Category Archives: Bharati Mani

நரேந்திர மோடியும் நானும்! – பாரதி மணி


Image may contain: 1 person

போனவருடம் இதே நாளில் — நவம்பர் 8, 2016 — பெங்களூர் சக்ரா மருத்துவமனையில் முதுகுத்தண்டு ஆபரேஷனுக்காக — Laperoscopic Decompression Surgery of L4, L5 and S1 of Spine — மாலை ஏழரை மணிக்கு அட்மிட் ஆனேன். அடுத்தநாள் காலை 10.30-க்குத்தான் ஆபரேஷன். பொழுதுபோகாமல் என் அறையிலிருந்த டிவியை பார்த்துக்கொண்டிருந்தேன். திடீரென இரவு எட்டுமணிக்கு பிரதமர் நரேந்திர மோடி டிவியில் தோன்றி ‘இன்றிலிருந்து ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் புழக்கத்திலிருந்து நீக்கப்படுகின்றன’ என்ற அறிவிப்பை தீடீரென அறிவித்தார்.

‘கள்ளத்தனமான லக்ஷ்மி கடாட்சம்’ எனக்கு எப்போதுமே இருந்ததில்லையாதலால் மடியில் கனமில்லாமல் ‘இனி கள்ளப்பணம் கொட்டிக்கிடக்கும் பணமுதலைகளும், அரசியல்வாதிகளும் “செத்தாண்டா…சேகரு!” என்று உள்ளுக்குள் சிரித்துக்கொண்டே அவர் பேச்சைக்கேட்டேன்.

ஆனால் என்னைப்பார்க்க வந்த டாக்டர்கள் முகங்களில் பேயறைந்த சாயல் தெளிவாகவே தென்பட்டது. ‘ஐயோ! எப்படி சமாளிக்கப்போகிறோம்!’ என்ற பீதி தெரிந்தது. மருத்துவமனையெங்கும் அன்றிரவு அதைப்பற்றியே பேச்சு! பல டாக்டர்கள் மோடியை அப்போது நேரில் பார்த்தால், விஷ ஊசி போட்டு உடனே கொலை செய்யவும் அஞ்சமாட்டார்களெனத் தோன்றியது!

என் மனக்கணக்கில் என்வசம் கையிலிருந்த (அப்போது செல்லாத) ரூ.500/ரூ.1000 நோட்டுக்களின் கூட்டுத்தொகை பத்தாயிரத்தை தாண்டாததால், படுத்தவுடன் தூக்கம் வந்தது!

அடுத்தநாள் காலை என்னை ஆபரேஷனுக்கு தயார் செய்து ஆபரேஷன் தியேட்டருக்கு வீல் ஸ்ட்ரெச்சரில் தள்ளிக்கொண்டு போகப்பட்டேன். சினிமாவில் வருவது மாதிரி சிவப்பு விளக்கில் பெரிதாக OPERATION THEATRE என்று எழுதியிருந்தது. ஆனால் என் உறவினர்கள் கூட ஓடி வரவில்லை. என் மகள் மட்டும் இருந்தாள்.

உள்ளே போனவுடன் அனெஸ்தீஷியா டாக்டர்களிடம் Demonetization பற்றிய ஜோக்குகளை உதிர்த்துக்கொண்டிருந்தேன். It was a major surgery; முதுகின் கீழ்ப்பகுதியில் ஆறு அங்குலத்துக்கு கீறுவதற்கு பதிலாக இரு துளைகள் போட்டு கம்ப்யூட்டர் ஸ்க்ரீன் மூலம் தண்டுவடத்தை அழுத்திக்கொண்டிருக்கும் எலும்புகளை உடைத்து சரிசெய்வது இந்த ஆபரேஷன். ஜெனரல் அனெஸ்தீஷியா ஏற்றியபிறகு, டாக்டர் என்னிடம், ‘இந்த ஆபரேஷன் பற்றி உங்களுக்கு கவலையே இல்லையா?’ என்றுகேட்டார். நான் அவரிடம், அதைப்பற்றி நீங்களல்லவா கவலைப்படவேண்டும்?….என்னைப்பொறுத்தவரை, I am in your safe hands! Why should I worry?’ என்று பதிலளித்தேன்.

அப்போது கொடுத்த மயக்கமருந்து சரியாக வேலை செய்கிறதா என்பதைக்கணிக்க ஒரு டாக்டர், “By the way, you didn’t tell me your full name? உங்க பேரென்ன?” என்று கேட்டதற்கு, முகத்தில் போட்டிருந்த சுவாசக்குழாயை கையால் விலக்கி, “My name is Narendra Modi!’ என்று பதிலளித்தேன். திடுக்கிட்ட டாக்டர்கள் அனைவரும் ஒரே குரலில், “WHAT?” என்றார்கள். திரும்பவும் மாஸ்க்கை கையால் விலக்கிப்பிடித்துக்கொண்டு, “I am Narendra Damodhardar Modi!……The Prime Minister of India!” என்று ஸ்பஷ்டமாக சொல்லிவிட்டு சுவாசக்குழாயை மறுபடியும் மாட்டிக்கொண்டேன். பக்கத்திலிருந்த ஒரு மலையாளி நர்ஸ் சத்தமாக, “எடீ ஸூஸம்மே! ஓடி வரூ! இயாள் எந்து பறயுந்நு…கேக்கு? “ என்று அலறினாள். அது தான் நான் கடைசியாகக்கேட்டது! பிறகு நினைவில்லை!

இந்த சம்பவம் நான் கோமாவில் இருக்கும்போதே ஆஸ்பத்திரி முழுவதும், பின்னர் பெங்களூர் டாக்டர்களுக்கிடையிலும் வாட்ஸப்பில் வைரலாக பரவியது. ஆபரேஷன் முடிந்து நான் ICU-வுக்கு மாறினதும், ஜூனியர் டாக்டர்கள் ஓரிருவராக என்னை வந்து பார்த்துவிட்டு, நமுட்டுச்சிரிப்புடன் “Oh! You are Narendra Modi!” என்று விசாரித்துவிட்டுப்போனார்கள்! அவர்களுக்கு ஆச்சரியம் என்னவென்றால் ஒரு எண்பது வயது நோயாளி “டாக்டர், எனக்கு ஆபரேஷன் நல்லபடியா ஆகுமா இல்லே செத்திருவேனா?, நான் வரும் டோக்யோ ஒலிம்பிக்ஸில் ஓடமுடியுமா?’ என்றெல்லாம் பயத்தோடு கேள்விகள் கேட்காமல் திமிர்த்தனமாக என் பெயர் மோடி என்று பதில் சொன்னது தான்!

