18-நான் முகம் பார்த்த கண்ணாடிகள்… – ராஜேஷ் குமார்


நான் எழுத்தானாக அவதாரம் எடுப்பேன் என்றோ என் பெயருக்கு முன்னால் ‘க்ரைம் கதை மன்னன்’ என்கிற பட்டம் ஒட்டிக்கொள்ளும் என்றோ நான் ஒரு போதும் நினைத்தது இல்லை.

என் பள்ளி நாட்களில் நான் பத்தாவது படிக்கும் பொழுது என்னுடைய வகுப்பாசிரியர் ராமசாமி அவர்கள், ஒவ்வொரு மாணவனையும் பார்த்து “நீ எதிர்காலத்தில் எந்த தொழில் செய்பவராக வரப்போகிறாய்?” என்று கேட்டார்.

மாணவர்கள் அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப டாக்டர், என்ஜினியர், வக்கீல், ஏர் பைலட் என்று சொல்லிக் கொண்டு வந்தார்கள்.

என் முறை வந்தபோது நான் எழுந்து சொன்னேன்.

“அக்ரி ஆபீஸர்”

ஆசிரியர் என்னையே பார்த்தார்.

“என்ன சொன்னே?”

“அக்ரி ஆபீஸர்”

“அதாவது விவசாய அதிகாரி ?”

“ஆமா ஸார்! பி.யூ.சி (அப்போது ப்ளஸ்டூ கிடையாது) முடிச்சதும் பி.எஸ்.ஸி அக்ரி கோர்ஸ் எடுத்து படிச்சு ஒரு விவசாய அதிகாரியாய் ஏதாவது கிராமத்துக்குப் போய் வேலை செய்யணும்னு ஆசை”

“ஏன் அப்படி?” எனக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. ராமசாமி வாத்தியார் என் பக்கத்தில் வந்து நின்று முதுகைத் தட்டிக் கொடுத்தார்.

Naan Mugam Paartha Kannadigal - 19

“ஒரு நாட்டின் உயிர் நாடி விவசாயம்தான். உன்னை மாதிரியே எல்லாரும் இருந்துட்டா நாட்ல பஞ்சமே வராது. பி.எஸ்.ஸி அக்ரி சீட் உனக்குக் கிடைக்கணும்ன்னா பி.யூ.சியில் நீ நல்ல மார்க் எடுக்கணும். எழுபது சதவீத மார்க் எடுத்தால்தான் நீ விவசாயக் கல்லூரியில் படிக்க முடியும்.”

“நல்லா படிப்பேன் ஸார்…!”

அதற்குப் பிறகு ராமசாமி வாத்தியார் என்னைப் பெயர் சொல்லிக் கூப்பிடவேயில்லை. “என்ன அக்ரி ஆபீஸர் …! க்வார்ட்டர்லி எக்ஸாமை நீங்க சரியாய் பண்ணலை போலிருக்கே ? சயின்ஸ் சப்ஜெக்ட்ல அறுபது பர்சென்ட்தான் எடுத்து இருக்கீங்க… இது போதாதே ?” என்று கேலியாய் சிரித்துக் கொண்டே விடைத்தாளை என் கையில் தருவார். அவர் என்னை அப்படிக் கூப்பிடுவதைப் பார்த்து மாணவர்கள் எல்லோரும் என்னை ‘அக்ரி ஆபீஸர்’ என்றே கூப்பிட ஆரம்பித்தார்கள்.

அவர்கள் அப்படி கூப்பிடக் கூப்பிட என்னுடைய மனசுக்குள் ஒரு வைராக்கியம் பிறந்தது. எப்படியும் நல்ல முறையில் படித்து எழுபது சதவீத மார்க் எடுத்து பி.எஸ்.சி அக்ரியில் சீட் வாங்கியே தீருவது என்கிற முடிவுக்கு வந்தேன். பள்ளிப் படிப்பு எஸ்.எஸ்.எல்.ஸியில் நல்ல மதிப்பெண் எடுத்த நான் பி.எஸ்.ஜி கல்லூரியில் பி.யூ.ஸியில் சேர்த்தேன். அதுவரைக்கும் எல்லா பாடங்களையும் தமிழில் படித்த எனக்கு பி.யூ.ஸியில் எல்லாமும் ஆங்கிலத்தில் இருந்ததால் முதல் மூன்று மாதம் மிரட்சியாய் இருந்தது. பிறகு ஆங்கில நாளிதழ்களைப் படித்து என்னுடைய ஆங்கில அறிவை வளர்த்துக் கொண்டு பாடங்களைப் படித்ததில் அனைத்தும் எளிமையாக இருந்தது.

