10-அருளே அறிவே அமுதே! – சுப்பு ஆறுமுகம்


இதன் முந்தைய பகுதி…

நந்தவனத்தில் ஓர் ஆண்டி – அவன்

நாலாறு மாதமாக் குயவனை வேண்டி

கொண்டு வந்தான் ஒரு தோண்டி – மெத்தக்

கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி”

இந்தப் பாட்டு பாமர ஜனங்கள் மத்தியில் கூடப் பிரபலமான ஒன்று. இது கிராமப்புறங்களில் மக்கள் பாடியதால் இதை ஒரு நாட்டுப்புறப்பாடல் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது உண்மையில் ஒரு சித்தர் பாடிய பாட்டு. அந்தச் சித்தரின் பெயர் கடுவெளிச் சித்தர் என்பார்கள்.

இந்தப் பாட்டு, மஹா பெரியவாளுக்கு மிகவும் பிடித்த பாட்டு. ஒரு ஆண்டி, தான் வைத்திருந்த மண் குடத்தை, கூத்தாடிக் கீழே போட்டு உடைத்துவிட்டான். இந்தப் பாட்டில் பெரிசாக என்ன இருக்கு? என்று பலரும் நினைக்கக் கூடும். ஆனால், பாட்டின் உண்மையான கருத்து அதுவல்ல. ஜீவாத்மா தத்துவம் இந்தப் பாடல் மூலமாக விளக்கப்படுகிறது.

மனிதனின் உயிர்தான் இங்கே குறிப்பிடப்படும் ஆண்டி. குயவன் என்று சொல்லுவது மண்பாண்டம் செய்கிற குயவனை இல்லை; மனித உயிர்களைப் படைக்கிற இறைவனைக் குறிக்கிறது. ஜீவாத்மாவாகிய ஆண்டி, பரமாத்மாவான குயவனிடம் வேண்டிக் கொள்கிறான். எவ்வளவு காலம்? நாலாறு மாதம், அதாவது நாலு பிளஸ் ஆறு, பத்து மாதங்கள் வேண்டியதன் பலனாக இறைவன் அந்த ஆண்டிக்கு உடல் என்கிற தோண்டியைக் கொடுக்கிறான்.

மனித உடலாக இந்தப் பூமியில் நடமாடத் தொடங்கிய ஜீவாத்மா, சரியான முறையில் அதைப் பயன்படுத்தத் தவறி (கூத்தாடி) அதனைப் போட்டு உடைத்தான். அதாவது இந்தப் பிறவியை வீணடித்து விட்டான் என்கிற தத்துவத்தைச் சொல்கிறது இந்தச் சித்தர் பாடல். மஹா பெரியவாள் தான் ஒருநாள் இந்தப் பாடலுக்கு, இப்படி ஒரு அர்த்தம் இருக்கிறது என்பதைத் தெளிவுபடுத்தினார்.

வில்லுப்பாட்டு மட்டுமில்லை, மஹாபெரியவாளுக்கு கிராமியக் கலைகள் எல்லாமே ரொம்பவும் பிடிக்கும். ‘நம்முடைய கலாசாரத்தை, காலம் காலமாகப் பத்திரப் படுத்தி வைத்தது கிராமியக் கலைகள் தான். வெள்ளைக்காரன் வருவதற்கு முன்னால், அவன் புஸ்தகங்களை அச்சிடுவதற்கு முன்னால், புராண, இதிகாசங்களை எல்லாம், பரம்பரை பரம்பரையாகக் காப்பாற்றி, நமக்குக் கிடைக்கும்படி செய்தவர்கள் கிராமியக் கலைஞர்கள் தான்’ என்பது மஹாபெரியவாளின் அழுத்தமான கருத்து.

கரகாட்டம் நடந்தால், அவர் எப்படி ரசிப்பார் தெரியுமா? ஓம் பெரியசாமி என்று ஒரு கரகாட்டக் கலைஞர். அவர் மஹா பெரியவாளுடைய பரம பக்தர். மடத்திலும் மடத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்ச்சிகளிலும் அவரது கரகாட்டம் பலமுறை நடந்துள்ளது.

