Daily Archives: January 3, 2018

4-அனுமன் மகிமை – இந்திரா சௌந்தர்ராஜன்


 

4
இந்திரா சௌந்தர்ராஜன்

 

ராமஜெயம் அம்மாளுக்கு சொல்லவேண்டியதைச் சொல்லிவிட்டு உபாசகர் அடுத்து புறப்பட் டுச் சென்றது- அந்தக் கள்வன் அடிபட்டுக் கிடந்த மருத்துவமனைக்குதான்.

அவர் அங்கு அவனைப் பார்த்தபோது, காலிலும் கையிலும் பெரிய கட்டு. தலையிலும் கட்டு! உபாசகர் அவனை நெருங்கி நின்றபோது மருத்துவர் வந்து பரிசோதனை செய்து முடித்திருந்தார். உபாசகர் மருத்துவரிடம் அவன் நிலை குறித்துக் கேட்டார்.

டாக்டரும், “உயிருக்கு ஆபத்தில்லை… ஆனால் பிழைத்தாலும் புண்ணியமில்லை. ஏனென்றால் ஒரு காலும் கையும் இனி சுத்தமாகச் செயல்படாது. அந்த அளவுக்கு எலும்புகள் நொறுங்கிவிட்டன. சதையும் சேதமாகிவிட்டது” என்றார்.

அது அரைமயக்கத்திலிருந்த அந்தக் கள்வனின் காதிலும் விழுந்தது. அவன் கண்களிலிருந்து கண்ணீர் வழிய ஆரம்பித்தது. அது உபாசகரை நெகிழச் செய்தது. அருகே சென்று அவன் கண்ணீரைத் துடைத்தார். அவனும் கஷ்டப்பட்டு பேசத் தொடங்கினான்.

“சாமீ…”

“தைரியமா இருப்பா… நீ பூரண குணமாயிடுவே…”

“குணமாயி என்ன சாமி புண்ணியம். கை- கால் முடமா போய் நான் எப்படி சாமி வாழ்வேன்?’

“இதை திருடும்போது யோசிச்சிருக்கலாமேப்பா…”

“தப்புதான் சாமி… எந்தக் கையால திருடினேனோ அந்தக் கை போயிடிச்சு… எந்தக் காலால் தப்பிச்சு ஓடினேனோ அந்தக் காலும் போயிடிச்சு. எனக்கு நல்லா வேணும் சாமி.”

“இதை நீ மனசார சொல்றியா?”

“என்ன சாமி அப்படி சொல்லிட்டீங்க.. இனியும் நான் திருந்தலைன்னா அந்த ஆஞ்சனேயர் என்னை சும்மா விடமாட்டார் சாமி…”

“ஆஞ்சனேயரா…?”

“ஆமாம் சாமி. அவர்தானே என்னைத் துரத்தினது?”

“உன்னைத் துரத்தின அந்த மலைக்குரங்கை சொல்றியா?”

“இல்ல சாமி. என்னைத் துரத்தினது ஆஞ்சனேயர் சாமி.”

“உன் கண்ணுக்கு அந்தக் குரங்கு அப்படி தெரிஞ்சதாக்கும்?”

“இல்ல சாமி… ஆஞ்சனேயரே கைல கதாயுதத்தோடு என்னைப் பிடிக்க எட்டிப்பாஞ்சாரு. நான் மிரண்டுபோய்தான் ஓடினேன். கடைசில லாரில அடிபட்டு இப்படி ஆகிட்டேன். நான் கீழவிழுந்து துடிச்சப்பகூட என் பக்கத்துலதான் இருந்தாரு. அவர் ஒருத்தரைப் பார்த்தாரு. அடுத்த நிமிஷம் அவர் என்னைத் தூக்கிட்டுவந்து இங்க சேர்த்துட்டாரு…”

அந்தத் திருடன் சொல்லச் சொல்ல உபாசகருக்கு கண்களில் கண்ணீர் திரண்டது. திருடனுக்கு ஆச்சரியம்!