கல்லூரியின் விரிவுரையாளர்கள் பி.யூ.ஸி பரீட்சை கடினமாக இருக்கும். ஏனெனில் எந்த பட்டப்படிப்புக்கும் இதுதான் நுழைவு வாயில் என்று சொன்னதால் நான் மும்முரமாய் படிக்க ஆரம்பித்தேன். கல்லூரி முடிந்ததும் சக மாணவர்களோடு விளையாடுவதைத் தவிர்த்து விட்டு புத்தகமும் கையுமாய் இருந்தேன். என்னுடைய தாத்தா, பாட்டி , அப்பா, அம்மா, பெரியப்பா, பெரியம்மா, அத்தை, மாமா என்று கூட்டுக் குடும்பத்தில் இருந்த அத்தனைப்பேரும் என்னை வியப்பாய்ப் பார்த்தனர். ‘எந்த ஜில்லாவுக்கு கலெக்டராக இப்படி விழுந்து விழுந்து படிக்கிற… போய் கொஞ்ச நேரமாவது விளையாடுடா’ என்று என்னுடைய அம்மா புத்தகத்தை பிடுங்கி வைத்துக்கொள்ளும் அளவுக்கு அந்த ஆர்வம் போயிற்று.

எல்லா சப்ஜெக்டுகளையும் முழுமையாய் படித்து முடித்து நான் பரீட்சைக்குத் தயாரான வேளையில், அந்த 1965ஆம் வருடம் தமிழ்நாட்டில் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் வெடித்தது. கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் குதிக்கவே தமிழ்நாட்டில் இருந்த அனைத்துக் கல்லூரிகளும் காலவரையின்றி மூடப்பட்டன.

கிட்டத்தட்ட மூன்று மாத காலத்திற்குப் பிறகு போராட்டம் ஒரு முடிவுக்கு வந்து கல்லூரிகள் திறக்கப்பட்டன. பிறகு வந்த ஒருமாத காலத்துக்குள் பரீட்சை வந்தது. நான் கஷ்டப்பட்டு படித்து மூளையில் பதிவு செய்து வைத்திருந்த பாட சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களும் காணாமல் போயிருக்க மறுபடியும் புதிதாய்ப் படிக்க வேண்டிய கட்டாயம். படித்தேன். எங்கே மறுபடியும் ஹிந்திப் போராட்டம் வெடித்து விடுமோ என்று பயந்துபோன அரசின் கல்வித்துறை அவசர கோலத்தில் போதிய இடைவெளி நாட்கள் தரப்படாமல் பரீட்சைகளை நடத்தி முடித்தது.

மழையின் காரணமாய் ஓவர்கள் குறைக்கப்பட்ட கிரிகெட் மேட்ச்சைப்போல் கண்ணிமைக்கிற நேரத்திற்குள் பரீட்சைகள் முடிந்தன.

பியுஸியில் தேர்ச்சி பெற்றேன். மார்க் ஷீட் வந்தது. மதிப்பெண்களைப் பார்த்த எனக்கு மயக்கம் வராத குறை. எப்படியும் 70 சதவீத மதிப்பெண்கள் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையோடு இருந்த எனக்கு கிடைத்த மதிப்பெண் எவ்வளவு தெரியுமா? 69 சதவீத மதிப்பெண். 70 சதவீத மதிப்பெண் இருந்தால்தான் பிஎஸ்ஸி அக்ரிக்கு விண்ணப்பிக்க முடியும். அந்த விநாடியே என்னுடைய ‘அக்ரி ஆபீஸர்’ கனவு நொறுங்கிப் போயிற்று.

