மறைத்ததைக் காட்டிய கண்ணன் – பா.சி. ராமச்சந்திரன்பெங்களூருவில் கிருஷ்ணராஜபுரம். அங்கிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் வாசலில், பெரிய கதவருகே நான் நின்றேன்.

ஒரு நேபாளி கூர்க்கா ஓடிவந்து எனக்கு சல்யூட் அடித்துவிட்டு, “”யாரு பேகு?” என்று கன்னடத்தில் கேட்டான். எங்கிருந்தோ வந்த நேபாளி கன்னடம் பேசுகிறான்.

“மிஸ்டர் மாதவன்…” என்றேன்.

“அவரு மூர்ணே மாடி…”  என்று இன்னொரு சின்ன நேபாளியிடம் சொல்ல, அவன் என்னை லிஃப்டில் மூன்றாவது மாடிக்கு அழைத்துப்போய் ஒரு போர்ஷனைக் காட்டி, சல்யூட் அடித்துவிட்டு கீழே சென்றுவிட்டான்- லிஃப்டில்.

நான் நின்றுகொண்டிருக்கும் போர்ஷனின் கதவு மூடப்பட்டிருந்தது. கதவின்மேல் சுவாமி ஐயப்பனின் படத்தோடு கூடிய “தர்ம சாஸ்தா‘ என்றொரு ஸ்டிக்கர்.

அழைப்பு மணியை அடித்தேன்.

சில நொடியில் கதவு பாதி திறக்க, உயரமாய் ஒரு மனிதர். காவி வேட்டியும், துண்டுமே அவர் ஒரு பக்திமான் என்று காட்டியது. உள்ளே ஸ்ரீபட்டத்ரியின் “நாராயணீயம்‘ ஒலித்துக்கொண்டிருந்தது.

“மிஸ்டர் மாதவன்?”

“நான்தான்… உங்களுக்கு என்ன வேண்டும்?” என்றார்.

நான் விஷயத்தைச் சொல்ல, கதவை பெரிதாகத் திறந்தார்.

ஹாலினுள் மெத்தென சோபாவில் அமர, காவிரித் தண்ணீரோடு வந்தார் மாதவன்.

“இன்னும் கொஞ்ச நாளில் பெங்களூர், ஹைதராபாத் ஆகிவிடும் போலிருக்கிறதே… என்ன வெய்யில்…”

“பாவிகள்… ஏமாந்தால் லால் பாக்கையும் கப்பன் பாக்கையும் வெட்டி வீடு கட்டி விடுவார்கள்” என்றார் மாதவன்.

நான் மெதுவாக விஷயத்தை ஆரம்பித் தேன்.

“குருவாயூர் கோவிலில் உங்களுக்கு ஓர் அதிசயமான சம்பவம் நடந்ததாகக் கேள்விப்பட்டேன்… அதை எழுத ஆவலாக உள்ளது… என்ன நடந்ததென்று சொல்ல முடியுமா மிஸ்டர் மாதவன்?”

சிறிதுநேரம் கண்களை மூடி யோசித்தார்.

வீட்டுச் சுவர்களில் பெரிது பெரிதாக குருவாயூரப்பனின் படமும், சுவாமி ஐயப்பனின் படங்களும் சந்தன மாலையோடு தொங்கிக்கொண்டிருந்தன. அதனருகே ஒரு பெண்மணியின் படங்களும் சந்தனமாலையோடு இருந்தன. நாராயணீயத்தை மெதுவாக்கினார்.

“சார்… நான் ஐம்பது வருஷங்களாக தொடர்ந்து சபரிமலை போய்வருகிறேன். சபரிமலை யாத்திரை முடிந்ததும் நேராக வீட்டுக்கு வருவதில்லை. இரண்டு நாட்கள் குருவாயூர் தரிசனம் முடிந்துதான் பெங்களூரு வருவேன்…” என்றார் மாதவன்.

ஒரு மகனின் வீட்டிற்கு “தர்ம சாஸ்தா‘ என்றும், இன்னொரு மகன் வீட்டிற்கு “பம்பா வாசா‘ என்றும் பெயரிட்டிருக்கிறார் மாதவன். சபரிமலை, குருவாயூர் இரண்டும் அவருடைய கண்கள்; அத்தகைய பக்தி!

