4-உ.வே. ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் – நேர்காணல் – சி.கே. வெங்கட்ராமன்


இவரது சொற்பொழிவுகள் நடக்காத ஊர்களே இந்தியாவில் இல்லை என்னுமளவிற்கு நாடெங்கிலும் உபன்யாசம் செய்துவருபவர் உ.வே. ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகள். இந்தியா மட்டுமல்லாது, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா, அமீரக நாடுகள் என உலகநாடுகள் பலவற்றுக்கும் பயணித்து பாரதத்தின் பெருமையையும், ஸ்ரீவைஷ்ணவத்தின் சிறப்பையும் நிலைநாட்டி வருகிறார். ஸ்ரீமத் பாகவதம், விஷ்ணுபுராணம், பகவத்கீதை, ராமாயணம், மஹாபாரதம், ஆழ்வார் பாடல்கள், தமிழ் வேதங்கள் எனப் பல தலைப்புகளில் தமிழிலும் ஆங்கிலத்திலும் உபன்யாசம் நிகழ்த்துகிறார். ‘கிஞ்சித்காரம்‘ என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றை ஏற்படுத்தித் திருக்கோவில் புனரமைத்தல், இறைப்பணி செய்தல், நாலாயிர திவ்வியப் பிரபந்தம் கற்க உதவுதல் போன்ற கைங்கரியங்களைச் செய்துவருகிறார். பிரவசன சங்கீதபூஷணா, ஸ்ரீ ராமானுஜ சேவகா, உபன்யாச கண்டீரவா, சொல்லின் செல்வர் என்பதுட்படப் பல்வேறு கௌரவங்களைப் பெற்றவர். இவரது உரைகள் 200க்கும் மேற்பட்ட குறுந்தகடுகளில் வெளியாகியுள்ளன. உபன்யாசங்களுக்காக அமெரிக்காவுக்கு வந்திருக்கும் இவருடன் தென்றல் பதிப்பாளர் சி.கே. வெங்கட்ராமன் உரையாடினார். அந்த உரையாடலின் தொடர்ச்சி இதோ…

தென்றல்: யார் தர்மத்தைக் காக்கிறார்களோ அவர்களை தர்மம் காக்கிறது என்று பெரியோர் கூறியிருக்கிறார்கள். இன்றைக்கும் இது உண்மையா? இதற்கு கண்கூடான உதாரணம் ஏதும் சொல்ல முடியுமா?

ஸ்ரீ வேளுக்குடி: தர்மம் என்பது, இன்றைக்கு தர்மம் செய்கிறோம், உடனே அது நம்மைக் காக்கும் என்பதோடு நிற்காது; பகவான் நம்மை தர்மம் செய்யச் சொல்லியிருக்கிறார் என்பதற்காகச் செய்யப்பட வேண்டியதுதான் தர்மம். பகவானும் கீதையில் இதுபற்றிச் சொல்லியிருக்கிறார். சாஸ்திரம் இன்ன தர்மம் வேணும் இன்ன தானம் வேணும்னு சொல்லியிருக்கிறதோ அதுதான் தேவை. ‘எந்த பிரதிபலனையும் எதிர்பார்த்து நான் இதைச் செய்யவில்லை’ என்ற எண்ணத்தோடு செய்யவேண்டும். அப்பத்தான் அது தர்மமாகிறது.

