17-நான் முகம் பார்த்த கண்ணாடிகள்… – ராஜேஷ் குமார்


நான் இந்த எழுத்துலகில் ஒரு குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்று 1000 நாவல்கள் எழுதவும் அந்த சாதனையைப் பாராட்டி சென்னையில் பல பிரபலங்கள் கலந்துகொண்ட விழா நடத்தப்பட்டதற்கும் காரணம் ‘ராஜேஷ்குமார்’ என்ற பெயர்க்கான எண்கள் தான் என்று நியூமரலஜிஸ்ட் பாலசுப்ரமணியன் சொன்னபோது அதை என்னால் நம்ப முடியவில்லை.

ஆனால் அவரிடம் ஏதோ ஒரு சக்தி இருப்பதை மட்டும் என்னால் உணர முடிந்தது .

நியுமராலஜியில் அவருக்கு இவ்வளவு பாண்டியத்துவம் எப்படி வந்தது, அவர் சொன்னது எப்படிப் பலித்தது ?

இன்றைக்குத் தமிழ்நாட்டில் ஒரு முக்கியமான அரசியல் கட்சிக்குத் தலைவராக இருக்கும் பிரபலமான நடிகர் ‘1990‘ களில் பாலசுப்பிரமணியனுக்கு நெருங்கிய நண்பர் . 1990களில் பட வாய்ப்புகள் இல்லாமல் அந்த நடிகர் சிரமப்பட்டுக்கொண்டு இருந்தபோது அவருடைய பெயரில் சின்னதாய் மாற்றம் செய்து கொடுக்க, அதற்குப் பின் அவர் நடித்த ஒவ்வொரு படமும் 100 நாட்கள் ஓடியது . சில படங்கள் வெள்ளி விழாவும் கண்டது. அதற்குப் பிறகு அவர் திரையுலகில் ஒரு அசைக்க முடியாத சக்தியாய் மாறி மக்களின் செல்வாக்கையும் பெற்றதின் விளைவு ஒரு அரசியல் கட்சியையும் ஆரம்பித்தார். கட்சியின் பெயர் இப்படித்தான் இருக்க வேண்டும், இந்த எண்ணில்தான் அமைய வேண்டும் என்ற பாலசுப்ரமணியனின் யோசனைகளையும் அவர் ஏற்றுக் கொண்டார். கட்சியின் அறிமுக விழா மாநாட்டை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்த நடிகர் முடிவு செய்தபோது, அப்படிச் செய்தால் அது தோல்வியில் முடியும், புதன்கிழமையன்று கட்சியின் ஆரம்ப விழா மாநாட்டை நடத்துங்கள். வரும் காலத்தில் உங்களுடைய கட்சி ஒரு வலிமையான எதிர்க்கட்சியாக உருமாறும், வரலாறு படைக்கும் என்று சொன்னார் .
Rajeshkumar's Naan Mugam Paartha Kannadigal series -18

அவர் சொன்னபடியே எல்லாம் நடந்தது. இப்படி அவர் சொன்னதெல்லாம் எப்படிப் பலிக்கும் ?

தெரிந்து கொள்ள முயன்றபோது அவருடைய அதிர்ச்சியான ப்ளாஷ்பேக் கிடைத்தது . ப்ளாஷ்பேக் என்ன? பாலசுப்ரமணியனே சொல்கிறார் கேளுங்கள்….

1965 ஆம் வருடம் எனது ஒரே சகோதரியை தாய்மாமன் ராமலிங்கம் அவர்களுக்கு ஜாதகத்தில் எல்லா பொருத்தங்களையும் பார்த்து கல்யாணத்தை நிச்சயம் செய்தோம். முழுக்க முழுக்க நூறு சதவிதம் சாஸ்திர சம்பிரதாயப்படி நல்ல நேரம் பார்த்து உப்பு , மஞ்சள் வாங்கி, நல்ல நேரத்தில் பட்டுப் புடவை எடுத்து, நல்ல நேரத்தில் பத்திரிகை எழுதி, மிகமிக நல்ல நேரத்தில் தாலி செய்து அற்புதமான ஒரு சுப முகூர்த்த நாளிலே கல்யாணம் செய்து வைத்தோம்.

