6-அருளே அறிவே அமுதே! – சுப்பு ஆறுமுகம்


இதன் முந்தைய பகுதி…

வில்லடிச்சான் கோயிலிலே

கோயிலிலே!

விளக்கேத்த யாருமில்லே

யாருமில்லே!

குடமடிச்சான் கோயிலிலே

கோயிலிலே

குத்துவிளக்கேத்த நாதியில்லே

நாதியில்லே!

ஒரு நாள் மஹா பெரியவாள் தரிசனத்துக்குச் சென்றிருந்த சமயம், அவர் இந்தப் பாட்டு வரிகளைச் சொல்லிவிட்டு, இந்தப் பாட்டுக்கு என்ன அர்த்தம்னு தெரியுமோ நோக்கு?” என்று கேட்டார். வில்லடிச்சான், குடமடிச்சான் என்ற வார்த்தைகள் வில்லுப்பாட்டைக் குறிப்பவையோ? என்ற சந்தேகம் இருந்தாலும், நானறிந்த வரையில் வில்லுப்பாட்டு பாடும்போது இதைப் பாடிக் கேட்டதில்லை; எனவே, அதிகப்பிரசங்கித்தனமாக ஏதும் சொல்லிவிடக்கூடாது என்று அமைதியாக அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

அவர் விளக்கினார்: ஒருத்தர் கோவில்ல வில்லுப்பாட்டு கதை சொல்லிண்டு இருந்தா. நன்னா வில்லடிச்சு, குடம் அடிச்சு, அற்புதமா பாடிண்டு இருந்ததால, ஜனங்க எல்லாம் ரொம்ப ரசிச்சு, கேட்டுண்டிருந்தா. பாட்டுல மயங்கி, அப்ளாஸ் குடுக்கறா; எல்லாரும் கதை கேட்கிற சுவாரசியத்துல, அங்கே அம்பாள் சன்னதியில விளக்கேத்த ஆள் யாருமில்ல; பூசாரி இருப்பானேன்னு நீ கேட்கலாம்; ஆனா, அவனும்தானே கதையில மயங்கிக் கிடந்தான். ஆனா, அந்தக்கதை சொல்லறவன், தூரத்துல இருக்கிற அம்பாள் சன்னதியில எண்ணெய் இல்லாம விளக்கு அணையப்போறதுன்னு கவனிச்சு, இந்தப் பாட்டைப் பாடறான். பாட்டு வரியைக் கேட்டதும் பூஜாரிக்கு விஷயம் புரியறது; அவன் எழுந்து போய், விளக்குக்கு எண்ணெய் விடறான். இதுலேர்ந்து, அந்தக் காலத்துல வில்லுப்பாட்டு கதை சொல்லறவா, எத்தனை நுட்பமா இருந்திருக்கான்னு தெரியறதா?” என்றார்.

நீயும் அது மாதிரி கதை சொல்கிறபோது, சுத்தி என்ன நடக்கறதுன்னு கவனிக்கணும்” என்று எனக்குச் சொல்வதுபோல உணர்ந்தேன். இதில் ஜனங்களுக்கும் ஒரு மெஸேஜ் இருக்கிறது என்பதும் புரிந்தது. வெறுமனே கதை கேட்க மட்டும் கோவிலுக்கு வந்தால் போதாது. கடவுளை மறந்து விடக்கூடாது. மெத்த சாஸ்திர ஞானம் கொண்டவர் மஹா பெரியவா என்று நினைத்துக் கொண்டிருந்த எனக்கு, அவர் நாட்டுப்புறப் பாட்டிலும் கூட ஞானம் கொண்டவர் என்ற பேருண்மை புரிந்தது. அதன் பிறகு, இதை மனத்தில் வைத்துக் கொண்டு, நான் கதை சொல்லும்போது, நம் கலாசாரம், பாரம்பரியம் பற்றிக் குறிப்பிடும்போது, கோலாகலமாக பொங்கல் கொண்டாடும்போது, சூரியனை மறந்துவிடக்கூடாது” என்று குறிப்பிடுவேன்.

