Category Archives: Indira Soundarajan

7-அனுமன் மகிமை – இந்திரா சௌந்தர்ராஜன்


7

அந்த வழக்கறிஞர் அடுத்து சொன்ன விஷயம் உண்மையில் என்னை ஒரு உலுக்கு உலுக்கிவிட்டது. எந்தக் கணவன் அந்தப் பெண்ணிடம் இயற்கைக்கு மாறாக நடந்துகொண்டு, அந்தப் பெண்ணையும் பாடாய்ப்படுத்தி விவாகரத்துபெறக் காரணமானானோ அதே நபர், விவாகரத்துக்குப் பிறகு மறுமணம் புரிந்துகொண்டு வாழ்ந்த அந்தப் பெண்ணின் வீட்டுக்கே கார் டிரைவராக வந்து வேலைக்குச் சேர்ந்ததுதான் விந்தை!

டிரைவராக வந்தவன்தான் தன் மனைவியின் முன்னாள் கணவன் என்பது அப்பெண்ணின் கணவனுக்கு முதலில் தெரியாது. தெரியவரவும், அவனே வேறிடம் பார்த்துக்கொண்டு போய் விட்டான். போகும்முன் அவன் அந்தப் பெண்ணையும் அவளின் இரண்டு குழந்தைகளையும் பார்த்த பார்வையில் அவ்வளவு பரிதாபம்.

காலம் அனுமன் வடிவில் அந்தப் பெண்ணுக்கு கருணை காட்டிவிட்டது. அவனையோ நடுத்தெருவுக்குக் கொண்டுசென்றுவிட்டது. இது ஒரு பக்தி அனுபவம் என்றால், நாமக்கல் ஆஞ்சனேயர் கோவிலை மையமாக வைத்த ஒரு பக்தி அனுபவம்- எது பக்தி என்பதற்கு இலக்கணமானது. முன்னதாக நாமக்கல் குறித்தும் அந்த ஆஞ்சனேயர் குறித்தும் தெரிந்துகொள்வோம்.

இன்று நாமக்கல் நகரம் பெரும் கல்விச் சிறப்புடைய நகரமாக விளங்கி வருகிறது. வருடா வருடம் பத்தாம் வகுப்பு தேர்விலும், +2 தேர்விலும் இந்த நகரத்துப் பள்ளிகளில் இருந்து பலர் எப்படியோ முதலிடத்தையும் இரண்டாவது இடத்தையும் பெற்று வருவதைப் பார்க்கிறோம். நாமக்கல் கல்வியில் இப்படி சிறந்து விளங்கக் காரணமே அந்நகரின் ஆன்மாவாகத் திகழும் ஆஞ்சனேயர் ஆலயம்தான் என்றால் மிகையே கிடையாது.

அந்த ஆஞ்சனேயரை வெகு தொலைவில் இருந்தும்கூட நெஞ்சு நிரம்ப சேவிக்கலாம். சரியாக தரிசனம் செய்ய முடியவில்லையே என்று வருத்தப்படத் தேவையே இல்லை. காரணம், ஆஞ்சனேயரின் நெடிதுயர்ந்த பதினெட்டு அடிக்கும் மேலான உயரமும் கம்பீரமும்தான்… இங்கே அனுமன் சந்நிதிக்கு மேல் கூரை கிடையாது. இங்கே என்றில்லை… பெரும்பாலான இடங்களில் அனுமன் சிரத்துக்குமேல் கோபுரக்கூரைக்கு இடமில்லை. அதற்கு அவன் அனுமதி அளிக்கவில்லை என்று கூறுவார்கள். என்ன காரணம் என்று சிந்தித்துப்பார்த்தால், அங்கெல்லாம் அவன் விண்ணுக்கும் மண்ணுக்குமாய் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறான் என்பது ஐதீகம்.

விஸ்வரூபத்தை கூரை கொண்டு தடுப்பதோ அடக்குவதோ கூடாது என்பது ஒரு காரணம். அடுத்து அனுமன் விண்ணில் தெரியும் நட்சத்திரக்கூட்டங்களைப் பார்த்தபடி ராமநாமம் ஜெபித்தபடி இருக்கிறான். பெரும் மழை பெய்யும்போது அந்த மழைநீரை அவன் அபிஷேகமாகக் கருதுகிறான். இப்படி பல காரண காரியங்கள் விஸ்வரூப ஆஞ்சனேயன் பின்னால் உள்ளன.

இப்படிப்பட்ட விஸ்வரூப ஆஞ்சனேயனை நாம் தரிசிக்கும்போது நம் மனதிலும் ஒரு பெரும் பரவச உணர்ச்சி விஸ்வரூபமெடுக்கும்; பெரும் சிந்தனையும் தோன்றும்.

அனுமனிடம் குரங்கின் தன்மைகள் உண்டு. முகத்திலும் வாலிலும் அவன் குரங்கினத்தவன் என்று அறியலாம். குரங்கு தாவும் இயல்புடையது. அதேசமயம் விலங்கினமாக இருந்தாலும் காய், கனி, பழம் என்றுதான் உண்ணும். எக்காரணம் கொண்டும் மாமிசத்தை சாப்பிடாது.

இப்படிப்பட்ட குரங்கை தாவும் மனதுக்கு சான்றோர்கள் ஒப்பிடுவார்கள். இதை வைத்து “மனம் ஒரு குரங்கு‘ என்கிற சொலவடையும் தோன்றியது. இப்படிப்பட்ட குரங்கு மனதை தியானத்தால் மட்டுமே கட்டுப்படுத்தி அடக்கமுடியும். ஆனால் அது அவ்வளவு சுலபமில்லை. நாம் தியானம் செய்யலாம் என்று அமரும்போது தான், நமக்குள் அடங்கிக்கிடந்த அத்தனை எண்ணங் களும் ஆர்ப்பரித்து எழுந்து வரிசைகட்டி வெளியேறும். நாமும் சில நிமிடங்கள்கூட தியானம் புரிய இயலாமல் அதைவிட்டு விலகி, நம்மால்  முடியாது என்கிற முடிவினுக்கும் வந்துவிடுவோம். ஆனால் முனைந்து தியானம் செய்து அதில் வெற்றி பெறுகிறவர்களைப் பார்த்தாலோ அவர்கள் முகத்தில் ஒரு பெரும் பொலிவு இருப்பது நன்கு தெரியும். அவர்களிடம் மனோ சக்தியும் மிகுந்திருக்கும்.

இத்தனை விளக்கங்களை இங்கே கூறக் காரணம் இருக்கி றது. அனுமன் வடிவில் அலைபாயும் குரங்கினத்தவனாக இருப்பினும், மனதளவில் அவன் ஒரு மாபெரும் யோகி. மிகுந்த கட்டுப்பாடும் தன்னடக்கமும் உடையவன். அதுதான் அவனது அளப்பரிய சக்திக்குக் காரணம். அவனை வணங்குபவர்க்கும் இந்த சக்தி கிடைக்கிறது என்பதுதான் அனுமன் வழிபாட்டில் உள்ள சூட்சுமமான விஷயம். நாமக்கல்லிலும் இதுதான் நடக்கிறது. அதனால்தான் அங்கே பிள்ளைகள் மனம் ஒருமித்துப் படித்து கல்வியில் பெரும் வெற்றிபெற்றிட முடிகிறது. நாமக்கல் நகரம் முழுக்கவே அனுமனின் ஞானப்பேரலை பரவிக்கிடக்கிறது.

அதுமட்டுமல்ல; நாமக்கல் நகரின் மையத்தில் ஒரு பெரும் குன்று உள்ளது. எப்போதுமே குன்றுள்ள இடத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெரும் சக்தி இயற்கையாகக் குடிகொண்டிருக்கும். அதற்கு குன்றினுடைய பிரமிடு போன்ற வடிவம் ஒரு காரணம்.

பிரமிடுகள் தங்களுக்குள் சக்தியை வெகுவாகக் கொண்டிருப்பவை. மிக விஞ்ஞானப் பூர்வமானவை. ஒரு பிரமிடு வடிவ பெட்டிக்குள் நானும் சில பரிசோதனைகளைச் செய்துபார்த்தேன். ஒரு பிரமிட் வடிவ பிளாஸ்டிக் பாக்ஸ்- கையில் அடங்கிவிடக் கூடியது. அதில் ஒரு தக்காளிப்பழம், ஒரு பச்சை மிளகாய், ஒரு நெல்லிக்காய் என்று மூன்றை வைத்து மூடினேன். ஒரு தட்டையான பிளாஸ்டிக் டப்பாவில் இதே மூன்றை வைத்து மூடினேன். சரியாக ஒரு வாரம் கழித்துத் திறந்து பார்த்தேன். முன்னதாக ஒரு தாம்பாளத்தில் பச்சை மிளகாயைப் பரப்பி வைத்து, அதன் நடுவில் பிரமிடு வடிவ டப்பாவை வைத்தேன். இன்னொரு தாம்பாளத்தில் அதேபோல பச்சைமிளகாயைப் பரப்பி வைத்து, தட்டை வடிவ டப்பாவை வைத்திருந்தேன். இந்த தட்டை வடிவ டப்பாவைத் திறந்து பார்த்தபோது, தக்காளி சுருக்கம் விழுந்து கன்றிப் போயிருந்தது. பச்சை மிளகாய் சிவப்பாக மாறியிருந்தது. நெல்லிக்காயும் நிறம் மாறியிருந்தது. அதுமட்டுமல்ல; தட்டை வடிவ டப்பா வைக்கப்பட்டிருந்த தாம்பாளத்திலுள்ள பச்சை மிளகாய்கள் அவ்வளவும் பழுத்து சிவப்பு நிறத்துக்கு மாறியிருந்தன. இது இயல்பாக நடப்பதுதான். தட்பவெப்பநிலை காரணமாக இப்படித்தான் நடக்கும். ஆனால் பிரமிடு வடிவ டப்பாவுக்குள் இருந்த தக்காளி, மிளகாய், நெல்லிக்காய் மூன்றும் அப்படியே இருந்தன. அந்த பிரமிடை சுற்றி வெளியே தாம்பாளத்தில் இருந்த பச்சை மிளகாய்களும் பெருமளவு பச்சையாகவே இருந்தன. மொத்தத்தில் பிரமிடு வடிவம் உள்ளேயும், வெளிப்புறத்திலும்கூட தன் ஆற்றலால் தட்பவெப்ப நிலையிலிருந்து பொருட்களுக்கு புத்துணர்ச்சி தருவதை உணரமுடிந்தது.

ஒரு கையளவுள்ள பிரமிடு டப்பாவைச் சுற்றியே இப்படியென்றால், பெரும் மலையைச் சுற்றி அதன் ஆற்றல் எந்த அளவு இருக்குமென்று எண்ணிப் பாருங்கள்; அதிலும் நாமக்கல் குன்று நகரின் மையப்புள்ளியாக உள்ளது. திருச்சியிலும் மலைக்கோட்டை மையத்தில் உள்ளது. திண்டுக்கல்லிலும் மையத்தில் உள்ளது. இப்படி நிறைய உதாரணங்களை அடுக்கலாம். இதுபோன்ற மலைகளைக் கொண்ட ஒரு ஊர்கூட வரலாற்றில் இடம் பெறாமல் போகவில்லை. இன்றளவும் சுறுசுறுப்பான செயல்பாடுகள் அந்த மலை நகரங்களில் நடந்தபடியேதான் இருக்கின்றன. இதற்குப் பின்னால் ஆய்வுக்குரிய பிரமிட் சக்தி இருக்கிறது என்பது ஆய்வாளர்கள் நம்பிக்கை.

அந்த நம்பிக்கை நாமக்கல்லில் பளிச்சென தெரிகிறது. நாமக்கல் என்னும் வார்த்தையை சிலர் “நாமம் போட்ட கல்‘ என்று தவறாக விளக்குவார்கள். உண்மையில் “நாமம் விளங்கக் கல்‘ என்பதே சரியான பொருளாகும். அதாவது பெயர் எடுக்கும் விதமாகவும் உன் பெயர் மதிக்கப்படும் விதமாகவும் நன்றாகப் படி என்கிறது அந்தப் பெயர். அதை கோடிக்கணக்கானோர் திரும்பத்திரும்ப சொல்லும் போது அதன் சக்தி அலையாக உருவாகி பெரும் சக்தியாக மாறுகிறது. இதுவும்கூட நாமக்கல் பெரும் கல்வி நகரமாகத் திகழக் காரணமாகும்.

இப்படிப்பட்ட நாமக்கல்லில் அந்த மலையின்கீழ் குடைவரைக் கோவிலாக உள்ள நரசிம்மர் ஆலயமும் நாமகிரித் தாயார் சந்நிதியும் பெரும் கீர்த்தி பெற்றதாகும்.

வைணவ ஆலயங்களில் நரசிம்மர் சந்நிதி தனித்த தன்மைகள் பல உடையது. அங்கே மிக கவனமாகவும் ஆசாரமாகவும் இருக்கவேண்டும். நரசிம்மம் பெரும் கோபமுடையது. அதனால்தான், அதனால் ஹிரண்யனை வதம் செய்ய முடிந்தது. அடுத்து நரசிம்மமூர்த்தி ஒரு அதிசயம். மனித உடம்பு, சிங்கத்தின் தலை என்கிற இணைப்பால் மட்டும் அதிசயமானதல்ல; நரசிம்மம் புத்திசாலித்தனத்தின் உச்சம். அந்த புத்திசாலித்தனத்தை நாம் எங்கும் எந்த விஷயத்திலும் கேள்விப்பட்டிருக்க முடியாது.

அதை நுணுக்கமாக அணுகிப் பார்த்தால் தான் புரிந்துகொள்ள முடியும். நரசிம்மாவ தாரத்துக்குக் காரணமே ஹிரண்யன் என்னும் அசுரகுணம் கொண்ட அரசன்தான். இவன் தன்னையே கடவுளாக அறிவிக்கிறான். அதற்குக் காரணம் எவராலும் எதனாலும் இரவிலும் பகலிலும் அவனுக்கு அழிவில்லை என்பதுதான்.

இந்த உலகில் பிறப்பு- இறப்பைக் கடந்து நித்ய சூரியனாக ஜொலிப்பவன் இறைவன் மட்டுமே. மற்ற யாராக- எதுவாக இருந்தாலும் அழிந்தே தீரவேண்டும். இது உயிர்களுக்கான விதிமட்டுமல்ல; அண்டசராசரங்களுக்கும் இந்த விதி பொருந்தும்.

இந்த உலகமும் உயிர்களும் காலங்காலமாக மாற்றங்களைக் கண்டுகொண்டேதான் வருகின்றன. இன்று கடலோரம் உள்ள நகரான கன்னியாகுமரி, ஒரு பெரும் ஊழி ஏற்படும்முன் கடற்கரையிலிருந்து நூறு கிலோமீட்டர் அப்பாலுள்ள நகரமாக இருந்தது. ஊழியால் அந்த நூறு கிலோமீட்டர் நிலப்பரப்பும் கடலுக்குள் சென்றுவிட்டது. அதேபோல குஜராத் மாநிலத்து துவாரகை எனும் கண்ணன் ஆட்சி செய்த நகரமும் கடல்கொண்ட நகரமாகிவிட்டது. கடலுக்குள் இன்றும் துவாரகை அரண்மனைக் கட்டடம் இடிபாடுகளுடன் இருப்பதை அகழ்வாராய்ச்சி செய்வோர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதிலிருந்து உலகமும் உயிர்களும் இன்று இருப்பதுபோல நாளை இருப்பதில்லை என்பது நிரூபணமாகி, மாற்றம் ஒன்றே மாறாதது என்பதும் தெளிவாகிறது. ஆனா லும் இந்த மாற்றம் இறைவனிடம் மட்டும் மாறாமல் அப்படியே இருக்கிறது. இறைவனை மேலான சக்தி என்றும், மாறாத சக்தி என்றும், உலகின் ஒரே இயக்க சக்தி என்றும் பலவாறு கூறுவார்கள். “இந்த சக்தி நான்தான்’ என்று ஹிரண்யன் அறிவித்தான். “எனக்கு அழிவில்லை. என்னை அழிப்பாருமில்லை’ என்று ஆர்ப்பரித்தான். அத்துடன் நின்றா னில்லை. சிவபூஜை, விஷ்ணு பூஜையைத் தடை செய்தான். கோவில்களில் தன் உருவத்தைப் பிரதிஷ்டை செய்து பூஜிக்கும்படி கட்டளையிட்டான். தேவலோகத்தை தனக்கு அடிமையாக்கினான். இந்திரனை அழைத்து தன் கால் பிடித்துவிடச் சொன்னான்.

