அவருடைய உலகத்தில் நண்பர்களுக்குத் தனியிடம் இருப்பதைப் பார்க்க முடியும். சென்னை விவேகானந்தா கல்லூரியில் படித்தபோது, அவருக்குப் பழக்கமான நண்பர்கள் அவருடைய இறுதிக்காலம் வரை அதே நெருக்கம் மாறாமல் அவரைத் தொடர்ந்து வந்திருக்கிறார்கள். நண்பர்கள் ஒன்றுசேர்ந்தால் போதும் கேலி, கிண்டல் ரகளைதான்!

நண்பர்களுக்கு முதலிடம்

துக்ளக் அலுவலகத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த போது, அதில் பப்ளிஷராக இருந்தவர் சோவுக்கு மிகவும் நெருங்கிய நண்பரான ரெங்காச்சாரி. ஒளிவு மறைவில்லாத அன்பான மனிதர்.

ஒருமுறை துக்ளக் ஆண்டு விழா சென்னையில் நடந்தபோது, அதன் சிறப்பு அழைப்பாளராக வந்திருந்தவர் சோவுக்கு நெருக்கமானவரான பிரதமர் சந்திரசேகர். மேடையில் விழா முடிந்து தேசியகீதம் இசைக்கப்பட்ட பிறகு, சந்திரசேகர் மேடையைவிட்டு இறங்கிக்கொண்டிருந்த சமயத்தில், உரத்த குரலில் சத்தம் போட்டுக் கூப்பிட்டார் ரெங்காச்சாரி.

“டேய் சோ.. இங்கே பார்றா..”

அவர் கவனிக்காததால் திரும்பவும் கூடுதல் சத்தத்துடன் கத்தினார்.

அருகில் இருந்த நான் ரெங்காச்சாரியிடம் சொன்னேன்.. “என்னதான் பழக்கமாக இருந்தாலும், பொது இடத்தில் ‘வாடா.. போடா’ என்று கூப்பிடுவது நன்றாக இருக்கிறதா? அதிலும் சத்தம் போட்டு இப்படிக் கத்துகிறீர்களே?”

கேட்டவுடன் ‘சுருக்’கென்று கோபம் வந்துவிட்டது ரெங்காச்சாரிக்கு. மடமடவென்று என்னுடைய கையைப் பிடித்து மேடைக்கு அழைத்துப்போனார். அதற்குள் மேடையைவிட்டுக் கீழே இறங்கிச் சென்றிருந்தார் பிரதமர் சந்திரசேகர்.

போனவுடன் “நான் உன்னை ‘வாடா’ன்னு கூப்பிடுறதை, அதிலும் பொது இடத்தில் கூப்பிடுறதை ‘அப்ஜெக்ட்’ பண்றதை என்னால் தாங்க முடியலை. உன்னை எந்த இடத்திலும் அப்படிக் கூப்பிட எனக்கு உரிமை இருக்கா.. இல்லையா? நீ சொல்லு” என்று சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு ரெங்காச்சாரி சொன்னதும்… வழக்கமான குபீர் சிரிப்புடன் என்னைப் பார்த்துச் சொன்னார் சோ.

“இவன்கிட்ட போய் ஏன் அப்படிக் கேட்டீங்க? இவனால் தாங்கிக்க முடியுமா? இங்கே மட்டுமில்லை.. எந்த இடத்தில், எங்கே இருந்தாலும் என்னோட ஃப்ரெண்ட்ஸ் ‘வாடா.. போடா’ன்னு கூப்பிடுறதுக்கு அவங்களுக்கு முழு உரிமை இருக்கு. என்னப்பா.. போதுமா? இன்னும் ஏதாவது சொல்லணுமா?” என்று சொன்னபடி உதட்டைச் சுழித்ததும் ரெங்காச்சாரி முகத்தில் அப்படியொரு ஆனந்தம்!

சோவின் குரு

“உங்க குருன்னு யாரையாவது சொல்வீங்களா?”

“இருக்கான். அவன் பெயர் நானி. பெங்களூர்ல இருக்கான். அவனோட முழுப் பெயர் நாராயணசாமி” – இப்படி சோவால் குருபக்தியுடன் வர்ணிக்கப்பட்ட நானியை.. குமுதம் இதழில் நான் தொகுத்து எழுதிவந்த ‘ஒசாமஅசா‘ தொடருக்காக பெங்களூரிலிருந்து வரவழைத்திருந்தார் சோ.