குளம் வெட்டுதல், மரம் நடுதல், புலால் உண்ணாமை, அஹிம்சையைக் கடைப்பிடித்தல், சத்தியம் பேசுதல், பிறன் பொருளுக்கு ஆசைப்படாமல் இருத்தல், புலன்களை அடக்குதல் இதெல்லாமே தர்மத்தின் வெவ்வேறு வகைகள். இந்த தர்மங்களைக் கடைப்பிடித்தால் அவர் சொன்னதை நாம் செய்தோம் என்று இறைவன் சந்தோஷப்படுகிறார்,. அவர் சந்தோஷப்பட்டால் அவன் வாழ்வும் நலமாக இருக்கும். அது அவன் வாழ்வோடு நிற்காது. அவன் புண்ணியத்தைச் சேர்க்கிறான். அவன் சிறந்த புண்ணியசாலி என்றால் அவன் சந்ததியரும் நன்கு வாழ்கிறார்கள். இவனுடைய புண்ணியத்தை அவர்கள் கணக்கில் பகவான் கிரெடிட் பண்ணிவிடுகிறான் என்பதால் அல்ல; அப்படியெல்லாம் நடக்காது. இவன் நன்றாக தர்மம் செய்யவே, பகவான் சந்தோஷிக்க, பகவானின் சந்தோஷத்தால் அவர்கள் சந்ததிகள் நன்றாக இருக்கிறார்கள். ஆக தர்மம் என்பது நம்மோடு நிற்கப் போவதில்லை; நம்மையும் காக்கும்.

தர்மேண பாபம் அபநுததி” என்று சொல்வார்கள். நாம் பல பிறவிகளாகச் சேர்த்துவைத்துக் கொண்டிருக்கும் பாபங்களைத் தொலைப்பதற்கு தர்மங்கள் செய்வோம். அதனால் கண்டிப்பாக நாம் தர்மத்தைச் செய்தால் அது நம்மை ரக்ஷிக்கும். நம்மை ரக்ஷிக்கும் என்றால் ஆத்மாவை ரக்ஷிக்கும். ஆத்மா, பகவான் சொல்படி கேட்டு நடக்க வேண்டியவர். தர்மத்தைச் செய்துவிட்டால் பகவான் சொல்படி கேட்பவர் ஆகிறார். அதனால் பகவான் சந்தோஷப்பட்டு ஆத்மரட்சணம் நடைபெறுகிறது.

தென்றல்: எனக்கும் கடவுளுக்கும் இடையில் யாரும் வேண்டாம்; எனக்கு குரு தேவையில்லை என்பவர்கள் இக்காலத்தில் இருக்கிறார்கள். உங்கள் கருத்தென்ன?

ஸ்ரீ வேளுக்குடி: நமக்கும் இறைவனுக்கும் நடுவில் யாரும் வேண்டாமென்று சொல்லிவிடுகிறோம். அப்போ இறைவனிடம் நேரே போகவேண்டும். ஆனால், அப்போ இறைவன் என்ன சொல்லியிருக்கிறார் என்பது முக்கியம். அவர், “என்னிடத்தில் நேரே வராதே! ஒரு குரு மூலமாகத்தான் வரவேண்டும்” என்று சொல்கிறார்.

நான் அவருக்கு அடியவன். அவர் சொன்னதைக் கேட்கவேண்டியவன். ஆனால், இந்த ஒரு வார்த்தையைமட்டும் விட்டுவிட்டு எனக்கும் அவருக்கும் நடுவில் யாரும் வேண்டாம்; நான் நேரே போகிறேன் என்று சொன்னால், வாசல் கதவுகூடத் திறக்காது. எதனால் இந்த அபிப்பிராயம் வருகிறது என்று பார்ப்போம்.

யாரோ ஒருசிலர், சிலசமயம் தப்பாக நடந்து விடுகிறபடியால் இடைத்தரகர் தேவையில்லை என்று பேசலாம். எந்தத் துறையில்தான் இல்லை? டாக்டர்களிலும் போலி உண்டு; வக்கீல்களிலும் போலி உண்டு; எதிலும் போலி உண்டு. நாளைக்கு நான் உடம்பு சரியில்லாவிட்டால் மருத்துவரிடம் போகாமலா இருக்கப் போகிறேன்? எனக்கும் மருத்துவருக்கும் இடைத்தரகர் வேண்டாம். இன்டர்நெட்டில் படித்துவிட்டேன். நானே என் உடல்நிலையைப் பார்த்துக்கொள்கிறேன் என்று எவரும் பேசுவதில்லை. ஆக, இது எடுபடாத வாதம். ஒரு கணக்குப் பாடமோ, அறிவியல் பாடமோ எது வேண்டுமானாலும் சொல்லித்தர ஆசான் கண்டிப்பாக வேண்டும். ஆக யார் சரியானவர்கள் இல்லையோ அவர்களை ஒதுக்கிவிட்டு நல்லவர்களைப் பற்ற வேண்டியதுதான். பகவான் தெளிவாக இருக்கிறார். அவர்:

