மனோபலம் அவசியம்! – வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன்


நமக்குச் சாப்பிட வேண்டும் என்றால் மட்டும், வித விதமாகக் கேட்கிறது நாக்கு. ஆனால், சுவாமிக்கு நைவேத்யம் பண்ண வேண்டும் என்றால் நிறைய பேர்க்கு கைவர மாட்டேன் என்கிறது. நாம் எவ்வளவோ விதவிதமான பழங்களைச் சாப்பிடுகிறோம். ஆனால், பெருமாளுக்குத் திரும்பத் திரும்ப இரண்டு வாழைப்பழங்களைத்தான், அதுவும் சின்னதாக நைவேத்யம் செய்ய கோயிலுக்கு எடுத்துப் போகிறோம்” என்றார் தமது சொற்பொழிவில் வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி.

கோயிலில் பெருமாளுக்கு தளிகை சமர்ப்பிக்க கொடுக்கும் அரிசி 35 ரூபாயைத் தாண்டாது. ஆனால், நமக்கு மட்டும் 55 ரூபா அரிசி வாங்கி சாப்பிடுகிறோம். சில நேரங்களில் சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல் என்று தளிகை சமர்ப்பிக்க கோயிலில் வேண்டிக்கொண்டால் பிரசாதம் வாங்கச் செல்லும்போது பெரிய எவர்சில்வர் தூக்கை எடுத்துப் போகிறோம். நாம் தளிகைக்கென்று வேண்டிக் கொண்டது முழுவதையும் நமக்கே கொடுத்து விட மாட்டார்களா என்ற எண்ணம்தான் அதற்குக் காரணம். சின்ன பாத்திரமாக நாம் கொண்டு போனால், அங்கே கோயிலுக்கு வரும் எல்லாருக்கும் அந்தப் பிரசாதத்தைக் கொடுப்பார்கள் இல்லையா?

அனைவருக்கும் மனோபலம் ரொம்ப முக்கியம். பகவானிடத்தில் முழு நம்பிக்கை வைத்து விட்டால் நிச்சயம் மனோபலம் வந்து விடும். ஓர் உதாரணத்துக்கு, சென்ற வருடத்தின் துவக்கத்தில், ‘அடடா… இப்படி யெல்லாம் பல விஷயங்கள் நடந்து விடப்போகிறதே’ என்று பயந்திருப்பீர்கள். அவற்றை எல்லாம் பட்டியலிடுங்கள். அதில் 90 சதவீதம் நீங்கள் பயந்தது போல எதுவும் நடந்திருக்காது. நல்லபடியாகவே நடந்திருக்கும்.

மனோபலம் முழுமையாக இருந்தால் சரீர பலத்தை வரவழைத்துக் கொள்ளலாம். இதை ஒரு உதாரணத்தின் மூலமாக விளக்கலாம்.

நமது வீட்டில் அவ்வப்போது நடப்பதுதான். ஏதோ ஒரு பொருளை எங்கேயாவது வைத்து விடுவோம். பின்னர், தேடுதேடென்று தேடுவோம். வீட்டையே தலைகீழாகக் கவிழ்த்துப் போட்டுத் தேடுவோம். அந்தப் பொருள்கிடைக்காது. நம் வீட்டிலேயே அந்தக் காலத்துப் பாட்டி ஒருவர் படுத்தபடுக்கையாக இருப்பார். எல்லோரும் அவர் அருகில் சென்றுதான் பேச வேண்டும். அந்த அளவுக்கு பலவீனமாக இருப்பார். தொலைந்த பொருள் கிடைக்கவில்லையே என்ற ஆதங்கத்தில் நாம் ஒருவருக் கொருவர் பேசிக் கொண்டிருப்பது சன்னமாக பாட்டி காதில் விழும். அவர் உடனே சைகையால் அருகே அழைத்து, ‘அதோ அந்த மேஜையின் மேல் வைக்கிறேன் என்று உன்னிடம் சொன்னதுபோல ஞாபகம்’ என்பார்.

மிகச்சரியாக அந்த மேஜையின் மேல் பாட்டி குறிப்பிட்ட இடத்தில் அந்தப் பொருள் இருக்கும். உடம்பு சரியில்லாமல் போனாலும் கூட, பாட்டிக்கு குடும்பத்தின் மேல் அத்தனை பற்றும் பாசமும் இருப்பதால் தான் மனோபலம் அதிகமாகி எல்லாவற்றிலும் ஆர்வம் காட்டுகிறார். ஆக, உடம்பு பலம் இரண்டாமிடம்தான். மனோபலமே முக்கியம்!

நான் உபந்யாசம் செய்ய வெளியூர்களுக்குப் போகும்போது, நிகழ்ச்சியை ஏற்பாடு செய்பவர்கள் வீட்டிலேயே தங்கவைப்பார்கள். அந்த நேரங்களில், ஏதாவது விஷயத்தை சரிபார்க்க ஒரு பகவத்கீதை புத்தகத்தையோ அல்லது வேறு புத்தகங்களையோ கேட்டால், பல பேருடைய வீடுகளில் எதுவுமே இருக்காது. எல்லோர் வீட்டிலும் ‘சுழல் அலமாரிகள்’ வைத்து அதில் புத்தகங்களை அழகாக அடுக்கி வைத்திருக்கிறார்கள். ஆனால், அதில் இருப்பவை எல்லாமே தடிமனான ஆங்கிலக் கதைப் புத்தகங்கள்தான். ஆனால், அவர்கள்தான் வைஷ்ணவ சம்பிரதாயம் சார்ந்த உபந்யாசங்களை அந்த ஊரில் ஏற்பாடு செய்திருப்பார்கள்.

கேட்டால், ‘அதையெல்லாம் யார் சுவாமி படிக்கறது’ என்று ஒரே வார்த்தையில் சொல்லி விடுவார்கள். எதற்காக இந்த இரட்டை நிலைப்பாடு? அடியேனது தகப்பனார், ‘கோயிலுக்குப் போ. வேண்டாம்னு சொல்லலே. அதைவிட கிரந்தங்களைப் படி. அது ரொம்ப முக்கியம்’என்பார். அதனால நமது சம்பிரதாயம் சார்ந்த புத்தகங்கள் நிறைய கிடைக்கின்றன. அவற்றை வாங்கி வீட்டில் வையுங்கள். அவற்றை கண்ணுக்குப் படற இடத்தில் வைத்துவிட்டால் தினமும் அரை மணி நேரம் அதைப் படித்தே ஆக வேண்டும் என்று உங்களுக்கு நீங்களே ஒரு விதி வகுத்துக் கொள்ள வேண்டும். ஒரு புத்தகம் படித்து முடித்தவுடனே அடுத்த புத்தகம்! இப்படிப் படித்துக் கொண்டே இருக்க வேண்டும்.”

–நன்றி தீபம் ஆன்மீக மாத இதழ்

Advertisements

One thought on “மனோபலம் அவசியம்! – வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன்

  1. nparamasivam1951 July 20, 2016 at 3:52 PM Reply

    நல்ல அறிவுரை.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s