நாணி எனப்படும் நாராயண ஸ்வாமி

நானியைப் பார்த்ததும் ஏக சந்தோஷம் அவருக்கு. மருத்துவமனையில் இருந்து திரும்பிய நிலையிலும், குஷியாகத் தானே காரை ஓட்டிக்கொண்டு வந்தார் சோ. பின் ஸீட்டில் நானியும் நானும். கடலோரத்தில் இருக்கிற வீட்டுக்கு நகர்ந்தது கார்.

“டேய்.. நிஜமாவா சொல்றே. உன்னைப் பற்றி என் மனசில் இருக்கிறதெல்லாம் சொல்லிறவா? இவர் வேற டேப்ரெக்கார்டைக் கையில் வெச்சிருக்கார். அப்புறம் எல்லாம் ரெக்கார்டு ஆயிடும். சொல்லிறவா?” என்றார் நானி.

அவர்கள் இருவருக்கு மட்டுமே தெரிந்த சில குறியீட்டுச் சொற்களைச் சொல்லி, “எல்லாத்தையும் சொல்லிறவா?” என்று பீடிகையும் போட்டார்.

“நீ என்ன சொல்வேன்னு எனக்குத் தெரியாதா? எல்லாத்தையும் சொல்லிட்டு வா. இவர் ரெக்கார்டு பண்ணிப்பார். அப்புறம் அதை எடிட் பண்ணிக்கலாம். சரி.. ஆரம்பிப்பா” என்று சிரிப்பு பொங்க காரை ஓட்டியபடி சொன்னார் சோ.

தேன் பாய்ந்த அனுபவம்

சோவின் குசும்புகள், சேட்டைகள் எல்லாவற்றையும் அவிழ்த்துவிட்டு, “இவன் அப்படி.. இப்படி” என்று அமர்க்களமாகப் போட்டுக் காய்ச்ச, காதில் தேன் பாய்ந்த அனுபவத்துடன் ஏகானந்தமாக அதை ரசித்துக்கொண்டே வந்தார் சோ.

அப்புறம் அதை ஒருவழியாக ‘எடிட்’ பண்ணி, அந்த அனுபவங்கள் இரண்டு வாரங்கள் வெளியானது.

இப்படிப்பட்ட நண்பர்கள் கிடைத்தது அவருக்குப் பெரும் பாக்கியம்! கிண்டலும், குத்தலும் அவருக்கு இயல்பின் ஒரு பகுதியைப் போலவே மாறிவிட்டிருந்தன. அலுவலகத்தில் வேலை பார்க்கிறவர்களிடமும் அது அடிக்கடி பீறிட்டபடி இருக்கும்.

இலவச இணைப்பும் சோவும்

ஒரு சமயம், துக்ளக் ஆபீஸில் வேலை பார்த்துக்கொண்டிருந்த ஒருவர், ஒரு வாரத் தாடியுடன் சோகமாக உட்கார்ந்திருந்தார். மதிய நேரத்தில் அவருக்குச் சின்ன பேப்பர். அதனுடன் ஓர் இலவச இணைப்பு.

இணைப்பைப் பிரித்துப் பார்த்தால், பாதியாக ஒடிக்கப்பட்ட துண்டு பிளேடு. அந்த ஊழியர் பரபரப்புடன் பேப்பரைப் பிரித்தபோது, சிறு கோடுகள் ஒடிந்த மாதிரியான கையெழுத்தில் இப்படி எழுதியிருந்தார் சோ.

‘முகம் பார்க்கச் சகிக்கவில்லை. இத்துடன் இணைக்கப்பட்டிருக்கிற பிளேடால் நாளைக்கு மழுங்கச் சிரைத்துக்கொண்டு வரவும்.’

ஜூவுக்குப் போனா விதவிதமாப் பார்க்கலாம்

துக்ளக் ஆபீஸில் ஒரு சமயம் பத்திரிகை வேலைகளில் சோ மும்முரமாக இருந்த சமயம் பார்த்து, யாரோ ஒருவர் வெளியூரிலிருந்து வந்திருக்கிறார்.

எழுதிக்கொண்டிருந்த சோ நிமிர்ந்து பார்த்திருக்கிறார். உட்காரச் சொல்லியிருக்கிறார்.

“என்ன விஷயம்?”

“மெட்ராஸுக்கு வேலையா வந்தேன். அப்படியே உங்களைப் பார்த்துட்டுப் போகலாம்னு வந்தேன்” என்று இழுத்ததும்… சோவிடமிருந்து சுள்ளென்று பதில் வந்திருக்கிறது.

