ஓர் அரேபிய இரவு! -J.R.


Jayaraman Raghunathan's Profile Photo

“ நாளைக்கு வியாழக்கிழமையாயிற்றே, வருகிறீர்களா?”

“ எங்கே வர வேண்டும்?”

“இரான் ஆப்பிள் செண்டர் அருகே ஃபர்ஸ்ட் ஸ்கொயர் தாண்டி 148ஆவது ஸ்ட்ரீட்டில் ரெமாசானிக்கு! பர்வின் பொலீவார்டு வழியா க வந்து இடது புரம் திரும்ப வேண்டும்”

” அங்கென்ன விசேஷம்?”

”வந்து பாருங்களேன்!”

எனக்கு அரேபிய இரவுகளும் ஸ்ட்ராபெர்ரி ஹுக்காவும் அதன் ஆரஞ்சுப்புகையும், டேபிள்களுக்கு இடையே ஊடாடும், இடுப்பு தெரியும் சர்வர் நங்கைகளும் அவர்களின் தங்கத்தட்டின் மேல் பரப்பி வரும் ஷிஷ்லிக்கும், சிலோ கெபாபும் லிபிய மற்றும் அல்பெலா பொலொவும் கண்ணில் மின்ன சரி என்று தலையாட்டினேன்.

கொஞ்சம் கதை வசனம் உங்களுக்குச்சொல்ல வேண்டும்.

போன வாரம் வைஸ் ப்ரெசிடெண்ட் கூப்பிட்டனுப்பினார்.

” எதிர்பார்த்த மாதிரியே நாசர் அல் மஹ்ரூக்கி கவுத்துட்டான் ரகு!”

“அய்யோ! என்ன ஆச்சு க்ரிஷ்?”

” அதான் இரான் கோட்ரோ கம்பெனி!”

“ என்ன நம்ம ப்ரொபோசல் காலியா?”

“இல்லப்பா! நம்ம ப்ரொபோசல்தான் ஷார்ட் லிஸ்டட்!”

“ அட ! அப்பறம் என்ன க்ரிஷ்?”

“நீ வேற! நாசர் அல் மஹ்ரூக்கி இப்ப காலை வார்ரான்! அவனால தனியா டெமோ பண்ண முடியாதாம்!”

“ நாசமாப்போக! ஒரு வாரம் உயிர விட்டு ட்ரயினிங் குடுத்தோமே!”

“ அவனுக்கு கான்ஃபிடென்ஸ் இல்லியாம்! உன்ன அனுப்பச்சொல்றான்!”

நானா? நேத்துதான் சிட்னிலேர்ந்து வந்திருக்கேன்! நான் இப்ப மறுபடி கிளம்பினா, லதா ஹை கோர்ட்டுக்குப்போய்டுவா?”

“வேற வழியே இல்ல ரகு! ஒரு மில்லியன் டாலருக்கு மேல ரெவின்யூ! கிளம்பிடு! நா வேணா லதா கிட்ட பேசறேன்!”

நாசர் அல் மஹ்ருக்கியை கெட்ட வார்தையில் திட்டிக்கொண்டே அன்று இரவு டெஹ்ரானுக்குக்கிளம்பினேன்.

நாசர் இருக்கானே அவன் ஒரு ரசிக்கக்கூடிய ராஸ்கல்.

ஒமார் ஷ்ரீஃப் போன்ற வசீகர முகம். கச்சிதமாக திருத்தப்பட்ட ப்ரஷ் மீசை, ஒன்றிரண்டு நரை எட்டிப்பார்க்கும் ராயசம். தீபாவளி கம்பி மத்தாப்பு பத்த வைப்பது போல சிகரெட்டை ஒன்றை விட்டு ஒன்றைப்பற்ற வைத்து ஊதுவான். சுலபமாகச்சிரிப்பான். சாயங்காலம் சாப்பிட ஆரமித்தால் நடு இரவு வரை விடாமல் சாப்பிடுவான். இவன் புண்ணியத்தில் என் வெயிட் ஏறினதுதான் மிச்சம்.

எங்களின் இரானிய ஏஜண்ட். அட்சரம் சாஃப்ட்வேர் தெரியாது. என்னமோ இவந்தான் ஸ்டீவ் ஜாப்ஸுக்கு வேலை கத்துக்கொடுத்தா மாதிரி பேச்சு. உட்கார்ந்து செய்ய வேண்டிய வேலையானால் கை விரித்து விடுவான்.

