பாரத தேசத்தில் தாவர உணவாளிகளின் சதவீதம் முப்பதுக்கும் குறைவு. அதுவும், இந்த ஒரு கழுதை ஆயுட்கால வருஷங்களில் மேலும் படிப்படியாகக் குறைய ஆரம்பித்துவிட்டதைப் பார்க்கிறேன். மீன் ஜல புஷ்பமாகி, முட்டை, முட்டைக்கோஸை முந்தி, காளான் தாவரமாகவே ஆகிவிட்டது. இன்னமும் சாணி போட்டு எச்சில் பிரட்டும் ஆசார பயங்கரவாதிகளின் வீடுகளில் கூட, அடுத்தத் தலைமுறையின் ஊட்டச்சத்து நலன் கருதி ‘வெளியே’ முட்டை சாப்பிட்டுக்கொள்ள அனுமதிக்கத் தொடங்கி விட்டார்கள். அது முட்டையின் தாய்க்கு முன்னேற்றம் அடைவதும் காலக்கிரமத்தில் நடந்துவிடுகிறது.

‘‘ஒரு முட்டையை வைத்துக்கொண்டு எத்தனை விதமான பதார்த்தங்கள் சமைக்க முடியும்?’’ என்று என் கல்லூரி தினங்களில் வி.பி. சற்குணநாதன் என்ற நண்பனொருவன் எடுத்துச் சொன்னான். தன் இயல்பில் முட்டைக்கு ருசி கிடையாது. ஆனால், சேர்மானங்கள் சரியாக அமைந்துவிட்டால் அதை அடித்துக் கொள்ள இன்னொன்று கிடையாது என்பதும் அந்தப் புண்ணியாத்மா சொல்லித்தான் எனக்குத் தெரியும்.

ஒரு சுப தினத்தைத் தேர்ந்தெடுத்தான். ‘‘இன்றைக்கு உனக்கு முட்டையின் அதி உன்னத ருசியை நான் அறிமுகப்படுத்தியே தீருவேன்” என்று சொல்லியிருந்தான். எனக்குச் சற்றுத் தயக்கமாக இருந்தது. ஒரு சிறு ஆர்வமும், உடன் பாரம்பரியத் தடையுணர்வும். சரி போ, தூணிலும் துரும்பிலும் இருப்பவன் முட்டையில் மட்டும் இல்லாமலா போய்விடுவான்? அவன் நம்மை அளித்துக் காப்பான்.

வி.பி. சற்குணநாதன் என்னை அடையாறு மத்திய கைலாசத்துக்கு எதிர்ப்புறச் சாலையில் அப்போதிருந்த ஓர் அசைவ மெஸ்ஸுக்கு அழைத்துச் சென்றான்.

உள்ளுக்குள் எனக்கு உதறிக்கொண்டிருந்தது. ஒரு கஞ்சா அல்லது கள்ளச் சாராய அனுபவத்துக்கு முதல்முறை போகும் பதற்றம். வெளியே காட்டிக் கொள்ளாதிருக்க நிரம்ப சிரமப்பட்டேன். முன்னதாக வீட்டுக்குத் தெரியாமல் அசைவம் சாப்பிட்டுக் கொண்டிருந்த என் உறவுக்கார உத்தமோத்தமர்கள் இரண்டு பேரை மனத்துக்குள் நினைத்துக் கொண்டேன். பித்தெனத் தொடங்கி வைத்த பிள்ளையார் சுழியர்கள். தவிரவும் அவர்கள் கட்டுடல் காளையர்கள். நானோ தர்பூசனிக்குத் தார்ப்பாலின் சுற்றியது போலிருப்பவன்.

‘‘அதாண்டா சங்கதியே. தயிர் சாதம் சாப்ட்டு ஒன்னால ஃபிட்டா இருக்கவே முடியாது. நியூட்ரிஷன் பர்சண்டேஜ் அதுல ரொம்பக் கம்மி. சொல்லப் போனா, இல்லவேயில்ல. நீ திங்கற எதுலயுமே புரோட்டீன் கிடையாது. தெரியுமா ஒனக்கு?’’ என்றான் சற்குண நல்லவன்.

ஒரு கலவையான உணர்வில் அன்று நானிருந்ததை இப்போது நினைத்துக் கொள்கிறேன். அதற்கு மேலே ஒரு லேயர் பயத்தின் டாப்பிங்ஸ்.

ஆச்சா? மெஸ்ஸுக்குச் சென்று உட்கார்ந்தோம். அழுக்கு பெஞ்சும் ஆடியபாத டேபிளும். ‘‘என்ன சாப்பிடற?’’ என்றான் சற்குணநாதன். என்ன சொல்லலாம்? ஒரு பிளேட் மைசூர் போண்டா. ஒரு மசால் தோசை. பிறகொரு காப்பி!

சற்குணநாதன் முறைத்தான். ‘‘பரோட்டா சொல்றேன். முட்ட பரோட்டா. இங்க அது செம ஸ்பெஷல்’’ என்றான்.

ஆர்டரே கிடைத்துவிட்ட மாதிரி சப்ளையர் நகர ஆரம்பித்தபோது, உயிர்க்குலை நடுங்கும் தொனியில் அலறினேன். ‘‘இருங்க… இருங்க!’’

‘‘என்னடா?’’ என்றான் உத்தம புத்திரன்.

‘‘வேணாண்டா!’’

ஒரு மாதிரி பார்த்தான். ‘‘போடா லூஸு’’ என்று சொல்லிவிட்டு, தனக்கு மட்டும் எடுத்து வரச் சொல்லி சாப்பிட்டு முடித்தான்.