“மெட்ராஸுக்கு வந்து என்னைப் பார்க்கிறதைவிட இங்கே உள்ள ஜூவுக்குப் போனீங்கன்னா விதவிதமாகப் பார்க்கலாம். உங்களுக்கும் நல்லாப் பொழுதுபோகும். சரி.. நான் என் வேலையைப் பார்க்கட்டுமா?”

வந்தவருக்கு முகம் எந்தக் கோணத்தில் போயிருக்கும்?

எல்லாம் ஒரே கப்சா

துக்ளக்கில் வெளியான என்னுடைய கட்டுரைகளைத் தொகுத்துப் புத்தகமாக வெளியிட நான் முடிவெடுத்ததும் சோவிடம் சொன்னேன்.

“அதுக்கென்று தனியாக விழா நடத்திச் செலவழிக்காதீங்க. பேசாம துக்ளக் ஆண்டு விழாவிலேயே அதை வெளியிட லாம். நம்ம நாராயணன் சார் (பரந்தாமன் என்கிற பெயரில் நிறையக் கட்டுரைகள் எழுதியிருக்கிற இவர், கலைவாணருக்கு உதவியாளராகவும் இருந்தவர்) முதல் காப்பியை வாங்கிக்கட்டும்” – இப்படிச் சொல்லிவிட்டு, அந்தப் புத்தகத்துக்கு ஒரு முன்னுரையையும் கைப்பட எழுதித் தந்தார். முன்னுரையில் கட்டுரைகளுக்குப் பின்னால் இருக்கிற உழைப்பைப் பாராட்டியிருந்தவர், அந்தக் காகிதத்தை மடித்து மேலே சிறு பேப்பரை பேஸ்ட் பண்ணியிருந்தார்.

அதில் இப்படி எழுதியிருந்தார், ‘உள்ளே எழுதியிருப்பதெல்லாம் ஒரே கப்சா.’

சோ பாடிய பாடல்

சீரியஸாக அவர் இருந்ததில்லையா என்கிற கேள்வி இந்த நேரத்தில் எழலாம். இருந்தாலும், அவர் அந்த நிலையிலேயே தொடர்ந்ததில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

துக்ளக்குக்கு ஒரு கட்டுரையை மதுரையிலிருந்து கூரியரில் அனுப்பியிருந்தேன். அது கிடைக்கச் சற்றுத் தாமதமாகியிருக்கிறது. போனில் அழைத்தவர் வழக்கத்தைவிட உரத்த குரலில் கத்தியபோது மனதுக்கு நெருடலாக இருந்தது.

மறுநாள் காலை நேரம். வீட்டுத் தொலைபேசி அடித்தது. எடுத்தால் கர்னாடக இசையில் ஒரு பாடல். சோ சார்தான் பாடிக்கொண்டிருந்தார்.

கொஞ்சம் கேட்டதும் பாடல் நின்றது.

“நேத்து கூரியர் லேட்டா கிடைச்சது. ஆனா, அதுக்கு முன்னாடி உங்களைக் கூப்பிட்டு டோஸ் விட்டுட்டேன். மனசுல வெச்சுக்காதீங்க.. என்ன?”

திரும்பவும் அந்தப் பாடலைத் தொடர்ச்சியாகப் பாடி முடித்தபோது காது குறுகுறுத்தது.

கட்டுரைகளுக்காக

வேறுவேறு ஊர்களுக்குப் போய், அதற்கான பில் தொகையை அனுப்பியபோது ஒருசமயம் பார்த்தவர் போனில் கூப்பிட்டார்.

“என்ன.. இப்படிப் பில் அனுப்பியிருக்கீங்க?”

“ஏன்.. என்ன சார்?”

“ஊருக்குப் போறப்போ நீங்க தங்கின ஹோட்டல் பில்லைப் பார்த்தேன். இவ்வளவு கம்மியான ரேட்டில் இருக்கிற ஹோட்டல்களில் இனி தங்காதீங்க. நல்ல ஹோட்டல்களில் தங்குங்க. அதுதான் உங்களுக்கும் நல்லது, நம்ம நிறுவனத்துக்கும் நல்லது. பணத்தை நான்தாங்க கொடுக்கப்போறேன்” – போனை வைத்துவிட்டார்.

நம்பிக்கையின் பெருமிதம்

ராஜீவ் காந்தி கொலை நடந்த சமயம்.. மதுரையிலிருந்து சென்னை வந்திருந்த நான் ஸ்ரீபெரும்புதூருக்கு துக்ளக் கவரேஜுக்காகப் போனேன்.

