அட்சய திருதியை – 09-05-16 – அஷ்ட லக்ஷ்மிகளின் அருள் பெருக்கும் அமிர்த நாள்!சித்திரை மாத வளர்பிறையில் வரும் திரிதியை நாள் அட்சய திரிதியை என்று அனைவராலும் கொண்டாடப்படுகிறது. “அட்சய‘ என்ற சொல் “வளருதல்‘ என்பதைக் குறிப்பதால், இந்த நாளில் எந்தப் பொருள் வாங்கினாலும் அது வளரும் என்பது நம்பிக்கை. தானதர்மம், கல்வித் துவக்கம், புதிய தொழில் தொடக்கம், புதுக்கணக்கு ஆரம்பம், தெய்வ வழிபாடு போன்றவற்றை அந்த நாளில் மேற்கொள்வது உத்தமம்.

அட்சய திரிதியை பற்றி புராணக்கதைகள் பலவுண்டு. அதில் முதலிடம் பெறுவது குசேலர் கதை. ஏழ்மையில் வாடிய குசேலர், தனது இளமைக்கால நண்பன் கண்ணனைக் கண்டு உதவிபெறச் சென்றபோது ஒருபிடி அவலை எடுத்துச்சென்றார். அந்த அவலை வாங்கி ஒரு வாய் உண்டு, “அட்சய‘ என்று கண்ணன் சொல்ல, குசேலரின் குடிசை மாளிகையானது. குபேர செல்வமும் சேர்ந்தது. இது நிகழ்ந்தது ஒரு அட்சய திரிதியை நாளென்று சொல்லப்படுகிறது.

மகாபாரதத்தில் தருமன் சூதாடி அனைத்தையும் இழந்த நிலையில், மனையாளான பாஞ்சாலியையும் பணயம் வைத்துத் தோற்றார்.

அடிமையான பாஞ்சாலியின் சேலையை நிறைந்த சபையில் துச்சாதனன் களைய, பாஞ்சாலி, “அபயம் கண்ணா‘ என்று இரு கரங்களையும் உயர்த்தி சரண்புகுந்தாள். அப்போது கண்ணபரமாத்மா பாஞ்சாலியின் மானம் காக்க “அட்சய வஸ்திரம்‘ அளித்தார் என்று மகாபாரதம் கூறுகிறது.

அதேபோல், பஞ்ச பாண்டவர்கள், வனவாசம் மேற்கொண்டபோது பாஞ்சாலி சூரிய பகவானிடம் வேண்டிப்பெற்றது அட்சய பாத்திரம். அதிலிருந்து உணவை எடுக்க எடுக்க குறைவில்லாமல் வந்து கொண்டிருந்தது. அதனால் பாண்டவர்கள் வனவாசத்தின்போது பட்டினியில்லாமல் வாழ்ந்தார்கள்.

ஒருமுறை காசி மாநகரில் கடுமையான பஞ்சம் வந்தபோது, அன்னை பார்வதிதேவி, அன்னபூரணியாக மாறி தன் கையில் அட்சய பாத்திரத்தை வைத்துக்கொண்டு, உலகிலுள்ள அனைவருக்கும் உணவளித்து பசிப்பிணியைப் போக்கினாள் என்று காசி புராணம் கூறுகிறது.

உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் அட்சய திரிதியையன்று புனித நதியில் நீராடி தானதர்மங்கள் செய்தால் பிணி நீங்கும். இந்த நன்னாளில் சிவன்- பார்வதி, நாராயணன்- லட்சுமி ஆகியோரை வழிபட்டால் சகல பாக்கியங்களும் கிட்டும். மறைந்த முன்னோருக்கு சிரார்த்தம், பிதுர்பூஜை செய்தால் பாவ விமோசனம் பெறலாம்.

இன்றைய நாளில் பலர் தங்கம் வாங்கினால் மேன்மேலும் பெருகும் என்ற நம்பிக்கையில் நகைக்கடைகளை நோக்கிப் படையெடுப்பதைக் காணலாம். எந்த சாஸ்திரத்திலும், வேத நூல்களிலும் அவ்வாறு சொல்லப்படவில்லை. வணிகர்கள் இதை வியாபார யுக்தியாகக் கையாள்கின்றனர். “செல்வம், பூர்வபுண்ணியம், புத்திரர், புத்தி, வீரியம், லாபம் பெருகும்’ என்றே சாஸ்திரம் சொல்கிறது. மேலும், குரு பகவான் உலோகத்தில் தங்கத்தைப் பிரதிபலிப்பதால் அவருக்கு பொன்னன் என்கிற சிறப்புப் பெயர் உண்டு. இதைக்கொண்டுதான் அட்சய திரிதியையன்று தங்கம் வாங்கவேண்டும் என்கிற மாயையை ஒருசிலர் உருவாக்கிவிட்டார்கள்.

அட்சய திரிதியை நாளில் உப்பு வாங்கினாலும் செல்வம் வளரும். உப்பு கடலிருந்து தோன்றியது. மகா லட்சுமியின் அம்சம்.

கிருதயுகம் தோன்றியதும், பரசுராமர் அவதரித்ததும் அட்சய திரிதியை நாளில் தான்.

மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ஆறாவதாக சொல்லப்படுவது பரசுராம அவதாரம். ஜமதக்னி முனிவருக்கும் ரேணுகாதேவிக்கும் ஐந்தாவது மகனாகப் பிறந்த இவர், அரசர்களுக்குரிய எல்லா கலைகளையும் கற்றார்.