அடுத்தநாள் காலையிலேயே அறையில் குளிக்கவும் ஏற்பாடு செய்திருந்தார்கள். எனக்கு ஆபரேஷன் செய்த டாக்டர் ருத்ரப்பா “You’re Surgeons’ delight. ப்ரெஷர், டயபெட்டீஸ், போன்ற எந்த உபாதைகளும் இல்லாத நோயாளிகளுக்கு ஆபரேஷன் செய்வது எங்களுக்கு வீட்டில் விளையும் பிஞ்சு காய்கறிகளை வைத்து சுவையாக சமையல் செய்வதைப்போல. உங்களிடமிருந்து கால் அவுன்ஸ் ரத்தம் கூட வீணாகவில்லை. I will remember this surgery for a long time!” என்று பாராட்டினார். அன்று மதியமே வீட்டுக்கு விரட்டி விட்டார்!

ஆஸ்பத்திரியில் என்னை வாஞ்சையுடன் கவனித்துக்கொண்ட நர்ஸ் ஸூஸம்மா! அந்தம்மா பிரியும்போது சொன்ன வார்த்தைகள்:::”அச்சோ! நிங்ஙளெப்பொலெ ஒரு ஆளெ இதுவரெ கண்டிட்டில்ல!”

–00oo00–

Advertisements

நல்ல ‘பீலர்’ Peeler அமைவதெல்லாம்……?” – பாரதி மணி


நானே சொல்கிறேன்…..இது ஒரு மொண்ணையான கட்டுரை. நாம் அன்றாடம் வீட்டில் உபயோகிக்கும், வெண்ணையைக்கூட நாலைந்து தடவை மேலும் கீழும் அழுத்தி வெட்டினாலும் வெட்டாத மொண்ணைக்கத்தி மற்றும் Peeler பீலரைப்பற்றியது. நான் எழுதிய மொக்கைக்கட்டுரைகளில் இதற்கு முதலிடம் கிடைக்கும்!

K.J. Yesudoss பாடிய பாட்டு ரேடியோவில் வரும்: ‘மனைவி அமைவதெல்லாம்…..இறைவன் கொடுத்த வரம்!’….அவன் தயவில்லாமலே நல்ல மனைவி கூட அமைந்துவிடலாம். ஆனால் மார்க்கெட்டில் நீடித்து உழைக்கும் ஒரு நல்ல கத்தி அல்லது பீலர் கிடைப்பது அதைவிட துர்லபம்.

பார்வதிபுரம் கிராமத்தில், என் செறுப்பக் காலத்தில் சமையலுக்கு கத்தி, பீலர் எல்லாம் கிடையாது. என் முப்பாட்டிகள், பாட்டிகள், அம்மா காலத்தில் காய்கறிகளை தோலுரித்து, செப்பனிட்டு அடுப்பிலேற்ற சமையலறையில் கோலோச்சி இருந்தது அருவாமணை — அரிவாள்மணை — என்ற சாதனம் தான். எந்தக்காயாக இருந்தாலும், பிளக்க, வெட்ட, தோலுரிக்க, நறுக்க, சுரண்ட, பொடிதாக அரிய, அருவாமணையை விட்டால் வேறு இல்லை. ஒரு பலாப்பழத்தைக்கூட ஒரே போடில் இரண்டாகப்பிளந்துவிடலாம். (பலாப்பிசின் ஒட்டிக்கொண்டால் ஒருநிமிடம் அடுப்பில் காண்பித்து துணியால் துடைத்தால் ‘போயே போயிந்தி!) கொல்லைப்புறத்திலிருந்து வாழையிலை அறுக்கவும் என் அம்மாவுக்கு அரிவாள்மணையே துணை!

அருவாமணையில் தெரிந்தவர்கள் அரைக்கீரை அரிந்தால், கீரை மத்துக்கு வேலையே இருக்காது! என் வீட்டில் இருந்த அரிவாள்மணை என் அம்மா கொண்டு வந்ததா … இல்லை புக்ககத்திலேயே இருந்ததா என்பது தெரியாது. எத்தனை வருடங்களாக அது உபயோகத்தில் இருக்கிறதென்பதும் தெரியாது. சற்றே ஆராய்ந்தால் கீழடிக் கலாசாரத்துக்கே போகலாம்! கொஞ்சம் அசந்தால் கைவிரல்களை பதம் பார்த்துவிடும். என் சிறுவயதிலேயே பாந்தமாக அருவாமணையில் நறுக்குவது எனக்கு கைவந்துவிட்டது. எதைச்செய்தாலும் ஓரளவு பாந்தமாக செய்யவேண்டுமென்று நினைப்பவன் நான். காலையில் வரும் ஆங்கில தினசரியில் சிலநாட்கள் விளம்பரத்தோடு ஒருபக்கம் மட்டும் நாக்கைத்துருத்திக்கொண்டு வெளியே தலையை நீட்டும். அதை அழகாக மடித்து உள்ளே தள்ளியபிறகு தான் பேப்பரை திறப்பேன்.

நான் தில்லி போகும்போது மணை – அரிவாள்மணை – என்னோடு துணை வரவில்லை. அங்கே எல்லாமே கத்தி தான்! அறுபதுகளில் தில்லியில் நான் போட்ட ஒரு நாடகத்தில் (’காவ்யராமாயணம்’ கே.எஸ். ஸ்ரீநிவாசன் எழுதிய ‘சந்தி’ என்ற நாடகம்) ஒரு முழு சீனும் நான் அரிவாள்மணையில் காய்கறி நறுக்கிக்கொண்டே பேசுவதாக காட்சி தொடரும். அந்த நாடகத்துக்கு விமர்சனம் எழுதிய வெங்கட் சாமிநாதன் ஒரு வாலிபன் இத்தனை பாந்தமாக அரிவாள்மணையை கையாள்வது பற்றி சிலாகித்து எழுதியிருந்தார்! (ஒரு டிஸ்கி:: அப்போது எங்களிருவருக்கும் பரிச்சயமில்லை!) இன்னொரு காரணமும் இருக்கலாம். நான் ஒரு பீச்சாங்கையன் Left Hander. ராகுல் த்ராவிட் விளாசும் கவர் ட்ரைவை விட கங்கூலியின் ஸ்ட்ரோக் இன்னும் அழகல்லவா?

