3-உ.வே. ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் – நேர்காணல் – சி.கே. வெங்கட்ராமன்


இவரது சொற்பொழிவுகள் நடக்காத ஊர்களே இந்தியாவில் இல்லை என்னுமளவிற்கு நாடெங்கிலும் உபன்யாசம் செய்துவருபவர் உ.வே. ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகள். இந்தியா மட்டுமல்லாது, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா, அமீரக நாடுகள் என உலகநாடுகள் பலவற்றுக்கும் பயணித்து பாரதத்தின் பெருமையையும், ஸ்ரீவைஷ்ணவத்தின் சிறப்பையும் நிலைநாட்டி வருகிறார். ஸ்ரீமத் பாகவதம், விஷ்ணுபுராணம், பகவத்கீதை, ராமாயணம், மஹாபாரதம், ஆழ்வார் பாடல்கள், தமிழ் வேதங்கள் எனப் பல தலைப்புகளில் தமிழிலும் ஆங்கிலத்திலும் உபன்யாசம் நிகழ்த்துகிறார். ‘கிஞ்சித்காரம்‘ என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றை ஏற்படுத்தித் திருக்கோவில் புனரமைத்தல், இறைப்பணி செய்தல், நாலாயிர திவ்வியப் பிரபந்தம் கற்க உதவுதல் போன்ற கைங்கரியங்களைச் செய்துவருகிறார். பிரவசன சங்கீதபூஷணா, ஸ்ரீ ராமானுஜ சேவகா, உபன்யாச கண்டீரவா, சொல்லின் செல்வர் என்பதுட்படப் பல்வேறு கௌரவங்களைப் பெற்றவர். இவரது உரைகள் 200க்கும் மேற்பட்ட குறுந்தகடுகளில் வெளியாகியுள்ளன. உபன்யாசங்களுக்காக அமெரிக்காவுக்கு வந்திருக்கும் இவருடன் தென்றல் பதிப்பாளர் சி.கே. வெங்கட்ராமன் உரையாடினார். அந்த உரையாடலின் தொடர்ச்சி இதோ…

தென்றல்: சம்ஸ்கிருதத்திலிருந்து தமிழுக்குப் படைப்புகளைக் கொண்டு சேர்த்தவர்களின் தொண்டுகள் பற்றிச் சொல்லுங்களேன்….

ஸ்ரீ வேளுக்குடி: நம்மாழ்வார் ஆரம்பித்தார். சம்ஸ்கிருத வேதத்தை பகவான் நம்மாழ்வாருக்கு போதிக்க, அவர் அந்தக் கருத்துக்களை உள்ளத்தில் தேக்கி, தமிழ்வேதமாக வெளிப்படுத்தினார். “வேதம் தமிழ்செய்த மாறன்” என்று அவர் போற்றப்படுகிறார். உலக இயல்பிலிருந்து மாறியிருந்ததால் அவர் மாறன். பகவானிடத்திலே ஈடுபட்டவர். 16 ஆண்டுகள் யோகத்தில் இருந்தவர். அதையே பின்னால் வந்த 10 ஆழ்வார்களும் தொடர்ந்து செய்தனர். நாதமுனிகள், உய்யக்கொண்டார், மணக்கால் நம்பிகள், ஆளவந்தார், பெரியநம்பிகள், ராமானுஜர் என்று இந்த மகான்கள் அனைவருமே அவ்வாழ்வார்களையே தலைவர்களாக ஏற்றுக்கொண்டு, தமிழ்வேதத்தை நன்கு பரப்பினர். மணிப்பிரவாள நடை என்னும் உரை முறையை ஏற்படுத்தினர்.

ராமானுஜர் காலத்திற்குப் பின்னால் நம்பிள்ளை, பெரியவாச்சான் பிள்ளை என்னும் மகான்கள், திவ்யப் பிரபந்தம் – நாராயண ப்ரவசனங்களுக்கு – தமிழில் உரையெழுதி, இந்தத் தமிழ் வேதமாகிய நாலாயிரத்திற்கு மிகுந்த பெருமையூட்டினர். கடைசியாக மணவாள மாமுனிகள் “ஆற்றில் கரைத்த புளி அல்லவோ தமிழ் ஆரணமே” என்று புகழ்ந்தார். தமிழ் வேதங்களாகிய நாலாயிரமும், மணவாள மாமுனிகள் அவதரிக்காமல் போயிருந்தால் அதன் பெருமை உலகிற்கு வந்திருக்குமா என்று தெரியாது.