அந்தப் பத்துப் பதினைந்து நிமிடங்கள் அவன் சாப்பிடுவதையே பார்த்துக் கொண்டிருந்தேன். தொட்டபெட்டா ரோட்டுமேல முட்ட பரோட்டா. நீ தொட்டுக்கொள்ள சிக்கன் தரட்டா… கேட்டுக் கேட்டுப் பரிமாறிய சப்ளையரின் அக்கறையே அந்த உணவின் ருசியாக மாறியிருக்க வேண்டும்.

பிறகொரு சமயம் சற்குணநாதன் சொன்னான்: ‘‘வாழ்நாள்பூரா ஒனக்கு ருசின்னா என்னன்னே தெரியாமப் போயிடப் போவுது பாரு!’’

அந்தச் சொல் என்னை உறுத்தியது. ருசி என்பது காற்றைப் போல், கடவுள் போல் அங்கிங்கெனாதபடி நிறைந்திருப்பதல்லவா? ஒவ்வோர் உணவுக்கும் ஒரு ருசி. ஒவ்வோர் உணர்வுமே ஒரு ருசிதான்! இந்தப் பேருலகில் ருசியற்ற ஒன்று கிடையவே கிடையாது என்று தோன்றியது.

ஆனால், சிறந்தவற்றைத் தேடிப் பிடிப்பது ஒரு சாகசம். அது ஒரு வீர விளையாட்டு. பெரும்பாலும் காலைவாரி, எப்போதாவது காலர் தூக்கி விட்டுக்கொள்ளச் செய்கிற சுய குஸ்தி. நான் உணவில் தோயத் தொடங்கியது அதன் பிறகுதான்.

நான் வசிக்கும் பேட்டையில் அக்காலத்தில் தள்ளுவண்டி சுண்டல் வெகு பிரபலம். மணப்பாறை முறுக்கு, திருநெல்வேலி அல்வா, காஞ்சிபுரம் இட்லிபோல அந்தச் சுண்டலுக்கு வாழ்நாள் சந்தாதாரிகள் அதிகம். பத்து இருபது கிலோ மீட்டர் பஸ்ஸேறி வந்தெல்லாம் சாப்பிட்டுப் போகிறவர்கள் இருந்தார்கள். ஒரு பிளேட் சுண்டல் ஐந்து ரூபாய். அதில் எல்லாரீஸ்வரி பொட்டு சைஸுக்கு நாலு மசால் வடைகளை உதிர்த்துப் போட்டு மேலே கொஞ்சம் வெங்காயம், புதினா, கொத்துமல்லி தூவி, அதற்கும் மேலே என்னமோ ஒரு பொடியைப் போட்டுத் தருவார்கள்.

எத்தனை விசாரித்தாலும் அந்தப் பொடியில் என்னென்ன ஐட்டங்கள் கலந்திருக்கின்றன என்பதைப் பிரகஸ்பதிகள் சொல்ல மாட்டார்கள். ஆனால், அந்த அரை ஸ்பூன் பொடித் தூவல் கொடுத்த மணம் பேருந்து நிலையம் முழுவதையும் மணக்கச் செய்துவிடும்.

பிறகு வந்த துரித உணவகங்கள் சுண்டல் கடைகளைச் சாப்பிட ஆரம்பித்தன. பெரிய ஓட்டல்களின் பிராந்தியக் கிளைகள், சிறிய ஓட்டல்களோடு சேர்த்துத் துரித உணவகங்களை விழுங்கத் தொடங்கின. பீட்சாக்காரர்கள் வந்தார்கள். டோர் டெலிவரி சவுகரியத்தில் ஓட்டல்காரர்களின் பிழைப்பில் அரைப்பிடி மண்ணள்ளிப் போட்டார்கள்.

ஆயிற்று, முப்பது வருஷம். அந்தத் தள்ளுவண்டி சுண்டல் கடை பொடியின் நெடி மட்டும் என் நாசியில் அப்படியே தேங்கிவிட்டது!

இடைப்பட்ட காலத்தில் நானொரு உணவுத் தீவிரவாதியாக மாறியிருந்தேன். உடலைத் தாங்கி நிற்பது நாக்கு என்று முடிவு செய்து சகட்டு மேனிக்குச் சாப்பிடத் தொடங்கினேன். இனிப்பென்றால் குவிண்டாலில். காரமெனில் கிலோவில். பட்சண பலகாரம் எதுவானாலும் பத்துக்குக் கீழே தொட்டதே கிடையாது.

சொகுசுக்கு பங்கமின்றி என்னளவு தின்று தீர்த்தவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். கென்யாவில் இருந்து மொடொகெ (Moteke – ஒரு பிரமாதமான வாழைப்பழ டிஷ்), ஜப்பானில் இருந்து யூபா (சோயா பாலில் படியும் ஏடில் இருந்து செய்யப்படுவது) அரபு நிலத்தில் இருந்து ஒட்டகப் பால், சுவிச்சர்லாந்தில் இருந்து சாக்லேட், சைனாவில் இருந்து தேயிலைத் தூள், ஆஸ்திரேலியாவில் இருந்து அசகாய சீஸ் என்று தேடித் தேடி வரவழைத்துத் தின்ற ஜாதி நான்.

ஊறிய ருசிக்கு முன்னால் ஏறிய கலோரிகள் எம்மாத்திரம்? ஆனால், அனைத்தையும் நிறுத்திய நாளில்தான் எனக்கு அந்த சுண்டலுக்கு மேலே போட்ட வண்டலின் சூட்சுமம் பிடிபட்டது.

இது பேசித் தீராத கதை. மெல்லப் பேசுவோம்.

சுவை தொடரும்…
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள:
writerpara@gmail.com

img_0057