ஆர்.கே. நாராயணும் நானும் ஒன்று! – பாக்கியம் ராமசாமி


வடை என்பது ஆதி நாளிலிருந்தே நம் உணவில் சுவையான பங்கு வகிக்கிறது.

புராதனமான காக்கா வடை கதையில் வடை இடம்பெற்றிருக்கிறது.

நான் சென்னை வெள்ளாளத் தெருவில் வசித்து வந்தபோது என் வீட்டுக்கு எதிர் வாடையில் (வடையில் என்று படித்துவிட வேண்டாம்) திருச்செந்தூர் ஓட்டல் என்று ஒரு சிறிய பலகாரக் கடை இருந்தது.

புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் வெகு காலமாக பெயரும், புகழும் பெற்று விளங்கிய பங்கஜ விலாஸ் என்ற பிரபல ஓட்டலின் முதலாளிக்கு இந்த திருச்செந்தூர் ஓட்டல்காரர் சொந்தத் தம்பி. ஆனால் அந்தஸ்தில் அவர் மலை, இவர் மடு.

பெரியவரின் ஓட்டலில் நானும் என் அறையில் வசித்த நண்பர்களும் சிற்றுண்டி, சாப்பாடு ஆகியவை சாப்பிட்டால்கூட எங்களுக்கு மிகவும் பிடித்தது தம்பியார் தனது சின்ன சிற்றுண்டி கடையில் தினமும் மாலை இரண்டு மணி அளவில் போடத் துவங்கும் மசால் வடைதான்.

அந்த வடைகளின் நறுமணத்துக்கு அடிமையாகாதவர்களே கிடையாது. வடை சிறிய சைஸாக (மினி சைஸ்) இருந்தாலும் வாசனை தெருவையே ஒரு தூக்.

அந்த மத்தியான நேரத்தில் நிச்சயம் நாலைந்து பேர் வடைக்கு ஆர்டர் கொடுத்துவிட்டுக் காத்திருப்பார்கள். பெரும்பாலும் பார்ஸல்தான். அங்கே உட்கார்ந்து சாப்பிடுவதற்கெல்லாம் இடமில்லை.

நாங்களும் பார்ஸலில் வடை வாங்கி வந்து ரூமில் வைத்துக்கொண்டு சாப்பிடுவோம்.

ஒரு தினம் நாலு வடைகளை நண்பர்களுக்கும் கொடுத்து சாப்பிடலாமே என்று கையோடு எடுத்துச் சென்றுவிட்டேன்.

ரா.கி.ர.வும், புனிதனும் மிக மகிழ்ந்து நெகிழ்ந்து போனார்கள். “தினமும் வாங்கி வந்துவிடு. இன்னும் கொஞ்சம் கூடவே” என்று நேயர் விருப்பத்தை தெரிவித்தனர்.

அன்று ஆசிரியர் மதியத்தில் சற்று முன்னதாகவே ஆபீஸ் வந்துவிட்டார். அவர் தனது அறைக்கு வந்துவிட்டால் பஸ்ஸரை அழுத்தியோ, காலிங் பெல்லை அழுத்தியோ எங்களுக்கு, தான் வந்துவிட்டதைத் தெரிவிக்கமாட்டார். இண்டர்காம் மூலமாக “ஹரி ஓம்” என்று குரல் கொடுப்பார். நாங்கள் உடனே உள்ளே செல்வோம்.

அன்றைக்கும் அப்படித்தான் சென்றோம். ஆனால் எங்களை முந்திகொண்டுவிட்டது வடை வாசனை. ஆசிரியர் சிரித்தவாறு “என்னது இது பிரமாதமான வடை வாசனை” என்றார்.

நான் உடனே என் செக்‌ஷனுக்கு ஓடிச் சென்று அங்கு பாக்கி இருந்த இரண்டு வடைகளை ஒரு டிபன் காரியர் தட்டில் வைத்துக்கொண்டு ஆசிரியடம் விரைந்தேன்.

ஆசிரியர் வியப்புடன் “culprit இதுதானா” என்றார்.

“நீங்க ஒன்று சாப்பிட்டுப் பாருங்களேன். சின்ன சைஸ்தான்” என்று உபசரித்தோம்.

ஆசிரியர் எங்களது அன்பான வேண்டுகோளை நிராகரிக்க மனமில்லாமல் ஒரு வடையை எடுத்துத் துளி சாப்பிட்டிருப்பார். அதற்குள் எதிர் அறையிலிருந்து பிரசுரகர்த்தர் ஆசிரியரிடம் முக்கியமாக ஏதோ கலந்து ஆலோசிக்க உள்ளே வந்தார்.