அதற்குப் பிறகு நான் பிஎஸ்ஸி பாட்டனி படித்து, பிஎட் படித்து, பள்ளிக்கூட ஆசிரியராய் பணியாற்றி, அதுவும் பிடிக்காமல் அப்பாவின் பிஸினஸ் பார்த்து, அதுவும் தோல்வியில் முடிந்து ஒரு ப்ரைவேட் நிறுவனத்தில் விற்பனைப் பிரதிநிதியாய் வேலை பார்த்து, எனக்கே தெரியாமல் நான் ஒரு எழுத்தாளனாக மாறினேன்.

1980-ல் என்னுடைய முதல் தொடர்கதை கல்கண்டு வார இதழில் வெளியானபோது உறவினர்களும் சரி, நண்பர்களும் சரி என்னிடம் கேட்கிற முதல் கேள்வி, “என்ன, தொடர்கதை எழுதற அளவுக்கு வளர்ந்துட்டே போலிருக்கு..? இந்தக் கேள்வியை மேலோட்டமா பார்க்கும்போது அவர்கள் பாராட்டுவது போல் தோன்றினாலும் அந்த வார்த்தைகளில் ஒருவிதமான கேலி ஒட்டிக் கொண்டிருக்கும். அதை உணரும்போது மனசுக்குள் ஒரு வலி பிறக்கும்.

என்னோடு படித்த நண்பர்களில் பலர் டாக்டர்களாகவும் வங்கி அதிகாரிகளாகவும், அரசு ஊழியர்களாகவும் பணியாற்றிக் கொண்டிருக்கும் நிலையில், நான் மட்டும் வாழ்க்கையின் அடித்தட்டில் இருப்பது பலருக்கு ஏளனத்தை உண்டாக்கியிருந்தது. எழுத்தாளன் என்பவன் பொருளாதார ரீதியில் வெற்றிகரமாய் இருக்க முடியாது என்று பலரும் எண்ணியதே அதற்குக் காரணம். என்னுடைய தொடர்கதை கல்கண்டு வார இதழில் வந்து கொண்டிருந்த வேளையில் ஒரு நாள் ஆர்எஸ் புரத்தில் இருக்கும் ரத்தின விநாயகர் கோயிலுக்குப் போயிருந்தேன். விநாயகரை வழிபட்டுவிட்டு வெளிப் பிரகாரத்தைச் சுற்றி வரும்போது என் தோளை பின்புறமாய் இருந்து யாரோ தொட்டார்கள்.

திரும்பிப் பார்த்தேன்.

ராமசாமி வாத்தியார் நின்றிருந்தார். காலம் அவரின் தோற்றத்தை வெகுவாய் மாற்றியிருந்தாலும் அடையாளம் எனக்குப் பிடிபட்டது.

“ஸார்!” உணர்ச்சிவசப்பட்ட நிலையில் என் இரு கைகளையும் கூப்பி வணக்கம் சொன்ன என்னை ஒரு கனிவுப் பார்வை பார்த்தபடி, என் கைகளைப் பற்றிக் கொண்டார். மெல்லச் சிரித்தபடியே கேட்டார்.

“உன்னை ராஜகோபால்னு கூப்பிடறதா… ராஜேஷ்குமார்னு கூப்பிடறதா?”

“நீங்க எப்படிக் கூப்பிட்டாலும் சரிதான் ஸார்!” “நீ ஒரு அக்ரி ஆபீஸராய் மாறியிருந்தா நான் உன்னை ‘ராஜகோபால்’ன்னு கூப்பிட்டிருப்பேன். ஆனா நீ இப்போ எழுத்தாளனாயிட்டே… ‘ராஜேஷ்குமார்’ன்னு கூப்பிடறதுதான் சரியாய் இருக்கும் இல்லையா?”

