காஞ்சிபுரம் துணித் தேன்குழல்!


காஞ்சி ஸ்ரீ வரதராஜ பெருமாளுக்கு ‘காஞ்சிபுரம் இட்லி’ பிரசித்தமானது போல், ‘துணி தேன்குழலு’ம் பிரசித்தம். பெருமாளுக்கு அமுது, நைவேத்யம் தயார் செய்யும் பேறு பெற்ற வரதன் வீட்டுக்குச் சென்று பெருமாளுக்கு விசேஷமாகப் படைக்கப்படும் ‘துணித் தேன் குழலை’ சுவைக்கவும், அதைத் தயாரிக்கும் முறையைப் பார்க்கவும் ஆசைப்பட்டேன். ஏறக்குறறைய 100 வருட வீடானதால், வீட்டின் முன்வாசல் ஒரு தெருவிலும், பின் வாசல் அடுத்த தெருவிலும் என சுமார் 500 மீட்டர் நீளத்தில் இருக்கிறது. வெளியில் வாட்டும் வெயிலின் வெப்பம், வீட்டுக்குள் சென்றால் ஏ.ஸி. போட்டது போல் ஜில்லென்று இருப்பதைக் கண்டு அதிசயித்தேன். அந்தக் கால விஸ்வகர்மாக்களின் கைவண்ணத்தை வியக்காமல் இருக்க முடியவில்லை.

வரதன் குடும்பத்தினர், 25 வருடங்களுக்கு மேலாக, அவருடைய மூதாதையர் காலத்திலிருந்தே ஸ்ரீ வரதராஜ பெருமாளுக்கு பிரசாதம் செய்யும் பேற்றை பெற்றவர்கள். ‘துணித் தேன்குழல்’ அக்கோயிலின் மிகப் பிரசித்தி பெற்ற பிரசாதம். இப் பிரசாதத்துக்கு தரமான அரிசி, தரமான உளுந்தை 1:1 என்ற விகிதத்தில் நீரில் ஊறவைத்து, பின் ஆட்டுரலில் உப்பு சேர்த்து கெட்டியாக, ஜிலேபி மாவு போல் அரைக்கின்றார். அத்துடன், மிளகு, சீரகம், பெருங்காயம் முதலியவற்றைப் பொடி செய்து கலக்குகின்றனர்.

விறகு கொண்டு தகதகவென்று எரியும் கோட்டை அடுப்பில், பெரிய வாணலியில் சம விகிதத்தில் எண்ணெய்யும், நெய்யும் கலந்து நன்கு சூடாக்குகிறார்கள். ஆட்டுரலில் அரைந்து கொண்டிருக்கும் வாசனைமிக்க மாவை, நடுவில் சிறு துவாரம் செய்த கனமான ‘ரெட்டு’ துணியில் இட்டு, மேலே விரல்களால் அழுத்தி, ஜாங்கிரியை ஒரு கலைநயத்துடன் சுற்றுகிறார்.

வாணலியின் வெளிச்சுற்றிலிருந்து ஆரம்பித்து, மணிமணியாக, தோரணம் கட்டுவதுபோல் பிழிகின்றனர். ஒவ்வொரு முறுக்கும் சுமார் 18 லிருந்து 20 அங்குலம் விட்டம் கொண்டதாக இருக்கிறது.

சிறிது நேரத்தில் நெய், மிளகு, சீரகம், பெருங்காய வாசனையுடன் கூடிய ‘துணித்தேன்குழல்’ பொன்னிறத்தில் தயாராகிறது. ஒரு நீளமான குச்சியால் எடுத்து, மூங்கில் தட்டில் வைக்கிறார் வரதன்.

பெருமாளுக்குச் செய்த பிரசாதமாதலால், வாசனை பன்மடங்கு பரிமளிக்கிறது. தேன்குழலை எடுத்தவுடன், லேசாக அதன் மேல் வெள்ளை வெளேரென்ற ‘பூரா சர்க்கரையை’ தூவி விட்டு, சுவையைப் பன்மடங்காக்கி, எனக்குச் சுவைக்கக் கொடுக்கிறார்.

தேன்குழலும், சர்க்கரையும் ஆன ஒரு மாறுபட்ட, வித்தியாசமான சுவையை நான் இதுவரை கேட்டதுமில்லை, சுவைத்ததுமில்லை. அபாரருசி! மழையோ, வெயிலோ எதையும் பாராமல், பெருமாளுக்கு உகந்ததை அலுப்பில்லாமல் தயாரிக்கும் வரதன், காஞ்சிபுரம் இட்லி செய்யும் பாப்ஜி இருவருக்கும் என் பணிவான நமஸ்காரங்களை செய்துவிட்டு, அந்த மகா பேறுபெற்றவர்களுக்கு ஒரு குறையுமில்லாமல் வாழ்க்கை நடக்க வேண்டும் என்று பெருமாளைப் பிரார்த்தித்துக் கொண்டு அங்கிருந்து விடைபெற்றேன்.

நீங்களும் காஞ்சி சென்று, கோயில்களைத் தரிசித்து விட்டு, அங்குள்ள உத்தமமான, வித்தியாசமான பிரசாதங்களைப் பெற்றுக் கொண்டு மகிழ வேண்டும்.

அனுபவம் : ராகேஷ் ரகுநாதன்

எழுத்து : ரமா ரகுநாதன்

-நன்றி மங்கையர் மலர்

Advertisements

2 thoughts on “காஞ்சிபுரம் துணித் தேன்குழல்!

  1. Venkat May 25, 2016 at 4:04 AM Reply

    துணித் தேன்குழல் – செய்முறை படிக்கும் போதே சாப்பிடத் தோன்றியது. காஞ்சி சென்றால் நிச்சயம் சுவைக்க வேண்டும்.

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    • BaalHanuman May 25, 2016 at 4:35 AM Reply

      வாருங்கள் வெங்கட். உங்களை நீண்ட நாட்களுக்குப் பிறகு இங்கு சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s