2-உ.வே. ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் – நேர்காணல் – சி.கே. வெங்கட்ராமன்


இவரது சொற்பொழிவுகள் நடக்காத ஊர்களே இந்தியாவில் இல்லை என்னுமளவிற்கு நாடெங்கிலும் உபன்யாசம் செய்துவருபவர் உ.வே. ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகள். இந்தியா மட்டுமல்லாது, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா, அமீரக நாடுகள் என உலகநாடுகள் பலவற்றுக்கும் பயணித்து பாரதத்தின் பெருமையையும், ஸ்ரீவைஷ்ணவத்தின் சிறப்பையும் நிலைநாட்டி வருகிறார். ஸ்ரீமத் பாகவதம், விஷ்ணுபுராணம், பகவத்கீதை, ராமாயணம், மஹாபாரதம், ஆழ்வார் பாடல்கள், தமிழ் வேதங்கள் எனப் பல தலைப்புகளில் தமிழிலும் ஆங்கிலத்திலும் உபன்யாசம் நிகழ்த்துகிறார். ‘கிஞ்சித்காரம்‘ என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றை ஏற்படுத்தித் திருக்கோவில் புனரமைத்தல், இறைப்பணி செய்தல், நாலாயிர திவ்வியப் பிரபந்தம் கற்க உதவுதல் போன்ற கைங்கரியங்களைச் செய்துவருகிறார். பிரவசன சங்கீதபூஷணா, ஸ்ரீ ராமானுஜ சேவகா, உபன்யாச கண்டீரவா, சொல்லின் செல்வர் என்பதுட்படப் பல்வேறு கௌரவங்களைப் பெற்றவர். இவரது உரைகள் 200க்கும் மேற்பட்ட குறுந்தகடுகளில் வெளியாகியுள்ளன. உபன்யாசங்களுக்காக அமெரிக்காவுக்கு வந்திருக்கும் இவருடன் தென்றல் பதிப்பாளர் சி.கே. வெங்கட்ராமன் உரையாடினார். அந்த உரையாடலின் தொடர்ச்சி இதோ…

தென்றல்: பொதுவாழ்க்கையில் ஒழுக்கம் மிகவும் குன்றி வருவதைப் பார்க்கிறோம். பக்திசார்ந்த வாழ்க்கை முறைப் பிரசாரத்தால் இதை மாற்றமுடியுமா?

ஸ்ரீ வேளுக்குடி: பக்தன் எப்படி எப்படி இருக்க வேண்டும், என்ன ஒழுக்கம் தேவை என்பதை பகவானே கீதையிலும், உபநிஷத்திலும் சொல்லியிருக்கிறார். விஞ்ஞானத்தை யார் வேண்டுமானாலும் படிக்கலாம், எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் ஒரு பக்தனாக இருந்தால், “நீ எப்படி வேண்டுமானாலும் இரு; எனக்கு ஆராதனம் பண்ணினால்மட்டும் போதும்” என்று பகவான் சொல்லமாட்டார். அதுதான் மற்றப் படிப்பிற்கும் பக்திப்படிப்பிற்கும் இருக்கும் வித்தியாசம். மற்ற படிப்பைப் படித்துவிட்டு வேலைக்குப் போகலாம்; சம்பாதிக்கலாம். ஆனால் பக்திப் படிப்பில் முதல்நாளில் இருந்து கடைசிநாள் வரைக்கும் ஒழுங்காக இருந்தாகணும். இந்த அடிப்படை ஒழுக்கத்தைச் சொல்லிக் கொடுப்பதுதான் இந்தக் கல்விக்கே இருக்கின்ற பெருமை. பக்தி மார்க்கத்தில் இருந்துகொண்டு தப்புத்தவறு பண்ணிக்கொண்டிருக்க முடியாது. அப்படி இருந்தால் பேர் கெட்டுத்தான் போகும்.

நான் பக்தனாக இருக்கிறேன் என்றால் அந்த பக்தியைத் தொடர்ந்து செய்வதற்கு நிறைய ஆசாரம், அனுஷ்டானம் வேணும். ஒழுக்கம் வேணும். “இதெல்லாம் இருந்தால்தான் என் பக்தனை நான் ஒப்புக்கொள்கிறேன்” என்று பகவான் தெளிவாக இருக்கிறார். அதை எடுத்துச்சொல்லி, வாழ்க்கையில் ஒழுக்கநெறிகள் எப்படி இருக்கவேண்டும், அவை எப்படி நமக்கு முக்கியம் என்பதைப் புரியவைக்க வேண்டும்.

தென்றல்: அமெரிக்கத் தமிழர்கள் வாழ்க்கையின் எல்லா வசதிகளும் நிரம்பப் பெற்றவர்கள். அவர்களிடம் நீங்கள் சொல்லும் வேதாந்தக் கருத்துக்களுக்கு வரவேற்பு இருக்கிறதா?

