ராம நவமி – 15-04-2016


Badrachalam

நாரதர் அருளினால் வேடன் “மரா மரா‘ என்று சொல்லியே வால்மீகி மகரிஷியாகி 24,000 சுலோகங்கள் கொண்ட ராமாயணத்தை எழுதினார். இவரைத் தவிர பல்வேறு புலவர்கள் எழுதிய முந்நூறுக்கும் மேற்பட்ட ராமாயணங்கள் உள்ளன. அவற்றில் கம்பரின் ராமாயணம், காளிதாசரின் ரகுவம்சம், துளசிதாசரின் ராமசரிதம் ஆகியவை பிரசித்தி பெற்றவை. ராமநாடக கீர்த்தனங்களும் பல உள்ளன. சங்கீத மும்மணிகள் ராமர்மீது பாடியுள்ளனர்.

ஸ்வாதித் திருநாள் மகாராஜா பல ராமகீர்த்தனைகள் பாடியிருந்தாலும், “பாவயாமி ரகுராம்‘ என்ற ஒரு பாடலிலேயே ராமாயணத்தைப் பாடியுள்ளார். அதுபோல ராமகவியின் ராமாஷ்டபதி 24 பாடல்களில் முழு ராமாயணமும் சொல்லப்பட்டுள்ளது. கபீர்தாசர், அவரது குரு ராமானந்தர், மகாராஷ்ட்ர சமர்த்த ராமதாசர், சங்கீதப் பிதாமகர் புரந்தரதாசர், ஊத்துக்காடு வேங்கடகவி போன்ற பல அருளாளர்கள் ராமர் மீது பாடியுள்ளனர்.

காஞ்சி காமகோடி பீட போதேந்திர சுவாமிகள் ராமநாமத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து, “நாம சங்கீர்த்தனத்தாலேயே முக்தி பெறலாம்‘ என்று பல கிரந்தங்கள் எழுதியுள்ளார். அவ்வளவு மகிமைவாய்ந்தது ராமநாமம். விஷ்ணு சகஸ்ரநாமத்தின் 394-ஆவது நாமாவளி “ஸ்ரீராமாய நம‘ என்று வரும். காசியில் இறப்பவர்களின் காதில் ராமநாமம் ஓதியே முக்தியளிக்கிறார் விஸ்வநாதர். “நாராயணாய‘ என்னும் அஷ்டாட்சர “ரா‘வும், “நமசிவாய‘ என்னும் பஞ்சாட்சர “‘வும் சேர்ந்ததே “ராம‘ நாமம்.

ராமருக்கு நாடெங்கிலும் பல ஆலயங்கள் இருப்பினும், பத்ராசல ராமர்கோவில் (இன்றைய தெலங்கானா) பிரசித்திபெற்றது. பெரும்பாலான இடங்களிலும் வில்லேந்திய ராமபிரான் இரண்டு கரங்களுடனே காட்சி தருவார். ஆனால் பத்ராசல ராமர் வில், அம்பு, சங்கு, சக்கரம் ஏந்தி நான்கு கரங்களுடன் அருள்புரிகிறார். அமர்ந்த கோலத்திலுள்ள ராமரின் மடியில் சீதை அமர்ந்திருக்கும் அற்புத திருக்கோலத்தை பத்ராசலத்தில் மட்டுமே தரிசிக்கமுடியும். எனவேதான் இவரை வைகுண்ட ராமன் என்கின்றனர். அந்த ராமரால் ஆட்கொள்ளப்பட்டவரே பத்ராசல ராமதாசர்.

லிங்கன்னா- காமேஸ்வரி தம்பதிக்கு ராமரின் அருளால் பிறந்தவர் கோபன்னா.

இவரது தாய்மாமன்களான அக்கன்னாவும் மாதன்னாவும் அப்பகுதியை ஆண்ட நவாப் தானிஷாவிடம் அமைச்சர்களாகப் பணியாற்றி வந்தனர். அக்கன்னா மறைவுக்குப்பின், அந்த தாலுகாவின் அமைச்சர் பொறுப்பு கோபன்னாவுக்கு கிடைத்தது. நிர்வாகப் பணிகளை செவ்வனே மேற்கொண்டு வரி வசூலித்து மன்னருக்கு முறையாக அனுப்பிவந்தார் கோபன்னா. அவருக்கு திருமணமாகி ராகவன் என்னும் மகனும் பிறந்தான்.

