முந்தி விநாயகரும் கொங்கு நாட்டு சேனை உருண்டைக் குழம்பும்…


‘நீயே சரணம் நினதருளே சரணம் சரணம்

நாயேன் பல பிழை செய்து களைத்து உனை நாடி வந்தேன்

வாயே திறவாத மௌனத்திருந்து உன் மலரடிக்குத்

தீயே நிகர்த்து ஒளி வீசும் தமிழ்க்கவி செய்குவனே!

-மகாகவி சுப்பிரமணிய பாரதியார் எழுதிய மூல முதற்கடவுள் விநாயகரைப் பற்றிய பாடலைப் பாடி, கோவை புளியகுளத்தில் அமைந்திருக்கும் ‘முந்தி விநாயகரை’ தரிசனம் செய்தேன். இது ஆசியக் கண்டத்திலேயே மிகப் பெரிய விநாயகர் சிலையாகும். ஒரே கல்லில் வடித்த சுமார் 20 அடி உயரமும், 11 அடி 10 அங்குலம் அகலமும் கொண்ட இம்முந்தி விநாயகர், ஸ்ரீ லக்ஷ்மி அம்சமும், அர்த்தநாரீஸ்வரர் அம்சமும் கொண்டவர் என்று கூறுகிறார்கள்.

Munthi Vinayagar

‘முந்தி விநாயகர் சுமார் 19 அடி 10 அங்குல உயரமும் 11 அடி 10 அங்குல அகலமும், 8 அடி கனமும் கொண்டவராக, சுமார் 190 டன் எடை கொண்டவராகத் திகழ்கிறார். இன்னொரு சிறப்பு… இந்தச் சிலை ஒரே கல்லில் செதுக்கப்பட்டு உள்ளது. விநாயகரின் நெற்றி மட்டுமே இரண்டடி அகலம். துதிக்கை வலம் சுழிந்து காட்சி தருகிறார் பிள்ளையார். நான்கு திருக்கரங்கள். வலது முன் கரத்தில் தந்தமும் பின் கரத்தில் அங்குசமும்; இடது முன்கரத்தில் பலாப்பழமும் பின் கரத்தில் பாசக் கயிறும் கொண்டு காட்சி தருகிறார். தவிர, துதிக்கையில் மகாலட்சுமியின் அம்சமான அமிர்த கலசத்தைத் தாங்கியபடி, தாமரை பீடத்தில் அமர்ந்து அருள்பாலிக்கிறார் ஸ்ரீவிநாயகக் கடவுள். அவரின் கிரீடத்திலும் தாமரை மேல்நோக்கி விரிந்திருப்பது போன்ற வேலைப்பாடு மிக அழகு!

வாசுகிப் பாம்பை, தன் வயிற்றில் கட்டிக் கொண்டிருப்பதால், நாக தோஷத்தை நீக்கி அருள்கிறார் ஸ்ரீகணபதி பெருமான். நாக தோஷம் உள்ளவர்கள், இங்கு வந்து ஸ்ரீவிநாயகரை வணங்கினால், தோஷம் நீங்கி, வளமுடன் வாழ்வார்கள் என்பது நம்பிக்கை” என்கிறார் கோயிலின் கார்த்திகேய குருக்கள்.

பிடியதன் உருவுமை கொளமிகு கரியது’ என்ற வாக்குக்கு இணங்க, அம்பாள் பார்வதியும் பரமேஸ்வரனும் யானை உருக்கொண்டு ஸ்ரீவிநாயகப் பெருமானாகத் தோன்றியது போல் காட்சி அளிக்கிறார் கணபதி. அதாவது, அவரின் வலது பகுதி, ஆண்களைப் போலவும் இடது பக்கம் பெண்களின் வடிவிலும் அமைந்து உள்ளது.

