8-அருளே அறிவே அமுதே! – சுப்பு ஆறுமுகம்


இதன் முந்தைய பகுதி…

திருமுருக கிருபானந்த வாரியார் என் மகள் பாரதியின் திருமணத்தை நடத்தி வைக்க முகூர்த்தத் தேதி கொடுத்த கையோடு, உங்க இடத்துல போய் கேட்டுக்கிட்டு வந்திடுங்க!” என்றார். வாரியார் ‘உங்க இடம்’ என்று குறிப்பிட்டது காஞ்சி மடத்தைத் தான்!

காரணம், நான் காஞ்சி மடத்தின்மீது கொண்ட பற்றும், பரமாச்சாரியாள் மீது கொண்ட பக்தியும் பற்றி அவருக்கு, மிக நன்றாகவே தெரியும்.

மறுநாள், என் குடும்பத்துடன் காஞ்சிபுரத்துக்குப் புறப்பட்டுவிட்டேன். மடத்துக்குச் சென்று மஹா பெரியவாளைத் தரிசனம் செய்தபோது, மகள் பாரதியின் திருமணத்துக்கு அவரது அருளாசியை வேண்டி, வாயைத்திறப்பதற்கு முன்பாக அவர் ஏதோ சொல்ல, அடுத்த நிமிடம் ஒரு தட்டு கொண்டுவரப்பட்டது. அதிலே பட்டுப் புடைவை, பட்டு வேஷ்டி, மஞ்சள், குங்குமம், பழங்கள், தாம்பூலம் எல்லாம் இருந்தன.

அதை எங்களுக்குப் பிரசாதமாகக் கொடுத்தபோது, எங்கள் குடும்பமே மெய்சிலிர்த்து நின்றது. அது மட்டுமில்லை, என்னைப் பார்த்து, இன்னிக்கு நீயே எல்லாருக்கும் பிரசாதம் குடு” என்று பணித்தார்கள். அந்த பாக்கியம் எத்தனை பேருக்குக் கிடைக்கும்?

அந்த மஹானின் அருளாசியோடு வாரியார் சுவாமிகள் தலைமையில் திருமணம் நடத்தி வைக்கப் பெற்ற என் மகளும், எனக்கு வாய்த்த மருமகனும் மனமொத்த தம்பதியாய் வாழ்ந்து வருகிறார்கள் என்றால், அதற்குக் காரணம் காஞ்சி மஹானின் அருட்கடாக்ஷம் தவிர வேறொன்றில்லை.

எந்த ஒரு முக்கியமான, புதிய விஷயமானாலும் அவரைத் தரிசித்து, அருளாசி பெறாமல் நான் ஒப்புக்கொண்டதே இல்லை. சென்னையில் தொலைக்காட்சி அறிமுகமானபோது எனக்குத் தொலைக்காட்சியில் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடத்த அழைப்பு வந்தது.

தமிழகத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் போய் கதை சொல்லி இருக்கிறேன் என்றாலும், தொலைக்காட்சியிலிருந்து வந்த முதல் அழைப்பை ஏற்றுக்கொள்வதற்கு முன், ஒரு நடை காஞ்சிபுரம் போய்விட்டுத்தான் வந்தேன்.

தேசம் வேற; தெய்வம் வேற இல்லடா! நன்னா பண்ணு” என்று ஆசீர்வதித்தார்.

ஒருமுறை காமராஜர் காஞ்சிபுரத்துக்குச் சென்றிருந்தார். அவரைச் சில காங்கிரஸ் கட்சிக்காரர்கள் மடத்துக்கு அழைத்துக்கொண்டு போனார்கள். மஹா பெரியவாளைப் பார்த்ததும், காமராஜருக்கு என்ன பேசுவது என்றே புரியவில்லை. முன்னமே வந்திருக்கவேண்டியது” என்று பொதுவாக அவர் சொன்னதும், மஹா பெரியவாள், பரவாயில்லே! எப்ப வந்தாலும் ஒண்ணு தான்! நீர் யாரு தெரியுமோ? வெள்ளை வேஷ்டி கட்டின துறவி!” என்றார்.

காமராஜருக்கு எத்தனையோ பாராட்டுகள், பட்டங்கள் கிடைத்திருந்தாலும், மஹா பெரியவாள் வாயால் இப்படி ஒரு பாராட்டு பெறுவது என்பது எத்தனை பெரிய பாக்கியம்?

மஹாபெரியவாள் தமிழகமெங்கும் யாத்திரை சென்றிருக்கிறார். ஒவ்வொரு ஊரிலும் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான பக்தர்கள் அவரைத் தரிசித்து, அவரது அருளுக்குப் பாத்திரமாகி இருக்கிறார்கள்.

