8-நெருங்காதே நீரிழிவே! – டாக்டர் விஜயராகவன், சுஜாதா தேசிகன்


desikandr-vijayaraghavan

இதன் முந்தைய பகுதி…

கடந்த பதிவுகளில் சர்க்கரையை விரட்ட கடைப் பிடிக்கவேண்டிய நான்கு ரூல்களைப் பார்த்தோம். இப்போது அதன் தொடர்ச்சியான ரூல்களைப் பார்ப்போம்.

ஐந்தாவது ரூல் – உண்ணாவிரதம் இருங்க.

சாப்பிடாம இருந்தா? அதனால உடம்புக்கு ஏதாவது பிரச்னை வராதா?”

Instead of using medicine, rather, fast a day – மருந்துக்குப் பதில் ஒருநாள் உன்ணாவிரதம் நல்லது” என்கிறார் கிரேக்க வாழ்க்கை வரலாற்றாசிரியர் புளூட்டாக் (Plutarch).”

பட்டினியாகவா?”

பட்டினி வேற, உண்ணாவிரதம் வேற. வீட்டில் சாப்பாடு இருக்கு, ஆனா நீங்க சாப்பிடலை – உண்ணாவிரதம். அடுத்த வேளை சாப்பாட்டுக்கே வழி இல்லை என்றால்தான் பட்டினி.”

ரொம்ப நேரம் எப்படி சாப்பிடாமல் இருக்க முடியும்?”

இப்ப நீங்க இரவு சாப்பாட்டை எட்டு மணிக்குச் சாப்பிட்டு, பிறகு தூங்கி எழுந்து மறுநாள் காலை எட்டு மணிக்கு ‘பிரேக் ஃபாஸ்ட்’ சாப்பிடுறீங்க. இதுவே 12 மணி நேரம் உண்ணாவிரதம்தான். இதுல என்ன கஷ்டம்?”

அட ஆமாம்.”

இப்படி 12 மணி நேர கால அவகாசத்துல சாப்பிட்டுக்கொண்டு, அடுத்த 12 மணி நேரம் சாப்பிடாம இருந்தா, உடல் சீரான நிலையில் இருக்கும்.”

நீரிழிவு உள்ளவங்க சாப்பிடாம இருக்கக் கூடாதே?”

அவங்கதான் அவ்வப்போது உண்ணாவிரதம் இருக்க வேண்டும். இதை intermittent fasting என்பாங்க.

முக்கியமான அறிவுரை: நீரிழிவு, இரத்த அழுத்த மாத்திரை எடுத்துக்கொள்பவர்கள் டாக்டர் ஆலோசனை இல்லாமல் விரதம் இருக்கக் கூடாது. மாத்திரை எடுத்துக் கொண்டு விரதம் இருந்தால் தாழ்சர்க்கரை (Low Sugar) வர வாய்ப்பு உண்டு.”

நாய், பூனை எல்லாம் பாருங்க; உடம்பு சரியில்லைனா சாப்பிடாது, இயற்கை உள்ளுணர்வு சாப்பாட்டை மறுத்துவிடும்.”

வீட்டுலேயேகூட நம்ம குழந்தைங்க, ஏன் நமக்கே ஜுரம் வந்தா சாப்பாட்டை கண்டா பிடிக் காது. ஜுரம் சரியாகச் சரியாகக் கொஞ்சம் கொஞ்சமா பசிக்கும்.”

உடம்பு சரியில்லாதபோது சாப்பிடுவது, நீங்களே உங்கள் நோயை ஊட்டி வளர்ப்பதற்குச் சமம்” என்கிறார் ஹிப்போக்ரட்டீஸ் (To eat when you are sick, is to feed your sickness).”

ஆனா இப்ப யாரும் அவ்வளவா விரதம் இருப்பதில்லையே.”

நம்ம முன்னோர்கள் கடைப்பிடித்த அருமையான வைத்தியம். கிட்டத்தட்ட எல்லா கலாசாரத்திலும் மதத்திலும் ஏதோ ஒரு வகையில் விரதம் இருக்கிறது.”

சாப்பாடு இல்லைனா உடம்பு சோர்ந்துடாதா?”

கல்யாணச் சாப்பாடு சாப்பிட்ட பின் உங்களுக்கு எப்படி இருக்கு? சுறுசுறுப்பாகவா? இல்ல மந்தமா மயக்கமாவா?”

ம்… ஒருவித மயக்கமா, உண்ட களைப்பு.”