சப்தரிஷிகளை- நவநாயகர்களை- சித்தர் பெருமக்களை- மற்றுமுள்ள முப்பத்து முக்கோடி தேவர்களை- இவர்கள் தவிர மேலுமுள்ள கின்னரர், கிம்புருடர், யவ்வனர், யட்சர், கந்தர்வர், நாகர் என்று சகல இனத்த வரையும் தனக்குக் கட்டுப்பட்டவர்கள் என்று அறிவித்து அவர்களைப் படாதபாடு படுத்தினான்.

இவ்வளவுக்கும் காரணம் ஒன்றே ஒன்றுதான். பிரம்மதேவனிடம் அவன் பெற்ற புத்திசாலித்தனமான வரம்.

அந்த வரம்தான் வரங்களிலெல்லாம் தலையாய வரமாக இன்றும் எல்லாராலும் கருதப்படுகிறது. காரணம், அதைவிட புத்திசாலித்தனமான ஒரு வரத்தை அதற்கு முன்பும் அதற்குப் பின்பும்கூட ஒருவரும் கேட்டதில்லை.

அது என்ன வரம்?

“இந்தப் பூவுலகில் மட்டுமல்ல; விண்ணில் இருக்கும் ஈரேழு பதினான்கு உலகங்களிலும் எனக்கு மரணம் நேரக்கூடாது.

உலகில் பிறந்த எந்த உயிர்களாலும்- அதாவது பறப்பன, நடப்பன, ஊர்வன, நீந்துவன என்று எதனாலும் மரணம் நேரக்கூடாது.

அடுத்து பஞ்ச பூதங்களாலும், சூரிய சந்திரர்களாலும், ஏனைய தேவர்களாலும், இப்போதுள்ள மும்மூர்த்திகளாலும் மரணம் நேரக்கூடாது.

இதுமட்டுமின்றி தேவர்கள் நீங்கலாக உள்ள எவராலும், அதி தீய நஞ்சாலும், அவ்வளவு ஏன், ஆண்- பெண்- அலி என்று மூன்று இனம் சார்ந்தவராலும்கூட மரணம் நேரக்கூடாது’ என்று அவன் கேட்டு முடிக்கவும் வரமளிக்க வேண்டிய பிரம்மாவுக்கே கண்ணைக் கட்டிவிட்டது. இனி புதிதாக ஒரு உயிர் தோன்றினால்தான் என்னுமளவு அவ்வளவு பேரையும் குறிப்பிட்டு இவர்கள் யாராலும் மரணம் நேரக்கூடாது என்றவன், இறுதியாய்க் கேட்டதுதான் புத்திசாலித்தனத்தின் உச்சம். “நானாய் அழைத்தாலன்றி மரணம் என்னைத் திரும்பிப் பார்க்கக் கூடாது’ என்றவன், “இரவு- பகல் எனும் இருகால அளவிலும்கூட நிகழக்கூடாது’ என்றும் கேட்டு வாங்கிக் கொண்டான்.

பிரம்மாவும் “ததாஸ்து’ என்று கூறி மறைந்தார். அவருக்கு வேறு வழி தெரியவில்லை. “வரம் கேள்; தருகிறேன்’ என்று கூறிவிட்டு, “இப்படியெல்லாம் கேட்டால் தரமாட்டேன்’ என்றெல்லாம் அவரால் கூறவும் முடியாது. கூறினால் அவர் பிரம்மா கிடையாது.

அதன்பின் ஹிரண்யன் பெற்ற வரத்தைக் கேள்விப்பட்டு மட்டுமல்ல; ஹிரண்யன் வசம் சிக்கி உலகம் பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல.

இப்படிப்பட்ட ஹிரண்யனை வதம்செய்ய வழியே இல்லையென்ற நிலையில் வந்ததுதான் நரசிம்மம். இந்த நரசிம்மம்தான் நாமக்கல்லில் அனுமன் அனுதினமும் வணங்கிவரும் நிலையில் கோவில் கொண்டுள்ளது.

இந்த நரசிம்மம் எப்படி ஹிரண்யவதம் புரிந்தது- இதற்கும் அனுமனுக்கும் உள்ள ஆத்மதொடர்பு எப்படிப்பட்டது என்பதைப் பார்ப்போம்.

(தொடரும்)

Advertisements

6-அனுமன் மகிமை – இந்திரா சௌந்தர்ராஜன்


இன்று விவாகரத்தென்பது ஒரு அதிர்வில்லாத கட்டாயத்தேவை போலாகிவிட்டது. எனது வழக்கறிஞர் நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன். நீதிமன்றத்தில் தேங்கிக் கிடக்கும் வழக்குகள் பற்றி ஆரம்பித்த பேச்சு அப்படியே விவாகரத்து வழக்குகளின் பக்கம் சென்றது.

இருபது இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்புவரை ஒருநாளைக்கு ஒரு வழக்கு வந்தாலே அபூர்வம். இன்று சராசரியாக ஒரு நாளைக்கு ஐந்திலிருந்து பத்து வழக்குகள் வருவதாகக் கூறினார். இதில் ஆண்கள் விவாகரத்து கேட்டு மனு செய்வதைவிட பெண்கள் கேட்டு மனுசெய்வது தான் அதிகம் என்றார். “கணவன் விடும் குறட்டை சப்தத்தை தாளமுடியவில்லை. அவர் வாயும் நாறுகிறது. எனவே எனக்கு விவாகரத்து வேண்டும்’ என்றும் ஒரு கோரிக்கை என்று அவர் கூறியபோது ஆச்சரியமாக மட்டுமல்ல; அதிர்ச்சியாகவும் இருந்தது.

இதற்கெல்லாம் எது காரணம் என்றும் நாங்கள் கேட்டுக்கொண்டோம். ஒரு பெண் இன்று ஆணுக்கு இணையாக சம்பாதிக்க முடிந்தவளாக இருப்பதுதான் முதல் காரணம்.

அடுத்து ஆண்கள் மது மற்றும் சிகரெட், பான்பராக் போன்ற பழக்கங்களுக்கு அடிமையாகி தங்கள் கம்பீரத்தைக் குலைத்துக்கொண்டிருப்பது இரண்டாவது காரணம்.

பொறுமை, விட்டுக்கொடுத்தல் போன்றவை இல்லாததும், தூரப் பார்வை என்பதே போய்விட்டதும், ஒரு வீட்டில் ஒரு ஆண் குழந்தையோ அல்லது பெண் குழந்தை மட்டுமே பெறப்பட்டு, ஒருமையில் அவர்கள் வளர்வது போன்றதெல்லாமும் அடுத்தடுத்தவை என்று காரணங்களைப் பட்டியலிட்டோம்.

அடுத்து, மறுமணம் என்பது முன்பு பெரும்புரட்சிகரமான ஒன்றாக இருந்தது. இன்று அது சற்று முயன்றால் நடந்துவிடும் ஒன்றாக இருக்கிறது. இதனால் கணவன்- மனைவி எனும் புனிதமான தாம்பத்தியம் இன்று சரிபாதி தம்பதிகளிடம் மதிப்பிழந்து போய்விட்டது.

பரவாயில்லை. மறுபாதியிலாவது உயிருள்ளதே என்று மனதைத் தேற்றிக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. நானும் அந்த வழக்கறிஞர் நபரும் இப்படி சமூகப் பார்வையோடு பேசிக்கொண்ட நிலையில், ஆன்மிகத்தில் மிகுந்த நாட்டம் கொண்ட வழக்கறிஞர் ஒருவர் எங்கள் விவாதத்துக்குள் நுழைந்தார். அவர் கருத்து என்னை மிக சிந்திக்க வைத்தது.

“இன்று பெண்களை போகப் பொருளாகப் பார்ப்பது அதிகமாகிவிட்டது. அதற்கு மீடியா ஒரு பெரிய காரணம். பத்திரிகையோ, டெலிவிஷனோ, சினிமா அல்லது விளம்பரங்களோ… இவையனைத்திலும் பெண்ணழகுதான் முன்னிறுத்தப்படுகிறது. இதனால் ஆண் வர்க்கம் மனக்கட்டுப்பாட்டோடு வாழ்வதென்பது சாதாரணமில்லை.

ஐம்பது வருடங்களுக்கு முன்புவரை ஒரு பெண்ணின் மார்பு லேசாக வெளியில் தெரிந்தாலே அது மிகப்பெரிய கவர்ச்சிக் காட்சியாகும். இன்று ஒரு பெண்ணின் நிர்வாணம், ஒரு எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் கையிலுள்ள செல்போனில் சிரிப்பாய் சிரிக்கிறது.

அந்த அளவு மீடியா வளர்ச்சி பெண்ணினத்துக்கு எதிராகவும் சிறுமைக்கும் காரணமாக உள்ளது. எல்லாரும் ராமனாக இருப்பது எப்போதும் சாத்தியமில்லை. ராமாயண காலத்திலேயேகூட ஒரு ராமன்தான் ஏகபத்தினி விரதனாக இருந்தான். அவன் தந்தைக்கு பல மனைவியர். இதிலிருந்து ஆண் மகன் என்பவன் நெருப்பைப் போன்றவன் என்பது புலனாகும். இந்த நெருப்பை அகல்விளக்குபோல் அடக்கமாய் எரியவிடுவதுதான் ஒழுக்கம் சார்ந்த முறை. இதுவே காட்டுத் தீயாய் எரிந்தால் எல்லாமே நாசமாகிவிடும்.

இன்று காட்டுத் தீயாக எரிக்கவிடும் விஷயங்கள் மிக மலிவாகிவிட்டன. இதனால் உடம்பளவில் ஒரு ஆண் கெட்டிராவிட்டாலும் மனதளவில் பாதிப்புக்கு ஆளாகியே தீர வேண்டியுள்ளது. வீட்டைவிட்டு தொழில் நிமித்தம் வெளியே போய்விட்டு வீடு திரும்புவதற்குள் நம் கண்களில் சினிமா போஸ்டர்களிலிருந்து, பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் வாயிலாக கொச்சைப்படுத்தப்பட்ட பெண்மை மனதில் பதிந்து பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது. இந்த பாதிப்பில்லாது வாழ வேண்டுமென்றால் ஏதாவது ஒரு கிராமத்தில் விவசாயம் செய்து கொண்டு, கிராமத்தைவிட்டே வெளியே வராமல் வாழ்ந்தால் தான் ஓரளவு தப்பிக்கலாம்” என்று நீண்ட வியாக்யானம் செய்தார்.

அனுமன் மகிமையைப் பற்றிக் கூறாமல் இது என்ன விவாகரத்து ஆராய்ச்சி என்று ஒரு கேள்வி இப்போது எழலாம். இந்த விஷயங்களுக்குப் பின்னால் நிறையவே அனுமன் மகிமை இருப்பதை போகப்போக உணரலாம்.

அந்த வழக்கறிஞர் கூறவந்ததன் சுருக்கம் இதுதான்… “காலம் வெகுவாக மாறிவிட்டது. அதில் பெண்மை நிறையவே சிக்கிக்கொண்டுவிட்டது. இதைக் கண்டு வருத்தப்படாமல் இது இப்படித்தான் இருக்குமென்று ஏற்றுக்கொண்டு வாழ்வதால், நாம் நம்மையும் அறியாமல் பாவங்கள் செய்தவர்கள் ஆகிறோம்.

நம் பாவத்துக்கு நாம் தண்டனையை அனுபவித்தே தீரவேண்டும். இதுதான் நம் மதத்தின் அசைக்க முடியாத கர்மா தியரி.

இந்த தியரிப்படி பெண்ணினத்தின் இழிவை வேடிக்கை பார்ப்பவர்கள், இழிவுக்குத் துணை செல்கின்றவர்கள் அதே பெண்ணால் துன்பத்துக்கு ஆளாகிறார்கள். ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்துக்கு ஏழாமிடம் அவரது மனைவி மற்றும் திருமண வாழ்க்கை எப்படி அமையும் என்பதைக் கூறிவிடும். எனவே இருபது இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு செய்த பாவம்தான் இன்று பிள்ளைகள் தலையில் விழுந்து அவர்களை கோர்ட் படி ஏற வைக்கிறது. இன்று செய்யும் பாவங்கள் எதிர்காலத்தில் திருமணமாகி ஒரு தம்பதிகள் பத்து பதினைந்து ஆண்டுகள் வாழ்ந்தாலே அது பெரிது என்று எண்ண வைத்துவிடும்” என்றார்.

எனது சமூக கருத்துக்கு நேர் எதிரான இந்த கருத்தை எப்படி எடுத்துக்கொள்வது என்று எனக்குத் தெரியவில்லை. இதை மறுக்கவும் முடியவில்லை. இதே வழக்கறிஞர் தொடர்ந்து, “பாவங்களுக்கு ஏற்ற பரிகாரங்களும் உண்டு. அதைத் தெரிந்து செய்யவேண்டும்” என்று தொடர்ந்தார். எப்படியென்று கேட்டேன்.

“ஒருவரிடம் ஆயிரம் ரூபாய் பணத்தை அவருக்குத் தெரியாமல் திருடி வருகிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். இது ஒரு பாவம். இதை உணர்ந்து பதிலுக்கு அவரிடம் மன்னிப்பு கேட்டு, அப்படியே ஆயிரம் ரூபாய் மதிப்புக்கு அவருக்காக உழைப்பதென்பது ஒருவித பரிகாரம். பணமாய் தரமுடியாத நிலையில் நம்வசம் உள்ள ஒன்றைத் தந்து அதை ஈடுசெய்ய முற்படுவதும் பரிகாரம். ஆனால் எல்லா பாவங்களுக்கும் பரிகாரமில்லை. ஒருவரை கொலைசெய்து, அவர் உயிர் போனபிறகு அவருக்கு எப்படி பரிகாரம் செய்யமுடியும்?

எனவே பரிகாரத்துக்குரிய பிழைகளைச் செய்ய நேர்ந்தால் மட்டுமே பரிகாரம் செய்யவேண்டும். குறிப்பாக குடும்ப வாழ்வில் புயல் வீசும்போது- அதிலும் குறிப்பாக விவாகரத்துபோல சிக்கல் உருவாகும்போது – அதற்கு ஒரே பரிகாரம் அனுமன் வழிபாடுதான்” என்று அனுமனிடம் வந்து நின்றார்.

“விட்டால் பிரம்மச்சாரி அனுமனை தம்பதிகள் சிக்கல் தீர்ப்பவனாக ஆக்கிவிடுவீர்கள்போல் உள்ளதே, இது முரண்பாடாக உள்ளதே” என்றேன்.

“அந்த பிரம்மச்சாரி அனுமன்தானே ராமாயணத்தில் ராமனும் சீதையும் மீண்டும் சேர்ந்திடவே காரணம்” என்று என்னைத் திரும்பக் கேட்டார். பிறகு தன் வழக்கொன்றில் தான் சந்திக்க நேர்ந்த வினோதமான அனுபவத்தைச் சொன்னார். “ஒரு திருமணமான இளம் தம்பதிகள் திருமணமாகி ஆறுமாதம் கூட வாழவில்லை. இதில் பெண் பரவாயில்லை; கணவன்தான் மிகமோசம். தனக்கேற்ற நாகரீகமான போக்குடைய மனைவி இல்லை என்று அந்தப் பெண்மீது குற்றச்சாட்டு வைத்தார். உண்மையில் அவர்கள் சிக்கல் வேறுவிதமானது. இரவு-பகல் என்கிற வேற்றுமையின்றி தாம்பத்திய உறவுகொள்ள அந்தப் பெண்ணின் கணவன் ஆசைப்பட்டது அந்தப் பெண்ணுக்குப் பிடிக்கவில்லை.

