Monthly Archives: December 2016

10-நெருங்காதே நீரிழிவே! – டாக்டர் விஜயராகவன், சுஜாதா தேசிகன்


desikandr-vijayaraghavan

இதன் முந்தைய பகுதி…

சென்ற வாரம் இரண்டு கேள்விகளை கேட்டிருந்தேன்.
1.இந்தப் படத்தில் உள்ள ஒற்றுமை என்ன?
2.இந்தப் படத்தில் வேறுபட்ட நபர் யார்? எதனால்? (Who is the odd man out and why ?)

விடைகளைக் கண்டு பிடித்துவிட்டீர்களா?

முதல் கேள்விக்கான விடை – படத்தில் இருப்பது எல்லாம் பாலூட்டி வகையைச் சேர்ந்தவை (Mammals)”

இரண்டாவது கேள்விக்கான விடை – மனிதன். ஆனா காரணம் தெரியலை.”

கன்றுக்குட்டி, ஆட்டுக்குட்டி, நாய்க்குட்டி என்று எல்லாம் தன் தாயிடமிருந்து பாலைக் குடிக்கிறது. ஆனா மனிதன்?”

தாய்ப்பாலைக் குடித்துவிட்டு பிறகு பாக்கெட் பாலுக்கு மாறுகிறான்.”

அட ஆமாம்.”

எல்லா பாலூட்டிகளும் தன் தாயிடமிருந்து பால் சாப்பிடுவதைச் சில காலத்தில் நிறுத்திவிடுகிறது. இதை வீனிங் காலம் (Weaning period) என்பாங்க. ஆனால் நாம மட்டும்தான் தாய்ப்பாலை விட்டவுடன் மாட்டுப்பாலுக்கு மாறி பிறகு கடைசி மூச்சு வரை பாலைக் குடித்துக்கொண்டே இருக்கோம்!”

பால் நல்லதுதானே டாக்டர். எலும்பு எல்லாம் நொறுங்காம இருக்கும் என்று பஸ் பின்னாடி விளம்பரம் எல்லாம் செய்யறாங்களே.”

காந்திஜி ஆட்டுப்பால் குடித்தது மாதிரிதான் இது. பால் நல்லது என்று சொல்லிச் சொல்லி அதை நல்லதாக்கிவிட்டார்கள். அமரர் கல்கி இதைப் பற்றி நகைச்சுவையாய் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.

kalki-article

kalki-article-2

கைக்குழந்தை தாய்ப்பாலிலிருந்து பவுடர் பால் அல்லது பாக்கெட் பாலுக்கு மாறும்போது ஒன்றைக் கவனிச்சிருக்கீங்களா?”

எல்லா குழந்தைகளும் முதல் முறை அல்லது ஒரு வாரத்துக்கு எதுகளித்துக் கக்கும்.”

ஆமாம். ஏன் தெரியுமா?”

தெரியாது.”

நாம தாய்ப்பால் குடிப்பதற்குத்தான் ப்ரோகிராம் செய்யப்பட்டுள்ளோம். மற்ற இனத்துடைய பாலை நம் வயிறு ஏற்றுக்கொள்வதில்லை. சிறுகுடலில் ஒவ்வாமை ஏற்படும். இப்பகூட பாருங்க, குழந்தைகள் பால் குடிக்க முரண்டுபிடிக்கும். நமக்கேகூட வெறும் பாலைச் சாப்பிடப் பிடிக்காது. அதனால்தான் ‘ஃபிளேவர்டு மில்க்’ என்று கலர்கலராக சர்க்கரை கலந்து விற்கிறார்கள்.”

ஓ…”

சென்ற வாரம் கோதுமையில் இருக்கும் புரதம் வயிற்றைப் பாதிக்கும் என்று பார்த்தோமே, அதே போல பாலில் கேசின் (casein) என்ற புரதமும் வயிற்றைப் பாதிக்குது. அதனால்தான் டாக்டர்கள் குழந்தைக்கு 12 மாசம் தாய்ப்பாலைத் தவிர வேற எதையும் பரிந்துரைப்பதில்லை.”

ஆனா தாய்ப்பாலில் இருக்கும் அதே புரதம் தானே மாட்டுப்பாலிலும் இருக்கு. அப்புறம் ஏன் இந்தப் பிரச்னை?”

நல்ல கேள்வி. அதே புரதம்தான். ஆனால் சதவிகிதம் வேறு. உதாரணமா தாய்ப்பாலில் புரதம் 1.6 சதவிகிதம். ஆனா மாட்டுப்பாலில் 3.5 சதவிகிதம், ஆட்டுப் பாலில் 6.5 சதவிகிதம்; நாய்ப் பாலில் 7.1; முயலின் பாலில் 14.4 சதவிகிதம்.”

ஏன் இந்த மாதிரி?”

காரணம் இயற்கையின் புத்திசாலித்தனம். நம்ம பிறந்த எடை எப்ப இருமடங்காகிறது என்று பார்த்தால் இதற்கு விடை கிடைக்கும். குழந்தையின் எடை 180 நாட்களில் இரட்டிப்பாகும். கன்றுக்குட்டி 47 நாட்களில், முயல்குட்டி ஆறே நாட்களில்.”

இதில என்ன புத்திசாலித்தனம் இருக்கு?”

மனிதனுக்கு மூளைதான் முக்கியம். உடம்பு வளர்ச்சி இல்லை. ஆனால் மிருகங்களுக்கு உடனே வளரவேண்டிய நிர்ப்பந்தம். மாடு சீக்கிரம் வளர்ந்து புல் மேயப் போகவேண்டும்.”

சரி டாக்டர், இப்ப மாட்டுப்பாலைக் குடித்தால் என்ன ஆகும்?”

நம் உடலில் நல்ல வளர்ச்சி இருக்கும். ஆனால் மூளை வளர்ச்சி குறைவாய் இருக்கும். நிறைய குழந்தைகள் குண்டாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.”

