19-நான் முகம் பார்த்த கண்ணாடிகள்… – ராஜேஷ் குமார்


நம் வாழ்க்கையிலும் சரி, நமக்கும் சரி மிகவும் வேண்டியவர்களின் வாழ்க்கையிலும் சரி எதிர்பாராதவிதமாய் சம்பவங்கள் நடக்கும் போது, கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா…. இல்லை கடவுள் என்பது நாத்திகர்கள் சொல்வது போல் கற்பனையோ என்ற எண்ணம் விநாடிக்கும் குறைவான நேரத்தில் மின்னல் வேகத்தில் என் மனதுக்குள் வந்து விட்டு அதே நேரத்தில் காணாமல் போய்விடும்.

அப்படி காணமல் போய் விடுவதற்கே காரணம் நான் சில விஷயங்களை யதார்த்தமாய் நினைத்துப் பார்ப்பதுதான். நம் பூர்வ கர்மாவின் பயனாக நம் வாழ்க்கையில் ஏற்படும் இன்ப துன்பங்களுக்கு நாம் முன்பே விதை போட்டு இருக்கிறோம். அதிலிருந்து தப்ப வழியில்லை. அவற்றைச் சமாளித்து வாழ்வதில்தான் நமது திறமை இருக்கிறது.

Naan Mugam Paartha Kannadigal 20

மரங்கள் அடர்ந்த காட்டுவழியே நடக்கும்போது மரத்தின் கிளைகள் காற்றில் அசைவதற்கு ஏற்றாற்போல் இடுக்குகளின் வழியே கொஞ்சமாய் சூர்ய வெளிச்சம் எட்டிப் பார்த்துவிட்டு உடனே மறைந்து போகும். நிழல் அடுத்த விநாடியே நம்மை வந்து மூடிக்கொள்ளும். மனித வாழ்க்கையில் சந்தோஷம் என்பதும் அந்த சூரிய வெளிச்சம் போன்றதுதான். சிலருக்கு அந்த சூர்ய வெளிச்சம் நீண்ட நேரம் கிடைக்கும். சிலருக்கு அது கிடைத்து அடுத்த சில விநாடிகளிலேயே மறைந்து போகும். ஆனால் நாம் ஒரு உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த உலகில் வாழும் எந்த ஒரு மனிதருக்கும் நிரந்தர சந்தோஷம் என்பது கிடையாது. எல்லா மனிதர்களுக்கும் கஷ்டங்கள் வரத்தான் செய்யும். மிகப் பெரிய பணக்காரர்களும் சரி பிரபலமானவர்களும் சரி ஏதோ ஒரு காரணத்துக்காக தற்கொலை செய்துக் கொண்டதைப்பற்றி செய்தித்தாள்களில் படிக்கிறோம். எத்தனை மனத் துயரம் இருந்தால் அவர்கள் அந்த முடிவை எடுத்திருப்பார்கள். அதேபோல் ஒரு சிலர் எப்போதும் சந்தோஷமாக இருப்பது போல் தோன்றுவதும் ஒரு பிரமையே. அவர்களுடைய ஆழ்மனங்களிலும் ஆறாத்துயரம் புதைந்து கிடக்கும். அவற்றைத் தாண்டித்தான் அவர்கள் யதார்த்த வாழ்க்கையில் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

நடப்பதெல்லாம் நன்மைக்கே என்கிற மனோபாவம் யாருக்கு இருக்கிறதோ அவர்களை நோக்கி துன்பத்தின் கரங்கள் நீள்வதில்லை.

இதற்கு உதாரணமாய் நான் இப்போது சொல்லப் போகும் ஒரு சம்பவம் பொருத்தமாய் இருக்கும் என்று நினைக்கிறேன்.

சில வருடங்களுக்கு முன்னாள் காலை எட்டுமணியளவில் என்னுடைய நண்பர் ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். கோவையில் இருக்கும் ஒரு பிரபலமான பெண் எழுத்தாளரின் பெயரை குறிப்பிட்டு அவருடைய வீட்டில் 60 பவுன் தங்க நகைகள் திருடு போய்விட்டது. போலீஸ் வந்து விசாரித்துக் கொண்டு இருக்கிறார்கள். உங்களுக்குத் தகவல் வரவில்லையா என்று கேட்டார்.