தமிழ்நாட்டிலும் மேடைச்சமையல் வந்ததிலிருந்து அரிவாள்மணைக்கு வேலையில்லாமல் போனது துரதிஷ்டம்! பழந்தமிழ்வாதிகள் தமிழ்நாட்டின் பாரம்பரிய சமையல் ஆயுதமான அரிவாள்மணையை மறுபடியும் புழக்கத்துக்கு கொண்டுவரவேண்டுமென்று ஏன் இன்னும் போராட்டம் தொடங்கவில்லை? புலியை முறத்தால் விரட்டியடித்த தமிழச்சி வீட்டில் அப்போதே அரிவாள்மணையும் இருந்ததென்று சரித்திர ஆய்வுகள் பறைசாற்றுகின்றன. அரிவாள்மணையின் இடத்தை கத்தி பிடிக்க விடலாமா? தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அரிவாள்மணையையும் தேர்தல் சின்னமாக விரைவில் அறிவிக்கவேண்டும். ……தொப்பி என்ன தொப்பி?

மாம்பழக்காலங்களில், அப்பா இருபது மாம்பழங்களை நன்றாக கழுவித்துடைத்து ஒரு பெரிய தாம்பாளத்தில் வைத்துக்கொண்டு உட்காருவார்…… அவரைச்சுற்றி நாங்களும். மடியிலிருந்து அவர் மனைவியைவிட அதிகமாக நேசித்த அவரது Pen Knife பேனாக்கத்தியை எடுத்து விரித்து முதலில் காம்புப்பக்கத்தை சீவுவார். (இன்றைய தலைமுறைக்கு தெரியாத பேனாக்கத்திக்கு ஏன் இந்த பெயர் வந்தது? Fountain Pens காலத்துக்கு முந்தியிருந்த Squills இறகுப்பேனாவை கூர் செய்வதற்கு இந்தக்கத்தி பயன்பட்டது) பிறகு மாம்பழத்தின் மேல் ஒரே சீராக மேலிருந்து கீழ் சுற்றிச்சுற்றி அவரது கத்தி வழுக்கிக்கொண்டே போகும். கத்தி விடுபடும்போது அவர் கையில் மஞ்சள் நிறத்தில் அம்மணமான மாம்பழமும் கீழே குடை ஸ்ப்ரிங் மாதிரி நாங்கள் கையில் தூக்கித்தூக்கி விளையாடும் தோலும் விழும். மாம்பழத்தை உடனே நறுக்கமாட்டார். இருபது மாம்பழங்களுக்கும் ஒரே மாதிரி துச்சாதனன் பாணியில் வஸ்த்ராபகரணம் செய்வார். மாம்பழங்களும் ‘ஹே….க்ருஷ்ணா!’ என்று அலறாது. அவனும் வரமாட்டான்! அப்பாவின் பேனாக்கத்திக்கு பயந்தோ என்னவோ! அவரது பேனாக்கத்தி கடையில் வாங்கியது அல்ல…ஸ்பெஷலாக சொல்லிச்செய்தது. வெற்றிலைபாக்கு போடும் நண்பர்கள் பச்சைப்பாக்கு சீவ கேட்டாலும் கொடுக்கமாட்டார். அவர் அடிக்கடி சொல்வது:: “Like wife, pen and knife are not to be shared! துண்டாக நறுக்கிமுடிந்ததும் கொட்டையெல்லாம் எங்களுக்கு. கதுப்புக்களை வெட்டி, ஒவ்வொரு கிண்ணமாக ‘இது பாட்டிக்கு, இது மாமாவுக்கு, இது அடுத்தாத்து அத்தைப்பாட்டிக்கு” என்று போகும். தாம்பாளத்தில் மீதமிருக்கும் துண்டுகளும் கொட்டைகளும் எங்களுக்கு சரிவிகிதத்தில் பிரிக்கப்பட்டாலும் ‘அவனுக்கு நெறய குடுத்தே!’ பராதியை தவிர்க்கமுடியாது!

எங்கள் பார்வதிபுரம் கிராமக்கோவிலில் வருடத்திற்கு 14 நாட்கள் (பங்குனி உத்திரம், புரட்டாசி சனிக்கிழமை, அட்சய திருதியை, கிருஷ்ணஜெயந்தி போன்ற நாட்களில்) ஆயிரம்பேருக்கு மேல் அன்னதானம் ‘ஸத்யை’ நடக்கும். தக்கலை, புலியூர்க்குறிச்சி, கணியாகுளம், கிருஷ்ணன்கோவில், வடசேரி, வடிவீஸ்வரம், ஒழுகிணசேரி, வேம்பனூர், சுசீந்திரம், மஹாதானபுரம், பூதப்பாண்டி, போன்ற இடங்களிலிருந்து பக்தர்கள் வருவார்கள். அதற்கு முன்தினம் இரவு நடக்கும் ‘காய்கறி வெட்டு’ பூஜையுடன் தொடங்கும். அதற்கு கிராமத்து மக்களை கலந்துகொள்ள வீடுதோறும் வந்து அழைப்பார்கள். வீட்டுப்பெரியவர்கள் தங்கள் வீட்டில் இருக்கும் மிகக்கூர்மையான கத்தியோடு அதில் கலந்துகொள்வார்கள். அப்போது ஹெட் குக் ‘கோம்பை மணியன்’ என்னை தனியாக அழைத்து, ‘கிச்சாமணி, இவாள்ளாம் யானைத்தண்டிக்கு பெரிசு பெரிசா நறுக்குவா. மத்த கூட்டு கறிக்கு பரவாயில்லை. அவியலுக்கு நறுக்கறவாளெ கொஞ்சம் கவனிச்சுக்கோ. கசாம்புசான்னு பெரிசும் சின்னதுமா வெட்டி வெச்சுரப்போறான்!’ என்று எச்சரிப்பார். அவியலுக்கு சேரும் காய்கறிகள் சதுரமாக இல்லாமல் ஒன்றரை இஞ்ச் அளவில் சீராக இருந்தால் தான் அவியல் பார்க்க அழகாக இருக்கும். அதனால் ”தான்” வெட்டத்தெரிந்தவர்களுக்கு மட்டுமே அவியல் காய்கறி நறுக்க அனுமதி உண்டு! அதற்கு நான் மேற்பார்வையாளன்!

அரிவாள்மணை பற்றி தெரியாத இந்த இளைய சமூகத்துக்கு பழைய படம் இருந்தால் போடலாமேயென்று கூகிளாண்டவரை அணுகினேன். அதில் ’அருகாமனை’ என்று வருகிறது! முட்டாளே! கத்தியும் பீலரும் அருகாமனைகளில் அந்தக்காலத்தில் அரிவாள்மணை தான் கோலோச்சியது. எனக்கு அடுத்த தலைமுறைகளில் அரிவாள்மணையுடன் தேங்காய்த்துருவியையும் இணைத்து Two-in-One அர்த்தநாரீசுவரராக ஒரு அவதாரம் இருந்தது. என் வீட்டில் மாதொருபாகனாக இல்லாமல் இரண்டும் தனித்தனியாகவே இயங்கின.

