7-அருளே அறிவே அமுதே! – சுப்பு ஆறுமுகம்


இதன் முந்தைய பகுதி…

ஒருமுறை பார்வைக் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளிக் குழந்தைகள் காஞ்சி மடத்துக்கு பெரியவரைப் பார்க்க வந்தனர். அவர்கள் புறக்கண்களால் மஹா பெரியவாளைத் தரிசிக்க இயலாது போனாலும், தங்கள் அகக்கண்களால் தரிசித்து, அருளாசி வழங்கும்போது அவரது குரலைக் கேட்கிற பாக்கியமாவது கிடைக்குமே என்று எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

மடத்தைச் சேர்ந்த ஒருவர் பிள்ளைகளைப் பார்த்து, பெரியவா இன்னிக்கு மௌன விரதமாச்சே! பேசமாட்டாளே!” என்றதும், அந்தப் பள்ளிக் குழந்தைகளின் முகம் வாடிப்போனது. மடத்தைச் சேர்ந்தவர்களுக்கோ பெரும் தர்மசங்கடமான நிலைமை.

மாற்றுத்திறன் குழந்தைகள் வந்திருப்பதை மஹா பெரியவாளிடம் சொன்னதும், அவர் ஒரு புன்னகை உதிர்த்துவிட்டுத் தன் மௌனம் கலைத்தார்கள். யாருக்காக? தன் குரலைக் கேட்க வேண்டும் என்று வந்திருக்கும் அந்தப் பிஞ்சுக் குழந்தைகளுக்காக. அவர்களோடு சில வார்த்தைகள் பேசி, அவர்களுக்கு அருளாசி வழங்கி, பிரசாதம் கொடுத்து, அனுப்பி வைத்தார்கள்.

இந்து தர்மத்தில் சந்நியாசிகளுக்கு வைராக்கியம் மிக முக்கியமான குணம். அபாரமான வைராக்கியம் கொண்ட மஹா பெரியவாள் குழந்தைகளுக்காகத் தன் மௌனம் கலைத்தார் என்றால் அது எவ்வளவு பெரிய விஷயம்! அன்று, அந்தக் குழந்தைகளுக்குக் கிடைத்தது எவ்வளவு பெரிய பாக்கியம்?

எனக்கு மஹா பெரியவாளைப் போலவே, மகாத்மா காந்திஜி மீதும் பக்தி, அன்பு, மரியாதையும் உண்டு. நான் மஹா பெரியவாள் கதையை வில்லுப்பாட்டில் சொல்லி இருப்பது போலவே, மகாத்மா காந்தியின் கதையையும் சொல்லி இருக்கிறேன். ஒருவர் காவி தரித்த மகாத்மா. இன்னொருவர், கதர் கட்டிய மகாத்மா.

மஹா பெரியவாள், தனுஷ்கோடியிலே முகாமிட்டிருந்த சமயம். மகாத்மா காந்திஜி, கதர் பிரசாரத்தை அறிவித்து, அன்னியப் பொருட்களை பகிஷ்கரிக்க அறைகூவல் விடுத்தார். அது தனுஷ்கோடியில் முகாமிட்டிருந்த மஹா பெரியவாளின் காதுகளை எட்டியது. உடனே, காஞ்சி மடத்தில் இருக்கிற அன்னியத்துணிகள் அனைத்தையும் பகிஷ்கரிக்கச் சொல்லிவிட்டார். அதுவும் எப்படி?

அந்தத் துணிகளையெல்லாம் சமுத்திர ராஜனிடம் சேத்துடுங்கோ! காஷாயம்கூட கதர்லயே இருக்கட்டும்” என்பது அவரது உத்தரவு.

காஷாயம் தெய்விகம்; கதர் தேசியம். நான் கதை சொல்லும்போது தெய்வீகமும், தேசியமும் ஒரு மனம் கொண்டு செயல்பட்டதைப் பாட்டா பாடுவேன்.