அந்தக் களைப்பு ஏன் தெரியுமா? எல்லா ரத்தமும் அதிகச் சாப்பாட்டை ஜீரணிக்கச் சென்று விடுகிறது. மீதம் இருப்பதுதான் மூளைக்குப் போகும். அதனால் நீங்க மந்தமா இருக்கீங்க.”

ஓ… அப்ப உண்ணாவிரதம் இருந்தா?”

எதிர்மாறா நடக்கும். மூளைக்கு அதிக ரத்தம் சென்று நீங்க சுறுசுறுப்பாக இருப்பீங்க. அது மட்டும் இல்லை, முன்பு பார்த்த 3-ல் நச்சுத்தன்மை நினைவிருக்கிறதா?”

Toxic... நினைவு இருக்கு.”

உண்ணாவிரதம் இருக்கும்போது, உடம்புல சேர்ந்திருக்கும் நச்சுகளை எல்லாம் வண்டி வாட்டர் வாஷ் செய்த மாதிரி துப்புரவா சுத்தமாகிடும்.”

அப்ப, நம்ம உடலுக்கு உள்ளேயே ஒரு டாக்டர் இருக்கிறார்…”

ஆமாம். இதற்கு அப்போப்டோசிஸ் (Apoptosis) என்பாங்க. அதாவது நம் உடம்பே சில என்சைம்களை உற்பத்தி செய்து வேண்டாத செல்கள், திசுக்களை அழித்துவிடும்” (பார்க்க பெட்டி செய்தி)

அடிக்கடி வீட்டைச் சுத்தம் செய்து பராமரித்தால் வீடு சுத்தமா இருப்பது மாதிரி, அவ்வப்போது உண்ணாவிரதம் இருந்தா உடம்பு சுத்தமாக இருக்கும். முக்கியமா நீரிழிவு உள்ளவங்களுக்கு இன்சுலின் கம்மியா சுரக்கும்.”

உண்ணாவிரதத்தின்போது நம் உடலுக்கு எப்படி சக்தி கிடைக்கிறது?”

முன்பு பார்த்தோமே கார்ப்ஸ், பர்ஸ் மாதிரி; கொழுப்பு, வங்கி டெபாஸிட் மாதிரி. உடலுக்குத் தேவையான சக்தியை உணவு தருகிறது (பர்ஸ்). ஆனால் உணவு இல்லாதபோது, நம் கல்லீரல், தசைகளில் சேமித்து (டெபாஸிட்) வைத்த கொழுப்பை சக்தியாக மாற்றுகிறது.”

சரி டாக்டர், பலர் உண்ணாவிரதம் என்றாலே பயந்துவிடுவாங்க. எப்படி ஆரம்பிப்பது?”

சொல்றேன். அதுக்கு முன்னாடி உண்ணாவிரதம் இருக்கும்போது நம் உடலில் என்ன நடக்குது? 12 மணி நேரம் விருதம் இருந்தால், முதல் எட்டு மணி நேரம், நீங்க சாப்பிட்ட உணவில் இருக்கும் குளுக்கோஸை சக்தியாக எடுத்துக்கொள்கிறது. பிறகு தான் நீங்க சேமித்து வைத்துள்ள கொழுப்பை சக்தியாக உபயோகிக்க ஆரம்பிக்கிறது.”

நீரிழிவு உள்ளவர்களுக்கு என்ன பயன்?”

தொடர்ந்து செய்தால் இன்சுலின் அளவு குறைந்து, சர்க்கரை அளவு குறைந்து, எடை குறைந்து, மாத்திரை ஏதும் இல்லாமல் நீரிழிவுக்கு ‘குட்பை’ சொல்லிவிடலாம்.”

உடனே ஆரம்பித்துவிடலாமா?”

படிப்படியாக ஆரம்பிக்கணும். உதாரணமாக இரவு எட்டு மணிக்குச் சாப்பிட்டு, மறுநாள் காலை எட்டு மணிக்குச் சாப்பிடுவதற்குப் பதில், காலை உணவை ஒரு மணி நேரம் தள்ளிப்போட்டால் 13 மணி நேரம் விரதம்.”

காலை சாப்பாட்டை மத்தியம் பன்னிரெண்டு மணிக்குச் சாப்பிட்டால் பதினாறு மணி நேரம் விரதம்.”

இப்படியே தினமும் ஒரு மணி நேரம் தள்ளிப் போட்டுப் பழக்கிக்கொண்டால் இரண்டு வாரத்தில் தொடர்ந்து 24 மணிநேரம் உண்ணாவிரதம் சுலபமாகி விடும்.”

ஆரம்பிக்கும்முன் ஏதாவது செய்ய வேண்டுமா?”

