10-நெருங்காதே நீரிழிவே! – டாக்டர் விஜயராகவன், சுஜாதா தேசிகன்


desikandr-vijayaraghavan

இதன் முந்தைய பகுதி…

சென்ற வாரம் இரண்டு கேள்விகளை கேட்டிருந்தேன்.
1.இந்தப் படத்தில் உள்ள ஒற்றுமை என்ன?
2.இந்தப் படத்தில் வேறுபட்ட நபர் யார்? எதனால்? (Who is the odd man out and why ?)

விடைகளைக் கண்டு பிடித்துவிட்டீர்களா?

முதல் கேள்விக்கான விடை – படத்தில் இருப்பது எல்லாம் பாலூட்டி வகையைச் சேர்ந்தவை (Mammals)”

இரண்டாவது கேள்விக்கான விடை – மனிதன். ஆனா காரணம் தெரியலை.”

கன்றுக்குட்டி, ஆட்டுக்குட்டி, நாய்க்குட்டி என்று எல்லாம் தன் தாயிடமிருந்து பாலைக் குடிக்கிறது. ஆனா மனிதன்?”

தாய்ப்பாலைக் குடித்துவிட்டு பிறகு பாக்கெட் பாலுக்கு மாறுகிறான்.”

அட ஆமாம்.”

எல்லா பாலூட்டிகளும் தன் தாயிடமிருந்து பால் சாப்பிடுவதைச் சில காலத்தில் நிறுத்திவிடுகிறது. இதை வீனிங் காலம் (Weaning period) என்பாங்க. ஆனால் நாம மட்டும்தான் தாய்ப்பாலை விட்டவுடன் மாட்டுப்பாலுக்கு மாறி பிறகு கடைசி மூச்சு வரை பாலைக் குடித்துக்கொண்டே இருக்கோம்!”

பால் நல்லதுதானே டாக்டர். எலும்பு எல்லாம் நொறுங்காம இருக்கும் என்று பஸ் பின்னாடி விளம்பரம் எல்லாம் செய்யறாங்களே.”

காந்திஜி ஆட்டுப்பால் குடித்தது மாதிரிதான் இது. பால் நல்லது என்று சொல்லிச் சொல்லி அதை நல்லதாக்கிவிட்டார்கள். அமரர் கல்கி இதைப் பற்றி நகைச்சுவையாய் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.

kalki-article

kalki-article-2

கைக்குழந்தை தாய்ப்பாலிலிருந்து பவுடர் பால் அல்லது பாக்கெட் பாலுக்கு மாறும்போது ஒன்றைக் கவனிச்சிருக்கீங்களா?”

எல்லா குழந்தைகளும் முதல் முறை அல்லது ஒரு வாரத்துக்கு எதுகளித்துக் கக்கும்.”

ஆமாம். ஏன் தெரியுமா?”

தெரியாது.”

நாம தாய்ப்பால் குடிப்பதற்குத்தான் ப்ரோகிராம் செய்யப்பட்டுள்ளோம். மற்ற இனத்துடைய பாலை நம் வயிறு ஏற்றுக்கொள்வதில்லை. சிறுகுடலில் ஒவ்வாமை ஏற்படும். இப்பகூட பாருங்க, குழந்தைகள் பால் குடிக்க முரண்டுபிடிக்கும். நமக்கேகூட வெறும் பாலைச் சாப்பிடப் பிடிக்காது. அதனால்தான் ‘ஃபிளேவர்டு மில்க்’ என்று கலர்கலராக சர்க்கரை கலந்து விற்கிறார்கள்.”

ஓ…”

சென்ற வாரம் கோதுமையில் இருக்கும் புரதம் வயிற்றைப் பாதிக்கும் என்று பார்த்தோமே, அதே போல பாலில் கேசின் (casein) என்ற புரதமும் வயிற்றைப் பாதிக்குது. அதனால்தான் டாக்டர்கள் குழந்தைக்கு 12 மாசம் தாய்ப்பாலைத் தவிர வேற எதையும் பரிந்துரைப்பதில்லை.”

ஆனா தாய்ப்பாலில் இருக்கும் அதே புரதம் தானே மாட்டுப்பாலிலும் இருக்கு. அப்புறம் ஏன் இந்தப் பிரச்னை?”

நல்ல கேள்வி. அதே புரதம்தான். ஆனால் சதவிகிதம் வேறு. உதாரணமா தாய்ப்பாலில் புரதம் 1.6 சதவிகிதம். ஆனா மாட்டுப்பாலில் 3.5 சதவிகிதம், ஆட்டுப் பாலில் 6.5 சதவிகிதம்; நாய்ப் பாலில் 7.1; முயலின் பாலில் 14.4 சதவிகிதம்.”

ஏன் இந்த மாதிரி?”