அடுத்து தாம்பத்யத்தின்போதும் கடுமையான செயல்பாடுகள்… அந்தப் பெண் வெறுப்பின் உச்சிக்கே போய், பின் இருவரும் பிரிந்துவிட முடிவு செய்தனர்.

கோர்ட்டிலும் விவாகரத்து அளிக்கப்பட்டு விட்டது. இருவரும் பிரிந்தாலும் அந்தப் பெண்ணால் தன் மணவாழ்க்கை இப்படி ஆனதை ஜீரணிக்க முடியவில்லை. கோவிலுக்குப் போவதும் பிரார்த்திப்பதும்தான் ஆறுதலாய் இருந்தது. அந்தப் பெண் வீட்டார் மறுமணம் செய்துவைக்க எண்ணியபோது அந்தப் பெண்ணுக்கு அதில் உடன்பாடில்லை. வரும் கணவனும் அதேபோல் இருந்துவிட்டால் எனும் பயம்.

இந்த நிலையில்தான் ஆஞ்சனேயருக்கு செந்தூரம் சாற்றி வழிபாடு செய்யும்படி அந்தப் பெண்ணுக்கு ஆன்மிகப் பெரியார் ஒருவர் கூறினார். அப்படியே தினசரி சுந்தரகாண்டம் பாராயணம் செய்யவும் கூறினார்.

அந்தப் பெண் சுந்தரகாண்டம் பாராயணம் செய்த நிலையில், செந்தூரத்தை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொண்டு வந்து அனுமனுக்கு சாற்றி, தனக்கு நல்ல வாழ்க்கை அமைய துணைபுரியும்படி வேண்டிக்கொண்டாள்.

இப்படி ஒரு மண்டலம் மிகச் சிரத்தையாக அந்தப் பெண் செயல்பட்டாள். நடுவில் தூரம் குளித்த நாளைக்கூட முன்பே யூகித்து, அந்த மூன்று நாட்களுக்காக சில தினங்களில் இருமுறை ஆலயத்துக்குச் சென்று, அந்த நாட்களுக்கான வழிபாடாக அதை மனதில் கொண்டு வழிபட்டாள். எனவே அந்த மூன்று நாட்கள் ஆலயம் செல்லமுடியாத நிலை ஏற்பட்டபோது பெரிய வருத்தம் நேரிடவில்லை. மனமிருந்தால் மார்க்கமுண்டு என்று இதைத்தான் சொன்னார்கள் போலும்…

நாற்பத்தெட்டாம் நாள் முடிவில் ஆஞ்சனேயருக்கு அபிஷேகம் செய்து தன் வழிபாட்டை ஒரு பூரண திருப்தியோடு முடித்துக்கொண்ட போது கோவிலிலும் நல்ல கூட்டம்.

மீனாட்சியம்மன் கோவில் அனுமனுக்குதான் செந்தூரக்காப்பு, அபிஷேகம் செய்தது சிம்மக்கல்லில் உள்ள ஆஞ்சனேயர் சந்நிதியில். ஏனென்றால் மீனாட்சியம்மன் கோவில் அனுமன் ஆகமப்படி அமையாதவன். அப்படி அமையாத நிலையில் உருவாகும் சந்நிதிகளை ஆப்த சந்நிதிகள் என்பார்கள்.

ஆகமப்படி அமைந்த சந்நிதியில்தான் அபிஷேக ஆராதனைகள். இங்கே அனுமன் உயிர்ப்போடு வந்துவிடுவதாகவே கருதுகிறார்கள் அனுமன் உபாசகர்கள். பல உபாசகர்கள் கண்களுக்கு அனுமன் கதையோடு நின்று கொண்டு சிரிப்பதும், வாஞ்சையாகப் பார்ப்பதும் அப்படியே தெரியுமாம்.

இதெல்லாம் மனப்பிரமை என்று கூறி இதை நம்ப மறுப்பவர்களும்  உண்டு.

அந்தப் பெண் மனமுருக அபிஷேகம் செய்து வேண்டிக்கொண்ட அன்று, அந்தப் பெண்ணின் பெற்றோர்கள் அவள் ஜாதகத்தைக் கொண்டு வந்திருந்தனர். அபிஷேகம் முடியவும், வெள்ளைக் கவரில் வைக்கப்பட்டிருந்த அந்த ஜாதகத்தை பூஜையில் வைத்துத்தரச் சொல்லி தந்தனர். கோவில் அர்ச்சகரும் அதை அனுமன் திருவடியில் வைத்து அர்ச்சனை செய்துவிட்டுத் திரும்பத் தந்தார். பூஜை முடிந்து வீடு திரும்பியபின், அந்த ஜாதகத்தை ஒரு ஜாதக பரிவர்த்தனை அமைப்பில் பதிவு செய்வதற்காக எடுத்துச் சென்றனர். அங்கே கவரைக் கொடுத்தபோது தான் கவருக்குள் இருந்தது அவர்கள் பெண் ஜாதகமல்ல, வேறு ஒருவர் ஜாதகம்- அதுவும் ஆண் ஜாதகம் என்பது தெரிந்தது! எப்படி இப்படியானது என்று யோசித்தபோதுதான், பூஜை சமயம் ஒரு பெரியவர் இவர்களைப் போலவே கவரைக் கொண்டுவந்து கொடுத்தது நினைவுக்கு வந்தது.

அந்த கவரைத்தான் குருக்கள் தவறுதலாக எடுத்து அளித்துவிட்டார். பெண்ணின் அப்பா உடனேயே ஜாதகத்திலுள்ள முகவரியை வைத்து அந்த பையன் வீட்டுக்கே நேரில் சென்றார். அங்கோ பையனின் தந்தை இதே போல் பெண் ஜாதகத்துடன் பெண் வீட்டுக்குப் போயிருந்தார். இங்கே பையன் மட்டும் இருக்க, அவனிடம் பெண்ணின் தந்தை ஜாதகத்தைத் திரும்பத் தந்துவிட்டு பேசும்போது, அந்தப் பையனின் இதமான பேச்சும் குணமும் அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது. அந்தப் பையனும் திருமணமாகி மனைவியைப் பிரிந்தவனே! இங்கே பெண் வரையில் விவாகரத்தென்றால், அங்கே பையன் வரையில் திருமணத்துக்குப் பிறகு மணப்பெண் நுரையீரல் புற்றுநோய் வந்து, திருமணமான ஒரு வருடத்திலேயே இறந்துவிட்டிருந்தார். பையனின் ஜாதகமே காரணம் என்கிற அவப்பெயர் வேறு.

இங்கே பெண்ணைப் பார்க்க வந்திருந்த பையனின் தந்தைக்கும் பெண்ணை மிகப் பிடித்துவிட்டது. நல்ல பெண்… நாகரீகமில்லாத கணவனால் நசுக்கப்பட்டுவிட்டவள்! அவருக்கு அப்போதுதான் ஒரு உண்மை புலனானது.

சந்நிதியில் ஜாதகங்கள் இப்படி மாறியிரா விட்டால் இந்த சந்திப்பே நிகழ்ந்திருக்காது. இந்தப் பெண் மனதே தெரியாமல் அல்லவா போயிருக்கும்? அங்கேயும் பெண்ணின் அப்பாவிடம் பையன் குறித்து இதே கருத்துதான்.

அதன்பின் இருவரும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டு, அனுமன்தான் இப்படி ஒரு சந்திப்பை உருவாக்கியுள்ளான் என்பதையும் புரிந்துகொண்டு இருவருக்கும் திருமணம் முடித்து வைத்தனர். இன்று அவர்களுக்கு இரண்டு பிள்ளைகள்!” என்று அந்த வழக்கறிஞர் சொன்னபோது எனக்குப் பரவசமாக இருந்தது. கூடவே ஒரு தற்செயல் சம்பவத்தைதான்- இப்படி அனுமன் கோவிலில் நடந்தது என்பதற்காக அனுமனே காரணம் என்று கருதுகிறார்களோ என்றும் தோன்றியது.

ஆனால் அடுத்து அந்த வழக்கறிஞர் சொன்ன ஒரு விஷயம், அது தற்செயலில்லை;

அனுமனின் அருள் விளையாட்டுதான் என்பதை எனக்கு உணர்த்தியது. அந்த விஷயம்?

(தொடரும்)

5-அனுமன் மகிமை – இந்திரா சௌந்தர்ராஜன்5
இந்திரா சௌந்தர்ராஜன்

செந்தூரத்துக்காகப் புறப்பட்ட அனுமன், வெகுசீக்கிரமே கைநிறைய செந்தூரத்தோடு திரும்பிவந்து சீதா பிராட்டியிடம் நீட்டுகிறான்.

சீதையிடம் ஒரே மகிழ்ச்சி.

அதை மோதிர விரலால் தொட்டு முதலில் தன் நெற்றித் திலகமாக வகிட்டில் இட்டுக்கொண்டாள். பின் புருவ மையத்தில். செந்தூரத் திலகத்தோடு சீதையைப் பார்க்கவும் அனுமனிடம் ஒரு சிலிர்ப்பு. சீதை ஏற்கெனவே நல்ல சிவப்பு. அந்த சிவப்போடு செந்தூர சிவப்பு சேரவும், மேலும் மெருகேறி அவளது முகம் மாலைச் சூரியன்போல இதமாய் ஜொலித்தது. அனுமனின் கண்களும் அந்தக் காட்சியில் பனித்துப் போகின்றன.

இது ஒரு கட்டம்!

இன்னொரு கட்டம் அயோத்தியில்…

ராமபிரான் இராவணவதம் புரிந்து சீதையைமீட்டு அயோத்திக்கு வந்து, மீண்டும் ராஜாராமனாக ஆட்சி புரியும் சமயம்! அனுமன் அங்கே  நீங்காது இருக்கிறான். ஒருநாள் சீதை இதேபோல் செந்தூரம் இட்டுக்கொள்வதைப் பார்த்தவன்-

“தாயே… இந்த செந்தூரம் உங்கள் முகத்துக்கு பெரும் பொலிவைத் தருகிறது. அதேசமயம் நெற்றியில் புருவ மையத்தில் இதை இட்டுக்கொள்வதோடு, வகிட்டின் தொடக்கத்திலும் தாங்கள் இதை இட்டுக் கொள்வது எதனால்?” என்று கேட்கிறான். சீதையும் புன்னகையோடு பதில் கூறுகிறாள்.

“அனுமனே! ஒரு பெண்ணின் நெற்றித் திலகம்தான் அவள் ஒரு சுமங்கலி என்பதை உணர்த்துவதாகும். இதில் வகிட்டில்தான் அந்த மகாலட்சுமி வாசம் செய்கிறாள். எனவே அங்கே பொட்டினை இடும்போது லட்சுமி கடாட்சம் ஏற்படுவதோடு, என்றும் கணவனைவிட்டு நீங்காமலிருக்க அந்த தேவி அருளுவாள். அவள் எப்படி திருமாலின் மார்பில் நித்யவாசம் புரிகின்றாளோ, அப்படி நானும் என் பதியான ராமச்சந்திர மூர்த்தியின் மார்பில் நித்யவாசம் புரிவதோடு, என்றும் அவரை விட்டு நீங்காமல் இருப்பேன். அவரும் என்னுடன் இருப்பார்…”

இதைச்சொல்லி முடிக்கும்போது சீதையின் கண்களிரண்டும் கண்ணீரால் நிரம்பிவிடுகின்றன. அது இராவணனால் ஏற்பட்ட பிரிவை அவளுக்குள் ஞாபகப்படுத்திவிட்டது. அதைப் பார்த்த அனுமனும் பதைத்துப் போனான்.

“அம்மா… இப்போது எதற்குக் கண்ணீர்? இது ஆனந்தக் கண்ணீரா துக்கக் கண்ணீரா என்று தெரியவில்லையே” என்றான்.

“இரண்டும்தானப்பா… அவரைப்பிரிந்து இலங்கையில் நான் கிடந்ததை எண்ணிப் பார்த்தேன். நெஞ்சு கனத்துவிட்டது. நல்லவேளை… நான் இந்த செந்தூரத்தை இட்டுக்கொண்டதன் பலன்தான், என் பதி வேகமாக வந்து என்னையும் மீட்டு இன்று நான் அயோத்தி அரசியாகத் திகழ்கிறேன். இந்த செந்தூரம் பற்றி நீ கேட்கவும் பழைய நினைவுகளைத் தவிர்க்க முடியவில்லை. இது மங்கலச் சின்னம் மட்டுமல்ல; என் பதியோடு என்னைச் சேர்த்து பிரியாமல் காத்திடும் ரட்சையும்கூட…” என்றாள் சீதை.

அனுமனுடைய உள்ளத்தில் சீதை கூறிய கருத்து ஆழமாகப் பதிந்துவிட்டது.

“செந்தூரம் அணிந்துகொண்டால் சீதை மட்டுமா ராமபிரானைப்  பிரியாமலிருப்பாள்? அதை அணிந்து கொண்டால் நானுமல்லவா அவரைப் பிரியாமலிருப்பேன்?’ என்று தனக்குள்  கேட்டுக்கொண்டவன், அடுத்த நொடியே செந்தூரம் தேடிப் புறப்பட்டு விட்டான். பின் அதை எடுத்து சீதை போல் நெற்றியில் இட்டுப்பார்த்தான். சீதைக்கு அழகுசேர்த்ததுபோல அது தனக்கு அழகு சேர்க்கவில்லை என்று தோன்றியது…  “ஒருவேளை சிறு பொட்டாக தரிக்கப்போய் இவ்வாறு தோன்றுகிறதோ? இதுவே பெரிதாக இருந்தால்?’ கேள்வி எழும்பி, நெற்றியில் பெரிதாக அதை இட்டுக் கொண்டான். அப்போதும் எதனாலோ திருப்தி ஏற்படவில்லை. பார்த்தான்… செந்தூரத்தை முகம் முழுக்க பூசிக்கொண்டான். ஏதோ வேடம் போட்டுக்கொண்டது போல் இருந்தது. சரியென்று செந்தூரத்தை இரு கைகளிலும் பூசிக் கொண்டான்… ஊஹூம்!

யாராவது பார்த்தால் ரத்த காயமா என்று கேட்பார்கள் என்று தோன்றியது. ஒரே வழிதான்… செந்தூரத்தை எடுத்து உடல் முழுக்க பூசிக்கொண்டான். இப்போது ஓரளவு திருப்தியாக இருந்தது. அப்படியே போய் வெட்கத்தோடு சீதைமுன் நின்றான். சீதைக்கு முதலில் அது அனுமன் என்றே தெரியவில்லை. பயத்தில் அலறிவிட்டாள்.

“தாயே… தாயே… நான் அனுமன்…” என்று கூறவும்தான் பயம் நீங்கியது.

“இது என்ன கோலம் அனுமா?”

“செந்தூரக் கோலம் தாயே…”

“எதனால் இப்படி ஆனாய்?”

“தாங்கள்தான் தாயே காரணம்.”

“நானா?”

“ஆமாம்… நீங்கள்தானே செந்தூரம் தரித்தால் அண்ணலைப் பிரியாமல் இருக்கலாம் என்றீர்கள்?” அனுமன் கூறவுமே, சீதைக்கு அவன்
செயலுக்கான காரணம் முழுதாய்ப் புரிந்துவிட்டது. கூடவே பெருஞ்சிரிப்பும் அவளிடம் ஏற்பட்டது. குலுங்கக் குலுங்க சிரிக்கத் தொடங்கிவிட்டாள். அனுமனையே அந்த சிரிப்பு வெட்கப்பட வைத்தது.

“அம்மா… அம்மா… ஏன் சிரிக்கிறீர்கள் என்று சொல்லிவிட்டு சிரியுங்கள்…”

“சிரிக்காமல் என்ன செய்வது? நான் செந்தூரத் திலகம் பற்றி சொன்னது சுமங்கலிப் பெண்களுக்கு… உனக்கல்ல…” என்றாள்.

“நான் அண்ணலைப் பிரிந்து விடுவேனா?”

அனுமன் அப்படிக் கேட்ட நொடி அவனது தாபம் சீதைக்கும் புரிந்தது. மளுக்கென்று அனுமனின் கண்களிரண்டும் பனித்துவிட்டன.

