Category Archives: Kumbakonam

தினமும் ஓர் ஓவியம்.. தினமும் ஒரு செய்தி.. சித்திரத்தால் சேதி சொல்லும் ஓவியர் சித்ரலேகாவின் மகன் – குள.சண்முகசுந்தரம்


sri-venkatramana-hotel

ஹோட்டல்களுக்கு வெளியே வைக்கப்படும் ’இன்றைய ஸ்பெஷல்’ பலகைகளில் அன்றைய தின உணவு ரகங்களின் பட்டியலைப் பார்த்திருப்போம். ஆனால், கும்பகோணம் வெங்கட்ரமணா ஹோட்டலில் தினமும் ஓர் அரிய தகவலை ஓவியமாகவும் வரைந்து வைக்கிறார்கள்.

கும்பகோணம் காந்தி பூங்கா வடக்கில் உள்ள வெங்கட்ரமணா ஹோட்டலுக்கு சாப்பிட வருகிறவர்கள் ஹோட்டல் வாசலில் எழுதி வைக்கப்பட்டுள்ள இன்றைய ஸ்பெஷலை படிக்கிறார்களோ இல்லையோ, அந்தப் பலகையில் உள்ள ஓவியத்தையும் அது சொல்லும் சேதியையும் உள்வாங்காமல் நகருவதில்லை. கவனத்தை ஈர்க்கும் இந்த ஓவியங்களின் படைப்பாளி நா.ராஜேந்திரன் – பிரபல ஓவியர் சித்ரலேகா (எ) நாராயணசாமியின் மகன்.

பி.ஏ, படித்துக் கொண்டிருந்த போதே தந்தையிடம் ஓவியம் கற்ற ராஜேந்திரன், கடந்த 40 வருடங்களாக ஓவியராய் தனது பயணத்தைத் தொடர்கிறார். இவர் எப்படி ஹோட்டல் ‘மெனு’ பலகைக்கு ஓவியரானார்?

இதுபற்றி ஹோட்டல் உரிமையாளர் எம்.பாலச்சந்திரன் கூறியதாவது: “தினமும் எங்களது ஓட்டலின் ‘இன்றைய ஸ்பெஷல்’ வகைகளைப் பலகையில் எழுதி வைப்பதற்கு ஆர்ட்டிஸ்ட் தேடினோம். அப்போது தான், ராஜேந்திரனைப் பற்றிச் சொன்னார்கள். அவரிடம் விஷயத்தைச் சொன்னதும் மறுக்காமல் ஒத்துக் கொண்டார். வெறும் ‘மெனு’வை மட்டும் எழுதிப் போடாமல் பழைய வரலாற்றுச் சம்பவங்களை ஓவியமாக வரைந்து அதற்கு இரண்டொரு வரியில் விளக்கம் கொடுத்த ராஜேந்திரனின் ஐடியா வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதால் அதை அப்படியே தொடர ஆரம்பித்து விட்டார். கடந்த 9 வருடங்களாக எங்களது ஹோட்டல் வாசலில் அவரது ஓவியங்கள் தினம் ஒரு பயனுள்ள தகவலைச் சொல்லிக் கொண்டிருக்கிறது” என்கிறார் பாலச்சந்திரன்.

ஓவியத்தில் செய்தி சொல்லும் ராஜேந்திரனுக்கு மாதம் இரண்டாயிரம் ரூபாய் ஊதியம் தருகிறது ஓட்டல் நிர்வாகம். ‘‘சம்பளம் பெரிய விஷயமில்லைங்க. நாம் என்ன சொல்ல நினைக்கிறோமோ அதை ஓவிய வடிவில் சுதந்திரமாகச் சொல்ல முடிகிறது. காலையில 9 மணிக்கு வந்தேன்னா ஒரு மணி நேரத்துல ஓவியம் வரைஞ்சு முடிச்சுருவேன். 6 மாசத்துக்கு ஒரு தடவ நானே இந்தப் பலகையை கருப்புப் பெயின்ட் அடித்து புதுப்பிச்சுக்குவேன்.