“ஸாரி ஸார்… பிஎஸ்ஸி அக்ரி சீட்டுக்கு அப்ளை பண்ண ஒரு மார்க் போதலை…”

“நீ ஒரு ரைட்டராய்தான் வரணும்னு கடவுள் விரும்பும்போது, நீ எப்படி அக்ரி ஆபீஸராக முடியும்?”

“ஸார்…!”

“கல்கண்டு வீக்லியில் உன்னோட போட்டோவைப் போட்டு தொடர்கதையோட முதல் அத்தியாயத்தை பப்ளிஷ் பண்ணியிருந்தாங்க. பெருமையாய் இருந்தது. என்னோட ஸ்டூடன்ட் ஒருத்தன் எழுத்துலகில் அடி எடுத்து வெச்சிருக்கிறதை நினைக்கும்போது எனக்கு ரொம்பவும் பெருமையாய் இருக்கு. இப்படி பக்கத்துல கொஞ்சம் வா..”

போனேன்.

என் இடுப்பில் கைபோட்டு இறுக்கக் கட்டிப் பிடித்துக் கொண்டார். அப்போது அவர் பேசிய வார்த்தைகள் என் வாழ்நாள் உள்ள வரையிலும் மறக்க முடியாது. அவர் சொன்ன வார்த்தைகள் இன்னமும் என் காதில் ரீங்காரம் செய்து கொண்டு இருக்கின்றன.

“என்கிட்ட படிச்ச ஒரு ஸ்டூடன்ட் டாக்டராய் வரலாம். என்ஜினீயராக உருவாகலாம். ஏதாவது ஒரு பொருளை உற்பத்தி செய்து பெரிய தொழிலதிபராய் வலம் வரலாம். ஒரு சிறந்த வழக்கறிஞராய் வாதம் காட்டலாம். ஆனா ஒரு ஸ்டூடன்ட் எழுத்தாளனாய் உருவாவது ரொம்ப ரொம்ப அபூர்வம்.உனக்குள்ளே கதை எழுதற திறமை இருக்குன்னா அந்தக் கல்விக் கடவுளான சரஸ்வதியே உன்னைத் தேடி வந்திருக்கான்னு அர்த்தம். ஒரு புகழ் பெற்ற வாரப் பத்திரிகையில் சிறுகதை வர்றதே பெரிய விஷயம். உனக்கு தொடர்கதை எழுதற வாய்ப்பே கிடைச்சிருக்குன்னா அது சாதாரண விஷயம் கிடையாது. இந்த வாய்ப்பை நீ பயன்படுத்திக்கிட்டு ஒரு பெரிய எழுத்தாளராய் வரணும். இன்னும் நீ மேலே மேலே வளரணும்!”

Ganesha Taking Bath

இந்த வார்த்தைகளைச் சொல்லி என் தலையில் கையை வைத்து அவர் ஆசீர்வதித்தபோது, நான் நெகிழ்ந்து போய் அவருடைய பாதங்களில் விழுந்து வணங்கினேன். மாதா, பிதா, குரு, தெய்வம் என்று சொல்வார்கள். நான் ஒரு எழுத்தாளனாக வரவேண்டும் என்று ஏற்கெனவே என்னுடைய தாயும் தந்தையும் ஆசிகள் வழங்கிய பின், என்னுடைய குருவான ராமசாமி வாத்தியார், ஒரு கோயிலில் வைத்து, அதுவும் ஞானத்தை அருளும் விநாயகப் பெருமானின் சன்னதியில் வைத்து என்னை ஆசீர்வதிக்கிறார் என்றால் அது தெய்வச் செயலே அன்றி வேறு எதுவும் இல்லை.

என் ஆசான், குரு ராமசாமி வாத்தியார் இன்று உயிரோடு இல்லை. ஆனால் அவருடைய ஆசிகள் என்னுடைய எழுத்துக்களுக்கு உயிரூட்டிக் கொண்டிருக்கின்றன.

-தொடரும்

 

Advertisements

One thought on “18-நான் முகம் பார்த்த கண்ணாடிகள்… – ராஜேஷ் குமார்

  1. Amuthan Sekar April 3, 2016 at 3:43 AM Reply

    அருமையான தொடர். நன்றி சார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s