3-ருசியியல் சில குறிப்புகள்:நெய்யில் வறுத்த அதிருசி பாதாம்


மதராசப்பட்டணத்தில் புயல் மழைப் புரட்சி எல்லாம் நடக்கும் என்று யாரும் சொப்பனத்தில்கூட நினைத்துப் பார்த்திருக்க முடியாத கடந்த ஜூன் மாதத்திலேயே ஒரு பெரும் புரட்சி இப்புண்ணிய க்ஷேத்திரத்தில் நிகழ்ந்தது. அது புயல் புரட்சியல்ல. எடைப் புரட்சி. அதுவும் ஒரு நபர் புரட்சி. புரட்சியாளர் வேறு யார்? எனது பிராண சிநேகிதன் பாராகவன்தான்.

kashmiri-pulao

அன்றைக்கு அவனுக்கு காஷ்மீரி புலாவ் மசக்கை. ஒரு தமிழ்ப் புலவனை காஷ்மீரப் புலவன் எவ்வாறு எதிர்கொள்வான் என்று பார்த்தே விடுவது. கடிக்குக் கடி நெரிபடும் வறுத்த முந்திரிகள். தவிரவும் பொடியாக நறுக்கிப் போட்ட பரவசப் பைனாப்பிள். இங்கே சில உலர்ந்த திராட்சைகள். அங்கே சில மாதுளை உதிரிகள். முற்றிலும் நெய்யில் சமைத்த நேர்த்தியான மதிய உணவு. ஒரு கட்டு கட்டினால் சொர்க்கம் நாலடி தூரத்தில் தட்டுப்படும்.

எனவே போனோம். எனவே சாப்பிட்டோம்.

வெளியே வந்தபோது பாராகவன் தன்னைச் சற்றுக் கனமாக உணர்ந்தான். எப்போதுமே கனபாடிகள்தான். இருந்தாலும் அன்றைக்குச் சற்றுக் கூடுதல் கனவானாகத் தெரிந்தபடியால் எடை பார்க்கலாமா என்று என்னைக் கேட்டான்.

இதெல்லாம் என்ன கெட்ட பழக்கம்? நாம் எடை வளர்ப்பவர்கள். என்றைக்கு எடை பார்ப்பவர்களாக இருந்திருக்கிறோம்?

பரவாயில்லை, இன்றொருநாள் பார்க்கலாம் என்றான். குத்து மதிப்பாக, எண்பத்தைந்துக்கும் தொண்ணூற்றைந்துக்கும் இடைப்பட்ட ஏதோ ஒரு கிலோவில் எடையானது இடைகாட்டி நிற்கும் என்று பட்டது. சரி கேட்டுத் தொலைத்துவிட்டான்; எனவே பார்த்துத் தொலைத்துவிடுவோம் என்று எடை காட்டும் இயந்திரத்தின் மீதேறி நின்றேன். ஒரு ரூபாய் நாணயம் உள்ளே போனதும் அந்தப் பச்சையழகி கண்ணடித்தாள். அடேய், நீ நூற்றுப் பதினோரு கிலோ.

பாராகவனாகப்பட்டவன் உண்மையில் அன்று மிரண்டு போனான். வளர்ச்சி விகிதம் இப்படியெல்லாம் தறிகெட்டுப் போனால் என்னாவது? தவிரவும் அவன் தமிழ்நாட்டு எதிர்காலம். அவனுக்கு என்னவாவது ஒன்றென்றால் ஒரு சமூகமே படுத்துவிடும். சமூகமென்பது அவனோடு சேர்த்து இரண்டரை பேர்தான் என்றாலும் இங்கு படுப்பதுதான் பிரச்சினை.

சரி விட்றா பாத்துக்கலாம் என்று சமாளிக்கப் பார்த்தேன். அவன் கேட்கிறபடியாக இல்லை. பத்தாத குறைக்கு அவனது மனைவி என்னமோ ஒரு புதுவித டயட் உள்ளதென்றும், அதில் பட்டினி கிடக்க வேண்டாம் என்றும், இப்போது உண்பதைக் காட்டிலும் இன்னும் ருசியாக உண்ணும் சாத்தியங்கள் உண்டென்றும், மின்னல் வேகத்தில் எடை குறையும் என்றும் சொல்லி வைக்க, அன்று முதல் பாராகவனின் நடவடிக்கைகள் சுத்தமாக மாறிப் போயின.

hansika-motwani

நாற்பத்தியைந்து வருடங்களாக நான் பார்த்த நல்லவனா அவன்? வெட்கம்! வெட்கம்! அரிசியைத் தொட மாட்டானாம். சர்க்கரையை மறந்துவிட்டானாம். பழங்கள் கிடையாதாம். எண்ணெய் கிடையாதாம். பொழுதுக்குப் பத்திருபது பூரி தின்னக்கூடியவன், இனி கோதுமை தேசத்து ஹன்சிகா மோத்வானியைக் கூட ரசிக்க மாட்டேன் என்று சொன்ன போது எனக்கு நெஞ்சே வெடித்துவிடும் போலிருந்தது.

அரிசி கோதுமை மட்டுமல்ல; அதனையொத்த வேறு எந்த தானியமும் கிடையாது. பருப்புகள் கிடையாது. பாதாம் அல்வா கிடையாது. ஐஸ்க்ரீம் கிடையாது, மைசூர்பா கிடையாது. உருளைக்கிழங்கு போண்டா கிடையாது. சே, மனிதன் எப்படி வாழ்வது?

அவன் ரொம்பத் தீவிரமாகத் தனது புதிய டயட்டைப் பற்றி என்னிடம் விளக்கத் தொடங்கினான். அதில் எனக்குப் புரிந்ததைப் பற்றி அடுத்த வாரம் எழுதுகிறேன். இப்போது அந்தப் பொடி விவகாரத்தை முடித்து விடுவோம். இரண்டு வாரக் கடன் பாக்கி.