ஒருமுறை ராமநவமி உற்சவம் மிகச்சிறப்பாக நடந்துகொண்டிருந்தது. பக்தர்களை விருந்துக்கு அழைத்திருந்தார் கோபன்னா. உணவுண்ணும்முன் அவர்களிடம் ஆசிபெறவேண்டி மனைவியை அழைத்த கோபன்னா,

“”ராகவன் எங்கே… அவனையும் அழைத்து வா. நம்மை ஆசீர்வதித்த பின்புதான் இவர்கள் உணவருந்துவார்கள்” என்றார். மகனைத் தேடி பின்பக்கம் சென்ற தாய், சாதம் வடித்த கஞ்சித் தொட்டியில் தன் மகன் பிணமாகக் கிடப்பதைக் கண்டு துடிதுடித்துப்போனாள்.

வீட்டுக்குள்ளே பக்தர்கள் காத்திருக்கிறார்கள். மகன் இறந்தது தெரிந்தால் உணவுண்ண மாட்டார்கள். அந்த தாய் மனதைக் கல்லாக்கிக்கொண்டாள். மகனின் உடலை ஒரு துணியால் மூடிக் கிடத்தினாள். பின்னர் கணவனிடம் சென்று, “”அவன் இப்போது வரமாட்டான். தூங்குகிறான். நாம் இருவரும் நமஸ்கரிப்போம்” என்று சொல்ல, அவ்வாறே வணங்கினர். பக்தர்கள் அவர்களை ஆசீர் வதித்துவிட்டு உணவுண்டு சென்றனர்.

அதன்பின் கோபன்னா, “”ராகவனை எழுப்பு. நாம் மூவரும் உணவருந்தலாம்” என்ற சொல்ல, கதறியழுதாள் மனைவி. நடந்த சம்பவத்தைச் சொன்னாள். மகன் இறந்ததைக் கேட்டு அதிர்ச்சியடைந்தாலும், சாதுக்களை உபசரிப்பதற்காக தன் துக்கத்தை அடக்கிக்கொண்ட மனைவியைக் குறித்து பெருமிதமும் கொண்டார். எல்லாம் ராமன் செயல்.

“சரணமுலே நம்மிதி- நீ திவ்ய
வனமுள ராதினி வனிதக ஜேஸின
சரணமு சரணமு சரணமு நீ திவ்ய’

என்று பாடினார். (ராமா, உன் திவ்ய சரணத்தையே நம்புகிறேன். வனத்தில் கல்லாக இருந்தவளை பெண்ணாக மாற்றிய உன் சரணமே கதி.) அப்போது ஒரு யோகி திடீரென்று அங்குவந்தார். இறந்துகிடந்த பிள்ளையின் உடலில் தன் பாதத்தை வைத்தார். தூங்கி எழுபவன்போல பிள்ளை எழ, யோகி மறைந்துபோனார். தம்பதியர் சிலிர்த்து நின்றனர். யோகி வடிவில் வந்தது அந்த பத்ராசல ராமனல்லவா! இதை “ராமஜோகி மந்து கொணரே பாமருலாரா‘ என்று பாடினார் கோபன்னா. (பாமரர்களே, யோகியாய் வந்த ராமர் மருந்து கொணர்ந்தார்.) அதன்பின் கோபன்னா ராமதாசர் ஆனார்.

(இதுபோன்ற சம்பவம் அப்பூதியடிகள் வாழ்விலும் நடந்தது. அவர் இல்லத்தில் உணவருந்த அப்பர் பெருமான் வந்திருந்த போது, வாழையிலை அறுக்கச் சென்ற அப்பூதியடிகளின் மகன் அரவம் தீண்டி மாண்டுபோனான். அவனை திங்களூர் சிவன் சந்நிதியில் கிடத்தி அப்பர் பாட, சிறுவன் உயிர்பெற்றெழுந்தான். ஆழ்ந்த பக்தியின் மகிமை இது.)