பசுர் மநுஷ்ய பக்ஷீவா ஏச வைஷ்ணவ ஸம்ஸ்ரயா:
தேநைவ தே ப்ரயாச்யந்தி தத்விஷ்ணோ: பரமம்பதம்

என்று சொல்லியிருக்கிறார். “விஷ்ணுவுடைய பரமபதத்தை அடைவதற்கு நேரே செல்லமுடியாது. பசுவோ, மனிதனோ, பறவையோ, யாராக இருப்பினும் ஒரு குரு மூலமாகத்தான் செல்ல வேண்டும்” என்கிறார் அவர்.

இதற்கு ஒரு உதாரணம் சொல்லலாம். தாமரையை ஆதவன்தான் மலர்த்தவேண்டும். நான் ஒரு சட்டியில் தணலைப் போட்டு தாமரைக்கருகே கொண்டுபோய் வைத்தால் அது மலர்த்தாது, உலர்த்திவிடும். ஆக, தள்ளியிருக்கும் சூரியன்தான் மலர்த்தவேண்டும். அதேபோல் ஆத்மா என்னும் தாமரை, ஞானத்தால் மலர வேண்டுமானால் எங்கோ சூரிய மண்டலத்திற்கு நடுவில் இருக்கும் நாராயணன் – “சூர்யமண்டலமத்ய வர்த்தீ நாராயணா!” என்னும் அவர்தான் இந்தத் தாமரையை மலர்த்த வேண்டும். பக்கத்தில் இருக்கும் யாரும் மலர்த்த முடியாது.

தாமரையைத் தண்ணீரில் இருந்து எடுத்து, நிலத்தில் போட்டுவிட்டால் அதே சூரியன் மலர்த்தமாட்டார். உலர்த்திவிடுவார். ஆகத் தண்ணீரில் இருக்கவேண்டும்; தள்ளியிருக்கும் சூரியன்தான் மலர்த்தவேண்டும் என்று இரண்டு கண்டிஷன்கள். அதேபோல ஆத்மஞானம் மலர வேண்டுமானால் இறைவன்தான் மலர்த்த வேண்டும். அதேசமயம் ஆச்சார்யன் என்னும் தண்ணீரில் அம்மலர் இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் இறைவன் மலர்த்துவார். குருவினுடைய சம்பந்தம் என்னும் தண்ணீரிலிருந்து ‘ஆத்மா‘ என்னும் தாமரை வெளியேற்றப்பட்டுவிட்டால், அதே பகவான், கோபித்துக்கொண்டு நன்றாக உலர்த்திவிடுவார்.

இப்படித்தான் சாஸ்திரங்கள் கூறுகின்றன. ‘தெய்வம் இல்லை‘ என்னும் நாத்திக வாதத்திற்குக்கூட குரு தேவைப்படுகிறார். ‘தெய்வம் இல்லை‘ என்று சொல்பவர்கூட யாரோ ஒருவர் அப்படிக் கற்றுக்கொடுத்துதானே சொல்கிறார்! ஆக, தெய்வம் உள்ளது; தெய்வம் இல்லை – எந்த வாதத்திற்குமே குரு உண்டு. குருவின் மூலமாகத்தான் பகவானை அணுகமுடியும்.

தென்றல்: ஓர் இறைத்தொண்டராக நீங்கள் சாதிக்க விரும்புவது என்ன?

