Daily Archives: January 4, 2017

11-நெருங்காதே நீரிழிவே! – டாக்டர் விஜயராகவன், சுஜாதா தேசிகன்


desikanparkdr-vijayaraghavan

இதன் முந்தைய பகுதி…

டாக்டர் போன வாரம் நல்லா தூங்க சொல்லியிருந்தீங்க தூக்கம் சரியில்லைன்னு எப்படி கண்டுபிடிப்பது?”

ரொம்ப சிம்பிள் ‘என்ன பார்க்க டயர்டா இருக்கீங்க?’ என்று யாராவது விசாரித்தாலோ காலை அலாரம் அடிக்கும் போது எரிச்சலா அதன் தலையில் ஒரு குட்டு குட்டினாலோ உங்களுக்கு தூக்கம் சரியில்லைன்னு அர்த்தம்.”

தூக்கம் பெரிய பிரச்னையா?”

தூக்கம், மன அழுத்தம் எல்லாம் நீரிழிவு நோயை அதிகப்படுத்தும், தொடர்ந்து இந்தப் பிரச்னை இருந்தால் அதனால கூட நீரிழிவு வரலாம். அதனால இவை இரண்டையும் சரிசெய்யணும்.”

மன அழுத்தம் எப்படி நீரிழிவை அதிகப்படுத்தும்?”

தெரு நாய் துரத்தும் போது என்ன செய்யறீங்க?”

தலதெறிக்க ஓடுவோம்!”

தல தப்பித்த பிறகு, உடம்பில் எங்கிருந்து அவ்வளவு சக்தி என்று மலைப்பாய் இருக்கும். அதற்குக் காரணம் Catecholamines என்ற ஹார்மோன்.”

அது என்ன ?”

இந்த ஹார்மோன் சுரக்கும்போது, இன்ஸ்டண்ட் சக்தி கொடுக்க ரத்தத்தில் குளுக்கோஸ் அதிகரித்து, நம் தசைகளுக்கு சக்தி கொடுக்கும். அதனாலதான் உங்களால் ஓடமுடிகிறது. ஆபத்து விலகிய பின் பழைய நிலைக்கு வந்துவிடும்.”

இதுக்கும் மன அழுத்தத்துக்கும் என்ன சம்பந்தம்?”

செல்றேன். நாய் துரத்தினா ஒண்ணு தப்பிச்சுடுவீங்க, அல்லது கடி வாங்குவீங்க. அதுக்கு அப்புறம் சகஜநிலைக்கு வந்துவிடுவீங்க இல்லையா ? ஆனா கவலை? இருந்துகொண்டே இருக்கும். தொடர் மன அழுத்தம் (Chronic stress) என்பாங்க.”

இதுக்கும் ஹார்மோன் ரிலீஸ் ஆகுமா ?”

ஆமாம். இதையும் நாய் துரத்துவது போல நமக்கு ஏதோ ஒரு ஆபத்து என்று எண்ணி அதை எதிர் கொள்ள கார்டிசால் (Cortisol) என்கிற ஹார்மோன்கள் சுரக்கச் செய்யும்.”

இதனால என்ன ஆபத்து ?”

வீட்டுல மின்விசிறி மீது தொடர்ந்து தூசி பட்டுக் கொண்டே இருந்தா கொஞ்ச நாளில நிறைய அழுக்கு படிந்து அது சுற்றும் வேகம் குறைந்து ரிப்பேர் ஆகும். அதே மாதிரி தான் தொடர்ந்து மன அழுத்தம் இருந்தா நீரிழிவு மட்டும் இல்ல, ஹைப்பர் டென்ஷன், தைராய்ட் என்று பல பிரச்னைகள் வரலாம்.”

சரிசெய்ய மாத்திரை இருக்கே?”

மருந்து மாத்திரை எல்லாம் இருக்கு. ஆனா அது உங்களைத் தூங்கவைக்குமே தவிர, அடிப்படைப் பிரச்னையை தீர்க்காது. நீங்களே ஷெர்லாக் ஹோம்ஸ் மாதிரி டாக்டர் உதவியுடன் உங்களிடம் என்ன பிரச்சனை என்று கண்டுபிடிக்க வேண்டும். மனத்தை நீங்க தான் லைட்டா வைத்துக்கொள்ள வேண்டும்.”

அப்படினா ?”

3Tல கடைசி T நினைவு இருக்கா? Thoughts நினைவுகள்! அதான் முக்கிய காரணம். குறிப்பாக கடந்த காலம், எதிர்காலத்தைப் பற்றி நினைத்துக் கவலைப்படுவது.”