ஒருமுறை கரகாட்டம் குறித்துப் பல அரிய தகவல்களை அவர் எனக்குச் சொன்னார். கலைஞர்களின் தலையில் வைத்து ஆடும் கரகம் மண்ணாலான குடமாகத்தான் இருக்கவேண்டும், மண்குடம் கீழே விழுந்தால் உடைந்துபோய்விடும். எனவே, அது உடையாமல் இருக்கவேண்டும் என்று கரகாட்டக்காரர்கள் மிகுந்த கவனத்துடன் ஆடுவார்கள். குடத்துக்குள்ளே ஒண்ணேகால் ரூபா போடும் பழக்கம் பாரம்பரியமானது. அதேபோல பொம்மலாட்டக் கலையையும் வளர்த்தவர் மஹா பெரியவாள்.

ஒருமுறை, கதை சொல்லிவிட்டு, மஹா பெரியவாளைத் தரிசிக்கச் சென்றபோது, உன்னோட உபநிஷத் ரொம்ப நன்னா இருந்தது!” என்று சொல்லி ஆசிர்வதித்தார்.

‘என்ன நாம சொன்னது கந்த புராணம் வில்லுப்பாட்டுதானே! அதை எதற்காக உபநிஷத் என்று சொல்கிறார்?’ என்று எனக்குக் குழப்பம்.

அவரே விளக்கம் சொன்னார்: உபநிஷத்னா நீ என்னன்னு நெனெச்சே? மனசுல உள்ளதை, லோக க்ஷேமத்துக்காகச் சொன்னியோல்யோ? அதான் உபநிஷத்!”

அரசாங்கத்தின் மக்கள் நலத்திட்டங்கள் முதல் மஹா பெரியவாள் வரை பலவிதமான கதைகள் சொல்லி இருந்தாலும், எனக்கு ரொம் பப் பிடித்தது வள்ளித் திருமணம்தான்.

காரணம், அதை மஹா பெரியவாளே மிகவும் விரும்பிக்கேட்டு, ஆசிர்வதித்திருக்கிறார். எனவே, ‘வள்ளித்திருமணம்’ வில்லுப் பாட்டு என்றால், அதுவும் மஹா பெரியவாள் ‘வள்ளித் திருமணம்’ கதை கேட்கிறார் என்றால், எனக்கு உற்சாகம் பிறந்து விடும். நான் அதிக தடவை சொன்ன கதையும் அதுவே.

‘வள்ளித் திருமண’த்தில் மூன்று விஷயங்கள் முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டும். முதலாவது சிவபரம்-விஷ்ணுபரம். முருகன் சிவனின் மகன். வள்ளியும் தேவசேனாவும் விஷ்ணு வீட்டுப் பிள்ளைகள். அடுத்தது, ஜீவாத்மா-பரமாத்மா தத்துவம். மனிதர்களெல்லாம் ஜீவாத்மா. தெய்வம் பரமாத்மா. வாழும் விதமாக வாழ்ந்தால், பரமாத்மா, ஜீவாத்மாவைத் தேடிவந்து ஏற்றுக்கொள்ளும். மூன்றாவது விஷயம், முருகன் – வள்ளி திருமணம் ஒரு கலப்புத் திருமணம். ஜாதி பேதங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டது தெய்வம் என்பதைத் தன் மூலமாகச் சொல்லப்படும் செய்தி. இந்த மூன்றும்தான் கந்தபுராணத்தின் சாரம்.

கதை சொல்கிறபோது, முருகன்-வள்ளி திருமணம் பற்றிச் சொல்கிறபோது, கலப்புத்திருமணம் என்றால், அதைத் தலைமையேற்று, நடத்தி வைக்கப் பொருத்தமானவர் ஒருவர் வேண்டுமில்லையா? அது யார்? அண்ணாதானே? என்று சொன்னதும், மக்கள் ரசித்துக் கைதட்டுவார்கள். சில விநாடிகள் அமைதியாக இருந்துவிட்டு, அதனால்தான், முருகனுடைய அண்ணன் விநாயகர் தன் தம்பி முருகனுடைய திருமணத்துக்கு யானையாக வந்து உதவி செய்ததுடன், திருமணத்தையும் நடத்தி வைத்தார்” என்று சொல்வேன். மறுபடியும் கைதட்டல் எழும்.