ஸ்ரீ வேளுக்குடி: வாழ்க்கையில் வசதியிருப்பவர்கள் உலகின் பல இடங்களிலும் இருக்கிறார்கள். இந்தியாவிலும் இருக்கிறார்கள், அமெரிக்காவிலும் இருக்கிறார்கள். வேதாந்தக் கருத்து என்பது ஆத்மாவின் உஜ்ஜீவனத்திற்காக, ஆத்மா உய்வதற்காக ஏற்பட்டது. அதற்குத் தேவை பகவானிடத்தே விருப்பம்; ஆத்மா யார் என்கிற அறிவு. அது இருந்தது என்றாலே கண்டிப்பாக இந்தமாதிரிக் கருத்துக்களுக்கு வரவேற்பு இருக்கும். நான் போகிற இடத்துக்கெல்லாம் நிறையப்பேர் வந்து கேட்கிறார்கள். அப்படிக் கேட்கிறவாளும் கஷ்டமான கருத்தெல்லாம் சொன்னாக்கூட, பொறுமை இழக்காமல், பராக்குப் பார்க்காமல் ஒழுங்காகத்தான் கேட்டுக் கொண்டார்கள். இரண்டரை மணி நேரம் சொன்னபோதும் கேட்டார்கள். அதனால் வேதாந்தத்தின் வீச்சு ஒண்ணும் குறையவில்லை. வரவேற்பு நன்றாகவே உள்ளது.

தென்றல்: கிஞ்சித்காரம் என்றால் என்ன பொருள்?

ஸ்ரீ வேளுக்குடி: கிஞ்சித் என்றால் சிறிது. காரம் என்றால் செய்தல். நம்மால் இயன்ற கைங்கரியங்களைச் சிறிது செய்தல் என்பதுதான் கிஞ்சித்காரம் என்பதன் பொருள். ஆத்மா பகவானின் சொத்து. அப்போது ஓர் உடைமை, உடையவனுக்காகத்தான் இருக்கவேண்டும். நாமெல்லாம் பகவானின் உடைமை என்று சொன்னால் அவருக்காகத்தான் நாம் இருக்கணும். பகவானுக்குச் செய்யவேண்டிய கைங்கரியத்தையும், பக்தர்களுக்குச் செய்யவேண்டிய கைங்கரியத்தையும் துளியேனும் செய்தால்தான் ஒரு ஆத்மா தன்னிலை பெறுகிறான் அப்படின்னு வாக்கியம் இருக்கு. கிஞ்சித்காரம் (சிறிதளவேனும் தொண்டு) செய்யாத ஒருவனுக்கு பகவானின் அடிமை, பகவானின் சொத்து என்கிற அந்தஸ்து இருக்காது. நாம் அப்படிப் போய்விடக்கூடாது, நாம் சிறிதளவாவது கைங்கரியம் செய்யவேண்டும் என்பதற்காக கிஞ்சித்காரம் டிரஸ்ட் தொடங்கப்பட்டது.

தென்றல்: உபன்யாசகராக விரும்புபவருக்கு நீங்கள் என்ன சொல்வீர்கள்?

ஸ்ரீ வேளுக்குடி: சரக்கு நிறைய வேணும். நிறையப் படிச்சு நிறைய தெரிஞ்சக்கணும். முடிந்தால் 40, 45 வயதுவரை பெரியவாளிடம் பாடம் கேட்கலாம். முதல் 10 வருஷம் படிச்சிட்டோம்னு விட்டுடக்கூடாது. மேல மேல கடல்மாதிரி அர்த்தம் இருக்கு. அதனால கண்டிப்பா நிறைய படிச்சிட்டுத்தான் சொல்லணும். இரண்டாவது, தான் அனுபவத்தில் காணாததைச் சொல்லக்கூடாது; சொன்னாலும் எடுபடாது. நான் ஒண்ணு அனுபவிச்சிருக்கேன்னா, அது நம்ம உள்ளத்தை உருக்கியதுன்னா அதை இன்னொருத்தருக்கு எடுத்துச் சொன்னா, அவாளுக்கு ஆனந்தத்துல சிரிக்கவோ, கண்ணீர் விடவோ வரும். அதனால வாய் வார்த்தையாச் சொல்லாமல் உள்ளத்தில் பட்டு நன்னா அனுபவித்துச் சொல்லணும்.

உபன்யாசகர் ஆகிவிட்டால் ரொம்ப சீரியஸ் ஆகிவிட வேண்டும். அதாவது ஒருத்தருக்கு, நாள், நேரம் கொடுத்துட்டோம்னா அதுதான் முதலில். அதை எக்காரணத்தைக் கொண்டும் கேன்சல் செய்யக்கூடாது. உடம்பு சரியில்லை, பேச முடியலைன்னு இருந்தாலொழிய, மத்த எக்காரணத்துக்காகவும் அதை நிறுத்தக்கூடாது. நிகழ்ச்சி இரண்டுமணி நேரம் என்றால் இரண்டு, இரண்டரை மணி நேரம் சொல்லலாம். அரையும் குறையுமா நிறுத்திவிடக் கூடாது. உபன்யாசம் கேட்க வரவா எல்லாரும் தங்கள் நேரம் ஒதுக்கித்தான் வரா. நாம சிரத்தையா இருந்து பேசினாத்தான் அவாளுக்கு நாலு விஷயம் கிடைக்கும்.

