காஞ்சி வரதர் மடப்பள்ளி குடலை இட்லி!


மிக்கான துர்முகியில் வேளாண்மை ஏறுமே

தொக்கான மழை பின்னே சொரியுமே-மிக்கான

குச்சர தேசத்திற் குறைதீரவே விளையும்

அச்சமில்லை வெள்ளை அரிதாம்!”

என்ற துர்முகி வருடப் பாடலுடன் ‘துர்முகி’ புத்தாண்டு வருட நல்வாழ்த்துகளை என்னோடு சுற்றியும், சுவைத்தும் வரும் வாசகர்களுக்குச் சமர்ப்பிக்கிறேன்.

108 வைணவ திவ்ய தேசங்களில் பதினான்கு திவ்ய தேசங்களைக் கொண்ட திருத்தலம், எண்ணற்ற கோயில்களைக் கொண்ட மாநகரம் காஞ்சிபுரம். ஆம், சுற்றிச் சுவைக்க நான் வந்திருப்பது இங்குதான்.

காஞ்சி வரதருக்கு மிகச்சிறப்பான முறையில் செய்யப்படும் ‘மடப்பள்ளி குடலை இட்லி’ உலகப் புகழ்பெற்றது. அதிக சுவைமிக்கதும் கூட. ஒரு பெரிய அம்மிக் குழவியைப் போல் தோற்றமளிக்கும் அதன் செய்முறை எனக்கு எப்போதும் ஒரு புதிராகவே இருக்கும். பெருமாளுக்கு, பிரசாத அமுதுகள் செய்யும் பெரும்பேற்றைப் பெற்றவரான பாப்ஜி அவர்களுடன் 100 வயது இளமையான அவருடைய பாரம்பரிய இல்லத்துக்குச் சென்றேன்.

அவ்வீட்டிலுள்ள சமையலறையில் தரையில் பள்ளம் செய்து, அதில் விறகு போடும் வசதி பெற்ற ‘கோட்டை அடுப்பில்’தான் இந்தக் குடலை இட்லியை செய்து காட்டினார்.

தரமான அரிசி ஒன்றரை கிலோ, உளுத்தம் பருப்பு ஒருகிலோ , வெந்தயம் 50 கிராம் என்ற விகிதத்தில் நன்கு கொரகொரப்பான பதத்தில் அரைத்து, உப்பு சேர்த்து எடுக்கிறார். 2 மணி நேரம் கழித்து, அந்த மாவு நன்கு புளித்ததும், தரமான நெய்யை தாராளமாக வாணலியில் ஊற்றி அதில் மிளகு, சீரகம், பெருங்காயம், சுக்கு, கறிவேப்பிலை இவற்றை தாளித்து மாவில் கொட்டி விடுகிறார். மாவு நன்கு புளிக்காமல் இருந்தால், புளித்த தயிரையும் சேர்க்கிறார்கள்.

சுவாரசியமான பகுதி இனிமேல்தான் வாசகர்களே! 10 அங்குலம் உயரமும், 4 அங்குலம் விட்டமும் உள்ள மிக மிக அழகாக பாய்போல் பின்னப்பட்ட மூங்கில் குடலையில், 3 மந்தார இலைகளைக் கூம்பு போல் செய்து, குடலையின் உள்புறம் சொருகி, குடலையின் அடியிலும் ஒரு இலையை மாவு கொட்டாமல் இருக்க வைத்து, பின் கொட்டாங்குச்சியால் மாவை அக்குடலைக்குள் ஊற்றுகிறார். கணகணவென்று விறகு அடுப்பில் பெரிய அண்டாவில் கொதிக்கும் தண்ணீரில், இரு பெரிய செங்கற்களின் இடையே, இதுபோல் 3 முதல் 4 குடலை இட்லிகளை, விழாமல் வைத்து, முதலில் ஒரு பெரிய இலையால் மூடி, அதன்மேல் ஒரு பெரிய பித்தளைத் தட்டால் மூடி விடுகிறார்கள்.

இட்லி தயாராவதற்குள், நான் அருகிலுள்ள சில கோயில்கள், பட்டு கைத்தறி சொஸைட்டி ஆகிய வற்றை ஒரு சுற்று சுற்றிவிட்டு வந்தேன். இரண்டு மணி நேரம் கடந்து விட்டிருந்தது. சமையலறையில் பாப்ஜி இட்லி வெந்துவிட்ட பதத்தை காண ஒரு நீண்ட மெல்லிதான மூங்கில் குச்சியை அந்த இட்லிகளின் நடுவில் சொருகினார். இரண்டு மணி நேரமான இருந்த மாவு, இப்போது இட்லியாக மாறியதை ‘மூங்கில் குச்சி’ சொல்லியது. ஒவ்வொரு நிலையிலும், மிக்க கலைநயத்துடன் தயாரிக்கப்பட்டதை காண எனக்கு ஆச்சரியம் மேலிட்டது.

வெந்த இட்லிகளை அங்குள்ள மூங்கில் தட்டுகளில், இலையைப் பரப்பி, அதில் நீளமாக வைத்தார். அந்த மணம், நெய் வாசனை, சுக்கின் வாசனை எல்லாவற்றுக்கும் மேல், கடவுளுக்காக தயாராகிறது என்பதால் பக்தி வாசனையுடன் கூடிய ருசி பன்மடங்கு அதிகமாகவே இருக்கிறது. காஞ்சிபுரம் செல்லும்போது, பாப்ஜியின் கைவண்ணத்தில் உருவான ‘மடப்பள்ளி குடலை இட்லி’யைச் சுவைத்து விட்டு வர மறக்காதீர்கள்.

அனுபவம் : ராகேஷ் ரகுநாதன்

எழுத்து : ரமா ரகுநாதன்

-நன்றி மங்கையர் மலர்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s