பாராகவன் தனது புதிய டயட்டைக் கடைப்பிடிக்கத் தொடங்கி சரியாக ஒரு மாத காலம் கழித்து “வா நாம் எடை பார்க்கலாம்” என்று மீண்டும் அந்த ஓட்டல் வாசல் நாசகார இயந்திரத்துக்கு அழைத்துச் சென்றான். என்ன ஆச்சரியம்?! இயந்திரமானது இம்முறை எடை 102 கிலோ என்றது. ஒரு மாதத்தில் ஒன்பது கிலோ எப்படிக் குறையும்? ஒன்று எடை இயந்திரம் பழுதாகியிருக்க வேண்டும். அல்லது பாராகவன் ஒரு யோகியாகி, பட்டினி பயின்றிருக்க வேண்டும்.

இரண்டும் இல்லை. என்னோடு வா என்று வீட்டுக்கு அழைத்துச் சென்று நூறு பாதாம் பருப்புகளை நெய்விட்டு வறுக்கத் தொடங்கினான்.

டேய் கிராதகா! இது முழுக் கொழுப்பல்லவா? இது உன்னைக் கொன்று விடுமே! இதையா தினமும் உண்கிறாய்?

பொறு நண்பா!

அந்த பாதாமானது பொன்னிறத்தில் வறுபட்டதும் ஒரு கப்பில் கொட்டினான். உப்பு, மிளகுத் தூள் சேர்த்தான். அதன் பின் ஏதோ ஒரு பொடியை தாராளமாக ஒன்றரை ஸ்பூன் அதன் தலையில் கொட்டி நன்றாகக் கிளற ஆரம்பித்தான். “என்ன பொடி” என்று கேட்டேன்.

“இது தனியா பொடி. சிவப்பு மிளகாய், நாலு முந்திரி சேர்த்து மிக்சியில் அரைத்தது” என்று சொன்னான். எனக்கு திக்கென்றது. பாதாமுக்கு முந்திரித் தூவலா? எம்பெருமானே!

“இதோ பார். பாதாம் ருசியானது தான். அதுவும் நெய்யில் வறுத்த பாதாம் அதிருசி ரகம். உப்பு, மிளகுத் தூள் போதவே போதும்தான். ஆனால், அதற்கு மேல் அதில் ஏதோ ஒன்று எனக்குத் தேவைப்பட்டது. அது இதில் இருக்கிறது. சற்று ருசித்துப் பார்’’ என்று இரண்டு பாதாம் பருப்புகளை ஸ்பூனில் எடுத்துக் கொடுத்தான். பொடி போட்ட பாதாம்.

மென்று பார்த்தபோது அபாரமாக இருந்தது.

ருசி என்பது காண்ட்ராஸ்டில் உள்ளது மகனே! சாலையில் போகிற சிட்டுப் பெண்களைப் பார்! நீல டாப்ஸுக்கு சிவப்பு ஸ்கர்ட் ஏன் அணிகிறார்கள்? அது கண்ணின் ருசிக்கு அளிக்கப்படும் கருணைக் கொடை. கதிரி கோபால்நாத் சாக்ஸஃபோன் கேட்டிருக்கிறாயா? அநியாயத்துக்குத் தவிலைப் பக்கவாத்தியமாக வைப்பார். அது காதுகளின் ருசிக்குக் கிடைக்கும் காண்ட்ராஸ்ட் காராசேவு. அடுப்பில் கொதிக்கும் சாம்பாரை நுகர்ந்துவிட்டு சட்டென்று வண்டியின் பெட்ரோல் டாங்க்கைத் திறந்து அந்த வாசனையை சுவாசித்துப் பார். உன் நாசியின் மிருதுத்தன்மை கூடியது போலத் தோன்றும்!’’

எனக்குக் கிறுகிறுத்துவிட்டது. என்ன ஆகிவிட்டது இவனுக்கு?

அவனேதான் சொன்னான். “நான் இந்த பாதாமுக்கு என்ன பொடி சேர்க்கலாம் என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தபோதுதான் உள்ளுணர்வு அந்த வாசனையைக் கண்டறிந்தது. அன்று பாய்க்கடை தள்ளுவண்டி சுண்டலில் தூவப்பட்டது தனியா பொடிதான். ஆனால், அதில் நாலு கற்பூரவல்லி இலை சேர்த்து இடிக்கப்பட்டிருந்தது. சின்னக் காஞ்சிபுரத்துப் பொடி ஊத்தப்பம் நினைவிருக்கிறதா? அந்த மிளகாய்ப் பொடியோடு ரெண்டு ஏலக்காயும் எள்ளும் இடித்துச் சேர்த்திருந்தார்கள்!’’

ருசியின் அடிப்படை, நூதனம். அது மணத்துக்குச் சரிபாதி இடமளிப்பது. ஆனால், டயட்டில் ருசிக்கு ஏது இடம்?

அவன் சிரித்தான்.

நாக்கைக் காயப்போடுவது டயட்டல்ல நண்பா; உடம்புக்கு ஊறானதைக் கண்டுபிடித்து நகர்த்துவதுதான் டயட் என்று சொன்னான்.

-தமிழ் ஹிந்து நாளிதழில் வெளியான கட்டுரை

மேலும் ருசிப்போம்…

எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: writerpara@gmail.com

img_0057

Advertisements

One thought on “3-ருசியியல் சில குறிப்புகள்:நெய்யில் வறுத்த அதிருசி பாதாம்

  1. nparamasivam1951 December 20, 2016 at 10:13 AM Reply

    எவ்வாறு எடை குறைந்தது என அறிய ஆவல்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s