ஓவியம் வரைந்து சேதி சொல்வதற்காக பழைய வரலாற்று நிகழ்வுகள், அரசியல், சங்கீதம், இதிகாசம், இலக்கியம், சம்பந்தப்பட்ட ஏராளமான தகவல்களைத் திரட்டி வைச்சிருக்கேன். அதிலுள்ள தகவல்களைத்தான் தினமும் ஓர் ஓவியமா வரையிறேன்.

எங்காவது வெளியூர் போனா ரெண்டு, மூணு நாளைக்கான ஓவியங்களை சார்ட்டில் வரைந்து குடுத்துட்டுப் போயிருவேன். நான் ஊர் திரும்பும்வரை அந்த ஓவியங்களில் தினம் ஒண்ணா எடுத்து பலகையில் ஒட்டிருவாங்க. நம்மாளுங்க, ஓவியத்தைப் பார்த்து செய்தியைப் படிச்சுட்டுப் போவாங்க. சுற்றுலா வர்ற வெள்ளக்காரங்க பலகைக்குப் பக்கத்துல நின்னு போட்டோ புடிச்சிட்டுப் போவாங்க. எப்பவாச்சும் இந்தக் காட்சிகளைப் பாக்குறப்ப எனக்கு நானே பெருமைப்பட்டுக்குவேன்’’ என்கிறார் சித்ரலேகாவின் சித்திர வாரிசு ராஜேந்திரன்.

-தமிழ் ஹிந்து நாளிதழில் 2016-ம் ஆண்டில் வெளியான கட்டுரை…

Advertisements

கும்பகோணம் டிகிரி காபி ரகசியம் தெரியுமா? – குள.சண்முகசுந்தரம்


coffee_2332897f

பித்தளை அல்லது தாமிரத்தாலான சற்றே மெகா சைஸ் ஃபில்டர்கள், ‘டம்ளர் – டவரா செட்’கள் இவைதான் கும்பகோணம் டிகிரி காபிக்கான அக்மார்க் முத்திரை எனப் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், உண்மை அதுவல்ல.

ஐம்பது வருடங்கள் பின்னோக்கிப் பார்த்தால் கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் ஆலயத்தின் மொட்டை கோபுர வாசலில் ‘லெட்சுமி விலாஸ் காபி கிளப்’ இருந்தது. இங்கே ஃபில்டர் காபி குடிக்க எந்நேரமும் கூட்டம் வரிசை கட்டி நிற்கும். தனது கடையை நம்பி வந்தவர்களின் நாவுக்கு ருசியான காபியைத் தருவதில் தனக்கென ஒரு இடத்தைத் தக்க வைத்திருந்தவர் கடையின் உரிமையாளர் பஞ்சாமி ஐயர்.

இதனால் அக்கம் பக்கத்து மிராசுகள் எல்லாம் வண்டி கட்டி வந்து கிளப் டிகிரி காபிக்காகத் தவம் கிடந்தார்கள். பசும்பாலை அப்படியே கறந்து துளியும் தண்ணீர் கலக்காமல் அப்போதே காய்ச்சி எடுத்து, ஸ்பெஷலாக வறுத்து அரைக்கப்பட்ட காபி தூளில் நம்பர் ஒன் தரத்தை எடுத்து அதில் ஒரே ஒரு முறை மட்டுமே டிகாஷன் எடுத்து மணக்க மணக்க ஃபில்டர் காபி போட்டுக் கொடுத்தார் பஞ்சாமி ஐயர். இதற்காகத் தனது ‘கிளப்’பின் பின்புறம் பிரத்யேக மாட்டுப் பண்ணையே வைத்திருந்தார். அந்தக் காலத்திலேயே அதில் இருபதுக்கும் குறையாத பசு மாடுகள் அசைபோட்டுக் கொண்டிருந்தன என்றால் பஞ்சாமி ஐயரின் பொருளாதாரப் பலத்தை ஊகித்துக் கொள்ளுங்கள்.

