பவானியின் நெய்க் காராபூந்தி! – பாக்கியம் ராமசாமி


மும்பையிலிருந்து பவானி வரும்போதெல்லாம் நெய்க் காராபூந்தி செய்துகொண்டு வருவாள். என் மைத்துனனின் மனைவி. சகல கலைகளும் கைவரப் பெற்ற குடும்பப் பெண். எந்தச் சிறு காரியமாயினும் பெரிய செயலாயினும் அம்சமாக கோப்பியமாகச் செய்வாள்.

நெய்க் காராபூந்தி அபூர்வ பட்சணமல்ல. ஆனால் பவானி செய்துகொண்டு வரும் நெய்க் காராபூந்தியில் ஒரு விசேஷம். முத்துக்களைத்தான் அவள் மாவில் தேய்க்கிறாளா, தோய்க்கிறாளா என்ற சந்தேகம். ஓரொரு தடவையும் ஏற்படும். ஒரே ஒரு சின்னக் காராபூந்தியில்கூட மெலிவு, நலிவு, கோணல் மாணல் எதுவும் காணப்படாது.

அந்தக் காராபூந்தி முத்துக்களில் ஒன்றுகூட ஊனம் உள்ளது அல்ல.

அழகான சிறு தட்டில் அவள் காராபூந்தியைப் போட்டு வந்து தரும்போது அவற்றைத் தின்பதை மறந்து அதன் அழகை ரசிக்கவே தோன்றும்.

நம்ம வீட்டில் இல்லாத நெய்யா, மாவா, அடுப்பா, உழைப்பா? பவானி மட்டும் எவ்வாறு இவ்வளவு சீராக அந்த முத்துக்களைத் தயாரிக்கிறாள். ஏதாவது யந்திரத்தின் உதவியா? அவளிடமே ஒரு தடவை கேட்டாயிற்று.

கலையில் அழகுக்கு அப்படி ஒரு தன்மை. அதனுடைய செப்பம் தனக்கும் தெரியவேண்டும், அந்த அழகினை நாமும் நமது முயற்சியால் அடைய வேண்டும் என்று அவா தோன்றுவது இயல்பு. ஒரு பேனா நன்றாக எழுதினால், ‘எங்கே கிடைக்கும். என்ன பிராண்ட்’ என்று அறிய விரும்புவதுபோல நெய்க் காராபூந்தியின் ரகசியத்தை பவானியிடம் மனைவி இந்தத் தடவை கேட்டே கேட்டுவிட்டாள்.

பவானி மிருதுவான சிரிப்புடன், “ஒரு மிஷினும் இல்லையே அக்கா. சாதாரண ஜாங்கிரினி கரண்டியில் சாதாரணமாகத் தேய்ப்பதுபோல்தான் தேய்ப்பேன்.”

“அது எப்படி ஒன்றுகூடக் கோணலில்லை. நசுங்குதல் இல்லை. மாவைப் பதமாகக் கரைத்துக் கொள்வாயா?”

“அதுவா அக்கா, அதொன்றுமில்லை. சாதாரணமாகத்தான். எல்லாம் கலந்துதான் வரும். நான் மொத்த காராபூந்தி செய்ததும், ஒரு அகலத் தட்டில் கொட்டிப் பரப்பி, எந்தெந்த பூந்தி சரியான உருவத்தில் இல்லையோ அவற்றையெல்லாம் பொறுக்கி எடுத்து விடுவேன். நல்ல முழுமையானதைத்தான் ரிலீஸ் செய்வேன்!”

“கடவுளே! இதுதானா உனது காராபூந்தி ரகசியம்? அப்புறம் நீக்கிய காராபூந்தியை என்ன பண்ணுவாய்?”

“காக்காய் பின்னே எதற்கு இருக்கு? போட்டுவிடுவேன்.”

நாங்களும் இப்போது பவானி ஸ்டைலில் நெய்க் காராபூந்தி செய்கிறோம். ‘எப்படி இத்தனை மணி மணியாக’ என்று வியக்கிறார்கள் சாப்பிட்டவர்கள்.

அந்த ரகசியம் வாழ்க்கை ரகசியம். “எல்லாமே கலந்துதான் சிருஷ்டிக்கப்படுகிறது. வேண்டாததையும், தகாதவைகளையும், கெட்டவற்றையும் ஒதுக்கி ஓரம் கட்டி விட்டு, நல்ல முழுமையானவற்றையே நாம் பிரதிபலிக்கவேண்டும். இது ஒரு போலியான ஏமாற்று வித்தை அல்ல. வெற்றி ரகசியம். இறைவனைத் துதிக்கிறபோதுகூட நம் போலித்தனங்கள் நம்முடனே இருக்கும். அவற்றை அந்தத் துதிக்கும் சில நிமிடங்களுக்காவது பொறுக்கி எடுத்து தூரத் தள்ளிவிட்டு, அதை பற்றி நினைப்பில்லாமல் நல்லவற்றையே சிந்தித்தவாறு கடவுளை பிரார்த்திக்கவேண்டும்.

அந்தப் பழக்கம் நாளா வட்டத்தில் எல்லா நேரத்திலும் நாம் நல்லவற்றோடு நன்முத்தாக பிரகாசிக்க உதவி செய்யும்.

பவானியின் பாம்பே நெய்க் காராபூந்தி கற்றுக் கொடுத்த பாடம் இது.

Advertisements

3 thoughts on “பவானியின் நெய்க் காராபூந்தி! – பாக்கியம் ராமசாமி

  1. cnsone September 20, 2016 at 4:48 PM Reply

    The same technic was followed by Photographers too. Under exposed and out of focus prints will be removed before showing the rest to friends or customer!

  2. Ramachandran September 21, 2016 at 4:35 AM Reply

    அருமையான பதிவு

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s