நரசிம்ம ஜயந்தி (20.5.2016)


ஸ்ரீ மகாவிஷ்ணு மேற்கொண்ட தசாவதாரங்களில் பூர்ண அவதாரங்களான ஸ்ரீராம மற்றும் கிருஷ்ண அவதாரங்களுக்கு அடுத்து, மிகப் பவித்ரமாகத் திகழ்வது ஸ்ரீநரசிம்ம அவதாரம். நரசிம்மருக்கென இந்தியா முழுவதும் ஏராளமான ஆலயங்கள் இருப்பினும், ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் மிகப் புராதன, புராணப் பின்னணி கொண்ட நரசிம்மர் ஆலயங்கள் அதிகமாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அவற்றுள் மட்டப்பள்ளி, வாடப்பள்ளி, கேதவரம், மங்களகிரி, வேதாத்ரி ஆகிய ஐந்து தலங்கள் பஞ்ச நரசிம்மத் தலங்களாகப் போற்றப்படுகின்றன. கிருஷ்ணா நதிக்கரையில் அமைந்துள்ள இந்த ஐந்து தலங்களுமே புராண வகையிலும், மூர்த்தி அமைப்பிலும் ஒவ்வொரு வகையில் சிறப்புப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீ பானகால நரசிம்மர், மங்களகிரி

குண்டூரிலிருந்து 25 கி.மீ. தொலைவில், சுமார் 850 அடி உயர மங்களகிரி குன்றின் மீதுள்ள கோயிலில் ஸ்ரீபானகால நரசிம்மர் எழுந்தருளியிருக்கிறார். ஆலயத்தை அடைய சுமார் 400 படிகள் ஏறிச் செல்ல வேண்டும். புராண காலத்தில் மக்களுக்குத் துன்பம் விளைவித்து வந்த, ‘நமூசி’ என்ற அரக்கனை ஸ்ரீ மகாவிஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்து வதம் செய்ததாக தல புராணம் தெரிவிக்கிறது. ஸ்ரீ மகாலட்சுமி பாத யாத்திரையாக வந்து இங்கே தவம் செய்ததால் இதற்கு மங்களகிரி என்ற பெயர் ஏற்பட்டதாம்.

மலை உச்சியில் குகாலயத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ ராஜ்யலட்சுமி சமேத ஸ்ரீபானகால நரசிம்மருக்கு முக்கிய நைவேத்தியம் பானகம். நைவேத்ய பானகத்தை, அர்ச்சகர் ஒரு வலம்புரிச்சங்கில் முகந்து சுமார் 15 செ.மீ. அகலமான நரசிம்மரின் திறந்த வாய்க்குள் சமர்ப்பிக்கிறார். பாத்திரங்களில் எவ்வளவு பானகம் வைத்தாலும் அவற்றில் பாதியை மட்டுமே ஸ்ரீ நரசிம்மர் ஸ்வீகரிக்கிறார். மீதி பக்தர்களுக்குப் பிரசாதமாக விநியோகம் செய்யப்படுகிறது. மேலும், எவ்வளவு பானகம் நைவேத்யம் செய்யப்பட்டாலும் கருவறையிலோ வெளியிலோ ஓர் எறும்பு, ஈ கூட மொப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீராமானுஜர், சைதன்ய மகாப்ரபு போன்றவர்கள் இந்த நரசிம்மரை வழிபட்டுள்ளனர். மாலை நேரத்தில் தேவர்களும் முனிவர்களும் இங்கு ஸ்ரீநரசிம்மரை வழிபடுவதாக ஐதீகம். இதனால் கோயில் மாலை நேரத்தில் திறக்கப்படுவதில்லை. ஸ்ரீராமரின் அறிவுரைப்படி அனுமன் இத்தலத்தின் க்ஷேத்ர பாலகராக விளங்குகிறார். மலையடி வாரத்தில் பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான தருமன் கட்டிய ஸ்ரீலட்சுமி நரசிம்மர் கோயில் உள்ளது.