கும்பகோணம் மற்றும் அதன் அக்கம் பக்கத்தில் மட்டுமே தெரிந்திருந்த பஞ்சாமி ஐயர் காபியை உலகறியச் செய்தது இசை வித்வான்கள்தான். கும்பகோணம் இசைக் கச்சேரிகளுக்கு வந்த வித்வான்கள் பஞ்சாமி ஐயரின் டிகிரி காபியைக் குடித்துப் பழகி, ஒரு கட்டத்தில் அதன் சுவைக்கு அடிமையாகவே மாறிப்போனார்கள். இதனால் போகுமிடமெல்லாம் ‘குடிச்சா கும்பகோணம் பஞ்சாமி ஐயர் கடை டிகிரி காபி மாதிரி குடிக்கணும்’ என்று பேச ஆரம்பித்தார்கள். இதுவே பேச்சு வழக்கில் கும்பகோணம் டிகிரி காபியாகிப் போனது.

கும்பகோணம் கொழுந்து வெற்றிலைக்குப் போட்டி போட்டுக் கொண்டு கும்பகோணம் டிகிரி காபியும் பிரபலமானது. பஞ்சாமி ஐயரைத் தொடர்ந்து இன்னும் பலர் கும்பகோணம் பகுதியில் டிகிரி காபி கடைகளைத் திறந்தார்கள். என்றாலும் 1960 தொடங்கி 1986 வரை கும்பகோணத்தில் பஞ்சாமி ஐயர்தான் கொடிகட்டிப் பறந்தார்.

இப்போதும் கும்பகோணத்தில் டிகிரி காபி கடைகள் பல இருக்கின்றன. ஆனால், அவர்கள் யாரும் ‘கும்பகோணம் டிகிரி காபி கடை’ என்று தங்களைப் பிரகடனப்படுத்திக் கொள்ளவில்லை. இது குறித்து நம்மிடம் பேசினார் கும்பகோணத்தில் டிகிரி காபி கடை வைத்திருக்கும் ‘முரளீஸ் கபே’ உரிமையாளர் முரளி

“பித்தளையில் டம்ளர் – டவரா ‘செட்’டையும் ஃபில்டரையும் வெச்சு காபி ஆத்திட்டா மட்டும் கும்பகோணம் டிகிரி காபி ஆகிடாது. காபி தூளை வறுத்து அரைத்துத் தரம் பிரிக்கிறதுல ஏ, பி, ரோபோஸ்ட்ன்னு மூணு தரம் இருக்கு. இதுல ‘பி’ தான் நம்பர் ஒன் தரம். பஞ்சாமி ஐயர் இந்தத் தூளில்தான் காபி போட்டார். மத்தவங்க ஒரு தடவ காபித் தூள் போட்டா அதுலருந்து மூணு தடவை டிகாஷன் அடிப்பாங்க. ஆனா, பஞ்சாமி ஐயர் ஒரே ஒரு தடவதான் டிகாஷன் எடுப்பாரு. இப்படியெல்லாம் செஞ்சுதான் தன்னோட காபிக்கு ரசிகர் பட்டாளத்தைச் சேர்த்து வைச்சிருந்தாரு.

அதுபோல, டிகிரி காபிக்கும் பித்தளை ‘டம்ளர் – டவரா செட்’ட்டுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. கும்பகோணம் பித்தளைப் பாத்திரங்களுக்குப் பேர் போன ஊர். அதனால் அந்தக் காலத்தில் பித்தளை டம்ளர் – டவரா ‘செட்’ல டிகிரி காபியைக் கொடுத்தாங்க. அப்ப எவர்சில்வரும் அவ்வளவா புழக்கத்தில் இல்லை. அதுவுமில்லாம மத்த பாத்திரங்களைவிடக் கூடுதல் நேரத்துக்குப் பித்தளை பாத்திரத்துல சூடு நிலைத்து இருக்கும். கும்பகோணம் டிகிரி காபியைப் பித்தளை பாத்திரங்கள்ல குடுத்ததுக்கு இதுதான் காரணம்” என்று கும்பகோணம் டிகிரி காபி ரகசியத்தைச் சொல்லி முடித்தார் முரளி.

-தமிழ் ஹிந்து நாளிதழில் 2015-ம் ஆண்டில் வெளியான கட்டுரை

கும்பகோணத்தின் ஹோட்டல்கள் ! – மோகன் ராவ்


வெங்கடா லாட்ஜ்
ஆரிய பவன்
முருகன் கபே
மணிகண்ட விலாஸ்
மங்களாம்பிகா காபி ஹோட்டல்
ஐயப்ப விலாஸ்
ஹேமரிஷி மண்டபம்
மாமி மெஸ்

பெரிய கடை தெருவில் இருந்த வெங்கடா லாட்ஜின் வெங்காயம் + கத்தரிக்காய் கொத்சு அமர்க்களமாக இருக்கும்.