எழுபதுகளில் தான் முதன்முறையாக Anjali Brand பீலர் மார்க்கெட்டுக்கு வந்தது. அதில் சிலது மழுங்காது நீடித்து உழைக்கும். அது தான் நான் மேலே சொன்ன ‘இறைவன் கொடுத்த வரம்’. இன்னும் சிலது முதல்முறையே தோலோடு சதையையும் கவ்விக்கொண்டுவரும். சரி….பீலர் என்பதற்கு தமிழ் வார்த்தை என்ன? கவிஞர் மகுடேசுவரனிடம் கேட்டால் ‘தோலுருச்சி’ என்பார். எதற்கு வம்பு? பீலர் என்றே இருந்துவிட்டுப்போகட்டுமே! ஆனால் டிவி தொகுப்பாளினிகள் தான் அதை Beeler, Feeler, Bheeler என்றெல்லாம் உச்சரிக்கும் அபாயம் உண்டு!

அடிப்படையில் நான் நாடகநடிகனோ எழுத்தாளனோ அல்ல…… ஒரு சமையல் கலைஞன். நளன், பீமன் பரம்பரையில் வந்தவன். நன்றாக சமைக்கவும் பிடிக்கும்….சம்பிரமமாக சாப்பிடவும் பிடிக்கும். எனக்கு மொண்ணைக் கத்திகளைப் பார்த்தால் ஆத்திரம் பற்றிக்கொண்டுவரும். எனக்கென்று தனியாக வைத்திருக்கும் கத்திகள் மிகக்கூர்மையாக இருக்கும். என் மாமியார் ராஜி (திருமதி க.நா.சு.) “ஐயோ…இது மணி கத்தி…..வேண்டாம்… தொட்டாலே வெட்டிரும்!’ என்பார்! கொத்தவரங்காயோ பீன்ஸோ….நான் பேசிக்கொண்டே சக்..சக்…சக்கென்று வேகமாக நறுக்குவதைப்பார்த்து என் மகள் ‘அப்பா! ஜாக்ரதை!’ என்று சொல்லிக்கொண்டே இருப்பாள். எனக்கொரு சந்தேகம் எப்போதுமுண்டு. ஏன் என்னைத்தவிர மற்றவர்கள் வீட்டில் மொண்ணைக்கத்திகளாகவே வைத்திருக்கிறார்கள்? நாலு பீன்சை வைத்து மொண்ணைக்கத்தியால் ஏழுதடவை மேலும் கீழும் இழுத்து பீன்ஸை துவம்சம் செய்பவர்களை ‘பளார்’ என்று அறையவேண்டுமென்ற தணியாத ஆவல் எழும்!  I am a born Chef!

பல ஆண்டுகளுக்குமுன்னால் மும்பை பம்பாயாக இருந்தபோது அங்கு என் நண்பன் வீட்டில் இரண்டுநாள் தங்கியிருந்தேன். எங்கே போனாலும் அன்றைய காய்கறி நறுக்கும் வேலையை கேட்டு வாங்கிவிடுவேன். நான் போகுமிடமெல்லாம் என்னோடு ஒரு கூர்மையான கத்தியும் பீலரும் உடனிருக்கும். நறுக்க பீன்ஸ் கொண்டு வைத்தார்கள். பச்சைப்பசேலென்று பிஞ்சு பீன்ஸ் கண்ணைப்பறித்தது. நறுக்கிவைத்தவுடன் எடுத்துப்போக நண்பன் மகள் வந்தாள். திடீரென்று ‘அப்பா!….அம்மா!’ என்று கத்திக்கொண்டே பாத்திரத்துடன் உள்ளே ஓடினாள். என்னவென்று பார்த்தால் பீன்ஸ் ஒரே சீராக நறுக்கியிருந்தது Emarald பச்சை மரகதப்பரல் போல் இருந்ததாம்!

நண்பர்கள் வீட்டுக்கு பார்க்கப்போகும்போது பழங்களுக்கு பதிலாக காய்கறிகள் வாங்கிக்கொண்டு போவேன். But it received mixed reaction! நான் போனபிறகு அந்தப்பையை பிரித்துப்பார்க்கும் சிலருக்கு காய்கறிகள் ஏமாற்றமாகவே இருந்தது.

வேலையில்லாமல் சும்மா வெட்டியாக உட்கார்ந்திருப்பவனை, ‘நீ என்ன செய்கிறாய்!’ என்று கேட்டால் “I am peeling potatoes!” என்று பதில் சொல்வான். இந்த ஜோக் தமிழ்நாட்டில் அதிகமாக விலை போகவில்லை. நெருங்கிய நண்பர்கள் போனில் ‘என்ன சார் பண்றீங்க?’ என்று கேட்பதற்கு பதிலாக ‘I am peeling potatoes!‘ என்று சொன்னால் “ஸார், இன்னிக்கு உருளைக்கிழங்கு ரோஸ்ட்டா சார்!” என்ற பதில் கேள்வி! எங்கே போய் முட்டிக்க?

எழுபதுகளில் வேலை விஷயமாக அடிக்கடி ஐரோப்பிய மற்றும் கம்யூனிஸ்ட் ஆட்சி நடந்த கிழக்கு ஐரோப்பிய தலைநகர்கள் புடாபெஸ்ட், புக்காரெஸ்ட், வார்ஸா, கிழக்கு பெர்லின் போன்ற நகரங்களுக்கு அடிக்கடி போகவேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. எங்கே போனாலும் ஒருநாள் அந்த நகரத்தின் கறிகாய் மார்க்கெட்டுக்கு ஒரு விஸிட் நிச்சயம். இங்கே அப்போது பரிசயமில்லாத பல காய்கறிகளை அங்கே பார்த்து மகிழ்ந்ததுண்டு! வழக்கமான வெள்ளைநிற காலிப்ளவருடன் மஞ்சள், சிவப்பு, வெள்ளை, கறுப்பு, ஊதா கலரிலும் அது அடுக்கிவைத்திருப்பதை பார்ப்பதே ஒரு ஆனந்தம். ஆனால் இப்போது அவையெல்லாமே நம்மூர் சமையலறைக்குள் புகுந்துவிட்டன! ஃப்ராங்க்ஃபர்ட்டில் DM 2/-க்கு ஒருடஜன் நல்ல கத்திகள் கிடைக்கும். மொத்தமாக வாங்கிவந்து, வீட்டுக்கு வரும் நண்பர்களுக்கெல்லாம் — தில்லானா மோகனாம்பாள் வைத்தி பார்த்தவருக்கெல்லாம் ஒரு எலுமிச்சம்பழம் கொடுப்பதுபோல் — ஆளுக்கொரு கத்தி கொடுப்பேன். அதில் ஓரிருவர் ”மணி! ஆயுதம் யாருக்கும் இலவசமாக கொடுக்கக்கூடாது. இந்தா…இதை வெச்சுக்கோ” என்று பதிலுக்கு ஒரு ரூபாய் நாணயத்தை கையில் வைத்து அழுத்துவார்கள். National Automatic Rice Cooker இந்தியாவில் வருவதற்கு பல ஆண்டுகள் முன்பே நான் ஒன்று வாங்கிவந்தேன். “ஹை! சாதம் வடிக்கவேண்டாமா?….. அதுவாவே Off ஆயிடறது” என்று அதிசயமாக அதைப்பார்க்கவந்த நண்பர் மனைவிமாரும் உண்டு!