“நீங்க ஏன் சாமி அழுவறீங்க?”

“நீ ரொம்ப கொடுத்து வெச்சவன்பா…”

“நானா… படுபாவியான நானா கொடுத்து வெச்சவன்?”

“ஆமாப்பா… உனக்கு அனுமனோட தரிசனம் கிடைச்சிடிச்சே?”

“ஓ, நீங்க அதைச் சொல்றீங்களா?”

“ஆமாப்பா… நான் காலகாலமா அவனை உபாசிக்கிறேன். ஆனா எனக்கு இன்னும் அவன் நேர்ல தரிசனம் தரலை. ஆனா உனக்குத் தந்துட்டானே…”

“சாமி… நான் ஏன் பொழைச்சேன்னு நினைச்சு அழுதுக்கிட்டிருக்கேன். நீங்களோ என்னை பாக்கியசாலி- கொடுத்து வெச்சவன்கறீங்களே…”

“ஒரு தடவை இல்லப்பா… நூறு தடவை சொல்வேன். நீ கொடுத்து வெச்சவன்தான். அது என்னவோ தெரியல… நேர்வழில ஒரு தேவனா செய்யற  தவத்துக்காக அந்தக் கடவுள் மனமிரங்கி வர்றதைவிட, அசுரனா தப்பு பண்ணும்போது அதைத் தடுக்க சீக்கிரம் வந்துடறான். வைகுண்டத்துல ஜெய விஜயர்கள் எதனால அசுரனா ஜென்மமெடுக்க வரம்கேட்டாங்கன்னு இப்பல்ல புரியுது…”

“ஜெய விஜயரா… அது யார் சாமி?”

“சொல்றேன். இவங்கதான் வைகுண்டத்துல துவார பாலகர்களா வைகுண்ட வாசலை காவல் காக்கறவங்க…”

“அவங்களா அசுரனா பிறக்க வரம் கேட்டாங்க?”

“கேட்க வைக்கப்பட்டாங்க. ஒருநாள் ஒரு மகரிஷி வைகுண்டம் வந்தப்போ, ஸ்ரீமன் நாராயணமூர்த்தி யோக நித்திரையில் இருந்தார். அவரை இப்ப பார்க்க முடியாதுன்னு ரெண்டுபேருமே தடுத்து நிறுத்தினாங்க. அவருக்கோ உடனே கோபம் வந்துடுச்சி. அவங்க அதை அலட்சியப்படுத்தி கேலி செஞ்சாங்க! அவரும் அங்க இருந்து வருத்தமா திரும்பிப் போயிட்டார்.

இது கண்விழிச்ச பெருமாளுக்கு தெரியவரவும், ஜெய விஜயர்கள்மேலே பெருமாளுக்கு கோபம் வந்தது. தன்னைப் பார்க்க வந்த மகரிஷியைத் தடுத்தது பெரிய அகௌரவச் செயல். இதுக்கு தண்டனையா ஏழு ஜென்மத்துக்கு மானிடர்களா பூமியில் பிறந்து வாழ்ந்துட்டு பிறகு என்கிட்ட வந்து சேருங்கன்னுட்டார். அதைக் கேட்ட ஜெய விஜயர்கள் ஏழு ஜென்மமெல்லாம் ரொம்ப அதிகம்னு அழுதாங்களாம். அப்படின்னா மூன்று ஜென்மங்கள் அசுரப் பிறப்பெடுத்து, அதுல என்னை எதிர்த்து, பின்னர் என்னால் வதம் செய்யப்பட்டு என்கிட்ட வந்து சேரலாம். என்னை எதிர்த்து மூன்று பிறப்பா? இல்லை என்னை விரும்பி ஏழு பிறப்பான்னு பெருமாள் கேட்கவும், அவங்க உங்களை எதிர்த்து மூன்று பிறப்போட உங்களை அடையறதே எங்களுக்குப் பெரும் பாக்கியம்னு சொல்லவும், அப்படியே ஆகுகன்னு பெருமாள் சொல்லிட்டார். அதன்பிறகு அவங்க ரெண்டு பேரும் ஹிரண்யன்- ஹிரண்யாட்சனாகவும், இராவணன்- கும்பகர்ணனாகவும், தந்தவக்ரன்- சிசுபாலனாவும் அவதாரமெடுத்து பெருமாளுக்கு எதிரா கச்சை கட்டி, பிறகு பெருமாளாலயே கொல்லப்பட்டு திரும்ப வைகுண்டம் சேர்ந்தனர்னு புராணம் சொல்லுது…”