நல்ல நாள், பிரம்ம முகூர்த்தம் எல்லாம் பார்க்க வேண்டாம். நாளை விரதம் என்றால் முதல் நாளே அதை முடிவு செய்யுங்கள்.”

முதல் நாள் ராத்திரியே நிறைய சாப்பிட்டா அடுத்த நாள் பசிக்காது தானே?”

தப்பு, உண்மையில் நிறைய பசிக்கும். அதனால் முதல் நாள் இரவு அதிகம் சாப்பிட்டு அதை ஈடு செய்ய முடியாது.”

சரி, எழுந்தவுடன் என்ன செய்ய வேண்டும்?”

பல் தேய்க்கும்போதே ‘நான் விரதம் இருக்கப் போகிறேன்’ என்று சொல்லிக் கொள்ளுங்கள். ஒரு கிளாஸ் தண்ணீருடன் ஆரம்பியுங்க.”

காலை காபி இல்லை என்றால் எனக்கு எதுவும் ஓடாதே?

ஓடவேண்டாம். காபி பொடி தீர்ந்துவிட்டது என்று நினைத்துக்கொள்ளுங்கள். முதல் தடவை விரதம் என்றால் காபி சாப்பிடுவதைத் தள்ளிப்போட முயற்சி செய்யுங்கள். இதைச் செய்தாலே பாதி வெற்றி.”

லோ சுகர்(தாழ் சர்க்கரை) வராதா?”

டயபட்டீஸ் மாத்திரை, இன்சுலீன் எடுக்கவில்லை என்றால் லோ சுகர் என்ற பேச்சுக்கே இட மில்லை. டயபபடீஸ் மாத்திரை சாப்பிடுபவர் உங்கள் டாக்டர் ஆலோசனை செய்வது மிக அவசியம்.

உண்ணாவிரத்தின்போது என்ன செய்யலாம்?”

எல்லாம் செய்யலாம். டி.வி. பார்க்கலாம், ஃபேஸ்புக் லைக் போடலாம், வாட்ஸ் ஆப், புத்தகம் படிக்கலாம், எழுதலாம். ஏ.டி.எம். கியூவில் நிற்கலாம்.”

பசிக்குமே?”

பசி என்பது நடா புயல் போல், வந்துவிட்டு ஒன்று செய்யாமல் அடங்கிவிடும்.”

பசிக்காம இருக்க என்ன செய்யணும்?”

ஒரு டெக்னிக் இருக்கு. ஒரு பெரிய பாட்டிலில் தண்ணீர் வைத்துக்கொண்டு அதைத் துளி துளியாகப் பத்துப் பதினைந்து நிமிஷத்துக்கு உறிஞ்சிக்கொண்டே இருங்க, பசிக்காது.”

வேற ஏதாவது டெக்னிக்?”

நாள் பூரா ஏதாவது வேலை வைத்துக் கொள்ளுங்கள். வீட்டுத் தோட்ட வேலை, கிளீனிங், ஏன் சினிமா கூட போகலாம்.”

நண்பர்கள், உறவினர் வீட்டுக்குப் போகலாமா?”

தாராளமாக, ஆனால் பிரச்னை. அவர்கள் ஏதாவது உங்களுக்குக் குடிக்க, சாப்பிடக் கொடுப்பார்கள். அதை மறுக்க வேண்டியிருக்கும்.”

அப்ப அவர்களுடன் ஃபோனில் பேசி நேரத்தைக் கழிக்கலாம்.”

பேசலாம். ஆனால் விரதத்தைப் பற்றிப் பேசா தீர்கள். அவர்கள் உங்களைக் கிண்டல் செய்து டிஸ்கரேஜ் செய்வார்கள்.”

அப்ப பேசாம ஏதாவது படிக்கலாம்.”

படிக்கலாம், ஏன் தூங்கலாம். உங்களுக்குத் தெரியுமா? தூங்கும்போதுதான் நிறைய கொழுப்பு எரிக்கப்படுகிறது.”

மயக்கம் ஏதாவது வருமா?”

சிலருக்கு மயக்கம் வருகிற மாதிரி இருக்கலாம். ரத்த அழுத்தத்தை சோதித்துக் கொள்ளுங்கள். உயர்ரத்த அழுத்த மாத்திரை எடுத்துக்கொள்வதால் அல்லது சில சமயம் உடலில் நீர் வற்றுதல் (Dyhydration) குறைவதால் ஏற்படும்.”

என்ன செய்யணும்?”

நீர் வற்றுதல் (Dyhydration) என்றால் உப்புடன் எலுமிச்சை ஜூஸ் எடுத்துக்கொள்ளலாம்.”