எங்கள் திருநெல்வேலியில் தாமிரவருணி ஆற்றின் நடுவில் ஒரு பெரிய மண்டபம் உண்டு. கைலாசபுரம் என்ற சிற்றூரை ஒட்டி, அந்தக் காலத்து ராஜா கட்டியது. அதற்குத் ‘தைப்பூச மண்டபம்’ என்று பெயர்.

ஒருமுறை, கதை சொல்லும்போது, நான் தைப்பூச மண்டபம் பற்றிக் குறிப்பிட, அடுத்து அவரைத் தரிசிக்கச் சென்றபோது கேட்டார், கதை சொல்லும் போது ஒரு திருநெல்வேலி மண்டபம் பத்திச் சொன்னியே! அதன் பேரென்ன?”

தைப்பூச மண்டபம்.”

அதை எதுக்காகக் கட்டினா தெரியுமோ?” இது அடுத்த கேள்வி.

தியானம் பண்ணறத்துக்குன்னு ஜனங்க சொல்லுவாங்க.”

அங்கே தியானம் பண்றதுல விசேஷம் என்ன தெரியுமோ நோக்கு?”

சாமி சொன்னா தெரிஞ்சுக்கறேன்.”

தாமிரபரணி யில எப்போ வெள்ளம் வரும்னு சொல்ல முடியாது; வெள்ளம் வந்தா காட்டாறு வெள்ளமா அடிச்சிண்டு வரும். அந்த மண்டபத்துல உட்கார்ந்து தியானம் பண்ணறது சாதாரண காரியமில்லே! ஆத்துல வெள்ளம் வருமோ! நம்மளை அடிச்சிண்டு போயிடுமோன்னு மனசுல ஒரு பயம் இருக்கும்; ஆனா, மனசுல அந்த பயம் இல்லாம அந்த மண்டபத்துல தியானம் பண்ணறதுங்கறது அருந்தவ நிலைக்கு அப்யாசம் மாதிரி!” என்றார்.

மஹாகவி பாரதியாரைப் பற்றிச் சொல்கிற போது, எங்கள் திருநெல்வேலி தைப்பூச மண்டபத்தையும் குறிப்பிடுவேன். பாரதியார் கைலாசபுரத்தில் தங்கி, திருநெல்வேலியில் படித்தபோது, அந்த மண்டபத்துக்கு தினமும் செல்வது வழக்கம். அங்கு அமர்ந்து அவர் தியானம் செய்திருக்கிறார். அந்த மண்டபத்தைப் பற்றி ‘ஆற்றங்கரையினிலே தனியானதோர் மண்டபம் மீதினிலே தென்றல் காற்றை நுகர்ந்திருந்தேன்’ என்று பாட்டுக் கூடப் பாடி இருக்கிறார்.

ஒருமுறை, ஒரு உபன்யாச கர்த்தா, மடத்துக்கு வந்திருந்தார். மஹா பெரியவாளைத் தரிசிக்கும் நேரத்தில் அவர் கண்கலங்க, என் பொண்ணுக்கு கல்யாண ஏற்பாடு பண்ணி இருக்கேன். ஆனா, என் கையில் ஒரு பவுன்கூட இல்லை. பெரியவாகிட்டே என் நிலைமையைச் சொன்னா பிரச்னைக்கு விடிவு காலம் பொறக்கும்னு நம்பி வந்திருக்கேன்” என்றார். சொல்லி முடித்தபோது, அவருக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது; அவர் கண்களிலிருந்து கண்ணீர் பெருகியது.

மஹா பெரியவாள், பவுன் வேணும்னா ஏண்டா இங்க வந்தே? காமாட்சிகிட்ட போய் கேளு!” என்று சொல்லிவிட்டார்.

மஹா பெரியவாள் இப்படி ஒரு பதிலைச் சொல்லிவிட்டாரே என்று அங்கே இருந்த எனக்கும் மற்றவர்களுக்கும் லேசான குழப்பம். அந்த மனிதர் பிரசாதத்தை வாங்கிக்கொண்டு புறப்பட்டுப் போய் விட்டார்.

