1-உ.வே. ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் – நேர்காணல் – சி.கே. வெங்கட்ராமன்


இவரது சொற்பொழிவுகள் நடக்காத ஊர்களே இந்தியாவில் இல்லை என்னுமளவிற்கு நாடெங்கிலும் உபன்யாசம் செய்துவருபவர் உ.வே. ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகள். இந்தியா மட்டுமல்லாது, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா, அமீரக நாடுகள் என உலகநாடுகள் பலவற்றுக்கும் பயணித்து பாரதத்தின் பெருமையையும், ஸ்ரீவைஷ்ணவத்தின் சிறப்பையும் நிலைநாட்டி வருகிறார். ஸ்ரீமத் பாகவதம், விஷ்ணுபுராணம், பகவத்கீதை, ராமாயணம், மஹாபாரதம், ஆழ்வார் பாடல்கள், தமிழ் வேதங்கள் எனப் பல தலைப்புகளில் தமிழிலும் ஆங்கிலத்திலும் உபன்யாசம் நிகழ்த்துகிறார். ‘கிஞ்சித்காரம்‘ என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றை ஏற்படுத்தித் திருக்கோவில் புனரமைத்தல், இறைப்பணி செய்தல், நாலாயிர திவ்வியப் பிரபந்தம் கற்க உதவுதல் போன்ற கைங்கரியங்களைச் செய்துவருகிறார். பிரவசன சங்கீதபூஷணா, ஸ்ரீ ராமானுஜ சேவகா, உபன்யாச கண்டீரவா, சொல்லின் செல்வர் என்பதுட்படப் பல்வேறு கௌரவங்களைப் பெற்றவர். இவரது உரைகள் 200க்கும் மேற்பட்ட குறுந்தகடுகளில் வெளியாகியுள்ளன. உபன்யாசங்களுக்காக அமெரிக்காவுக்கு வந்திருக்கும் இவருடன் தென்றல் பதிப்பாளர் சி.கே. வெங்கட்ராமன் உரையாடினார். அந்த உரையாடலிலிருந்து…

தென்றல்: சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் ஆக இருந்த உங்களுக்கு இறைப்பணியையே வாழ்க்கையாகக் கொள்ளத் தோன்றியது எதனால்?

ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன்: என்னுடைய தகப்பனார் சாஸ்திரம் வாசித்த வித்வான். அவர் பெரிய உபன்யாசகராக இருந்தார். எனக்கு உபநயனம் செய்வித்த அன்றிலிருந்தே பல சாஸ்திர விஷயங்களைக் கற்றுக்கொடுத்தார். அதனால் அதில் பற்றுதல் எனக்குள்ளேயே இருந்துவந்தது. பிறகு வெளியில் படிப்புகள் எல்லாம் முடித்திருந்தாலும் உபன்யாசத்தின்மீது ஆர்வம் இருந்தது. திடீரென்று 1991 ஜனவரியில் தகப்பனார் வைகுந்தநாட்டை அடைந்துவிட்டார். அவரிடம் வழக்கமாக உபன்யாசம் கேட்டுக்கொண்டிருந்தவர்கள் என்னிடம், “நீங்கதான் படிச்சிருக்கேளே, சொல்லுங்கோளேன்” என்று தூண்டினார்கள். எனக்குள்ளேயும் அந்த ஆசை இருந்தபடியாலே “சரி, சொல்லுவோம்” என்று சொல்ல ஆரம்பித்தேன். 1991முதல் 96வரை ஐந்து வருடம் வேலையும் பார்த்துக்கொண்டு உபன்யாசமும் செய்தேன். அது சரிவரவில்லை. எதையாவது ஒன்றைத்தான் வாழ்க்கையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்து 96ல் வேலையை விட்டேன். இன்றைக்கு 20 வருஷமாக உபன்யாசம் செய்துவருகிறேன்.

தென்றல்: உங்களுடைய முதல் உபன்யாசம் எங்கு, எப்போது, எந்தத் தலைப்பில் நிகழ்ந்தது?

ஸ்ரீ வேளுக்குடி: 1991 நவம்பர் மாதத்தில் நிகழ்ந்தது. சென்னை, ஜார்ஜ் டவுனில் பகவத்கீதை பற்றிப் பேசினேன்.

தென்றல்: உங்கள் குருநாதர்கள் யார் யார்?

ஸ்ரீ வேளுக்குடி: சம்பிரதாய விஷயங்களைச் சொல்லிக்கொடுத்தவர் என் தந்தைதான். சம்ஸ்கிருதம், திவ்யப்பிரபந்தம் வாசித்தது மற்றவர்களிடம். குருநாதர் என்றால் என் தந்தையார்தான்.