“எனக்குத் தகவல் ஏதும் இல்லை. சம்பவம் எப்போது எப்படி நடந்தது ?” என்று கேட்டேன்.

“அந்தப் பெண் எழுத்தாளர் வழக்கமாய் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்துவிடும் பழக்கம் உள்ளவர். அவருடைய கணவரும் அப்படியே. ஆனால் இன்றைக்கு காலை எட்டுமணியாகியும் அவர்கள் அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்திருக்கிறார்கள். பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் என்னவோ ஏதோ என்று பயந்து போய்க் கதவைத் தட்டியும் அவர்கள் எழாமல் போகவே வீட்டின் பின்பக்கம் போய் பார்த்து இருக்கிறார்கள். பின்பக்கக் கதவு உடைக்கப்பட்டு திருடர்கள் உள்ளே நுழைந்து இருக்கிறார்கள். அதற்கு முன்பு ஜன்னல் வழியாக மயக்க மருந்து ஸ்பிரேயரைப் பயன்படுத்தி தூங்கிக்கொண்டிருந்த கணவன் மனைவி இரண்டு பேரையுமே மயக்கத்துக்குக் கொண்டு போயிருக்கிறார்கள். ”

நண்பர் டெலிபோனில் சொன்ன அந்தக் காலை நேரச் செய்தி என்னைப் பெரிதாய் அதிர வைத்தது. கோவையில் உள்ள எழுத்தாளர்களில் அவரது எழுத்துத் திறமை தனித்துவம் கொண்டது. அவர் எழுத்தாளர் மட்டுமல்ல நல்ல பேச்சாளார். அவருடைய மேடை நாடகங்கள் பிரபலம். அன்பான கணவர். கணவரின் பெயர் ரமணி. அவர் ஒரு திறமையான ஆடிட்டர்.

அந்த எழுத்தாளர் யார் என்று இப்போது உங்களுக்கும் புரிந்து இருக்கும். தெரிந்து இருக்கும்.

நீங்கள் யூகம் செய்தது சரிதான்.

விமலாரமணி.

விமலாரமணி வீட்டில் நகைகள் திருடு போய்விட்டது என்ற செய்தி கேட்ட அடுத்த அரைமணி நேரத்துக்குள்ளாக நான் என் ஸ்கூட்டரில் கிளம்பி ராம்நகரில் இருக்கும் அவருடைய வீட்டில் இருந்தேன். வீட்டுக்கும் உள்ளேயும் வெளியேயும் ஏகப்பட்ட கூட்டம். உறவினர்கள், நண்பர்களைக் காட்டிலும் அவருடைய வாசகர்கள் கூட்டம் அதிகமாய் இருந்தது. நான் கூட்டத்தை விலக்கிக் கொண்டு உள்ளே போனேன். நகைகள் திருட்டுப் போன அறைக்குள் போலீசார் இருந்தார்கள். முகம் இருண்டு போய் நின்றிருந்த ஆடிட்டர் ரமணி என்னைப் பார்த்ததும் கைகளைப் பற்றிக் கொண்டு குரல் தழுதழுக்கச் சொன்னார்.

“மொதல்ல உங்க ஃப்ரண்ட்டைப் போய்ப் பார்த்து ஆறுதல் சொல்லிட்டு வாங்க….!”

நான் கூடத்தைத் தாண்டி உள்ளே போனேன். பூஜை அறை தென்பட்டது. கூடியிருந்த கும்பலுக்கு நடுவே தரையில் விமலாரமணி தலைமுடி கலைந்து இருக்க அழுது அரற்றியபடி உட்கார்ந்து இருந்தார். என்னைப் பார்த்ததும் அவருடைய துயரம் அதிகமாயிற்று.

