துர்முகி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் – ரிஷபம்


இங்கு விவரிக்கப்படும் ஜோதிட பலன்கள் அனைத்தும் மிகப் புராதனமான ஜோதிட கிரந்தங்களில் நமது மகரிஷிகள் அருளியுள்ள கணித முறைகளின் அடிப்படையில் கணித்துக் கூறப்பட்டுள்ளவை ஆகும். அனைத்து ராசியினருக்கும் பரிகாரங்கள் கூறியிருக்கிறோம். எளியவைகளாகத் தோன்றினாலும், இங்கு கூறப்பட்டுள்ள பரிகாரங்கள் அனைத்தும் அளவற்ற சக்தி கொண்டவை. குருபகவானின் ராசி மாறுதலையும் கணக்கில் கொண்டு பலன்கள் கூறப்பட்டுள்ளன.

குடும்பம்

ஜூலை மாதம் முடியும் வரையில் முக்கிய கிரகங்கள் அனைத்தும் ரிஷப ராசி அன்பர்களுக்கு சற்று அனுகூலமற்ற நிலையில் சஞ்சரிக்கின்றனர். குறைந்த வருமானம், பழைய கடன்களினால் சிரமங்கள், கற்பனையான பயம், நிம்மதியற்ற மனநிலை, குழந்தைகளினால் பிரச்சினை, மனைவியின் ஆரோக்கியக் குறைவு ஆகியவற்றினால் மனநிம்மதி பாதிக்கப்படும். பரிகாரம் மிகவும் அவசியம். ஆகஸ்ட் மாதத்தில் குருபகவான் மிகவும் அனுகூலமாக மாறி, ரிஷப ராசியைத் தனது சுபப்பார்வையினால் பார்க்கவிருப்பதால் சிரமங்கள் பெருமளவில் குறைய ஆரம்பிக்கும். படிப்படியாக பிரச்சினைகள் நீங்கி, குடும்பத்தில் மகிழ்ச்சியும், நிம்மதியும் பெருகும். கவலைகள் விலகும். தடைபட்டிருந்த திருமண முயற்சிகள் கைகூடும். சிலருக்குச் சொந்த வீடு அமையும் வாய்ப்பினையும் தந்தருள்கிறார் குருபகவான். மனைவியின் ஆரோக்கியம் சீர்படும்.


உத்தியோகம்

வேலை பார்க்குமிடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவும், நிர்வாகத்தினரின் உதவியும் கிடைக்கும். உங்கள் எதிர்கால திட்டங்களை நிறைவேற்றிக்கொள்ள தக்க தருணமிது. வேலையில் மாற்றம் விரும்பும் ரிஷப ராசி அன்பர்கள் அதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம். வெளிநாடுகளில் பணியாற்றிவரும் அன்பர்கள் வேலையில் நல்ல மாறுதலை எதிர்பார்க்கலாம். சிலருக்கு இடமாற்றமும், அதனால் பல நன்மைகளும் உண்டாகும்.

மாணவமணிகள்

கல்விக்கு அதிபதியான புதன் இந்த ஆண்டு முழுவதும் மிகச் சிறந்த சுபபலம் பெற்றிருக்கிறார். ஆதலால், ரிஷப ராசியில் பிறந்துள்ள மாணவமணிகளுக்கு நல்ல முன்னேற்றத்தை அளிக்கக் கூடிய ஆண்டு இது. படிப்பில் மனம் தீவிரமாக ஈடுபடும். தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்றுத் திகழ்வீர்கள் என்பதைக் கிரகநிலைகள் உறுதி செய்கின்றன. உயர்கல்விக்கு உங்கள் விருப்பம்போல் இடம் கிடைக்கும். ஏற்கனவே வெளிநாடுகளில் கல்வி பயின்றுவரும் மாணவ, மாணவியர் தங்கள் ப்ராஜெக்டுகளைக் குறித்த நேரத்தில் முடித்துவிட முடியும். பலருக்கு கேம்பஸ் நேர்முகத் தேர்வில் நல்ல வேலை கிடைக்கும்.