அப்படிப் பார்த்தா கிருஷ்ணர் காலத்திலிருந்து, நம்ம தாத்தா, பாட்டி எல்லாம் பாலைத்தானே குடித்தார்கள்? திருப்பாவையில்கூட மாடுகள் பால் கொடுப்பதைப் பற்றி வந்திருக்கிறதே?”

keezhvaanam

திருப்பாவையில் ‘கீழ்வானம் வெள்ளென்று! எருமை சிறுவீடு’ என்று வருகிறது. அதாவது மாடுகள் பால் கறப்பதற்குமுன் பனிபடர்ந்த சிறு புல்வெளியில் மேய்கிறது. அதேபோல கன்றுகள் சாப்பிட்ட மிச்சத்தைத்தான் கறந்தார்கள் என்கிறாள் ஆண்டாள்.”

ஆனால் இன்று?”

மாடுகளுக்குப் பால் கறப்பதற்கு என்று கண்ட கண்ட தீவனத்தைக் கொடுத்து, பல ஊக்கமருந்து ஊசிகளைப் போட்டு ஹார்மோன்களைத் தூண்டி, கன்றுக்குட்டிக்குக் கொடுக்கிறார்களா, இல்லையா என்று தெரியாது. பால் கெட்டுப்போகாமல் இருக்க அதைப் பதப்படுத்தி, பாக்கெட்டில் அடைத்து நமக்குக் கொடுக்கிறார்கள். பிளாஸ்டிக் என்பதே விஷம் தான்!”

கலப்புக் கோதுமையில் இருக்கும் புதுப்புரதம் போல மாடுகளுக்குக் கொடுக்கும் தீவனம், ஊக்க மருந்து, ஹார்மோன்களால் அதில் இருப்பது பல கலவைகள்.”

அப்ப வெளுத்ததெல்லாம் பால் இல்லை!”

இன்னொன்றை கவனித்தீர்களா? எல்லா பாலூட்டிகளும் பாலை எப்படிச் சாப்பிடுகின்றன?”

தன் தாயின் முலைக்காம்பில் வாய் வைத்து உறிஞ்சுகிறது?”

இயற்கையின் இன்னொரு புத்திசாலித்தனமான ஏற்பாடு இது.”

ஓ… ஏன் அப்படி?”

பாலை உறிஞ்சும்போது வெளிக்காற்று படாமல் வயிற்றுக்குப் போகிறது. காத்து பட்டால் ஆக்ஸிடைஸாகி வயிற்றுக்குக் கெடுதல். ஆனா நாம அதை பாக்கெட்டில் போட்டு இயற்கையைவிட புத்திசாலி என்று எண்ணிக்கொண்டு இருக்கிறோம்.”

அப்ப புல் சாப்பிட்ட மாட்டின் பால் பரவாயில்லையா?”

புல் சாப்பிட்ட மாட்டின் பால் கிடைச்சா குடிக்கலாம். ஆனால் அவசியம் இல்லை.”

சரி டாக்டர், ஆனா பால் சாப்பிடவில்லை என்றால் நமக்கு கால்சியம் எங்கிருந்து கிடைக்கும்?”

முட்டைக்கோஸில் பாலைவிட அதிக கால்சியம் இருக்கு. அதை விட கீரையில் அதிக கால்சியம் இருக்கு. பாலில்தான் கம்மியாக இருக்கு. சரி மாடுகளுக்கு எப்படி கால்சியம் கிடைக்கிறது?”

தெரியலையே…”

இயற்கை… புல், தழைகளிலிருந்து கிடைக்கிறது. அவற்றுக்கு என்றாவது பல், எலும்பு பிரச்னை வந்திருக்கிறதா?”

அப்ப எலும்பு பலவீனமா இருந்தா பால் குடிக்க வேண்டாமா?”

சமீபத்தில் இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வில் ‘யாருக்கு எலும்பு முறிவு அதிகம் ஏற்படுகிறது?’ என்று பார்த்தார்கள். பால் அதிகம் சாப்பிடாதவர்களைக் காட்டிலும் சாப்பிட்டவர்களுக்கே அதிகமாக ஆஸ்டியோபோரோசிஸ் (Osteoporosis)என்னும் பாதிப்பு ஏற்பட்டது.”

அப்ப பால் சாப்பிட்டா எலும்பு வீக் ஆகிவிடுமா?”

அப்படி இல்லை இது ஒரு correlation ஆய்வு. பாலுக்கும் எலும்புக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். பால் சாப்பிடாத தேசங்களைக் காட்டிலும் பால் அதிகம் சாப்பிடும் தேசங்களில்தான் அதிக எலும்பு முறிவு ஏற்படுகிறது.”

அப்ப டி.வி.யில் விளம்பரம்?”

விற்பனைக்கு. நாமும் அதை நம்பி குழந்தைகளைச் சாப்பிடச் சொல்லித் திட்டுகிறோம்.”

சரி டாக்டர், பாலுக்கும் நீரிழிவுக்கும் என்ன சம்பந்தம்?”

சர்க்கரை சாப்பிட்டால், ரத்தத்தில் அதிக குளுக்கோஸ் இருக்கு. அதனால் இன்சுலின் அதிகமாகச் சுரக்கும் என்று சில வாரங்களுக்கு முன் பார்த்தோம். சர்க்கரை சாப்பிடாமலே இன்சுலின் அதிகமாகச் சில சமயம் சுரக்கும். இதற்கு இன்கிரடின் எஃபெக்ட் (incretin effect)என்பார்கள்.”

இது என்ன டாக்டர்?”

1966ல் ஓர் ஆய்வில் புரதங்கள் மற்றும் அமினோ அமிலங்களால் இன்சுலின் அதிகமாகிறது என்று கண்டுபிடிச்சாங்க. எட்டு வயது குழந்தைகளுக்கு மாமிசம், பால் இரண்டும் கொடுத்து இன்சுலின் ரெஸிஸ்டென்ஸ் எப்படி என்று 2005ல் ஆய்வு செய்ததில் பால் சாப்பிடும் குழந்தைகளுக்கு இன்சுலின் ரெஸிஸ்டென்ஸ் அதிகமாக இருந்தது.”

சுலபமாகப் புரியவேண்டும் என்றால் சாதம் சாப்பிட்ட பிறகு தண்ணீருக்குப் பதில் ஒரு கப்பால் சாப்பிட்டால் உங்க உடலில் அதிக இன்சுலின் சுரக்கும்.”