வந்தவர் “அம்மாடி! வடை வாசனை ஆளைத் தூக்குகிறதே! ஓ! இங்கே ரகசியமாக வடை விருந்து நடக்கிறதோ! நானும் கலந்துகொள்ளலாமல்லவா?” என்று ஆசிரியர் அருகிலிருந்த நாற்காலியில் உட்கார்ந்துவிட்டார்.

ஆசிரியர் சிரிப்புடன் “சுந்தரேசன் வாங்கிட்டு வந்திருக்கார். நீயும் ஒண்ணு சாப்பிட்டுப் பாரேன்” என்றார்.

பப்ளிஷர் அடுத்த நிமிஷம் அவர் கட்டளையை நிறைவேற்றினார். “அட! அட! அபார ருசி! இவருக்கு எங்கே கிடைச்சுது? புதினா வேற கலந்து போட்டிருக்காங்க. பேஷ்! பேஷ்!” என்று ரசித்தார்.

அத்துடன் செல்லமாக ஒரு கட்டளையும் போட்டுவிட்டார். “தினமுமே வாங்கிக்கொண்டு வாங்க ஸார். நன்றாய் இருக்கிறது” என்றார்.

அன்றிலிருந்து அனேகமாக தினமும் மதியம் 3 மணி சுமாருக்கு ஆபீஸ் பையன் அந்த சிற்றுண்டிக் கடைக்குச் சென்று 20 வடை வாங்கி வந்துவிடுவான்.

இப்படியாக வடைத் திருவிழா தினசரி சுவையுடன் நடந்து வந்தது.

ஆனால் அடிக்கடி பப்ளிஷர் வெளியூர் போய்விடுவார். அவர் இல்லாமல் ஆசிரியர் ஆபீஸில் சிற்றுண்டி எதுவும் சாப்பிடமாட்டார்.

அதுமாதிரி சமயங்களில் After the break என்று வடைக்கு விடை கொடுத்துவிடுவோம்.

எல்லாம் கிடக்கட்டும். ‘இந்த ஆளுக்கு வடை, தோசை, பஜ்ஜி இதுகளை விட்டால் எழுத வேறு ஐடியாவே வராதா?’ என்று முகநூல் நண்பர்கள் முகத்தைத் தூக்கலாம்.

வடையைவிடச் சுவையான விஷயத்தை இனிமேல்தான் சொல்லப் போகிறேன்.

பிரபல ஆங்கில நகைச்சுவை எழுத்தாளரான ஆர்.கே. நாராயண் அவர்கள் இந்த திருச்செந்தூர் ஓட்டலுக்கு இரண்டு கட்டிடம் தள்ளியிருந்த மாடி வீட்டில்தான் குடியிருந்தார்.

நான் குடியிருந்த இடத்துக்கு எதிர் வாடையில் ஆர்.கே. நாராயண் வீடு இருந்தது. ஆனால் நான் அவரை சந்தித்ததில்லை. சந்தித்திருக்கவும் முடியாது. ஏனென்றால் நான் வெள்ளாளத் தெருவுக்கு வருவதற்கு முன்னதாகவே அவர் அங்கிருந்து சென்றுவிட்டார். (பத்து வருடங்களுக்கு முன்னதாகவே)

ஆகவே அந்த நகைச்சுவையாளர் வசித்த வீட்டையும் அவர் சுற்றி வந்த இடங்களையும் என்னால் சுவாசிக்க மட்டுமே முடிந்தது.

என் அறைக்கு நேரெதிரே அந்த திருச்செந்தூர் சிற்றுண்டி சாலைக்கு பக்கத்தில் ஒரு சிறிய லாண்டிரி கடை இருந்தது.

அந்தக் கடையைப் பற்றி நான் ஒரு கட்டுரையில் விவரமாக எழுதியிருக்கிறேன்.

அதே கடையைப் பற்றி ஆர்.கே. நாராயணும் தனது சுயசரித்திரத்தில் எழுதியிருக்கிறார்.

அந்த லாண்டரிக் கடையில் என்ன ஒரு விசேஷம். பெரிய நகைச்சுவை சாம்ராட்டையும் தம்மாத்தூண்டு சிரிப்பு எழுத்தாளரையும் ஒன்றாகக் கவர்ந்த அந்த லாண்டிரி விஷயம் என்ன? (நாளை பார்ப்போம் என்றெல்லாம் தள்ளிப் போட மாட்டேன். இதோ இப்போதே சொல்லிவிடுகிறேன்.)

