Daily Archives: January 9, 2018

7-அனுமன் மகிமை – இந்திரா சௌந்தர்ராஜன்


7

அந்த வழக்கறிஞர் அடுத்து சொன்ன விஷயம் உண்மையில் என்னை ஒரு உலுக்கு உலுக்கிவிட்டது. எந்தக் கணவன் அந்தப் பெண்ணிடம் இயற்கைக்கு மாறாக நடந்துகொண்டு, அந்தப் பெண்ணையும் பாடாய்ப்படுத்தி விவாகரத்துபெறக் காரணமானானோ அதே நபர், விவாகரத்துக்குப் பிறகு மறுமணம் புரிந்துகொண்டு வாழ்ந்த அந்தப் பெண்ணின் வீட்டுக்கே கார் டிரைவராக வந்து வேலைக்குச் சேர்ந்ததுதான் விந்தை!

டிரைவராக வந்தவன்தான் தன் மனைவியின் முன்னாள் கணவன் என்பது அப்பெண்ணின் கணவனுக்கு முதலில் தெரியாது. தெரியவரவும், அவனே வேறிடம் பார்த்துக்கொண்டு போய் விட்டான். போகும்முன் அவன் அந்தப் பெண்ணையும் அவளின் இரண்டு குழந்தைகளையும் பார்த்த பார்வையில் அவ்வளவு பரிதாபம்.

காலம் அனுமன் வடிவில் அந்தப் பெண்ணுக்கு கருணை காட்டிவிட்டது. அவனையோ நடுத்தெருவுக்குக் கொண்டுசென்றுவிட்டது. இது ஒரு பக்தி அனுபவம் என்றால், நாமக்கல் ஆஞ்சனேயர் கோவிலை மையமாக வைத்த ஒரு பக்தி அனுபவம்- எது பக்தி என்பதற்கு இலக்கணமானது. முன்னதாக நாமக்கல் குறித்தும் அந்த ஆஞ்சனேயர் குறித்தும் தெரிந்துகொள்வோம்.

இன்று நாமக்கல் நகரம் பெரும் கல்விச் சிறப்புடைய நகரமாக விளங்கி வருகிறது. வருடா வருடம் பத்தாம் வகுப்பு தேர்விலும், +2 தேர்விலும் இந்த நகரத்துப் பள்ளிகளில் இருந்து பலர் எப்படியோ முதலிடத்தையும் இரண்டாவது இடத்தையும் பெற்று வருவதைப் பார்க்கிறோம். நாமக்கல் கல்வியில் இப்படி சிறந்து விளங்கக் காரணமே அந்நகரின் ஆன்மாவாகத் திகழும் ஆஞ்சனேயர் ஆலயம்தான் என்றால் மிகையே கிடையாது.

அந்த ஆஞ்சனேயரை வெகு தொலைவில் இருந்தும்கூட நெஞ்சு நிரம்ப சேவிக்கலாம். சரியாக தரிசனம் செய்ய முடியவில்லையே என்று வருத்தப்படத் தேவையே இல்லை. காரணம், ஆஞ்சனேயரின் நெடிதுயர்ந்த பதினெட்டு அடிக்கும் மேலான உயரமும் கம்பீரமும்தான்… இங்கே அனுமன் சந்நிதிக்கு மேல் கூரை கிடையாது. இங்கே என்றில்லை… பெரும்பாலான இடங்களில் அனுமன் சிரத்துக்குமேல் கோபுரக்கூரைக்கு இடமில்லை. அதற்கு அவன் அனுமதி அளிக்கவில்லை என்று கூறுவார்கள். என்ன காரணம் என்று சிந்தித்துப்பார்த்தால், அங்கெல்லாம் அவன் விண்ணுக்கும் மண்ணுக்குமாய் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறான் என்பது ஐதீகம்.

விஸ்வரூபத்தை கூரை கொண்டு தடுப்பதோ அடக்குவதோ கூடாது என்பது ஒரு காரணம். அடுத்து அனுமன் விண்ணில் தெரியும் நட்சத்திரக்கூட்டங்களைப் பார்த்தபடி ராமநாமம் ஜெபித்தபடி இருக்கிறான். பெரும் மழை பெய்யும்போது அந்த மழைநீரை அவன் அபிஷேகமாகக் கருதுகிறான். இப்படி பல காரண காரியங்கள் விஸ்வரூப ஆஞ்சனேயன் பின்னால் உள்ளன.

