11-அருளே அறிவே அமுதே! – சுப்பு ஆறுமுகம்


இதன் முந்தைய பகுதி…

மஹா பெரியவாள் சொல்கிற கதைகளை வில்லுப்பாட்டில் பொருத்தமான இடத்தில் நான் சொல்வது ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம், அவர் ஏண்டா! இன்னிக்கு உன்னோட புரோகிராம்ல பால்கதை சொல்லுவியோ?” என்று கேட்ட சந்தர்ப்பங்களுமுண்டு. அது என்ன பால் கதை?

பாலுக்கு ஒரு பெரிய வருத்தம். பசுவின் வயிற்றில் நான் இருந்தேன். என்னை ஒருத்தி கறந்து பாத்திரத்தில் ஊற்றினாள். அடுப்பைப் பற்றவைத்து,அந்தப் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, சூடாக்கினாள். எனக்கு சூடு தாங்கவில்லை. துடித்துப் போனேன். பசுவின் வயிற்றில் பத்திரமாக இருந்த எனக்கு இப்படி ஏன் ஒரு சோதனை?” என்று என்னை நானே நொந்து கொண்டேன். பொங்கிய நிலையில் என்னை அடுப்பிலிருந்து இறக்கிவைத்தாள். நேரமாக, நேரமாக நான் ஆறியதும், புளித்த மோரைக் கொண்டு வந்து என்னோடு சேர்த்தாள். இது என்னடா புது தண்டனை?” என்று வருத்தப்பட்டேன். அதன் பிறகு யாரும் என்னைப் பற்றிக் கவலைப்படவில்லை. திரவமாக இருந்த நான் திடமாக மாறிப்போனேன். எனக்குத் தயிர் என்று புதிதாக ஒரு பெயரை வைத்தார்கள்.

அத்துடன் நிறுத்தினார்களா? என்னை ஒரு பானையில் ஊற்றி, மத்து கொண்டு கடைய ஆரம்பித்தார்கள். நான் மறுபடி மோர் என்ற திரவமானேன்.

என்னுள்ளிருந்தே ஒரு திடப்பொருளை வரவழைத்து, அதற்கு வெண்ணெய் என்று பெயர் வைத்தார்கள். ‘பட்டர்’ என்ற பெயரைக் கேட்டதும், அப்பாடா! இனியாவது என் வாழ்க்கை ‘பெட்டர்’ ஆகுமா?” என்று ஏங்கினேன்.

அத்துடன் தீர்ந்ததா என் கஷ்டம்? அந்த வெண்ணெயை, மறுபடி அடுப்பில் வைத்து உருக்கினார்கள். எனக்கு நெய் என்று இன்னொரு புதுப் பெயரை வைத்தார்கள். உருக்கிய நெயை ஒரு ஜாடியில் ஊற்றி, அந்த வீட்டில் ஜன்னலுக்குப் பக்கத்தில் வைத்தார்கள்.

பாலாக இருந்த நான், பட்ட கஷ்டங்களையும், இப்போதுள்ள நிலைமையையும் நினைத்தபடியே இருந்த நேரத்தில், ஜன்ன லுக்கு வெளியில் இரண்டு பெண்கள் ஏதோ பேசிக்கொண்டே செல்வதை நான் கவனித் தேன். ஒருத்தி உங்க ஊர்ல பால் என்ன விலை?” என்று கேட்டாள். அதற்கு அடுத்தவள், அரை லிட்டர் ஆறு ரூபா” என்றாள். உடனே முதல் பெண்மணி, ஆனா இந்த நெய் விற்கிற விலையைப் பார்த்தியா? அரை லிட்டர் கேட்டால் கடைக்காரன் பதினாறு ரூபா விலை சொல் றான்” என்றாள். ஜன்னல் பக்கத்திலே, ஜாடிக்குள்ளே இருந்த நான் அவர்கள் பேசிக்கொண்டதைக் கேட்டு ஆச்சர்யப்பட்டேன். பாலாக இருந்தபோது என் மதிப்பு வெறும் ஆறு ரூபாதான், ஆனால், பல கஷ்டங்களை அனுபவித்து, நெய்யான பிறகு, என் மதிப்பு பதினாறு ரூபாயாகக் கூடிவிட்டதே! இதை நினைக்கிறபோது, நான் பட்ட கஷ்டங்கள் எல்லாம் எனக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை!” என்றது அந்த நெய்.