அதிகவிலை கொடுத்து வெளிநாட்டில் வாங்கிய கத்தி தான் நீடித்து உழைக்கும் என்கிற தியரி முற்றிலும் பொய். Robert Welch, Le Creuset, Lakeland போன்ற கத்திகளையும் வாங்கி உபயோகித்திருக்கிறேன். அதிலொன்று வாங்கின மூன்றாம்நாளே டைனிங் டேபிள் கீழே விழுந்து பிடி வேறு, கத்தி வேறு என்றாகிவிட்டது. இந்த அழகில் ஆயுசுக்கும் சாணை தீட்டவேண்டாம் என்கிற கேரன்ட்டி வேறு. மாறாக Geep Batteries வாங்கும்போது இலவசமாகக்கிடைத்த சிவப்புப்பிடி போட்ட கத்தி இரண்டு வருடங்களுக்கும் மேலாக — அதை தவறுதலாக காய்கறிக்குப்பையோடு வெளியே போடும்வரை — உழைத்தது. அரசினர்பள்ளி மாணவி மாநிலத்தில் இரண்டாவதாக வரவில்லையா…அதைப்போல!

என் தில்லி நண்பர் (தில்லி தமிழ்ப்பள்ளி ஆசிரியர்) H.K. SWAMY கிருஷ்ணஸ்வாமியை (எங்களுக்கு கிச்சாமி) நீங்களும் திரையில் பார்த்திருக்கலாம். ‘பாரதி’ படத்தில் எனக்கு (சின்னசாமி அய்யருக்கு) நண்பராக வருவார். மனுஷன் சமையல்கலையில் ஒரு நளன். அவர் சமையலுக்கு காய்கறி வெட்டிவிட்டு மீதிக்குப்பையை Cutting Plate-ல் ஒரு Modern Art ஆக வடிவமைப்பார். காம்புகளை வைத்து குடுமி, வெண்டைக்காய்க்காம்பு கண்கள், வெள்ளரித்தோலால் புடவை இப்படி! அவரைப்பார்த்து நானும் கற்றுக்கொண்டேன். என் கறிகாய்க்குப்பையும் மாடர்ன் ஆர்ட்டாகத்தான் வெளியே போகும்! வெளிநாட்டில் சமையல் உபகரணங்கள் எது வாங்கினாலும், அவருக்கும் ஒன்று சேர்த்து வாங்குவேன். மாதமொருமுறை ‘மணி, வர ஞாயித்துக்கிழமை சாப்பிட வரேன். சின்னவெங்காய சாம்பார், அவியல் பண்ணிடு’ என்பார். வரும்போது அவருடன் அவர் தயாரித்த தேங்காய்சாதம், லெமன் ரைஸ், புளியோதரை ஒருவண்டி வடாம் வற்றலும் வரும்! I am missing them all!

மாம்பழக்காலமாதலால், பெங்களூர் வந்தவுடனேயே ஒரு புது பீலர் வாங்கினேன். அது தோலோடு ஒருகொத்து சதையையும் சேர்த்துக்கொண்டுவந்தது. இரண்டுநாளில் இன்னொரு பீலர். அது மேலேயிருந்து கீழே வர மறுத்தது. இன்று மூன்றாவது. இது அதற்கு பிடித்த இடங்களில் மட்டும் ‘திருப்பதி மொட்டை’ போல தோலைச்சீவுகிறது. நான் என்ன செய்ய? சந்திரனுக்கு வெற்றிகரமாக ராக்கெட் விட்ட இந்தியாவில் ஒரு நல்ல பீலர் கிடைக்கவில்லையென்றால் நமது so called பொருளாதார முன்னேற்றம் எங்கே போகிறது?

தமிழ்நாட்டில் மட்டும் மோடி என்றும் பிற மாநிலங்களில் ‘மோதி’ என்றும் அழைக்கப்படும் பிரதமர் அடுத்தமாத ‘Mann Ki Baat’ நிகழ்ச்சியில் என்னை சந்தித்தால், அவரிடம் நான் வைக்கும் ஒரே விண்ணப்பம் இது தான்:
உடனேயே DRDO (Defence Research & Development Organisation), ISRO, IIT, Kharagpur இவற்றிலிருந்து ஐந்து அங்கத்தினர் கொண்ட உயர்மட்டக்குழு ஒன்றை அமைத்து, இந்தியாவின் தட்பவெட்ப நிலைக்கேற்றவாறு குறைந்தபட்சம் இருவருடங்கள் நன்றாக உழைக்கும் கத்தி/பீலரின் Prototype ஒன்று தயார் செய்யவேண்டும். E-Tender மூலம் குறைந்தவிலைக்கு தயாரிக்க முற்படும் டெண்டர்தாரருக்கு இந்தியாவிலிருக்கும் ஒரு Defence Ordnance Factory-யில் பீலர்/கத்தி தயாரிப்பை ஆறு மாதத்துக்குள் தொடங்க ஒப்பந்தம் கையெழுத்திடவேண்டும். அந்த விழாவில் பிரதமர் பங்கேற்பார். அதை தூர்தர்ஷன் தில்லி நேரலையில் ஒளிபரப்பும்.

அடுத்த நிதியாண்டுக்குள் இந்தியா முழுதும் ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டும் ஆளுக்கொரு கத்தி/பீலர் இலவசமாக…..சாரி……. விலையில்லாப் பொருட்களாக ரேஷன் கடைகள் மூலம் வினியோகிக்கப்படவேண்டும்.
ஒன்றுக்குமேல் வேண்டுமென்றால் எல்லாக்கடைகளிலும் கத்தி/பீலர் ரூ. ஒன்றுக்கு மான்யவிலையில் கிடைக்கும். ஆனால் இதற்கும் ஆதார் கார்டு அவசியம். ஜூலை முதல் அமுலுக்குவந்த GST-யிலிருந்து பீலருக்கும் கத்திக்கும் 0% வரிவிலக்கு அளிக்கப்படவேண்டும்.

