நாத்திகர் கட்டிய வராஹர் கோயில்!


மதுரை கிராஃபிகோ அச்சக சேஷாத்ரிக்கு 78 வயதாகிறது. மதுரை அருகே அயிலங்குடியில் ஸ்ரீலக்ஷ்மி வராகசுவாமிக்கு இவர் ஒரு கோயில் கட்டி கும்பாபிஷேகமும் செய்துவிட்டார். வாழ்நாள் முழுக்க கம்யூனிஸ்டாக வாழ்ந்த சேஷாத்ரிக்குக் கடவுள் நம்பிக்கை அறவே கிடையாது. அவர் எப்படி ஒரு கோயில் கட்ட முடியும்?

சேஷாத்ரியிடம் நீங்கள் எப்படி இந்தக் கோயிலைக் கட்டினீர்கள்” என்று கேட்டால், நானா கட்டினேன்? அவனாக அல்லவா கட்டிக்கொண்டான்!” என்பார்.

சேஷாத்ரியின் நெருங்கிய நண்பர் வழக்கறிஞர் மணிவண்ணன் சொன்னார்: எனக்குத் தெரியும், சேஷாத்ரிக்குக் கடவுள் நம்பிக்கை கிடையாது என்று. குழந்தைக்கு உடம்பு சரியில்லை என்று யாராவது வைத்தீஸ்வரன் கோயிலுக்குக் கொண்டு போனால், ‘அங்கே ஏன் போகிறீர்கள்? அவனா காப்பாற்றுவான்? நல்ல டாக்டரிடம் கொண்டு போங்கள்!’ என்று கிண்டலாகப் பேசுவார். ஒருநாள் அவரைப் பார்த்தபோது, ‘ஏன் சோர்ந்து போய் கவலையுடன் இருக்கிறீர்கள்?’ என்று கேட்டேன். ‘நான் லக்ஷ்மி வராகசுவாமிக்குக் கோயில் கட்டிக்கொண்டிருக்கிறேன்’ என்றதும் என்னால் நம்பவே முடியவில்லை. கடவுள் நம்பிக்கை உள்ளவர்களைக் கிண்டல் செய்பவர் அவர். அவரா இப்படி மாறிவிட்டார் என்று வியந்தேன். ஒரு நாள் என்னை காரில் ஏறிக்கொள்ளச் சொன்னார். அங்கே போனதும் கோயில் வேலை கிட்டத்தட்ட முடிந்து சிலை நிறுவுவதற்குத் தயாராகத் தண்ணீரில் வைக்கப்பட்டிருந்தது.

‘எப்படி நீங்கள் நாத்திகராக இருந்து இப்போது ஆத்திகராக மாறினீர்கள்’ என்று அவர் வாயைக்கிளறினேன்.

‘நான் அங்கே என் பிள்ளைகளுக்கும் எனக்கும் வீட்டு மனை வாங்கலாம் என்றுதான் போனேன். பத்திரப்பதிவு எல்லாம்கூட முடிந்து விட்டது. திடீரென்று மனசில் ஒரு கேள்வி முளைத்தது. இது லக்ஷ்மி வராஹ சுவாமி இடம் அல்லவா? அடுத்த நிமிடம் அந்த எண்ணத்தைத் துடைத்து எறிந்தேன். ஆனால், அன்று இரவு முழுதும் என்னால் தூங்க முடியவில்லை. கண்ணை மூடிக்கொண்டால் லக்ஷ்மி வராஹ சுவாமிதான் உள்ளே தெரிந்தார். என்னை இப்போது பயம் பிடித்து ஆட்டத் தொடங்கியது. அயிலங்குடிக்குப் போகலாம் என்று புறப்பட்டபோது, லக்ஷ்மி வராஹ சுவாமி படம் புத்தக அலமாரியிலிருந்து கீழே விழுந்தது. நான் சிறிதும் தாமதிக்காமல் அயிலங்குடிக்குப் புறப்பட்டேன். ‘இதெல்லாம் ஏன் நடக்கிறது என்றே எனக்குத் தெரியாது. இது உன் இடம். இந்த இடத்தில் உன்னை எப்படி வைப்பது என்றுதான் எனக்குத் தெரியவில்லை!’ இதை நான் சொல்லிக் கொண்டிருந்தபோது, எனக்கே சிரிப்பு வந்தது. நான் கடவுளிடமா பேசிக் கொண்டிருக்கிறேன் என்று என்னையே கேட்டுக் கொண்டேன்.