“ழகு! உங்க ஆளுங்கள அனுப்பு! எல்லாம் துடியாக இருக்கானுவ! என்ன சாப்பிடுவீங்க மெட்ராஸுல?”

“ஒண்ணும் இல்லை! உடம்பு வளைஞ்சு சிரத்தையா வேலை செய்யணும், அவ்வளவுதான்!”

“ஓ! அவ்வளவு கஷ்டம் என்னால ஆகாது” என்று சிரிப்பான். உடனேயே, “ கம் ழகு! லெட்ஸ் க்ராப் ய ஃபிலாஃபெல்” என்று சடுதியில் அக்கம்பக்கத்து சாப்பாட்டு கிளப்பில் நுழைந்து விடுவான்.

ஒவ்வொரு நாளும் வீடு வீடு என்று மூன்று வேற வேற இடத்துக்கு போகும் அவனைக்கேட்டேன்.

”என்னடா தகிடு தத்தம் இது? நேத்து வீடுன்னு கிழக்குப்பக்கம் போனே! இன்னிக்கு வடக்கால போறியே?”

சொன்னான்.

அவனுக்கு மூன்று மனைவிகள்!

எப்போதும் போல டெஹ்ரான் ஏர்போர்ட்டில் ஆரவாரமாக வரவேற்றான்.

“ ஆருயிர் நண்பா ! ழகு! தெரியும் நீ வந்து விடுவாய் என்றூ!”

“ ஒரூ வாரம் இங்க வந்து ட்ரெயின் பண்ணினேனே! எதுக்குடா என் தாலிய அறுக்கற?”

பக பகவென சிரித்தான். “ கூல் ழகு!”

வளர்த்துவானேன்.

அடுத்த நாள் காலை ஒன்பதிலிருந்து மாலை ஐந்து வரை குடாய்ந்து குடாய்ந்து கேள்விகேட்டார்கள் இரான் கோட்ரோ ஆசாமிகள். ஒரு வழியாக திருப்தியானவுடன் காண்ட்ராக்ட் காசு பத்தி ஆரம்பித்தார்கள். ஏகப்பட்ட கறிகாய் பேரத்துக்குப்பிறகு ஒரு வழியாக எதிர்பார்த்ததுக்கு மேல் கொஞ்சம் கொசுறு கேட்டு வாங்கி கையெழுத்திட்டார்கள். அந்த சந்தோஷத்தில் நாசர் அப்படியே சிகரெட், கண்ராவி செண்ட் மற்றும் வியர்வை நாத்தத்துடன் என்னைக்கட்டிக்கொண்டான்.

இரான் கோட்ரோவின் ஜெனெரல் மானேஜர் பெஹ்ரூஸ் என்னை அவர் வீட்டுக்கு விருந்துக்கு அழைத்தார்.

“நாம் இப்போது பிஸினஸ் பார்ட்னர்கள். இன்று என் வீட்டில் உனக்கு விருந்து. என் மனைவி லாலெஹ் அருமையாகச்சமைப்பாள்!”

“நான் கொஞ்சம் கஷ்டமான விருந்தினன்! வெஜெட்டெரியன் மட்டும்தான்!”

“ கூல்! நாங்களும் முழுக்க முழுக்க வெஜிட்டேரியன்ஸ்!”

“என் மூன்றாவது மனைவிக்கு இரண்டு மாதமாக பீரியட் தள்ளிப்போகிறது.டாகடரிடம் போக வேண்டும், என்னை மன்னித்துவிடுங்கள்!”

நாசர் விலகிக்கொள்ள பெஹ்ரூஸ் அவரே என்னைக்காரில் வீட்டுக்கு அழைத்துப்போவதாகச்சொன்னார்.

அவர் வீட்டு ஹால் ஏதோ நம் பக்கத்து வீட்டின் ஹால் போல ரம்யமாக இருந்தது. உள்ளிருந்து ஊதுவத்தி மணம். சன்னமாக எங்கோ ஒரு பாடல் ஒலி. பேஹாக் ராகம் போல ஒரு குழைவும் இழைவும். பெஹ்ரூஸின் மனைவி லாலெஹ் சின்னதாக வெளிர் முகத்துடன் தாராள சிரிப்புடன் இருந்தார்.