சென்னை துவங்கி, தமிழகத்தின் பல பகுதிகளில் கலவரச் சூழல், “கார்ல போனாலும் பார்த்துப் போங்க” – சொல்லியனுப்பினார் சோ.

ராஜீவ் கொலையில், கைது செய்யப்பட்ட போட்டோகிராபர் சுபா சுந்தரத்தின் அலுவலகத்திலிருந்துதான் ஒரு போட்டோகிராபர் என்னுடன் காரில் வந்தார். சுபா சுந்தரம் தாங்கள் சென்ற காரில் ‘பிரஸ்’ ஸ்டிக்கரை ஒட்டி அனுப்பிவைத்தார்.

நான் ஸ்ரீபெரும்புதூருக்குச் சென்று திரும்பியவுடன், கட்டுரை எழுதிவிட்டு மதுரைக்குச் சென்ற இரண்டு நாட்களில், சுபா சுந்தரம் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

துக்ளக் இதழில் கட்டுரை வெளியானதும் ராஜீவ் கொலை பற்றி விசாரணை நடத்தி வந்த சிறப்புப் புலனாய்வுக் குழுவில் உள்ள ஒரு அதிகாரி துக்ளக் அலுவலகம் வந்திருக்கிறார்.

துக்ளக் இதழில் வெளியான என்னுடைய கட்டுரையில் ‘படங்கள்: சுபா‘ என்று வெளியானது குறித்த விசாரணைக்கு அந்தக் கட்டுரையை எழுதியவரை விசாரிக்க வேண்டும் என்று கேட்டபோது, அதற்குப் பதில் சொல்லியிருக்கிறார் சோ.

“நான்தான் அவரைக் கட்டுரைக்காக அனுப்பினேன். முடித்துக் கொடுத்துவிட்டு அவர் கிளம்பிவிட்டார். தேவையில்லாமல் அவரை விசாரணைக்கு அழைத்து பீதி ஏற்படுத்துவது சரியில்லை. அவரை அனுப்பியவன் என்கிற முறையில் அவரிடம் என்ன கேட்க வேண்டுமோ, அதை என்னிடம் கேளுங்கள். நானே பதில் சொல்கிறேன்” என்று ஆசிரியரான சோ பதில் அளித்திருப்பதை துக்ளக் அலுவலகப் பொறுப்பில் இருந்தவர் சொன்னபோது, அவருடைய நம்பிக்கையின்மீது பெருமிதம் ஏற்பட்டது.

ஒசாமஅசா…

மிகவும் தயங்கித் தயங்கித் தொடர்ந்து முயற்சித்து, அவருடைய வாழ்க்கை அனுபவங்களைத் தொகுத்து குமுதம் இதழில் வெளியான ‘ஒசாமஅசா‘ தொடரைத் துவக்குவதற்கு சோ ஒப்புக்கொண்டதும் அவர் போட்ட கண்டிஷன், “நான் சொல்றேன்.. நீங்க எழுதுங்க. ஆனால், ‘எழுத்தும் தொகுப்பும்‘ என்று உங்க பெயர்தான் வரணும்.”

அதன்படியே 76 வாரங்கள் வரை குமுதத்தில் வெளியான தொடருக்குப் பெரும் வரவேற்பு. அதற்காகவே அவரை நூறு தடவைக்கு மேல் சந்தித்தேன்.

துக்ளக்கில் ஏற்கெனவே பதினான்கு ஆண்டுகள் நான் பணியாற்றியிருந்தாலும் அவருடைய அந்திமக் காலத்தில் நிகழ்ந்த இந்தச் சந்திப்புகள் மிகுந்த நெருக்கத்தை ஏற்படுத்தின. கேலியும் கிண்டலுமாகப் பல்வேறு இடங்களில் நகர்ந்த அந்தச் சந்திப்புகள், அவருடைய மனதில் உறைந்திருந்த பல நினைவுகளை அந்தரங்க சுத்தியுடன் வெளிப்படுத்தின.

“இதுதான் கடைசியாகக் கொடுக்கிற தொடர்னு வெச்சுக்குங்க. நான் எல்லாத்தையும் கொட்டிடுறேன். எது தேவையோ அதைப் பிறகு எடிட் பண்ணிக்கலாம். சில சென்ஸிட்டிவ்வான விஷயங்களை நான் பேசி நீங்க டேப் பண்ணியிருந்தாலும், அவை இந்தச் சமயத்தில் வெளியாவதை நான் விரும்பலை. ஒருவேளை, நான் இல்லாமல் போனபிறகு, அதை நீங்க வெளியிடணும்னு நினைச்சா வெளியிடலாம்” என்று மிகுந்த உரிமையுடனும் நம்பிக்கையுடனும் அவர் குரல் பிசிறச் சொன்னார். மிகுந்த நெகிழ்வுடன் நான் மென்மையாக அவர் காதோரம் பதில் சொன்னபோது, என்னுடைய குரலும் தாழ்ந்திருந்தது.