ஸ்ரீ ராஜ்யலட்சுமி செஞ்சுலட்சுமி சமேத ஸ்ரீ யோகானந்த லட்சுமி நரசிம்மர், மட்டப்பள்ளி

கிருஷ்ணா நதிக்கரையில் அமைந்த இயற்கை எழில்மிக்க கிராமம் மட்டப்பள்ளி. இங்கு குகையில் இருந்த சுயம்பு நரசிம்மரை புராண காலத்தில் தேவர்களும், முனிவர்களும் மட்டுமே வழிபட்டு வந்தனர். பஞ்ச நரசிம்மத் தலங்களில் முதன்மையானதாகக் கருதப்படும் இதைச் சுற்றி மற்ற நரசிம்மத் தலங்கள் அமைந்துள்ளன. இந்த நரசிம்மரை உபாசித்து வந்த ஸ்ரீபரத்வாஜ முனிவரிடம், பகவான் கலியுகத்தில் அனைவரும் வழிபடும் வகையில் தாம் இருக்கும் குகையைத் திறந்து விடுமாறு கூற, அவ்வாறே இது, மக்கள் அனைவரும் வழிபடும் தலமாக மாறியது.

கருவறையில் ஸ்ரீ ராஜ்யலட்சுமி ஸ்ரீ செஞ்சுலட்சுமி சமேதராகக் காட்சி தரும் ஸ்ரீ லட்சுமி நரசிம்மருக்கு இடப்புறம் உள்ள மூன்று நாமங்களும், இரண்டு கண்களும் பிரஹ்லாதனைக் குறிப்பதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர். நரசிம்மரின் பக்தர் ஒருவர் மூர்த்தியின் காலடியில், ‘சக்ரி’ என்ற பெயரில் நீளப் பாறையாகக் காட்சி தருகிறார். ஸ்ரீமுக்கூர் லட்சுமி நரசிம்மாச்சாரியாருக்கு காட்சி தந்தவர் இந்த நரசிம்மர். சுமார் 700 ஆண்டுகள் பழைமையான இக்கோயிலில் 12 நாட்கள் தங்கி, காலை 32, மதியம் 32 மற்றும் மாலை 32 முறை கருவறையை வலம் வர, வேண்டும் கோரிக்கைகள் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

வைசாக பகுள த்விதீயை முதல் பத்து நாட்கள் பிரம்மோத்ஸவம் நடைபெறும். வைகுண்ட ஏகாதசி, நரசிம்ம ஜயந்தி ஆகியவை விசேஷ தினங்கள். காலை ஆறு முதல் மதியம் ஒரு மணி வரை கோயில்திறந்திருக்கும். மாலையில் தேவர்களும், முனிவர்களும் நரசிம்மரை வழிபடுவதாக உள்ள ஐதீகத்தின் அடிப்படையில் கோயில் மாலை நேரத்தில் திறக்கப்படுவதில்லை. கோயிலில் ஆண்டாள், விகனச முனிவர், ஆழ்வார்கள் சன்னிதிகள் உள்ளன. தெலங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டத் தலைநகரிலிருந்து சுமார் 110 கி.மீ. தொலைவில் உள்ளது மட்டப்பள்ளி.

ஸ்ரீ லட்சுமி நரசிம்மர், வாடப்பள்ளி

கிருஷ்ணா மற்றும் மூசி நதிகளின் சங்கமத்தின் அருகில் அமைந்துள்ளது வாடப்பள்ளி ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் திருக்கோயில். முசுகுந்த சக்கரவர்த்தி ஸ்ரீகிருஷ்ண பகவானின் பாதங்களை அபிஷேகித்த நீரே முசுகுந்த என்ற மூசி ஆறாகப் பாவதாகக் கூறப்படுகிறது. இங்கு, அகத்தியர், ஸ்ரீ மீனாட்சி அம்மன் சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் என்கிற சிவலிங்கத்தையும், ஸ்ரீ லட்சுமி நரசிம்மரையும் பிரதிஷ்டை செய்து சைவ-வைணவ பேதமின்றி வழிபட்டுள்ளதாக தலபுராணம் தெரிவிக்கிறது. வியாச பகவானின் வேண்டுகோளை ஏற்று ஸ்ரீநரசிம்மர் இத்தலத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். ஆலய வளாகத்தில் ஸ்ரீவேங்கடேசப் பெருமாள் மற்றும் ஆழ்வார் சன்னிதிகள் உள்ளன.