தென்றல்: உங்கள் தந்தையார் மிகச்சிறந்த உபன்யாசகர். உங்கள் வாழ்க்கையில் அவரது தாக்கம் எந்த அளவு இருக்கிறது?

ஸ்ரீ வேளுக்குடி: அளவு என்று சொல்லுவதைவிட இருப்பதே அது ஒண்ணுதான். வேறெந்தத் தாக்கமுமே வாழ்க்கையிலே கிடையாது. நான் உபன்யாசகன் ஆகவேண்டும் என்று அவர் விருப்பப்பட்டார். மூன்றரை வயசில் என்னைக் கொண்டுபோய் ஸ்கூலில் சேர்த்தபோதே ஹெட்மாஸ்டரிடம் “நான் சொல்றதையே இவனும் சொல்லணும்கறதுக்காகத்தான் உங்ககிட்ட கொண்டுவிடறேன். அதுக்குண்டான புது லௌகீக படிப்பு சொல்லிக் கொடுங்கோ. அந்த எக்ஸ்போஷரும் அவனுக்குக் கிடைக்கட்டும். இங்கிலீஷ் தெரியணும். நான் தமிழ்ல மட்டும்தான் சொல்லிண்டிருக்கேன். அவன் மத்தமொழிகள்லயும் சொல்லணும். தமிழ்லயும் சொல்லணும். அதுக்காகத்தான் உங்கள்ட்ட விடறேன்” என்று அன்றைக்கே சொன்னார். அவருடைய விருப்பம்தான் இது.

தென்றல்: ஆன்மிக வாழ்க்கையின் இலக்கணம் என்ன?

ஸ்ரீ வேளுக்குடி: தனிமனித ஒழுக்கம், Individual Discipline, ரொம்ப முக்கியம். அதில் நிறையத் தடங்கல்கள், இடர்ப்பாடுகள் வரும். அதைத் தாண்டி நாம் இருக்க வேண்டும். இதில் வெறும் உபன்யாசகன் என்று மட்டும் இருப்பது பொருந்தாது. இரண்டு விஷயங்களைத் தெரிஞ்சிண்டு சொல்லப் போறோம்னு சொன்னா, அதனோட அடிப்படையே தொண்டுசெய்தல். அதனால் சமுதாயத்திற்கும், பக்தர்களுக்கும், பகவானுக்கும் நிறையக் கைங்கரியங்களைப் பண்ணவேண்டும். அதைப் பண்ணிக்கொண்டிருந்து உபன்யாசமும் சொன்னால்தான் பொருந்தும். நாம் வெறும் உபதேசியாக இருந்தால் பொருந்தாது.

தென்றல்: புராண, இதிகாசங்கள் வெறும் கட்டுக்கதைகள் அல்லது மூடநம்பிக்கைகள் என்பதாக ஒருகருத்து பரவலாகக் காணப்படுகிறது. அவைகுறித்த உங்கள் அணுகுமுறை என்ன?

ஸ்ரீ வேளுக்குடி: இரண்டு கோணங்களில் இதைப்பற்றிச் சொல்கிறேன். முதலில் அது கட்டுக்கதையே இல்லை. காரணம், அதில் குறிப்பிடப்படும் எல்லா இடங்களையும் நாம் நேராகப் போய் இன்றைக்கும் தரிசனம் செய்யலாம். பாரதத்தில் எந்தெந்த இடத்தில் என்னென்ன உள்ளது என்று இதிஹாசங்களில் சொல்லியிருக்கிறதோ அதெல்லாம் இன்றைக்கும் இருக்கிறது. கண்ணன் என்னென்ன செய்தார் என்று சர்க்கத்தில் சொல்லப்பட்டிருக்கிறதோ அது இன்றைக்கும் துல்லியமாக அதே இடத்தில் இருக்கிறது. நடந்ததற்கான சாட்சி இருக்கிறது. நேரடியாக அந்த இடங்களைப் பார்க்கலாம், கண்கூடாக விசாரித்துத் தெரிந்து கொள்ளலாம்.

இரண்டாவது, அதை அப்படியே கட்டுக்கதை என்று வைத்துக்கொண்டாலும் அதில் சொல்லப்பட்ட கருத்தை எடுத்துக்கொண்டால் அது உயர்ந்த கருத்தாக இருக்கிறது. அந்தக் கருத்தின்படி நாம வாழ்க்கையை அமைத்துக்கொள்ள ஆரம்பித்தோம் என்றால் கொஞ்சநாளில் அது கட்டுக்கதை இல்லை, உண்மை என்பது புரிந்துவிடும். ஆகவே இதை இரண்டு கோணத்தில் எப்படி வேண்டுமாலும் அணுகலாம்.

உரையாடல் தொடரும்…

(வட அமெரிக்காவில் இருந்து வெளியாகும் தென்றல் ஆகஸ்ட் மாத இதழில் இருந்து…)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s