இதுதான், மஹாபெரியவாள் ரசித்துக் கேட்கிற பால் கதை. இந்தக் கதை மூலம் நமக்குக் கிடைக்கிற பாடம் என்ன? நாம் வாழ்க்கையில் சந்திக்கும் சவால்களும், கஷ்டங்களும்தான் நம்முடைய வாழ்க்கையின் தரத்தை, மதிப்பை உயர்த்துகிற அம்சங்கள்.

இதைத்தான், நோபல் பரிசு பெற்ற கவிஞரான தாகூர் கூட, ஓஹோ! கஷ்டங்களே. என்னிடம் வாருங்கள்! துன்பங் களே, என்னை நெருங்கி வாருங்கள்! நீங்கள் தான் கடவுளை எனக்கு அறிமுகப்படுத்தினீர்கள்!” என்று தம் கவிதையில் குறிப்பிட்டிருக்கிறார்.

பகவத் கீதையில், அர்ச்சுனன் கூட, எனக்குக் கவலை வரும்போதுதான் கிருஷ்ணன் ஞாபகம் வருகிறது” என்று சொல்லுவார். அந்தக் காலத்தில் இந்தக் கதையைச் சொல்கிறபோது, இறைவனிடம் ஆழாக்கு பாலைப் போல என்னை ஆளாக்கு!” என்று பிரார்த் தனை செய்யவேண்டும்; தப்பித்தவறிக் கூட ஆண்டவனே! ஆழாக்கு பாலைப் போல என்னை ஆளாக்கு; என் எதிரியைப் பாழாக்கு!” என்று வேண்டிக்கொள்ளக் கூடாது என்று நகைச்சுவையாக நான் சொல்லுவேன்.

ஒரு முறை மஹா பெரியவாளை தரிசித்தபோது, ஏண்டா! நீ சுருட்டப்பள்ளிக்கு போயிருக்கியோ?” என்று கேட்டார். போனதில்லையென்று நான் பதில் சொன்னாலும், அப்படி ஒரு ஊர் இருக்கிறது என்பது கூட எனக்கு அதுவரை தெரியாது என்பதுதான் நிஜம். ஆனால், அன்றைக்கு தரிசனம் முடிந் ததும், சென்னைக்குப் புறப்படாமல், சுருட்டப்பள்ளி என்ற ஊர் எங்கே இருக்கிறது என்று விசாரித்துக் கொண்டு, மடத்திலிருந்து நேரே அங்கே புறப்பட்டுவிட்டேன். தமிழக ஆந்திர எல்லையில் ஊத்துக்கோட்டை அருகே உள்ளது சுருட்டப்பள்ளி. அங்கே உள்ள சிவன் கோவில் ரொம்பவும் விசேஷம். ‘பள்ளி கொண்டேஸ்வரர்’ என்பது அங்கே சிவனின் நாமம். ஸ்ரீரங்கம் ரங்கநாதரைப் போலவே சுருட்டப்பள்ளியில் படுத்த கோலத்தில் சிவன் இருப்பதும், அந்த சிவன் பார்வதி மடியில், தலை வைத்து ஆனந்தப் புன்னகையுடன் படுத்திருப்பதும் ரொம்ப விசேஷம். (சிவதாண்டவம் ஆடிய சிவபெருமானின் கோபம் தணிந்து, அம்பாள் மடியில் சிரித்துக்கொண்டே படுத்திருப்பதாக ஸ்தல புராணம் சொல்கிறது).

சுருட்டப்பள்ளிக்குச் சென்று, பள்ளிகொண்ட சிவபெருமானைத் தரிசித்தபோது, அருணாசலக் கவிராயர் எழுதிய ஏன் பள்ளி கொண்டீரையா?” பாடல் என் நினைவுக்கு வந்தது. அப்போது என் மனதில் தோன்றிய சிந்தனைகளை ஒரு ஆசுகவியாகப் பாடினேன்.

ஏன் பள்ளி கொண்டீ ரையா? நமசிவாய

ஏன் பள்ளி கொண்டீரையா

சென்னை-திருப்பதியின்

பாதை நடுவினிலே

அன்னை சிவகாமியின் அழகு

மடியினிலே

(ஏன்)

என்று ஆரம்பித்து, சிவபெருமான், பார்வதி தேவியின் மடியில் தலை வைத்துப் படுத்துக் கொண்டிருக்க என்ன காரணம் இருக்கும்? என்று எனக்குக் கற்பனையில் தோன்றிய காரணங்களை அடுத்தடுத்த வரிகளில் சொன்னேன்.

