Daily Archives: February 6, 2017

வீட்டுக்கு ஒரு விவசாயி! – கோவை பாலா


p48

விளைச்சல் நிலங்கள் எல்லாம் அடுக்குமாடிகளாக மாறி வருகின்றன. படித்து முடித்ததும், ஃபாரின் போகவேண்டும்…

கைநிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணமே இன்றைய இளைஞர்கள் மத்தியில் வேரூன்றி இருக்கிறது.

பணம் மட்டுமே பிரதானமாக இருக்கும் இன்றைய சூழலில், மெத்தப் படித்திருந்தும் ‘விவசாயமே எங்களின் வாழ்வாதாரம்’ என்ற வரிகளைத் தாரகமந்திரமாகக் கொண்டு இயற்கை விவசாயத்தில், தங்களை முழுமையாக ஈடுபடுத்தி வெற்றி கண்டு வருகின்றனர் கோவை கந்தேகவுண்டன் சாவடியைச் சேர்ந்த தம்பதியான கிருத்திகா – செந்தில்குமார்.

மேலும், பல இளைஞர்களின் கவனத்தைத் தம் பக்கம் திருப்பி விவசாயத்தில் ஈடுபடச் செய்து வருகின்றனர். அவர்களைச் சந்தித்தோம்.

‘படித்துவிட்டு விவசாயம் செய்ய ஆரம்பித்து விட்டீர்களே. நல்ல பெரிய வேலைக்குப் போய் கை நிறைய சம்பாதிக்கலாமே’ என்று எத்தனையோ பேர் கேட்கிறார்கள்.

வேலை என்று போயிருந்தால் மாதம் நாற்பதாயிரம், ஐம்பதாயிரம் என ஊதியம் வாங்கலாம் தான். குழந்தைகளுடன், குடும்பத்துடன் நேரத்தைச் செலவழிக்கக்கூட முடியாமல் போகும். காலையில் ஓடி இரவு வீடு திரும்பும் ஒரு யந்திரத்தனமான வாழ்க்கை வாழ எங்களுக்கு விருப்பமில்லை.

விவசாயத்தில் ஈடுபடுவதால், உறவுகள் ஒன்றாகி ஒற்றுமை பலப்படும். நல்ல எண்ணங்கள் துளிர் விடும். மனம் எப்போதும் நிம்மதியோடு இருக்கும். இப்படி ஓர் அனுபவத்தைப் பணம் தந்திடுமா? மன ஆரோக்கியத்துடன் வளர விவசாயம்தான் திருப்தியான தொழில்.

மேலும், எல்லாமே நச்சாக, கலப்படமாக மாறி விடும் இந்தக் காலத்தில், இயற்கை விவசாயத்தில் விளைவிக்கப்படும் பொருள்களால் குடும்ப ஆரோக்கியத்தையும், பொது ஆரோக்கியத்துக்கும் முடிந்த அளவு ஒரு பங்களிப்பைச் செய்ய முடிகிறது.

நம்மாழ்வாரின் இயற்கை விவசாய யுக்திகளைப் படித்துச் செயல்படுத்தி நச்சு இல்லாத உணவுப் பொருட்களை விளைவிக்கிறோம்.

என் மனைவி கிருத்திகா எம்.எஸ்.டபிள்யூ, எம்.ஃபில். முடித்துவிட்டு என்னோடு இணைந்து நிலத்தில் உழைக்கிறார். அவர் பட்டுப்புழு வளர்ப்பில் தீவிரமாக ஈடுபட்டு அதில் வரும் வருமானத்தை ஆரம்பக் காலகட்டங்களில் விவசாய முட்டுவழிச் செலவுக்குக் கொடுத்து உதவினார்.

விவசாயம் பார்ப்பதைவிட உசத்தியான வேலை உலகத்தில் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. குடும்பத்தில், மூத்த மகனின் கடமையாக, நிலத்தில் இறங்கி வேலை பார்த்து பெற்றோர் சுமையைக் குறைக்கவே நான் விரும்பினேன்” என்கிறார் செந்தில்குமார்.

செயற்கை உரங்களால் வலுவிழந்த மண்ணை உயிர்ப்பிக்க முடியுமா?

எப்படிப்பட்ட செயற்கை உரங்களால் உயிர் வலுவு இழந்திருந்த மண்ணாக இருந்தாலும், அதை உயிர்ப்பித்து மண்ணைப் புதுப்பித்து பின் நாற்று நட்டால் மூன்று போகமும் விளையும்.