காரணம் இயற்கையின் புத்திசாலித்தனம். நம்ம பிறந்த எடை எப்ப இருமடங்காகிறது என்று பார்த்தால் இதற்கு விடை கிடைக்கும். குழந்தையின் எடை 180 நாட்களில் இரட்டிப்பாகும். கன்றுக்குட்டி 47 நாட்களில், முயல்குட்டி ஆறே நாட்களில்.”

இதில என்ன புத்திசாலித்தனம் இருக்கு?”

மனிதனுக்கு மூளைதான் முக்கியம். உடம்பு வளர்ச்சி இல்லை. ஆனால் மிருகங்களுக்கு உடனே வளரவேண்டிய நிர்ப்பந்தம். மாடு சீக்கிரம் வளர்ந்து புல் மேயப் போகவேண்டும்.”

சரி டாக்டர், இப்ப மாட்டுப்பாலைக் குடித்தால் என்ன ஆகும்?”

நம் உடலில் நல்ல வளர்ச்சி இருக்கும். ஆனால் மூளை வளர்ச்சி குறைவாய் இருக்கும். நிறைய குழந்தைகள் குண்டாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.”

அப்படிப் பார்த்தா கிருஷ்ணர் காலத்திலிருந்து, நம்ம தாத்தா, பாட்டி எல்லாம் பாலைத்தானே குடித்தார்கள்? திருப்பாவையில்கூட மாடுகள் பால் கொடுப்பதைப் பற்றி வந்திருக்கிறதே?”

keezhvaanam

திருப்பாவையில் ‘கீழ்வானம் வெள்ளென்று! எருமை சிறுவீடு’ என்று வருகிறது. அதாவது மாடுகள் பால் கறப்பதற்குமுன் பனிபடர்ந்த சிறு புல்வெளியில் மேய்கிறது. அதேபோல கன்றுகள் சாப்பிட்ட மிச்சத்தைத்தான் கறந்தார்கள் என்கிறாள் ஆண்டாள்.”

ஆனால் இன்று?”

மாடுகளுக்குப் பால் கறப்பதற்கு என்று கண்ட கண்ட தீவனத்தைக் கொடுத்து, பல ஊக்கமருந்து ஊசிகளைப் போட்டு ஹார்மோன்களைத் தூண்டி, கன்றுக்குட்டிக்குக் கொடுக்கிறார்களா, இல்லையா என்று தெரியாது. பால் கெட்டுப்போகாமல் இருக்க அதைப் பதப்படுத்தி, பாக்கெட்டில் அடைத்து நமக்குக் கொடுக்கிறார்கள். பிளாஸ்டிக் என்பதே விஷம் தான்!”

கலப்புக் கோதுமையில் இருக்கும் புதுப்புரதம் போல மாடுகளுக்குக் கொடுக்கும் தீவனம், ஊக்க மருந்து, ஹார்மோன்களால் அதில் இருப்பது பல கலவைகள்.”

அப்ப வெளுத்ததெல்லாம் பால் இல்லை!”

இன்னொன்றை கவனித்தீர்களா? எல்லா பாலூட்டிகளும் பாலை எப்படிச் சாப்பிடுகின்றன?”

தன் தாயின் முலைக்காம்பில் வாய் வைத்து உறிஞ்சுகிறது?”

இயற்கையின் இன்னொரு புத்திசாலித்தனமான ஏற்பாடு இது.”

ஓ… ஏன் அப்படி?”

பாலை உறிஞ்சும்போது வெளிக்காற்று படாமல் வயிற்றுக்குப் போகிறது. காத்து பட்டால் ஆக்ஸிடைஸாகி வயிற்றுக்குக் கெடுதல். ஆனா நாம அதை பாக்கெட்டில் போட்டு இயற்கையைவிட புத்திசாலி என்று எண்ணிக்கொண்டு இருக்கிறோம்.”

அப்ப புல் சாப்பிட்ட மாட்டின் பால் பரவாயில்லையா?”

புல் சாப்பிட்ட மாட்டின் பால் கிடைச்சா குடிக்கலாம். ஆனால் அவசியம் இல்லை.”

சரி டாக்டர், ஆனா பால் சாப்பிடவில்லை என்றால் நமக்கு கால்சியம் எங்கிருந்து கிடைக்கும்?”

முட்டைக்கோஸில் பாலைவிட அதிக கால்சியம் இருக்கு. அதை விட கீரையில் அதிக கால்சியம் இருக்கு. பாலில்தான் கம்மியாக இருக்கு. சரி மாடுகளுக்கு எப்படி கால்சியம் கிடைக்கிறது?”

தெரியலையே…”

இயற்கை… புல், தழைகளிலிருந்து கிடைக்கிறது. அவற்றுக்கு என்றாவது பல், எலும்பு பிரச்னை வந்திருக்கிறதா?”

அப்ப எலும்பு பலவீனமா இருந்தா பால் குடிக்க வேண்டாமா?”