“யூ லைக் ரசம்?”

அபார எலுமிச்சை ரசம். ஆனால் கொத்தமல்லிக்குப்பதிலாக புதினா வாசம்! சோளத்தில் பண்ணின ரோடியும், சுரைக்காயில் செய்த சப்ஜியும், இரானிய ஸ்வீட்டுமாய் அமர்க்களமான விருந்து. சாப்பிட்டவுடன் ஹாலில் உட்கார வைத்து க்ரேன்பர்ரியில் செய்த ஜூஸில் தேன் விட்டு பாதாம் பொடிகள் தூவின ஒரு அமிர்ததோடு உண்ட மயக்கம்!

”ழகு! நாளைக்கு மாலை நீங்கள் ஃப்ரீயாக இருந்தால் உங்களை ஒரு இடத்துக்கு அழைத்துப்போக ஆசை?”

” ஃப்ரீதான்! எங்கே?”

சரியாக ஏழு மணிக்கு ஓட்டல் வாசலிலிருந்து கால் பண்ணி அழைத்துக்கொண்டு போனார்.

”நேத்து லாலெஹ் சொன்னாளே அதான் இந்த ஃபர்ஸ்ட் ஸ்குயர்! அப்படிப்போய் திரும்பினால் 148 ஆவது ஸ்ட்ரீட்.”
சற்றே குறுகிய பாதை. அமைதியாக இருந்தது. எந்த வீட்டிலும் அதிக வெளிச்சமில்லை. தெருவில் நெறய கார்கள். ஆனால் அதிக நடமாட்டம் இல்லை. அந்தக்கால மர்ஃபி ரேடியோ போல சதுரமும் செவ்வகமும் இல்லாத ஒரு கட்டிடம். அபார்ட்மெண்ட் போல இருந்தது. மூன்று மாடிகள் தான் இருக்கும். உள்ளே நுழைந்து இடது பக்கம் படியேறி ஒரு சிறு லேண்டிங்கில் திரும்பி மறுபடி மேலேறினோம். சட்டென்று விரிந்த காரிடார். எதிர் எதிரே ரெண்டு கதவுகள். வலது பக்கத்தைத்தேர்ந்தெடுத்து தட்டினார்.

உள்ளே மெல்லிசாக பேச்சுக்குரல். எனக்கு அட்ரினலின் ப்ரவாகம்!

திறக்கப்பட்ட கதவில் நுழைந்தோம்.

நீண்ட பாதையில் ஷூக்களைக்கழற்றச்சொன்னார். தாண்டினால் மஹா ஹால். முன்னால் ஒரு இருபது பேர் அமைதியாக உட்கார்ந்திருந்தனர். ஒரு பக்கமாக ஆண்களும் அந்தப்பக்கம் பெண்களும். எல்லோரும் பர்தாவை தூக்கி கழுத்தில் சுற்றியிருந்தனர். அபார அரேபிய பளபளப்பு முகங்கள். மெல்லிய குரலில் கிசுகிசுப்பான அரபிக் பேச்சு தவிர அமைதிதான்.

எல்லோருக்கும் முன்னால் எதிரே பெரிய சிம்மாசனம். மலர் அலங்காரம். கால் வைத்துக்கொள்ள ஒரு சின்ன ஸ்டூல். அதிலும் பட்டுத்துணி போர்த்தப்பட்டு ஒரு குழந்தை மலர் காத்திருந்தது. ஊதுவத்தி மணம்.

” பெஹ்ரூஸ்! எப்படி சாத்தியம் இது?”

” எல்லாம் அவர் கருணைதான்! இது வரை எங்களிடம் யாரும் எதுவும் கேட்டதில்லை!”

அந்த சிம்மாசனத்தில் பரந்த தலை முடியுடன் சிவப்பு அங்கியோடு அபய ஹஸ்தம் காட்டும்…………..
புட்டபர்த்தி சாய் பாபாவின் உருவப்படம்.

”தினக் தினக்” என்று ஒரு சின்ன மேள சப்தத்துடன் இரான் தலை நகரில் ஆப்பிள் செண்டருக்கு அருகேயுள்ள 148ஆவது ஸ்ட்ரீட்டில் வியாழக்கிழமை பஜன் ஆரம்பித்தது .

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s