எவ்வளவு அதிகமா சுரக்கும்?”

300% இன்சுலின் அளவு அதிகரிக்கும். அதிக இன்சுலின்தான் பிரச்னை என்று முன்பே பார்த்தோம்.”

அப்ப பால் சாப்பிட்டால் உடல் இளைக்கும் என்கிறார்களே?”

சின்ன கோடு, பெரிய கோடு தத்துவம்தான். எதை வைத்து அதை முடிவு செய்கிறார்கள் என்று பார்க்க வேண்டும். பாலுடன் கோக், நூடுல்ஸை ஒப்பிட்டு அது நல்லது என்று சொல்லுவதுபோல்.”

பாலிலிருந்துதான் தயிர் கிடைக்கிறது. அதுகூட ஆபத்தா?”

பாலில் D – galactose என்ற ஒருவித சர்க்கரை இருக்கிறது. நல்லவேளையாக அது தயிர், சீஸில் இல்லை. சிம்பிள் ரூல்- பால், தயிர் அவசியம் இல்லை. அப்படியே சாப்பிட வேண்டும் என்றால் புல் சாப்பிட்ட மாட்டுப்பால், அதிலிருந்து கிடைக்கும் தயிரை எடுத்துக் கொள்ளலாம்.”

ஆனா எங்க வீட்டு 80 வயது பாட்டி தினமும் ராத்திரி பால் குடித்துவிட்டுத் தூங்க வேண்டும் என்கிறாளே?”

பாட்டி குடித்தது சுத்தமான பால், நீங்க சாப்பிட்டுக்கொண்டு இருப்பது பாக்கெட் பால். பாட்டி 80 வயது வாழ்ந்துவிட்டார். நீங்கள் வாழவேண்டாமா? பால் சாப்பிடுகிறீர்களோ, இல்லையோ நல்லா தூங்க வேண்டும். சரியா தூங்கலைனா அதுவும் நீரிழிவுக்கு ஒரு காரணம்.”

எட்டாவது ரூல்: நல்ல தூக்கம் வேண்டும் – அடுத்த வாரம்.

வாசகர்களுக்கு ஒரு சின்ன டெஸ்ட்: ஒரு வாரம் கோதுமை, பால் இல்லாமல் சாப்பிட்டுப் பாருங்க. உங்களுக்கே வித்தியாசம் தெரியும்!

-நன்றி கல்கி

Advertisements

மிதுனம்: 2017 ஆங்கில புத்தாண்டு பலன்கள்! – ஏ.எம்.ஆர்.


AMR

(மிருகசீரிஷம் 3-ம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ம் பாதம் வரை)

குடும்பம்:

ஜூலை மாதம் முதல் வாரம் வரை போதுமான வருமானமும், குடும்பத்தில் நிம்மதியும் நிலவும். முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். நீதிமன்ற வழக்குகளில் சாதகமான தீர்ப்பை எதிர்பார்க்கலாம். செப்டம்பர் மாதம் குருபகவான் அனுகூலமாக மாறுவதால்  தீர்த்த, தல யாத்திரையும், பெரியோர்களின் ஆசியும் கிட்டும்.

உத்தியோகம்:

புத்தாண்டின் முதல் ஆறு மாதங்களுக்கு சனிபகவான் அனுகூலமாக சஞ்சரிப்பதால், நிம்மதியான காலகட்டம் என்று கூறலாம். மேலதிகாரிகளின் ஆதரவும், சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் மன நிறைவையளிக்கும். ஜூலை மாதம் முதல் பணிகளில் சற்று கவனமாகவும், மேலதிகாரிகளிடம் அனுசரித்து நடந்து கொள்வதும் நல்லது.

ஆரோக்கியம்:

ஜூலை மாதம் முதல் வாரம் வரை உடல்நலன் திருப்திகரமாக இருக்கும். ஜூலை மாதம் இரண்டாம் வாரத்திலிருந்து கணவர் மிதுன ராசியானால் மனைவிக்கும், மனைவி மிதுன ராசியானால் கணவருக்கும் ஆரோக்கியக் குறைவு ஏற்படும்.

பொருளாதாரம்:

ஜூலை மாதம் முதல் வாரம் வரை போதுமான வருமானம் நிலவும். ஜூலை மாதம் இரண்டாம் வாரத்திலிருந்து எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். சில தருணங்களில் நிதி நெருக்கடி ஏற்படுவதற்கும் சாத்தியக்கூறு உள்ளது.

அறிவுரை:

உடல்நலனில் கவனம் வேண்டும். ஜூலை மாதம் முதல் திட்டமிட்டுச் செலவு செய்தல் மிகவும் அவசியம்.

பரிகாரம்:

fullsizerender-23

1. தினமும் தன்வந்திரி ஸ்தோத்திரம், ஆதித்ய ஹ்ருதயம், கந்தர் சஷ்டிக் கவசம், ஒரு தசகம் ‘ஸ்ரீமந் நாராயணீயம்‘ பாராயணம் செய்தல் நன்மை அளிக்கும்.

2. ஸ்ரீவாஞ்சியம் திருத்தல தரிசனம் நல்ல பலனளிக்கும்.

-நன்றி குமுதம் ஜோதிடம்

ரிஷபம்: 2017 ஆங்கில புத்தாண்டு பலன்கள்! – ஏ.எம்.ஆர்.


AMR

(கிருத்திகை 2-ம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் வரை)

குடும்பம்:

ஜூலை மாதம் 7-ம் தேதி வரை சிறந்த யோக பலன்களை அளிக்கும்படி கிரக நிலைகள் அமைந்துள்ளன. அதன்பிறகு சுமாராகவே இருக்கும். திருமண முயற்சிகள் கைகூடும். குடும்பத் சூழ்நிலை மகிழ்ச்சியளிக்கும். குழந்தைகளின் கல்வி முன்னேற்றம் பெருமையைத் தரும்.

உத்தியோகம்:

இப்புத்தாண்டில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஜூலை மாதத்திற்குப் பிறகு அலுவலகப் பிரச்சினைகள் ஏற்படக்கூடும். சற்று வளைந்து கொடுத்து, மேலதிகாரிகளுடன் அனுசரித்து நடந்து கொண்டால் போதும். மற்றபடி விபரீதப் பிரச்சினையேதும் ஏற்பட வாய்ப்பில்லை.