தென்றல்: சாஸ்திரங்கள் சொல்லும் வழிமுறைகளுக்கு மூலம் என்ன?

ஸ்ரீ வேளுக்குடி: சாஸ்திரம் என்பது வேதசாஸ்திரம். வேதங்களில் கர்மங்கள் விசாரிக்கப்படும். எந்தெந்தக் கர்மத்தை எப்படியெப்படிச் செய்யவேண்டுமென்று அது சொல்லும். வேதாந்தத்தில் பிரம்மம் விசாரிக்கப்படும். கர்மத்தால் ஆராதிக்கப்படும் பிரம்மத்தைப்பற்றிக் கூறுவது அது. அதோடு நில்லாமல் ஸ்மிருதி என்பதும் சொல்லப்படுகிறது. போதாயன ஸ்மிருதி, ஆச்வலாயன ஸ்மிருதி, கௌதம ஸ்மிருதி போன்ற ஸ்மிருதிகளில் எந்த சம்ஸ்காரத்தை எப்படிச் செய்யணும் – பிறந்தால் என்ன, இறந்தால் என்ன, கல்யாணம் ஆனால் என்ன, சீமந்தமானால் என்ன – என எல்லாவற்றிற்குமே அந்த ஸ்மிருதிகளில் வழிகாட்டுதல்கள் இருக்கும். பக்தியைப்பற்றி, எப்படி இறையன்போடு இருப்பது, ஞானத்தை எப்படி வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதெல்லாம் இதிகாச புராணங்கள் மூலமாகக் கிடைக்கும்.

ஆக, வேதங்கள் கர்மத்தை விசாரிக்கும். வேதாந்தம் பிரம்மத்தைப் பற்றித் தெளிவுபடுத்தும். ஸ்மிருதிகள் நாம் அன்றாட வாழ்க்கையில் செய்யவேண்டிய சம்ஸ்காரங்களைச் சொல்லும். இதிகாச, புராணங்கள் வாழ்க்கைக்கு வேண்டிய ஒழுக்கநெறிகள் என்ன, பக்தி எப்படி, ஞானம் எப்படி என்பதைச் சொல்லும்.

தென்றல்: மூவரைப் பிடித்துக் கொள்ளவேண்டும் என்று சொல்லப்படுவது பற்றி…

ஸ்ரீ வேளுக்குடி: கடவுளைப் பிடித்துக் கொள்ளவேண்டும். அந்தக் கடவுளுக்குப் பிரதிநிதியாக இருப்பவர் இருவர். ஒன்று குரு. மற்றவர் மாதா, பிதா. கடவுள் படைக்கிறார். அறிவையும் கொடுக்கிறார். அதில் மாதா, பிதாக்கள் பிரதிநிதிகளாக இருந்து படைக்கின்றனர். குரு பிரதிநிதியாக இருந்து அறிவு கொடுக்கிறார். ஆகவேதான் மாத்ரு தேவோ பவ; பித்ரு தேவோ பவ; ஆச்சார்ய தேவோ பவ; அதிதி தேவோ பவ என்று சாஸ்திரம் கூறுகின்றது. ஆகவே கடவுளின் பிரதிநிதிகளான இவர்களையே கடவுளாகக் கண்டு தொழவேண்டும்.

தென்றல்: இந்தியத் தத்துவப் பாரம்பரியத்தில் ஸ்ரீ பகவத்கீதையின் பங்கு என்ன?

ஸ்ரீ வேளுக்குடி: இந்தியப் பாரம்பரியம் என்பதே சரீர-ஆத்ம விவேகம்; உடல் வேறு, ஆத்மா வேறு. இந்த உடல் அழியக்கூடியது. ஆத்மா நிலையானது. ஞானமற்றது உடல், ஞானமுடையது ஆத்மா என்பதுதான். ஆத்மா நித்யம் என்றாலே அது என்றுமிருக்கும், வாழும் என்பது பொருள். அப்போ எங்கே வாழும் என்ற கேள்வி வந்தால், கர்மாதீனமாக அடுத்தடுத்த பிறவிகள் எடுத்து வாழும் என்பது பதில். இதுதான் பாரத கலாசாரமே! சனாதன தர்மத்தின் அடிப்படையே சரீர-ஆத்ம விவேக ஞானம்தான். ஆத்மா, கர்மாதீனமாக வெவ்வேறு உடல்களை எடுக்கிறார். இந்தச் சுழல்களைப் போக்குவதற்காக பக்தியோகம் சொல்லப்படுகிறது.

