ஃப்ளைட்டில் பறக்கிறது புதுப் பேட்டை சமோசா!


நம்ம ஊர் புதுப்பேட்டை சமோசா ஃப்ளைட்டில் பறக்கிறது என்றால் சும்மாவா?சிங்கப்பூர், கனடா, இலங்கை உட்பட பல நாடுகளில், பல ஊர்களில் நம்ம ஊர் சமோசாவிற்கு ஏக போக வரவேற்பு. சாதாரணமாக சமோசா வியாபாரம் செய்து, இன்று உச்சத்தைத் தொட்டிருக்கும் சென்னை புதுப்பேட்டையைச் சேர்ந்த ஹாஜா புன்யாமீனை சந்தித்தோம்.

மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவன் நான். என் அப்பா, சமோசா வியாபாரம் செய்து வந்தார். அதைப்பார்த்து வளர்ந்தவன் நான். பள்ளிக்குச் செல்லும் நேரம் போக, மற்ற நேரத்தில் தூக்குச் சட்டியில் தயாராக இருக்கும் சமோசாவை எடுத்துச் சென்று வீதிவீதியாக விற்பதுதான் என்னுடைய சிறு வயது வேலை. என்னுடன் பிறந்தது இரண்டு அண்ணன்கள், ஒரு தம்பி, ஒரு தங்கை. ஆறாம் வகுப்பு வரைதான் படிக்க முடிந்தது. 21 வயதில் திருமணம் செய்து வைத்தார்கள். குடும்பச் சூழ்நிலை காரணமாக தனிக்குடித்தனம் வரவேண்டியதாகி விட்டது.

திருமணத்திற்குப் பிறகும் புதுப்பேட்டை மார்க்கெட் பிளாட்பாரத்தில் சமோசா வியாபாரம் செய்து வந்தேன். எனக்கு சமைக்கத் தெரிந்த ஒரே உணவுப் பொருள் சமோசா மட்டுமே. அப்போது ஏற்றுமதி நிறுவனத்திற்காக சமோசா தயாரிக்கும் வேலை வந்தது. அதற்கென போதிய இடவசதியோ, பொருள்களோ என்னிடம் இல்லை. எனக்கு உதவ யாரும் முன்வரவில்லை.

என் நண்பர் ஒருவர் மூலமாக கிண்டியில் செயல்பட்டு வரும் ‘பாரதயுவ சக்தி டிரஸ்ட்டை’ அணுகினேன். அவர்கள் எனக்கு இந்தியன் வங்கியில் கடன் பெற ஜாமீன் கையெழுத்துப் போட்டார்கள். சுத்தமாக, சுகாதாரத்துடன் பொருட்களைத் தயாரிப்பது எப்படி என்று சொல்லிக்கொடுத்தார்கள்.

கிடைத்த வேலையை ஒன்றரை ஆண்டுகளாக சரியாகச் செய்து கொண்டு இருந்தேன். 2007-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் திடீரென அந்த நிறுவனத்தில் இருந்து எங்களுடைய வேலையை கேன்சல் செய்துவிட்டார்கள். கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல் ஆகிவிட்டது. ஓரளவு ஏற்றம் கண்டு கொண்டிருந்த வாழ்க்கை, சரிவைச் சந்தித்தது. நாம் ஏன் மற்றவர்களிடம் சென்று வேலை கேட்க வேண்டும். நாமே பொருட்களைத் தயார் செய்து ஏன் விற்பனை செய்யக்கூடாது என்ற எண்ணம் உருவானது.