கருவறையில் ஸ்ரீ லட்சுமி நரசிம்மரின் இடது புறம் முகத்துக்கு அருகில் ஒரு தீபமும், பாதங்களுக்கு அருகில் ஒரு தீபமும் எப்போதும் ஒளிர்ந்து கொண்டிருக்கின்றன. பாதத்துக்கு அருகில் உள்ள தீபச்சுடர் அசையாமல் ஒளிர்ந்து கொண்டிருக்க, நரசிம்மரின் முகத்துக்கு அருகில் உள்ள தீபச்சுவாலை மெல்லிதாக அசைந்து கொண்டிருக்கும் அற்புதத்தைக் காணலாம். இது பகவானின் சுவாசத்தால் நடைபெறுவதாக பக்தர்கள் கூறுகின்றனர்.

கோயில் காலை 7 மணி முதல் 11 வரையிலும் மாலை 6 மணி முதல் 7.30 வரையிலும் திறந்திருக்கும். நல்கொண்டா மாவட்டத் தலைநகரிலிருந்து மிர்யால குடா வழியாக 63 கி.மீ. தொலைவில் உள்ளது வாடப்பள்ளி.

ஸ்ரீ லட்சுமி நரசிம்மர், வேதாத்ரி

சோமுகாசுரன் என்ற அசுரன், பிரம்மாவிட மிருந்து வேதங்களைத் திருடிச் சென்று சமுத்திரத்தில் ஒளித்து வைத்தான். செய்வதறியாது திகைத்த பிரம்மா, மகாவிஷ்ணுவிடம் முறையிட, அவர் மத்ஸ்ய அவதாரம் எடுத்து அசுரனை வதம் செய்து வேதங்களை மீட்டுக் கொடுத்தார். தங்களை மீட்டுத் தந்த ஸ்ரீ மகாவிஷ்ணுவை வேதங்கள் தலையில் வைத்துக் கொண்டாடியதோடு, தாங்கள் எப்போதும் பகவானைத் தாங்கிக் கொண்டிருக்கும் பாக்கியத்தைத் தந்தருளுமாறு வேண்டினவாம்! எனவே, வேதங்களே இத்தலத்தில் வேதாத்ரி என்ற சாளக்ராமக் குன்றாகத் தோன்ற, அதன் மீது ஸ்ரீமகாவிஷ்ணு  ஸ்ரீலட்சுமி நரசிம்மராகக் கோயில் கொண்டார்.

ஆந்திர மாநிலத்தின் பிரதான நவ நரசிம்மத் தலங்களில் ஒன்றாகத் திகழும் இங்கு ஸ்ரீநரசிம்மரை ரிஷ்ய சிருங்க முனிவர் பிரதிஷ்டை செய்ததாக தல புராணம் தெரிவிக்கிறது. நாராயண தீர்த்தர் உள்ளிட்ட மகான்கள் வழிபட்ட இந்த ஆலய வளாகத்தில் சிவபெருமான் ஸ்ரீ விஸ்வேஸ்வரர் என்ற பெயரில் க்ஷேத்ரபாலகராக எழுந்தருளியிருக்கிறார். கிருஷ்ணா ஆற்றின் கரையில் உள்ள இக்கோயில் முகப்பினை ஐந்து கலசங்களைக் கொண்ட ஐந்து நிலை ராஜகோபுரம் அலங்கரிக்கிறது.