சமீபத்தில் இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வில் ‘யாருக்கு எலும்பு முறிவு அதிகம் ஏற்படுகிறது?’ என்று பார்த்தார்கள். பால் அதிகம் சாப்பிடாதவர்களைக் காட்டிலும் சாப்பிட்டவர்களுக்கே அதிகமாக ஆஸ்டியோபோரோசிஸ் (Osteoporosis)என்னும் பாதிப்பு ஏற்பட்டது.”

அப்ப பால் சாப்பிட்டா எலும்பு வீக் ஆகிவிடுமா?”

அப்படி இல்லை இது ஒரு correlation ஆய்வு. பாலுக்கும் எலும்புக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். பால் சாப்பிடாத தேசங்களைக் காட்டிலும் பால் அதிகம் சாப்பிடும் தேசங்களில்தான் அதிக எலும்பு முறிவு ஏற்படுகிறது.”

அப்ப டி.வி.யில் விளம்பரம்?”

விற்பனைக்கு. நாமும் அதை நம்பி குழந்தைகளைச் சாப்பிடச் சொல்லித் திட்டுகிறோம்.”

சரி டாக்டர், பாலுக்கும் நீரிழிவுக்கும் என்ன சம்பந்தம்?”

சர்க்கரை சாப்பிட்டால், ரத்தத்தில் அதிக குளுக்கோஸ் இருக்கு. அதனால் இன்சுலின் அதிகமாகச் சுரக்கும் என்று சில வாரங்களுக்கு முன் பார்த்தோம். சர்க்கரை சாப்பிடாமலே இன்சுலின் அதிகமாகச் சில சமயம் சுரக்கும். இதற்கு இன்கிரடின் எஃபெக்ட் (incretin effect)என்பார்கள்.”

இது என்ன டாக்டர்?”

1966ல் ஓர் ஆய்வில் புரதங்கள் மற்றும் அமினோ அமிலங்களால் இன்சுலின் அதிகமாகிறது என்று கண்டுபிடிச்சாங்க. எட்டு வயது குழந்தைகளுக்கு மாமிசம், பால் இரண்டும் கொடுத்து இன்சுலின் ரெஸிஸ்டென்ஸ் எப்படி என்று 2005ல் ஆய்வு செய்ததில் பால் சாப்பிடும் குழந்தைகளுக்கு இன்சுலின் ரெஸிஸ்டென்ஸ் அதிகமாக இருந்தது.”

சுலபமாகப் புரியவேண்டும் என்றால் சாதம் சாப்பிட்ட பிறகு தண்ணீருக்குப் பதில் ஒரு கப்பால் சாப்பிட்டால் உங்க உடலில் அதிக இன்சுலின் சுரக்கும்.”

எவ்வளவு அதிகமா சுரக்கும்?”

300% இன்சுலின் அளவு அதிகரிக்கும். அதிக இன்சுலின்தான் பிரச்னை என்று முன்பே பார்த்தோம்.”

அப்ப பால் சாப்பிட்டால் உடல் இளைக்கும் என்கிறார்களே?”

சின்ன கோடு, பெரிய கோடு தத்துவம்தான். எதை வைத்து அதை முடிவு செய்கிறார்கள் என்று பார்க்க வேண்டும். பாலுடன் கோக், நூடுல்ஸை ஒப்பிட்டு அது நல்லது என்று சொல்லுவதுபோல்.”

பாலிலிருந்துதான் தயிர் கிடைக்கிறது. அதுகூட ஆபத்தா?”

பாலில் D – galactose என்ற ஒருவித சர்க்கரை இருக்கிறது. நல்லவேளையாக அது தயிர், சீஸில் இல்லை. சிம்பிள் ரூல்- பால், தயிர் அவசியம் இல்லை. அப்படியே சாப்பிட வேண்டும் என்றால் புல் சாப்பிட்ட மாட்டுப்பால், அதிலிருந்து கிடைக்கும் தயிரை எடுத்துக் கொள்ளலாம்.”

ஆனா எங்க வீட்டு 80 வயது பாட்டி தினமும் ராத்திரி பால் குடித்துவிட்டுத் தூங்க வேண்டும் என்கிறாளே?”

பாட்டி குடித்தது சுத்தமான பால், நீங்க சாப்பிட்டுக்கொண்டு இருப்பது பாக்கெட் பால். பாட்டி 80 வயது வாழ்ந்துவிட்டார். நீங்கள் வாழவேண்டாமா? பால் சாப்பிடுகிறீர்களோ, இல்லையோ நல்லா தூங்க வேண்டும். சரியா தூங்கலைனா அதுவும் நீரிழிவுக்கு ஒரு காரணம்.”

எட்டாவது ரூல்: நல்ல தூக்கம் வேண்டும் – அடுத்த வாரம்.

வாசகர்களுக்கு ஒரு சின்ன டெஸ்ட்: ஒரு வாரம் கோதுமை, பால் இல்லாமல் சாப்பிட்டுப் பாருங்க. உங்களுக்கே வித்தியாசம் தெரியும்!

-நன்றி கல்கி

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s