ஆரோக்கியம்:

ஜூலை மாதம் 7-ம் தேதி வரை ஆரோக்கியத்தில் நல்ல அபிவிருத்தி காணலாம். அதன்பிறகு சுமாராகவே இருக்கும்.

பொருளாதாரம்:

ஜூலை மாதம் 7-ம் தேதி வரை வருமானம் உயரும். பொருளாதார நிலை சீர்படும். குடும்பத்தில் நிகழும் சுப நிகழ்ச்சிகளினால் பணவிரயம் ஏற்பட்டாலும், சமாளிப்பதில் பிரச்சினையேதும் இராது. ஜூலை 8-ம் தேதிக்குப் பிறகு வீண் செலவுகளும், சிறு, சிறு குடும்பப் பிரச்சினைகளும் கவலையை ஏற்படுத்தும்.

அறிவுரை:

ஜூலை 7-ம் தேதிக்குப் பிறகு பண விஷயங்களில் சற்று ஜாக்கிரதையாக இருக்கவும். கூடிய வரையில் வீண் அலைச்சலைக் குறைத்துக் கொள்ளுங்கள். மற்றபடி கவலைப்படும்படி ஏதுமேற்பட வாய்ப்பில்லை.

பரிகாரம்:

1. தினமும் திருமலை ஸ்ரீ திருவெங்கடேசப் பெருமாளைப் பூஜித்து வந்தால் போதும்.

2. தினமும் காலையில் ஸ்ரீ கந்தர் சஷ்டி கவசத்தைப் பாராயணம் செய்து வருதல் அவசியம்.

-நன்றி குமுதம் ஜோதிடம்

மேஷம்: 2017 ஆங்கில புத்தாண்டு பலன்கள்! – ஏ.எம்.ஆர்.


3801c-amr

(அசுவினி, பரணி, கிருத்திகை முதல் பாதம் வரை)

குடும்பம்:

ஜூலை மாதம் 7-ம் தேதி வரை குடும்பப் பிரச்சினைகள் நீடிக்கும். இருப்பினும் அவற்றின் கடுமை படிப்படியாகக் குறையும். வருமானம் தேவைக்கேற்ப இராது. நெருங்கிய உறவினர்களிடையே தேவையற்ற வாக்குவாதமும், அதனால் அமைதிக் குறைவும் காணப்படும். திருமண முயற்சிகளில் தடங்கலும், குழப்பமும் ஏற்பட வாய்ப்புள்ளது. ஜூலை 7-க்குப் பிறகு குடும்ப சூழ்நிலையில் மிக நல்ல மாற்றம் ஏற்படும். வருமானம் படிப்படியாக அதிகரித்து, பணப் பிரச்சினை தீரும். ஆரோக்கியம் அபிவிருத்தியடையும். திருமண முயற்சிகள் நிறைவேறும்.

உத்தியோகம்:

தொழிலுக்கு காரகத்துவம் பெற்ற சனிபகவானின் மாறி, மாறி வரும் நிலைகளினால், உத்தியோகத்தில் சிறு சிறு பிரச்சினைகளும், மேலதிகாரிகளுடன் வாக்குவாதமும், பணிகளில் உற்சாகக் குறைவும் ஏற்படும். ஆகஸ்ட் மாதத்திலிருந்து வேலை பார்க்குமிடத்தில் நல்ல மாறுதலைக் காண முடியும். இடமாற்றத்தையும், மேலதிகாரிகளின் ஆதரவையும் அப்போது எதிர்பார்க்கலாம்.

ஆரோக்கியம்:

சனிபகவானின் வக்கிர கதி சஞ்சாரங்களினால் அவ்வப்போது சிறு, சிறு உடல் உபாதைகள் ஏற்படினும், அவை அனைத்தும் தாற்காலிகமாகவும், எளிய மருந்துகளினால் குணமேற்படும்படியாகவும் இருக்கும். ஜூலை 7-க்குப் பிறகு ஆரோக்கியம் அபிவிருத்தியடையும்.

பொருளாதாரம்:

ஜூலை மாதம் வரையில் பொருளாதாரத்தில் சிரமமான காலமென்றே கூற வேண்டியுள்ளது. அதன்பிறகு நிதி நெருக்கடி தளரும்.

அறிவுரை:

திட்டமிட்டுச் செலவு செய்வது அவசியம். முன்கோபம், அவசர முடிவுகளைத் தவிர்க்கவும்.

பரிகாரம்:

1. திருக்கோயில் தரிசனம்.

2. சனிக்கிழமைகளில் ஏழைக்கு உணவளித்தல்.

3. மறைந்த முன்னோரை பூஜித்தல்.

-நன்றி குமுதம் ஜோதிடம்

4-ருசியியல் சில குறிப்புகள்: பசி, சீனி, தானியம் கூடாது!


எனக்கு தேக திடகாத்திரம் காட்டுவதில் இஷ்டம் கிடையாது. ஓடுவது, பஸ்கி எடுப்பது, கனம் தூக்குவது, ஜிம்முக்குச் சென்று ஜம்மென்று ஆவதெல்லாம் சொகுசு சவுகரியங்களுக்கு ஹானியுண்டாக்கும். அவை எப்பவுமே நமக்கு ஆகாத காரியம். உட்கார்ந்த இடத்தில் உலகத்தை ஜெயிக்க என்னென்ன பிரயத்தனங்கள் உண்டோ, அதைச் செய்து பார்ப்பதில் ஆட்சேபணை இல்லை. எனது அதிகபட்ச ஆரோக்கியம் சார்ந்த எதிர்பார்ப்பு என்னவென்றால், குனிந்தால் நிமிர்ந்தால் மூச்சுப் பிடித்துக்கொள்ளாமல் இருந்தால் போதும் என்பதுதான்!

