஹோட்டல்தான் இந்த ஹேமரிஷி மண்டபம் .அது ஒரு கோவிலா இல்லை ஹோட்டலா என்று எனக்கு இன்று வரை புரியவில்லை.

இட்லி தோசைக்கு அங்கு மிளகாய்பொடி .அதற்கு ஊற்றிக்கொள்ள அந்த கால injection பாட்டிலில் நல்லெண்ணெய் .அட அட அடா……சொர்க்கம்…சொர்க்கம்.

இதில் எந்த ஹோட்டல் சென்றாலும் எது சாப்பிட்டாலும் முடிவு என்பது காபியோடுதான் என்பது எழுதப்படாத சட்டம்.

அதுவும் எப்படி தெரியுமா? காரசாரமான டிபன் சாப்பிட்டு முடித்த பின் கை கழுவாமல் வாய் கொப்பளிக்காமல் காபியை அப்படியே வாயில் சரித்துக்கொள்ளும்போது நம் நாக்கின் சுவையானது இன்னும் கொஞ்சம் காரமாகி மூன்றே நொடிகளில் இனிப்புக்கும் மாறும் அந்த நேரம் இருக்கிறதே …. அதை அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும்.

whatsapp-image-2017-01-23-at-7-06-38-am

இந்தக் கட்டுரையை எழுதிய கும்பகோணத்தைச் சேர்ந்த மோகன் ராவ் தற்போது வசிப்பது சென்னை அம்பத்தூரில்…