மறக்க முடியாத ஆசிரியர் சாவி! – கடுகு


Inline image 1

சாவி அவர்களைப் பற்றிய இந்தக் கட்டுரைக்கு இந்தத் தலைப்பு பொருந்தவே பொருந்தாது. ஏதோ நான் அவரை மறக்க முயற்சிப்பதுபோலவும், மறக்க முடியாது தவிப்பதுபோலவும் அர்த்தம் தொனிக்க வாய்ப்புண்டு. ஆகவே இதற்குச் சரியான தலைப்பு: என்றும் நினைவில் வாழும் ஆசிரியர் சாவி!


நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் இந்தச் சமயத்தில் அவரைப் பற்றிப் பக்கம் பக்கமாக எழுதலாம். நான் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் உள்ள பல எழுத்தாளர்கள், கலைஞர்கள், அரசியல்வாதிகள், நகைச்சுவை ரசிகர்கள் எல்லாரும் இதையேதான் கூறுவார்கள். அதுதான் சாவி அவர்களின் தனிச்சிறப்பு.

ஆசிரியர் சாவி என் மேல் அளவு கடந்த அபிமானம் கொண்டவர். “நீங்கள் என் மனசாட்சியின் காவலர்’ என்று எழுதியிருக்கிறார். எத்தனை எத்தனையோ விஷயங்களில் என் ஆலோசனைகளைக் கேட்டிருக்கிறார். மகிழ்ச்சிகரமான விஷயங்களை எல்லாம் சொல்லி சந்தோஷப்பட்டிருக்கிறார். சோகம், ஏமாற்றம், கஷ்டம், நஷ்டம் போன்றவற்றையும் என்னிடம் பகிர்ந்து கொண்டு ஆறுதல் அடைந்திருக்கிறார்.
saavi

சின்னக் குழந்தையைத் தலைமேல் வைத்து கொஞ்சுவது சகஜம். அந்தக் குழந்தை, கொஞ்சுபவரை விட உயர்ந்துவிட்டதாக நினைத்துக் கொள்ளலாமா? கூடாது. சாவியும் பல எழுத்தாளர்களை அப்படித் தூக்கிப் பாராட்டி, ஊக்கமூட்டி, தட்டிக் கொடுத்து அவர்களுக்கே தெரியாத திறமைகளை வெளிக்கொணர்ந்து அவர்களை உயரத் தூக்கி எழுத்துலகில் பிரகாசிக்கச் செய்திருக்கிறார். காரணம், அவர் பத்திரிகை ஆசிரியர் என்பதைவிட, எழுத்தாளர் என்பதைவிட, சிறந்த ரசிகர் என்பதே! எந்தக் கட்டுரையானாலும், கதையானாலும், சின்னச் சின்ன நகாசு வேலைகளைக் கூர்ந்து கவனித்து, மனதாரப் பாராட்டியிருக்கிறார்.

“பாருங்கள், என்னமா கலகலவென்று எழுதியிருக்கிறார்” என்று சொல்லுவார். ஆசிரியர் கடிதமோ, சினிமா விமர்சனமோ, தலையங்கமோ எல்லாவற்றிலும் ஏதாவது அழகை, வார்த்தை ஜாலத்தை, சாமர்த்தியமான வர்ணனையை ரசித்து, பொற்கொல்லர் வைர நகை செய்யும்போது வைரக்கல்லைச் சாவணத்தால் எடுத்து வைப்பதுபோல், தான் ரசித்த சின்னச் சின்ன விஷயங்களை தானும் ரசித்து மற்றவரையும் ரசிக்கச் செய்வார். அடடா, அவரிடம் நான் கற்ற பாடங்களுக்கு அளவில்லை.

சாவி அவர்களின் “வாஷிங்டனில் திருமணம்’ தமிழ் இலக்கிய உலகில் ஒரு மைல்கல். சிறிய மைல்கல் அல்ல. ஆளுயர மைல்கல்! அந்த நகைச்சுவையை யாராலும் இதுவரை மிஞ்ச முடியவில்லை.

அமெரிக்காவையோ, வாஷிங்டனையோ பார்த்திராத அவர் எழுதிய வர்ணனைகள் அபாரமானவை. அந்தத் தொடரைப் படித்தபோது நானும் அமெரிக்காவைப் பார்த்ததில்லை. ஆகவே வர்ணனைகள் என்னை அசத்திவிட்டன.
சில ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கா வந்து வாஷிங்டனைச் சுற்றிப் பார்த்தபோதுதான் அவர் வர்ணனையின் திறமையை முழுதுமாக ரசித்து வியந்தேன். சமீபத்தில் ஒருவர் “வாஷிங்டன் திருமண’த்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து இருந்தார். அதை என் பார்வைக்கு அனுப்பி இருந்தார். சுமார் ஐம்பது வருட இடைவெளிக்குப் பிறகு படித்தபோது, அவருடைய கற்பனைகளும், சிலேடைகளும், உரையாடல்களும் என்னை அசத்திவிட்டன. (இத்தனைக்கும் மொழிபெயர்ப்பில் சில சிலேடைகளைக் கொண்டு வர முடியவில்லை) ஆனால், வாஷிங்டனில் நான் பார்த்த பல இடங்களைப் புகைப்படம் எடுத்த மாதிரி வர்ணித்து இருந்தார். அபாரம்!
சாவி அவர்களின் பெயர், நிச்சயம் இன்னும் ஒரு நூற்றாண்டு இருக்கும்.
சாவி அவர்கள் என் நெஞ்சில் நிறைந்தவர் மட்டுமல்ல; உறைந்து இருப்பவரும்கூட!

-சாவி நூற்றாண்டுக்காக தினமணி கதிரில் வெளியான கட்டுரை

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s