Swach Bharat திட்டத்தைப்போல இந்த திட்டத்தையும் எல்லா மத்திய அமைச்சரவைகளும் விளம்பரம் செய்து முன்னெடுத்துச்செல்லும். வரும் நிதியாண்டில் இதற்காக ரூ.100 கோடி ஒதுக்கவேண்டும்.
A GOOD PEELER SHAPES INDIA’………..MODI CUTTING INDIA TO SIZE!……. MAKE GOOD PEELER IN INDIA!……..இது தான் நமது அடுத்த தாரகமந்திரம்!

‘என்ன சார் அநியாயம்?…..நாட்டிலே -– அஜீத் படம் ஊத்திக்கிட்டது, எடப்பாடி-தினகரன் மோதல், நீட் தேர்வு, ஓவியா பிக் பாஸிலிருந்து வெளியேற்றம், தலைநகரில் பச்சைக்கோவணத்தோடு விவசாயிகள் போராட்டம் — போன்ற எத்தனையோ முக்கிய பிரச்சினைகள் மக்களை வாட்டும்போது நீங்க கத்தி கபடாவுக்காக இம்மாம் பெரிய கட்டுரை எழுதறீங்களே?….உங்களுக்கே நல்லாப்படுதா?’ என்று கேட்பவர்களுக்கு::
அனுபவிச்சவனுக்குத்தான் அந்த வலி தெரியும்….சார்!

பாரதி மணி

‘’உயிர்மை’ செப்டம்பர் 2017 இதழில் வெளிவந்தது.

 

காபி க்ளப் கலாச்சாரம் – பாரதி மணி


நூறு வருடங்களுக்கு முந்தி காபி க்ளப் இருந்ததாவென்று ஒரு நண்பர் கேட்டிருந்தார்:

காபி க்ளப் கலாச்சாரம் நூறு வருடங்களுக்கும் முற்பட்டது. எனக்குத்தெரிந்த வகையில், வேறு வாழ்வாதாரம் இல்லாத, நன்றாக சமைக்கத்தெரிந்த ஏழை பிராமணக்குடும்பத்தினர் இதை ஒரு தொழிலாக தன் சிறிய வீட்டில் திண்ணைக்கு வெளியில் இரண்டு பெஞ்ச்களைப்போட்டு வருபவர்களுக்கு சுடச்சுட இட்லியும் தேங்காய்ச்சட்னியும் சுவையோடு கொடுத்தார்கள். வியாபாரம் பச்சைபிடித்ததும், இன்னும் ரெண்டு பென்ச் உள்ளுத்திண்ணையில்! எனக்குத்தெரிந்து ஒரு திருவிதாங்கூர் சக்கரத்துக்கு (ரஃப்லி அரையணா) பத்து இட்லிகள். எதிர்பாராத விருந்தினர்கள் மற்றும் வீட்டிலிருக்கும் பெரியவர்களுக்கு, ‘டேய்…நேத்திக்கு மாவரைக்கலைடா…கிச்சாவாத்துக்குப்போய் ஒரணாவுக்கு இட்லி வாங்கிண்டுவா!’ என்பதில் தொடங்கியிருக்கவேண்டும்.

அடுத்து மாதவிலக்கான கிராமத்துப்பெண்கள் இவரது முக்கிய கஸ்டமர்கள். மாதம் 27 நாட்கள் பூராக்குடும்பத்தின் வயிறு வாடாமல் மூன்று வேளையும் பொங்கிப்போட்ட ‘மகராசி’ அந்த 3 நாட்கள் நாதியில்லாது கொட்டிலில் முடங்கிக்கிடப்பாள். (அந்தக்காலத்தில் கிராமத்துப்பெண்களை ’அந்த மூன்று நாட்களில் என்னென்ன பாடு படுத்தியிருக்கிறோம்? யாருக்கும் தேவையில்லாத ஜென்மம்!) ‘பார்ரா….விசாலத்தாத்துக்குப்போய் ஒரணாவுக்கு வாங்கிண்டு வா…..அஞ்சு இட்லி வெக்கச்சொல்லு… நெறைய சட்னியும்!’ சிறுவனாக அந்த ஐந்தாவது இட்லியை சட்னியுடன் ரசித்துச்சாப்பிட்ட ருசி இன்னும் என் நாக்கில் இருக்கிறது! இட்லிக்கு சாம்பாரெல்லாம் ரொம்ப பின்னால் வந்த நாகரீகம்!

ஹோட்டல் பிசினஸில் முட்டாளுக்குக்கூட நஷ்டம் வராது என்பார்கள். நூற்றுக்கு நூறு லாபம். ஒரணாவுக்கு நாலு இட்லி விற்றே அந்தக்குடும்பத்தின் நான்கு உயிர்கள் பிழைத்துவிடும்.

அதனால் மக்கள் அதிகமாகப்புழங்கும் கடைவீதிகள், ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட் போன்ற இடங்களில் வயிற்றுப்பிழைப்புக்காக – வண்டி ஓடினால் போதும் என்ற நிலையில் அனேக காபி க்ளப்கள் முளைத்தன!

Bharati Mani's Profile Photo, Image may contain: 1 person

சந்திரா ஸ்வாமி! – பாரதி மணி


Image may contain: 3 people, people standing and beard

இருக்கும் ஸ்வாமிகளில் ஒரு ஸ்வாமி நேற்று போய்விட்டார்…..சந்திரா ஸ்வாமி! ஊடகங்களால் Cunning Conman என்று அறியப்பட்டவர். அவர் காட்டில் மழைபெய்த நாட்களில் பிரதமர்களும், முதல்வர்களும் அவர் காலில் விழுந்தார்கள்! அவரால் வளர்த்துவிடப்பட்ட பூதங்கள் அனேகம்.

நம்மில் பலர் சந்திரசேகர், நரசிம்மராவோடு இவரும் போய்விட்டார் என்றே நினைத்திருந்தார்கள். நேற்றைய செய்தி “ஓ! இப்போ தான் போனாரா?’ என்று பலரைக்கேட்கவைத்தது. தன்னுடைய செல்வாக்கு காலாவதியாய்விட்டதென்று தெரிந்துகொண்டு இரண்டாவது இன்னிங்ஸுக்கு தயாராகாமல் ஊடகங்களிலிருந்தும் சுத்தமாக விலகிவிட்டார்.