அந்த லாண்டிரியின் பெயர் ‘எட்வர்ட் லாண்டிரி’. வயோதிகமான மெலிந்த, குள்ளமான, முகமெல்லாம் எப்போதும் நீங்காத நெருக்கமான சந்தேகக் குறிகளுடன் கூடியவராக அதன் முதலாளி எப்போதும் முக்காலியில் கடையில் உட்கார்ந்திருப்பார். கடையைக் காத்துக்கொண்டிருப்பார் என்றும் சொல்லலாம்.

இரவு பத்து மணிக்குத்தான் கடை அடைப்பார். அதுவரையிலும் இரண்டு தொழிலாளிகள் அயர்ன் செய்தவாறு இருப்பார்கள்.

கடையைப் பூட்டுவது அவரைப் பொறுத்தவரையில் ஒரு மாபெரும் திருவிழா.

வரிசை எண்கள் போடப்பட்ட நான்கு பலகைகளை தெருவிளக்கின் குறைந்த மங்கிய வெளிச்சத்தில் சரிபார்த்து அதனதன் இடத்தில் பதித்து பெரிய இரும்பு தாழ்ப்பாளையும் போட்டு மூன்று பூட்டுக்கள் பூட்டிவிட்டுப் படி இறங்குவார்.

இறங்கியதும் போய்விட மாட்டார். கடைக்கு நான்கு அடி தூரத்தில் நின்று பூட்டிய கதவை அங்கிருந்தே நோட்டமிடுவார்.

பிறகு மறுபடி படியேறி அந்தப் பூட்டுக்களை சிறிது அசைத்துப் பார்த்துவிட்டு படியிறங்கி சாலையில் ஆறு ஏழு அடி நடந்ததும் அங்கிருந்து கடையின் பூட்டுக்களை சற்று அண்ணாந்து பார்ப்பார். (பசியால் வாடிய நரி திராட்சைக் குலையை அண்ணாந்து பார்த்ததே அந்த மாதிரி)

அவர் முகம் சந்தேகப்படுவதற்கென்றே அமைந்தது. ஆகவே மீண்டும் சந்தேகம் வர மெதுவாக படியேறி ஓரொரு பூட்டாக இழுத்துப் பார்ப்பார்.

நாங்களெல்லாம் எங்கள் அறையிலிருந்து ஜன்னல் வழியாக அவர் லாண்டிரியிலிருந்து பிரியா விடை பெரும் அழகை – அவஸ்தையைப் பார்த்து ரசிப்போம்.

இறுதியாக ஏதோ ஒரு கால கட்டத்தில் அவருக்கு நம்பிக்கை வந்து புறப்பட்டு விடுவார்.

லாண்டிரிக்காரரின் இந்த பூட்டுத் திருவிழாப் பற்றி ஆர்.கே. நாராயண் அவர்களும் தனது சுயசரித்திரத்தில் தான் வாழ்ந்த வெள்ளாளத் தெரு பற்றிய குறிப்புகளில் நகைச்சுவையாக எழுதியுள்ளார்.

திரு ஆர்.கே. நாராயண் காலத்தில் திருச்செந்தூர் சிற்றுண்டி கடை இருந்திருந்தால் அவரும் அந்த வடைக்கு அடிமையாகி அதைப் பற்றியும் தன் சரித்திரத்தில் குறிப்பிட்டிருப்பார்.

வடைக்கு அந்த பாக்கியம் இல்லை.

Advertisements

3 thoughts on “ஆர்.கே. நாராயணும் நானும் ஒன்று! – பாக்கியம் ராமசாமி

 1. Venkat July 12, 2016 at 1:31 PM Reply

  நல்ல பகிர்வு. வடை சாப்பிடத் தோன்றுகிறது…. 🙂 இங்கே தில்லியிலும் இப்படி ஒரு கடையில் வடை கிடைக்கும். அதற்காகவே கரோல் பாக் போக வேண்டும் இப்ப…..

  நன்றி.

 2. nparamasivam1951 July 13, 2016 at 11:51 AM Reply

  ஆஹா! ஜாம்பவான்கள் எல்லாம் இருந்த தெரு வெள்ளாள தெரு என அறிகிறேன். அதும் பாக்கியம் ராமசாமி எழுதினால் கேட்கவும் வேண்டுமா.

 3. sps July 16, 2016 at 3:34 PM Reply

  Enjoyed well. Thanks.

  Sent from Yahoo Mail for iPad

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s