‘அப்புறம் நடந்ததெல்லாம் மாயாஜாலம் போல் இருந்தது. யாரோ ஒருவர் மகாபலிபுரம் கூட்டிக்கொண்டு போகிறேன் என்று வந்தார். அவர் ஒரு ஸ்தபதி. யாரோ சொன்னார்கள் என்று வந்தாராம். அவர் ஒரு படம் காண்பித்தார்: அது லக்ஷ்மி வராஹசுவாமி படம்! அப்புறம் எல்லாம் மளமளவென்று நடந்தன. வாஸ்து பூஜை முடிந்தது. நான் என் பிரின்டிங்க் தொழில், என் குடும்பம், குழந்தைகள் எல்லாவற்றையும் மறந்து போய் விட்டேன். பணம் தேவைப்பட்டபோது என் பணக்கார சினேகிதர்களிடம் கேட்பேன். உனக்கில்லாததா என்று கொடுத்தார்கள். பறந்து கொண்டே இருக்கும் ஸ்தபதி செல்வநாதன் எனக்கு ஒரு ஸ்கெட்ச் தயார் செய்துகொண்டு வந்து பின் பலமுறை மதுரை வந்து போனார். அவருக்கு நான் கொடுத்த தொகை மிகக் குறைச்சல். இஞ்சினீயர் ராம்நாத் தம் பணிகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, என் கோயில் வேலையைக் கவனித்தார். 2013ல் சம்ரோக்ஷணம் ஆயிற்று.

பெருமாளை உள்ளே பிரதிஷ்டை செய்ய வேண்டும். எனக்கு ஒரே கவலை. திடீரென்று எங்கிருந்தோ 20 தொழிலாளர்கள் வந்தார்கள். ‘நாம எப்பவுமே சாமி மேலேதானே பாரத்தைப் போடுவோம்? இப்ப சாமி நமக்கு ஒரு பாரமா இருக்க மாட்டார். இப்ப பாருங்க, சாமி ஒரு பூ மாதிரி தன்னோட எடத்துக்குப் போயிருவார்!’ என்று 8 அடி உயரமும் நாலே முக்கால் அடி அகலமும் உள்ள சிலையை மெல்ல மெல்ல உள்ளே நகர்த்திச் சென்றார்கள்.

சிலையை எப்படி நேராக வைக்கப் போகிறார்கள் என்று கவலைப்பட்டேன். சாமியை வேண்டிக் கொண்ட தொழிலாளர்கள் ஆவேசம் வந்தவர்கள் மாதிரி ஒரே தூக்காகத் தூக்கி சிலையை நிற்க வைத்துவிட்டார்கள்! பிர திஷ்டை தின கும்பாபிஷேகத்தின் போது, கோபுரக் கலசத்துக்குப் புனிதநீரை எடுத்துக் கொண்டு போன போது, எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன்,‘என்ன கருடனையே காணலையே!’ என்றார். அடுத்த நிமிடம் ஐந்து கருடன்கள் கோபுரத்தின் மேலே வட்டமடித்துக் கொண்டு வந்தன!”

பின்னர் மதுரை ராமகிருஷ்ணா மடம் சுவாமி கமலாத்மானந்தர் வந்து வராஹ ஜெயந்தியை நடத்தி முடித்தார்.

அங்கே சன்னிதியில் நிற்கும்போது, ஒரு வைப்ரேஷன் தெரிகிறது!” என்றார் போய்விட்டு வந்த நண்பர் ஆர்.வி. ராஜன்.

சாருகேசி

(இந்த வார கல்கி வார இதழில் இருந்து…)

Advertisements

One thought on “நாத்திகர் கட்டிய வராஹர் கோயில்!

  1. rjagan49 October 25, 2016 at 5:23 PM Reply

    Divine calling! God answers prayers and also select some non believer to Bless him!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s