விநாயகர் தரிசனம் முடிந்தபின், ‘செண்பக விலாஸத்தில்’ நான் சுவைத்த பிரசித்தி பெற்ற கொங்கு நாட்டு சேனை உருண்டைக் குழம்பு பற்றியும், அதன் செய்முறை பற்றியும் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

குழம்புக்கு வேண்டிய மசாலாவைத் தயாரிக்க, ஒரு வாணலியில் தாராளமாக எண்ணெய் ஊற்றி, அதில் உரித்த சின்ன வெங்காயம், சிறிது சோம்பு, சீரகம், கசகசா, மல்லித்தூள், மஞ்சள்தூள், கால் மூடி தேங்காய்த் துருவல் சேர்த்து வதக்கி, பின் கடைசியாக மிளகாய்த் தூள், முந்திரி சேர்த்து இறக்கி ஆற வைக்கிறார்கள்.

சேனையை நன்கு தோல் சீவி, கேரட் துருவியில் துருவி, அதனில் இருக்கும் நீரை ஒட்டப் பிழிந்து விட்டு, கெட்டியாக எடுக்க வேண்டும். நமைச்சல் ஏற்படாமலிருக்க, பிழிந்த நீரைப் பயன்படுத்துவதில்லை. பின் வாணலியில் எண்ணெய் சேர்த்துப் பொடியாக நறுக்கிய வெங்காயம், சிறிது இஞ்சி- பூண்டு விழுது, மிளகாய்த் தூள், சொம்பு 1 டீஸ்பூன், கரம் மசாலாத் தூள் சிறிதளவு, பொடியாக நறுக்கிய கொத்துமல்லி இவைகள் சேர்ந்த கலவையோடு துருவிப் பிழிந்த சேனை, உப்பு சேர்த்து வதக்குகிறார்கள். கலவை நன்கு வதங்கியவுடன், சிறு சிறு உருண்டைகளாகக் கெட்டியாகப் பிடித்து வைக்கிறார்கள்.

அச்சமயத்தில் முதலில் வதக்கிய மசாலாவை நைஸாக அரைத்துத் தனியாக வைக்கிறார்கள். வாணலியில் எண்ணெய் வைத்து சூடானதும் கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம், தக்காளி, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கி, அரைத்த மசாலா விழுதைச் சேர்க்கிறார்கள். இவை அனைத்தும் ஒன்றுசேர வாசனைமிக்க கிரேவி தயாராகிறது.

ஒரு பாத்திரத்தில் சிறிது மைதா மாவு, உப்பு, மிளகாய்த் தூள் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி, பஜ்ஜி மாவு பதத்துக்குக் கலந்து, குலாப்ஜாமூன் போன்ற சேனை உருண்டைகளை இக்கலவையில் தோய்த்து, பிரட் பொடியில் நன்கு புரட்டி எடுத்து, எண்ணெய்யில் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கிறார்கள்.

குலாப் ஜாமூன்களா அல்லது சேனை உருண்டைகளா என்ற ஐயம் வந்தது. அவ்வளவு நேர்த்தியான உருண்டைகள்! சிறிது தேங்காய்ப்பால் சேர்த்த அக்குழம்பில் உருண்டைகளைப் போட்டதும், குழம்பு ரெடி. புளியே இல்லாத இக்குழம்பின் ருசியை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. சூடான பொன்னி புழுங்கலரிசி சாதத்தின் மேல், நெய்யை விட்டு இந்த சேனை உருண்டைக் குழம்பை ஊற்றிச் சாப்பிட்டால், ஆஹா ருசியோ அபாரம்!

நேரம் கிடைக்கும்போது புளியகுளம் முந்தி விநாயகரைத் தரிசித்துவிட்டு வானவராயனின் ‘செண்பக விலாஸ்’ சென்று கொங்கு நாட்டு சேனை உருண்டைக் குழம்பை ருசித்து வாருங்கள்.

அனுபவம் : ராகேஷ் ரகுநாதன்

எழுத்து : ரமா ரகுநாதன்

-நன்றி மங்கையர் மலர்

Advertisements

2 thoughts on “முந்தி விநாயகரும் கொங்கு நாட்டு சேனை உருண்டைக் குழம்பும்…

  1. yarlpavanan June 18, 2016 at 6:02 PM Reply

    அருமையான பதிவு

    http://ypvn.myartsonline.com/

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s