2008-ம் ஆண்டு தொடக்கத்தில் என் மனைவி ஃபாரிசாவின் நகைகளை அடமானம் வைத்து ரெட்ஹில்ஸ் பகுதியில் இடம் ஒன்றை வாடகைக்கு எடுத்துப் பொருட்களைத் தயார் செய்ய ஆரம்பித்தேன். ஆனால் வியாபார உத்தி தெரியாது. நானே கடை கடையாக ஏறி இறங்கினேன். எங்களது சமோசாவின் டேஸ்ட் பலருக்கும் பிடித்துப்போக, வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயர்ந்தது. விற்பனை செய்யும் கடைகள் அதிகமாகின. அதனைத் தொடர்ந்து நட்சத்திர ஓட்டல்கள், ஐ.டி நிறுவனங்களில் இருந்து சமோசாவுக்கு ஆர்டர்கள் கிடைக்க ஆரம்பித்தன. படிப்படியாக பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யத் தொடங்கினேன்.

எந்த வங்கியில் எனக்குக் கடன் தராமல் உதாசீனம் செய்தார்களோ, அதே வங்கியில் இன்று என்னுடைய வளர்ச்சியைப் பார்த்து விட்டு உட்கார வைத்துப் பேசுகிறார்கள். நாம் செய்வது சாதாரண சமோசா வியாபாரம் தானே என்று நான் விட்டுவிடவில்லை. பல சோதனைகள் வந்தாலும் அத்தனையையும் எதிர்கொண்டேன். ஒவ்வொரு நாளும் எனக்கு நானே சவால்களை ஏற்படுத்திக்கொண்டுதான் இன்றுவரை செயல்படுகிறேன்….” – சவால்களை சக்ஸஸாக மாற்றிய அனுபவங்களை சுவாரஸ்யமாக விவரிக்கிறார் ஹாஜா புன்யாமீன்.

ஒரு தட்டு நிறைய அவர் கொண்டு வந்து வைத்த சமோசாக்களை சுவைத்தபடியே, கேள்விகளை அடுக்கினோம்.

சமோசா தவிர, உங்களுடைய மற்ற தயாரிப்புகள் என்னென்ன?

கட்லெட், வெஜ் ரோல், பனீர் ரோல், வெஜ் சமோசா, பனீர் சமோசா, கான் சமோசா, பர்கர் என்று இருபது ஐயிட்டங்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறேன். இன்று நாம் சாப்பிடும் தின்பண்டங்களில் பிரதான இடம் சமோசாவிற்கு உண்டு. எங்களுடைய தயாரிப்பான குட்டி சமோசாக்கள் அனைத்துத் தரப்பினரையும் கவர்ந்துள்ளன. வெளிநாடு மட்டுமல்லாமல் நம் நாட்டில் பல மாநிலங்களிலும், தமிழ்நாட்டிலுள்ள பல ஊர்களிலும் எங்களுடைய தயாரிப்புகள் விற்பனை செயப்படுகின்றன.”

தேவையான மூலப்பொருட்களை எங்கிருந்து வாங்குகிறீர்கள்?

எங்களுடைய தயாரிப்புகளுக்கான பிரதான மூலப் பொருளே மைதாமாவுதான். அதை நேரடியாக மில்லில் இருந்தே வாங்கிவிடுகிறோம். காய்கறிகளை கோயம்பேட்டில் இருந்து வாங்குகிறோம். முக்கியமான சில பொருட்களை குஜராத்திலிருந்து வரவழைப்போம். அங்கிருந்து வரும் உருளைக்கிழங்கு பொடி மிகவும் விசேஷமானது.”

ஏற்றுமதி செய்யும் பொருட்கள் எவ்வளவு நாட்கள் கெடாமல் இருக்கும்? அதனுடைய தரத்திற்கு என்ன செய்கிறீர்கள்?

சமோசா, ரோல், வெஜ்ரோல், கட்லெட், பனீர் போன்ற ஐயிட்டங்களை ஏற்றுமதி செய்கிறோம். இவை ஒரு வருடம் வரை கெடாமல் இருக்கும். கெடாமல் இருப்பதற்காக உடலுக்குக் கெடுதியை ஏற்படுத்தும் எந்தப் பொருளையும் சேர்ப்பதில்லை. குறிப்பாக, குளிர்சாதன கண்டெய்னர்கள் வழியாகத்தான் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செயப்படுகின்றன.”