“பார்த்தீங்களா ராஜேஷ்குமார்…. நான் கஷ்டப்பட்டு எழுதிச் சம்பாதித்த பணத்தில் ஆசை ஆசையாய் செஞ்சு வெச்சிருந்த எல்லா நகைகளும் ஒரே ராத்திரியில் என்னை விட்டுப் போயிடுச்சு. கடவுள் எனக்கு ஏன் இந்த தண்டனையைக் கொடுத்தார்ன்னு தெரியலை. நான் யார்க்கும் எள்ளளவு கூட கெடுதல் பண்ணியதில்லை. ஒரு மாசத்துல எத்தனை விரதங்கள் உண்டோ அத்தனையையும் ஆச்சாரத்தோடு கடைபிடிச்சு வந்திருக்கேன்…”

விமலா ரமணி கண்களில் பெருகும் நீரோடு அரற்றுவதைப் பார்த்துக் கொண்டிருந்த எனக்கு மனம் கனத்துப் போயிற்று. விமலா ரமணி எழுதும் சிறுகதைகளானாலும் சரி, நாவலானாலும் சரி, அதில் வரும் பெண்கள் துணிச்சல் மிக்கவர்களாகவும், மனோதிடம் மிக்கவர்களாகவும் இருப்பார்கள். ஆனால் அப்படிப்பட்ட பாத்திரங்களைப் படைத்த விமலா ரமணிக்கு நகைகள் பறிபோன சம்பவத்தை எதிர்கொள்ளும் வலிமை இல்லாமல் போனது எனக்கு சற்றே நெருடலாக இருந்தது. இத்தனைக்கும் அவருடைய தந்தை காவல் துறையில் உயர் அதிகாரியாகப் பணியாற்றியவர்.

நான் அந்த பூஜையறையைப் பார்த்தேன். நான்கு சுவர்களிலும் நெருக்கியடித்துக் கொண்டு தெய்வங்களின் உருவப்படங்கள். அந்தப் படங்களில் நேற்று சாத்தப்பட்டு இருந்த மலர் மாலைகள் சற்றே வாடித் தெரிந்தன.

‘நகைகள் பறிபோவதைத் தடுக்க ஒரு தெய்வத்தால் கூடவா முடியவில்லை?’ என்கிற கோபம் எனக்குள் எட்டிப் பார்த்தது. ஏதோ ஒரு கடமைக்காக ஆறுதல் சொல்ல வேண்டும் என்று எண்ணாமல் அந்த நேரத்தில் என் மனதில் பட்டதைச் சொன்னேன்.

“இதோ பாருங்க சிஸ்டர்… இப்ப காணாமல் போயிருக்கிற உங்களுடைய நகைகள் இன்னும் மூணு மாசத்துக்குள்ள முழுசா உங்ககிட்டயே திரும்பி வரும். இந்த பூஜையறையில் நின்னுக்கிட்டு சொல்றேன். நான் சொன்னது கண்டிப்பாக நடக்கும். நீங்க எழுதி எழுதியே சம்பாதிச்ச சொத்து அது. ஒரு கிராம் குறையாமல் அப்படியே உங்களுக்குத் திரும்பக் கிடைக்கும்…!”

“எனக்கு நம்பிக்கையில்லை ராஜேஷ்குமார். நகை போனதுதான்… இந்நேரம் அது எத்தனையோ கை மாறி உருகி உருக்குலைந்து போயிருக்கும். எல்லாம் என் நேரம்!” விமலா ரமணி விரக்தியும் வேதனையும் நிரம்பிய குரலில் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அந்தப் பெரியவர் உள்ளே வந்தார்.

அவருக்கு எண்பது வயது இருக்கலாம். வெள்ளை நிற பைஜாமாவில் கண்ணியமான தோற்றம் காட்டினார். அவர் உட்காருவதற்காக நாற்காலி எடுத்துப் போட்டார்கள்.

அவரைப் பார்த்ததுமே விமலா ரமணியின் துக்கம் உச்சத்துக்குப் போனது. ஒரு சின்னக் குழந்தையைப் போல் விம்மி விம்மி அழ ஆரம்பித்துவிட்டார். அழுகை ஓயும் வரை காத்திருந்த அந்தப் பெரியவர் அதன் பிறகு கனிவான குரலில் பேச ஆரம்பித்தார்.

“என்னம்மா… அழுது முடிச்சிட்டியா…? இல்லை இன்னும் அழணும் போலிருக்கா? அப்படி ஏதாவது எண்ணம் இருந்தா அழுது தீர்த்துடு”.

விமலா ரமணி கலங்கிய விழிகளோடு நிமிர அவர் ஒரு புன்சிரிப்போடு பேச்சைத் தொடர்ந்தார்.

“இன்னிக்குக் காணாமே போனது வெறும் நகைகள்தானே… வேறு ஒண்ணுமில்லையே…?”