வேற என்ன சாப்பிடலாம்?”

உண்ணாவிரதம். எதுவும் சாப்பிடக் கூடாது. தாராளமாய் தண்ணீர் குடிக்கலாம்.”

டயத்துக்கு சாப்பிடவில்லை என்றால் தலைவலி வருமே?”

தலைவலி வரும். தேவைப்படும்போது கிரீன் டீ, பிளாக் காபி, உப்பு போட்ட லைம் ஜூஸ் குடியுங்க. உண்ணாவிரதம் ஒரு பழக்கம்தான்.”

உடற்பயிற்சி, வாக்கிங் போகலமா?”

செய்யலாம் தப்பில்லை. உண்ணாவிரதம் இருக்கும்போது இன்னும் சுறுசுறுப்பாகச் செய்வீர்கள்.”

விரதம்போது எனக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கிறது.

கவலைப்பட வேண்டாம். உடலில் அதிக இன்சுலின் இருக்கும்போது சிறுநீரகங்கள் உப்பு மற்றும் தண்ணீர் தக்கவைத்துக் கொள்கிறது. விரதம் இருக்கும்போது இன்சுலின் கம்மியாகி, தேக்கி வைத்த உப்பையும் தண்ணீரையும் வெளியே தள்ளுகிறது. இது நல்லதுதான்.”

காலையில் மலம் போகாவிட்டால் எந்த வேலையும் ஓடாது. மலச்சிக்கல் பிரச்னை வருமா?”

இன்புட் இருந்தால்தான் அவுட்புட். மலம் போகவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். விரத்துக்குமுன், அல்லது பின் அதிக நார்ச்சத்து உட்கொண்டால் பிரச்னை இருக்காது.”

விரத்தின்போது சில சமயம் வயிறு கடமுடா என்று சத்தம் போடுகிறதே?”

சிலருக்கு அந்தப் பிரச்னை இருக்கலாம். நிறைய தண்ணீர் குடியுங்கள் சரியாகிவிடும்.”

விரதம் இருக்கும்போது கோபம் வருமா?”

நாம் ஃபாஸ்டிங் செயும்போது, குடும்பத்தினர் ‘ஃபாஸ்ட் புட்’ சாப்பிட்டால் கோபம் வரலாம்.”

குழப்பம், மறதி?”

இல்லை, மாறாகத் தெளிவாக இருப்பீர்கள். உங்களிடம் கடன் வாங்கியவர்கள் பெயர்கள் எல்லாம் ஒவ்வொன்றாக ஞாபகத்துக்கு வரும்.”

12 மணி நேரம் சரி, 24 மணி நேரம் எல்லாம் ரொம்ப அதிகமாக இருக்கே. அவ்வளவு நேரம் விரதம் இருக்கலாமா?”

தண்ணீர் மட்டுமே அருந்தி 382 நாள் உண்ணாவிரதம் இருந்து உலக சாதனை படைத்துள்ளார் ஒருவர். அதனால கவலைப்படாதீங்க.”

விரதத்துக்கு அப்பறம் அதிகமாகப் பசிக்குமே?”

நீங்கள் புதுசு என்றால் பசிக்கும். தொடர்ந்து பழக்கத்தால் பசித்தால் மட்டுமே உணவு உண்ணும் பழக்கத்துக்கு மாறிடுவீங்க.”

உண்ணாவிரத்தை முடித்துக்கொள்ளும்போது ஜூஸ் குடிக்கலாமா?”

நீங்க என்ன அரசியல்வாதியா? கிளியர் வெஜ் சூப்புடன் ஆரம்பிக்கலாம்.”

எவ்வளவு சாப்பிடலாம்?”

காணாததைக் கண்டதுபோல, பகாசுரன் மாதிரி எல்லாம் சாப்பிடக்கூடாது. விரதம் முடிக்கும்போது, அதிகமாகச் சாப்பிட்டால் நெஞ்சு எரிச்சல் வரலாம். உங்க செரிமான அமைப்பு ரெஸ்டில் இருந்திருக்கிறது, அதுக்கு அதிக வேலை கொடுக்காதீங்க. அதனால சாப்பிடும் உணவை நன்றாக மென்று நிதானமாகச் சாப்பிடுங்க. முக்கியமாக, மாவுச்சத்து கம்மியாகவும் கொழுப்பு நிறைய எடுத்துக்கொள்ள வேண்டும். சாப்பாட்டுக்கு முன்பும் பின்பும் பெரிய கிளாஸ் நிறைய தண்ணீர் குடிங்க.”