தொண்ணூறுகளில் அவர் புகழ் உச்சத்திலிருந்தபோது அவரை ’தரிசிக்கும்’ வாய்ப்பு எனக்கும் கிட்டியது. அருந்ததி ராயின் “The Electric Moon” என்ற ஆங்கிலப்படத்தில் என்னோடு சேர்ந்து நடித்த லீலா நாயுடுவுடன் காரில் போய்க்கொண்டிருந்தபோது, ‘மணி! கொஞ்சம் காரை கிரேட்டர் கைலாஷுக்கு திருப்பு. ஸ்வாமிஜியைப்பார்க்கணும்!’ என்றார். போனதும் அப்பாயிண்ட்மெண்ட் இல்லாமல் சந்திரா ஸ்வாமியின் ‘இன்ஸ்டண்ட் தரிசனம்’.

Image may contain: 1 person, closeup

‘ஆயியே பெஹன் ஜி! உங்களைப்பார்த்து யுகங்களாகிறது!’ என்று கட்டிப்பிடித்து வரவேற்பு. இல்லையா பின்னே? ஆறு உலக அழகிகளில் ஒருவராக கருதப்பட்டவர். Householder படத்தில் சசி கபூருடன் ஜோடி…எழுத்தாளர் டாம் மோரியஸின் மனைவி! அவர் என்னை அறிமுகப்படுத்தியவுடன் ஸ்வாமிஜி என்னை ஏளனமாக ஒரு பார்வை பார்த்தார்… ….ஏதோ நாய் கொண்டுவந்து போட்டதை பார்ப்பது போலிருந்தது! முதல் பார்வையிலேயே அவரை நானும், என்னை அவரும் வெறுத்தோம்.

அவர் இருந்த அறை பூரா மாலைகளும், தட்டுத்தட்டாக கும்பாரமாக எலுமிச்சம்பழங்களும் இருந்தன. வர்த்தகமுறையில் “மாம்பலம் மாமீஸ்’ ஊறுகாய் போடுமளவுக்கு கண்ணைப்பறிக்கும் எலுமிச்சங்காய்கள்! தில்லானா மோகனாம்பாள் வைத்தி போல “அய்யர்வாள்! இந்தாங்கோ!” என்று ஒரு பழத்தை எடுத்து நீட்டுவாரென்ற எதிர்பார்ப்பு எனக்கில்லை! ஆமாம்! இந்த ஒரு சாக்கு எலுமிச்சம்பழங்களைக்கொண்டு என்ன செய்வார்? தினமும் நான்குவேளை தலைக்கு தேய்த்துக்கொள்வாரோ? கேட்க தைரியமில்லை!

அரைமணிநேர தற்புகழ்ச்சி உரையாடலுக்குப்பிறகு —
எல்லாமே “நான் தான் அவனுக்கு (நரசிம்ம) ராவ்ஜியிடம் சொல்லி கேஸ் வராமெ முடிச்சேன். இன்னிக்கு நன்றியில்லாமெ இருக்கான்!……நேத்து இதே நேரம் வந்திருந்தா (ஒரு பிரபலம்) இவர பாத்திருக்கலாம். ஒருமணிநேரம் இருந்தார். எங்கிட்டே வந்தவங்களுக்கு நல்லதே பண்ணியிருக்கேன்”….இப்படி…..விடைபெறும்போது நான் எழுந்து வெளியே வந்துவிட்டேன். அவரும் என்னை கண்டுகொள்ளவில்லை!

இப்படி என் ‘ஸ்வாமி தரிசனம்’ இனிதே நடந்தேறியது!

–00ஓ00–

Image may contain: 3 people, people standing, outdoor and text

ரோஷன் ஸேட், மேக்கப்மென் ஜான்ஸன், லீலா நாயுடுவுடன் நான். படப்பிடிப்பின்போது.

பலாப்பழ (இலை) அப்பம்! – பாரதி மணி


(வீட்டில் வாழையிலை ரெடியாக இல்லாததால் குழந்தைகளுக்கு பலாப்பழ மினி இட்லி!)

பெங்களூர் வந்ததுமே ரஹேஜா ரெஸிடென்சி காலனி பழக்காரரிடம் வாரம் இருமுறை — நிச்சயமாக ஒரு முறை — மடிவாலாவிலிருந்து ஒரு பலாப்பழம் கொண்டுவரவேண்டுமென்று தீர்மானமாகச்சொல்லிவிட்டேன். குடும்ப வாகோ என்னவோ எனக்கும், என் குழந்தைகளுக்கும், குழந்தைகளின் குழந்தைகளுக்கும் பலாப்பழம் உசிர்! In my family, there is no case or worry of “ரெண்டுநாள் முன்னாடி நாலு சுளை சாப்ட்டான்…..பாவம்! பாத்ரூமிலியே கெடக்கான்!”…..மூச்!….. பழத்திலிருந்து சுளையெடுத்து பாத்திரத்தில் போடுமுன்பே பாதி ஏனம் காலி! இதுவும் ஒரு கொடுப்பினை தான்!

இன்று விடியலில் மகளுக்கே தெரியாமல் அரைமணி நேரத்துக்குள் செய்துமுடித்துவிட்டேன். இல்லாவிட்டால், ஞாயிறு ப்ரேக்ஃபாஸ்ட் வெளியில் என்று கிளம்பிவிடுவார்கள்! சொல்லப்போனால் இது இட்லி வகையல்ல. இலையப்பம். விடியற்காலை வாழையிலைக்கு எங்கே போவது? சரி….குழந்தைகளுக்குப்பிடித்த மினி இட்லியாக மாற்று!

நான் ருசி பார்ப்பதற்கு முன்பே இரண்டு ஈடு இட்லி வைத்திருந்த பாத்திரம் காலி! இதல்லவோ சந்தோஷம்!

இங்கே வரும் நண்பர்கள் ‘எங்கே ரெஸிப்பி?’ என்று பிய்த்தெடுக்கிறார்கள். அவர்கள் கவனத்துக்காக இதோ::

செய்முறை::

ஒரு கப் ஊறவைத்த அரிசி… பச்சை or புழுங்கல்….எங்க ஊர் சம்பா அரிசி உத்தமம்.
ஒன்றரை கப் வெல்லம்.
சுமார் 20 பலாச்சுளைகள். கூடுதலும் இருக்கலாம்,.
அரை மூடி தேங்காய் துருவியது.
ஏலக்காய் பொடி/ சுக்கு சேர்க்கலாம். ஆனால் பலாப்பழ வாசனையில் எடுபடாது!
ஒரு சிட்டிகை உப்பு;

இவைகளை மிக்ஸியில் ஒன்றிரண்டாக (அடைக்கு அரைப்பது போல்) அரைத்துக்கொள்ளவும். நாக்கு அதிகமுள்ளவர்கள் கொஞ்சமாக நெய் வைத்து முந்திரி, கிஸ்மிஸை பொன்போல வறுத்தும் சேர்த்துக்கொள்ளலாம்.