புரியலையே?”

ஒன்றுவிட்ட மாமா பையனுக்குக் கல்யாணம் ஆகி இரண்டு குழந்தைகளுக்குப் பிறகும் என்னை கல்யாணத்துக்குக் கூப்பிடலை என்று நினைத்து வருந்துவது; ஸ்டாக் மார்க்கெட்டில் முதலீடு செய்தது அடுத்த வருஷம் என்ன ஆகுமோ என்று நினைப்பது.”

அப்ப தேர்வுக்கு படிக்கும் மாணவர்களின் மன அழுத்தமும் ஆபத்து இல்லையா?”

இது எல்லாம் தாற்காலிகம், நம்ம கட்டுப்பாட்டில் இருக்கு. ஆனா ஸ்டாக் மார்க்கெட், குடும்பத்தில் நிகழும் மரணம் போன்ற பிரச்னைகள் எல்லாம் நம்ம கையில் இல்லை. இந்த மாதிரி மன அழுத்தம் தான் ஆபத்து.”

என்ன செய்ய வேண்டும் ?”

தினமும் 15-20 நிமிஷம், தியானம், யோகா, தோட்ட வேலை, வாக்கிங், சூரிய நமஸ்காரம், மூச்சுப் பயிற்சி, குழந்தைகளுடன் விளையாடுவது பேசுவது போன்றவற்றை செய்யலாம். ஜோக் அடிக்கிறேன் என்று மனைவியின் தம்பி பற்றி ஜோக் அடித்து கார்டிசாலை ஏற்றிக்கொள்ளாதீர்கள்.”

தூக்கம் பற்றிச் சொல்லுங்க டாக்டர் ?”

தூக்கமின்னை மன அழுத்தத்துக்கு முக்கிய காரணம். இன்று பலர் ஆறு மணி நேரத்துக்குக் குறைவாய் தூங்குகிறார்கள். தூங்கலைனா உங்கள் வளர்சிதையில் பாதிப்பு ஏற்படும் (it damages your metabolism).தூங்கும்போதுதான் சில ஜீன்கள் சுவிச் ஆன் ஆகி, நம் திசுக்களை மறுசீரமைத்து, நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டுகிறது.”

எவ்வளவு மணி நேரம் மினிமம் தூங்கணும்?”

நிச்சயம் 7-9 மணி நேரம் தூங்கவேண்டும். சரியா தூங்கலைனா வெயிட் ஏறும்.”

வெயிட் ஏறுமா?”

சரியா தூங்கலைனா க்ரெலின் (Ghrelin) ஹார்மோனை அதிகமாக்கி, லெப்டின் (Leptin) ஹார்மோனைக் கம்மியாக்குகிறது. இதனால் அதிகம் பசிக்கும். நிறைய சாப்பிட்டு உடல் பருமனாகும். தூங்குவது மட்டும் இல்லை, நிம்மதியா தூங்கணும் (quality sleep)”

நல்லா நிம்மதியா தூங்க ஏதாவது டிப்ஸ் இருக்கா?”

சிம்பிளான ஐந்து வழிமுறைகள்:

படுக்கையறையை நல்ல இருட்டாகவும் கொஞ்சம் குளுமையாகவும் வைத்துக்கொள்ளுங்கள்.

டி.வி.யில் தாயத்து, லேகியம் விற்பவர்கள் வரும் முன் தூங்க சென்றுவிடுங்கள். தினமும் குறிப்பிட்ட நேரத்துக்குத் தூங்க பழகிக்கொள்ளுங்கள். அலாரம் அடிக்காமல் எழுந்துகொள்ள பழகிக்கொள்ளுங்கள்.

படுக்கை அறையைப் படுக்க மட்டுமே பயன்படுத்துங்கள், ஐபேட், மொபைல் எல்லாம் கூடவே கூடாது. நோ Gadgets.

தூங்க போகும் முன் இரண்டு மணி நேரம் வர்தா புயல் வந்த போது போன், இணையம் இல்லாம இருந்த மாதிரி ஃப்ரீயா இருக்கணும்.

தொள தொள என்று சவுகரியமான உடை அணிந்து கொள்ளுங்கள். பெல்ட் எல்லாம் போட்டுக்கொண்டு ராணுவ அதிகாரி மாதிரி தூங்கக் கூடாது.

இதையெல்லாம் செய்தால் நிச்சயம் கண்ணதாசன் பாடியது போல

தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…

அமைதி உன் நெஞ்சினில் நிலவட்டுமே..