நாம விளக்கும்போது, அவர்களுக்கு எதுவுமே தெரியாதுன்னு நினைச்சு விளக்கணும். ஆனா, நான் என்ன சொல்றேனோ அதுல அவாளுக்கு எல்லாமே தெரியும்னு நினைச்சு ரொம்ப ஜாக்கிரதையாச் சொல்லணும். அவாளுக்கு ஒண்ணும் தெரியாதுன்னு நினைச்சு கண்டபடி உளறக்கூடாது. எல்லாம் அவாளுக்குத் தெரியும்னு நினைச்சு விவரமா விளக்காம ஓடவும் கூடாது. இதைப்போல ஒரு dual view எடுக்கணும்.

தென்றல்: ஓர் இறைத் தொண்டராக நீங்கள் சாதிக்க விரும்புவது என்ன?

ஸ்ரீ வேளுக்குடி: பகவானை நன்னா அனுபவிக்கணும். பலருக்கு அந்த அனுபவத்தைப் பகிர்ந்துக்கணும். பல பேருடன் பகவத் விஷயத்தைப் பேசணும்.

கண்ணன் கீதையில், “போதயந்த: பரஸ்பரம் மச்சித்தா, மத்கதப்ராணா:” என்று சொல்கிறார். என்னிடத்தில் உள்ளம் வைத்தவர்கள் ஒருவருக்கொருவர் என் கதைகளையே பேசிக் கொள்கிறார்கள். ஆனந்தப்படுகிறார்கள்; கண்ணீர் உகுக்கிறார்கள். அது பண்ணினால் போதும்.

தென்றல்: தமிழின் தனித்துவம் பற்றி…

ஸ்ரீ வேளுக்குடி: தமிழ் என்னும் மொழி சம்ஸ்கிருதத்தைச் சாராமல், தனித்து, தலைநிமிர்ந்து நிற்கும் மொழி. பாரதத்தின் மற்ற அனைத்து மொழிகளும் வடமொழியைச் சார்ந்திருப்பவை. தமிழில் ஆழ்வார்கள் நான்கு வேதத்தையும் அதன் கருத்துக்களையும் மொழி பெயர்த்துள்ளனர். வருங்காலத்தில், தமிழில் இருக்கக்கூடிய வேதங்கள்தான் அனைத்துலகிலும் பரவும். அதை வைத்துக்கொண்டு தான் இறைவனை அடைவார்கள் என்கிற எண்ணத்துடன் தமிழ் மொழியை வளர்த்திருக்கிறார்கள். அகத்தியரால் வளர்க்கப்பட்டது தமிழ்மொழி.

இதன் பெருமை தெரிந்த நாதமுனிகள் முதலிய ஆச்சாரியார்கள், விஷ்ணு கோயில்களில், இன்றும், வடமொழி வேதத்திற்கு நிகராக, தமிழ்மொழி வேதத்தினையும் பாடும் ஏற்பாட்டை 1200 ஆண்டுகளுக்கு முன்னேயே செய்துள்ளனர். சம்ஸ்கிருதம் நாட்டை ஆண்டுவந்த அந்தக் காலத்தில், தமிழ்மொழிப் பாடல்களை கோயில்கள்தோறும் இசைக்க வைத்தனர். ஆக, பலநூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே விஷ்ணு ஆலயங்களின் வழிபாட்டு மொழியாக தமிழ் இருந்து வந்திருக்கிறது. இன்றும் பெருமாளுக்குப் புறப்பாடு நடக்கிறதென்றால் தமிழ்மொழி வேதம் பகவானுக்கு முன்னும், வடமொழி வேதம் அவர் புறப்பாட்டிற்குப் பின்னும் ஓதப்படுகிறது. அதனால் எம்பெருமான் என்றுமே வடமொழி வேதத்தைத் தாண்டி நடப்பாரே தவிர, தமிழ்மொழி வேதத்தைத் தாண்டமாட்டார்.

உரையாடல் தொடரும்…

(வட அமெரிக்காவில் இருந்து வெளியாகும் தென்றல் ஆகஸ்ட் மாத இதழில் இருந்து…)

Advertisements

One thought on “2-உ.வே. ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் – நேர்காணல் – சி.கே. வெங்கட்ராமன்

 1. vasanth99in August 9, 2016 at 4:32 AM Reply

  Thank you.. Very nice interview.

  Murali

  2016-08-09 9:31 GMT+05:30 Balhanumans Blog :

  > BaalHanuman posted: ” இவரது சொற்பொழிவுகள் நடக்காத ஊர்களே இந்தியாவில் இல்லை
  > என்னுமளவிற்கு நாடெங்கிலும் உபன்யாசம் செய்துவருபவர் உ.வே. ஸ்ரீ வேளுக்குடி
  > கிருஷ்ணன் சுவாமிகள். இந்தியா மட்டுமல்லாது, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா,
  > அமெரிக்கா, கனடா, அமீரக நாடுகள் என உலகநாடுகள் பலவற்றுக்கும்”
  >

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s