“அனுமந்தா… என் ப்ரபுவின்மேல் உனக்கு அத்தனை காதலா?” என்றுதான் கேட்டாள்.

“அம்மா… அவரை என்று உங்களைச் சேர்க்காமல் ஏன் சொல்கிறீர்கள். என் வரையில் இனி நீங்கள் இருவரும்தான் என் தாய்- தந்தையர்… நான் உங்கள் அணுக்கப்பிள்ளை.”

அதைக் கேட்டபடி ராமனும் வந்தான்.

செந்தூர அனுமனைக் கண்டு அவனும் வியந்தான். “என்னைப் பிரியாமலிருக்க இப்படி ஒரு கோலமா?’ என்று வியந்தவன், “ஆஞ்சநேயா… நீ சுக்ரீவனின் உற்ற தோழன்! கிஷ்கிந்தையின் மந்திரி… அவனுக்கு உற்ற துணையாக இருந்து ஒரு மந்திரியாக நீ கடமையைச் செய்யத்தான் வேண்டும். அதன் பொருட்டு நீ என்னைப் பிரிவது பிரிவதாக ஆகாது… உடலால் பிரிவது பிரிவேயல்ல. உள்ளத்தால் பிரிவதே பிரிவு. அப்படி ஒரு பிரிவு உன் வரையில் எந்த நாளும் எனக்கு ஏற்படாது” என்றான்.

அதைக்கேட்டு அனுமனின் கண்களில் கண்ணீர் பீறிட்டது.

“ப்ரபோ… கடமையென்று சொல்லி என்னை ஒதுக்கப்பார்க்கிறீர்களா? சுக்ரீவனுக்கு நானில்லாவிட்டால் நீலன் இருக்கிறான், மாலி இருக்கிறான், ஜாம்பவான் இருக்கிறார்.  இப்படி பலர் இருக்கின்றனர். ஆனால் எனக்கு  உங்களைப்போல ஒருவர் கிடைக்க முடியாதே…?”

“அனும.. இப்போதுதானே கூறினேன்- உடலால்தான் பிரிகிறாய்; உள்ளத்தால் அல்லவென்று…”

“உடலாலும் நான் பிரிய விரும்பவில்லை. உங்களுக்கு எல்லா சேவைகளும் செய்து கொண்டு நான் இங்கேயே இருக்க நீங்கள் அனுமதித்தே தீர வேண்டும்.”

“அனுமந்தா… உன் அன்பு என்னை நெகிழ்த்துகிறது. நீ என்பால் பக்தி கொண்டது உண்மையானால், நான் சொல்வதைக் கேட்கத் தான் வேண்டும்…”

“ப்ரபோ… என்னைப் பிரிக்காதீர்கள்…”

“ஆஞ்சனேயா… நான் சொல்வதைக் கேள்… கேட்டாலே நீ என் பக்தன். என்னோடு இருப்பதைவிட மேலான கடமை உனக்கு இருக்கிறது… அதற்காகவே நான் சொல்கிறேன்.”

ராமன் உறுதியாகக் கூறவும், அனுமனும் அதற்குக் கட்டுப்பட்டான். அப்போது சீதை சொன்னதுதான் அஸ்திரம்.

“அனுமனே! உன் செந்தூரக் கோலம் பெரும் வணக்கத்திற்குரியது.  வருங்காலத்தில் இந்த கோலத்தில் உன்னை தரிசிப்பவர்களுக்குக்கெல்லாம் வற்றாத செல்வம் கிட்டும் லஷ்மி தேவி அவர்களோடு உடன் செல்வாள். அவர்கள் எதைப் பிரிந்திருந்தாலும் அது திரும்ப அவர்களுக்குக் கிட்டும்” என்றாள்.

செந்தூர ஆஞ்சனேயனின் திருக்கோலத்துக்குப் பின்னால் இப்படி சிந்திப்பதற்கு ஒரு சரித்திரமே உள்ளது. அதுமட்டுமன்றி செந்தூர ஆஞ்சனேயன் கணபதியாகவும் மாறும் ஒரு விசித்திரம் இந்தக் கோலத்தின் பின்னாலுண்டு.

சிந்தூரன் என்று ஒரு அசுரன்!

இவனது ரத்தம் கீழே சிந்தினால் அதன் ஒவ்வொரு சொட்டிலிருந்தும் ஒரு சிந்தூரன் தோன்றும் ஆபத்துண்டு. எனவே அவனைக் கொல்வதென்பது அவனை விருத்தி செய்வதற்கு சமானம். எனவே அவனை வதம் செய்ய இயலாமல் தேவர்கள் தவித்தபோது, விநாயகப் பெருமான் துணிந்து சென்று வதம்செய்து, அவனது குருதி மண்ணில் விழாதபடி அவ்வளவையும் தானே உறிஞ்சிக் கொண்டார். இதனால் விநாயகப் பெருமானின் திருமேனி முழுக்கவே செக்கச்செவேலென்று சிவந்து செந்தூரம் பூசிக்கொண்டது போலானது.

அசுர ரத்தம் கணபதியின் உடம்பையும் பாடாய்ப்படுத்த முனைய, தேவர்கள் பாதரசத்தாலும் கந்தகத்தாலுமான செந்தூரத்தைதான் மருந்தாகப் பூசினர். இங்கே கணபதி வரையில் செந்தூரம் மருந்தாகியது.

ஒரு ஆச்சரியம்போல, சிவபெருமானின் மூத்தபிள்ளையான கணபதிக்கும் இங்கே செந்தூரக்காப்பு- சிவ கலையால் சிவாம்சமாக வந்த அனுமனுக்கும் செந்தூரக்காப்பு.  இருவருமே விலங்கு முகமும் மனித உருவமுமானவர்கள். ஒருவன் அரக்கவதம் புரிந்து சிவந்தான்- இன்னொருவனோ அரக்கவதம் புரிந்தவனை பிரியாதிருக்கச் சிவந்தான். இருவருக்கும் பின்னாலே அரக்கம் அழிந்திருக்கிறது. ஆக செந்தூரம் அணிந்த கணபதியை வணங்கினாலும் சரி; அனுமனை வணங்கினாலும் சரி- நமக்குள் இருக்கும் அரக்கம் அழியும். சீதை சொன்னதுபோல மகாலட்சுமி உடன் வருவாள். பிரிந்துபோனது திரும்ப வந்துசேரும்.

இதெல்லாம் ஈடேற வேண்டுமென்றால் செந்தூரக் காப்பை நாம் இவர்களுக்கு சாற்றி மகிழலாம். இப்படி செந்தூரம் பூசப்பட்டவொரு செந்தூர ஆஞ்சனேயன் நிகழ்த்திய ரசமான சம்பவம் ஒன்றைக் காண்போம்.

மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள் கம்பத்தடி மண்டபத்தை ஒட்டியுள்ள தூண் ஒன்றில் அனுமன் சேவை சாதிக்கிறான். பொதுவில் சிற்ப வேலைப்பாடுள்ள புராதன ஆலயங்களிலுள்ள தூண்களில் பிள்ளையார் உருவம், அனுமன் உருவம் மற்றும் யாளி உருவம் செதுக்கப்படுவது வழக்கம். கோவில் கூரையைத் தாங்கிடும் தூண்கள் வழவழப்பாக வெறும் கல்தூணாக இல்லாமல், அதில் பூவேலைப்பாடு செய்து சில சிற்பங்களை உருவாக்கும்போது பார்க்கவும் அழகாய் இருக்கும். அத்துடன் இதுபோன்ற தூண்களை பிரதான சிற்பி தான் செதுக்காமல், தன் மாணவர்களைவிட்டு செதுக்கச் சொல்வார். அவர்களுக்கும் இது ஒரு பயிற்சிபோல் அமைந்துவிடும். மாணவ சிற்பிகளுக்கு பிள்ளையார் உருவமும் அனுமன் உருவமும் சுலபமாக வசப்படும். அதில் சிறுகுறை ஏற்பட்டாலும் பெரிதாகத் தெரியாது!

இப்படி மாணவச் சிற்பி ஒருவரால் செதுக்கப்பட்ட சிற்பம்தான் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள் தூணில் அனுமனாகக் காட்சி தருகிறது. பக்தி மிகுதியில் இந்த அனுமனையும் வழிபடும் ஒரு நிலை மெல்ல உருவாகியது.

மெல்ல மெல்ல வளர்ந்து இன்று செந்தூர ஆஞ்சனேயனாக அந்த அனுமன் மாறிவிட்டான்.

செந்தூரக் காப்பு சாற்றுவதற்கு பிற ஆஞ்சனேயர் கோவில்களில் சூழல்  அனுமதிக்க வேண்டும். பெரும்பாலும் நமக்கு வாய்ப்பு கிடைப்பது அரிது. இங்கேயோ நாம் யாரிடமும் கேட்கத் தேவையில்லை. கைக்கு அடக்கமான உருவம் வேறு. எனவே பலரும் செந்தூரத்தைக் கொண்டு வந்து அனுமனின் உருவம் மேல் பூசிவிட்டு பிரார்த்தித்துக் கொள்கிறார்கள்.

அப்படித்தான் அந்தப் பெண்ணும் ஒரு நாள் பிரார்த்தித்துக் கொண்டாள். காரணம்… அவள் கணவன் விவாகரத்து கேட்டு அந்தப் பெண்ணுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தான்!

(தொடரும்)

4-அனுமன் மகிமை – இந்திரா சௌந்தர்ராஜன்


 

4
இந்திரா சௌந்தர்ராஜன்

 

ராமஜெயம் அம்மாளுக்கு சொல்லவேண்டியதைச் சொல்லிவிட்டு உபாசகர் அடுத்து புறப்பட் டுச் சென்றது- அந்தக் கள்வன் அடிபட்டுக் கிடந்த மருத்துவமனைக்குதான்.

அவர் அங்கு அவனைப் பார்த்தபோது, காலிலும் கையிலும் பெரிய கட்டு. தலையிலும் கட்டு! உபாசகர் அவனை நெருங்கி நின்றபோது மருத்துவர் வந்து பரிசோதனை செய்து முடித்திருந்தார். உபாசகர் மருத்துவரிடம் அவன் நிலை குறித்துக் கேட்டார்.

டாக்டரும், “உயிருக்கு ஆபத்தில்லை… ஆனால் பிழைத்தாலும் புண்ணியமில்லை. ஏனென்றால் ஒரு காலும் கையும் இனி சுத்தமாகச் செயல்படாது. அந்த அளவுக்கு எலும்புகள் நொறுங்கிவிட்டன. சதையும் சேதமாகிவிட்டது” என்றார்.

அது அரைமயக்கத்திலிருந்த அந்தக் கள்வனின் காதிலும் விழுந்தது. அவன் கண்களிலிருந்து கண்ணீர் வழிய ஆரம்பித்தது. அது உபாசகரை நெகிழச் செய்தது. அருகே சென்று அவன் கண்ணீரைத் துடைத்தார். அவனும் கஷ்டப்பட்டு பேசத் தொடங்கினான்.

“சாமீ…”

“தைரியமா இருப்பா… நீ பூரண குணமாயிடுவே…”

“குணமாயி என்ன சாமி புண்ணியம். கை- கால் முடமா போய் நான் எப்படி சாமி வாழ்வேன்?’

“இதை திருடும்போது யோசிச்சிருக்கலாமேப்பா…”

“தப்புதான் சாமி… எந்தக் கையால திருடினேனோ அந்தக் கை போயிடிச்சு… எந்தக் காலால் தப்பிச்சு ஓடினேனோ அந்தக் காலும் போயிடிச்சு. எனக்கு நல்லா வேணும் சாமி.”

“இதை நீ மனசார சொல்றியா?”

“என்ன சாமி அப்படி சொல்லிட்டீங்க.. இனியும் நான் திருந்தலைன்னா அந்த ஆஞ்சனேயர் என்னை சும்மா விடமாட்டார் சாமி…”

“ஆஞ்சனேயரா…?”

“ஆமாம் சாமி. அவர்தானே என்னைத் துரத்தினது?”

“உன்னைத் துரத்தின அந்த மலைக்குரங்கை சொல்றியா?”

“இல்ல சாமி. என்னைத் துரத்தினது ஆஞ்சனேயர் சாமி.”

“உன் கண்ணுக்கு அந்தக் குரங்கு அப்படி தெரிஞ்சதாக்கும்?”

“இல்ல சாமி… ஆஞ்சனேயரே கைல கதாயுதத்தோடு என்னைப் பிடிக்க எட்டிப்பாஞ்சாரு. நான் மிரண்டுபோய்தான் ஓடினேன். கடைசில லாரில அடிபட்டு இப்படி ஆகிட்டேன். நான் கீழவிழுந்து துடிச்சப்பகூட என் பக்கத்துலதான் இருந்தாரு. அவர் ஒருத்தரைப் பார்த்தாரு. அடுத்த நிமிஷம் அவர் என்னைத் தூக்கிட்டுவந்து இங்க சேர்த்துட்டாரு…”

அந்தத் திருடன் சொல்லச் சொல்ல உபாசகருக்கு கண்களில் கண்ணீர் திரண்டது. திருடனுக்கு ஆச்சரியம்!

“நீங்க ஏன் சாமி அழுவறீங்க?”

“நீ ரொம்ப கொடுத்து வெச்சவன்பா…”

“நானா… படுபாவியான நானா கொடுத்து வெச்சவன்?”

“ஆமாப்பா… உனக்கு அனுமனோட தரிசனம் கிடைச்சிடிச்சே?”

“ஓ, நீங்க அதைச் சொல்றீங்களா?”

“ஆமாப்பா… நான் காலகாலமா அவனை உபாசிக்கிறேன். ஆனா எனக்கு இன்னும் அவன் நேர்ல தரிசனம் தரலை. ஆனா உனக்குத் தந்துட்டானே…”

“சாமி… நான் ஏன் பொழைச்சேன்னு நினைச்சு அழுதுக்கிட்டிருக்கேன். நீங்களோ என்னை பாக்கியசாலி- கொடுத்து வெச்சவன்கறீங்களே…”

“ஒரு தடவை இல்லப்பா… நூறு தடவை சொல்வேன். நீ கொடுத்து வெச்சவன்தான். அது என்னவோ தெரியல… நேர்வழில ஒரு தேவனா செய்யற  தவத்துக்காக அந்தக் கடவுள் மனமிரங்கி வர்றதைவிட, அசுரனா தப்பு பண்ணும்போது அதைத் தடுக்க சீக்கிரம் வந்துடறான். வைகுண்டத்துல ஜெய விஜயர்கள் எதனால அசுரனா ஜென்மமெடுக்க வரம்கேட்டாங்கன்னு இப்பல்ல புரியுது…”

“ஜெய விஜயரா… அது யார் சாமி?”

“சொல்றேன். இவங்கதான் வைகுண்டத்துல துவார பாலகர்களா வைகுண்ட வாசலை காவல் காக்கறவங்க…”

“அவங்களா அசுரனா பிறக்க வரம் கேட்டாங்க?”

“கேட்க வைக்கப்பட்டாங்க. ஒருநாள் ஒரு மகரிஷி வைகுண்டம் வந்தப்போ, ஸ்ரீமன் நாராயணமூர்த்தி யோக நித்திரையில் இருந்தார். அவரை இப்ப பார்க்க முடியாதுன்னு ரெண்டுபேருமே தடுத்து நிறுத்தினாங்க. அவருக்கோ உடனே கோபம் வந்துடுச்சி. அவங்க அதை அலட்சியப்படுத்தி கேலி செஞ்சாங்க! அவரும் அங்க இருந்து வருத்தமா திரும்பிப் போயிட்டார்.