ஒரு முறை மஹா பெரியவாள் முன்னிலையில் சீதா கல்யாணம் வில்லுப்பாட்டு சொல்கிற அற்புதமான வாப்பு ஸ்ரீ ராமனது பால்ய பருவம் பற்றி, ராமனிடம் எப்போதும் ஒரு நல்ல பழக்கம் இருந்தது. வீதி வழியாக தேரில் போகிறபோது, வழியில் பெரியவர்களை, முதியவர்களை, ஞானியர்களைக் கண்டால், உடனே தேரைவிட்டுக் கீழே இறங்கிச் சென்று, அவர்களை, நமஸ்கரித்து, நலம் விசாரித்து விட்டுத்தான் மேலே செல்வாராம்.” இதை நான் குறிப்பிட்டபோது, மஹா பெரியவாள், தியாகராஜ சுவாமிகள், தான் திரேதாயுகத்துல பிறக்கலையேன்னு கவலைப்பட்டாரோன்னோ! நல்ல வேளை! ஸ்ரீ ராமன் பிறந்த திரேதாயுகத்துல நான் பிறக்கலையேன்னு சந்தோஷப்படறேன்!” என்றார். கதை சொல்லும்போது, இடையிலே மஹா பெரியவா இப்படி ஒரு புதிர் போடுகிறாரே!’ என்று எல்லோரும் திகைத்த வேளையில், அவரே தொடர்ந்து சொன்னார்: திரேதாயுகத்துல நான் பிறந்திருந்தா, ஸ்ரீ ராமன் என்னை நமஸ்கரிச்சிருப்பார். இப்போ எனக்கு அவரை நமஸ்கரிக்கிர பெரிய பாக்கியம் கிடைச்சிருக்கே! என்றார்.

தியாகராஜ சுவாமிகள், தான் திரேதா யுகத்துல பிறக்கலையேன்னு கவலைப்பட்டாரே! அது ஏன் தெரியுமா? அவர் ஸ்ரீ ராமரைப் பார்த்து, சொல்லுகிறார்: நீ வாழ்ந்த திரேதாயுகத்துல நானும் பிறந்திருந்தாய், நடந்தாவது வந்து சீதா கல்யாண வைபோகத்தை என் கண்களால் காண்கிறபாக்கியத்தை பெற்றிருப்பேனே!” என்கிறார்.

நான் சொன்னது சீதா கல்யாணக் கதை என்பதால், இரண்டு மஹான்களுமே இரண்டு விதமான கருத்துக்களைச் சொல்லி இருந்தாலும் கூட, இரண்டுமே அவர்கள் ஸ்ரீ ராமன் மீது கொண்டிருந்த அளவற்ற பக்தியின் வெளிப்பாடுதான் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

திருப்புகழ் மாதிரியே, திருமந்திரமும் மஹா பெரியவாளின் மனசுக்குப் பிடித்த ஒரு பக்தி இலக்கியம். ஒருநாள், திருமந்திரம் பற்றி அவர் சொன்னபோது பச்சிலை, அகத்தி, பிட்சை, பதவுரை ஆகிய நான்கு வார்த்தைகளை அவர் திரும்பத் திரும்பக் குறிப்பிட்டார். ஆனாலும், ரொம்ப விஸ்தாரமாக எதையும் சொல்லவில்லை. மஹா பெரியவாள் சொல்கிறார் என்றால், அதற்கு ஒரு அர்த்தம் இருக்கும். அது என்னவென்று நாம் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் எனக்குள்ளே ஏற்பட்டது. திருமூலரது திருமந்திரம் புத்தகத்தை எடுத்து கருத்துடன் படித்துக் கொண்டே வந்தேன்.

அதில் யாவருக்குமாம் இறைவற்கொரு பச்சிலை

யாவருக்குமாம் பசுவுக்கொரு வாயுறை

யாவருக்குமாம் உண்ணும் போய்தொருகைப்பிடி

யாவருக்குமாம் பிறர்க்கின்னுரை தானே

என்று ஒரு பாடலைக் கண்டேன்.