முனிவர்களிடமும்  ரிஷி களிடமும் மந்திர உபதேசம் பெற்றார். சிவபெருமானை தினமும் வழிபட்டதால், அவருடைய தவத்தினை மெச்சிய சிவபெருமான் தன் கையிலுள்ள மழுவின் அம்சமாக இன்னொரு மழுவைத் தோற்றுவித்து பரசுராமருக்குத் தந்தார். அதனால் பரசுராமர் என்ற பெயருடன் மழுவாடன் என்ற சிறப்புப் பெயரும் ஏற்பட்டது. அந்த மழுவுடன்தான் என்றும் எங்கும் காட்சியளிப்பார்.

தன் தாய் தவறு செய்ததாக தந்தை கருதியதால், தந்தையின் கட்டளைப்படி தாயைக் கொன்று தர்மத்தை நிலைநாட்டினார். பின்னர் தந்தையிடமே வரம் பெற்று மீண்டும் தன் தாயை உயிர்ப்பித்தார் பரசுராமர்.

தன் தாயின் கற்புக்கு சோதனை விளைவித்த காத்தவீர்யார்ஜுனனையும், அவன் குலத்தினரையும் தன் பரசினால் வெட்டி வீழ்த்தினார். தன் தந்தையை வஞ்சகமாகக் கொன்றதால், அவர்களைப் பழிவாங்க க்ஷத்ரிய வம்ச அரசர்களை பல தலைமுறைகள் அழித்தார்.

மகாபாரத காலத்தில் பரசுராமரிடம் வித்தை கற்கச் சென்ற கர்ணன், தான் ஒரு அரசன் என்ற உண்மையைச் சொல்லாமல் அந்தணன் என்று கூறி வித்தைகளையும் மந்திரங்களையும் கற்றுக் கொண்டான். ஒரு சந்தர்ப்பத்தில் உண்மையை அறிந்துகொண்ட பரசுராமர், “தக்கசமயத்தில் நான் கற்றுக்கொடுத்த அஸ்திரப் பிரயோக மந்திரம் மறந்து போகட்டும்’ என்று சாபம் கொடுத்தார்.

ஆரம்பத்தில் கோபக்காரராக இருந்த பரசுராமர் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியால் கர்வம் அழிக்கப்பட்டபின் சிவபூஜை செய்வதில் ஆழ்ந்துவிட்டார்.

இன்றிருக்கும் கேரள மாநிலம் பரசுராமரால் உருவாக்கப்பட்டது என்பது புராணச் செய்தி. அதனால் அந்த நாட்டிற்கு பரசுராம க்ஷேத்திரம் என்று பெயர். பரசுராமர் கேரளாவில் 108 இடங்களில் தெய்வங்களைப் பிரதிஷ்டை செய்தார். இன்று சபரிமலையில் அருள்புரியும் ஐயப்ப சுவாமியை பிரதிஷ்டை செய்தவர் பரசு ராமரே என்பது வரலாறு.

அரசர்கள் பலரைக் கொன்ற பாவம்தீர மகேந்திர மலையில் தவம்செய்து, சிவபெருமானிடம் சிரஞ்சீவி வரம்பெற்றார் பரசுராமர்.

இத்தனை மகத்துவங்கள் கொண்ட பரசுராமருக்கு தனிக்கோவில்கள் குறைவுதான். கேரளாவில் சில இருப்பதாகச் சொல்வர்.

கர்நாடகாவில் நஞ்சன் கூடு என்னும் இடத்திற்கு அருகே பரசுராமருக்குத் தனி ஆலயம் இருக்கிறது. தந்தையின் கட்டளைப்படி தாயைக் கொன்ற பாவம் தீர பரசுராமர் இத்தலத்திற்கு வந்து, கபிலநதியில் நீராடி சிவபூஜை செய்வதற்காக ஓரிடத்தில் மண்ணைத் தோண்டியபோது, சுயம்பு லிங்கம் ஒன்று தோன்றியது. பரசுராமரால் பூஜிக்கப்பட்ட அந்த சிவலிங்கம்தான் ஸ்ரீகண்டேஸ்வரராக காட்சிதருகிறார்.

பாவங்கள் நீங்க பரசுராமர் தமிழகத்திலும் சில இடங்களில் சிவாலயங்களை நிறுவி வழிபட்டதாகப் புராணம் கூறுகிறது. திருச்சிக்கு அருகிலுள்ள பழூர், காஞ்சிக்கு அருகிலுள்ள வேகாமங்கலம், திருப்பனந்தாள் அருகேயுள்ள திருலோக்கி, மயிலாடுதுறை அருகிலுள்ள திருநின்றியூர் முதலியன பரசுராமேஸ்வரங்கள் எனப்படுகின்றன.

அட்சய திரிதியை நாளில் பரசுராமேஸ்வரங்களில் அருள்புரியும் ஈசனை வழிபட்டால் சுக்கிர தோஷங்கள் விலகும்; வாழ்வில் சகல சௌபாக்கியங்களும் கிட்டுமென்று ஞானநூல்கள் கூறுகின்றன.

அட்சய திரிதியை நாளில் தயிர் சாதம் தானம் செய்தால் ஆயுள் பெருகும். இனிப்புப் பொருட்கள் தானம் தந்தால் திருமணத்தடை அகலும். உணவு தானியங்களை தானம் செய்தால் விபத்துகள், அகாலமரணம் போன்றவை சம்பவிக்காது. “கோமாதா’ பூஜை செய்தால் அஷ்டலட்சுமிகள் கடாட்சம் கிட்டுமென்பது நம்பிக்கை.

–நன்றி நக்கீரன் வழங்கும் ஓம் ஆன்மீக மாத இதழ்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s