ஆ, மூச்சுப்பிடிப்பு! அது தர்ம பத்தினி இனக்குழுவைச் சேர்ந்ததொரு காத்திர இம்சை. வந்துவிட்டால் லேசில் போகாது. உருண்டு திரண்ட உடற்பந்தில் அந்து எந்தப் பிராந்தியத்தைத் தேர்ந்தெடுக்கும் என்றும் சொல்ல முடியாது. நான் உரமிட்டு வளர்த்த சதைப்பற்று மிக்க உடலானது, விதியேபோல் அடிக்கடி அப்பிடிப்புக்குத் தன்னை ஒப்புக் கொடுத்துவிடுவது வழக்கம். கடந்த சில வருஷங்களில் இந்த மூச்சுப் பிடிப்புச் சங்கடமானது ஒரு தீவிரவாத மனோபாவத்துடன் அடிக்கடி என்னை உபத்திரவப்படுத்திக்கொண்டிருந்தது. எதைக் குறைத்தால் இதைச் சரிக்கட்டலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தபோதுதான் எடை குறைத்தால் சரியாகும் என்று அசரீரி கேட்டது.

அங்கும் சிக்கல். நம்மால் ஓடியாட முடியாது. டயட் இருந்து குறைக்கலாம் என்றால் பசி தாங்கும் வல்லமை கிடையாது. நாவையும் நாபிக்கமலத்தையும் காயப்போட்டு வாழ்வதைக் காட்டிலும் ஜீவன்முக்தி அடைந்துவிடலாம். இது வெறும் பலவீனங்களாலான ஜீவாத்மா. பழிவாங்குதல் தகாது.

வேறென்ன செய்யலாம் என்ற தீவிர ஆராய்ச்சியில் இருந்தபோது சில உத்தமோத்தமர்கள் ஒரு சூட்சுமத்தைச் சொல்லிக்கொடுத்தார்கள். உடல் இயக்கத்துக்குத் தேவையான சக்தி என்பதை இரு வழிகளில் உற்பத்தி செய்யலாம். முதலாவது மாவுச்சத்து மூலம். அது நாம் எப்போதும் சாப்பிடும் அரிசி பருப்பு வகையறா. இரண்டாவது கொழுப்பு மூலம். இது பலான பலான வகையறா. மாவு ஜாதி அரிசி பருப்புகளைக் குறைத்து, கொழுப்பு ஜாதி பால் பொருட்கள் மற்றும் கொட்டை வகையறாக்களை உண வாக்கிக் கொள்வதன்மூலம் எடை யைக் குறைத்துவிட முடியும்.

இத்தகவல் மிகுந்த கிளுகிளுப்பைக் கொடுத்தது. ஏனென்றால், பகவான் கிருஷ்ண பரமாத்மாவுக்கு அப்புறம் சீரார் தயிர் கடைந்து, மோரார் குடமுருட்டி, ஆராத வெண்ணெய் விழுங்குவதென்றால் நமக்கு அல்வா உண்பது போல. எனவே முயற்சி செய்து பார்த்துவிடலாமே?

உடலியக்கத்துக்கான மொத்த சக்தியில் எழுபது சதவீதத்தைக் கொழுப்பில் இருந்து பெறுவது. ஒரு இருபத்தி ஐந்து சதத்தைப் புரதத்தில் இருந்து கபளீகரம் செய்வது. (இது கொஞ்சம் பேஜார். தாவர ஜீவஜந்துக்களுக்கு எத்தனை பரதம் ஆடினாலும் புரதம் கிட்டுவது கடினம். நிறைய மெனக்கெட வேணும்.) ஒரு ஐந்து சதம் போனால் போகிறது, மாவுப் பொருள் வழிச் சக்தி.

இதுவே அசைவ உணவாளிகளென்றால் மேற்படி ஐந்து சத மாவுச் சத்து கூட இல்லாமல் மொத்தத்தையுமே கொழுப்பு மற்றும் புரதத்தில் இருந்து எடுத்துவிட முடியும். நமக்குப் பிராப்தம் அப்படி இல்லையே? விளைகிற எந்தக் காய்கறியைத் தொட்டாலும் அதில் கார்போஹைட்ரேட் உண்டு. காதற்ற ஊசிகூடக் கடைவழிக்கு வரும். ஆனால் ‘கார்ப்’பற்ற காய் எதுவும் கடைத்தெருவுக்கு வராது என்பதுதான் யதார்த்த பதார்த்தம்.

விஷயத்துக்கு வருகிறேன். எடையைக் குறைத்தே தீருவது என்று முடிவு பண்ணியாகிவிட்டது. மேற்படி கொழுப்புப் புரட்சிக்கும் மனத்தளவில் தயாராகி ஒரு மருத்துவ சீலரை அணுகினேன். அவர் என் நண்பர். பெயர் புரூனோ. என்னைப் போலவே அகன்று பரந்த தேக சம்பத்து உள்ளவர். பிரமாதமாக ஜோதிடமெல்லாம் பார்ப்பார். காரசாரமாக எழுதுவார். வம்படியாக ஃபேஸ்புக் சண்டைகளில் பங்கு பெறுவார். மட்டுமன்றி, ஓய்ந்த பொழுதுகளில் மூளை, நரம்பு, மூட்டுப் பிராந்தியங்களில் உண்டாகும் வியாதிகளுக்கும் சொஸ்தமளிக்கும் வினோத ரசமஞ்சரி அவர். சொல்லும், வைத்தியரே! நான் என்ன செய்யலாம்?

ஒரு பேப்பரை எடுத்தார். மூன்று வரி எழுதினார். பசி கூடாது. சீனி கூடாது. தானியம் கூடாது. முடிந்தது கதை.

மேலோட்டமாகப் பார்த்தால் ரொம்ப சுலப சாத்தியமாகத் தெரியும். கொஞ்சம் தோண்டித் துருவிப் பார்த்தால் இது பகாசுர வம்சத்தையே கபளீகரம் செய்யக்கூடியது என்பது புரியும்.

பசி கூடாது என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. ஆனால் சீனி கூடாது என்றால்? இனிப்பான எதுவும் கூடாது என்று அர்த்தம். சீனிதானே கூடாது? வெல்லம் கூடும், கருப்பட்டி கூடும், தேன் கூடும் என்றெல்லாம் சொல்லப்படாது. அதெல்லாம் அபிஷ்டுத்தனம்.