திருமணம் முடித்த ஆறே மாதம். என் சகோதரியின் கணவர் நண்பர் ஓருவருடன் பாலக்காடு சென்று விட்டு வரும் வழியில் சாலை விபத்தில் உயிர் இழந்தார். அந்த இழப்பு என்னைப் பாதித்தது. எதனால் இந்த இழப்பு? யோசித்தேன்.

ஜாதகம், கைரேகை, ஆருடம், எண் கணிதம் இப்படி எல்லா கோணங்களிலும் பல வருடம் அனுபவ ரீதியாய் ஆராய்ச்சி செய்து பார்த்ததில் எனக்கு ஒரு உண்மை பிடிபட்டது.

MAN COMMANDS THE WORLD BUT MAN IS COMMANDED BY NUMBERS‘ என்கிற உண்மைதான் அது.

எண்களுக்கும் மனிதர்களுக்கும் எந்நேரமும் இடைவிடாமல் ஒரு போராட்டம் நடந்து கொண்டு இருப்பதைக் கண்டுபிடித்தேன் . ஜாதகம், கைரேகை, ஆரூடம் இவையெல்லாம் காலத்தின் கோளாறு காரணமாகக் கண்டுபிடிக்கப்பட்ட பொய்கள் என்கிற முடிவுக்கும் வந்தேன்.

ஜாதகம் பார்த்து, நல்ல நேரம் பார்த்து, வைதீக முறைப்படி சகலவிதமான மந்திரங்கள் ஓதப்பட்டு செய்யப்படும் திருமணங்கள் கூட ஏன் விவாகரத்தில் போய் முடிய வேண்டும்…? அதே நேரத்தில் ஒரு ஆணும் பெண்ணும் பெற்றோர்களின் எதிர்ப்பையும் மீறி ஊரை விட்டு ஓடிப்போய் சாஸ்திரம், வைதீகம் இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் திருமணம் செய்து கொள்பவர்கள் மன ஒற்றுமையோடும் சந்தோஷத்தோடும் வாழ்கிறார்கள்.

இந்த முரண்பாட்டுக்கு என்ன காரணம் ?

சாஸ்திர முறைப்படி திருமணம் செய்யப்பட்ட கணவனும் மனைவியும் விவாகரத்து வரை போக என்ன காரணம் என்பதைக் கண்டுபிடிப்பதற்காக அவர்களுடைய பிறந்த தேதிகளையும், பெயர்க்குரிய எண்களையும் ஆய்ந்து பார்த்த பொழுது, அந்த இரண்டு பேரின் எண்களும் எதிர் எதிரே நின்று போர் புரியும் குணம் கொண்ட எண்களாய் இருப்பதை உணர்ந்தேன். மேலும் பிரபலமான அரசியல் தலைவர்கள், பிரதமர்கள், ஜனாதிபதிகள் துப்பாக்கியால் சுடப்பட்டும், குண்டுகள் வெடிக்கப்பட்டும் இறந்து போக என்ன காரணம் என்பதையும் ஆராய்ச்சி செய்தேன். அவர்களின் மரணங்களுக்கு காரணம் அவர்களுடைய பிறந்த தேதி, மாதம், வருடம், பெயர் எண் போன்றவைகள் இணக்கமான சூழ்நிலையில் இல்லாததுதான் என்பதும், அவர்கள் இறந்த நாட்கள் மோசமான எண் கொண்ட நாட்களாய் இருந்ததுதான் காரணம் என்பதும் எனக்குத் தெளிவாய் தெரியவந்தது.