இது கண்விழிச்ச பெருமாளுக்கு தெரியவரவும், ஜெய விஜயர்கள்மேலே பெருமாளுக்கு கோபம் வந்தது. தன்னைப் பார்க்க வந்த மகரிஷியைத் தடுத்தது பெரிய அகௌரவச் செயல். இதுக்கு தண்டனையா ஏழு ஜென்மத்துக்கு மானிடர்களா பூமியில் பிறந்து வாழ்ந்துட்டு பிறகு என்கிட்ட வந்து சேருங்கன்னுட்டார். அதைக் கேட்ட ஜெய விஜயர்கள் ஏழு ஜென்மமெல்லாம் ரொம்ப அதிகம்னு அழுதாங்களாம். அப்படின்னா மூன்று ஜென்மங்கள் அசுரப் பிறப்பெடுத்து, அதுல என்னை எதிர்த்து, பின்னர் என்னால் வதம் செய்யப்பட்டு என்கிட்ட வந்து சேரலாம். என்னை எதிர்த்து மூன்று பிறப்பா? இல்லை என்னை விரும்பி ஏழு பிறப்பான்னு பெருமாள் கேட்கவும், அவங்க உங்களை எதிர்த்து மூன்று பிறப்போட உங்களை அடையறதே எங்களுக்குப் பெரும் பாக்கியம்னு சொல்லவும், அப்படியே ஆகுகன்னு பெருமாள் சொல்லிட்டார். அதன்பிறகு அவங்க ரெண்டு பேரும் ஹிரண்யன்- ஹிரண்யாட்சனாகவும், இராவணன்- கும்பகர்ணனாகவும், தந்தவக்ரன்- சிசுபாலனாவும் அவதாரமெடுத்து பெருமாளுக்கு எதிரா கச்சை கட்டி, பிறகு பெருமாளாலயே கொல்லப்பட்டு திரும்ப வைகுண்டம் சேர்ந்தனர்னு புராணம் சொல்லுது…”

“இப்ப இந்தக் கதைக்கும் எனக்கும் என்ன சாமி சம்பந்தம்?”

அந்தத் திருடன் உருக்கமாகக் கேட்டான்.

“உனக்கு இன்னுமா புரியல…? நான் தவமா தவமிருக்கேன். ஆனா எனக்கு அனுமன் தரிசனம் கிடைக்கல. ஆனா நீயோ திருடன். உனக்கு கிடைச்சிடிச்சு. இதைத்தான் நல்லதுக்கு காலமில்லைன்னு சொல்றாங்களோ?” என்று கேட்டு பெருமூச்சுவிட்டார்.

“சாமி, நீங்க இவ்வளவு தூரம் புராணக்கதை எல்லாம் சொன்ன பிறகுதான் நான் பாக்கியசாலின்னு புரியுது. அது எப்படி சாமி ஒரு திருடனுக்குப் போய் சாமி காட்சி கொடுத்தாரு.?”

“அங்கதான்பா நீ கொடுத்து வெச்சிருக்கே. நீ திருடினது ஒரு பக்தையோட சங்கிலியை. அவங்கள தீண்டின புண்ணியம் உனக்கு சாமி தரிசனமாயிருக்கு. அதுமட்டுமல்ல; இனி நீ விரும்பினாலும் திருட முடியாது. நீ நல்லபடியா வாழ்ந்தே தீரணும்.

ஒரு மனுஷனுக்கு நல்ல புத்தி சொல்லி திருத்துவது  ஒரு விதம்னா… இப்படி நடந்து திருந்தறது இன்னொரு விதம்னு இப்ப நான் நினைக்கறேன்.”

“சாமி, அப்படின்னா என் கை- காலை அந்த சாமி திரும்பத் தருமா…?”

“கேட்டுப்பார்… இனிமே இந்தக் கை காலால நல்லதை மட்டுமே செய்வேன்னு பிரார்த்தனை செய்துக்கோ.

உனக்கு நிச்சயம் நல்லது நடக்கும்.”

“இப்பவே பிரார்த்தனை பண்ணிக்கிறேன் சாமி. நான் குணமாகி எழுந்துட்டா அந்த அனுமனுக்கு இந்தக் கையாலயே கோவில் கட்டுவேன். அந்தக் கோவில்ல தினசரி ராமநாம பஜனை நடக்கும்படி செய்வேன். இது சத்தியம்…” என்று மிகவே உணர்ச்சிவயப்பட்டான்.

அதன்பின் அவன் விரும்பியபடியே பூரணமாக குணமானதுதான் விந்தை. நடக்கவே முடியாது என்று சொன்ன மருத்துவரே அவன் நடக்கப்போவதை உறுதி செய்தார். உபாசகரை சந்திக்க வந்த ஒரு தொழிலதிபர், அந்தக் கள்வன் திருந்திவிட்டது தெரிந்து அவனுக்கான மருத்துவச் செலவை ஏற்றுக்கொண்டார். ஒரே காரணம்தான்!

அந்தத் திருடன் அனுமனை தரிசித்துவிட்டவன்.

அவன் மனதுக்குள் அனுமனின் திவ்ய சொரூபம் பதிந்துகிடக்கிறது. எனவே அவனுக்குச் செய்வது அனுமனுக்குச் செய்வதாகவே ஆகும் என்று அவர் கருதினார்.

இதைத்தான் விதி என்பது…

வால்மீகிகூட காவியம் படைப்பதற்குமுன்வரை திருடன்தான். பின் ராமாயணம் படைத்தாரே? இந்தத் திருடன் அனுமனைப் பார்த்தான். ஆனால் எங்கேயும் தன்னைப் பற்றி யாரும் பேசிவிடக்கூடாது என்று தன்னை ஒளித்துக் கொண்டான்.

இன்று அந்த உபாசகரும் இல்லை… திருடனும் இல்லை. இருவரும் அமரத்துவம் அடைந்துவிட்டனர். உபாசகர் சிங்கப்பெருமாள் கோவிலில் பலகாலம் வாழ்ந்து அனுமன் திருவடி அடைந்தார்.

அந்தத் திருடன் குணமாகி அனுமனுக்கு கோவில் கட்ட முனைந்தான். ஆனால் அனுமன் கடைசி வரை அதற்கு அனுமதி தரவில்லை. ஒருநாள் அவன் கனவில் தோன்றிய அனுமன் “அடுத்த பிறப்பில் உன் விருப்பத்தை ஈடேற்றுவேன்’ என்று கூறிவிட்டான். இந்த பிறப்பில் ஏன் அனுமதிக்கவில்லை என்கிற கேள்விக்கு பதில் அனுமனுக்கு மட்டுமே தெரியும்! இந்த விவரங்கள் எல்லாம் பல பக்தர்கள் வாயிலாக எனக்குத் தெரியவந்தது. ராமஜெயம் அம்மாளும் இப்போது உயிருடன் இல்லை. ஒரு ராமநவமி நாளன்று அந்தப் பெண்மணி முக்தியடைந்ததாகக் கேள்வி. தாம்பரத்தில் அவர் வசித்து வந்ததாகவும் தகவல்.

அனுமனுடைய மகிமைக்கு அன்றும் இன்றும் எவ்வளவோ சாட்சிகள். இதில் அடுத்து நாம் உணரவிருப்பது செந்தூர ஆஞ்சநேயன் மகிமையை.

இன்று அனுமனுக்கு ஆயிரக்கணக்கில் கோவில்கள் உள்ளன. பல பெருமாள் கோவில்களிலும் உபசந்நிதியாக அனுமன் சந்நிதி உள்ளது. இது போக பிரத்யேகமாக நாமக்கல், சுசீந்திரம், சென்னை நங்கநல்லூர், புதுச்சேரிக்கு அருகில் பஞ்சவடி, ஸ்ரீவைகுண்டம் அருகில் என்று ஏராளமான தனிச் சந்நிதிகள்.

இந்த தனிச் சந்நிதிகளில் தாராபுரம் ஆஞ்சனேயர் கோவிலும், நாமக்கல் ஆஞ்சனேயர் கோவிலும் சரித்திரச்சிறப்பும் உடையவை. புதிதாய்த் தோன்றிய ஆலயங்களில் நங்கநல்லூர், பஞ்சவடி வரிசையில் கோவையில் உள்ள பீளமேடு ஆஞ்சனேயரும் சேர்கிறார். இன்னமும் பல ஆஞ்சனேயர் சந்நிதிகள் பிரசித்தியோடு விளங்கி வருகின்றன.

இங்கெல்லாம் ஆஞ்சனேயருக்கு துளசி மாலை, வடைமாலை, கனிமாலை என்று சாற்றி வழிபாடு செய்வது வழக்கம். இதில் வெண்ணெயும், செந்தூரமும் தனிரகம். வெண்ணெய்க் காப்புக்குப் பின்னாலும், செந்தூரம் சாற்றுவதற்குப் பின்னாலும் நுட்பமான பல உண்மைகள் ஒளிந்துள்ளன.

இதில் செந்தூர ஆஞ்சனேயன் சிறப்பு என்ன என்பதை புராணரீதியாகத் தெரிந்துகொண்டால், செந்தூர ஆஞ்சனேயன் சந்நிதியின் சிறப்பும் நமக்குப் புலனாகிவிடும்.

இந்த செந்தூரச் சிறப்பைத் தெரிந்துகொள்ள சற்று ராமாயண காலத்துக்குள் நுழைவோம்.

ராமனும் சீதையும் வனவாசத்தில் வாழ்ந்து வரும் சமயம், சீதை வனத்திலுள்ள ஆற்றில் குளித்துவிட்டு ஈரம் சொட்டச் சொட்ட வருகிறாள்.

கூந்தலிலிருந்து நீர் வடிந்திட அவள் முகமும் நிலவைப்போல பளிச்சிடுகிறது. எப்போதும் திலகம் தரித்த நிலையில் இருக்கும் அவள் முகத்தில் அப்போது திலகமில்லாத நிலை. அதைப் பார்க்க சீதைக்கு பதட்டமாகிறது. அதாவது வழியிலுள்ள சுனை நீரில் அவள் முகம் பளிச்சிடுகிறது.

திலகமில்லாமல் ஒரு வினாடிகூட இருக்க அவள் மனம் விரும்பவில்லை. குறிப்பாக நெற்றிவகிட்டில் குங்குமம் வைத்துக்கொள்வதால் சுமங்கலித்தன்மையும், கணவனுக்கு நீண்ட ஆயுளும், வீட்டில் நிறைந்த செல்வமும் உண்டாகுமென்பது வகிட்டுத் திலகம் பின்னாலுள்ள ரகசியம்.

அதை குளிக்கும்போதுகூட சீதை பிரிய மனமில்லாது போகிறாள். அப்போது அங்கு வரும் ராமன் அவள் முகம் வாடியதை வைத்தே காரணத்தை அறிந்தவனாக, “சீதை, இப்போதே இங்கேயே உனக்குத் திலகமிடுகிறேன் பார்க்கிறாயா?” என்று திரும்புகிறான். ராமன் நின்ற இடத்திற்கு அருகில் ஒரு சிவப்புநிறப் பாறை. பாதரசமும் கந்தகமும் கலந்த இயற்கை தாதுக்களாலான பாறை… அதன் பொடிதான் செந்தூரம்.

அந்தப் பாறையை தடவியபடி ஓடைநீர் ஓடிக்கொண்டிருந்தது. அந்த நீரால் பாறையை அழுந்தச் சுரண்டிக் குழைக்கவும், செந்தூர அஞ்சனம் மைபோல திரண்டது. உடனேயே அதை சீதையின் நெற்றி வகிட்டில் வைத்த ராமன் அப்படியே அவள் கன்னம், தாடை என்று தடவி அவளுடன் கொஞ்சிக் குலாவத் தொடங்கிவிட்டான். ஏற்கெனவே சீதை நல்ல சிவப்பு… அந்த சிவப்போடு செந்தூரமும் சேர்ந்தால் கேட்கவா வேண்டும்?

இந்த சம்பவத்தை சீதை தன் அசோகவனத் தனிமையில் எண்ணி எண்ணிப் பார்த்து கண்ணீர் சிந்தும் வேளையில்தான், அனுமன் சீதையைக் கண்டு, அண்ணல் ராமன் தந்த கணையாழியைத் தந்து தானொரு ராமதூதன் என்பதை உணர்த்துகிறான்.

இவ்வேளையில் சீதை அனுமனை நன்றாகப் புரிந்துகொண்டுவிட்ட நிலையில், அனுமனிடம் தனக்கு ராமபிரான் ஆசையாக செந்தூரப்பொட்டு  வைத்ததைக் கூறி,  “ஆஞ்சனேயா… அவருடனான இதுபோன்ற நினைவுகள்தான் என்னை உயிரோடு வைத்துள்ளன. இங்கே நான் செந்தூரத்துக்கு எங்கே போவேன். அது இருந்தால் அவரே என் அருகில் இருப்பதுபோல்” என்கிறாள்.

அடுத்த நொடியே சீதைக்கு செந்தூரம் தேடி அனுமனும் புறப்படுகிறான்.

(தொடரும்)

3-அனுமன் மகிமை – இந்திரா சௌந்தர்ராஜன்


ராமஜெயம் அம்மாள் என்னும் அந்தப் பெண்மணியின் தங்கச்சங்கிலியை ஒரு திருடன் மலைப்படிகளிலேயே அறுத்தெடுத்துக் கொண்டு ஓடிவிட, அதைப் பார்த்த உபாசகர் அப்படியே விக்கித்துப் போனார். உபாசகரின் வயது அவனைத் துரத்திச் செல்ல அனுமதிக்கவில்லை. அந்தப் பெண்மணியோ கதற ஆரம்பித்து விட்டார். அப்போதுதான் அவர் அந்தத் திருடன் அறுத்துச் சென்றது ஒன்பது பவுனிலான தனது தாலிச் சங்கிலி என்பதையும் தெரிந்து கொண்டார். அது இன்னமும் கலக்கத்தைக் கொடுத்தது.

உபாசகரும் அந்த அம்மாளை நெருங்கி ஆறுதல் கூற முற்பட்டார்.

“ஐயோ சாமி… அவன் என் கழுத்துல வேற எந்த நகையை அறுத்துட்டுப் போயிருந்தாலும் நான் இவ்வளவு கவலைப்பட மாட்டேன். அவன் கொண்டு போனது என் தாலியை…” என்றபோது உபாசகருக்கு மேலும் அதிர்ச்சியாகியது.

“சாமி… கோவிலுக்கு வந்த இடத்துல இப்படி நடந்துடுச்சே… அப்ப என் புருஷனுக்கு ஏதாவது ஆபத்து வந்துடுமா? எனக்கு பயமா இருக்கு சாமி” என்று கண்ணீர் விட்டு அழுதார் அந்தப் பெண்மணி. சுற்றிலும் வேறு சிலர் கூடி விட்டனர்.

“ஹூம்… எல்லாம் கலிகாலக் கொடுமை” என்றார் ஒருவர்.

“இன்னும் ஏம்மா சும்மா இருக்கீங்க… போய் முதல்ல போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுங்க…” என்றார் இன்னொருவர்.

“ஆமா… உடனே போய் திருடனைப் பிடிச்சுட்டுத் தான் அவங்களும் மறுவேலை பாப்பாங்க…” என்றார் மூன்றாமவர். இப்படி ஆளுக்கு ஆள் பேச்சு.

அந்தப் பெண்மணியோ சட்டென்று ஒரு வைராக்கியத்துக்கு மாறினார்.

“அய்யா நான் அந்த ராமனுடைய பக்தை. இதுவரை பல கோடி முறை ராம நாமத்தை எழுதியிருக்கேன். ஜெபிச்சுமிருக்கேன். அதனால என்னையே ராமஜெயம் அம்மான்னுதான் கூப்பிடுவாங்க. அப்படிப்பட்ட எனக்கு இப்படி ஆயிடுச்சுன்னா அதுகூட அந்த ராமனோட எண்ணமாதான் இருக்கணும். இதை நான் நல்லதுக்குன்னே எடுத்துக்கறேன்” என்றார்.

எல்லாருக்குமே அந்த அம்மாவின் பேச்சு ஆச்சரியம்தான் தந்தது. ஆனால் உபாசகர் மனம் மட்டும் சஞ்சலப் பட்டபடியே தான் இருந்தது. அந்த அம்மாவும் சட்டப்படி போலீஸ் கம்ப்ளைன்ட் தருவதற்காகச் செல்ல, உபாசகர் திரும்ப மலைமேல் ஏறினார். திருச்சந்நிதிக்குச் சென்று அப்படியே நின்று விட்டார். அவருக்குள் பெரும் எண்ணப் போராட்டம்!