இப்படிப்பட்ட விஸ்வரூப ஆஞ்சனேயனை நாம் தரிசிக்கும்போது நம் மனதிலும் ஒரு பெரும் பரவச உணர்ச்சி விஸ்வரூபமெடுக்கும்; பெரும் சிந்தனையும் தோன்றும்.

அனுமனிடம் குரங்கின் தன்மைகள் உண்டு. முகத்திலும் வாலிலும் அவன் குரங்கினத்தவன் என்று அறியலாம். குரங்கு தாவும் இயல்புடையது. அதேசமயம் விலங்கினமாக இருந்தாலும் காய், கனி, பழம் என்றுதான் உண்ணும். எக்காரணம் கொண்டும் மாமிசத்தை சாப்பிடாது.

இப்படிப்பட்ட குரங்கை தாவும் மனதுக்கு சான்றோர்கள் ஒப்பிடுவார்கள். இதை வைத்து “மனம் ஒரு குரங்கு‘ என்கிற சொலவடையும் தோன்றியது. இப்படிப்பட்ட குரங்கு மனதை தியானத்தால் மட்டுமே கட்டுப்படுத்தி அடக்கமுடியும். ஆனால் அது அவ்வளவு சுலபமில்லை. நாம் தியானம் செய்யலாம் என்று அமரும்போது தான், நமக்குள் அடங்கிக்கிடந்த அத்தனை எண்ணங் களும் ஆர்ப்பரித்து எழுந்து வரிசைகட்டி வெளியேறும். நாமும் சில நிமிடங்கள்கூட தியானம் புரிய இயலாமல் அதைவிட்டு விலகி, நம்மால்  முடியாது என்கிற முடிவினுக்கும் வந்துவிடுவோம். ஆனால் முனைந்து தியானம் செய்து அதில் வெற்றி பெறுகிறவர்களைப் பார்த்தாலோ அவர்கள் முகத்தில் ஒரு பெரும் பொலிவு இருப்பது நன்கு தெரியும். அவர்களிடம் மனோ சக்தியும் மிகுந்திருக்கும்.

இத்தனை விளக்கங்களை இங்கே கூறக் காரணம் இருக்கி றது. அனுமன் வடிவில் அலைபாயும் குரங்கினத்தவனாக இருப்பினும், மனதளவில் அவன் ஒரு மாபெரும் யோகி. மிகுந்த கட்டுப்பாடும் தன்னடக்கமும் உடையவன். அதுதான் அவனது அளப்பரிய சக்திக்குக் காரணம். அவனை வணங்குபவர்க்கும் இந்த சக்தி கிடைக்கிறது என்பதுதான் அனுமன் வழிபாட்டில் உள்ள சூட்சுமமான விஷயம். நாமக்கல்லிலும் இதுதான் நடக்கிறது. அதனால்தான் அங்கே பிள்ளைகள் மனம் ஒருமித்துப் படித்து கல்வியில் பெரும் வெற்றிபெற்றிட முடிகிறது. நாமக்கல் நகரம் முழுக்கவே அனுமனின் ஞானப்பேரலை பரவிக்கிடக்கிறது.

அதுமட்டுமல்ல; நாமக்கல் நகரின் மையத்தில் ஒரு பெரும் குன்று உள்ளது. எப்போதுமே குன்றுள்ள இடத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெரும் சக்தி இயற்கையாகக் குடிகொண்டிருக்கும். அதற்கு குன்றினுடைய பிரமிடு போன்ற வடிவம் ஒரு காரணம்.