வேதாத்ரி மலையில் ஐந்து நரசிம்மர்கள் எழுந்தருளியிருப்பதால் வேதாத்ரியே ஓர் பஞ்ச நரசிம்மத் தலமாக விளங்குகிறது. கோயிலுக்குள் ஸ்ரீ யோகானந்தா மற்றும் ஸ்ரீலட்சுமி நரசிம்மர், மலை உச்சியில் சுயம்பு மூர்த்தமான ஸ்ரீ ஜ்வாலா நரசிம்மர், 5கி.மீ. தொலைவில் உள்ள கருடாத்ரி குன்றின் மீது வீர நரசிம்மர், கிருஷ்ணா ஆற்றுக்குள் ஸ்ரீசாளக்ராம நரசிம்மர் என ஐந்து நரசிம்மர்கள் அருள்பாலிக்கின்றனர். ஆலயத்தில் ஸ்ரீ செஞ்சு லட்சுமி, ஆதிவராஹர், அனுமன், கருடன் சன்னிதிகள் உள்ளன. சைத்ர மாதம் பிரம்மோற்ஸவம் நடைபெறும் இக்கோயிலில் நரசிம்ம ஜயந்தி வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. கிருஷ்ணா மாவட்டத் தலைநகர் மசூலிப்பட்டினத்திலிருந்து சுமார் 145 கி.மீ. தொலைவில் வேதாத்ரி உள்ளது.

ஸ்ரீ லட்சுமி நரசிம்மர், கேதவரம்

ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டத்தில் உள்ள கேதவரம், அக்காலத்தில் கேதவர்மன் என்ற மன்ன னின் ஆளுகைக்குட்பட்டிருந்தது. இதற்கு கட்டாரம், கேதாரம் என்ற வேறு பெயர்களும் வழங்கப்பட்டன. கிருஷ்ணா ஆற்றின் கரையில் அடர்ந்த காடுகளும் வயல்வெளிகளும் சூழ, இயற்கை எழில் மிக்க இடத்தில் அமைந்துள்ள இக்கோயிலை அடைய 600 படிகள் ஏறிச் செல்ல வேண்டும்.

ஒரு யாதவ மன்னனின் கனவு வாயிலாக ஸ்ரீ நர சிம்மர் தான் கேதவரம் மலையில் இருப்பதாகக் கூறி யதையடுத்து, அப்போது கேதவரத்தை ஆண்ட கேதவர்மனுக்கு அவன் தெரிவிக்க, மன்னன் இங்கு விஜயம் செய்து ஸ்ரீ நரசிம்மர் விக்கிரகத்தைக் கண்டெடுத்து, சிறிய ஆலயத்தில் பிரதிஷ்டை செய்தான். மலை உச்சியில் கோயில் கட்ட போதுமான இடம் இல்லாததால் அங்கு ஒரு சிறிய ஆலயமும் மலையடிவாரத்தில் ஒரு பெரிய ஆலயத்தையும் அமைத்தான்.

இக்கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் கிணறு வெட்ட பூமியைத் தோண்டியபோது, கடப்பாரை பட்டு ஒரு பாறையிலிருந்து ரத்தம் பீறிட்டது. அவர் கிராம மக்கள் உதவியோடு பூமியை மேலும் அகழ்ந்து பார்த்தபோது பல விக்கிரகங்கள் கிடைத்ததாகவும் தல புராணம் தெரிவிக்கிறது.

கடப்பாரையால் வெட்டப்பட்ட பாறை வைரம் போன்று கடினமாக இருந்ததால் அதில் சுயம்புவாக ஆவிர்பவித்திருந்த நரசிம்மர் ‘வஜ்ராலய நரசிம்மர்’ என்று போற்றப்படுகிறார். தாயார் செஞ்சுலட்சுமி சமேதராக பாறையில் புடைப்புச் சிற்பமாக எழுந்தருளியிருக்கும் கேதவரம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் ஆலயம் குண்டூரிலிருந்து 80 கி.மீ. தொலைவில் உள்ளது. கோயில் காலை 6 மணி முதல் இரவு 9 வரை திறந்து வைக்கப்படுகிறது. மலையின் கீழே உள்ள கோயிலில் அனுமனுக்குத் தனிச் சன்னிதி உள்ளது.

–நன்றி தீபம் (கல்கி வழங்கும் ஆன்மீக இதழ்)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s