சுமார் பத்து வருடங்களாக அவருடைய மனைவியின் பிறந்தநாளான ஏப்ரல் 4-ஆம் தேதி, அவரையும் குருவாயூர் அழைத்துப் போவதை வழக்கமாகக்கொண்டிருந்தார். ஏப்ரல் இரண்டாம் தேதியே குருவாயூர் சென்று தங்கி, நான்காம் தேதி காலை மூன்று மணிக்கே நிர்மால்ய தரிசனமும் மற்ற தரிசனங்களும் மனைவியோடு முடிப்பார். கடைசியில் ஒரு முதியவர் அரவணப் பிரசாதம் என்கிற நிவேதனத்தை பக்தர்களுக்குக் கொடுப்பார். கூட்டம் முண்டியடிக்கும். பிரசாதம் பலருக்கு கிடைக்காமல் போய்விடும். ஆனால் மாதவன் உயரமாய் இருப்பதால், அவர் நீண்ட கையில் பிரசாதம் வந்துவிழும். அதை அப்படியே எடுத்து கண்களில் ஒற்றிக்கொண்டு, கூட்ட நெரிசலுக்கு பயந்து தூரத்திலிருக்கும் மனைவியிடம் சென்று பாதியைக் கொடுத்துவிட்டு மீதியை உண்பார் மாதவன்.

இந்த 2016-ஆம் ஆண்டு ஏப்ரல் நான்காம் தேதியும் மாதவன் அரவணப் பிரசாதம் வாங்க முண்டியடித்து முன்னேறினார். ஆனால் கூட்டத்தில் முன்னேற முடியாதவாறு அவர் பூணூல் ஒரு பெண்மணியின் கைப்பையில் மாட்டிக்கொள்ள, அந்தப் பெண்மணியாலும் பிரசாதம் வாங்க முன்னேற முடியவில்லை. ஒருவழியாக உயரமான மாதவன் பிரசாதம் வாங்கிவிட்டார். கைப்பையில் மாட்டியிருந்த பூணூல் அறுபடாமல் அந்தப் பெண்மணி பிரசாதம் வாங்க முயல, அதற்குள் தீர்ந்துவிட்டது. அவள் முகத்தில் ஏமாற்றம். உடனே மாதவன் அந்தப் பிரசாதத்தில் பாதியை அவளுக்குக் கொடுத்துவிட்டார்.

அதை அந்தப் பெண்மணி மகிழ்ச்சியோடு வாங்கிக் கொண்டு நகர, மாதவன் அதிர்ந்து நின்றார். அரவணப் பிரசாதத்தில் ஒரு பாதியை மனைவிக்குக் கொடுத்துவிட்டு, மீதியை தான் உண்பதுதான் அவர் வழக்கம். இன்று வேறு யாரோ பங்குபோட்டுவிட்டார்களே என்று அந்தப் பெண்மணியைத் தேடினார். அங்கும் இங்கும் ஓடினார். அந்தப் பெண்மணியைக் காணவில்லை.

அப்பொழுதுதான் அவர் புத்தியில் உறைத்தது. காரணம், அவர் மனைவி விஜி 2015-ஆம் ஆண்டு ஜூன் மாதம் இறைவனடி சேர்ந்துவிட்டார். மனைவி இல்லாவிட்டாலும் இந்த வருடமும் அவரது பிறந்தநாளன்று குருவாயூருக்கு வந்தபோதுதான் இந்த விசித்திர அனுபவம் ஏற்பட்டது. மனைவியின் பங்கை வாங்கிக்கொண்டு போன பெண்மணியை கோவிலில் எங்கு தேடியும் காணவில்லை.

img_4442

மீண்டும் குருவாயூரப்பனை பார்க்கிறார். கண்களில் நீர் பெருகுகிறது.

“கிருஷ்ணா… இதெல்லாம் உன் திருவிளையாடலா… விஜி உன் காலடியில்தான் கிடக்கிறாளா?’பிரமிக்கிறார் மாதவன்.

“அப்போ… அடுத்த 2017 ஏப்ரல் 4-ஆம் தேதியும் குருவாயூர் போவீர்களா மாதவன்?” என்றேன்.

“கண்டிப்பாய் போவேன். மறுபடியும் என் விஜியை குருவாயூரப்பன் எனக்கு காட்டாமல் விடமாட்டான். என் உயிர் உள்ளவரை போவேன் சார்…”

சுவரில் சிறு வயது பத்மினியைப்போல் ஒரு படம்; அறுபது வயதில் எடுத்த இன்னொரு படம். இரண்டு படங்களுக்கும் சந்தன மாலை அணிவித்து விளக்கேற்றி வைத்திருக்கிறார் மாதவன்.

மனைவியிடம் அன்பா… பக்தியா என்று புரியாமல் தவித்தேன் நான்.

“ஓ.கே. மாதவன்… நான் வருகிறேன்…” என்று புறப்படுகிறேன். என் பின்னால் நாராயணீயம் பெரிதாய் ஒலிக்கிறது.

2 thoughts on “மறைத்ததைக் காட்டிய கண்ணன் – பா.சி. ராமச்சந்திரன்

  1. D. Chandramouli November 24, 2016 at 3:41 AM Reply

    Very touching !

  2. rjagan49 November 24, 2016 at 5:58 AM Reply

    Ovvaruvarukkum ovvoru anubhavam! Krishna leelai!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s