ஒரு ஊரில், அவர் முகாமிட்டிருந்த போது மஹா பெரியவாளைப் பற்றி யாரோ ஒருவர் தகாத வார்த்தைகளைச் சொல்லிவிட, அது அந்தப் பகுதியில் கொஞ்சம் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.

விஷயம் பெரியவாள் காதுவரை போவிட, அவர், அந்த மனிதரை அழைத்துக் கொண்டுவரும்படி உத்தரவிட்டார். மடத்தைச் சேர்ந்தவர்கள் குழப்பமடைந்தார்கள். ஆனாலும் பெரியவாளே சொல்லி விட்டாரே! அந்த மனிதரைக் கண்டுபிடித்து, அவரை அழைத்துக் கொண்டு வந்தார்கள். மஹா பெரியவாள் அந்த மனிதருக்கு, மற்ற பக்தர்களைப் போலவே பிரசாதம் கொடுத்து அனுப்பிவைத்தார்கள்.

எதற்காக அந்த மனிதரை அழைத்துக் கொண்டு வரச்சொன்னார்? அந்த மனிதர் வந்தபோது, அவரிடம் ஒன்றுமே கேட்கவில்லையே? என்ன காரணம்? என்று அங்கே இருந்த அனைவருக்கும் குழப்பம். அதற்குரிய விளக்கம், மஹா பெரியவாளிடமிருந்தே வந்தது, அவனைப் பார்த்தா, எனக்குள்ளே கோபம் வர்றதான்னு பார்த்தேன்” என்றார்.

அந்த மஹான் தனக்குத் தானே நடத்திக்கொண்ட சுயபரிட்சை. சத்திய சோதனைதான் அது! வந்த மனிதருக்கு, தன் அருட்பார்வையால் ஆசி வழங்கி, பிரசாதம் கொடுத்ததிலிருந்து அவரது மேன்மையை நாம் புரிந்துகொள்ளலாம்.

மஹா பெரியவாளைப் பற்றிக் கதை சொல்லும் போது, ‘ராம லீலா, கிருஷ்ண லீலா’ என்பது போல ‘சுவாமிநாத லீலா’ என்று சில சொல்லுவது உண்டு. அது என்ன சுவாமிநாத லீலா? இதுவரை கேட்காத புதுசாக இருக்கிறதே? என்று கதை கேட்பவர்கள் நினைப்பார்கள். அது வேறு ஒன்றுமில்லை. மஹா பெரியவாளின் சிறுவயதில் நடந்த சில சம்பவங்கள் தான் அவை.

கதையில் குழந்தை சுவாமி நாதன் தரையில் தவழ்ந்து வரும் அழகை,

முந்தி விழுந்து தவழ்ந்து எழுந்து பின்

வந்திடும் தாயருகே! – தரை

சிந்திய பொருள்களை வந்து

எடுத்துடன்

சேர்த்திடும் வாயருகே!

ஆண்டவன் மடியில் இருந்தவன் வந்தான்

அன்னையின் மடிதனிலே – சில

ஆண்டுகள் சென்றன எழுந்து நடந்தான்

திண்ணையில் நடைதனிலே!

என்று பாடுவேன். எல்லோரும் ரசித்துக் கேட்பார்கள்.

இன்னொரு சுவாரசியமான சம்பவம்.

குழந்தை சுவாமிநாதன், ஒருநாள் தன் தாயிடம் நான் தூங்கும் போது, திடீரென்று யானை வந்தது. அதன் மீது என்னை ஏற்றி உட்கார வைத்தார்கள். நான் அந்த யானைமீது உட்கார்ந்துகொண்டே ஊரைச் சுற்றி வந்தேன்” என்று சொல்லவும், அவருடைய அம்மா, சரிதான்! கொழந்தே! நீ தூக்கத்துல கனவு கண்டிருக்கே!” என்று கூறினாராம்.

தூக்கத்துல ஏன் யானை வந்தது?” என்று குழந்தை மறுபடி கேட்க, உனக்கு ராஜயோகம் வரப்போறதுடா கொழந்தே!” என்று சொன்னாராம். ஆனால், அந்தக் குழந்தைக்குப் பிற்காலத்தில் சந்நியாசம் ஏற்று, பீடாதிபதியாக, யானை மீதேறி யாத்திரை செல்லப்போவதை முன்னமே தெரிவிக்க வந்த மணியோசைதானோ அந்தக் கனவு என்றுதான் எனக்கு எண்ணத் தோன்றுகிறது.

விழுப்புரத்தில், பூர்வாசிரமத்தில் ஒரு நாள், குழந்தை சுவாமிநாதன் வீட்டின் தாழ்வாரத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது நடந்ததாகச் சொல்லப்படும் சம்பவம் இது.