திருவிளையாடல் நடத்தியதால் ஏற்பட்ட களைப்போ? தில்லையில் நடனம் ஆடியதால் ஏற்பட்ட களைப்போ? முப்புறமும் எரித்ததால் ஏற்பட்ட களைப்போ? அடியவர்களைத் தேடி அருளியதால் ஏற்பட்ட களைப்போ? என்று பலவிதமான காரணங்களை வரிசையாகச் சொல்லிக்கொண்டே வந்து, கடைசியாக, ஞானவல்லியின் மலர்ந்த முகம் காண விரும்பி, அவள் மடியில் தலை வைத்துப் படுத்துக்கொண்டிருக்கிறீரோ! என்று பாடலை முடித்தேன். அதாவது அம்பாள் தரிசனத்துக்கு அரனே பிரியப்பட்டார் என்பது இதன் கருத்து.

சுருட்டப்பள்ளியில் தரிசனத்தை முடித்துக் கொண்டு மறுபடியும் நேரே காஞ்சிபுரம் வந்து சேர்ந்தேன். மஹா பெரியவாளிடம் சுருட்டப்பள்ளிக்குப் போய் பள்ளிகொண்ட பெருமானைத் தரிசித்ததை மகிழ்ச்சியோடு சொன்னேன். அங்கே எழுதிய பாடலையும் பாடிக் காட்டினேன். தன் கைகளை உயர்த்தி ஆசிர்வதித்து, பிரசாதம் அருளினார்.

மஹா பெரியவாள் பிடி அரிசி திட்டம் பற்றி சொன்னபோது, அது ஆன்மிகப் பெருமக்கள் மத்தியில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஏராளமான குடும்பங்கள், தினமும் பிடி அரிசியை எடுத்து, தனியே வைத்து. அந்த மகத்தான கைங்கர்யத்தில் தங்களையும் ஈடுபடுத்திக் கொண்டன. அதனால் பல ஏழை மக்கள் பயன் பெற்றனர். இதெல்லாம் எல்லோருக்கும் தெரிந்த விஷயங்கள்தான். கவிஞர் கண்ணதாசன், மஹா பெரியவாளைச் சந்தித்தது பற்றி ஏற்கெனவே குறிப்பிட்டேன் அல்லவா?. அப்போது, மஹா பெரியவாளுடனான உரையாடலில், கண்ணதாசன் இந்தப் பிடி அரிசி திட்டம் பற்றியும் கேட்டார். அப்போது, மஹா பெரியவாள் ஒரு பிடி அரிசியை வைத்துக்கொண்டிருப்பது போல பாவனை செய்து, ஒரு பிடின்னா, ஒரு பிடி அளவு இல்லே; அந்தக் கையினுடைய அமைப்பை நன்னா பாரு. ஹிருதயம் மாதிரி இருக்கோல்லியோ! அதைத் தான் அங்கே கவனிக்கணும். நாம குடுக்கறது ஒரு பிடியா இருந்தாலும், ஹிருதயபூர்வமா அந்த தானத்தை செய்யணும்” என்று சொன்னார். பிடி அரிசி திட்டத்துக்குப் பின்னால் இப்படி ஒரு அழுத்தமான அம்சம் இருப்பது அனைவருக்கும் புரிந்தது.

இன்றைக்கு உலகமெங்கும் மஹா பெரியவாளுக்கு ஏராளமான பக்தர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் நான் செய்துகொள்கிற தாழ்மையான விண்ணப்பம் ஒன்று உண்டு. வீட்டில் அவருடைய படத்தை வைத்துக் கொண்டு பக்தியைக் காட்டினால் மட்டும் போதாது. அந்த மஹான் சொன்ன கருத்துக்களில் ஒரு சிலவற்றையாவது நம் வாழ்க்கையில் கடைப்பிடிப்போம்; அந்த தெய்வத்தின் அருளுக்கு நம்மைப் பாத்திரர்களாக்கிக் கொள்வோம்.

(அருள் நிறைந்தது)

S. Chandramouli

எழுத்தாக்கம்: எஸ். சந்திரமௌலி

படங்கள் : கல்கி களஞ்சியம்

Advertisements

One thought on “11-அருளே அறிவே அமுதே! – சுப்பு ஆறுமுகம்

  1. Ramananda Acharya June 1, 2016 at 2:07 AM Reply

    FOR MOST PEOPLE PERFORMANCE OF ONE DUTIES WITH A CONTROLLED MIND FOR THE GOOD OF THE WORLD IS THE EASIER AND THE BETTER PATH THE WORLD CYCLE AS SET IN MOTION BY THE CREATOR NEEDS EVERYONE TO DO HIS ALLOTTED DUTY.

    Om namo narayanaya

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s