“இப்ப இந்தக் கதைக்கும் எனக்கும் என்ன சாமி சம்பந்தம்?”

அந்தத் திருடன் உருக்கமாகக் கேட்டான்.

“உனக்கு இன்னுமா புரியல…? நான் தவமா தவமிருக்கேன். ஆனா எனக்கு அனுமன் தரிசனம் கிடைக்கல. ஆனா நீயோ திருடன். உனக்கு கிடைச்சிடிச்சு. இதைத்தான் நல்லதுக்கு காலமில்லைன்னு சொல்றாங்களோ?” என்று கேட்டு பெருமூச்சுவிட்டார்.

“சாமி, நீங்க இவ்வளவு தூரம் புராணக்கதை எல்லாம் சொன்ன பிறகுதான் நான் பாக்கியசாலின்னு புரியுது. அது எப்படி சாமி ஒரு திருடனுக்குப் போய் சாமி காட்சி கொடுத்தாரு.?”

“அங்கதான்பா நீ கொடுத்து வெச்சிருக்கே. நீ திருடினது ஒரு பக்தையோட சங்கிலியை. அவங்கள தீண்டின புண்ணியம் உனக்கு சாமி தரிசனமாயிருக்கு. அதுமட்டுமல்ல; இனி நீ விரும்பினாலும் திருட முடியாது. நீ நல்லபடியா வாழ்ந்தே தீரணும்.

ஒரு மனுஷனுக்கு நல்ல புத்தி சொல்லி திருத்துவது  ஒரு விதம்னா… இப்படி நடந்து திருந்தறது இன்னொரு விதம்னு இப்ப நான் நினைக்கறேன்.”

“சாமி, அப்படின்னா என் கை- காலை அந்த சாமி திரும்பத் தருமா…?”

“கேட்டுப்பார்… இனிமே இந்தக் கை காலால நல்லதை மட்டுமே செய்வேன்னு பிரார்த்தனை செய்துக்கோ.

உனக்கு நிச்சயம் நல்லது நடக்கும்.”

“இப்பவே பிரார்த்தனை பண்ணிக்கிறேன் சாமி. நான் குணமாகி எழுந்துட்டா அந்த அனுமனுக்கு இந்தக் கையாலயே கோவில் கட்டுவேன். அந்தக் கோவில்ல தினசரி ராமநாம பஜனை நடக்கும்படி செய்வேன். இது சத்தியம்…” என்று மிகவே உணர்ச்சிவயப்பட்டான்.

அதன்பின் அவன் விரும்பியபடியே பூரணமாக குணமானதுதான் விந்தை. நடக்கவே முடியாது என்று சொன்ன மருத்துவரே அவன் நடக்கப்போவதை உறுதி செய்தார். உபாசகரை சந்திக்க வந்த ஒரு தொழிலதிபர், அந்தக் கள்வன் திருந்திவிட்டது தெரிந்து அவனுக்கான மருத்துவச் செலவை ஏற்றுக்கொண்டார். ஒரே காரணம்தான்!

அந்தத் திருடன் அனுமனை தரிசித்துவிட்டவன்.

அவன் மனதுக்குள் அனுமனின் திவ்ய சொரூபம் பதிந்துகிடக்கிறது. எனவே அவனுக்குச் செய்வது அனுமனுக்குச் செய்வதாகவே ஆகும் என்று அவர் கருதினார்.