ஸ்ரீ வேளுக்குடி: நம்முடைய சாஸ்திரங்கள், ஜீவாத்மா பகவானுடைய சொத்து என்று கூறுகின்றன. அதை உணர்ந்துவிட்டால், அவர்களை தானே தாய் தந்தையர் குழந்தையைக் காப்பாற்றுதல்போலே இறைவன் காப்பாற்றிவிடுகிறார். இந்தச் செய்தி எல்லாரையும் அடையவேண்டும்.

நாம் இறைவனை அனுபவிக்கிறோம். ஆனந்தமாக உள்ளது. ‘இனியது தனி அருந்தேல்’ என்று சாஸ்திரம் சொல்கிறது. நம் தமிழ்ப் பண்பாடே இனிமையானவற்றைத் தனிமையாகச் சாப்பிடாதே என்பதுதான். ஆக, நமக்கு இனிமையாக ஒன்று கிடைத்திருக்கிறது என்றால் அதைத் தனியாக உண்ணாமல், பலரிடம் பகிர்ந்து உண்கிறோம். இறையருளை, இறைவனின் இன்பமயமான அனுபவத்தைப் பகிர்ந்துகொள்கிறோம்.

கண்ணன் கீதையில், “போதயந்த: பரஸ்பரம் மச்சித்தா மத்கதப்ராணா” என்கிறார். “என்னிடத்திலேயே சித்தத்தை வைத்தவன் என் கதைகளை ஆனந்தமாகப் பேசிப் பொழுதுபோக்குகிறான். இதுதான் என் பக்தன்” என்கிறார். அதனால் ஒருவருக்கொருவர் பகவானுடைய கதைகளைப் பேசுவதே புண்ணியம். அதுதான் நா படைத்த பயன். அதுதான் செவி கிடைத்த பயன். அதைச் செய்யவேண்டும் என்ற ஒன்றே என் குறிக்கோள்

தென்றல்: கடவுளிடம் நாட்டம் கொண்டாலே அவர் நம்மை வழிகாட்டி நடத்துவார் என்பதுபோன்ற அனுபவங்கள் உங்கள் வாழ்க்கையில் நடந்ததை வைத்து உதாரணத்துடன் சொல்லமுடியுமா?

ஸ்ரீ வேளுக்குடி: கண்ணனே கீதையில் சொல்லும்போது, “சிறிதளவேனும் நான் சொல்வதைச் செய்தால் கண்டிப்பாக அது மங்களகரமாக முடியும்படிக்கு நான் ஏற்பாடு செய்கிறேன்” என்கிறார். “நஹி கல்யாணக்ருத் கஸ்சித் துர்கதிம் தாத கச்சதி” என்கிறார். அந்த நாட்டம் இருந்து, வெறுப்பில்லாமல், விலக்காமல் இறைவனிடத்தில் நாட்டம் கொண்டால், கண்டிப்பாக வழிநடத்திச் செல்வார்.

நானும் ஏதோ படித்து எங்கோ இருந்தவன்தான். தந்தையார் இருந்தார், சொல்லிக்கொடுத்தார். உண்மை. அதன் வழி வந்திருந்தாலும் வேறு படிப்பு படித்திருந்த காரணத்தால் ரொம்பச் சுலபத்தில் சுழல் இழுத்துக்கொண்டு போயிருக்கலாம். இரண்டு குழந்தைகள், மனைவி இருந்தனர். தாயார் இருந்தார். தகப்பனார் மட்டும் இல்லை. அந்தச் சமயத்தில் ஏதோ ஒன்று இழுத்துக்கொண்டு போகாமல், தந்தையினுடைய அருள், இறைவனிடத்தில் இருந்த ஒரு சிறு நாட்டம், இந்த அளவுக்குக் கொண்டுவந்து விடணும்ங்கறதில்லை. அது அவராகப் பார்த்து கைப்பிடித்து அழைத்துக்கொண்டு போயிருந்தால்தான் வரும்.

உரையாடல் தொடரும்…

(வட அமெரிக்காவில் இருந்து வெளியாகும் தென்றல் ஆகஸ்ட் மாத இதழில் இருந்து…)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s