அமெரிக்காவில் கென்னடி சுட்டுக் கொல்லபட்டதற்கும் எண்கள்தான் காரணம். ராஜீவ் காந்தியின் கோரமான மரணத்திற்கும் எண்கள்தான் காரணம். ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதற்கு முன்பு அவருடைய உயிருக்கு ஆபத்து என்பதை சோனியா காந்திக்கு கடிதம் மூலம் வெளிபடுத்தியிருந்தேன். பத்திரிகைகளுக்குமே எழுதி அனுப்பிருந்தேன். நான் சொல்வதையெல்லாம் மேலோட்டமாகப் பார்த்தால் நம்புவதற்கு கஷ்டமாகவும் மூட நம்பிக்கைகள் போலவும் தெரியும். கணிதம் கற்றுக்கொள்வதற்காக உருவாக்கப்பட்ட எண்கள். அவை எப்படி நம் வாழ்க்கையை தீர்மானிக்கும் காரணங்களாய் இருக்க முடியும் என்று நினைக்கலாம். ஆனால் அந்த நினைப்புதான் நிதர்சனமான உண்மை என்பது எனக்கு மட்டுமே தெரியும். இது காலப்போக்கில் எல்லாருக்கும் புரியும்.”

பாலசுப்ரமணியன் இப்படிச் சொன்னதைக் கேட்டு நான் கிட்டத்தட்ட மிரண்டுபோய் விட்டேன்.

“நாம் சாதரணமாய் நினைக்கும் எண்களுக்கு இவ்வளவு வலிமையா?”

“இப்ப என்ன சொல்றீங்க ராஜேஷ்குமார் ?”

“ஓரளவுக்கு நம்பனும்போல் தோணுது!”

“நோ…..நோ….இதை நீங்க கண்டிப்பாய் நம்பணும். இந்த நியூமரலஜி எனக்கு தொழில் கிடையாது. இது ஒரு மனப்பூர்வமான ஆராய்ச்சி. நான் நினைச்சிருந்தா இதையே ஒரு தொழிலாக மாற்றிக் கொண்டு வீட்டுக்கு முன்னாள் போர்டு ஒன்றை மாட்டிக் கொண்டு எக்கச்சக்கமாய் பணம் சம்பாதித்து இருக்கலாம். நான் அதை விரும்பலை. இந்த எண்கணித ஜோதிடம் மூலமாய் ஆண்களுக்கும் பெண்களுக்கும் நல்ல திருமண வாழ்கையை அமைத்துக் கொடுக்க நான் தயாராய் இருக்கேன். இதுக்கு ஜாதகம் வேண்டாம், கைரேகை வேண்டாம். திருமணத்துக்குத் தேவையான பத்துப் பொருத்தங்களும் வேண்டாம். மணமக்களின் பிறந்த தேதிகள் இருந்தால் போதும். அவர்களின் பெயர் எண்களைக் கண்டுபிடித்து ஒப்பிட்டுப் பார்த்து நான் குறித்து தரும் தேதியில் திருமணத்தை நடத்தினால் அவர்கள் அமோகமாய், ஆனந்தமாய், ஆரோக்கியமாய் எந்த ஒரு பிரச்னையும் இல்லாமல் வாழ்வார்கள்.”

“அப்படின்னா ஜாதகம், கைரேகை இதெல்லாம் பொய்ன்னு சொல்ல வரீங்களா?”

“ஜாதகம் , கைரேகை இதெல்லாம் ஒருவகையான மேதமேடிக்ஸ். என்னைப் பொருத்த வரைக்கும் இந்த இரண்டும் ஒரு காலத்தில் அதாவது சித்தர்கள் வாழ்ந்த காலத்தில் உண்மையாய் இருந்திருக்க வாய்ப்புண்டு. இப்போது அப்படியெல்லாம் இல்லை. அந்த வார்த்தைகள் வியாபாரப் பொருட்களாக மாறிவிட்டன. மாதாந்திர டூர் போட்டுக்கொண்டு லாட்ஜ்களில் ரூம் எடுத்து மணிக்கணக்கில் தங்கி ஜோதிடம் சொல்பவர்களின் எண்ணிக்கை இப்போது அதிகமாகிவிட்டது. மக்களும் தங்களுக்கு இருக்கும் பிரச்சனைகளிலிருந்து எப்படியாவது விடுபடவேண்டும் என்று அப்படிப்பட்ட நபர்களைத் தேடிப் போகிறார்கள். அவர்களும் சில பரிகாரங்களைச் செய்தால் எல்லாம் சரியகிவிடும் என்று சொல்லி பணத்தைக் கறந்து விடுகிறார்கள் .”