இதைத்தான் விதி என்பது…

வால்மீகிகூட காவியம் படைப்பதற்குமுன்வரை திருடன்தான். பின் ராமாயணம் படைத்தாரே? இந்தத் திருடன் அனுமனைப் பார்த்தான். ஆனால் எங்கேயும் தன்னைப் பற்றி யாரும் பேசிவிடக்கூடாது என்று தன்னை ஒளித்துக் கொண்டான்.

இன்று அந்த உபாசகரும் இல்லை… திருடனும் இல்லை. இருவரும் அமரத்துவம் அடைந்துவிட்டனர். உபாசகர் சிங்கப்பெருமாள் கோவிலில் பலகாலம் வாழ்ந்து அனுமன் திருவடி அடைந்தார்.

அந்தத் திருடன் குணமாகி அனுமனுக்கு கோவில் கட்ட முனைந்தான். ஆனால் அனுமன் கடைசி வரை அதற்கு அனுமதி தரவில்லை. ஒருநாள் அவன் கனவில் தோன்றிய அனுமன் “அடுத்த பிறப்பில் உன் விருப்பத்தை ஈடேற்றுவேன்’ என்று கூறிவிட்டான். இந்த பிறப்பில் ஏன் அனுமதிக்கவில்லை என்கிற கேள்விக்கு பதில் அனுமனுக்கு மட்டுமே தெரியும்! இந்த விவரங்கள் எல்லாம் பல பக்தர்கள் வாயிலாக எனக்குத் தெரியவந்தது. ராமஜெயம் அம்மாளும் இப்போது உயிருடன் இல்லை. ஒரு ராமநவமி நாளன்று அந்தப் பெண்மணி முக்தியடைந்ததாகக் கேள்வி. தாம்பரத்தில் அவர் வசித்து வந்ததாகவும் தகவல்.

அனுமனுடைய மகிமைக்கு அன்றும் இன்றும் எவ்வளவோ சாட்சிகள். இதில் அடுத்து நாம் உணரவிருப்பது செந்தூர ஆஞ்சநேயன் மகிமையை.

இன்று அனுமனுக்கு ஆயிரக்கணக்கில் கோவில்கள் உள்ளன. பல பெருமாள் கோவில்களிலும் உபசந்நிதியாக அனுமன் சந்நிதி உள்ளது. இது போக பிரத்யேகமாக நாமக்கல், சுசீந்திரம், சென்னை நங்கநல்லூர், புதுச்சேரிக்கு அருகில் பஞ்சவடி, ஸ்ரீவைகுண்டம் அருகில் என்று ஏராளமான தனிச் சந்நிதிகள்.

இந்த தனிச் சந்நிதிகளில் தாராபுரம் ஆஞ்சனேயர் கோவிலும், நாமக்கல் ஆஞ்சனேயர் கோவிலும் சரித்திரச்சிறப்பும் உடையவை. புதிதாய்த் தோன்றிய ஆலயங்களில் நங்கநல்லூர், பஞ்சவடி வரிசையில் கோவையில் உள்ள பீளமேடு ஆஞ்சனேயரும் சேர்கிறார். இன்னமும் பல ஆஞ்சனேயர் சந்நிதிகள் பிரசித்தியோடு விளங்கி வருகின்றன.

இங்கெல்லாம் ஆஞ்சனேயருக்கு துளசி மாலை, வடைமாலை, கனிமாலை என்று சாற்றி வழிபாடு செய்வது வழக்கம். இதில் வெண்ணெயும், செந்தூரமும் தனிரகம். வெண்ணெய்க் காப்புக்குப் பின்னாலும், செந்தூரம் சாற்றுவதற்குப் பின்னாலும் நுட்பமான பல உண்மைகள் ஒளிந்துள்ளன.

இதில் செந்தூர ஆஞ்சனேயன் சிறப்பு என்ன என்பதை புராணரீதியாகத் தெரிந்துகொண்டால், செந்தூர ஆஞ்சனேயன் சந்நிதியின் சிறப்பும் நமக்குப் புலனாகிவிடும்.