முதலில் மண்ணைப் பக்குவப்படுத்த கடலை, ஆமணக்கு, சூரியகாந்தி போன்ற எண்ணெய் வித்துக்கள், சொளம், கம்பு உள்ளிட்ட தீவனப் பயிர்கள், சணல் பை, தக்கை போன்ற வாசனைப் பயிர்களைத் தெளித்து 45 நாட்களுக்குப் பின், உழவு ஓட்ட வேண்டும்.

அப்பொழுதுதான் கீழ் இருக்கும் சத்துள்ள மண் மேலாகவும், மேலே உள்ள பயிர்கள் கீழாகவும் செல்லும். இம்முறையைப் பின்பற்றினால் மண்ணுக்கான சத்துக்கள் நிறையவே கிடைக்கும். விளையாத நிலத்தைக்கூட ஆறு மாதத்தில் சத்துள்ள நிலமாக்கலாம். தட்பவெப்ப சூழலுக்கு ஏற்ப ஒவ்வொரு போகத்துக்குப் பின்பும், நிலத்தை ஏரால் ஊழுது அப்படியே விடவேண்டும். அதற்குப் பின் இயற்கை உரம் போட்டால் அபார விளைச்சல் கிடைக்கும்” என்றவரிடம், இயற்கை உரம் எப்படித் தயாரிக்கிறீர்கள்?” என்று கேட்டோம்.

மாட்டுச் சாணம், கோமியம், பால், தயிர், வெண்ணெய், நெய் கொண்டு இயற்கையான பஞ்ச கவ்யம் தயாரிக்கலாம், வெயில் காலமாக இருந்தால் இளநீர், மோர் சேர்க்க வேண்டும். பனிக் காலத்தில் தென்னங்கள் சேர்க்கலாம். ஆடு, மாடு கழிவுகள், இலைகள், உயிரி உரங்கள் தண்ணீரோடு சேர்த்துக் குவியலாக்கி, காற்று புகாதவாறு தார்ப்பாயினால் மூடினால், 20 நாட்களில் இயற்கை உரம் ரெடி.

இதையெல்லாம் போட்டுக் கலந்தும் விளையாத நிலத்தை, எளிதில் கிடைக்கும் பழங்களை அரைத்து 15 நாட்கள் டிரம்மில் பக்குவப்படுத்தித் திறக்காமல் வைத்திருந்தால் நொதித்துவிடும். மீன் கழிவுகள் கொண்டும் சத்து டானிக் தயாரித்து செடிகளின் வேர்களில் ஊற்றலாம்.

ஒரு முறை அடித்த பயங்கரச் சூறைக் காற்றினால் நாட்டுப் பயிரிலிருந்து அத்தனை வாழை மரங்களும் அடியோடு சாய்ந்துவிட்டன. அத்தனை இலை, பட்டைகளை மக்கவைத்து மாற்றி உரமாக்கினோம். இந்த நெஞ்சுரம் விவசாயிக்கு இருந்தால்தான் இயற்கை விவசாயம் சாத்தியமாகும். இயற்கை உரத்தால் எல்லா செலவுகளும் போக ஆண்டுக்கு ஆறு லட்சத்துக்கு மேல் வருமானம் கிடைக்கிறது” என்றவர், பயிர்களைக் காப்பாற்றும் டெக்னிக்குகளையும் சொன்னார்.

பூச்சிகளை அண்டவிடாத உயிர்வேலி அமைப்பது. பயிர்களுக்கு இடையில் இடைவெளிவிட்டு அதற்குரிய விளக்குகளை நட்டுவைப்போம். விளக்கெண்ணெய், கிரீஸ், ஆயில்களை மஞ்சள் அட்டைகளில் பூசி விளக்குடன் சேர்த்துக் கட்டித் தொங்கவிட்டுவிடுவோம். பூச்சிகள் அதில் வந்து ஒட்டி அழிந்துவிடும். இப்படி எத்தனையோ கண்ணும் கருத்துமாக உழைத்தால்தான் முழுமையான இயற்கை விவசாயத்தைச் செய்ய முடியும்.”

இளைஞர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்பும் கருத்து?

கோடி கோடியாகச் சம்பாதித்தாலும் பணத்தைத் தின்று உயிர்வாழ முடியுமா? வேண்டும் வீட்டுக்கு ஒரு விவசாயி! படித்தவர்கள் இத்தொழிலுக்கு வந்து, புதிய தொழில்நுட்ப முறைகளைப் புகுத்தவேண்டும். நஞ்சற்ற விவசாயத்தில் ஈடுபட்டு, மக்களுக்கு ஆரோக்கியமான உணவுப் பொருட்கள் உற்பத்தி செய்யவேண்டும்.”

-இந்த வார கல்கி இதழில் இருந்து…

Advertisements