இறைவனுக்கு அதாவது, சிவனுக்கு வேறு எதையும் சாத்த வேண்டிய அவசியமே இல்லை; ஒரு வில்வ இலையை சாத்தினாலே பொதுமானது என்கிறார் திருமூலர். வில்வ இலையைத்தான் திருமூலர் பச்சிலை என்கிறார். அடுத்த வரி, யாவருக்குமாம் பசுவுக்கு ஒரு வாயுறை. அதாவது பசுவுக்கு ஒரு கட்டு அகத்திக்கீரை கொடுப் பது அத்தனை புண்ணியமாம். அடுத்தடுத்த வரிகளில் கைப்பிடி அன்னதானம் பற்றியும், அடுத்தவரிடம் பேசுகிறபோது வார்த்தைகளில் இனிமை இருக்க வேண்டியதன் அவசியம் பற்றியும் எடுத்துச் சொல்கிறது. அந்த வரிகளைப் படித்தபோது, அடடா! இதைத்தான், மஹா பெரியவாள் அன்று சுட்டிக் காட்டினார் என்பது புரிந்தது.

உடனே, திருமந்திரத்திலிருந்து பத்துப் பாடல்களைப் படித்துக் கொண்டு அவற்றை வில்லுப் பாட்டில் கதை சொல்கிறபோது தக்க இடத்தில் புகுத்தி, விளக்கிச் சொல்லத் தொடங்கினேன். குறிப்பாக, மஹா பெரியவாள் சொன்ன பச்சிலை, அகத்தி, பிட்சை, பதவுரை ஆகிய நான்கு வார்த்தைகளை நான் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, அவற்றை வைத்து, வில்லிசை சந்தத்தில்

பச்சிலையாம் வில்வதளம்

பசுவுக்கொரு வாய் அகத்தி

இச்சையுடன் கைப்பிடி அன்னம்

இனிக்கும் உரை உயர் தானம்

என்று எல்லோருக்கும் புரியுமாறு ஒரு பாட்டை எழுதி, கதை சொல்லும்போது பாடுவது எனக்கு வழக்கமாகிவிட்டது.

ஒரு நாள் காஞ்சி மடத்துக்குச் சென்றிருந்த சமயம், அங்கே வித்தியாசமான ஒரு காட்சியைக் கண்டேன். மஹா சுவாமிகளை தரிசனம் செய்ய பள்ளிக்கூட மாணவர்கள் நிறைய பேர் வந்திருந்தார்கள். பெரியவாளை தரிசிக்கப் பள்ளிக்கூடத்துப் பிள்ளைகள் வருவது ஒன்றும் புதிதில்லை. ஆனால், அன்றைக்கு வந்திருந்த மாணவர்கள் சாதாரணமான மாணவர்கள் இல்லை. கொஞ்சம் ஸ்பெஷல் ஆனவர்கள். அவர்கள் எல்லோரும் மாற்றுத்திறன் கொண்ட பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள். பார்வைத்திறன் குறைபாடு காரணமாக, அந்த மாணவர்களுக்கு கண்ணார மஹா பெரியவாளைத் தரிசனம் செய்வது சாத்தியமில்லை. ஆகவே, அவர்கள், மஹா பெரியவாள், தங்களை ஆசிர்வதித்து, சில வார்த்தைகள் அருளாசி உரை வழங்கி, அதைக் கேட்டால், நன்றாக இருக்குமே என்பது எதிர்பார்ப்பு. அந்த மாணவர்கள் அனைவரும், பெரியவாளின் குரலைக் கேட்பதற்காக ஆர்வம் பொங்க காத்துக் கொண்டிருந்தார்கள். அப்போது மடத்தைச் சேர்ந்த ஒருவர், பிள்ளைகளைப் பார்த்து, பெரியவா இன்னிக்கு மௌன விரதமாச்சே! பேசமாட்டாளே!” என்றார். அதைக் கேட்டதும் அந்த மாணவர்கள் அனைவரது முகமும் வாடிப்போனது. ஒரு பக்கம் பார்வைக் குறைபாடு கொண்ட பள்ளிக்கூடக் குழந்தைகள்; இன்னொரு பக்கம் மஹா பெரியவாளின் மௌனவிரதம். மடத்தைச் சேர்ந்தவர்களுக்கோ பெரும் தர்மசங்கடமான நிலைமை.

(அருள் பொழியும்)

S. Chandramouli

எழுத்தாக்கம் : எஸ். சந்திரமௌலி

படங்கள் : கல்கி களஞ்சியம்

–நன்றி கல்கி

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s