தானியமென்றால் அரிசி தொடங்கி கோதுமை, கம்பு, கேழ்வரகு, சோளம், ஓட்ஸ், க.உ.து.ப. பருப்புகள் வரை எதுவும் கூடாது. இதில் சிறுதானியம் என்று சொல்லப்படுகிற குதிரைவாலி, தினை, சாமை ரகங்களும் விலக்கல்ல.

அட எம்பெருமானே, ஒரு சொகுசு ஜீவாத்மா வேறு எதைத்தான் தின்று உயிர் வாழும்?

டாக்டரான நல்லவர் ஒரு தீவிர அசைவி. நடப்பன, ஊர்வன, பறப்பனவற்றில் செரிப்பன என்னவாக இருந்தாலும் அவருக்குச் சம்மதமே. அவற்றில் தானியமில்லை. சீனி இல்லை. அவை குப்பையுணவும் இல்லை. தவிரவும் பெரும்பாலும் நற்கொழுப்பு. தரமான புரதம். இட்லி மாவு, அடை மாவு தொடங்கி எந்த மாவுச் சத்தும் கிடையாது.

‘என்னைப் பார், எப்படி இளைத்துவிட்டேன்!’ என்று காட்டிக்காட்டி இரும்பூதெய்தினார். பேசியபடியே ஒரு சின்ன டப்பாவில் எடுத்து வந்திருந்த வறுத்த பாதாமை மொக்கிக்கொண்டிருந்தார்.

அவர் இளைத்திருந்தது உண்மையே. அதுவும் நம்ப முடியாத அளவில்.

ஆனால் பாவப்பட்ட பாராகவன் வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடுகிறவனல்லவா? அவன் எப்படி ஓடிய ஆட்டையும் பாடிய மாட்டையும் பசித்துத் தின்னுவான்? தவிரவும் எனக்குப் பசிகூடப் பெரிய விஷயமில்லை. உண்ணுவதில் ருசி பெரிய விஷயம்.

image-4

உங்களுக்கு ஒரு தயிர்சாதம் எப்படித் தயாரிப்பது என்று தெரியுமா? தயிர் சாதத்துக்குத் தேவை, தயிரல்ல. நன்கு சுண்டக் காய்ச்சிய முழுக் கொழுப்புப் பால் மட்டுமே. பால் சாதம் கலந்து அரை ஸ்பூன் புளிக்காத தயிரை மேலே தெளித்துவிட்டால் போதும். அதுவே சில மணி நேரங்களில் தயிர்சாதமாகிவிடும். புளிக்காத அதிருசித் தயிர் சாதம். மேலுக்கு நீங்கள் வெள்ளரி போடுகிறீர்களோ, கேரட் போடுகிறீர்களோ, மாதுளைத் தூவுகிறீர்களோ, முந்திரி வறுத்து சொருகுகிறீர்களோ, அது உங்களிஷ்டம். என்னைப் போன்ற ரசனையாளி என்றால் ஒரு கை வெண்ணெய் அள்ளிப் போட்டுக் கலக்கத் தோன்றும். தாளிக்கும் கடுகை நெய்யில் தாளித்து, கொஞ்சம் மூடி வைத்திருந்து பிறகு திறந்து உண்டு பாருங்கள். பகவான் கிருஷ்ணரும் பாராகவனும் அவ்வாறு உண்டு வளர்ந்தவர்களே.

எனவே, ருசிசார் சமரசங்களே இல்லாத ஒரு சவுக்கியமான மாற்று உணவைக் கண்டறிந்துவிடுவது என்று முடிவு செய்துகொண்டேன். அதற்கு முதலில் நீ சமைக்கக் கற்க வேண்டுமடா என்றான் என்னப்பன் இருடீகேசன்.

சமையல் என்ற ஒன்றில்லாமல் சாப்பாடு என்ற இன்னொன்று வராது என்ற அளவில் மட்டுமே அதுநாள் வரை நான் அறிந்திருந்தேன். இப்போது நானே சமைப்பதென்றால் நல்லது பொல்லாததற்கு யார் பொறுப்பு?

நானேதானாயிடுக என்றான் நம்பெருமான். விட்டு வைப்பானேன்? முதல் காரியமாக சரவணா ஸ்டோர்ஸுக்குப் போய் ஒரு ஏப்ரன் வாங்கி வந்தேன்.

-தமிழ் ஹிந்து நாளிதழில் வெளியான கட்டுரை

– மேலும் ருசிப்போம்…

எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: writerpara@gmail.com

img_0057

 

2017 – என்ன சொல்கிறது ஆங்கிலப் புத்தாண்டு…? ஏ.எம்.ஆர்.


pillaiyaar-by-keshav

வாழ்க்கை எனும் கரடுமுரடான பாதைக்கு வழிகாட்டி உதவும் ஒளிவிளக்காகத் திகழ்கிறது ஜோதிடம் எனும் மாபெரும் கலை. வேதத்தின் அங்கமாகத் திகழும் ஜோதிட சாஸ்திரம், நேத்ரம் என்றழைக்கப்படுகிறது. எதிர்காலத்தில் நமக்கு நிகழவிருக்கும் இன்ப, துன்பங்களையும், அதனை எதிர்கொள்ள வேண்டிய மன உறுதியையும், பொறுமையையும் நமக்களித்து உதவுகிறது ஜோதிடம்.

2017-ம் ஆண்டு நமக்கு நன்மையைச் செய்யுமா என்பதை நவக்கிரகங்களின் சஞ்சார ரீதியில் பாப்போம்.

இந்த ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள், இந்த 2017-ம் ஆண்டின் ஜூலை மாதத்தில் நிகழவிருக்கும் ராகு-கேது பெயர்ச்சி, செப்டம்பர் மாதம் ஏற்படவுள்ள குருபகவானின் துலா(ம்) ராசி பெயர்ச்சி, மற்றும் சனிபகவானின் வக்கிர மற்றும் நேர்கதி சஞ்சார நிலைகளைக் கணித்து ஆராய்ந்து பார்த்து, சுருக்கமாக இங்கு கொடுக்க உள்ளேன்.

3801c-amr

என்றும் அன்புடன்,
உங்கள் ஏ.எம்.ஆர்.

hanuman-maha-periyava

எமது வாசக அன்பர்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்!