தூக்கம் வரும்!”

டாக்டர் தொடரின் கடைசிப் பகுதிக்கு வந்து விட்டோம். கல்கி வாசகர்களுக்கு என்ன செய்யணும், செய்யக்கூடாது என்று சின்னதாக ஃபிரிட்ஜ் கதவில் ஒட்டும் அளவுக்கு ஒரு கையேடு கொடுத்துவிடலாம்.

ஒரு வார ஆகார நியமம், 24 மணி நேர விரதம்.

குறிப்பு:

சிகப்பில் இருப்பது அசைவம்;

பட்டர் டீ, காபி கூகுளில் தேடினால் செய்முறை விளக்கம் கிடைக்கும்.

weekly-schedule

அட்டவணையில் இருப்பது மாதிரி உணவு குறிப்பு. உங்களுக்குப் பிடித்த LCHF உணவை செய்துகொள்ளலாம்.

ஒரு டஜன் அட்வைஸ் இதோ…நீரிழிவுக்கு முக்கிய காரணம் அளவுக்கு அதிகமாக மாவுச் சத்து, லைஃப் ஸ்டைல் என்ற வாழ்கை முறை, மன அழுத்தம் என்ற மூன்று முக்கிய காரணம்.

இந்தப் பன்னிரண்டு அறிவுரைகளையும் கடைப்பிடித்தால் நிச்சயம் நீரிழிவு உள்ளவர்கள் மாத்திரை இல்லாமல் நீரிழிவுக்கு ‘குட்பை’ சொல்லிவிடலாம். இல்லாதவர்கள், ‘நெருங்காதே நீரிழிவே’ என்று விரட்டியடிக்கலாம்.

image-3

enna-saappidalaam

அழகான வண்ணத்துப்பூச்சியாக மாறப் போகிறேன் என்று தெரிந்தால் கம்பளிப்பூச்சிக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்? இந்த அறிவுரைகளைக் கடைப்பிடித்தால் உங்களுக்கும் அந்த சந்தோஷம் நிச்சயம்.

இந்தப் புத்தாண்டிலிருந்து LCFH டயட் பின்பற்றப் போகிறீர்கள் இல்லையா?”

கல்கி வாசகர்களுக்கு புத்தாண்டு பொங்கல் வாழ்த்துகள்.

(பொங்கல் சாப்பிட முடியாதே என்று வருத்தப்படாதீங்க ஸ்பெஷல் LCFH வெண் பொங்கல் எப்படி செய்வது  என்பதை பெட்டிச் செய்தியில் பார்க்கவும்)

நிறைவுற்றது.

ஸ்பெஷல் LCFH வெண் பொங்கல்

தேவையான பொருட்கள்

காலிஃப்ளவர் ரைஸ் – 2 கப்

பயத்தம் பருப்பு – கால் கப் மிளகு – 1 டேபிள் ஸ்பூன்

சீரகம் – 2 டேபிள் ஸ்பூன் 22

இஞ்சி – சிறிது பொடியாக நறுக்கியது

உப்பு, பாதாம் – தேவைக்கு ஏற்ப கறிவேப்பிலை – சிறிதளவு நெய் – அரை கப்

காலிஃப்ளவர் ரைஸ் செய்முறை:

காலிஃப்ளவர் மீடியம் சைஸ் பூவை சின்னச் சின்னதாக உடைத்து கொதிக்கும் வெந்நீரில் ஐந்து நிமிடம் போட்டு, பின் மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். இதுதான் அரிசிக்குப் பதிலாக நீங்கள் உபயோகிக்கப்போகும் ‘காலிஃப்ளவர் ரைஸ்.’

பருப்பை நன்றாக நெயில் பச்சை வாசனை போகும் அளவு வறுக்கவும். பின்னர் தனியாக குக்கரில் குழைய வேகவைத்துக்கொள்ளவும்.

சீரகம், மிளகு இரண்டையும் நெய்யில் வறுத்துக்கொள்ளுங்கள்.

நன்றாக வெந்த பருப்புடன், ’காலிஃப்ளவர் ரைஸ்’, வறுத்த சீரகம், மிளகு, சிறிது அளவு வெந்நீர், தேவையான அளவு உப்பு சேர்த்து கொஞ்சம் கறிவேப்பிலை, இஞ்சி, நெய்யுடன் கொதிக்க வைக்கவும். பொங்கல் பதத்துக்கு வந்த பிறகு, கடைசியாக நெய்யில் வருத்த பாதாமைச் சேர்த்துப் பரிமாறவும்.

Advertisements