பிரமிடுகள் தங்களுக்குள் சக்தியை வெகுவாகக் கொண்டிருப்பவை. மிக விஞ்ஞானப் பூர்வமானவை. ஒரு பிரமிடு வடிவ பெட்டிக்குள் நானும் சில பரிசோதனைகளைச் செய்துபார்த்தேன். ஒரு பிரமிட் வடிவ பிளாஸ்டிக் பாக்ஸ்- கையில் அடங்கிவிடக் கூடியது. அதில் ஒரு தக்காளிப்பழம், ஒரு பச்சை மிளகாய், ஒரு நெல்லிக்காய் என்று மூன்றை வைத்து மூடினேன். ஒரு தட்டையான பிளாஸ்டிக் டப்பாவில் இதே மூன்றை வைத்து மூடினேன். சரியாக ஒரு வாரம் கழித்துத் திறந்து பார்த்தேன். முன்னதாக ஒரு தாம்பாளத்தில் பச்சை மிளகாயைப் பரப்பி வைத்து, அதன் நடுவில் பிரமிடு வடிவ டப்பாவை வைத்தேன். இன்னொரு தாம்பாளத்தில் அதேபோல பச்சைமிளகாயைப் பரப்பி வைத்து, தட்டை வடிவ டப்பாவை வைத்திருந்தேன். இந்த தட்டை வடிவ டப்பாவைத் திறந்து பார்த்தபோது, தக்காளி சுருக்கம் விழுந்து கன்றிப் போயிருந்தது. பச்சை மிளகாய் சிவப்பாக மாறியிருந்தது. நெல்லிக்காயும் நிறம் மாறியிருந்தது. அதுமட்டுமல்ல; தட்டை வடிவ டப்பா வைக்கப்பட்டிருந்த தாம்பாளத்திலுள்ள பச்சை மிளகாய்கள் அவ்வளவும் பழுத்து சிவப்பு நிறத்துக்கு மாறியிருந்தன. இது இயல்பாக நடப்பதுதான். தட்பவெப்பநிலை காரணமாக இப்படித்தான் நடக்கும். ஆனால் பிரமிடு வடிவ டப்பாவுக்குள் இருந்த தக்காளி, மிளகாய், நெல்லிக்காய் மூன்றும் அப்படியே இருந்தன. அந்த பிரமிடை சுற்றி வெளியே தாம்பாளத்தில் இருந்த பச்சை மிளகாய்களும் பெருமளவு பச்சையாகவே இருந்தன. மொத்தத்தில் பிரமிடு வடிவம் உள்ளேயும், வெளிப்புறத்திலும்கூட தன் ஆற்றலால் தட்பவெப்ப நிலையிலிருந்து பொருட்களுக்கு புத்துணர்ச்சி தருவதை உணரமுடிந்தது.

ஒரு கையளவுள்ள பிரமிடு டப்பாவைச் சுற்றியே இப்படியென்றால், பெரும் மலையைச் சுற்றி அதன் ஆற்றல் எந்த அளவு இருக்குமென்று எண்ணிப் பாருங்கள்; அதிலும் நாமக்கல் குன்று நகரின் மையப்புள்ளியாக உள்ளது. திருச்சியிலும் மலைக்கோட்டை மையத்தில் உள்ளது. திண்டுக்கல்லிலும் மையத்தில் உள்ளது. இப்படி நிறைய உதாரணங்களை அடுக்கலாம். இதுபோன்ற மலைகளைக் கொண்ட ஒரு ஊர்கூட வரலாற்றில் இடம் பெறாமல் போகவில்லை. இன்றளவும் சுறுசுறுப்பான செயல்பாடுகள் அந்த மலை நகரங்களில் நடந்தபடியேதான் இருக்கின்றன. இதற்குப் பின்னால் ஆய்வுக்குரிய பிரமிட் சக்தி இருக்கிறது என்பது ஆய்வாளர்கள் நம்பிக்கை.

அந்த நம்பிக்கை நாமக்கல்லில் பளிச்சென தெரிகிறது. நாமக்கல் என்னும் வார்த்தையை சிலர் “நாமம் போட்ட கல்‘ என்று தவறாக விளக்குவார்கள். உண்மையில் “நாமம் விளங்கக் கல்‘ என்பதே சரியான பொருளாகும். அதாவது பெயர் எடுக்கும் விதமாகவும் உன் பெயர் மதிக்கப்படும் விதமாகவும் நன்றாகப் படி என்கிறது அந்தப் பெயர். அதை கோடிக்கணக்கானோர் திரும்பத்திரும்ப சொல்லும் போது அதன் சக்தி அலையாக உருவாகி பெரும் சக்தியாக மாறுகிறது. இதுவும்கூட நாமக்கல் பெரும் கல்வி நகரமாகத் திகழக் காரணமாகும்.