 

 

9-நெருங்காதே நீரிழிவே! – டாக்டர் விஜயராகவன், சுஜாதா தேசிகன்


desikandr-vijayaraghavan

இதன் முந்தைய பகுதி…

டாக்டர் பொதுவா குண்டாக இருப்பவர்களைப் பார்த்து ‘எந்தக் கடையில அரிசி வாங்குற’ என்று கிண்டலடிப்போம். ஆனா கோதுமைக்கு அரிசி பரவாயில்ல என்கிறார்களே?”

இப்ப கிடைக்கும் கோதுமையில நிறைய கெடுதல் இருக்கே.”

ஆனா நீரிழிவு உள்ளவங்களுக்கு ராத்திரி ‘சப்பாத்தி’ எடுத்துக்கோங்க என்று பரிந்துரைக்கிறார்களே… அப்ப அது பாதுகாப்பானது இல்லையா?”

வாயில் போட்டுக்கொள்ளாதவரை… அப்படி பார்த்தா வட இந்தியாவில் குறைந்த அளவே நீரிழிவு உள்ளவர்கள் இருக்க வேண்டும் இல்லையா?”

ஆமாம்.”

அப்படியில்ல. சப்பாத்தி என்றாலே பஞ்சாப்தான் நினைவுக்கு வரும். பஞ்சாப் கோதுமைன்னு கேட்டு வாங்குவோம். ஆனா அங்கேதான் நீரிழிவு, உடல் பருமன் இரண்டும் அதிகம். இந்தியாவின் சராசரி 9%; அங்கே 14%.”

ஓஹோ…”

அதுமட்டும் இல்ல, celiac பிரச்னையும் அங்கேதான் அதிகம்.”

அது என்ன பிரச்னை?”

சிறுகுடல் ஒவ்வாமை வயிற்றுப் பகுதியில் எரிச்சல், உப்புசம் என்று பல பிரச்னைகள் வந்து, 20 அடி நீள சிறு குடலில் எங்காவது பங்க்சர் செய்கிறது (leaky gut).”

சரி டாக்டர் இதற்கும் நீரிழிவுக்கும் என்ன சம்பந்தம்?”

சொல்றேன். ஆனா அதுக்கு முன்னே கோதுமையில் ஒரு முக்கியமான புரதம் க்ளூட்டன் (gluten) பற்றிக் கொஞ்சம் சொல்றேன்.”

மைதாவில் தானே இருக்கும்? கோதுமையிலுமா?”

கோதுமையிலிருந்துதானே மைதாவே கிடைக்கிறது. கோதுமை கி.மு. 3300ல் சாகுபடி செய்திருக்கிறார்கள். ஆனா இன்று நாம் சாப்பிடுவது எல்லாம் கலப்பினக் கோதுமை. நம்ம தாத்தா பாட்டி சாப்பிட்ட கோதுமையில கூட கலப்பினம் இல்லை. 1970க்கு அப்புறம்தான் இந்தப் பிரச்னையே.”

ஏன் அப்படி?”

மக்கள் தொகை, பஞ்சம் என்று பல காரணங்கள். டாக்டர் போர்லாக், கோதுமையில் கலப்புச் சாதனைகளை 1970ல் செய்தார்.”

கலப்பினம் செய்வது அவ்வளவு பிரச்னையா?”

இயற்கைக்கு விரோதமாக எது செய்தாலும் அது பிரச்னையே. பாரம்பரியக் கோதுமைச் செடி (புல் என்றுதான் சொல்ல வேண்டும் ) எல்லாம் நாலரை முதல் ஐந்து அடி வளரும். அதில் விளையும் தானியம் சிறியதாக இருக்கும். ஆனால் கலப்பினக் கோதுமைச் செடி குட்டையாக, சுமார் ஒன்றரை அடி முதல் இரண்டு அடிக்கு பாரம்பரியக் கோதுமையைக் காட்டிலும் அதிக விளைச்சல், தானிய அளவு பெரிசாக இருக்கும்.”

இதில் என்ன தப்பு?”

இரண்டு வகை கோதுமையைக் கலப்பு செய்து, தேவைக்கு ஏற்ப புதிதாக ஒன்றை உருவாக்குவார்கள். அதை மீண்டும் வேறு ஒன்றுடன் கலப்பு செய்து இன்னொன்றை… இப்படி மீண்டும் மீண்டும் கலப்பினம் செய்வார்கள்.”

இதுல என்ன பாதிப்பு?”

இரண்டு கோதுமையைக் கலப்பினம் செய்யும் போது 5% புதிய புரதம்கிடைக்கிறது. மீண்டும் மீண்டும் தேவையான உயரம், சைஸ் கிடைக்கும் வரை செய்வார்கள். இதனால் தனித்தன்மை வாய்ந்த விந்தையான புரதம் கிடைக்கும். விஞ்ஞானிகள் கலப்புடன் மேலும் சில உத்திகளைக் கையாளுகிறார்கள். அதனால் நமக்கு நூற்றுக்கணக்கான கலவைகள் அந்த விதையில் புதைந்து எல்லாமே டைம்பாம்தான். இயற்கையில் அந்த மாதிரி கலவைகளே கிடையாது. மனித இனம் அதை முதல் முதலில் சுவைக்கும் என்ன என்ன பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்று சொல்ல முடியாது!”

எந்திரன்’ படத்தில் வரும் வில்லன் ரோபோட் மாதிரி இருக்கே!”

அதைக் கண்டுபிடித்த விஞ்ஞானி ‘பசுமைப் புரட்சியின் தந்தை’, மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு என்ற பட்டத்தைப் பெற்றார்!”

ஆனா டாக்டர், இந்தக் கோதுமை பார்ப்பதற்கும், டேஸ்டுக்கும் ஒரே மாதிரிதானே இருக்கு?”

மனிதக் குரங்குக்கும் நமக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. நமக்கு 46 குரோமோசொம் என்றால் ஒராங் குட்டன் (காட்டு மனிதன் என்று பொருள்) 48 குரோமோசொம் இத்தனைக்கும் வால் கூட இல்லை. அந்த மனிதக் குரங்கை டின்னருக்கு அழைத்துக் கொண்டு போனால் என்ன ஆகும்?”