“பரிகாரங்களைச் செய்யறதால பிரச்சனைகள் தீராதுன்னு சொல்றதுதான் உங்க முடிவா….?”

“ஆமா …! மனுஷன் தப்பு பண்ணினால் அதற்கான தண்டனைகள் உண்டு. அதை பரிகாரம் என்கிற ரப்பரால அழிக்க முடியாது.”

“சரி … ! ஜெம்மாலஜியைப் பத்தி என்ன நினைக்கறீங்க ?”

“ஒரு குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு குறிப்பிட்ட நவரத்தின கற்களைப் போட்டா பிரச்சனைகள் காணாம போய் வீட்ல செல்வம் கொழிக்கும்னு சொல்லப்படுகிற விஷயம்தானே ?”

“ஆமா…! ”

“அதுவும் ஒரு மனி மேக்கிங் பிசினஸ்தான். எந்த ஒரு நவரத்தின கல்லும் அழகானவை. அதற்கென்று தனிப்பட்டமுறையில் எந்த விதமான சக்தியும் கிடையாது. எத்தனையோ பேர் இந்த ஜெம்மாலஜி விஷயத்தில் ஏமாந்து போயிருக்கிறார்கள். ஆனால் அதை வெளியே யாரும் சொல்லுவது இல்லை. ராத்திரி பதினோரு மணியாகிவிட்டால் போதும் ஒரு கோட்டையும் டையையும் மாட்டிகொண்டு, நெற்றியில் விபூதி குங்குமம் இட்டுக்கொண்டு, தங்கள் பெயர்க்கு முன்னால் ஒரு டாக்டர் பட்டத்தைப் போட்டுக்கொண்டு, பக்கத்தில் ஒரு இளம்பெண்ணை நிறுத்திக்கொண்டு, வாஸ்து, கைரேகை, ஜோதிடம், நவரத்தினக் கற்கள், எனர்ஜிக் ஸ்டிக் போன்ற விஷயங்களை மணிகணக்கில் பேசி மக்களிடம் நம்பிக்கையை வளர்த்து பணத்தைக் கறந்து விடுகிறார்கள். இப்படிப்பட்ட நபர்களின் பெயர்களுக்குப் பின்னால் இருக்கும் பட்டங்கள் இந்தியாவில் எந்த பல்கலைக்கழகத்தால் கொடுக்கப்படுகிறது என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி !”

“மக்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியாதா என்ன ?”

“தெரியும். இருந்தாலும் எதை தின்றால் பித்தம் தெளியும் என்கிற நிலைமையில் இருப்பவர்களுக்கு எது நல்லது எது கேட்டது என்று பகுத்துப் பார்க்கும் அளவுக்கு பொறுமை இல்லாமல் போவதால் ஏமாந்து போய்விடுகிறார்கள் ”

“இப்போது நிறையபேர் எண்கணிதம் பார்த்துப் பெயரை மாற்றிகொள்வது சரியா…?”

“சரிதான் ! ஆனால் பெயரை மாற்றும் போது தேவை இல்லாமல் ஆங்கில எழுத்துக்களைச் சேர்ப்பதும், அதன் காரணமாய் பெயரை வாசிப்பவர்கள் வேறுவிதமாக உச்சரிப்பதும் வேறுவிதமான விளைவுகளை உண்டாகும்… ”

“ஸோ … உங்களைப் பொருத்தவரைக்கும், கடவுள் வழிபாடு, ஜாதகம், ஜோதிடம், கைரேகை என்பதெல்லாம் பொய். எண் கணிதம் எனப்படும் நியூமராலஜி மட்டுமே உண்மை? ”

” கண்டிப்பாக !” என்று சொல்லிச் சிரித்த பாலசுப்ரமணியன் தன்னைத் தேடி வருபவர்களிடம் சொல்வது . “என்னால் எதுவும் முடியாது, ஆனால் எண்ணால் எதுவும் முடியும்.”

(தொடரும்)

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s