“கொஞ்சம் பணமும்” “அவ்வளவுதானே…? வேற ஒண்ணும் காணாமே போயிடலையே…? என்னம்மா அப்படிப் பார்க்கிறே…. நான் உனக்கு ஆறுதல் சொல்ல வரவில்லை. ஒரு உண்மையை சொல்லி விட்டுப் போக வந்தேன்.”

‘உண்மையா… என்ன உண்மை?’ என்பதுபோல் நானும் விமலா ரமணியும் பெரியவரைப் பார்க்க, அவர் புன்முறுவல் மாறாமல் பேச்சைத் தொடர்ந்தார்.

“நான் என்னைக்குமே உன்னை இதுமாதிரியான கோலத்தில் பார்த்தது இல்லை. இன்னிக்கு நான் பார்த்துட்டு இருக்கேன். அதுக்குக் காரணமும் இருக்கு. ஏன்னா இன்னிக்கு நீ அழ வேண்டிய நாள். ஏதாவது ஒண்ணைத் தொலைச்சிட்டு இப்படி தலைமுடி கலைய அழ வேண்டிய நாள். அப்படி நீ அழும்போது உனக்கு வேண்டியவர்கள், சொந்தக்காரர்கள் எல்லாரும் வந்து உனக்கு ஆறுதல் சொல்ல வேண்டிய நாள். அதுதான் இப்போ நடந்துட்டு இருக்கு. கொஞ்சம் தலையை நிமிர்த்திப் பாரு.. வீடு நிறைய ஜனம். வெளியேயும் ஜனம். யார் முகத்திலும் சிரிப்பில்லை. இப்படியொரு அசாதாரண சூழ்நிலை எந்த வீட்ல இருக்கும்னு கொஞ்சம் நினைச்சுப் பாரு”.

“எனக்கு ஏதோ புரிவது போல் இருந்தது. விமலா ரமணியின் அழுகையும் இப்போது நின்று போயிருந்தது. அவர் மட்டும் பேசிக் கொண்டிருந்தார்.

“நான் என்ன சொல்ல வர்றேன்னு உனக்குப் புரிஞ்சி இருக்கும்னு நினைக்கிறேன். உன்னோட இடைவிடாத இறை நம்பிக்கை நீ தாங்கிக் கொள்ளக் கூடிய அளவில் ஒரு நஷ்டத்தைக் கொடுத்து விதியோட வினைப் பயனை மாத்தியிருக்கு. இப்போ உன்கிட்டயிருந்து காணாமே போயிருக்கிற பொருள் திரும்பவும் உனக்குக் கிடைக்க வாய்ப்பு இருக்கு. ஆனா ஒரு சில விஷயங்கள் காணாம போனா காணாமல் போனதுதான். திரும்பி வராது, அழுதது போதும். எழுந்து போய் முகத்தை அலம்பிட்டு நெத்திக்கு குங்குமம் இட்டுக்கோ. போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடு. நீ கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பொருளா இருந்தா கண்டிப்பாய் உனக்குக் கிடைக்கும்!”

பெரியவர் பேசிவிட்டுப் போய்விட்டார்.

அதன் பிறகு விமலா ரமணி அழவில்லை.

**************
சரியாய் மூன்று மாதங்கள் கழித்து விமலா ரமணி எனக்குப் போன் செய்தார்.

“ராஜேஷ்குமார்! காணாமல் போன 60 சவரன் நகையும் ஒரு கிராம் குறையாம அப்படியே கிடைச்சிடுச்சி. போலீசிடம் பிடிபட்ட அந்த நகைத் திருடன், அவன் திருடின எல்லா நகைகளையும் உருக்கிட்டானாம். என்னோட நகைகளை மட்டும் அப்படியே வெச்சிருந்திருக்கான். அது எப்படி சரியா மூணு மாசம் கழிச்சி எனக்கு கண்டிப்பாய் நகைகள் கிடைக்கும்னு சொன்னீங்க?”

“காட் ஈஸ் கிரேட்!” என்றேன்.

தொடரும்…

 

Advertisements

One thought on “19-நான் முகம் பார்த்த கண்ணாடிகள்… – ராஜேஷ் குமார்

  1. amuthans April 8, 2016 at 1:35 PM Reply

    God is great….Thank you sir.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s