1-சர்க்கரை அனுபவம், சப்ஜீரோ ஆசை! -ஆர்.வெங்கடேஷ்


முதலில் ஓர் அன்பான எச்சரிக்கை. நீரிழிவில் இருந்து நான் முழுமையாக மீண்டுவிட்டேன் என்று சொல்லும் வெற்றிக்கதை அல்ல இது. அப்படி ஒரு முயற்சியில் இறங்கி இரண்டு ஆண்டுகள் பல்வேறு ஏற்ற இறக்கங்களோடு தள்ளாடியும் கொண்டிருக்கிறேன். வெற்றி பெற்றுவிடுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. உங்களுக்கும் அந்த நம்பிக்கை வேண்டுமென்றால் தொடர்ந்து படியுங்கள்.

கல்யாணம் ஆகி மூன்றாவது நாள், எனக்கு நீரிழிவு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. புது மனைவியோடு ஹனிமூன் கூட போகவில்லை, ஹாஸ்பிடல்தான் போனேன். உடனே, அந்த மருத்துவப் புண்ணியவான், மாத்திரைகளைப் பரிந்துரைக்க, ஆரம்பித்தது இன்னொரு டயபடீஸ் பேஷன்டின் பயணம். இன்றைக்கு யாருக்கேனும் நீரிழிவு என்றால், ‘ஜாலியா இருங்க பாஸ், ஈஸியா ரிவர்ஸ் பண்ணிடலாம்’ என்று தோள்தட்டி உற்சாகப்படுத்துகிறேன். இந்த ஞானம் அன்று இல்லை. விளைவு, ஒரு மாத்திரையில் ஆரம்பித்தது, காலையும் இரவும் இரண்டிரண்டு மாத்திரைகள் என்று வளர்ந்து, அடுத்த பதினெட்டு ஆண்டுகளில் இன்சுலின் ஊசி வரை வந்து நின்றது. எத்தனை வேதனை, எத்தனை துன்பம்!

இத்தனைக்கும் நீரிழிவு வரும் என்ற எதிர்பார்ப்போடுதான் இருந்தேன். பதினைந்து வயதிலிருந்தே சர்க்கரைக்கும் இனிப்புகளுக்கும் தடா. தாத்தா சொத்து, அம்மா மூலமாக எனக்கு வராமலா போய்விடும்? வந்தபோது, ரொம்பச் சுலபமாக மாத்திரைகளுக்குத் தாவினேன். ஏன் மாத்திரை என்று கேட்டதில்லை. டாக்டர்கள் என்ற தேவதூதர்கள் மீது அபார நம்பிக்கை!

நாற்பது வயதுக்குப் பின்னர் ஒரு விஷயம் புரிந்தது. மாத்திரை, மருந்துகள் சாப்பிட்டுக்கொண்டே இருந்தேனே தவிர, நீரிழிவு கட்டுப்பாட்டுக்குள் வரவே இல்லை. இதற்குத் தோதாக, மருத்துவர்களின் ஆலோசனை வேறு. நீரிழிவுக்குக் குணம் கிடையாது. அது ஒரு டிஸ்-ஆர்டர், நோய் கிடையாது. வாழ்க்கை முழுவதும் மாத்திரை மருந்து சாப்பிட்டுக்கொண்டே இருந்தால் போதும். இட் இஸ் மேனேஜபிள். நாட் கியூரபிள்.

என்னை மருத்துவர்களிடம் ஒப்புக் கொடுத்துவிட்டேன். அவர்கள் சொல்வதுதான் வேதவாக்கு. ஆனால், அவர்களால் இதனைக் குணப்படுத்த முடியாது. என்னவிதமான மருத்துவம் இது? என் உடலுக்கு நான் பொறுப்பேற்க வேண்டும். இதுதான் நான் கற்ற முதல்பாடம்.