முதல் முறை ஆரம்பிக்கப் போகிறேன். ஏதாவது டிப்ஸ்?

கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். தொடர்ந்து கடைப்பிடித்தால் பழக்கமாகிவிடும். மாவுச்சத்து மீது நாட்டம் குறைந்து, தேவைப்பட்டால் மட்டுமே பசிக்கும், எனர்ஜிடிக்காக இருப்பீங்க.”

விரதத்தால் வேறு நன்மைகள்?”

கத்திரிக்காய் பிடிக்காது, அசைவம், முட்டை சாப்பிட மாட்டேன், பாதாமை கடிக்க முடியலை, சமைக்கத் தெரியாது, வயதாகிவிட்டது பல் செட்தான், 2000 ரூபாய்க்குச் சில்லறை இல்லை, பாரத் பந்த் என்று எந்தப் பிரச்னையாக இருந்தாலும் உண்ணாவிரதம் இருக்கலாம். முக்கியமான விஷயம் செலவு கிடையாது.”

ஆறாவது ரூல் : கோதுமைக்கு அரிசி பெட்டர்.

ஏழாவது ரூல் : பால் அவசியம் இல்லை. இரண்டையும் அடுத்த வாரம் பார்க்கலாம்.

-நன்றி கல்கி

செல்கள், குறிப்பிட்ட எண்ணிக்கையான செல் பிரிவுக்குப் பிறகு அது இறப்பதற்கு ப்ரோகிராம் செய்யப்பட்டுள்ளது. இதற்குப் பெயர் அப்போப்டோசிஸ் (Apoptosis).

‘ஐயோ, எல்லா செல்களும் இறந்து விட்டால்?’ என்று பயப்பட வேண்டாம். பழைய கார் கொஞ்ச நாள் ஆனா மக்கர் செய்து அதிகச் செலவு வைக்கும். ‘ஏதோ பார்த்துக் கொடுங்க’ என்று அந்தப் பழைய குப்பையை கடாசிவிட்டு புது கார் வாங்குவது போலத்தான் இது.

சமீபத்தில் அதே மாதிரி இன்னொரு வார்த்தை கேள்விப்பட்டிருப்பீர்கள் – ஆட்டோஃபேகி  (Autophagy). கிரேக்க வார்த்தை. ஆட்டோ (Auto) என்றால் ‘சுய’; ஃபேகி (Phagy) என்றால் ‘சாப்பிடு’ என்று பொருள். அதாவது தம்மைத்தாமே சாப்பிடுவது என்று பொருள். சில சமயம் கார் பேட்டரி மக்கர் செய்யும், அப்ப காரை மாற்றாமல், கார் பேட்டரியை மாற்றுவது போலத்தான் இது.

வீட்டுக் குப்பையை ரீசைக்கிள் செய்வதுபோல நம் உடம்பு தேவை இல்லாத பழைய பகுதிகளை (செல் உள்ளுறுப்புகள், புரதம், செல்சுவர்) ‘எதுக்கு கஷ்டப்பட்டு மெயின்டெயின் செய்யணும்?’ என்று தம்மைத் தாமே விழுங்கி மறுசுழற்சி செய்துவிடுகிறது.

இதைக் கண்டுபிடித்து இந்த ஆண்டு நோபல் பரிசை ஜப்பான் நாட்டு செல் உயிரியலாளர் யோஷினோரி ஒஷுமி அவர்களுக்குக் கிடைத்திருக்கிறது. ஆட்டோஃபேகி என்றழைக்கப்படும் செல்களின் சீரழிவு மற்றும் மறுசுழற்சி குறித்த ஆய்வுப் பணிக்காக அவருக்குக் கிடைத்திருக்கிறது.

இதுக்கும் உண்ணாவிரதத்துக்கும் என்ன சம்பந்தம்? விரதம் ஆட்டோஃபேகியைத் தூண்டுகிறது. பழைய குப்பையான பாகங்களை வெளியேற்றி சுத்தம் செய்து, பளபளக்கும் வளர்ச்சி ஹார்மோன்களை உற்பத்திசெய்து, நம் உடலைப் புது கார் மாதிரி சீரமைக்கிறது.

சரி, ஆட்டோஃபேகியை எது தடுக்கிறது?

சாப்பிடுவது, குறிப்பாக குளுக்கோஸ் (அதிக கார்ப்ஸ்), அதனால் சுரக்கும் இன்சுலின், அதிகப் புரதம், இவை எல்லாம் குப்பைகளை அகற்றுவதைத் தடுக்கிறது. நம் முன்னோர்கள் ஏன் விரதம் இருந்தார்கள் என்று தெரிகிறதா?

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s