ஆரிய பவனின் ரவா தோசை ரம்மியமாக இருக்கும்.

மடத்து தெருவில் இப்போதும் இருக்கிற முருகன் கபேயின் முறுகல் மாவு தோசை +சற்றே கெட்டியான சாம்பார் காம்பினேஷன் அனைவரையும் கட்டிபோடும்.

சின்ன கடை தெருவில் இருந்த மணிகண்ட விலாஸ் .இங்கு பூரி கிழங்கின் சுவை நம்மை பூரிப்படைய செய்யும்.  கும்பகோணத்தில் இன்றும் பூரியை boori என்றுதான் அழைப்போம்.

கைலாய மலையை விஞ்சும் புகை மூட்டத்தோடு நம்மை அழைப்பது கும்பேஸ்வரர் சந்நிதியில் இருக்கும் மங்களாம்பிகா காபி ஹோட்டல் . இப்போது hifi ஆக மாறிவிட்டது .இதை சின்ன வயசில் நாங்கள் அர்த்தம் தெரியாமல் இப்படி பிரித்து பிரித்து சொல்லி சந்தோஷப்படுவோம் மங்களாம்பி +காகாபி+ ஹோட்டல்..
அதன் காபி……டம்ளரை கீழே வைக்க மனமே வராது

சாரங்கபாணி கோயில் அருகே உள்ள மாமி மெஸ் இங்கே காலையில் கீரை வடை மதியம் சாப்பாடுக்கு இடம் கிடைக்காது அப்படி இடம் பிடித்து மசால் வடையுடன் சாப்பாடு 🍚 அப்பப்பா என்ன சுவை 😋

நேடிவ் ஹைஸ்கூல் அருகே இருந்த மிகச்சிறிய ஹோட்டல் ஐயப்ப விலாஸ். .இங்கு கீழே பலகையில் அமர்ந்துதான் சாப்பிடவேண்டும். இங்கு மட்டும் வாழை இலை கிடையாது .வாழை சருகில் சுடச் சுட இட்லி சாம்பார் + ஸ்பெஷல் சட்னி .இந்த சட்னியை நாக்கில் வைத்தால் எங்கேயோ பல்பு எரியும். so அனைவரும் ஆனந்த கண்ணீரோடுதான் பசியாறுவர்.

பொற்றாமரை குளத்தின் ஒரு ஓரமாக ஒளிந்துகொண்டிருக்கும் ஒரு ஹோட்டல்தான் இந்த ஹேமரிஷி மண்டபம் .அது ஒரு கோவிலா இல்லை ஹோட்டலா என்று எனக்கு இன்று வரை புரியவில்லை.

இட்லி தோசைக்கு அங்கு மிளகாய்பொடி .அதற்கு ஊற்றிக்கொள்ள அந்த கால injection பாட்டிலில் நல்லெண்ணெய் .அட அட அடா……சொர்க்கம்…சொர்க்கம்.

இதில் எந்த ஹோட்டல் சென்றாலும் எது சாப்பிட்டாலும் முடிவு என்பது காபியோடுதான் என்பது எழுதப்படாத சட்டம்.

அதுவும் எப்படி தெரியுமா? காரசாரமான டிபன் சாப்பிட்டு முடித்த பின் கை கழுவாமல் வாய் கொப்பளிக்காமல் காபியை அப்படியே வாயில் சரித்துக்கொள்ளும்போது நம் நாக்கின் சுவையானது இன்னும் கொஞ்சம் காரமாகி மூன்றே நொடிகளில் இனிப்புக்கும் மாறும் அந்த நேரம் இருக்கிறதே …. அதை அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும்.

whatsapp-image-2017-01-23-at-7-06-38-am

இந்தக் கட்டுரையை எழுதிய கும்பகோணத்தைச் சேர்ந்த மோகன் ராவ் தற்போது வசிப்பது சென்னை அம்பத்தூரில்…