வீட்டுத் தாழ்வாரப்பகுதியில் வேறு யாருமில்லாத நேரம். அந்த நேரத்தில் ஒரு மரநாய் வீட்டுக்குள் வந்துவிட்டது. குறுக்கும், நெடுக்குமாக அது ஓடுவதையே பார்த்துக் கொண்டிருக்கிறது குழந்தை.

சட்டென்று ஏதோ சாப்பிடும் பொருள் வைத்திருந்த தகரடப்பாவின் உள்ளே அது தலையைவிட்டு, உள்ளே இருப்பதைச் சாப்பிட்டது. அதன் பிறகு தகர டப்பாவுக்கு உள்ளிருந்து தன்னுடைய தலையை எப்படி வெளியே எடுப்பது என்று அதற்குத் தெரியவில்லை.

இப்போது, தலையில் தகர டின்னோடு, சப்தம் எழுப்பியபடி தாழ்வாரத்தில் மூலைக்கு மூலை இப்படியும், அப்படியுமாக அந்த மர நாய் ஓடிக்கொண்டிருப்பதை இன்னும் ஆனந்தமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறது குழந்தை.

இதை ஒரு சாதாரணமான சம்பவமாகவே எல்லோரும் பார்ப்பார்கள். ஆனாலும், இதிலே ஒரு ஆழமான வாழ்க்கைத் தத்துவம் அடங்கி இருக்கிறது என்று சொல்லி, அதையும் கதையின் ஊடே குறிப்பிடத் தவறமாட்டேன்.

அது என்ன தத்துவம்?

உலகத்தில் எதன்மீதும் பற்று வைக்காமல், நாம் நம் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறவரை, துன்பம் ஏதும் இருக்காது. எதற்காவது ஆசைப்பட்டு வலிய போகிறபோது, அதில் சிக்கிக்கொண்டு வெளியில் வரமுடியாமல் திண்டாடும்படியாகிவிடும் என்பதுதான் இதில் உள்ள தத்துவம்.

மஹா பெரியவாளின் பால பருவத்தில் நிகழ்ந்த இன்னொரு சம்பவத்தையும் சொல்ல விரும்புகிறேன். பாலபருவத்தில் ஒருநாள் மஹா பெரியவாள் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்துகொண்டு, தெருவில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சமயத்தில், அவர்கள் குடும்பத்துக்கு முன்பின் அறிமுகமில்லாத யாரோ ஒருவன், அந்தத் திண்ணைக்கு அருகில் வருகிறான்.

அவனைக் கவர்ந்தது, திண்ணையில் உட்கார்ந்திருக்கும் அந்த ஞானக் குழந்தையினுடைய கைகளில் அணிவிக்கப்பட்டிருந்த தங்கக் காப்பு.

குழந்தையின் கைகளைப் பிடித்துக்கொண்டு, ஏதோ பேச்சுக் கொடுத்தபடி, இரண்டு கைகளிலிருந்தும் தங்கக் காப்புகளைக் கழற்றி விட்டான்.

இந்தக் காப்பு உனக்குப் பெரிசா இருக்கு; சரி செஞ்சு கொண்டு வரேன்” என்று சொல்லிவிட்டு, கழற்றிய காப்புகளை மறைத்து வைத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டு விட்டான் என்பதாக அந்தச் சம்பவம் சொல்லப்படுகிறது.

இந்தச் சம்பவத்தைச் சொல்கிறபோது, நகைச்சுவையோடு, பெரியவாள் நாலைந்து வயசு குழந்தையா இருந்தபோது, ‘காப்பு சரியாக இல்லை; சரி செஞ்சு கொண்டுவரே’ன்னு சொல்லிட்டு, காப்புகளைக் கழற்றி எடுத்துப் போனான் அந்தக் கள்வன், மஹா பெரியவாளுக்கு நூறு வயசாகி, பக்தர்கள், சந்தோஷமா கனகாபிஷேகம்கூட செஞ்சிட்டோம். அந்தப் பாவி இன்னமும் எடுத்துக்கொண்டு போன தங்கக் காப்புகளைத் திரும்பக் கொண்டுவந்து கொடுக்கலை பார்த்தீங்களா?” என்று சொல்லுவேன். அரங்கமே ரசித்துச் சிரிக்கும்.

(அருள் பொழியும்)

S. Chandramouli

எழுத்தாக்கம்: எஸ். சந்திரமௌலி

படங்கள் : கல்கி களஞ்சியம்

–நன்றி கல்கி

Advertisements

One thought on “8-அருளே அறிவே அமுதே! – சுப்பு ஆறுமுகம்

 1. srisri4 May 2, 2016 at 11:44 AM Reply

  Thanks a lot for sharing.
  With best wishes,
  tgranganathan

  Jaya Sri Ramana!
  Landline at USA 678 778 6447

  >

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s