இந்த செந்தூரச் சிறப்பைத் தெரிந்துகொள்ள சற்று ராமாயண காலத்துக்குள் நுழைவோம்.

ராமனும் சீதையும் வனவாசத்தில் வாழ்ந்து வரும் சமயம், சீதை வனத்திலுள்ள ஆற்றில் குளித்துவிட்டு ஈரம் சொட்டச் சொட்ட வருகிறாள்.

கூந்தலிலிருந்து நீர் வடிந்திட அவள் முகமும் நிலவைப்போல பளிச்சிடுகிறது. எப்போதும் திலகம் தரித்த நிலையில் இருக்கும் அவள் முகத்தில் அப்போது திலகமில்லாத நிலை. அதைப் பார்க்க சீதைக்கு பதட்டமாகிறது. அதாவது வழியிலுள்ள சுனை நீரில் அவள் முகம் பளிச்சிடுகிறது.

திலகமில்லாமல் ஒரு வினாடிகூட இருக்க அவள் மனம் விரும்பவில்லை. குறிப்பாக நெற்றிவகிட்டில் குங்குமம் வைத்துக்கொள்வதால் சுமங்கலித்தன்மையும், கணவனுக்கு நீண்ட ஆயுளும், வீட்டில் நிறைந்த செல்வமும் உண்டாகுமென்பது வகிட்டுத் திலகம் பின்னாலுள்ள ரகசியம்.

அதை குளிக்கும்போதுகூட சீதை பிரிய மனமில்லாது போகிறாள். அப்போது அங்கு வரும் ராமன் அவள் முகம் வாடியதை வைத்தே காரணத்தை அறிந்தவனாக, “சீதை, இப்போதே இங்கேயே உனக்குத் திலகமிடுகிறேன் பார்க்கிறாயா?” என்று திரும்புகிறான். ராமன் நின்ற இடத்திற்கு அருகில் ஒரு சிவப்புநிறப் பாறை. பாதரசமும் கந்தகமும் கலந்த இயற்கை தாதுக்களாலான பாறை… அதன் பொடிதான் செந்தூரம்.

அந்தப் பாறையை தடவியபடி ஓடைநீர் ஓடிக்கொண்டிருந்தது. அந்த நீரால் பாறையை அழுந்தச் சுரண்டிக் குழைக்கவும், செந்தூர அஞ்சனம் மைபோல திரண்டது. உடனேயே அதை சீதையின் நெற்றி வகிட்டில் வைத்த ராமன் அப்படியே அவள் கன்னம், தாடை என்று தடவி அவளுடன் கொஞ்சிக் குலாவத் தொடங்கிவிட்டான். ஏற்கெனவே சீதை நல்ல சிவப்பு… அந்த சிவப்போடு செந்தூரமும் சேர்ந்தால் கேட்கவா வேண்டும்?

இந்த சம்பவத்தை சீதை தன் அசோகவனத் தனிமையில் எண்ணி எண்ணிப் பார்த்து கண்ணீர் சிந்தும் வேளையில்தான், அனுமன் சீதையைக் கண்டு, அண்ணல் ராமன் தந்த கணையாழியைத் தந்து தானொரு ராமதூதன் என்பதை உணர்த்துகிறான்.

இவ்வேளையில் சீதை அனுமனை நன்றாகப் புரிந்துகொண்டுவிட்ட நிலையில், அனுமனிடம் தனக்கு ராமபிரான் ஆசையாக செந்தூரப்பொட்டு  வைத்ததைக் கூறி,  “ஆஞ்சனேயா… அவருடனான இதுபோன்ற நினைவுகள்தான் என்னை உயிரோடு வைத்துள்ளன. இங்கே நான் செந்தூரத்துக்கு எங்கே போவேன். அது இருந்தால் அவரே என் அருகில் இருப்பதுபோல்” என்கிறாள்.

அடுத்த நொடியே சீதைக்கு செந்தூரம் தேடி அனுமனும் புறப்படுகிறான்.

(தொடரும்)

Advertisements