மஹா பெரியவாளின் நகைச்சுவை உணர்வு அலாதியானது.

சாதாரணமாகப் பேசிக் கொண்டிருக்கும்போதே பளீரென்று மின்னலாக ஒரு நகைச்சுவை வெளிப்படும். ஒருமுறை, நாஸ்தீகாள்கூட தன்னையும் அறியாமல் கடவுள் பேரைச் சொல்லிண்டிருக்கா தெரியுமோ?” என்று கேட்டார்.

வழக்கம் போல அவரது விடைக்காக நான் அமைதி காத்தேன். அவர் சொன்னார், பேசறப்போ வந்தாராம், போனாராம், செய்வாராம், சொல்வாராம் னெல்லாம் அவா சொல்லறப்போ, தன்னையும் அறியாம ‘ராமர்’ பேரை சொல்றா பாத்தியா? அதேபோல, செய்வோம், சொல்வோம், வருவோம், போவோம்னு சொல்லறப்போ, அதுல ‘ஓம்’ வந்துடறது பாத்தியா?”

பல ஊர்களில் இருந்தும், ஸ்கூல்ல படிக்கிற குழந்தைகள் மடத்துக்கு வந்து, பெரியவாளைத் தரிசனம் செய்வது வழக்கம். அப்போது, அவர் அந்தக் குழந்தைகளுக்கு நிறைய கதைகள் சொல்வதுண்டு. அப்படி பெரியவாள் சொல்லி, நான் கேட்ட கதைகளில் இது ஒன்று.

ஒரு உப்பு வியாபாரி, ஒரு மூட்டை உப்பை கழுதை முதுகில் ஏற்றிக்கொண்டு வியாபாரத்துக்குப் போனான். வழியில் திடீரென்று மழை பெய்ய, மூட்டையில் இருந்த உப்பெல்லாம் கரைந்துவிட்டது. ‘உப்பெல்லாம் மழையில் கரைந்துவிட்டதே! இன்றைக்கு வருமானமில்லையே!’ என்று வியாபாரிக்கு ஒரே வருத்தம்.

அதனால், அவனுக்குத் தான் வணங்கும் காமாட்சி மீது கோபம் வந்துவிட்டது. காமாட்சி! உனக்கு என் மேலே கருணையே இல்லையா? மழையை வரவழைத்து, என் பிழைப்பில் மண்ணைப் போட்டு விட் டாயே! என் பக்திக்கு இதுதான் பலனா? இனி உன்னை நான் வணங்க மாட்டேன்!” என்று ஆத்திரத்துடன் கத்தினான்.

ஆனால், உண்மை என்னவென்றால், அன்றைக்கு மழை பெய்து உப்பு கரைந்து போகாமல் இருந்திருந்தால் அவன் வியாபாரம் முடித்து இருட்டு நேரத்தில் பணத்தோடு ஊருக்குத் திரும்புகிறபோது திருடர்கள் கையில் சிக்கிக் கொண்டு பணத்தையும் பறிகொடுத்து உயிருக்கே ஆபத்தாக முடிந்திருக்கும்.

இந்தக் கதை சொல்லும் பாடம் என்ன? தெய்வத்தை நீ விட்டாலும், தெய்வம் உன்னை விடாது” என்பதுதான்.

மஹா பெரியவாள் சொல்கிற கதைகளை வில்லுப் பாட்டில் பொருத்தமான இடத்தில் நான் சொல்வது ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம், அவர் ஏண்டா! இன்னிக்கு உன்னோட புரோகிராம்ல பால் கதை சொல்லுவியோ?” என்று கேட்ட சந்தர்ப்பங்களுமுண்டு. அது என்ன பால் கதை?

(அருள் பொழியும்)

S. Chandramouli

எழுத்தாக்கம்: எஸ். சந்திரமௌலி

படங்கள் : கல்கி களஞ்சியம்

–நன்றி கல்கி

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s