ஐயோ… ”

முடியாது, ஏன் என்றால் நமக்கும் அதுக்கும் உயிர் வேதியியல் (biochemical) மற்றும் உடலியல் வேறுபாடுகள் இருக்கின்றன. அதே போல பாரம்பரிய பழைய கோதுமையில் அதிக புரதம் இல்லை. ஆனால் புதிய கலப்பில் அதிகமான புதிய புரதம் மற்றும் அதில் இருக்கும் Gliadin நம்மை அழிக்கக்கூடிய வஸ்து (க்ளூட்டன் என்பது சிறிய கிளையாடின் (gliadin)புரதங்களின் கலவை).”

நீரிழிவுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?”

பொதுவாக தாவரத்தில் (amylopectin)அமைலோ பெக்டின் என்ற ஒன்று இருக்கும். இது ஒரு ஸ்டார்ச் வகை. தாவரங்கள் இங்கேதான் தங்களுக்கு வேண்டிய குளுக்கோஸை சேமிச்சு வைக்கும். இதில் அ, ஆ, இ என்று முன்று வகை இருக்கு.”

அதுல என்ன வித்தியாசம்?”

பருப்பு, பீன்ஸ் வகையில் இருப்பது இ வகை. இதுல கார்ப்ஸ் இருக்கு. ஆனால் சரியாக ஜீரணம் ஆகாது. அதாவது நம் உடல் அவற்றை ஏற்றுக் கொள்வதில்லை. அதனால்தான் பட்டாணி, ராஜ்மா போன்ற ஐட்டங்களைச் சாப்பிட்டால் கேஸ் வருகிறது. நம் உடல் அதிகமாக அதைப் பயன்படுத்தாமல் இருப்பதால் ரத்தத்தில் குளுக்கோஸ் அவ்வளவாக ஏறாது.”

வாழைப்பழம், உருளையில் கிடைப்பது ஆ வகை. அதில் கிடைக்கும் கார்ப்ஸ் ஓரளவு உடல் ஏற்றுக்கொள்ளும்.”

அ வகை?”

வேற என்ன கோதுமையில் இருப்பதுதான். நம் நாக்கில் பட்டவுடனேயே குளுக்கோஸாக மாற்றப்படுகிறது.”

ஏதோ சினிமாவில் போதைப் பொருள் விற்பவர் பவுடரை கட்டைவிரல் இடுக்கில் போட்டு நக்கிப் பார்க்கும்போது போதை ஏறுவது போல இருக்கே.”

நீங்க சொல்வதில் ஓர் அளவு உண்மை இருக்கு. நம்ம எச்சிலில் அமைலேஸ் (amylase) என்ற என்சைம் இருக்கு. அது உடனே உறிஞ்சிக் கொள்கிறது. இதனால் மூளையில் ஓப்பியம் போதைப் பொருளுக்கு நிகரான தாக்கத்தை ஏற்படுத்தி, பசியைத் தூண்டி விட்டு, அதிகம் உண்ண வைக்கிறது கோதுமை என்பது தான் உண்மை. இது மட்டும் இல்லை, லெக்டின் (lectin) என்று இன்னொரு புரதம் கோதுமையில் இருக்கிறது. அது முன்பு பார்த்த லெப்டின் ஹார்மோனைத் தடை செய்கிறது. அதனால் என்ன நடக்கும்?”

பசித்துக்கொண்டே இருக்கும். நீங்கள் குண்டாகிக்கொண்டே இருப்பீர்கள். தாகம் எடுக்கும் போது கிணறு தோண்ட ஆரம்பிப்பது எவ்வளவு முட்டாள்தனமோ அதே மாதிரி கோதுமையை சாப்பிட்டுவிட்டு மருந்து சாப்பிடுவது. போனஸாக மைதாவில் செய்யப்படும் பேக்கரி ஐட்டங்களில் சேர்க்கப்படும் ரசாயனப் பொருட்கள் கணையத்தைப் பாதித்து இன்சுலின் சுரக்கும் பீட்டா செல்களை அழிக்கிறது.”

நம்ம தாத்தா பாட்டி இறந்த காரணத்தைக் கேட்டால் வயசாயிடுத்து” என்பது தான் பதிலாக இருக்கும். ஆனால் இன்று யாரும் அப்படி இறப்பதில்லை, ஏதோ ஒரு வியாதியால் நவீன ஆஸ்பத்திரியில் இறந்து போகிறார்கள்.”

தப்பு எங்கே நடக்குது ?”

கலப்பினம் இன்னொன்று தானியங்களைத் தீட்டுவது. இதனால் அதில் உள்ள நார்ச்சத்தை நீக்கி அதை மிஷினில் டால்கம் பவுடர் மாதிரி அரைத்துச் சலித்து, சாப்பிடுகிறோம். சப்பாத்தி உப்பினால் அது உங்க மனைவி செய்யும் மாயம் இல்லை, க்ளூட்டனின் மேஜிக்.”

அப்ப அரிசி?”

சாதத்தை கோதுமையைப் போல அரைத்து சாப்பிடுவதில்லை. அதனால் பரவாயில்லை. நீரிழிவு இல்லாதவங்க சிவப்பு அரிசி அல்லது புழுங்கல் அரிசி கொஞ்சமாக உபயோகிக்கலாம்.”

நீரிழிவு உள்ளவங்க?”

தவிர்ப்பது நல்லது. 100 கிராம் அரிசியில் இருக்கும் அதே அளவு கார்ப்ஸ்தான் கிட்டத்தட்ட கோதுமையிலும் இருக்கு. சர்க்கரைக் கட்டுப்பாட்டை பொறுத்து டாக்டர் அறிவுரைப்படி எடுத்துக் கொள்ளுங்கள்.”

ஏழாவது ரூல் : பால் அவசியம் இல்லை… அது எதனால்?

-நன்றி கல்கி

அதற்குமுன் ஒரு சின்னப் புதிர் :

இந்தப் படத்தில் உள்ள ஒற்றுமை என்ன?

இந்தப் படத்தில் வேறுபட்ட நபர் யார்?

எதனால்? ( Who is the odd man out and why?)

விடை அடுத்த வாரம் !