இப்படிப்பட்ட நாமக்கல்லில் அந்த மலையின்கீழ் குடைவரைக் கோவிலாக உள்ள நரசிம்மர் ஆலயமும் நாமகிரித் தாயார் சந்நிதியும் பெரும் கீர்த்தி பெற்றதாகும்.

வைணவ ஆலயங்களில் நரசிம்மர் சந்நிதி தனித்த தன்மைகள் பல உடையது. அங்கே மிக கவனமாகவும் ஆசாரமாகவும் இருக்கவேண்டும். நரசிம்மம் பெரும் கோபமுடையது. அதனால்தான், அதனால் ஹிரண்யனை வதம் செய்ய முடிந்தது. அடுத்து நரசிம்மமூர்த்தி ஒரு அதிசயம். மனித உடம்பு, சிங்கத்தின் தலை என்கிற இணைப்பால் மட்டும் அதிசயமானதல்ல; நரசிம்மம் புத்திசாலித்தனத்தின் உச்சம். அந்த புத்திசாலித்தனத்தை நாம் எங்கும் எந்த விஷயத்திலும் கேள்விப்பட்டிருக்க முடியாது.

அதை நுணுக்கமாக அணுகிப் பார்த்தால் தான் புரிந்துகொள்ள முடியும். நரசிம்மாவ தாரத்துக்குக் காரணமே ஹிரண்யன் என்னும் அசுரகுணம் கொண்ட அரசன்தான். இவன் தன்னையே கடவுளாக அறிவிக்கிறான். அதற்குக் காரணம் எவராலும் எதனாலும் இரவிலும் பகலிலும் அவனுக்கு அழிவில்லை என்பதுதான்.

இந்த உலகில் பிறப்பு- இறப்பைக் கடந்து நித்ய சூரியனாக ஜொலிப்பவன் இறைவன் மட்டுமே. மற்ற யாராக- எதுவாக இருந்தாலும் அழிந்தே தீரவேண்டும். இது உயிர்களுக்கான விதிமட்டுமல்ல; அண்டசராசரங்களுக்கும் இந்த விதி பொருந்தும்.

இந்த உலகமும் உயிர்களும் காலங்காலமாக மாற்றங்களைக் கண்டுகொண்டேதான் வருகின்றன. இன்று கடலோரம் உள்ள நகரான கன்னியாகுமரி, ஒரு பெரும் ஊழி ஏற்படும்முன் கடற்கரையிலிருந்து நூறு கிலோமீட்டர் அப்பாலுள்ள நகரமாக இருந்தது. ஊழியால் அந்த நூறு கிலோமீட்டர் நிலப்பரப்பும் கடலுக்குள் சென்றுவிட்டது. அதேபோல குஜராத் மாநிலத்து துவாரகை எனும் கண்ணன் ஆட்சி செய்த நகரமும் கடல்கொண்ட நகரமாகிவிட்டது. கடலுக்குள் இன்றும் துவாரகை அரண்மனைக் கட்டடம் இடிபாடுகளுடன் இருப்பதை அகழ்வாராய்ச்சி செய்வோர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதிலிருந்து உலகமும் உயிர்களும் இன்று இருப்பதுபோல நாளை இருப்பதில்லை என்பது நிரூபணமாகி, மாற்றம் ஒன்றே மாறாதது என்பதும் தெளிவாகிறது. ஆனா லும் இந்த மாற்றம் இறைவனிடம் மட்டும் மாறாமல் அப்படியே இருக்கிறது. இறைவனை மேலான சக்தி என்றும், மாறாத சக்தி என்றும், உலகின் ஒரே இயக்க சக்தி என்றும் பலவாறு கூறுவார்கள். “இந்த சக்தி நான்தான்’ என்று ஹிரண்யன் அறிவித்தான். “எனக்கு அழிவில்லை. என்னை அழிப்பாருமில்லை’ என்று ஆர்ப்பரித்தான். அத்துடன் நின்றா னில்லை. சிவபூஜை, விஷ்ணு பூஜையைத் தடை செய்தான். கோவில்களில் தன் உருவத்தைப் பிரதிஷ்டை செய்து பூஜிக்கும்படி கட்டளையிட்டான். தேவலோகத்தை தனக்கு அடிமையாக்கினான். இந்திரனை அழைத்து தன் கால் பிடித்துவிடச் சொன்னான்.