ஒரு கோயிலில் இப்படி ஒரு அடாத செயல் நடந்துள்ளது. இதை கேள்விப்படுபவர்கள் ‘கோவிலிலேயேவா’ என்றுதான் முதலில் கேட்பார்கள். அடுத்து ‘கடவுள் இருக்கிறாரா இல்லையா’ என்ற கேள்விக்குத் தாவி விடுவார்கள். ‘அவர் இருந்தால் தன்னுடைய இடத்திலேயே இப்படி எல்லாம் நடக்க விடுவாரா’ என்றும் கேட்பார்கள்.

எப்படிப் பார்த்தாலும் இந்த திருட்டுச் சம்பவம் எல்லா வகையிலும் தவறானதாக ஜீரணிக்க – முடியாததாகவே இருப்பதை அவர் புரிந்து கொண்டு கண்ணீர் சிந்தத் தொடங்கினார்.

Image result for bhadrachalam rama images

அவர் ராமனுடைய வரலாறை கரைத்துக் குடித்திருப்பவர். ஆந்திராவில் பத்ராசலம் என்றொரு இடம். அங்கே ஒரு ராமர் கோவில் மிகப் பிரபலம். அந்த ஊரை பலநூறு ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு நவாப் தான் ஆண்டு வந்தான். தானீஷா என்பது அவன் பெயர். அவன் ஆட்சியில் கோபண்ணா என்பவர் பத்ராசலத்தின் தாசில்தாராக இருந்தார். இந்த கோபண்ணா தான் ராமர் கோவிலைப் புதுப்பித்துக் கட்டியவர். அதற்குப் பணம் தேவைப் பட்டபோது, மக்களிடம் வரியாக வசூலித்த பணம் இருந்தது. அந்தப் பணத்தை அப்படியே கோவில்கட்ட செலவிட்டு விட்டார். இதையறிந்த தானீஷா, ‘எனக்கான வரிப்பணத்தை எடுத்து என்னிடம் அனுமதி வாங்காமல் நீ எப்படி கோவில் கட்டலாம்’ என்று கேட்டு அவருக்கு 12 வருட சிறைத் தண்டனையை விதித்து விட்டான். கோபண்ணா உடனே ராமனை எண்ணி உருகி அழுதார். இந்த நிலையில் ராமபிரான் லட்சுமணனுடன் வேடர்கள் வடிவில் வந்தான். தானீஷாவைச் சந்தித்து, கோபண்ணா சார்பாக அவர் கோவில் கட்ட செலவழித்த அவ்வளவு பொற்காசுகளையும் திரும்பக் கொடுத்தார். தானீஷாவும் கோபண்ணாவை விடுதலை செய்தான். பிறகு தான் தனக்காக வந்து தானீஷாவிடம் பணம் கட்டியது சாட்சாத் அந்த ராமனும் லட்சுமணனுமே என்பது தெளிவானது.

ராமபிரான் தன் பக்தர்களைக் காப்பாற்ற இப்படி பல தருணங்களில் திருவிளையாடல் புரிந்துள்ளார். அதெல்லாம் கோவிலின் திருச் சந்நிதியில் நின்றபடி இருந்த உபாசகருக்குள்ளும் ஓடியது. அவர் மனமும் ராமஜெயம் அம்மாள் வரையிலும் ராமன் அதுபோல் ஒரு அற்புதம் நிகழ்த்த வேண்டும் என்று நினைத்தது. அதன் நிமித்தம் அவர் அங்கேயே ஒரு ஓரமாக அமர்ந்து, அனுமனுடைய மூல மந்திரத்தைச் சொல்லிக் கொண்டே தியானத்தில் அமர்ந்து விட்டார்.

அவருக்கு இப்போது ஒரே நோக்கம்தான்!

ராமஜெயம் அம்மாளுக்கு நீதி கிடைக்க வேண்டும். அதாவது தொலைந்த நகை திரும்பக் கிடைப்பது மட்டுமல்ல; அந்தத் திருடன் தண்டிக்கப்படவும் வேண்டும் என்று பிரார்த்தனை செய்யத் தொடங்கி விட்டார். அப்படி ஒரு நல்லது நடக்கும் வரை உணவு உண்ணப் போவதில்லை என்று சங்கல்பமும் செய்து கொண்டார்.

இந்நிலையில் போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்ற ராமஜெயம் அம்மாளும் புகார் கொடுத்து விட்டு திரும்பிக் கொண்டிருந்தார். அந்த அம்மாளின் வீடு மிகப் பெரியது. வீட்டைச் சுற்றிலும் மரங்கள். அவர் வீட்டுக்குள் நுழைந்து நடந்ததை உறவினர்களிடம் கூறிவிட்டு நிதானமாக கொல்லைப்புறம் செல்லவும், அங்கிருந்த மரத்தில் குரங்கொன்று உட்கார்ந்தபடி இருந்தது. அதை ராமஜெயம் அம்மாள் கவனிக்கவில்லை. ஆனால் அதுவோ அந்த அம்மையாரைப் பார்த்தது. பின் தன் கையை உயரத் தூக்கியது. அப்போது அதன் கையில் ராமஜெயம் அம்மாளின் தங்கச் சங்கிலி. அதை அம்மாள் மேல் வீசி எறிந்தது. சொத்தென்று தன்மேல் வந்து விழுந்த சங்கிலியைப் பார்க்கவும் அந்த அம்மாளுக்கு ஒரே மகிழ்ச்சி. நிமிர்ந்து பார்த்திட குரங்கு தெரிந்தது. அடுத்த நொடியே ‘ஆஞ்சநேயா’ என்றுதான் பரவசமானார் அந்தப் பெண்மணி. ஆனால் அந்தக் குரங்கு வேகமாய் ஓடிவிட்டது. கொல்லையிலிருந்து சங்கிலியும் கையுமாக வந்த அந்தப் பெண்மணி திரும்பவும் நடந்ததைக் கூறவும் எல்லாருக்கும் ஒரே வியப்பு!

“அந்தக் குரங்கு நிச்சயம் ஆஞ்சநேயர்தான். எனக்குச் சந்தேகமில்லை” என்று பக்திப் பரவசத்துடனேயே கோயிலுக்குப் புறப்பட்டார்.

திருநீர்மலைக்கு வந்து படிகளில் அவர் ஏறத் தொடங்கும்போது, கீழே கடை போட்டிருந்தவர்கள் ஓடிவந்து என்ன நடந்தது என்று கேட்டனர். ராமஜெயம் அம்மாள் கூறவும், அப்படியே வாயைப் பிளந்து விட்டனர்.

“இப்பதான் தெரியுது. பேண்ட் சட்டை போட்ட ஒருத்தன் தலைதெறிக்க ஓடினான். பார்த்தப்போ குரங்கு ஒண்ணு அவனைத் துரத்திக்கிட்டே வந்துச்சு. அநேகமாக அவன்தான் சங்கிலியைத் திருடியிருக்கணும். துரத்தின குரங்கு எப்படியோ அவன்கிட்ட இருக்கற சங்கிலியைத் தட்டிப் பறிச்சிருக்கணும்” என்றார் ஒருவர்.

ராமஜெயம் அம்மாளும் அதை ஆமோதித்தவராக மலை ஏறினார். உபாசகர் சந்நிதியிலேயே இருந்தார். அவரிடம் ‘சாமி நகை கிடைச்சிடுச்சு’ என்று ராமஜெயம் அம்மாள் கூறவும், உபாசகர் கண் மலர்ந்தார். அப்பாடா என்றிருந்தது. “இப்ப நினைச்சாலும் பிரமிப்பாக இருக்கு. கரெக்ட்டா என் வீட்டுக்கு வந்து அது நகையை திருப்பித் தந்ததை நினைச்சா எனக்கு புல்லரிக்குது” என்று கூறி கண்ணீர் சிந்தினார். பிறகு தான் அடுத்தடுத்து பல தகவல்கள் வரத் தொடங்கின.

அந்தத் திருடன் பல வருடங்களாகவே திருநீர் மலைக்கு வருபவர்களிடம் திருடியுள்ளான். கோவில் உண்டியலை உடைக்கவும் முயன்று தோற்றவனாம் அவன். அப்படிப்பட்டவன் ஓடவும், குரங்கும் துரத்தியுள்ளது. தலைதெறிக்க ஓடியவன் சாலையில் எதிரில் வந்த லாரியில் அடிபட்டு தூக்கி எறியப்பட்டிருக்கிறான். அப்போது சங்கிலியும் எங்கோ போய் விழ, அதைத்தான் குரங்கும் எடுத்துவந்து தந்துள்ளது. அடிபட்ட அவன் ஆஸ்பத்திரியில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறான் என்பதும் தெரிய வந்தது. ராமஜெயம் அம்மாள் அப்படியே அதைக் கேட்டு விக்கித்துப் போனார். உபாசகர் தன் விரதத்தை முடித்துக் கொண்டார்.

ராமஜெயம் அம்மாள் வீடு திரும்பினார். அவர் கணவர் எதிரில் கை கால்களிலெல்லாம் கட்டுப் போட்டுக் கொண்டு வந்தார். என்னாயிற்று என்று கேட்ட போது, வரும் வழியில் ஒரு விபத்து நேர்ந்து விட்டதையும் அதில் உயிர் பிழைத்ததே பெரும்பாடு என்றும் கூறினார். ராமஜெயம் அம்மாளுக்கு உடனேயே பல உண்மைகள் புரிந்து விட்டன. பெரிதாக தனக்கு வர வேண்டிய ஒரு துன்பம்தான் இப்போது சிறிதாக தாங்கும் அளவுக்கு மாறியிருக்கிறது என்று.

அப்போது உபாசகரும் அங்கு வந்தார். அதை ராமஜெயம் அம்மாள் எதிர்பார்க்கவில்லை. அவரை வரவேற்று அமரச் செய்து உபசரிக்கத் தொடங்கினார். அப்போது உபாசகரும் ஒரு முக்கியமான விஷயத்தைக் கூறுவதற்காக வந்ததைக் கூறி, சொல்லத் தொடங்கினார்.

“அம்மா… மலைல உங்களுக்கு ஏற்பட்டது ரொம்ப வருத்தமான விஷயம். நான் உடனேயே மலைக் கோவிலுக்குப் போய் உபாசனைல உட்கார்ந்துட்டேன். கோவில்லயே இப்படியெல்லாம் நடந்தா எப்படிங்கறதுதான் என் பிரதான வருத்தம். எப்பவும் என் உபாசனா சமயத்துல அனுமன் பிரத்யட்சமாகறது உண்டு. அப்பாவும் வந்தான் கவலைப்படாதே. எல்லாம் நல்ல விதமா முடியும். அந்த அம்மாவுக்கு தாலியை இழக்கற ஒரு தோஷம் இருக்கு. ஒரு நாழிகையாவது அவங்க தாலி இல்லாம இருக்கணும். அதேபோல் அவள் கணவருக்கும் கண்டம் இருக்கு. இரண்டு கணக்கையும் நேர் செய்து அவங்களுக்கு அனுக்ரஹம் பண்ண வேண்டியது என் கடமை. இது என் தெய்வமான ராமபிரான் உத்தரவு. என் தெய்வத்தோட நாமத்தை எப்பவும் உச்சரிக்கறதோட பலரையும் உச்சரிக்க வைச்சவங்க அவங்க. அவரை நான் கைவிட மாட்டேன்” அப்படின்னு சொன்னான். நான் கண்விழிக்கவும் நீங்களும் சங்கிலியோடு வந்து நின்னீங்க.

இங்க வரவும், உங்க கணவரும் விபத்துல தப்பி வந்தது தெரிஞ்சது. ஒரு பெரும் கெட்ட நேரத்தை அனுமன் மிகச் சிறியதா மாத்தி, விதிப்படியும் எல்லாம் நடந்த மாதிரி செய்துட்டான்.

ஒரு கல்லுல இரண்டு மாங்காய் அடிக்கறதுன்னு சொல்வாங்க. இங்க ஒரு கல்லுல இரண்டு இல்லை, மூன்று மாங்காய் அடிச்சிருக்கான். அதாவது உங்க தோஷம், உங்க கணவர் தோஷம் நீங்கி, அந்தத் திருடனுக்கு பாடம் புகட்டிட்டான். நான் அடுத்து ஆஸ்பத்திரிக்கு அவனைப் பார்க்கத்தான் போய்க்கிட்டிருக்கேன். வழில இத உங்கள பாத்து சொல்ல வந்தேன் ” என்றார் உபாசகர். ராமஜெயம் அம்மாள் மட்டுமல்ல; அவர் கணவரும் ஆனந்தக் கண்ணீர் சிந்தினார்.

(தொடரும்)

2-அனுமன் மகிமை – இந்திரா சௌந்தர்ராஜன்


அனுமன் மகிமைக்கு பெரும் சான்றாக விளங்குவது “அனுமன் சாலீசா‘ என்னும் மந்திரமாகும். அடிப்படையில் அனுமன் ஒரு தெய்வீகப் பிறவி. ராம- லட்சுமணர்கள் பிறந்த அதே காலகட்டத்தில் புத்திர காமேஷ்டி யாகத்தின் பயனாகவும், அனுமனின் தாயான அஞ்சனை கும்பகத்தில் மூச்சை நிறுத்தி யோகத் தவமிருந்த நிலையிலும் கருத்தரிக்கப் பெற்றவன்.

அனுமனின் உயிர்மூலத்தில் சிவசக்தியின் ஸ்கலிதமும், வாயு பகவானின் உயிர்மூச்சும் இருப்பது அடுத்த விசேஷம்.

இப்படிப்பட்டவன் நட்சத்திரங்களில் “மூலம்‘ என்னும் நட்சத்திரத்தில் அவதரித்தவன். பிரம்ம பத்தினி சரஸ்வதி தேவியும் மூல நட்சத்திரத்தில் உருக்கொண்டவளாவாள்!

இந்த உலகிலுள்ள அத்தனை உயிர்களுக்கும் உயிர்க்காவலாக விளங்குவது அறிவே. ஓரறிவு கொண்ட ஒரு சிலந்திகூட வலைபின்னி, அதில் தனக்கான உணவை விழவைத்து பிறகுதான் அதை உண்டு ஜீவிக்கப் பார்க்கிறது. எனவே ஓரறிவில் தொடங்கி ஆறறிவு மனிதர்கள் வரையில் அவர்களுக்குக் காவலாக இருப்பது அறிவே! அந்த அறிவின் விரிவில் வருவதே கல்வி, ஞானம் போன்றவை. இந்தக் கல்வியும் ஞானமும் சப்தமாகிய மொழியால் அமைந்தவை. இந்த மொழிக்கு மூலமாக விளங்குபவளே சரஸ்வதி. இந்த மூலத்தில் முளைத்த அனுமனும் பெரும் கல்வி, ஞானம் இவற்றை அருளும் ஆற்றல் படைத்தவன். அதற்குக் காரணம் அவன் புலன்களை அடக்கி தியானிக்க முடிந்தவனாக இருப்பதுதான்.

தியானம் எல்லாருக்கும் வசப்பட்டு விடாது. அதற்கு பெரும் மனவலிமை வேண்டும். அடுத்து தியானமே அறிவாகிய மனதிற்கு பெரும் மருந்தாகவும் திகழ்கிறது. இந்த உண்மை நமக்குத் தெரிந்திட நமக்கு நல்ல விதியமைப்பு இருக்கவேண்டும். இல்லாதபட்சத்தில் மனதை அடக்கமுடியாமல் அதன் பின்னே செல்பவர்களாகவே நாம் இருப்போம்.

மனதை அடக்க முனைபவர்களுக்கு மகத்தான மந்திரமாக விளங்குவது ராம நாமம்! அனுமன் அந்த ராம நாமத்தைக் கூறியே பெரும் தியான சுந்தரனாகத் திகழ்கிறான்.

இப்படித் திகழ்பவனை நாம் நமக்கான இஷ்ட தெய்வமாக ஆக்கிக்கொண்டு சுலபமாக முக்தியை அடைந்துவிட முடியும். இவன் பக்திக்கு உதாரணமாகத் திகழ்பவன். அதனாலேயே இவன்பால் பக்தி கொண்டவர்க்கு இவன் எளிதில் வசப்பட்டுவிடுகிறான்.