உடலைப் பற்றியும் அதன் ஒவ்வொரு அங்கங்கள் பற்றியும் சுரப்பிகள், செயல்பாடுகள் பற்றியும் விரிவாகப் படிக்க ஆரம்பித்தேன். குறிப்பாக நீரிழிவு குறித்து. பல்வேறு நாடுகளில் பின்பற்றப்படும் மருத்துவ முறைகள், சோதனை முயற்சிகள் குறித்தும் வாசிக்கத் தொடங்கினேன். அப்போதுதான், வாராது வந்த மாமணியாய் ஒரு ஆவணப்படம் கிட்டியது.

முப்பதே நாட்களில் நீரிழிவைக் குணப்படுத்த முடியும் (ரிவர்சிங் டையபடீஸ் இன் தர்ட்டி டேஸ்) என்பது அதன் தலைப்பு. அரிசோனா மாநிலத்தில் உள்ள ஒரு மருத்துவர், நீரிழிவினால் மோசமாக பாதிக்கப்பட்ட ஆறு நோயாளிகளை அழைத்து வந்து முப்பதே நாட்களில் நீரிழிவைக் குணப்படுத்தி அனுப்பும் ஆவணப் படம் அது. அதுநாள் வரையிலான என் தப்பெண்ணங்கள் அனைத்துக்கும் சாவு மணி அடித்த படம் அது. ஆங்கில மருத்துவர்கள் தெரிவித்த வழிமுறைகளில் உள்ள போதாமைகளைப் புரியவைத்த படம் அது. அதைவிட, நானே எப்படி என் உடம்பைக் கவனித்துக்கொள்ள முடியும் என்பதற்கான வழிமுறைகளை எடுத்துச் சொன்ன படம் அது.

அப்புறம் என் தேடல் உள்ளூரில் தொடர்ந்தது. பல மாணிக்கங்களைக் கண்டேன். முக்கியமானவர் இயற்கை மருத்துவர் மூ.ஆ.அப்பன். மனிதன் கனிகளை மட்டுமே புசிக்கப் பிறந்தவன், அவனுக்கான மருத்துவம் அனைத்தும் கனிகளிலேயே அடங்கியுள்ளது என்பது இவரது வாதம். இன்னொரு புறம் காய்கறிகளை மட்டுமே உண்ணும் இயற்கை உணவு முறை. ஒரு காலகட்டத்தில் இப்படிப்பட்ட மருத்துவர்களை ஊர் ஊராகத் தேடிச் சந்தித்துக் கொண்டே இருந்தேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான மருத்துவம் சொன்னார்கள். அனைவரும் சொன்னவை, அடிப்படையில் இரண்டு விஷயங்கள்: 1. நீரிழிவே இல்லாமல் ஆக்கமுடியும். 2. அதற்கான வழிமுறையும் உன்னிடமே இருக்கிறது.

(போதும் சொந்தக் கதை, சோகக்கதை! மேட்டருக்கு வாங்கன்னு எடிட்டர் மேடம் ஆர்டர் சொல்வது கேட்கிறதா?)

காலை பல்தேய்த்தவுடன் தோராயமாக ஒரு லிட்டர் தண்ணீர் குடிக்க. வயிறு சுத்தமாகிவிடும். குறைந்தபட்சம் பத்தாயிரம் ஸ்டெப்ஸ் நடை= எட்டு கிலோமீட்டர் வாக்கிங் + ஜாகிங். முடிந்தால், மெரினா பீச்சில் நடை. முடியாவிட்டால் மொட்டை மாடியில் வாக்கிங். அதுவும் முடியவில்லையெனில், வீட்டுக்குள்ளேயே எட்டு போன்ற வடிவத்தில் நடை. குறைந்தது ஒரு மணி நேரம். அப்புறம்?

(காத்திருங்கள் அடுத்த பதிவில் சொல்கிறேன்…)

ஓவியங்கள்: பிள்ளை

(இந்த மாத மங்கையர் மலரில் இருந்து)

Advertisements

One thought on “1-சர்க்கரை அனுபவம், சப்ஜீரோ ஆசை! -ஆர்.வெங்கடேஷ்

  1. nparamasivam1951 December 20, 2016 at 10:31 AM Reply

    மிக அருமையான தொடக்கம். அடுத்த பதிவை எதிர்நோக்க வைக்கும்…தொடரும். ம்ம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s