அப்போ ஆத்மாவைப்பத்தின தத்வார்த்தம், ஒருவர் எதற்காகப் பிறவி எடுக்கிறார், அந்தப் பிறவிகள்லேர்ந்து வெளில வர்றதுக்கு அவர் செய்யவேண்டியது என்ன என்பதுதான். அதுதான் பக்தி. அந்த பக்தியை, கண்ணனைக் குறித்துச் செய்யவேண்டும், அவர் திருவடிகளை அடையலாம். இதுதான் கீதையினுடைய கருத்து. இந்தக் கருத்துதான் பாரததேசத்தின் அடிப்படைத் தத்துவமே!

உடலும் ஆத்மாவும் ஒன்று என்று நினைத்தால் உடலுக்கு வேண்டிய சொகுசுகளை, வசதிகளைப் பண்ணப் பார்ப்போம். அவை வெவ்வேறு என்று நினைத்தால் ஆத்மாவுக்குரிய வசதிகளைச் செய்வோம். ஆத்மா நன்றாக இருக்கவேண்டும் என்பதற்காக எது செய்தாலும் அது புண்ணியமாகவும், நமக்கும் பிறருக்கும் உதவுவதாகவும் உள்ளது. ஆனால் சரீர சுகங்களுக்காகச் சிலவற்றைச் செய்யும்போது அது சில சமயங்களில் பாபமாகவும், சில சமயங்களில் பிறருக்குத் துன்பத்தைக் கொடுக்கிறதாகவும் முடிந்துவிடுகிறது. இந்த கலாசாரம் இரண்டும் சொல்லப்பட்டதே கீதையில்தான்.

தென்றல்: இன்றைக்கும் ராமாயணம், மகாபாரதத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது. இதற்குக் காரணம் அவற்றின் கதையம்சமா அல்லது அவை கூறும் வாழ்க்கைத் தத்துவங்களா?

ஸ்ரீ வேளுக்குடி: வாழ்க்கைத் தத்துவங்களைத் தனியாகக் கொடுத்தால் எடுபடாது. கதையம்சங்கள் மட்டுமே இருந்தாலும் பல கதைகள் எடுபடுவதில்லை. ரிஷிகள் பண்ணினதே வேப்பங்கொழுந்தை, வெல்லப்பாகுக்குள் வைத்து, அதைச் சாப்பிடும்படிக் கொடுத்ததுதான். நேரே தத்துவார்த்தங்கள், வாழ்க்கை நுணுக்கங்கள் என்று சொல்லிவிட்டால் சற்று கசக்கலாம். அந்தக் கசப்பு வேண்டாம் என்றுதான் அதைக் கதையோடு புனைந்து, யாரெல்லாம் வாழ்ந்து காட்டியிருக்கிறார்களோ அவர்கள் கதையைச் சொல்லி, அதோடு சேர்த்து, வெல்லப்பாகு மாதிரி அதற்குள்ளே தத்துவார்த்தங்களை வைத்துச் சொன்னதுதான் அவற்றின் தனிச்சிறப்பே!

வேதாந்தம் என்று எடுத்துக் கொண்டால் கதையே இருக்காது. தத்துவம் மட்டுந்தான் இருக்கும். கதைப்புத்தகம் என்று எடுத்துக்கொண்டால் கதைமட்டுந்தான் இருக்கும். ஆனால் மகாபாரதம், ராமாயணத்துள்தான் தத்துவங்கள் கதைக்குள் வைத்து நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கும். அதுதான் அவற்றின் தனிச்சிறப்பு.