பெண்மணிகள்

சப்தம ஸ்தானத்தில் சனி பகவான் சஞ்சரிப்பதால், அவ்வப்போது வயிற்று உபாதைகளும், மாதவிடாய் சம்பந்தமான உபத்திரவங்களும் இருக்கக்கூடும். மற்றபடி இந்த ஆண்டு முழுவதும் பெண்மணிகள் பல நன்மைகளை எதிர்பார்க்கலாம். வேலைக்குச் சென்றுவரும் ரிஷப ராசி பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும், மேலதிகாரிகளின் ஆதரவும் உற்சாகத்தைத் தரும்.

பொருளாதாரம்

இந்த ஆண்டு முழுவதும் வருமானம் திருப்திகரமாக இருக்கும். குறிப்பாக ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்திலிருந்து பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் காணலாம். சற்றுத் திட்டமிட்டுச் சிக்கனமாக இருந்தால், உங்கள் பொருளாதார நிலையைச் சீர்படுத்திக் கொள்வதற்கு ‘துர்முகி’ ஆண்டு சிறந்த வாய்ப்பை அளிக்கிறது எனலாம்.

ஆரோக்கியம்

ராகுவின் அர்த்தாஷ்டக சஞ்சார தோஷத்தினால் சிறுசிறு உபாதைகள் ஏற்படுவதற்கு சாத்தியக்கூறு உள்ளது. தேவையற்ற அலைச்சல், சக்திக்கு மீறிய உழைப்பு, கண்ட நேரங்களில் தரக்குறைவான உணவு வகைகளை உண்பது ஆகியவற்றை தவிர்ப்பது மிகவும் அவசியமாகும்

அறிவுரை

ரிஷப ராசி அன்பர்கள் இந்த ‘துர்முகி‘ தமிழ்ப் புத்தாண்டு காலத்தில் நினைவில் கொள்ள வேண்டியது, அவர்களது உடல்நலனைப் பற்றியதே ஆகும்! கவலைப்படும் அளவிற்கு விபரீத பிரச்சினை எதுவும் ஏற்படுவதற்கு ராகுவின் அர்த்தாஷ்டக சஞ்சார நிலையினால் வாய்ப்பில்லை. ஏனெனில், ராகுவுடன், மகத்தான சுபபலம் பெற்றுள்ள குருபகவானின் சேர்க்கை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அர்த்தாஷ்டக தோஷத்தினால் அவ்வப்போது சிறுசிறு உபாதைகள், சிறு விபத்துகள் போன்றவை ஏற்படக்கூடும். ஆதலால், அதற்குரிய பரிகாரத்தைச் செய்தால் இந்த சிறு அளவு தோஷத்தையும் போக்கிக்கொள்ள முடியும்.

பரிகாரம்

1. ஒரு முறை திருநாகேஸ்வரம் திருத்தலத்திற்குச் சென்று, அங்கு எழுந்தருளியுள்ள ராகுவை தரிசித்துவிட்டு வரவும்.

2. ராகு மற்றும் சனிபகவானின் திருவுள்ளத்திற்கு உகந்த தெய்வம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர். ஆதலால், ஒருமுறை குடும்பம், குழந்தைகளுடன் பூவரசன்குப்பம், அபிஷேகப்பாக்கம் (சிங்கிரி கோயில்), பரிக்கல் (பண்ருட்டிக்கு அருகிலுள்ளது) ஆகிய மூன்று திருக்கோயில்களுக்கும் சென்று தரிசித்துவிட்டு வருவது ராகுவின் தோஷத்தைப் போக்கும்.

3. காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மன் சந்நிதி தரிசனமும் ராகுவின் தோஷத்தை அடியோடு போக்கும் சக்தி வாய்ந்ததாகும்.

4. காளஹஸ்தி க்ஷேத்திர தரிசனம் நல்ல பலனளிக்கும்.

5. சனிபகவானின் ஸ்ரீநரசிம்மர் ஸ்தோத்திர பாராயணம், ராகுவின் தோஷத்தை அடியோடு நீக்கும்.

–நன்றி குமுதம் ஜோதிடம்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s