அலம்பித்துடைத்த வாழையிலையில் இரண்டு கரண்டி மாவை வைத்து அதை சுருட்டி ஒவ்வொன்றாக இட்லிப்பாத்திரத்தில் மேலுக்கு மேல் வைத்து மூடி பத்து நிமிடங்கள் வேகவைத்து இறக்கவும்.

இலை வெந்த வாசனையோடு சூடான பலாப்பழ (இலை) அப்பம் ரெடி! இரண்டு மூன்று அப்படியே உள்ளுக்குப்போய் விடும். காலை உணவாக சாப்பிடுவதென்றால் கூட மாங்காய்த்தொக்கோ, கட் (கல்யாண) மாங்காய் ஊறுகாயோ உசிதம்!

இன்று மதியம் மெனு: சக்கக்கொட்டை கூட்டு!

எனக்கு ஆர்டர்: “Thatha! Can you please make the Jackfruit Appam tomorrow also?

Sweet Corn Koottu ஸ்வீட் கார்ன் கூட்டு! – கலியுக நளன் பாரதி மணி


எங்கள் நாஞ்சில்நாடு மூன்றுபோகம் நெல் விளையும் பூமி என்பதால், சின்னவயதில் சோளக்கொண்டை பார்த்ததேயில்லை! வடசேரி கனகமூலம் சந்தைக்கும் வராது! தில்லிபோய்த்தான் தணலில் சுட்டு விற்கும் ‘புட்டா’ சாப்பிட்டிருக்கிறேன்.

இன்று ஃப்ரிஜ்ஜில் எப்போதோ வாங்கிய ஒரு ஸ்வீட் கார்ன் முழித்துக்கொண்டிருந்தது. சரி…….வட இந்திய சப்ஜியாக மாற்றுவதற்கு பதில் இதை ஒரு கூட்டாக்குவோமேயென்று தோன்றியது இது தான் முதல்தடவை. ”எங்க வீட்டில் நாங்க எப்பவும் செய்வமே!” என்று சொல்பவர்கள் மோதி மாதிரி 52” நெஞ்சை நிமிர்த்தி காட்டிக்கொள்ளலாம்! உங்களோடு நான் சேர்ந்துகொள்கிறேன்!

சார்!….ரெசிப்பி…ரெசிப்பி!” என்று கேட்பவர்களுக்கு ஒரு கண்டிஷன்! இன்று மாலையே பழமுதிர்சோலை போய் ஸ்வீட் கார்ன் வாங்கி நாளை காலை இதை செய்துவிடவேண்டும்!

என்னிடமிருந்தது ஒரு சோளக்கொண்டை தான்! அதை பூராவும் உதிர்த்துக் கொள்ளுங்கள். 2 தக்காளியைப்பொடியாக நறுக்கிக்கொண்டு ஒரு இணுக்கு கறிவேப்பிலை, தேவையான அளவு உப்பு, மஞ்சள்பொடி, ஒரு தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து குக்கரில் நன்றாக வேகவிடவும்.

அரைமூடித்தேங்காய், 3 மி. வற்றல், 1 தேக்கரண்டி ஜீரகம் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்து எடுத்த விழுதை வெந்த சோளத்தோடு கலக்கி கொதிக்கவிடவும்.

தாளிப்புக்கு:: 2 தேக்கரண்டி Dessicated coconut அல்லது தேங்காய்த்துருவல், ஒரு தேக்கரண்டி வீதம் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கடுகு, ஒரு இணுக்கு கறிவேப்பிலை இவற்றை கருகாமல் பொன்னிறத்தில் வறுத்து அதன் தலையில் கொட்டவும்!

தயார்!…..மேலே இருக்கும் ஸ்வீட் கார்ன் கூட்டு!

Bharati Mani

அம்மா(உணவகம்)ன்னா சும்மாவா! – பாரதி மணி


Amma Pongal

ஏழையையும் உலக அழகியாக மாற்றிவிடலாம்!……..தேவை..விஷயம் தெரிந்த ஒரு மேக்கப் நிபுணர்!

இங்கே இருப்பது அம்மா உணவகத்தில் ரூ.5 க்கு வாங்கிய ஏழைப்பொங்கல் என்றால் நம்புவது கொஞ்சம் சிரமமாக இருக்கும். ஆனால் அது தான் உண்மை! இதை ’5 நட்சத்திரப்’ பொங்கலாக மாற்ற நான் உபயோகித்த மேக்கப் சாமான்கள்:

1. நெய் 2 தேக்கரண்டி
2. நல்லமிளகு 1 தேக்கரண்டி
3. ஜீரகம் 1 தேக்கரண்டி
4. முந்திரி 5
5. கறிவேப்பிலை 2 இணுக்கு
6. இஞ்சி சின்னத்துண்டு

கடாயில் நெய் விட்டு எல்லாவற்றையும் (பொன்னிறமாக) வறுத்துக்கொண்டு அதோடு கால் கப் தண்ணீர் சேர்த்து இரண்டு நிமிடங்கள் கொதிக்கவிடவும். அதோடு அம்மா பொங்கலைப்போட்டு கிளறி இறக்கவும்.

MMKR

With these value additions, the quantity of Pongal is equal to two plates of any other உயர்தர சைவ உணவு Bhavans in Chennai. அம்மா உணவகம் போல சுத்தமான முறையில் தலைக்கும் கைகளுக்கும் உறை போட்டுக்கொண்டு பளீரென்ற பாத்திரங்களில் வேறு எங்கும் தயாரிக்கப்படுவதில்லை! மைக்கேல் மதனகாமராஜன் படத்தில் வருவது போல “கக்கத்தை சொறிந்துகொண்டுதான்’ கரண்டி பிடிக்கிறார்கள்!

VAT இல்லாமலே ஐந்து ரூபாய் பொங்கல் நூறு ரூபாய் பொங்கலாகிறது!

பி.கு:: இது சத்தியமாக தமிழக அரசு வெளியிடும் விளம்பரம் அல்ல!! இதை எழுதிய எனக்கு ஒரு ‘விலையில்லா’ பொங்கல் கூட தரப்படவில்லை என்பதையும் இந்த நேரத்தில் ஆணித்தரமாக சுட்டிக்காட்ட விரும்புகிறேன்!

Bharati Mani