இவனை உபாசனா மூர்த்தியாகக் கருதி பலர் இவனது தரிசனம் பெற்றிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல; இவனை உபாசிப்பவர்கள் இடும் கட்டளையை இவன் க்ஷணத்தில் செய்து முடிப்பவனும்கூட! இப்படிப்பட்ட அனுமனை உபாசிக்க நிறைய மந்திரங்கள் உள்ளன. அதில் உன்னதமாய்த் திகழ்வதுதான் அனுமன் சாலீசா!

இதை முதியவர்களைவிட இளம்பிள்ளைகள் எளிதில் மனப்பாடம் செய்துவிட முடியும். பிள்ளைகள் வரையில் அதிகபட்சம் ஒன்பது முறை இதைச் சொல்லி முடிப்பதற்குள் இது மனப்பாடமாகிவிடும்.

இந்த அனுமன் சாலீசாவை எழுதியவர் இந்தி மொழியில் “ராமசரித மானஸம்‘ என்னும் நூலை இயற்றிய துளசிதாசர் ஆவார்.

இதில் ஒரு ஆச்சரியப்படும் விஷயமும் உள்ளது.

துளசிதாசர் ராமசரித மானஸம் எழுதக் காரணமே அனுமன்தான். துளசிதாசர்முன் தோன்றி அவருக்கு கவியாற்றலை அனுமன் அளித்திட, அதன்பின் பிறந்ததுதான் ராமசரித மானஸம்! இதனால் துளசிதாசர் தன் குருவாய்க் குறிப்பிடுவது அனுமனைத்தான். “அனுமனே என்னுள் இருந்து கொண்டு என்னை இயக்கி ராமசரிதையை எழுத வைத்தான்‘ என்னும் துளசிதாசர், மிகுந்த நெகிழ்ச்சியோடு எழுதியதுதான் அனுமன் சாலீசா!

திருக்குறள்போல நாற்பது ஈரடிகளில் அமைந்துள்ளது இது!

இந்த அனுமன் சாலீசாவுக்குப் பின்னே  பெரும் வெற்றிக்கதை ஒன்று உண்டு.

நமக்கு எப்போதுமே பெரும் தலைவலியாக இருந்துவரும் ஒரு நாடு உண்டென்றால் அது பாகிஸ்தான்தான். 1965-ல் பாகிஸ்தானுக்கும் நமக்கும் பெரும்யுத்தம் ஏற்பட்டது.

நமது  பாரத நாடு சுதந்திரம் பெற்று அப்போதுதான் ஓரளவு நிமிர ஆரம்பித்திருந்தது. இந்த நிலையில் இந்தப் போர் ஏற்படவும், அதனால் பெரும் பொருளாதாரப் பின்னடைவும் நம் நாட்டுக்குள் கட்டுப்படுத்த முடியாதபடி விலைவாசி உயர்வும் ஏற்படத் தொடங்கியது.

இந்த நிலை தொடர்ந்தால் நம் பாரத நாடு சுதந்திரம் பெறுவதற்குமுன் இருந்த மிகத் தாழ்ந்த நிலைக்குச் சென்றுவிடும் ஒரு ஆபத்தும் ஏற்பட்டுவிட்டது.

ஒன்று யுத்தம் மிக விரைவாக நடந்து முடியவேண்டும்- அதோடு யுத்தத்தில் பாரதம் கட்டாயம் வெற்றியும் பெற்றாகவேண்டும். இது நடக்காத பட்சத்தில் நம் நாட்டைக் காப்பாற்ற கடவுளால்கூட முடியாது என்று பலரும் பேசத் தொடங்கிவிட்டனர்.

அப்போது ஒரு சிந்தனையாளர் நாம் பெரிதும் போற்றும் காஞ்சி முனிவரைச் சந்தித்தார். முனிவரிடம் பாகிஸ்தானுடன் நடந்துவரும் யுத்தம் பற்றி கூறியவர் மேற்கண்ட ஆபத்துக்களையும் எடுத்துக் கூறியதோடு, காஞ்சி முனிவரிடம் வருத்தத்தோடு ஒரு பெரும் கேள்வியையும் கேட்டார்.

அது என்ன தெரியுமா?

“எவ்வளவோ புண்ணிய ஸ்தலங்கள் இந்த பூமியில்… எத்தனையோ அருளாளர்களும் இந்த பூமியில்.. சகல பாவங்களையும் போக்கிடும் கங்கையும் பாய்ந்து செல்கிறது. மக்களும் பக்தி உணர்வுடன் வாழ்கிறார்கள். இப்படியிருக்க ஏன் இந்த மண்ணே எப்போதும் அடிமைப்படுத்தப்படுகிறது? ஏன் இந்த மக்களே கஷ்டப்படுகிறார்கள்? இதிகாசங்களும் இறவாப் புகழ் பெற்ற காப்பியங்களும் தோன்றிய இந்த மண்ணின்மீது தெய்வத்துக்கு கருணை இல்லையா… இல்லை பகுத்தறிவாளர்கள் கூறுவதுபோல தெய்வமே ஒரு கற்பனையா?’

என்பதுதான் அவர் கேட்ட கேள்வி. காஞ்சிப் பெரியவரிடம் ஒரு மந்தகாசமான புன்னகை.

எப்பொழுதும் காய்த்த மரமே கல்லடி படும்… அதிலும் இந்த பாரத தேசத்தை ஞானத்துறவி விவேகானந்தர், “இந்த உலகம் என்பது ஒரு வீடானால் அதில் என் பாரத தேசம் ஒரு புனிதமான பூஜையறையைப் போன்றது‘ என்றார்.

இந்தப் பூஜையறைக்குள் அருள் இருப்பதுபோலவே அதை சரியாகக் கொண்டாடாவிட்டால் இருள் வந்து சேர்ந்துவிடும். இருள் வந்தால்தான் அருள் ஒளியின் தன்மையை உணரமுடியும்.

நிழலருமை வெய்யிலில் அல்லவா தெரியும்?

இப்படிப்பட்ட சிந்தனைகளால் பெரியவர் முகத்தில் மந்தகாசப் புன்னகை தோன்றியதோ என்னவோ? மிகுந்த வருத்தமுடன் கேள்வி கேட்டவருக்கு அவர் வார்த்தைகளில் பதில் கூறவில்லை. அவரிடம், “உங்களுக்கு “அனுமன் சாலீசா‘ தெரியுமா?” என்றுதான் கேட்டார். அவரும் “கேள்விப்பட்டிருக்கிறேன்” என்றார்.

“அனுமன் ஒரு மாவீரன்… தோல்வியே காணாதவன். பாரதப் போரில் அர்ஜுனன் தேரில் கொடியாகவும் திகழ்ந்தவன். அவன் இந்த பாரத தேசத்தை நிச்சயம் காப்பாற்றுவான். கவலைப்படாதீர்கள்” என்ற மகாபெரியவர், தனது சங்கரமட அமைப்பு மூலமும் அன்பர்கள் உதவியோடும் “அனுமன் சாலீசா‘வை லட்சக்கணக்கில் அச்சிட்டார்… அச்சிட்டதை போர்முனைக்கு அனுப்பி ஜவான்கள் கையில் கிடைக்கும்படிச் செய்தார்.

“இதை பாராயணம் செய்யுங்கள். புதிய பலம் தோன்றும். செய்யத் தெரியாதவர்கள் இந்த அனுமனே உடனிருப்பதாகக் கருதி  சட்டைப் பாக்கெட்டில் வைத்துக்கொள்ளுங்கள். யுத்த களத்தில் உங்களுக்கு வெற்றியைத் தவிர வேறு எதுவும் ஏற்படாது’ என்கிற தகவலையும் அனுப்பினார்.

மகாபெரியவரின் நம்பிக்கை துளிகூட வீண்போகவில்லை. அதன்பின் மிக விரைவாக பாகிஸ்தானை ஓடஓட விரட்டியடித்தது பாரதம்.

அதைத் தொடர்ந்து நடந்த பங்களாதேஷ் யுத்தத்திலும் அனுமன் சாலீசா பல ஜவான்களிடம் பெரும்பங்கு வகித்தது.

இந்த அனுமன் சாலீசாவை லட்சம் முறை பாராயணம் செய்த பலர் இந்த மண்ணில் உண்டு. அவர்களுக்கெல்லாம் அனுமனின் தரிசனமும் பல வடிவத்தில் கிடைத்திருக்கிறது.

அப்படி ஒரு அனுமன் உபாசகர் சென்னைக்கு அருகில் சிங்கப்பெருமாள் கோவில் என்னும் ஊரில் இருந்தார். சாலீசா இவருக்கு தூர திருஷ்டியை வழங்கியது. சென்னையில் ஒரு பெரும் தொழிலதிபர். இன்றும் தொழிற்துறையில் பெரும் சாதனைகளைச் செய்துகொண்டிருக்கிறார்.

அவர் தொழில் தொடங்கிய தொடக்க நாட்களில், தொழிலகத்தை விரிவுபடுத்த டெல்லிக்குச் சென்று அதற்கு அனுமதிபெற வேண்டியிருந்தது. ஆனால் டெல்லியில் அனுமதியை அவ்வளவு சுலபத்தில் தரவில்லை. இப்படி இருந்தால் எப்படி தொழில் முனைவது என்று அவருக்குள் ஒரு ஆயாசம். உண்மையில் டெல்லியில் ஒரு அதிகாரிதான் தடையாக இருந்தார். அதற்குப் பல காரணங்களும் இருந்தன.

இந்த நிலையில் இந்தத் தொழிலதிபர் அனுமன் உபாசகரையும் சென்று தரிசித்திருக்கிறார்.

வாயைத் திறந்து தனது பிரச்சினை குறித்து ஒரு வார்த்தைகூட உபாசகரிடம் கூறவில்லை. உபாசகரின் தூரதிருஷ்டியே அவ்வளவையும் அறிந்துகொண்டது. அப்போது அவர் திருஷ்டியில் டெல்லியில் தடையாக இருந்த அதிகாரிக்கு மாற்றல் உத்தரவு வந்து அவர் அந்த சீட்டிலேயே இல்லை என்பதும் தெரிந்தது.

அதை அப்படியே அந்த தொழிலதிபரிடம் கூறினார்.

“உனக்கான தொழில் தடை விலகிவிட்டதே. நாளைக்கே லைசென்ஸ் கிடைக்கும். உன் தொழிலும் அனுமன் அருளால் நன்றாக நடக்கும்” என்றார். தொழிலதிபர் முதலில் அதை நம்பவில்லை. ஆனால் மறுநாள் நடக்கவும் ஆடிப்போனார்…. உபாசகரின் தூர திருஷ்டியை எண்ணி வியந்ததோடு அனுமனின் கருணையையும் எண்ணி சிலிர்த்துப் போனார்.

அனுமன் உபாசகர்களுக்கு அப்படியொரு சக்தி.

ஒரு உபாசகரின் வாழ்வில் இன்னொரு சிலிர்ப்பூட்டும் சம்பவமும் நடந்தது. சென்னைக்கு அருகில் உள்ள திருநீர்மலைக்கு இவர் தரிசனத்துக்காகச் சென்றபோது ராமஜெயம் அம்மாள் என்னும் ஒரு பெண்மணியும் கோவிலுக்கு வந்திருந்தார்.

உண்மையில் அந்தப் பெண்மணிக்கு வேறு பெயர். ராமபக்தியோடு தினமும் ராமஜெயம் எழுதுவதோடு மற்றவர்களையும் எழுதச் சொல்வார் அந்தப் பெண்மணி. அதனால் அந்தப் பெண்மணிக்கு “ராமஜெயம் அம்மாள்‘ என்றே பெயர் வந்துவிட்டது.

அந்தப் பெண்மணி தனிமையில் படிகளில் ஏறிக்கொண்டிருந்தபோது மலைப்படிகளிலும் அவ்வளவாக யாருமில்லை. அப்போது அங்கே ஒரு திருடன் அந்தப் பெண்மணியின்  கழுத்தைப் பார்த்தான். கிட்டத்தட்ட பத்து பன்னிரண்டு பவுனில் தடிமனான தாலிச்சங்கிலி அந்த அம்மாளின் கழுத்தில் மின்னுவதைப் பார்த்து விட்டான். அதை அபகரிக்கும்  எண்ணத்தோடு மெல்ல அந்த அம்மாவை பின்தொடரத் தொடங்கினான். அதேசமயம் மேலிருந்து உபாசகரும் இறங்கத் தொடங்கியிருந்தார். உபாசகர் வருவதை கவனிக்காமல் அந்தப் பெண்மணியை வேகமாக நெருங்கியவன், சங்கிலியை அறுத்துக்கொண்டு கீழிறங்கி ஓடத் தொடங்கினான். அந்தப் பெண்மணி பதறிட உபாசகரும் திகைத்துப்போய் அனுமனைத்தான் அடுத்த நொடி நினைத்தார்….

(தொடரும்)

1-அனுமன் மகிமை – இந்திரா சௌந்தர்ராஜன்


உலக உயிரினங்களில் மேலான சக்தி படைத்த ஒரே உயிரினம் மனித இனம் மட்டுமே! அதனால்தான் அளவில் பெரிய யானையைக்கூட மனிதனால் ஆட்டிவைக்க முடிகிறது. சீறிப் பாய்ந்துவரும் ஆற்றின் குறுக்கே அணை கட்டி, பஞ்சபூதங்களில் ஒரு பூதமான நீரையே அடக்கி ஆளவும் முடிகிறது.

மனிதனின் வல்லமையை இதுபோல் பட்டியல் போடத் தொடங்கினால் அது நீண்டபடியே இருக்கும். என்னதான் மனிதன் பெரும் வல்லாளனாக இந்தப் பூவுலகில் திகழ்ந்தபோதிலும் அவனால் மரணத்தை வெல்லமுடியவில்லை. அதேபோல் நரை, திரை, மூப்பிடமும் அவனால் எதுவும் செய்ய முடிவதில்லை.

அதுமட்டுமா?

அவனால் பல விருப்பங்களைத் தெரிவிக்க முடிகிறது- ஆனால் அனைத்தையும் ஈடேற்றிக்கொள்ள முடிவதில்லை. ஒன்று கிடைத்தால் ஒன்று இல்லை என்றாகிறது. கூர்ந்து கவனித்தால் அவன் வாழ்வு முழுக்க இன்பம் மட்டுமே வாழ்வாக இருந்ததில்லை. துன்பமும் கூடவே வந்து, “இரண்டும் கலந்ததே வாழ்க்கை’ என்கிறது.

மொத்தத்தில் கூட்டிக்கழித்து வகுத்துப் பெருக்கினால், எதுவும் நிலையில்லை என்பது முதல் எதையும் எவரும் எடுத்துச்செல்ல முடியாது என்பது வரைதான், மேலான ஒப்பற்ற உயிரினத்தின் வாழ்க்கைப்பாடு அமைந்துள்ளது.

இதனால் ஏன் இப்படி? எதனால் இப்படி என்கிற கேள்விகள் முளைவிட, அவனும் தன் ஆறாவது அறிவாலே, தான் வாழ்வதற்காக வழிவகை செய்துகொள்வதற்கு நடுவில் ஒரு ஞானவேள்வியும் செய்ததில் பல சத்தியங்கள் புலனாகின்றன. அந்த சத்தியங்களின் ஒட்டுமொத்தமாக- தன்னைப் படைத்தது முதல் உலகைப் படைத்து அதில் பல்லாயிரம் உயிரினங்களை- தாவரங்களைப் படைத்து, பஞ்ச பூதங்களைப் படைத்தது வரை மேலான ஒரு சக்தி இருந்தாக வேண்டும் என்கிற பேருண்மையை நெருங்குகிறான்.

அந்த சக்திக்கு அவன் சூட்டிய பெயர்தான் கடவுள்! இந்தக் கடவுளை அவன் தன் புலனடக்கத்தால் தரிசனம் செய்து, புவனம் கடந்த பல பேருண்மைகளையும் அறிந்து, அதை அவன் உலகிற்குச் சொல்லும்போது அது ஆன்மிகப் பாடமாக, வேதங்களாக விளங்குகிறது.