ஒருசமயம் புயல்மழையால் பத்ராசலம் ராமர் கோவில் சீரழிந்தது. நாட்டைக் காப்பது மன்னன் பொறுப்பென்று எண்ணிய ராமதாசர், வரி வசூல் செய்த பணத்தைக் கொண்டு ஆலயத்தைப் புதுப்பித்து உற்சவமும் நடத்தினார். மன்னனிடம் அனுமதி பெறவில்லை. இதையறிந்த தானிஷா ராமதாசரை கைது செய்து கோல்கொண்டா கோட்டையில் சிறைவைத்தான். ஒருவேளைதான் உணவு. சாட்டையடி வேறு. இவ்வாறு பன்னிரண்டு ஆண்டுகள் வதைபட்டார். அப்போது அவர் ராமரிடம் முறையிட்டுப் பாடிய பாடல்கள் ஏராளம். உள்ளத்தை உருக்குபவை.

இவையெல்லாம் ஒரு லீலை. நாராயண பட்டத்ரிக்கு தொழுநோய் வந்ததாலேயே “நாராயணீயம்‘ தோன்றியது. ஆதிசங்கரருக்கு செய்வினை காரணமாக கொடிய நோய் ஏற்பட்டது. அதனால் விளைந்ததுதான் “சுப்ரமண்ய புஜங்கம்‘ (“திருச்செந்தூர் முருகன்மீது பாடியது.) வாதவூரர் குதிரை வாங்க அரசன் கொடுத்த பணத்தில் கோவில் கட்டினார். அதன்காரணமாக அவருக்கு சிறைத்தண்டனை கிடைத்தது. நமக்கோ திருவாசகம் கிடைத்தது. திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்.

ராமதாசர் ஒருநாள் மிகவும் மனம் நொந்து, “சீதாராமா, உனக்கு கோவில் கட்டினேன். ஆபரணங்கள் பூட்டினேன். உற்சவம் நடத்தினேன். அதற்கு நீ எனக்குத் தந்த பரிசு சிறைத்தண்டனையும் கசையடியும்‘ என்ற பொருளில் நிந்தாஸ்துதி பாடினார். இறுதியாக தற்கொலை செய்துகொள்ளும் முடிவுக்கு வந்த அவர், அதற்குமுன் சீதைமீது தனிப்பாடல் ஒன்றைப் பாடினார்.

“நனுப்ரோவ மனி செப்பவே
சீதம்மா தல்லி லோ காந்த ரங்குடு
ஸ்ரீகாந்து நினுகூடி ஏகாந்தமுன
ஏக சய்யதுன்ன வேள…’

(சீதையம்மா, உலகத்தைக் காக்கும் அந்த ராமர் உன்னுடன் ஏகாந்தமாய்  பள்ளி கொண்டிருக்கும் வேளையில் என்னைக் காப்பாற்றும்படி சொல்லம்மா.)

நெகிழ்ந்த சீதை அதை ராமரிடம் சொல்ல, “”நான் அடுத்தவர் பணத்தில் கோவில் கட்டச் சொன்னேனா? அவன் ஒரு கிளியை பன்னிரண்டு நாட்கள் கூண்டில் அடைத்துவைத்திருந்தான். அதற்கான தண்டனையே இது. அது இன்றோடு முடிவடைகிறது. நீதானே லட்சுமி. பணம் கொடு” என்றார். தாயாரும் கொடுத்தாள்.

அன்றிரவு ராமனும் லட்சுமணனும் மாறுவேடத்தில் தானிஷாவின் படுக்கை யறையில் நுழைந்து, “”தானிஷா எழுந்திரு” என்றனர். கண் விழித்த தானிஷா ஆச்சரியப் பட்டு, “”நீங்கள் யார்? எப்படி இங்கே வந்தீர்கள்?” என்று கேட்க, “”நாங்கள் கோபன்னாவின் பணியாளர்கள். இதோ, கோபன்னா தரவேண்டிய பணம். பெற்றுக்கொண்டு ரசீது கொடு” என்றனர். பிரகாசித்த அவர்களைப் பார்த்து மெய்சிலிர்த்த தானிஷா, “”ரசீது காலையில் கொடுக்கிறேன்” என்றான்.