மஹா பெரியவாளிடம் அளவற்ற பக்தி கொண்டவரான அந்த உபன்யாச கர்த்தா மறுபடியும் மாலையில் மஹா பெரியவாளைத் தரிசனம் செய்வதற்காக வந்திருந்தார். பெரியவா சொன்னபடியே கார்த்தால, நேரே காமாட்சிக் கோவிலுக்குப் போனேன். அந்தத் தெய்வத்தை மனசார வேண்டிண்டேன்!” என்று சொல்லி நமஸ்கரித்தார்.அந்தத் தருணத்தில், மும்பையிலிருந்து ஒரு வசதி படைத்த பக்தர் மஹா பெரியவாளைத் தரிசனம் செய்ய வந்திருந்தார். அவர் இரண்டு பவுன் தங்கத்தை பெரியவாளிடம் வைத்து நமஸ்கரிக்க, உடனே மஹா பெரியவாள், கார்த்தால எங்கிட்டே என்ன கேட்டே? பொண்ணு கல்யாணத்துக்கு ஒரு பவுன் வேணும்னு தானே கேட்டே? காமாட்சிகிட்டே போய் வேண்டிண்டயா? இப்பபாரு! நான் குடுத்திருந்தா ஒரு பவுன் தான் கொடுத்திருக்க முடியும். இப்ப பாத்தியா காமாட்சி உனக்கு ரெண்டு பவுன் குடுத்திருக்கா!” என்றார். அங்கிருந்த அனைவருக்கும் மெய் சிலிர்த்தது.

எனக்கு, கிருபானந்த வாரியாரிடம் பெரும் அன்பும் மரியாதையும் உண்டு. எங்கள் மகள் பாரதிக்குத் திருமணம் செய்ய முடிவு செய்த போது, அதை மரியாதைக்குரிய வாரியார் தலைமையில் நடத்த விரும்பினேன். எனவே, அவரிடம் திருமணத்தை நடத்திக் கொடுப்பதற்காக முகூர்த்த தேதி கேட்டேன். அவர் தன்னுடைய டைரியைப் பார்த்துவிட்டு, ஒரு முகூர்த்த நாளைக் குறிப்பிட்டு, அன்றைக்கு வசதிப்படுமா?” என்று கேட்டார்.

நான், ‘அந்த முகூர்த்தத்திலேயே திருமணத்தை நடத்திவிடலாம்’ என்று உடனே என் சம்மதத்தை மகிழ்ச்சியோடு தெரிவித்தேன்.

ஆனால், அவர் என்ன கேட்டார் தெரியுமா?

நீங்க தேதியை முடிவு செய்யறத்துக்கு முன்னால, உங்க இடத்துல போய் கேட்டுக்கிட்டு வந்திடுங்க!” என்றார்.

வாரியார் ‘உங்க இடம்’ என்று குறிப்பிட்டது காஞ்சி மடத்தைத்தான்! காரணம், நான் காஞ்சி மடத்தின்மீது கொண்ட பற்றும், பரமாச்சாரியாள் மீது கொண்ட பக்தியும் பற்றி அவருக்கு மிக நன்றாகவே தெரியும்.

‘அட! வாரியார் சுவாமிகள், சரியான தருணத்தில் நினைவுபடுத்திவிட்டாரே!’ ஒரே ஆச்சரியம்.

மறுநாள், என் குடும்பத்துடன் காஞ்சிபுரத்துக்குப் புறப்பட்டுவிட்டேன். அங்கே எனக்குப் பெரிய ஆச்சரியம் காத்திருப்பதை நான் அறியவில்லை.

(அருள் பொழியும்)

S. Chandramouli

எழுத்தாக்கம் : எஸ்.சந்திரமௌலி

படங்கள் : கல்கி களஞ்சியம்

–நன்றி கல்கி

Advertisements

2 thoughts on “7-அருளே அறிவே அமுதே! – சுப்பு ஆறுமுகம்

  1. vidya (@kalkirasikai) April 26, 2016 at 5:52 PM Reply

    பால்ஹனுமான் தளத்துக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள்.

    • BaalHanuman April 27, 2016 at 12:44 AM Reply

      அட… நானே மறந்து விட்டேன். மிக்க நன்றி உங்களுக்கு 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s