தென்றல்: முன்பைவிடக் கோயில்களில் இப்போது கூட்டம் அதிகமாக இருக்கிறது. ஆனால், அது ஒரு வணிகமாகி விட்டதாகப் பலர் கூறுகின்றனர். நீங்கள் அதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

ஸ்ரீ வேளுக்குடி: கூட்டம் கூடியிருப்பதற்கு இரண்டு, மூன்று காரணங்கள் உண்டு. ஒன்று, ஜனத்தொகை கூடிவிட்டது. இரண்டு, கோயில்களின் மகாத்மியம், பிரபலத்தன்மைபற்றி புத்தகங்கள், தொலைக்காட்சி, வலைத்தளம் என்று பரவலாகப் பலருக்கும் தெரியவந்துவிட்டது. ‘நாமும் ஒருதடவை போய் பார்த்துவிட்டு வருவோமே‘ என்று வருகிறார்கள். மூன்றாவது காரணம், ஓரிடத்திற்குப் போவது, வருவது சுலபமாகிவிட்டது. நல்ல நெடுஞ்சாலைகள் இருக்கின்றன. கார், பஸ் எல்லாம் இருக்கவே நினைத்தவுடன், நினைத்த இடத்துக்குப் போய்விட்டு வரமுடிகிறது. நான்காவது காரணம், இன்ன கோயிலுக்குப் போனால் இன்னது கிடைக்கும் என்கிற பிரச்சாரம் முன்னாளில் கிடையாது. ஆனால் இன்றைக்கு இன்ன நாளில், இந்தப் பெருமாளை, அம்பாளை, சிவனை வழிபட்டால், இன்னின்ன பரிகாரம் செய்தால் இன்னது கிடைக்கும் என்று ஆகிவிட்டபடியால் அது நமக்கும் கிடைக்கும் என்ற நம்பிக்கையிலும் கோயிலுக்கு வருகிறார்கள். இது கடைசிக் காரணம்தான்.

இதில் வணிகமயமாகி விட்டது என்று சொன்னால் பக்தர்கள் உள்ளத்தில் தம்மைப் பொறுத்தவரை வணிகமயம் கிடையாது. வணிகமாக நினைத்து ஆலயங்களுக்கு வருவதில்லை. இறைவனை வணங்கத்தான் வருகிறார்கள். ஆனால், நடத்துபவர்களின் கோணத்தில் இருந்து பார்த்தால், வணிகமயம் என்று சொல்லிவிட முடியாது. இன்னும் கொஞ்சம் கூட்டத்தை வரவழைப்பதற்காக தனக்குத் தெரிஞ்சதையெல்லாம் பண்ணவேண்டும் என்ற ஆசையில், அவர்கள் செய்யும் சில செயல்களைப் பார்த்தால் வணிகமயம்போல நமக்குத் தோற்றமளிக்கலாம். எதனால் அந்தத் தோற்றம் வருகிறதென்றால் எந்தெந்த விஷயங்களுக்கு நன்கு செலவழிக்க வேண்டுமோ அதையெல்லாம் சுருக்கிவிட்டு, எது ஆகமப்படி ரொம்ப முக்கியமில்லையோ அதற்கு அதிகம் செலவழிப்பதால்தான்.

ஆராதனைக்குப் புஷ்பம், சந்தனக்காப்பு, குங்குமப்பூ, பிரசாதம், திருமஞ்சனம், புறப்பாடுகள், கோயில்களை நன்கு பராமரித்தல் இவற்றுக்குத்தான் ஆகமத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்போது பத்திரிகை அடித்தல், பெரிய பாண்டு வாத்தியம் வைத்தல், மற்ற களியாட்டங்கள், பட்டாசு வெடித்தல், பெரிய விளக்குகளை வைத்தல் போன்றவற்றிற்கு அதிகம் செலவழிக்கிறோம். இந்த மாறுதல்களினாலேதான் இது வணிகமாகுமோ என்று தோன்றுகிறது. எதைப் பண்ணினால் அது சாஸ்திரோக்தமாக இருக்குமோ அதைப் பண்ணவேண்டும் என்பது தெரியாததினாலே அவரவர் தங்களுக்குத் தெரிந்ததைச் செய்துவிடுகிறபடியால், இதைப்போல் குழப்பம் வருகிறது.

உரையாடல் தொடரும்…

(வட அமெரிக்காவில் இருந்து வெளியாகும் தென்றல் ஆகஸ்ட் மாத இதழில் இருந்து…)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s