உங்கள் தயாரிப்புகளில் இயந்திரங்களின் பங்கு உண்டா?

சமோசா மற்றும் சில பொருட்களுக்கு உள்ளே வைக்கப்படும் மசாலா தயாரிப்பதற்கு இயந்திரங்களைப் பயன்படுத்துகிறோம். ஆனால் சமோசாவை கையால் மட்டுமே தயாரிக்க முடியும்.”

வியாபாரத்தில் நினைத்த இலக்கை அடைந்து விட்டீர்களா?

தனியாக வியாபாரம் செய்தவன் இன்று எழுபது ஊழியர்களுக்கு வேலை வழங்கி இருக்கிறேன். நினைத்த இலக்கை அடைய இன்னும் நிறைய தூரம் ஓடவேண்டியுள்ளது.

“போட்டிகள் உண்டா?

வியாபாரத்தில் போட்டிகள் இல்லாமலா? ஏராளம் உண்டு. அவற்றை எதிர்கொண்டுதான் நாம் நம்முடைய பொருட்களை விற்பனை செய்ய வேண்டும். என்னுடைய பொருட்களை பத்து ரூபாய்க்கு விற்கிறேன் என்றால் ஒன்பது ரூபாய்க்கு கொடுப்பதற்கு ஆட்கள் தயாராக இருக்கிறார்கள். நாம் சறுக்கினாலே தள்ளி விடுவதற்குத் தனிக் கூட்டமே உள்ளது. ஆனாலும் சரியான விலையில், தரமான பொருட்களைக் கொடுத்தால் மட்டுமே சந்தையில் நிற்க முடியும்.”

முன்னேற்றப் பாதையில் மறக்க முடியாத அனுபவம்?

சாதாரண சமோசா வியாபாரியான என்னை லண்டனுக்கு அழைத்து, சிறந்த தொழில்முனைவோர் விருது அளித்து இளவரசர் சார்லஸ் கௌரவித்தார். அந்த நிகழ்வை இன்றுவரை என்னால் மறக்க முடியாது. அதனை நினைக்காத நாளில்லை.”

புதிதாகத் தொழில் தொடங்குபவர்களுக்கு உங்களுடைய டிப்ஸ் என்ன?

நான் படும் கஷ்டங்களை மற்றவர்கள் படக் கூடாது. என்னால் முடிந்தவரை வழிகாட்டுவேன். மேலும் தொழில் முனைவோர்களை உருவாக்கும் வகையில் என்னுடைய பொருட்களை விற்பனை செய்ய இருபது கிளைகளைத் தொடங்க இருக்கிறேன். இதன் மூலமாகப் பலருக்கும் வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கத் திட்டமிட்டுள்ளேன்.”

உங்களுடைய ரோல் மாடல் யார்?

எனக்கு ரோல் மாடல் என்று யாரையும் சொல்ல முடியாது. என்னுடைய உழைப்பும், தன்னம்பிக்கையும்தான் என்னுடைய ரோல் மாடல். மேலும் நான் இந்தளவு உயர்வதற்கு ஊன்றுகோலாக இருந்தவர் என்னுடைய மனைவி ஃபாரிசா. நான் தடுமாறிய தருணங்களில் தோள் கொடுத்தவர் அவர் தான்!” .

சந்திப்பு : வனராஜன் (மங்கையர் மலர்)

Advertisements

One thought on “ஃப்ளைட்டில் பறக்கிறது புதுப் பேட்டை சமோசா!

  1. nparamasivam1951 July 31, 2016 at 10:10 AM Reply

    படிக்கவே உற்சாகமாக உள்ளது. ஹாஜா புன்யாமீன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். மற்ற அரசியலில் ஈடுபடாது, இதே போல் தொழில் ஆர்வம் காட்டி, பல தொழில்முனைவோருக்கு முன் உதாரணமாக திகழவேண்டும், உருவாக்க வேண்டும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s