சப்தரிஷிகளை- நவநாயகர்களை- சித்தர் பெருமக்களை- மற்றுமுள்ள முப்பத்து முக்கோடி தேவர்களை- இவர்கள் தவிர மேலுமுள்ள கின்னரர், கிம்புருடர், யவ்வனர், யட்சர், கந்தர்வர், நாகர் என்று சகல இனத்த வரையும் தனக்குக் கட்டுப்பட்டவர்கள் என்று அறிவித்து அவர்களைப் படாதபாடு படுத்தினான்.

இவ்வளவுக்கும் காரணம் ஒன்றே ஒன்றுதான். பிரம்மதேவனிடம் அவன் பெற்ற புத்திசாலித்தனமான வரம்.

அந்த வரம்தான் வரங்களிலெல்லாம் தலையாய வரமாக இன்றும் எல்லாராலும் கருதப்படுகிறது. காரணம், அதைவிட புத்திசாலித்தனமான ஒரு வரத்தை அதற்கு முன்பும் அதற்குப் பின்பும்கூட ஒருவரும் கேட்டதில்லை.

அது என்ன வரம்?

“இந்தப் பூவுலகில் மட்டுமல்ல; விண்ணில் இருக்கும் ஈரேழு பதினான்கு உலகங்களிலும் எனக்கு மரணம் நேரக்கூடாது.

உலகில் பிறந்த எந்த உயிர்களாலும்- அதாவது பறப்பன, நடப்பன, ஊர்வன, நீந்துவன என்று எதனாலும் மரணம் நேரக்கூடாது.

அடுத்து பஞ்ச பூதங்களாலும், சூரிய சந்திரர்களாலும், ஏனைய தேவர்களாலும், இப்போதுள்ள மும்மூர்த்திகளாலும் மரணம் நேரக்கூடாது.

இதுமட்டுமின்றி தேவர்கள் நீங்கலாக உள்ள எவராலும், அதி தீய நஞ்சாலும், அவ்வளவு ஏன், ஆண்- பெண்- அலி என்று மூன்று இனம் சார்ந்தவராலும்கூட மரணம் நேரக்கூடாது’ என்று அவன் கேட்டு முடிக்கவும் வரமளிக்க வேண்டிய பிரம்மாவுக்கே கண்ணைக் கட்டிவிட்டது. இனி புதிதாக ஒரு உயிர் தோன்றினால்தான் என்னுமளவு அவ்வளவு பேரையும் குறிப்பிட்டு இவர்கள் யாராலும் மரணம் நேரக்கூடாது என்றவன், இறுதியாய்க் கேட்டதுதான் புத்திசாலித்தனத்தின் உச்சம். “நானாய் அழைத்தாலன்றி மரணம் என்னைத் திரும்பிப் பார்க்கக் கூடாது’ என்றவன், “இரவு- பகல் எனும் இருகால அளவிலும்கூட நிகழக்கூடாது’ என்றும் கேட்டு வாங்கிக் கொண்டான்.

பிரம்மாவும் “ததாஸ்து’ என்று கூறி மறைந்தார். அவருக்கு வேறு வழி தெரியவில்லை. “வரம் கேள்; தருகிறேன்’ என்று கூறிவிட்டு, “இப்படியெல்லாம் கேட்டால் தரமாட்டேன்’ என்றெல்லாம் அவரால் கூறவும் முடியாது. கூறினால் அவர் பிரம்மா கிடையாது.

அதன்பின் ஹிரண்யன் பெற்ற வரத்தைக் கேள்விப்பட்டு மட்டுமல்ல; ஹிரண்யன் வசம் சிக்கி உலகம் பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல.

இப்படிப்பட்ட ஹிரண்யனை வதம்செய்ய வழியே இல்லையென்ற நிலையில் வந்ததுதான் நரசிம்மம். இந்த நரசிம்மம்தான் நாமக்கல்லில் அனுமன் அனுதினமும் வணங்கிவரும் நிலையில் கோவில் கொண்டுள்ளது.

இந்த நரசிம்மம் எப்படி ஹிரண்யவதம் புரிந்தது- இதற்கும் அனுமனுக்கும் உள்ள ஆத்மதொடர்பு எப்படிப்பட்டது என்பதைப் பார்ப்போம்.

(தொடரும்)

Advertisements