“”இல்லை. இப்போதே வேண்டும். நீ துப்பிய வெற்றிலைப் பாக்கு ரசத்தில், பல் குச்சியால் தொட்டு உன் ஆடையில் எழுதிக்கொடு” என்றனர். தானிஷாவும் அப்படியே செய்தான்.

சிறையில் ஒரு ஒளி தோன்றியதை ராமதாசர் கண்டார். தானிஷா கையொப்பமிட்ட ரசீது சிறைக்காவலர்களிடம் தரப்பட்டது. அவர்கள் வந்து ராமதாசரிடம் விடுதலை என்பதை அறிவித்தனர். சற்று நேரத்தில் தற்கொலை செய்துகொள்ள நினைத்தவருக்கு இது ஆச்சரியமாக இருந்தது. அந்த நேரத்தில் அங்கு தானிஷாவும் வந்துசேர்ந்தான். ராமதாசரைப் பணிந்து மன்னிப்பு கேட்டு நடந்தவற்றை விவரித்தான். அவரை விடுதலை செய்து ராம-லட்சுமணர் கொடுத்த பணத்தையும் தந்துவிட்டான்.

அன்றிலிருந்து ஆலயப் பராமரிப்புக்காக முகம்மதிய அரசு ஆண்டுதோறும் 20,000 காசுகள் வழங்கி வந்தது. ராமதாசர் இருந்த சிறையையும், அரசன் கொடுத்த காசுகளையும் கோல்கொண்டா கோட்டையில் தற்போதும் காணலாம்.

ராமபிரான் தனக்கு காட்சி தராமல் முகம்மதிய அரசனுக்குத் தந்தாரே என்று ராமதாசர் ஏங்க, அவரது கனவில் தோன்றிய ராமர், “”அவனும் பக்தன்தான். ஆயிரம் குடம் அபிஷேகம் செய்கிறேன் என வேண்டி, 999 குடம் அபிஷேகம் செய்தும் பலன் இல்லையே என்று கடைசி குடத்தை என் எதிரே உடைத்தான். அதனால் அரசன் ஆனான்; என் காட்சியும் கிடைத்தது” என்று ஆறுதல் கூறினார்.

ஆழ்ந்த பக்தனை ஆண்டவன் கைவிட மாட்டான்; சத்தியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்; மதபேதம் கூடாது என்பதே பத்ராசல ராமதாசரின் சரிதம் கூறும் கருத்து.

கி.பி. 1620-ல் பிறந்து, 68 வருடங்கள் வாழ்ந்து, மாசி மாத வளர்பிறை சதுர்த்தசியன்று ராமசாயுஜ்யம் அடைந்தார் பத்ராசலம் ராமதாசர். இவரது பாடல்கள் மனதை உருக்குபவை. பஜனை சம்பிரதாயத்தில் பாடப்படுகின்றன. சமர்த்த ராமதாசரின் சமகாலத்தவர்.

-மும்பை ராமகிருஷ்ணன் (ஓம் -ஆன்மீக மாத இதழ்)

Advertisements

4 thoughts on “ராம நவமி – 15-04-2016

 1. Cuddalore Ramji April 11, 2016 at 10:37 PM Reply

  மிக அருமையான பதிவு நன்றி பல

 2. vasanth99in April 12, 2016 at 12:46 AM Reply

  Tnx

 3. vidya (@kalkirasikai) April 23, 2016 at 11:11 AM Reply

  நெஞ்சை நெகிழ வைத்தது. மத சகிப்புத்தன்மை குறைந்து வரும் இந்நாட்களில் நமது பெருமை மிக்க பாரம்பரியத்தை உணர்த்த இதுபோன்ற வரலாற்று நிகழ்ச்சிகளை மீண்டும் மீண்டும் நினைவுகூர வேண்டும். மேரா பாரத் மஹான்!

 4. Ramji Bal June 22, 2016 at 7:07 AM Reply

  ஸ்ரீ ராம ஜெயம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s