இந்த ஆன்மிகமும் வேதமும் மானிடனை மகத்தானவனாக்கி- பிறப்பற்றவனாக்கி நித்திய இன்பத்தில் நிலைக்க வைக்கிறது. ஆனாலும் இந்த மகத்தான நிலையை அடைவது எளிதல்ல!

கோடியில் ஒருவருக்கே அது வாய்க்கிறது.

அப்படி வாய்க்கப்பெற்ற ஒரு அற்புதமே அனுமன்! இத்தனைக்கும் அனுமன் மனிதாம்சத்தோடு விலங்கின் தன்மையும் கொண்ட ஒரு விசித்திரன்!

இந்த விசித்திரன் மானுட பக்திக்கு எளிதாக அகப்படும் ஒரு ஆச்சரியனும் கூட! இவனுடைய வரலாற்றை இதுகாறும் வாசித்ததில் இந்தப் பேருண்மையை நாம் உணர்ந்திருப்போம்.

வானர இனத்தில் பிறந்து, மானுட குணத்தில் வளர்ந்து, தேவதன்மையை அடைந்து, மனித இனத்துக்கு பெரும் உதாரணபுருஷனாக விளங்குகின்றவன் மாருதி என்கிற இந்த அனுமன்!

எது சக்தி என்பதற்கு உதாரணம் இவன்.

எது பக்தி என்பதற்கும் உதாரணம் இவனே!

பெரும் சகாயன், இணையில்லாத நண்பன், உத்தமகுரு என்று எல்லா நிலைப்பாடும் இவனுக்குப் பொருந்தும்.

நால்வகை யுகங்களில் ஒவ்வொரு யுகத்துக்கும் ஒரு தன்மை உண்டு. இப்போது நடக்கும் கலியுகத்துக்கு வினோதமான பல தன்மைகள் உண்டு. அதில் ஒன்று தர்மம் நசிவதும் அதர்மம் வளர்வதுமாகும். அதுமட்டுமல்ல; கலியுகத்தில் எதுவானாலும் கண்ணுக்கு முன்னே! விதைப்பது எதுவோ அதையே அறுப்பவராகவும் இருப்போம்.

இந்த யுகத்தில் மானிடப் பிறப்பெடுத்து, பிறப்பை அழகாக முடித்துக் கொள்வது அவ்வளவு சுலபமான விஷயமல்ல. இந்த உலகை தற்போது பெரும் மாயை சூழ்ந்துள்ளது. அது நல்லதைக் கெட்டதாகவும், கெட்டதை நல்லதாகவும் காட்டவல்லது. தர்மத்துக்கு பெரும் சோதனைகள் சர்வசாதாரணமாக ஏற்படும். இறுதியில் தர்மமே வெல்லும். ஆனபோதிலும் இறுதிவரை பொறுமையாக இருக்கமுடியாதபடி வினைகள் ஆட்டிவைக்கப் பார்க்கும். பெரும் மனோதிடம் இருந்தாலன்றி மானிடப் பிறப்பை நல்லவிதமாக ஆக்க இயலாது.

இப்படி ஒரு காலகட்டம் வரும்; அப்போது மனித இனம் அல்லல்படும்போது அதை மீட்டெடுக்க நாம் ஏதாவது செய்தாகவேண்டும் என்று, வானரப் பிறப்பெடுத்து ராமபக்தனாகத் திகழ்ந்த அந்த நாளிலேயே அனுமன் முடிவு செய்துவிட்டான். அதனாலேயே “உனக்கு என்ன வேண்டும்?’ என்று ராமன் கேட்டபோது இறவா வரத்தையோ- இல்லை பிறவா வரத்தையோ- அதுவுமில்லை மோட்ச கதியையோ அனுமன் கேட்கவில்லை.

“ப்ரபோ! உன் பக்தனாக உன் நாமத்தைச் சொல்லிக்கொண்டு யுகம் கடந்தும் நான் சஞ்சரிக்கும் வல்லமை ஒன்றே போதும்’ என்று கேட்டான்.

அதாவது “ராமராம‘ என்று நாமம் சொல்லிக்கொண்டு பெரும் பக்தனாக எந்த நாளும் திகழும் ஒரு வரத்தைக் கேட்டவன் அனுமன்.

நாம் நம்முன் கடவுள் தோன்றினால் இப்படியா கேட்போம். எவ்வளவோ பேர்முன் கடவுள் தோன்றத்தான் செய்திருக்கிறார்.

எவருமே அனுமன்போல் ஒரு வரத்தைக் கேட்டதே இல்லையே…?

என்றால் அனுமன் எத்தனை பெரியவன்?

எவ்வளவு கருணை மிக்கவன்?

நம் அறிவால் ஓரளவுக்குத்தான் அனுமன் குணத்தை வியக்க இயலும். அவன் அளவுகள் கடந்தவன். அப்படிப் பெற்ற வரம் காரணமாக, இன்றும் அவன் தன்னை வேண்டுவோர்க்கு வழிகாட்டி பெரும் துணையாகவும் இருக்கிறான்.

பரந்த இந்த உலகில் அவனுக்கு மிகப் பிடித்தமான இடம் இமயமலைச் சாரல்! அங்கே அவனது ராமநாம வேள்வி இன்றும் தொடர்ந்தபடியே உள்ளது. அதேசமயம் அவனது ஸ்தூலம் கடந்த ஒளியுடல் ஒன்றுக்குப் பலவாகி, பக்தர்கள் அழைக்கும் இடங்களுக்கெல்லாம் சென்று அவர்களுக்கு கை கொடுத்து உதவியபடி இருக்கிறது.

பாரத தேசம் மட்டுமில்லாமல் உலகம் முழுக்க அவனுக்கான ஆலயங்கள் எழுப்பப்பட் டுள்ளன. இதில் மிக அதிகமான ஆலயங்கள் இருப்பது நம் பாரத தேசத்தில் கர்நாடகம், பின் மகாராஷ்டிரம், அதன்பின் ஆந்திரம், இறுதியாகத்தான் தமிழகம்!

இவனது ரூபமே இவனது குணத்தைச் சொல்லிவிடும். தலைக்குமேல் வால் வளைந்து நிற்க, அதில் மணி இருந்தால், இவன் கேட்ட வரத்தை நம்மை பரிகாரம் செய்யவைத்து வழங்குபவன்.

கையில் சஞ்ஜீவி பர்வதத்துடன் இவன் இருந்தால், கடமை உணர்வோடு இருப்பவன். இவனது இந்த தோற்ற தரிசனம் நோயை நீக்கும்.

கைகூப்பி வணங்கியபடி இவன் இருந்தால், இவன் காதில் நாம் சொல்வது எல்லாமும் ஈடேறும். இவன் அதை மேலே சொல்லி நிறைவேற்றித் தருபவன்.

நிஷ்டையில் இருந்தால் மனஅமைதி தருபவன்.

தாவக் காத்திருந்தால் நண்பனாக- குருவாக- துணைவரத் தயாராக இருப்பதாகப் பொருள்.

இப்படி இவன் ரூபத்துக்குப் பின்னாலேயே பல பொருளுண்டு. இப்படி எல்லாவித ரூபங்களோடு விஸ்வரூபியாகவும் இவன் பல இடங்களில காட்சி தருகிறான்.  அந்த தரிசனம் நம் மனதின் பயத்தைப் போக்கி, உலகில் உண்மையில் எது பெரிதோ அதை நமக்கு உணர்த்தும். விஸ்வரூப தரிசனம் செய்யச் செய்ய மலிவானவை மனதைவிட்டுத் தானாக வெளியேறிவிடும்.

இவனுக்கு பழங்கள் என்றால் மிகப் பிரியம். அதேபோல் வடை, வெண்ணெயும் மிகப் பிடிக்கும். உண்ண எவ்வளவோ பதார்த்தங்கள் இருக்க, இம்மூன்றை இவனுக்கு பெரிதாக நிவேதனம் செய்வதன் பின்னணியில் ஆழ்ந்த பொருள் உள்ளது.

தென்னிந்தியாவில்தான் வடைமாலை பிரசித்தி… வடஇந்தியாவில் இனிப்பாலான ஜாங்கிரியைதான் பெரிதும் பிரசாதமாகப் படைப்பார்கள். எல்லாவற்றிலுமே நுட்பமான பல உள்விஷயங்கள் ஒளிந்துள்ளன.

முதலில் பழத்தைப் பார்ப்போம்.

உணவுப் பொருட்களிலேயே உன்னதமானது

பழம் என்பதற்கு ஒரே காரணம்தான். பூ பிஞ்சாகி, பிஞ்சு காயாகி, காய்தான் கனியாகிறது.

நால்வகை நிலைப்பாடு… இந்தக் கனியாதல் என்பதன் பின்னே பழுத்தல் என்பது உள்ளது. அதாவது காலத்தால் பழுத்தல். பழுத்தபின் பழம் மரத்தில் தங்காது. உதிர்ந்து விழுந்துவிடும். அப்படி உதிரும்போது பால்வடியாது.

அதாவது மரத்தைப் பிரியும் துக்கத்தை மரமோ அல்லது பழமோ காட்டாது.

அது ஒரு சந்தோஷப் பிரிவு!

இந்தக் கனிந்த நிலையை சமைந்த நிலை எனலாம். அதாவது அடுப்பு, பாத்திரம், நெருப்பு என்று முயன்று நாம் சமைக்கத் தேவையின்றி இயற்கையே சமைக்கும்போது அதைப் பழுத்தல் என்கிறோம். அப்படி பழுக்கின்ற பழங்களும் உடம்புக்கு மிக உகந்தவையாக- எல்லா சக்தியும் உடையதாக- சத்வ குணத்தை அளிப்பதாக இருப்பதால், முனிவர்களின் முக்கிய உணவாக பழமே விளங்கியது. எனவேதான் இறை பிரசாதமாகவும் இது முதலிடம் பெறுகிறது. அனுமனோ விலங்கினத்துக்கும் பிரதிநிதி. அதிலும் பழங்களையே பிரதான உணவாகக் கொண்ட குரங்கு இனத்தவன். எனவே பழம் பெரும் பிரசாதம் இவனுக்கு.

அடுத்து வடை! வடையின் பிரதான தானியம் உளுந்து. உளுந்து கோள்களில் ராகுவை உடையது. ராகு- கேது எனும் இரு உபகிரகங்களும் அசுர வழி வந்து, அமுதம் திருடப்போய் தலையை இழந்து பாம்பின் தலையைப் பெற்றதெல்லாம் புராண வரலாறாகும்.

இந்த இரு கோள்களும் மானிட வாழ்வை தங்கள் தசைகளில்- புக்திகளில்- அந்தரங்களில் ஆட்டி வைப்பவர்கள். இவர்களை நாம் இணக்கமாக அடைய, இவர்களின் அம்சம் சார்ந்ததை அனுமனுக்குப் படையலிடும்போது, அவன் தன் மேலான சக்தியால் இவர்களின் பாதிப்புகளைத் தான் ஏற்று நம்மை ரட்சிக்கிறான்.

இந்த உளுந்தைப் பயன்படுத்தியே ஜாங்கிரி செய்யப்படுகிறது. எனவே உளுந்துதான் இதில் பிரதானம்.

அடுத்து வெண்ணெய்.

வெண்ணெய் கண்ணனுக்கும் பிரியமான உணவு.

விஞ்ஞானம் இதை கொழுப்பாகப் பார்க்கிறது.

மெய்ஞ்ஞானமோ இதை பெரும் தத்துவப் புதையலாகப் பார்க்கிறது.

பசுவின் பால் காய்ச்சப்பட்டு, பின் தயிராக்கப் பட்டு, அந்த தயிரும் கடையப்பட்டு அதனுள் இருந்தே மோரை விலக்கி வெண்ணெய் பிரிந்து வருகிறது. மோரோடும் தயிரோடும் இருந்தவரை ஒட்டி இருந்தது- பிரியவும் நீர்மேல் மிதக்கிறது. உருக்கினால் மணம் மிக்க நெய்யாகி வேள்விக்குப் பயன்பட்டு புனிதத் தீயாகி வானேகி மறைகிறது.

மனித வாழ்வும் இன்ப துன்பங்களால் கடையப்படுகிறது. அதன் காரணமாக  விளைந்த ஞானம் உலக பந்தத்தை நிலையற்றதாகக் கருதி, உலகோடு இருந்தாலும் அதோடு ஒட்டி விடாதபடி தனித்து நிற்க வழிசெய்கிறது. பின் பக்தியின் உருக்கத்தில் நெய் போலாகி, பின் தீயாகி விண்ணேகுகிறோம்.

வெண்ணெய்க்குப் பின்னால் இப்படி ஒரு நுட்பச் செறிவு இருப்பதால்தான் பிரசாதத் தில் வெண்ணெய்க்கு பிரதான இடம். பற்றற்ற வெண்ணெய் அனுமன் நெஞ்சை அடையும்போது, அவனது இதயத்தில் எப்போதும் ஒலித்துக்கொண்டிருக்கும் ராமநாம அதிர்வுகளுடன் கலந்து பெரும் பிரசாதமாகிவிடுகிறது. எனவேதான் அனுமனுக்கு வெண்ணெய்க் காப்பும் இடப்படுகிறது.

இதுபோக வெற்றிலை மாலையும்

அனுமனுக்கு மிக விசேஷமானது. அதேபோல செந்தூரமும் மிகப் பிரியம். பல இடங்களில் செந்தூர ஆஞ்சநேயனைக் காணலாம். செந்தூரம் அவனுக்கு ஏன் பிடிக்கும் என்பதன் பின்னே ரசமான சம்பவம் ஒன்றுண்டு. இந்தச் சம்பவத்துக்கும் சீதாபிராட்டிக்கும்கூட தொடர்புண்டு. அந்த சம்பவத் தொடர்புக்குரிய விஷயங்களை மட்டுமல்ல; இந்த யுகத்தில் அனுமன் பல ஞானியர்க்கு தரிசனமளித்து, அவர்களுக்கு ராம தரிசனம் கிடைக்கவும் வழிகாட்டியுள்ளான்.

இந்து சாம்ராஜ்ஜியம் கண்ட வீரசிவாஜி, அவரது குருவான ராமதாசரால் அனுமனின் திவ்ய தரிசனத்தைக் கண்டவராவர்.

அதேபோல கபீர்தாசர் தொடங்கி, சமர்த்த ராமதாசர், பத்ராசல ராமதாசர் என்று அனுமனை  நேரில் தரிசித்தவர்கள் பலப்பலர். அதுமட்டுமா… பெரும் மகானான ராகவேந்திரரும் அனுமனின் பேரருளால் இன்புற்றுத் திளைத்தவர். அனுமன்  உபாசனா மூர்த்தி. அவன் எப்படி “ராம ராம‘ என்று ஜெபித்தபடி  பெரும் உபாசகனாக இருக்கிறானோ அதேபோல அவனை உபாசிப்பவர்களுக்கு அவன் இஷ்ட தெய்வமாகி, அவர்களுக்கும் ராம தரிசனம் கிடைக்கச் செய்து பிறவித்தளையை விடுவிக்கிறான்.

பெரும் ஞானிகளுக்கு மட்டுமா அவன் வழிகாட்டி? பிஞ்சுப் பிள்ளைகளுக்கும் தான். இவனது மந்திரங்களில் “சாலீசா‘ மிக பவித்ரமானது. அனுமன் சாலீசா சொல்லும் குழந்தைகளுக்கு ஞாபக சக்தி பெருகி எதிலும் வெல்லும் ஆற்றல் ஏற்படும். அனுமனின் பல உபாசனா மந்திரங்கள் அவனை கட்டி இழுத்து வீட்டுக்கே அழைத்து வந்துவிடும். அப்படி அவன் எதிர்வந்து, “அழைத்தீர்களா?‘ என்று கதையும் கையுமாக நின்று கேட்கும்போது மேனி சிலிர்த்துப் போகும்! அதெல்லாம்தான் அனுமன் மகிமை.  அந்த மகிமைகளை வரிசையாக அறிவோம்!

(தொடரும்)