“ரொம்பவும் நம்பிக்கையோடு என்கிட்டே பகிர்ந்திருக்கீங்க.. நீங்க விரும்பாத எதையும் நான் எப்போதும் வெளியிட மாட்டேன் சார்..”

சொன்னதும் சாய்வான படுக்கைக்கு அருகில் அழைத்து, மிகவும் மெலிந்து போயிருந்த உறைந்த மெழுகைப் போன்ற கை விரல்களால் என்னுடைய கையை அழுத்தியபோது, அவருடைய கண்களிலும் உதட்டோரத்திலும் சிறு புன்னகை ஒட்டியிருந்தது.

அந்த அழுத்தமான நம்பிக்கை வெளிப்பட்ட தொடுதல் என்றைக்கும் உயிர்ப்புடன் உடனிருக்கும்!

– மணா, முப்பத்தாறு நூல்களை எழுதியிருக்கிறார். ‘துக்ளக்‘கில் பதினான்கு வருடங்கள் பணியாற்றியிருக்கிறார். சோவின் வாழ்வனுபவங்களைத் தொகுத்துத் தொடராகவும் எழுதியிருக்கிறார்.

தொடர்புக்கு: – manaanatpu@gmail.com

-தமிழ் ஹிந்து நாளிதழில் வெளியான சிறப்புக் கட்டுரை

மணா என்கிற எஸ்.டி.லக்ஷ்மணன் மதுரையில் 1960ஆம் ஆண்டு பிறந்தவர். விழிகள், கொல்லிப்பாவை இதழ்களில் 1977-ல் எழுதத் துவங்கினார். தமிழ் சிற்றிதழ் இயக்கத்தோடு நீண்ட தொடர்பு கொண்டவர். பின்னர் திசைகள், துக்ளக், ஜூனியர் விகடன், குமுதம், தீராநதி ஆகிய இதழ்களில் முக்கியப் பொறுப்புகளை வகித்திருக்கும் மணா முதல் தமிழ்ச் செய்தி நிறுவனமான அகிலா நியூஸ் நிறுவனத்தை ஆறாண்டு காலம் நடத்தினார். அவருடைய தமிழகம் பிரச்சினைக்குரிய முகங்கள், தமிழர்கள் மறந்ததும் மறக்காததும், தமிழகத் தொழில் முகங்கள், ஊர்மணம், தமிழ் மண்ணின் சாமிகள், தமிழகத் தடங்கள், ஆளுமைகள்-சந்திப்புகள்-உரையாடல்கள், நதிமூலம் உள்ளிட்ட பல நூல்கள் வாசகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்தவை. லக்ஷ்மா என்ற பெயரில் இன்னொரு விழிப்பு என்ற கவிதைத் தொகுப்பையும் எழுதியிருக்கிறார். தற்போது சென்னையில் வசிக்கும் இவர் புதிய பார்வை இதழில் இணை ஆசிரியர். நாளிதழ் ஒன்றின் ஆலோசகராகவும், தனியார் தொலைக்காட்சி ஊடகங்களில் கடந்த இரண்டரை ஆண்டுகளாகப் பல விதங்களிலும் பணியாற்றி வருகிறார்.

கலை, இலக்கியம், அரசியல் துறைகளில் தனிப்பெரும் அடையாளங்களாகத் திகழும் பிரபல ஆளுமைகள் கடந்து வந்த பாதைகளைச் சித்தரிக்கும் இந்த நூல் குமுதத்தில் தொடராக வெளிவந்த காலத்திலேயே பெரும் வரவேற்பைப் பெற்றது. மணாவின் சுவாரசியமான நடையில் அரிய தகவல்களுடன் எழுதப்பட்ட கட்டுரைகள்.

மணா தீராநதியிலும் புதிய பார்வையிலும் முப்பது ஆளுமைகளுடன் நிகழ்த்திய உரையாடல்களின் தொகுப்பு இது. கலை, இலக்கியம், அரசியல், பண்பாடு என விரியும் இந்த உரையாடல்கள் அனுபவம் சார்ந்தும் கருத்துக்கள் சார்ந்தும் புதிய வெளிச்சங்களைத் தருகின்றன.